பகுதி ஏழு : கலிங்கபுரி
[ 7 ]
கங்கைக்கரை புல்வெளியில் குறுங்காட்டின் விளிம்பில் நின்றிருந்த சிறிய குதிரைக்கூட்டத்தை சுட்டிக்காட்டி துரோணர் சொன்னார் “மண்ணிலுள்ள உயிர்க்குலங்களை கடல் என்று கொண்டோமென்றால் புரவி அதன் நுரை. உயிர்க்குலங்களை அனல் என்று கொண்டோமென்றால் புரவி அதன் புகை. உயிர்க்குலங்களை ஒரு விராடமானுட உடல் என்று கொண்டோமென்றால் புரவி அதன் கண்ணிமை. தேவர்கள் அமரும் பீடத்தை பிறப்பிலேயே தன் முதுகில்கொண்டு மண்ணுக்குவரும் ஒரே உயிர் அதுதான்.”
எட்டு இளங்குதிரைகள் கொண்ட அக்குழுவில் கபிலநிறமான உடலும் சிறிய வெண்ணிறக்கொடி விழுந்த முகமும் கொண்ட குதிரை சற்று விலகி நின்று புல்கடித்தது. அவர்களின் காலசைவை உணர்ந்து தலைதூக்கி அவர்களை நோக்கியது. அவர்களின் வாசனையை உணர்ந்ததும் அதன் உடலின் தொடைப்பகுதி சிலிர்ப்பதை அங்கிருந்தே காணமுடிந்தது. மிகமெல்ல அது சொன்ன சொல்லைக்கேட்டு மற்ற குதிரைகள் தலைதூக்கி நோக்கின. செந்நிறமான குட்டிக்குதிரை ஒன்று ஆவலுடன் மூக்கை நீட்டி சில காலடிகள் எடுத்துவைத்தது.
துரோணர் அருகே வலப்பக்கம் அர்ஜுனன் நின்றிருந்தான். கையில் தோலால் ஆன கடிவாளப் பட்டைகள் இருந்தன. அர்ஜுனன் தோலாடைக்குமேல் கச்சையை இறுக்கிக் கட்டி ஒரு சிறிய குத்துவாளை மட்டும் செருகியிருந்தான். குழலை இறுக நாரால் கட்டி கொண்டையாக்கியிருந்தான்.கண்களை குதிரைமேல் ஊன்று தன் கையில் இருந்த தோல்பட்டையை மெல்லச்சுழற்றிக்கொண்டு அந்த கபிலநிறக்குதிரையின் கண்களை நோக்கினான். மெல்லியகுரலில் துரோணர் சொன்னார் “முன்னால் நின்றிருக்கும் அந்த கபிலநிறக்குதிரையின் ஒலியைத்தான் நாம் நேற்று கேட்டோம். அதன் தேவன் நம்மை அழைக்கிறான்.”
கங்கைக்கரைக்காடுகளிலேயே இயற்கையாக வளரவிடப்பட்டிருந்த குதிரைக்கூட்டம் அது. அஸ்தினபுரியில் ஐந்து மங்கலங்களில் எதையேனும் ஒன்றைக் கொண்டு பிறக்கும் குட்டிக்குதிரைகள் போருக்குரியவை என்று வகுக்கப்பட்டதும் மூதாதையின் பெயர்சூட்டி அங்கஅடையாளங்கள் குறிக்கப்பட்டு பிறவிநூல் கணிக்கப்படும். அவை அன்னையிடம் பால் குடிக்கும் நான்குமாதம் முடிந்ததும் கொட்டில்மாற்றம் என்னும் சடங்கு நடக்கும். முதுசூதர் தலைமையில் அவை அன்னையிடமிருந்து பிரிக்கப்பட்டு காட்டுக்குள் கொண்டுசென்று விடப்படும். அவற்றின் மூக்கில் கோரோசனை பூசப்பட்டு கண்கள் மூடப்பட்டு கொண்டுசெல்லப்படுவதனால் அவற்றால் திரும்பும் வழியை கணிக்கமுடியாது. காடு அவற்றை சூழ்ந்துகொள்ளும்.
அவை இருக்குமிடத்தை சூதர்கள் அறிந்திருப்பார்கள் என்றாலும் அவை அங்கே காட்டுக்குதிரைகளாகவே வளரும். புத்தம்புதிய காட்டில் அவை தங்கள் உணவை தாங்களே தேடி, ஓநாய்களிடமிருந்தும் சிறுத்தைகளிடமிருந்தும் உயிர்தப்பி, பிறகுதிரைகளை ஓடிவென்று ஏதோ ஒருகணத்தில் ’ஆம் நான் குதிரை! விண்ணவருக்குரியவன்’ என உணர்ந்துகொள்ளும். தன் முதுகின்மேல் அமர்ந்திருக்கும் தேவனை குதிரை அறியும் தருணம் அது. அதை அஸ்வமுகூர்த்தம் என்றன நூல்கள். அப்போது விண்ணில் அஸ்வினிதேவர்கள் எழுவார்கள், இளங்காற்றில் யக்ஷர்கள் பறப்பார்கள், மலர்மரங்களில் தாகினிகள் தோன்றி அசைவார்கள் என்றன சூதர்பாடலகள்.
