பகுதி ஏழு : கலிங்கபுரி
[ 4 ]
அர்ஜுனன் அரண்மனைக்கட்டடங்களின் நடுவில் சென்ற கல்வேயப்பட்ட பாதையில் ஓடி மடைப்பள்ளிகள் இருந்த பின்கட்டை நோக்கிச்சென்றான். சரிந்து சென்ற நிலத்தில் படிகளை அமைப்பதற்குப்பதிலாக சுழன்றுசெல்லும்படி பாதையை அமைத்திருந்தார்கள். கீழே மரக்கூரையிடப்பட்ட மடைப்பள்ளியின் அகன்ற கொட்டகைகளின்மேல் புகைக்கூண்டுகளில் இருந்து எழுந்த புகை ஓடைநீரிலாடும் நீர்ப்பாசி போல காற்றில் சிதறிக்கரைந்துகொண்டிருந்தது. அங்கிருந்து நூற்றுக்கணக்கான பாத்திரங்கள் உரசிக்கொள்ளும் ஒலியும் பேச்சொலிகளும் கலந்த இரைச்சல் கேட்டது.
அவன் மடைப்பள்ளியின் மையக்கொட்டகையை அணுகி தயங்கி நின்றான். அதுவரை அந்த இடத்துக்கே அவன் வந்ததில்லை. அவன் ஒருபோதும் காணாதவற்றாலானதாக இருந்தது அப்பகுதி. மிகப்பெரிய செம்புநிலவாய்கள் அரக்கவாய்கள் திறந்து சாய்த்துவைக்கப்பட்டிருந்தன. காதுகள் கொண்ட வெண்கல உருளிகள் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கப்பட்டு பெரிய தூண்போல நின்றன. செம்புக்குட்டுவங்கள், செம்புத்தவலைகள், பித்தளைப்போணிகள், மண்வெட்டிகளைவிடப் பெரிய மிகப்பெரிய கரண்டிகள், கதாயுதங்களைப்போன்ற சட்டுவங்கள்…
“யார்?” என்று கையில் பெரிய சட்டுவத்துடன் சென்ற ஒருவர் கேட்டார். “அண்ணா?” என்று அர்ஜுனன் தயங்கியபடி சொன்னான். “அண்ணாவா? அண்ணாவின் பெயரென்ன?” என்று அவர் முகத்தைச்சுருக்கி அவனைக் கூர்ந்து பார்த்தபடி கேட்டார். “பீமசேனன்” என்றான் அர்ஜுனன். “பீமசேனனா? அப்படி எவரும் இல்லை… ரிஷபசேனன் என்று ஒருவர் இருக்கிறார். சமையற்காரர்” என்றார் அவர். அருகே வந்த இன்னொருவன் உடனே அர்ஜுனனை அடையாளம் கண்டுகொண்டான். “இளவரசே, தாங்களா?” என்ற பின் “இளவரசர் இளையபாண்டவர்…” என்று மற்றவரிடம் சொல்லிவிட்டு “வணங்குகிறேன் இளவரசே” என்றான். “என் பெயர் நாரன்… இவர் பிருகதர்… தாங்கள் இங்கே எதற்காக வந்தீர்கள்?”
“அண்ணாவைப் பார்க்க வந்தேன்” என்றான் அர்ஜுனன். “பீமசேனர்தானே? வாருங்கள், நானே காட்டுகிறேன்” என்று அவன் அழைத்தான். “பார்த்து வாருங்கள் இளவரசே, இங்கெல்லாம் வழுக்கும்.” அந்த பெரிய முற்றத்தில் விரவிக்கிடந்த பலவகையான பாத்திரங்கள் வழியாக அவர்கள் சென்றார்கள். “இவை ஏன் இங்கே வைக்கப்பட்டிருக்கின்றன?” என்றான் அர்ஜுனன். “இரவில் கழுவி இங்கே வைத்துவிடுவோம். வெயிலில் நன்றாகக் காய்ந்தால் பாசிபிடிக்காது… எந்தப்பாத்திரத்தையும் ஒருநாள் வெயிலில் காயவைக்காமல் எடுக்கக்கூடாதென்பது தலைமை பாசகரின் ஆணை. அவரை தாங்கள் சந்திக்கலாம். அவர் பெயர் மந்தரர். இப்போது நூற்றியிருபது வயதாகிறது. இன்று அவர்தான் பாரதவர்ஷத்திலேயே பெரிய பாசகநிபுணர்.”
