‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 42

பகுதி ஏழு : கலிங்கபுரி

[ 6 ]

“தந்தையும் தாயும் நம் பிறப்பால் நாமடையும் குருநாதர்கள். அனல், ஆத்மா, ஆசிரியன் மூவரும் நாம் கண்டடையவேண்டிய குருநாதர்கள். குருநாதர்கள் வழியாகவே ஞானம் முழுமையடையமுடியும். ஏனென்றால் மானுடஞானம் என்று ஒன்று இல்லை. அது இயற்கையிலுள்ள விலங்குகள் புழுபூச்சிகள் உள்ளிட்ட அனைத்தையும் உள்ளடக்கிய மெய்ஞானமே. அந்தமெய்ஞானமோ ஏழுலகிலுமுள்ள ஞானங்களின் சிறுபகுதி. ஏழுலகங்கள் பிரம்மத்தின் துளிக்கணங்கள். மானுடஞானம் என்பது துமி. உயிர்களின் ஞானமென்பது துளி. பிரம்மாண்ட ஞானம் என்பது அலை. பிரம்மஞானமென்பதே கடலாகும்” துரோணர் சொன்னார்.

கங்கையில் அவர் இடையளவு நீரில் குளித்துக்கொண்டிருந்தார். கரையருகே தன் இடையளவு நீரில் அர்ஜுனன் குளிரில் நடுங்கியபடி கைகட்டி நின்றிருந்தான். ஒவ்வொருநாளும் கங்கையில் குளிக்கவேண்டுமென்பதற்காக குருகுலத்தை கங்கைக்கரையில் இருந்த பலாசவனம் என்னும் சோலையில் அமைத்துக்கொண்டிருந்தார் துரோணர். சோலையின் நடுவே இருந்த மேட்டில் புதர்களை வெட்டி அவருக்கான பெரிய குடில் அமைக்கப்பட்டது. அதைச்சுற்றி மாணவர்கள் தங்குவதற்கான சிறியகுடில்கள் அமைந்தன. பீஷ்மர் அவரை கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் ஆசிரியராக அமைத்தார். ஆனால் துரியோதனனும் துச்சாதனனும் பீமனும் வில்வித்தையில் ஆர்வம் காட்டவில்லை. மூவரும் பீஷ்மரின் ஆணையின் பொருட்டு அவ்வப்போது வந்து சிலநாட்கள் தங்கிவிட்டுச் சென்றனர். இளம்கௌரவர்களும் ஒவ்வொருநாளும் ரதத்தில் வந்துசென்றனர். அங்கே முழுநேரமும் தங்கி துரோணருடன் கூடவே இருந்தவன் அர்ஜுனன் மட்டும்தான்.

“தனுர்வேதம் உபவேதம் எனப்படுகிறது. அதர்வவேதம் என்னும் பசுவின் கன்று அது என்று மூதாதையர் சொல்கிறார்கள். ஆயிரம்பல்லாயிரம் ஊழிக்காலம் பிரம்மத்திலும் காற்றிலும் கருத்திலும் இருந்த அதர்வவேதத்தை முனிவர்கள் மொழியாக்கினார்கள். அதை வேதவியாசர் தொகுத்தார். வியாசர் அதர்வவேதத்தை சுமந்துவுக்குக் கற்பித்தார். சுமந்து அதை தன் மாணவராகிய கபந்தனுக்குக் கற்பித்தார். கபந்தன் அதை இரண்டாகப்பிரித்து தேவதர்சனர், பத்யர் என்னும் இரு மாணவர்களுக்கு அளித்தார். தேவதர்சனர் அதிலுள்ள பூதயாகங்களைக் கற்றார். பத்யர் அதிலுள்ள உபாசனைகளைக் கற்றார்.”