ஒவ்வொரு குதிரைக்கும் அதற்குரிய அஸ்வபதி உண்டு. இறந்த குதிரையின் பிடரிவிட்டிறங்கும் அஸ்வபதி காற்றுவெளியில் தன் அடுத்த குதிரையைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறான். வளைந்தாடும் மூங்கில்கழையிலும், துள்ளும் அருவியின் வளைவிலும், எழும் பறவையின் சிறகிலும் அவனை கணநேரம் கண்டறியமுடியும் என்பார்கள் சூதர்கள். தன்னை தான் உணர்ந்து திமிரெழுந்து பிடரி சிலிர்க்கும் குட்டிக்குதிரைமேல் பாய்ந்தமர்ந்துகொண்டு அவன் களிக்கூச்சலிடுகிறான். அது நான்கு கால்களையும் காற்றில் எழுப்பி துள்ளிக்குதிக்கிறது. வெறிகொண்டு கூவியபடி பாய்ந்தோடிச் சுழல்கிறது.
அஸ்வபதி அமர்ந்த முதல் சிலநாட்கள் குதிரை உணவும் நீருமின்றி ஓடிக்கொண்டே இருக்கும். பின்னர் வியர்த்த உடல் சொட்ட வாயில் நுரைதொங்கி வழிய மரத்தில் சாய்ந்து தலைகுனிந்து நின்று வால்குலைத்து உடலை சிலிர்த்துக்கொண்டே இருக்கும். துயில்கனத்து எச்சில் வழிய தலை தாழ்த்தும். அதன்பின் அதன் நடை மாறிவிடும். எதற்கும் அஞ்சா விழிகளுடன் கழுத்தைத் தூக்கி பிடரிகுலைத்து நோக்கி, தாடைதொங்கி அசைய, கனைக்கும் குதிரையைக் கண்டு சிறுத்தைகள் பின்னங்கால் மடித்து அமர்ந்து, மூக்கைச்சுளித்து வெண்பற்களைக் காட்டி, கண்களில் அச்சம் எழ, உறுமும். ஓநாய்கள் அவற்றின் காலடிகளைக்கேட்டே புதர்களுக்குள் சுருங்கிச்சென்றுவிடும்.
ஓடையில் நீர் அருந்துகையில் தன் அழகை தானே கண்ட குதிரை காமம் கொண்டு பெருமூச்சுவிட்டு அலைகிளப்பும். நீரருகிலேயே ஒளி மங்குவது வரை மீளமீள நோக்கி நின்றிருக்கும். நீரில் அது நோக்கும் அதன் உடல்பகுதி காற்றுபட்ட தர்ப்பைப்படர்ப்பு போல் சிலிர்த்து அசையும். கால்களால் நீரை தட்டியும் மூக்கால் முகர்ந்தும் தன் உருவத்தை உயிர்பெறச்செய்து விலகி வெருண்டு நோக்கி மீண்டும் அருகணையும். குதிரை தன்னுருவை அன்றி வேறெந்த உருவின் மீதும் காமம் கொள்வதில்லை. தன் உருவை நிகர்க்கும் இன்னொரு குதிரைமேல் காமம் எழுந்து புணர்ந்ததுமே சினம் கொண்டு அதை கடித்து உதைத்து துரத்திவிட்டு மீண்டும் நீர்நிலை நோக்கி ஓடிவந்துவிடும்.
தன்னருகே இன்னொரு குதிரை நிகராக நிற்பதை ஒருபோதும் இளங்குதிரை ஒப்பாது என்றன சூதர்களின் அஸ்வபுராணங்கள். முன்னங்காலால் நிலத்தை உதைத்து தன்னுடன் ஓடும்படி அறைகூவல் எழுப்பும். ஓடவராத குதிரையை அணுகி மூக்கோடு மூக்குரசி வாசனை அறிந்தபின் கழுத்தை வளைத்து கழுத்தில் ஓங்கி அறைந்து போருக்கு அழைக்கும். கனைத்து குதித்தும் கால்களால் உதைத்தும் கழுத்தை வளைத்து அறைந்தும் இரவும் பகலும் அவை போரிடும். வென்றகுதிரை உடலைச் சிலிர்த்துக்கொண்டு மேடேறி நின்று தலைதூக்கிக் கனைத்து தன் அஸ்வபதியிடம் சொல்லும் ‘தேவா, இதோ நான்!’ அதன்மேலிருக்கும் தேவன் புன்னகைசெய்வான்.
காட்டில் பிறகுதிரைகளைக் கண்டடைந்து குழுக்களாக ஆனாலும் ஒவ்வொரு குதிரைக்குமேலும் அதன் அஸ்வபதி தனித்தே இருப்பான். காட்டின் கட்டற்ற வெளியில் அஸ்வபதி அதை கணமும் அமைதிகொள்ள விடுவதில்லை. அதை தனக்கான படைக்குதிரையாக ஆக்கும் வரை அவன் ஓய்வதுமில்லை. பெண்குதிரைகள் மூன்றுவருடங்களிலும் ஆண்குதிரைகள் நான்குவருடங்களிலும் பிடரி கனத்து, உடலில் கோரோசனை மணம் எழ இளமையின் திமிருடன் காட்டுக்குள் செருக்கடித்து அலையத்தொடங்கும். பிறகுதிரைகளிடம் பூசலிட்டும் மதம் கொண்டு நெற்றிமுட்டி மரங்களை சிதைத்தும் பிற உயிரினங்களை அஞ்சவைக்கும். விரிந்த வெளிகளில் குளம்புகள் முரசறைய வெறிகொண்டோடும். ஈரப்புதுமண்ணில் குளம்புகளால் உழுதுபுரட்டி விழுந்து புரண்டு துள்ளும். இரவுகளில் துயிலின்றி காடுகளை வகுத்து ஓடியும் துள்ளிக்குதித்தும் குரலெழுப்பும். அவற்றின் பெருங்குரல் கனைப்பு அறைகூவல் என நகரை அடையும்.
குதிரை விளைந்துவிட்டதென்று அக்கனைப்புவழியாக அறிந்ததும் சூதர்கள் பெரிய குழுவாகக் கூடி குதிரைகளில் ஏறி அதை காட்டுக்குள் துரத்திச்சென்று பாறைமடிப்புகளில் மடக்கிச் சூழ்ந்துகொண்டு கண்ணி வடங்களால் கட்டி இழுத்து வருவார்கள். கொட்டடியில் அடைத்து வென்று வசப்படுத்தி அவற்றின் முதுகில் ஒழிந்துகிடக்கும் தேவபீடம் மீது மானுடன் ஏறியமர்ந்துவிட்டால் அது அவனுடையதாகும். அச்சமேயற்ற படைக்குதிரையாக மாறி அவன் வாழ்வெங்கும் துணைவந்து களத்தில் அவனுடன் மறையும். குதிரையை வென்ற மறவனுக்கு மன்னர் தன் கைகளாலேயே அரசமுத்திரைகொண்ட உடைவாளை அளிப்பார். அவன் அஸ்தினபுரியின் முத்திரைமறவன் என்றழைக்கபப்டுவான். அவனே நூற்றுவர்தலைவனாக ஆகமுடியும். அங்கிருந்து படிகளை ஏற முடியும்.
குதிரைமறம் கொள்ள வீரர்கள் எப்போதும் ஆவலுடன் இருப்பதை அர்ஜுனன் கண்டிருந்தான். வடங்களால் கட்டப்பட்டு குதிரைவீரர்களால் இழுத்துக்கொண்டுவரப்படும் குட்டி திமிறிக்குதித்து கீழே விழுந்து பட்ட மண்ணும் சேறும் அப்பியிருக்க, உடம்பெங்கும் வடம் உரசிய புண்ணுடன், சின விழிகள் விழித்து உருள, நாசி விரிந்து மூச்சு சீற கால்பரப்பி நிற்கும். தடாகத்து நீர்ப்பரப்பு போல சுற்றிலுள்ள ஒவ்வொரு அசைவும் அதன் தோலில் அலையசைவை உருவாக்கும். அதனருகே செல்லும் எவரையும் உதைத்தும் முட்டியும் கடித்தும் தாக்கும். குதிரைமறம் கொள்ளும்போது இளையோர் உயிர்நீப்பது அன்றாடம் நிகழ்வது.
வெற்றுக்குதிரையை வெறும்கைகளுடன் அணுகும் மறவன் தன் முன் நிற்பது வெற்றியை தன் உடலின் ஒருபக்கமும் இறப்பை மறுபக்கமும் கொண்ட அந்த மாயத்தெய்வம் என்றே உணர்வான். கருவறைதிறந்து வெளிவந்து கண் திறந்து அழும்போது பொன்மோதிரத்தில் மண்ணையும் தேனையும் தொட்டு நாவில் வைக்கும் குலமூதாதையருக்கு அருகே நின்று புன்னகைத்த அந்த தெய்வத்தை அதன்பின் அவன் கனவுகள் தோறும் பார்த்திருப்பான். அதன் இருள்ஒளி ஆடல் வழியாகவே அவன் வாழ்க்கை முன்னால் சென்றிருக்கும். என்றோ ஒருநாள் களத்தில் குருதிகொட்ட வீழும்போது அது புன்னகையுடன் கைநீட்டி தூக்கி மேலேற்றிச்செல்லும் என அவன் அறிந்திருப்பான்.
அது ஒரு கணம். அதை வென்று முன்னால் செல்வது எளிதல்ல. அப்போது பின்வாங்கிவிடும் வீரன் பின்னர் தன் வாழ்நாள் முழுக்க ஏவல்வீரன்தான். அவனுக்கு குலமில்லை, கோல் இல்லை, நடுகல் இல்லை. அக்கணத்தை வென்று அதன்பிடரியைப் பற்றிக்கொண்டு மேலேறி எறிதிரை எனத் துள்ளும் குதிரைமேல் அமர்ந்துவிட்டான் என்றால் அவன் வீரனென்றாகிவிட்டான். அவன்குலத்தவர் கைதூக்கி வாழ்த்தொலி எழுப்புவார்கள். அவன் தந்தை பெரிதுவந்து தன் கையிலிருக்கும் குலமுத்திரைக்கோலை மேலே தூக்குவான்.