“தேவதர்சனர் தன் அதர்வத்தை தன் மாணவர்களாகிய மேதர், பிரம்மபலர், ஸௌல்காயனி, பிப்பலாதர் ஆகியோருக்குக் கற்பித்தார். பத்யருக்கு மாணவர்களாக ஜாபாலி, குமுதாதி, ஸௌனகர் என்னும் முனிவர்கள் அமைந்தனர். அவர்களெல்லாருமே அதர்வவேதத்துக்கு சம்ஹிதைகளை உருவாக்கினார்கள். ஸௌனகர் தன் அதர்வவேத சம்ஹிதையை இரண்டாகப்பிரித்து பஃப்ருவுக்கும் சைந்தவருக்கும் அளித்தார். சைந்தவரில் இருந்து கற்ற முஞ்சிகேஸர் அதை முதலில் இரண்டாகவும் பின்னர் மூன்றாகவும் பிரித்தார். அதர்வவேதத்தின் ஐந்து சம்ஹிதைகளான நட்சத்திரகல்பம், வேதகல்பம், சம்ஹிதாகல்பம், ஆங்கிரசகல்பம், சாந்திகல்பம் ஆகியவை அவரால் உருவாக்கப்பட்டன.”

“சம்ஹிதாகல்பத்தில்தான் குதிரைகள், யானைகள், எருதுகளைப்பற்றிய வேதமந்திரங்கள் உள்ளன. சம்ஹிதாகல்பத்தை அடிப்படையாகக் கொண்டு முனிவர்கள் உருவாக்கியது தனுர்வேதம். அவர்கள் அடைந்த பத்துலட்சம் சூத்திரங்களை மாமுனிவரான பிரசேதஸ் பிரவேசாஸ்திரபிரகாசம் என்னும் நூலில் மூன்றுலட்சம் சூத்திரங்களாகத் தொகுத்தார். அவற்றை அவரது மாணவர்களான அகத்தியரும் காசியபரும் கற்றனர். அகத்தியமுனிவரின் குருமரபில் வந்தவர் பரத்வாஜர். அவரது மாணவர் அக்னிவேசர். அக்னிவேசரின் மாணவனாகிய எனக்கு நீ மாணவன் என்பதனால் நீ அகத்திய குருமரபில் வந்தவன் என்று சொல்லப்படுவாய்” என்றார் துரோணர். அர்ஜுனன் கைகூப்பினான்.

ஈர மரவுரியை உடுத்தபின் துரோணர் இருளிலேயே நடந்தார். மாமரம் தளிர்விடத் தொடங்கிய சைத்ரமாதம். காற்றில் அதன் கறைவாசனை இருந்தது. அர்ஜுனன் அவர் சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் பெற்றுக்கொண்டு இருளில் மின்னும் விழிகளுடன் நடந்தான். “வில் என்பது ஒரு சொல் என்று நீ அறிந்த கணமே உண்மையில் தனுர்வேதத்துக்குள் நீ நுழைந்தாய். பிறர் இங்கே கற்பது வில்வேதத்தை அல்ல, வில்வித்தையை மட்டுமே. அது கொல்லும், வெல்லும். ஆனால் கொண்டுசெல்லாது. எது உன்னில் இருக்கிறதோ அதை வளர்க்கும். உன்னை விடுதலைசெய்யாது. வேதமெனப்படுவது விடுதலையை அளிக்கவேண்டும். துயரறுத்து முழுமை நோக்கி கொண்டுசெல்லவேண்டும். தனுர்வேதம் அதைச்செய்யும் என்பதை நான் என்குருநாதரில் கண்டேன்.”