சினம்கொண்ட அஸ்வபதியுடன் அவன் போரிட்டு வெல்லவேண்டும். அதில் கீழே விழுந்து முதுகெலும்பு முறிந்து படுக்கையில் வீழ்பவனை குலமூதாதையர் கூடி நள்ளிரவில் சப்பரம் கட்டித் தூக்கி மயானத்துக்குக் கொண்டுசென்று குழியின் புதுமண் மேட்டில் பத்மாசனத்தில் வடக்குநோக்கி அமரச்செய்து கூரிய வாளை கையில் கொடுப்பார்கள். அவன் தன் குரல்வளையை அறுத்துக் கொண்டு குருதியுடன் குழியில் சரிந்ததும் விபூதி கொட்டி மூடி அடக்கம்செய்வார்கள். அவன் மேல் நவகண்ட சித்திரத்துடன் நடுகல் ஒன்று நாட்டப்படும். வருடம் தோறும் அந்நாளில் அவனுக்கு நெய்ப்பந்தம் ஏற்றி, சிறுமுழவொலிக்க, தூபம் காட்டி, ஊன்பலிகொடுத்து வணங்குவார்கள்.
அஸ்வபதி அவனை ஏற்றுக்கொண்டான் என்றால் இருவரும் ஒன்றாகிறார்கள். தன்னுள் இருந்து குதிரையுடன் ஓயாது பேசிக்கொண்டிருக்கும் அஸ்வபதியை அவ்வீரன் அறியமுடியும். புரவியை வென்றவன் பின்னர் சிலநாள் இரவும்பகலும் அதன் மேலேயே இருப்பான். அதை குதிரைமாயை என்று சொல்லி மூத்தார் நகைப்பர். உணவின்றி துயிலின்றி குதிரைமேல் இருப்பவன் களைத்து இறங்கி வீட்டுக்குள் நுழைந்தால் அவனைப்பிரிய முடியாத குதிரை வீட்டுவாயில் வழியாக பாதி உடலை உள்ளே நுழைத்து குரல்கொடுக்கும். இரவில் துயின்றுகொண்டிருப்பவனை எழுப்ப முற்றத்தில் வந்து நின்று பெருங்குரல் எழுப்பும்.
குதிரை அதன்பின் தனித்திருக்காது. அவன் தன் மேலிருந்து இறங்கியதுமே அது வெறுமையை உணர்ந்து கால்களை மண்ணில் தட்டி பொறையழித்து கட்டுத்தறியில் சுற்றத்தொடங்கிவிடும். அதன்மேல் தன் மேலாடை ஒன்றை போட்டுவிட்டுத்தான் அவன் தன் இல்லத்துக்குச் செல்லமுடியும். பின்னர் வாழ்நாள் முழுக்க அது அவனுடன் இருக்கும். குதிரைமறவன் நடந்துசெல்லும்போதும் அவன் கால்களுக்கு அடியில் குதிரை இருப்பதை அறியமுடியும். அவன் துயில்கையில் கைகள் குதிரையை செலுத்திக்கொண்டிருப்பதைக் காணலாம். குதிரைமறவனுக்கு என்றும் முதல் உறவு அதுவே என்று சூதர் சொன்னார். “அன்னை? தந்தை?” என்று அர்ஜுனன் கேட்டபோது “குதிரைமறவனின் துணைவி தானும் ஒரு குதிரை என்றே உணர்வாள் இளவரசே” என்று சொல்லி சூதர் நகைக்க உடனிருந்த தாளக்காரர்களும் நகைத்தனர்.
“ஆதிபுராணத்தின்படி மண்ணில் வாழும் உயிர்களில் மானுடர் தெய்வங்களை அறியும் ஆற்றல் கொண்டமையால் வானவர்களுள் சேர்க்கப்படுபவர்கள். பிற விலங்குகள் ஏழுவகை. நாவால் உண்ணுபவை. அவற்றை பொதுவாக நாய்க்குலத்தைச் சேர்ந்தவை என்பார்கள். சத்வகுணம் கொண்ட நாயும் ரஜோகுணம் கொண்ட சிம்மமும் தமோகுணம்கொண்ட கழுதைப்புலியும் அவற்றில் உண்டு” துரோணர் சொன்னார். “அவையனைத்துமே வேட்டையாடக்கூடியவை, நக்கி உண்ணும் குணம் கொண்டவை. குட்டிகளை வாயால் கவ்விச்செல்பவை. அவற்றை ஸ்வானகோத்ரம் என்கின்றன நூல்கள்.”