“வில் என்பது ஒரு சொல். அம்பு என்பதும் சொல்லே. மிகச்சரியான முழுமையான சொல்லை அடைந்துவிட்டால் நம் கல்வி முடிந்தது. சொல்லை கையில் இருக்கும் மூங்கிலிலோ தர்ப்பையிலோ நிகழ்த்துவது என்பது மிகமிக எளிய செயல். அந்தத் திறனை ஒரே வருடத்தில் அடைந்துவிடலாம். ஆனால் வாழ்நாளெல்லாம் தவம்செய்தே சொல்லில் முழுமையை அடையமுடியும்” என்றபடி துரோணர் நடந்தார். ஒற்றையடிப்பாதையில் புதருக்குள் ஒரு பாம்பு தலையெடுத்ததை ஓரக்கண்ணால் அர்ஜுனன் கண்டான். துரோணர் “அந்தப்பாம்புக்கு அருகே எத்தனை முட்டைகள் கிடந்தன?” என்றார். அர்ஜுனன் திகைத்து “பார்க்கவில்லை” என்றான்.

“ஏழு” என்றார் துரோணர். “மனிதனின் விழி வளைந்தது. பிறைமுக அம்புபோல. பிறைமுக அம்பில் ஓரத்தைத்தான் கூரியதாக்குவோம். ஏனென்றால் நடுப்பகுதி அதன் விசையாலேயே உள்ளே சென்றுவிடும். விளிம்பு கூரியதாக இல்லையேல் அம்பு வெட்டும்பணியைச் செய்யாது. நம் விழிகளின் நேர்முன்பகுதி நம் சித்தத்துடன் தொடர்புள்ளது. அது காண்பதை நாமும் காண்போமென்பது உறுதி. வளைந்த ஓரக்கண்கள் ஆன்மாவுடன் நேரடியாகத் தொடர்புடையவை. அவற்றைத் தீட்டிவைத்துக்கொள்பவனே வில்ஞானி. அதையே மூன்றுகண்பெறுதல் என்கிறது தனுர்வேதம்.”

“தோல் மற்றொரு கண் என உணர்க. அந்தப்பாம்பு தலைதூக்கியதும் உன் உடலில் நீ அறிந்த உணர்வு மிகமெல்லியது. மிக மழுங்கியது. அந்த உணர்வை தீட்டித்தீட்டி உன் தோலால் பார்க்க முடியும். உன் பின்பக்கம் ஒரு அம்புவந்தால் அதை நீ காணமுடியும்” என்றபடி துரோணர் நடந்தார். “அகத்தில் இருக்கும் சொல்லைத்தீட்டும் கலையைத்தான் நான் உனக்குக் கற்பிக்கவேண்டும். உன் கைகளால் நீ அடையக்கூடிய திறன் என ஏதும் இனி எஞ்சவில்லை.” அவர்கள் குடிலை அடைந்தனர். துரோணரின் மரவுரியை வாங்கி கொடியில் காயப்போட்டான் அர்ஜுனன். அவர் வேற்றுடை அணிந்துகொண்டிருக்கையிலேயே பலகையை எடுத்துப்போட்டு புலித்தோலை அதில் விரித்தான். பூச்சிகள் அணுகாமலிருக்க அனல் கொண்டு வைத்து அதில் குங்கிலியத்தூளைத் தூவி நறும்புகை எழச்செய்தான்.

துரோணர் பத்மாசனத்தில் அமர்ந்துகொண்டு கண்களை மூடினார். அவரது பெருவிரல்கள் பிற விரல்களை தொட்டுத்தொட்டு விலகிக்கொண்டிருந்தன. உதடுகள் மிகமெல்ல அசைந்தன. அர்ஜுனன் மெல்ல ஓசையின்றி உள்ளே சென்று அப்பாலிருந்த சிறியகுடிலுக்குள் சிக்கிமுக்கிக் கல்லை உரசி அடுப்பை பற்றவைத்தான். விடியற்காலையில் துரோணர் எழுவதற்கு முன்னரே எழுந்து கறந்து வைத்திருந்த பாலை அடுப்பில் ஏற்றிவிட்டு திரும்பிவந்து குங்கிலியம் புகைகிறதா என்று பார்த்துக்கொண்டான். பால் கொதித்ததும் அதில் வறுத்து சிறிதாக உடைக்கப்பட்டிருந்த வஜ்ரதானியத்தையும் போட்டு கொதிக்கச்செய்தான். கரிக்கட்டைகளை அடுக்கி அதில் நெருப்பை மூட்டி அனல் செய்தான். இன்கிழங்குகளை அவற்றின்மேல் பரப்பி வைத்தான்.