குதிரையை விட்டு விலகாத விழிகளுடன் மெல்லியகுரலில் துரோணர் தொடர்ந்தார் “இரண்டாம் வகை உயிரினங்களை குளம்புகள் கொண்டவை என்கிறார்கள். குர கோத்ரம் என நூல்கள் சொல்கின்றன. சத்வகுணம் கொண்ட பசுவும் குதிரையும் தமோகுணம்கொண்ட பன்றியும் அவற்றில் உண்டு. அவை முதல்வகைக்கு உணவாகும் விதிகொண்டவை. மூன்றாம் உயிர்வகையை துதிக்கை கொண்டவை என்கிறார்கள். கரநாசிக குலம். அவற்றில் இன்றிருப்பது யானை மட்டுமே”
அர்ஜுனன் குதிரையையே நோக்கிக்கொண்டிருந்தாலும் அவன் ஒவ்வொரு சொல்லையும் கேட்டுக்கொண்டிருந்தான். விழித்திருக்கும் நேரமெல்லாம் துரோணர் அவனுடன் பேசிக்கொண்டிருந்தார். அவன் தன் அகச்சொல்லோட்டத்தை முற்றிலும் அகற்றி அங்கே அவரது சொற்களை அமைக்க கற்றுக்கொண்டிருந்தான். அவ்னுள் அவரது சொல்லே அகமாக நிகழத்தொடங்கியபின் நினைவுகொள்ளல் நினைவுகூர்தல் என்னும் இருசெயல்களும் பொருளிழந்தன.
“நான்காம் வகை வாலை கையாக்கக்கூடியவை. கரபுச்ச கோத்ரம். அவற்றில் குரங்குமட்டுமே மண்ணில்வாழ்கிறது. ஐந்தாம் வகை உயிர்கள் சிறகுகள் கொண்டவை. அவற்றை பக்ஷ கோத்ரம் என்கிறோம். அவற்றில் புறாக்களும் வண்ணத்துப்பூச்சிகளும் சத்வகுணம்கொண்டவை. ஊனுண்ணும் கழுகுகளும் உதிரமுண்ணும் கொசுவும் ரஜோகுணம் கொண்டவை. மலினமுண்ணும் காகமும் ஈயும் தமோ குணம்கொண்டவை” துரோணர் சொன்னார்.
“ஆறாம்வகை ஊர்வன. அவற்றை சர்ப்ப கோத்ரம் என்கிறோம். மண்புழுக்களும் நாகங்களும் அவற்றிலுண்டு. ஏழாம் வகை நீந்துவன. அவற்றை தரதி கோத்ரம் என்கிறோம். நீர்ப்பாம்பும் ஆமையும் மீனும் தவளையும் அவற்றிலுண்டு. அவற்றில் மீன்கள் சிறகுகொண்டிருப்பதனால் நீருலகின் பறவைகள்” துரோணர் சொன்னார். “இந்த ஏழ்வகை உயிர்களாலான இந்தப்பூமி ஒவ்வொருநாளும் தன்னைத்தானே கொன்று உண்டுகொண்டிருக்கிறது. மண்ணிலுள்ள உடல்களனைத்தும் அன்னம் எனப்படுகின்றன. ஏனென்றால் அவை அனைத்துமே என்றோ எங்கோ எதற்கோ உணவாகக்கூடியவை.”
துரோணர் அசையாமல் நின்று சொன்னார் “மண்ணிலுள்ள ஏழு உயிர்க்குலங்களுக்கும் அவற்றுக்கான கணதேவர்கள் உண்டு. எல்லா உயிருக்கும் அவற்றுக்கான தேவர்கள் உண்டு. தேவர்களால் காக்கப்படாத சின்னஞ்சிறு பூச்சியோ புழுவோ கூட இல்லை என்று உணர்ந்த வீரன் ஒருபோதும் எவ்வுயிரையும் குறைத்து மதிப்பிடமாட்டான். வாளேந்தி களம்காணும் மாவீரன் முட்டை விரிந்து வெளிவரும் சிறு புழுவின் விஷத்தால் உயிர்விடக்கூடும். சிம்மத்தைக் கொல்லும் ஈக்களும் இவ்வுலகில் உண்டு. விலங்கை எதிர்கொள்கையில் நாம் ஒரு தேவனை எதிர்கொள்கிறோம். தேவா, உன்னைப் பணிந்து இந்த ஆடலுக்கு உன்னை அழைக்கிறேன். இது உன்னை மகிழ்விப்பதாக என்று சொல்லிக்கொண்டு முன்னகர்பவனே விவேகி.”