பால் கொதித்து வஜ்ரதானியம் வெந்த வாசனை எழுந்ததும் இறக்கி வைத்தான். ஓடிப்போய் குங்கிலியத்தைப் பார்த்தபடியே கிழங்குகளை சுட்டு எடுத்து வாழையிலையில் வைத்தான். மீண்டும் சென்றபோது துரோணர் கண்விழித்து வணங்கியபடி எழுந்தார். அர்ஜுனன் “வணங்குகிறேன் குருநாதரே, உணவு ஒருங்கிவிட்டது” என்றான். அவர் “உம்” என்றதும் ஓடிச்சென்று பால்கஞ்சியில் மூங்கில்குழாயிலிருந்த மலைத்தேனை விட்டு கலக்கி மண்கலத்தில் எடுத்துக்கொண்டுவந்து அவர் முன் வைத்தான். கிழங்குகளை எடுத்து உடைத்து தோல் உரித்து ஆவியெழ அருகே வாழையிலையில் பரிமாறினான்.

துரோணர் வணங்கிவிட்டு அமைதியாக உண்ணத்தொடங்கினார். அர்ஜுனன் கைகட்டி அருகிலேயே நின்றிருந்தான். அவர் ஏதோ சிந்தனையுடன் திரும்பியபோது குனிந்து அவர் சொல்லப்போவதற்காகக் காத்திருந்தான். அவர் அதை கவனிக்காமல் உண்டு முடித்து எழுந்தார். அவர் கைகழுவிக்கொண்டிருக்கையில் எச்சில் பாத்திரங்களை உள்ளே கொண்டுசென்று வைத்துவிட்டு திரும்பி வந்து அவர் பீடத்தில் அமர்ந்ததும் அருகே நின்று தாம்பூலத்தைச் சுருட்டி அளித்தான். அவர் வழக்கமாக தாம்பூலம் மென்றபடி சற்றுநேரம் அமர்ந்திருப்பார். அந்நேரத்தில்தான் அவன் சென்று உணவருந்தி வர முடியும். ஆனால் அன்று அவர் உடனே பேசத்தொடங்கினார்.

வேதங்களை ஆறு வேதாங்கங்களைக் கொண்டு பயிலவேண்டும் என்பது நெறி. சிக்‌ஷா, கல்பம், வியாகரணம், நிருக்தம் சந்தஸ், ஜோதிடம் என அவற்றை மூதாதையர் வகுத்திருக்கின்றனர். இப்புவியில் உள்ள உயிர்க்குலங்களின் வகைகளையும் செயல்பாடுகளையும் தொகுத்தும் பிரித்தும் அறிவதே சிக்‌ஷா. உயிர்க்குலங்கள், பொருட்தொகைகள், விசைகள் என மூன்றால் ஆனது இப்புடவி. அவை சாத்விகம், ராஜஸம், தமஸ் என்னும் முக்குணங்களாலும் ஓசை, வாசனை, சுவை, வடிவம், எடை, வண்ணம், எழுதல், வீழ்தல், உருமாறுதல் என்னும் ஒன்பது இருத்தல்கூறுகளாலும் ஆனவை. இது இது எனத் தொட்டு ஒவ்வொன்றாய் அறிந்து இவை என்றறிந்து பின் இது என்னும் முழுமையை அறிபவனே சிக்‌ஷாஞானி.