“அந்த தேவன் நீ வெல்வதை ஒப்புக்கொள்ளாவிட்டால் ஒருபோதும் நீ வெல்லமுடியாது என்றறிக. தேவர்கள் ஆற்றலை விரும்புகிறார்கள். ஆற்றல் மூலம் அவர்களை மகிழ்விப்பவர்களை ஏற்றுக்கொள்கிறார்கள். இதோ நம் முன் நின்றுகொண்டிருப்பது விரைவின் அதிபனாகிய அஸ்வபதி. பிரம்மனுக்கு மரீசியில் பிறந்த மைந்தரான காசியப பிரஜாபதி தட்சனின் மகள்களாகிய அதிதி, திதி, தனு, காளிகை, தாம்ரை, குரோதவசை, மனு, அனலை என்னும் எட்டு நாகங்களை மணந்தார். அவர்களில் குரோதவசை பெற்ற பத்து நாகங்களில் சுரபி என்பவள் ரோகிணி, கந்தர்வி என்னும் இரு நாகங்களைப் பெற்றாள். ரோகிணி குளம்புள்ள மிருகங்களில் முதல்மிருகமான மிருகியைப் பெற்றாள். கந்தர்வி முதல் அஸ்வபதியைப் பெற்றாள். அஸ்வபதி மண்ணில் அஸ்வத்தை தனக்கெனப் படைத்துக்கொண்டார்.”
“குதிரையில் உள்ள நாகத்தை கண்டுகொள்பவனே அதை அணுகமுடியும். அதன் சீறும் மூச்சில், நீளும் கழுத்தில், அது பாய்ந்தோடுகையில் உடல் அம்பாக மாறும் அசைவில் வாழ்கிறது அதன் மூதாதைநாகமான கந்தர்வி. நாகத்தை முகம்முன் நின்று எதிர்கொள்ள பூனையின் கால்விரைவோ, கீரியின் நாவிரைவோ, குரங்கின் கைவிரைவோ ஆற்றல்கொண்டவை அல்ல. குதிரையும் அவ்வண்ணமே” என்ற துரோணர் அர்ஜுனனிடம் செல்லும்படி கைகாட்டினார்.
அர்ஜுனன் கடிவாளப்பட்டையை சுருட்டி கையில் வைத்தபடி குனிந்து புல்லின் அடுக்குகளுக்குள் உடல் மறைத்து முன்னால் சென்றான். அவன் நெருங்குவதை தொலைவிலேயே கபிலநிறக்குதிரை கண்டுகொண்டது. தலையைத் தூக்கி விழிகளை உருட்டி அது மெல்லக் கனைத்தது. அதன் வளைந்த முதுகிலும் விலாவிலும் தோல் விதிர்ப்பதை அவன் கண்டான். திரும்பி காட்டுக்குள் ஓடப்போகிறது என அவன் எண்ணிய கணம் அது கால்களை மெல்லத் தட்டி தலைகுனிந்து பிடரியைச் சிலுப்பியபடி புல்கடிக்கத் தொடங்கியது.
அவன் மேலும் முன்னால் சென்றபோது பிறகுதிரைகள் வெருண்டு கலைந்து பின்னால் நகர்ந்தன. ஒருகுதிரை மெல்லிய கனைப்பொலியால் பிறவற்றை அழைத்தபின் காட்டுக்குள் சென்றது. குட்டிக்குதிரை ஒன்று செல்வதா வேண்டாமா என்று சிந்தித்தபின் தானும் சென்றது. கபிலநிறக்குதிரை அங்கே நிகழ்வது எதையும் அறியாததுபோல புல்கடித்துக்கொண்டிருந்தது. முகத்தைச்சுற்றும் சிறுபூச்சிகளை முன்னங்காலால் தட்டியும் தலையை உலுக்கியும் அது மேய்ந்துகொண்டே செல்ல அர்ஜுனன் மிக அருகே சென்றான். மூன்று கை தொலைவில் அது அவனே அங்கு இல்லை என்பதுபோல நின்றது.
அர்ஜுனன் கைகளை மெல்ல நீட்டியபடி முன்னால் சென்றான். அது எப்போது நிமிரும் என அவன் அகம் எதிர்நோக்கிக்கொண்டிருந்தது. நாணேற்ற வளைக்கப்பட்ட வில் அது என அதன் உடலை நோக்கியபோது எண்ணிக்கொண்டான். மேலும் ஓர் அடி அவன் வைத்ததும் குதிரை சுழன்று தலைதிருப்பி அவனை நோக்கியது. அக்கணத்தில் அவன் அதனுள் வாழ்ந்த நாகத்தைக் கண்டான். அதன் விழித்த கண்களில் இருந்த மதத்தை அவன் விழிகள் சந்தித்ததும் இருண்டவானில் எரிந்தணையும் கொள்ளிமீன் என அவன் அச்சத்தை அடைந்தான். “தேவா, நான் அர்ஜுனன். இந்திரனின் மைந்தன். இந்திரனுடன் ஆட எழுந்து வருக!” என்றபடி அவன் மேலும் முன்னகர்ந்தான்.
அவன் அணுகும் ஒவ்வொரு அடியும் குதிரையின் உடலில் அதிர்வுகளாகத் தெரிந்தது. அதன் விழிகள் இரு பெரிய முத்துக்கள் போல கருமையாகவும் நீலமாகவும் கபிலநிறமாகவும் ஒரேசமயம் நிறம் காட்டி காட்டை எதிரொளித்தபடி அசைந்தன. அது கழுத்தைத் தூக்கி வாயைத் திறந்து அகன்ற பற்களைக் காட்டி சீறி முன்னங்கால்களால் நிலத்தைத் தட்டியது. எதிர்பாராத கணத்தில் முன்னால் பாய்ந்து கழுத்தை வளைத்து ஓங்கி அறைந்தது. அவன் பயின்ற தனுர்வேதம் அவன் உடலை அவனை அறியாமலேயே வளைத்து அதிலிருந்து தப்பவைத்தது. சுழற்சியில் சற்று நிலையழிந்த குதிரை திரும்பி தன் பின்னங்கால் குளம்பால் அவனை உதைத்தது. அதை அவன் எதிர்பார்த்திருந்தமையால் விலகிக்கொண்டான்.