பகுத்தும் தொகுத்தும் அறியப்படும் அனைத்தும் அறிவாகி அகத்தில் நிறைகின்றன. அவ்வறிதலை பகுத்தும் தொகுத்தும் வகுப்பதை கல்பம் என்கின்றனர் மூதாதையர். ஞானம் என்பது முற்றிலும் தனித்தனியான கோடானுகோடி துளிகளால் ஆனது. அத்துளிகள் ஒவ்வொன்றையும் தனியாகவே அறியவேண்டும். ஆனால் அவை இணைந்து மழையாகப்பெய்வதையும் அறிந்தாகவேண்டும். கல்பஞானி முழுமையில் தனித்தன்மைகளையும் தனித்தன்மைகளில் முழுமையையும் அறிபவன்.

அறிவு என்பது மொழியிலமைவதே. உயிர் உடலில் அமைவதைப்போல. உடலை ஓம்புதல் உயிரை ஓம்புதலென்பதுபோல சரியான மொழி என்பதே சரியான அறிவு. மொழியை தெளிவாக வரையறை செய்துகொள்வதும் அதன் இயங்குவிதிகளை வகுத்துக்கொள்வதும் வியாகரணம் எனப்படும். இலக்கணமே ஒலியை பொருளுடன் பிணைத்து அதை சொல்லாக்குகிறது. சொற்களை இணைத்து அறிவாக்குகிறது. அறிவை உடைத்துச் சொற்களாக்குகிறது. சொற்கள் என்பவை தேனீக்கள். இலக்கணமே சிறகு. தேன் என்பது பொருள்.

சொல்லில் நிற்கும் பொருள் என்பது உடலில் நிற்கும் உயிர் போல ஒரு தற்காலிக லீலை. இங்கே இப்போது இச்சொல்லில் இப்பொருள் நிற்கிறது என்ற வகுத்தறிவை நிருக்தம் என்றனர் முன்னோர். ஒவ்வொரு சொல்லும் பொருள்குறித்ததுவே என நிருக்தத்தின் முதல்விதியை அகத்தியமாமுனிவர் சொன்னார். எங்கு எப்படி சொல்லில் பொருள் தங்குகிறதென்றறிந்தவன் மொழியை அறிந்தவனாகிறான். மொழியை அறிந்தவன் அறிவையும் அறிவை அறிந்தவன் அகிலத்தையும் அறிந்தவனாகிறான்.

சொல்லென்பது ஒலி. செவிணரும் ஒலி அகமுணரும் ஒலியாலேயே இணைக்கப்பட்டுள்ளது. ஒலிகளை இணைப்பதன் அறிவையே சந்தஸ் என்றனர் முன்னோர். தவளைமுட்டைகளை அன்னையின் கருவறைப்பசை இணைத்திருப்பதுபோல சொற்ளை சந்தஸ் இணைக்கிறது. ஓடும் பிரக்ஞை எனும் ஓடையில் ஆடி அலைந்து ஒன்றாய் நிற்க அவற்றுக்கு உதவுவது சந்தஸே. அவை ஒவ்வொன்றும் தன்னை தானறிந்து உயிர்கொண்டெழும்போது சந்தஸை மீறிச்செல்கின்றன. சந்தஸில்லாத சொல் என்பது வானமில்லாத விண்மீன் வெளி என்றே அறிக.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

சொல்லில் அமர்ந்திருக்கும் பொருள் ஒவ்வொன்றும் விதைகள். அவற்றை முட்டித்திறக்கும் தியானத்தையே ஜோதிடம் என்றனர் முன்னோர். சித்தமறியும் சொல்லை சித்தம் பறந்துகிடக்கும் சின்மயப் பெருவெளியால் அறிவதே ஜோதிடம். ஜோதிடம் சொற்களை முளைக்கச்செய்கிறது. ஒவ்வொரு சொல்லிலும் உறைந்துள்ள சித்தத்தை வகுத்துச் சொல்லும் வேதாங்கம் அது.

மகேஸ்வரனின் சிக்ஷா சம்ஹிதையும் அதற்கு நாரதர் எழுதிய உரையும் சிக்‌ஷையின் முதல்நூல்கள். தேவியின் வியவஸ்தானுபவம் கல்பத்தின் முதல்நூல். விஷ்ணுவின் சந்தோர்ணவம் சந்தஸின் முதல்நூல். நிருக்தத்துக்கு கணேசனின் நிருக்தகோசமும் அதற்கு சேஷனின் பாஷ்யமும் முதல்நூல்கள். வியாகரணத்துக்கு மகேஸ்வரனின் வியாகரண சூத்ரமும் நாரதரின் உரையும் முதல்நூல்கள். ஜோதிடம் சூரியனின் பிரகதாங்க பிரதீபத்தை முதல்நூலாகக் கொண்டுள்ளது.

“உபவேதங்கள் என ஐந்தை வகுத்தனர் முன்னோர். அவை ஆயுர்வேதம், தனுர்வேதம், கந்தர்வவேதம், காரண உபவேதம், காமசாஸ்திரம். வேதங்களைப் பயில்வதற்கு வேதாங்கங்கள் எப்படி இன்றியமையாதனவோ அப்படி வேதாங்கங்களுக்கு அவை இன்றியமையாதவை” என்றார் துரோணர். “வில் எனும் பொருளை அறிய நீ சிக்‌ஷையை அறியவேண்டும். முதலையின் வாலிலும் தவளையின் நாவிலும் நீ அதை கண்டுகொள்ளமுடியும். வில் எனும் நிகழ்வை நன்கறிய வெளியென இயங்கும் விசைகளை அறிந்தாகவேண்டும்.”

பேசியபடியே துரோணர் எழுந்து நடக்க அர்ஜுனன் பின்னால் சென்றான். “வில்லை எடு” என்றார் துரோணர். அவன் வில்லை எடுத்ததும் அவர் அதன் வளைவை தன் கையால் அழுத்தினார். விட்டபோது அது எம்பிக்குதித்தது. “இங்கு நின்று துள்ளும் இச்சொல்லின் பொருள் என்ன?” என்றார் துரோணர். “இதன் கொலைவல்லமை அந்தப் பொருளில் உள்ளது. அதை அறிந்தவனே இதை முற்றிலும் கையாளமுடியும்.”

வில் எனும் அறிவை வகுத்துரைப்பது கல்பம். ஒரு அம்பில் விரையும் ஆற்றல் எங்கிருந்து வருகிறது? காற்றில் எழுந்து மண்ணை உண்டு வளரும் மூங்கிலில் இருந்தது அது. அதன் நாணாக இறுகிய தோலை அளித்த எருமை பல்லாயிரம்கோடி புல்லிதழ்களில் இருந்து அதை உருவாக்கிக் கொண்டது. காற்றில் மிதக்கும் அந்த அம்பின் சமநிலையை புல் அசைந்தாடி அசைந்தாடி ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மெல்லக் கண்டெடுத்தது. அவ்வறிதல்களை பகுத்தும் தொகுத்தும் அறிய உனக்கு உதவுவதே கல்பம். அவ்வறிதல்களை மந்திரங்களாக்கி அகத்திலுறையச்செய்தனர் முன்னோர்.

அத்தனை தனுர்வேதமந்திரங்களும் மொழியில் அமைந்தவை என உணர்ந்துகொள். மொழியாகவே அவை உனக்களிக்கப்படுகின்றன. மொழியில் இருந்து அவற்றை நீ முளைக்கவைத்து பொருளாக்கிக் கொள்ளவேண்டும். மொழியின் விதியான வியாகரணத்தைக் கல்லாதவனுக்கு மந்திரங்கள் அறிவாக ஆவதில்லை. சொல்லுக்கும் பொருளுக்குமான உறவை நிருக்தம் வழியாக அறிந்தவன் சொல்லை கைவில்லாக்குகிறான்.