பிளந்த வாயுடன் அவனைக் கடிக்கவந்த குதிரையில் இருந்து அவன் விலகிக்கொண்டு அதன் கழுத்தை தோல்பட்டையால் அடித்தான். அதன் அடிகளையும் உதைகளையும் தவிர்க்கையிலேயே என்னசெய்வதென்று அவன் கண்கள் கண்டுகொண்டன. தோல்பட்டையை வீசி வீசி குதிரையை சினம்கொள்ளச்செய்து பின்பக்கமாக நகரச்செய்து அங்கே அணைத்துக்கொண்டு நின்றிருந்த இரு மரங்களை நோக்கிக் கொண்டுசென்றான். குதிரையின் பின்பக்கம் மரத்தை முட்டியதும் அது மூர்க்கமான சினத்துடன் சீறி திரும்பமுனைந்தது. அக்கணத்தில் அவன் பாய்ந்து அதன் பிடரிமயிரைப்பிடித்துக்கொண்டு அதன் முன்னங்கால் முட்டில் தன்காலைவைத்து எம்பி காலைச் சுழற்றி மேலேபோட்டு அதன் தேவபீடத்தில் அமர்ந்துகொண்டான்.
அங்கே முன்னரே இருந்த அஸ்வபதியை அவனால் நன்குணரமுடிந்தது. தன் எட்டுபெருங்கைகளால் அவன் அர்ஜுனனைப்பிடித்து உலுக்கித் தள்ளினான். வானில் தூக்கி வீசமுயன்றான். பிடரிமயிரை கைகளால் பற்றி, கால்களால் விலாவைக் கவ்வி, குதிரையின் முதுகில் படுத்து இறுக்கிக்கொண்டான். அஸ்வபதியின் கைகள் அவனை குதிரைமேலிருந்து பிடுங்கி எறிய ஆழ்ந்த சிரிப்போசையை அவன் கேட்ட மறுகணம் தெறித்து புல்செறிந்த மண்ணில் மல்லாந்து விழுந்திருந்தான். கனத்த பெரிய குளம்புகள் தன்னை நோக்கி பாய்ந்து வருவதைக் கண்டதும் துள்ளி உருண்டு அந்த இரட்டை மரங்களுக்கு அப்பால் சென்றுவிட்டான். அவன் கிடந்த இடத்தை குளம்புகள் மிதித்துச்சிதைப்பதையும் குதிரையின் விரிந்த மார்பு எழுந்து வந்து அந்த மரத்தை முட்டுவதையும் கண்டான். மரம் அதிர்ந்து சருகுகள் உதிர்ந்தன.
கனைத்துக்கொண்டு ஓடிய குதிரை திரும்பி மீண்டும் விரைவுகொண்டு அவனை தாக்க வந்தது. அதன் குளம்புகள் மண்ணில் அறைபடுவதன் அதிர்வை அவன் பற்றியிருந்த மரத்திலேயே உணரமுடிந்தது. அவன் சுழன்று திரும்பி மீண்டும் மரத்தின் இடுக்குக்குள் புகுந்துகொள்ள அது தன் தலையால் மரத்தை மோதி கடந்து சென்றது. அப்பால் துரோணரின் குரல் கேட்டது. குதிரை நின்று வெருண்டு கனைத்தபின் திரும்பி திமிர் அசையும் புட்டங்களுடன் நடந்து புதர்களில் மறைந்தது.
துரோணர் சிரித்தபடி அருகே வந்தார். “அஸ்வபதி உன்னை ஏற்கவில்லை பார்த்தா” என்றார். அவருக்குப்பின் தன்னளவேயான வெண்ணிறமான சிறுவன் ஒருவன் தலையில் குஞ்சியாகக் கட்டப்பட்ட குழலும் தோலாடையுமாக புன்னகைத்தபடி நிற்பதை அர்ஜுனன் கண்டான். “இவன் என் மைந்தன் அஸ்வத்தாமன்” என்று துரோணர் சொன்னார். “தூதர்களை உத்தரகங்காபதத்துக்கு அனுப்பி என் மனைவியையும் இவனையும் கூட்டிவரச்சொன்னேன். இன்றுதான் வந்திருக்கிறார்கள்” என்றார். அஸ்வத்தாமன் “வணங்குகிறேன் இளையபாண்டவரே” என்றான். உடலெங்கும் சிராய்ப்புகள் எரிய வந்த அர்ஜுனன் புழுதியையும் புல்தும்புகளையும் உடலில் இருந்து தட்டியபடி “வணங்குகிறேன் அஸ்வத்தாமரே” என்றபோது அவன் எதையோ தன்னுள் உணர்ந்து அகம் முழுக்க தீப்பற்றிக்கொண்டதுபோல உணர்ந்தான்.