மந்திரங்கள் மொழியாலானவை மட்டுமல்ல. ஒலியாலானவையும்கூட. ஒலியை அடையாமல் மந்திரங்களை மனம் ஏற்காது. சந்தஸை அறியாதவனுக்கு மந்திரங்கள் வெறும் ஒலிகள். அவற்றை இசையாக்கி எழச்செய்யும் சந்தஸ்சாத்திரத்தை கற்றாகவேண்டும். ஒவ்வொரு சொல்லையும் ஆடிமாத வயல் என அவன் அகம் ஏற்று முளைத்தெழச்செய்யவேண்டும். அதற்கு அவனுக்கு ஜோதிடம் உதவவேண்டும்.

“பார்த்தா, வேதாங்கங்களுடன் இந்த வேதத்தை நீ கற்றறிவாயாக. இது உன்னை வானாகவும் மண்ணாகவும் சூழும். உறவாகவும் மூதாதையராகவும் உன்னுடன் இருக்கும். உன்னை ஒருநிலையிலும் கைவிடாது. எதிர்ப்படும் அனைத்தையும் இதன் வழியாக நீ கடந்துசெல்லமுடியும். எளிய சிலந்தி பட்டுவலைச்சரடை நீட்டி பயணம்செய்வது போல இதன் வழியாக நீ செல். உன்னை இறுதியில் தனுவை ஏந்திய பிரம்மம் புன்னகையுடன் வந்து எதிர்கொள்ளும். ஆம், அவ்வாறே ஆகுக!”

குறுங்காட்டில் அவன் அவருடன் சென்றுகொண்டே இருந்தான். அவர் பேசியபடியே சென்றார். கற்றவை அனைத்தும் அவன் ஒருவனுக்குச் சொல்வதற்குத்தான் என்பதுபோல. அவருடைய ஒவ்வொரு சொல்லையும் அவன் வாங்கிக்கொண்டிருந்தான். அவரது பாதங்கள் பதிந்துசென்ற அந்த ஈரமண் அவன் அகமாக இருந்தது. ஒவ்வொரு பாதச்சுவடையும் அவன் அகம் பணிந்தெழுந்து பணிந்தெழுந்து அவரைத் தொடர்ந்து சென்றது. பசியையும் விடாயையும் இரவையும் பகலையும் இருப்பதையும் இல்லாமலிருத்தலையும் அவனறியவில்லை. அறிதல் மட்டுமே இருந்தது, அவன் இருக்கவில்லை.

“விசும்பின் துளி விழுந்த கதிர் என புல்லைச் சொல்கிறார்கள் மூதாதையர். புல்லின் அதிதேவதையான குசை மேகங்களின் குழந்தை. மின்னல்கள் வானிலெழும்போது புல் அவற்றை வாங்கிக்கொள்கிறது என்கின்றனர். மண்ணில் இந்திரனுக்கு மிகப்பிரியமானவள் குசை. நீ இந்திரனின் மைந்தன் என்றனர் நிமித்திகர். உன்னிடம் அம்புகளை ஆளும் குசை என்றும் அன்புடன் இருப்பாள்” என்றார் துரோணர். “எனக்கு தங்கள் அருளன்றி வேறேதும் தேவையில்லை குருநாதரே” என்றான் அர்ஜுனன்.

துரோணர் “மைந்தா, நான் குசையின் புதல்வன்” என்றார். “என் அன்னை கங்கைக்கரை குகர்களைச் சேர்ந்தவள். அவளுடைய கோத்திரம் குசம் எனப்பட்டது. ஆண்கள் படகோட்டுகையில் பெண்கள் தர்ப்பைப்புல் கொய்து கூடைகளும் பெட்டிகளும் முடைவார்கள். குசம் என்னும் தர்ப்பைப்புல் மண்டிய அவர்களின் ஊர் குசவனம் எனப்பட்டது. குசப்புல் வெட்டச்சென்றிருந்தபோதுதான் என் அன்னை என் தந்தையைக் கண்டு என்னைக் கருவுற்றாள்” என்றார் துரோணர். “இளமையில் என்னை வளர்த்த விடூகர் அதைச் சொன்னதும் என் அன்னையின் ஆடைநுனியைப் பற்றுபவன் போல நான் தர்ப்பையைப் பற்றிக்கொண்டேன். அவள் என் அன்னையாகி வந்து என்னுடன் இருக்கிறாள்.”

அவர்கள் கங்கைக்கரையின் பெரிய தர்ப்பைக்காட்டைச் சென்றடைந்தனர். துரோணர் அமர்ந்துகொண்டதும் அவரது கால்களில் ஒட்டியிருந்த நெருஞ்சிமுட்களையும் சிறியவிதைகளையும் தன் மரவுரியாடையின் நுனியால் அர்ஜுனன் துடைத்தான். அவர் அலையடிக்கும் தர்ப்பையின் வெண்ணிறமான பூக்கொத்துக்களை பார்த்துக்கொண்டிருந்தபோது ஓசையின்றி விலகிச்சென்று பெரிய இலைபறித்துக்கோட்டி சிற்றோடை நீரை அள்ளிவந்து அவருக்குக் கொடுத்தான்.

துரோணர் மெல்ல கால்நீட்டி படுத்துக்கொண்டு “தர்ப்பைக்காட்டில் நான் அன்னைமடியை அறிகிறேன்” என்றார். “நெடுநாளாயிற்று நான் நன்றாகத் துயின்று. என்னுள் இருக்கும் அனல் என்னை இமைகளை அணையவிடுவதில்லை. இன்று நீயும் என் அன்னையும் அருகே இருக்கையில் மணிமாலையில் இரு மணிகளுக்கு நடுவே உள்ள கண்ணி போல உணர்கிறேன். இதைவிட நிறைவான ஒன்று என் வாழ்க்கையில் நிகழப்போவதில்லை. இங்கே சற்று கண்ணயர்கிறேன்” என்றார்.

அவரது பாதங்களை அழுத்தியபடி அர்ஜுனன் அமர்ந்திருந்தான். அவர் ஆழ்ந்து உறங்கினார். மாலைவந்து இருண்டபோதும் அவர் துயின்றுகொண்டிருந்தார். அர்ஜுனன் மெல்ல எழுந்துசென்று இரு அம்புகளை உரசி நெருப்பேற்றி அருகே குவித்த விறகுகளைப் பற்றவைத்தான். அந்த அனலின் வெம்மையில் அவர் அருகே பறந்துவந்த பூச்சிகளை விரட்டியபடி பாம்புகளும் விலங்குகளும் அணுகாமல் காத்தபடி விழியிமை மூடாமல் அகம் சலிக்காமல் வில்லேந்தி அமர்ந்திருந்தான். விடியலின் இருளில்தான் துரோணர் கண்விழித்தார். கனன்றுகொண்டிருந்த கணப்பை நோக்கியபின் பெருமூச்சுடன் எழுந்து நடந்தார். அவர் பாதச்சுவடுகளை அர்ஜுனன் தொடர்ந்தான்.

இயல்பாக விட்ட இடத்திலிருந்து துரோணர் சொல்லத்தொடங்கினார். “சனகரின் சக்ரானுவேசம் ஆயுர்வேதத்தின் முதல்நூல். நாரதரின் ஸ்ரானுவாதம் கந்தர்வவேதத்தின் முதல்நூல். காரண உபவேதத்துக்கு அஸ்வினீகுமாரரின் சித்தாந்தோபன்யாசம் முதல்நூல். காமசாஸ்திரம் புலஸ்தியமுனிவரின் தேஹிதானுபவத்தை முதல்நூலாகக் கொண்டுள்ளது…”

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைவல்லுறவும் உயிரியலும்
அடுத்த கட்டுரைகிரிகாமி