துரோணர் “அஸ்வத்தாமா, உன்னால் அக்குதிரையை வெல்லமுடியுமா?” என்றார். “தங்கள் ஆசியுடன் அதற்கு முயல்கிறேன் தந்தையே” என்றான் அஸ்வத்தாமன். “செல்க” என்றார் துரோணர். அஸ்வத்தாமன் முன்னால் வந்து அர்ஜுனன் கையில் இருந்து அந்த கடிவாளப்பட்டையை வாங்கி கண்ணியாக ஆக்கிக் கொண்டான். குனிந்தபடி முன்னால் சென்றான். அப்போதுதான் புதருக்கு அப்பால் அவர்களை நோக்கியபடி குதிரை நிற்பதை அர்ஜுனன் கண்டான். அஸ்வத்தாமனைக் கண்டதும் அது மூக்குவிடைக்க சீறியது. அதன் விழிகள் உருண்டன. முன்னங்காலை தரையில் தட்டியபடி தலையைக் குனித்து பிடரியை சிலிர்த்தது. அஸ்வத்தாமன் அதை சீரான காலடிகளால் நெருங்கிச்சென்றான்.
அவன் நெருங்குவது வரை காத்து நின்ற குதிரை தலையை ஆட்டியபடி அவனைநோக்கி வந்தது. அவன் மிகமெல்ல குதிரை கனைப்பதுபோல ஓர் ஓசையை எழுப்பினான். தன் சிறிய செண்பகஇலைச் செவிகளைக் குவித்து குதிரை அவனை நோக்கியது. மெல்லக் கனைத்தபடி அஸ்வத்தாமன் அதை நெருங்கிச்சென்றான். குதிரை பெருங்குரலில் கனைத்தபடி அவனைநோக்கி பாய்ந்து வந்து கழுத்தை சுழற்றி அறைந்தது. அவன் விலகிக்கொண்டு அதேகணத்தில் அந்தப் பட்டையை வீசி அதன் கண்ணியை குதிரையின் மூக்கில் போட்டுவிட்டான். பட்டையைப்பற்றியபடியே ஓடி ஒரு மரத்தில் காலூன்றி எம்பி குதிரையின் பிடரிமேல் தொற்றிக்கொண்டான்.
குதிரை பின் இருகால்களில் எம்பிக்குதித்து சுழன்றுவந்து அப்படியே முன்னங்கால்களை ஊன்றி பின்னங்கால்களை உதறியது. காற்றில் எழுந்து கால்கள் மண்ணை அறைய கீழே வந்தது. அவன் அட்டைபோல அதன் உடலில் ஒட்டிக்கிடந்தான். அது அவனைச்சுமந்தபடி புதர்க்காட்டுக்குள் புகுந்தது. அவன் தன்மேல் வருடிச்செல்லும் கிளைகளை தவிர்க்க குனிந்து அதன்மேல் குப்புறப்படுத்துக்கொண்டு சென்றான். புதர்களுக்குள் குதிரை மறைந்தபின் இலைகள் கொந்தளிப்பது மட்டும் தெரிந்தது. கனைப்போசை எழுந்தபடியே இருந்தது.
பின்னர் திரும்பிவந்தபோது குதிரையின் முகத்தில் கடிவாளம் சரியாக மாட்டப்பட்டிருப்பதை அர்ஜுனன் கண்டான். குதிரைபோலவே கனைத்து அதனுடன் பேசிக்கொண்டே இருந்தான் அஸ்வத்தாமன். துரோணர் புன்னகையுடன் “அவனை அஸ்வபதி ஏற்றுக்கொண்டுவிட்டார்” என்றான். குதிரை பெருநடையிட்டு வந்து அவர்கள் முன் நின்றது. கடிவாளத்தைப்பற்றி திருப்பிய அஸ்வத்தாமன் “என் சொற்களை அறிகிறது தந்தையே” என்றான். துரோணர் “அது அஸ்வபதியின் சொற்களை மட்டுமே கேட்கும். அவர் உன்னுள் நுழைந்துவிட்டார்” என்றார்.
அஸ்வத்தாமன் உரக்க நகைத்தபடி குதிரையைத் திருப்பி வலப்பக்கம் சரிந்து இறங்கிய புல்வெளி நோக்கிச்சென்றான். கால்களை அதன் விலாவில் அணைத்து அதன் காதருகே குனிந்து அவன் குதிரைக்குரலில் ஆணையிட குதிரை அருவி நுரைத்து இறங்குவதுபோல, பீலி பறக்கும் அம்புபோல, சிறகு குவித்த பருந்துபோல புல்வெளியில் பாய்ந்து இறங்கிச்சென்றது. அதன் குளம்புகளின் அடிப்பகுதிகள்கூட தெரிந்து மறைவதை அர்ஜுனன் நோக்கி நின்றான்.