அந்த முற்றம் அத்தனை பெரிதாக இருக்குமென அர்ஜுனன் எண்ணியிருக்கவில்லை. ஆயிரக்கணக்கான பெரியபாத்திரங்கள் அங்கே வானம் நோக்கி வாய்திறந்து வெயில்காய்ந்தன. “மதியவெயில் ஏறியபின் மிகக்கவனமாக வரவேண்டும். பாத்திரங்கள் சூடாகி பழுத்திருக்கும். காலில் பட்டால் கொப்பளித்துவிடும்… வாருங்கள். காலை கவனித்து வைக்கவேண்டும்” என்று நாரன் உள்ளே அழைத்துச்சென்றான். நூற்றுக்கணக்கான தூண்கள் காடுபோல செறிந்து நின்ற விரிந்த கொட்டகைக்குள் ஏராளமானவர்கள் அமர்ந்து வேலைசெய்துகொண்டிருந்தனர். அவனை யாரோ கண்டு “இளைய பாண்டவர்” என்றதும் அங்கே ஒலித்துக்கொண்டிருந்த பேச்சொலிகள் அவிந்தன. கண்கள் அர்ஜுனனைச் சூழ்ந்தன.
“இங்கே சாதாரணமாக ஆயிரம்பேர் வேலைசெய்வார்கள் இளவரசே” என்றான் நாரன். “காய்கறிகளை நறுக்குவது, மாவு பிசைவது. வெல்லம் நுணுக்குவது என்று ஏராளமான வேலைகள் உண்டு. இங்கே பெரும்பாலும் பெண்கள்தான். சமையல் கற்றுக்கொள்ள வருபவர்களையும் வயதானவர்களையும் இங்கே அமரச்செய்வோம்…” அவர்கள் அங்கே என்னென்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்று கணக்கிடவே முடியாது என்று அர்ஜுனன் எண்ணினான். ஒரு பெண் பருப்பை சிறிய துளைத்தட்டு ஒன்றில் போட்டு அரித்துக்கொண்டிருந்தாள். அதை அவன் பார்ப்பதைக் கண்டதும் “பெரிய பருப்பையும் சிறியபருப்பையும் இருவகை அரிப்புகளால் களைந்துவிட்ட்டால் ஒரே அளவுள்ள பருப்புகள் எஞ்சும். அவையே சுவையானவை” என்றான் நாரன்.
தரைமுழுக்க ஏதோ ஒரு பசைத்தன்மை இருந்தது. “மாலையில் சுண்ணம் போட்டு உரசிக்கழுவுவோம். ஆயினும் காலையில் சற்றுநேரத்திலேயே ஒட்டத் தொடங்கிவிடும்” என்று நாரன் சொன்னான். “ஏதோ ஒன்று சொட்டிக்கொண்டே இருக்கும். தேன், வெல்லப்பாகு, அரக்கு, காய்கறிகளின்பால் ஏதாவது… வழுக்கும்.” விதவிதமாக காய்கறிகளை வெட்டினர். நீள்துண்டுகளாக கீற்றுகளாக சதுரங்களாக. அவர்களின் கைகளில் இருந்த விரைவு வில்லாளியின் விரல்களுக்கு நிகரானது என அர்ஜுனன் எண்ணினான். அவர்கள் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் வேறெங்கோ பார்த்துக்கொண்டும் மிகக்கூர்மையான கத்திகள் நடுவே விரல்களைச் செலுத்தி நறுக்கிக்கொண்டிருந்தனர்.
புளித்தவாடை எழுந்த ஒரு கூடத்துக்குள் நுழைந்தனர். பெரிய யானைக்குட்டிகள் போல கரிய கலங்கள் அங்கே இருந்தன. “இங்கே மோர் உறைகுத்துகிறோம். அவையெல்லாம் பீதர்களின் களிமண்கலங்கள்…” என்றான் நாரன். “இங்கே ஒருநாள் வேலைசெய்பவர் பின் வாழ்நாளில் எப்போதுமே மோரும் தயிரும் உண்ணமாட்டார்…” அகன்ற இடைநாழிக்கு இருபக்கமும் பெரிய கூடங்களுக்கான வாயில்கள் திறந்தன. “இது நெய்யறை. பீதர்கலங்களில் நெய்யை வைத்திருக்கிறோம். இப்பக்கம் அக்காரப்புரை. மூன்று வகையான வெல்லங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. கரும்புவெல்லம், ஈச்சம்பனைவெல்லம், யவனர்களின் கிழங்குவெல்லம்.” அர்ஜுனன் முகத்தைச் சுளித்து “மதுவாசனை எழுகிறது” என்றான். “ஆம் இங்கே ஒரு கலத்தை சற்றே மறந்துவிட்டுவிட்டால் தூயமதுவாக அது மாறிவிடும்” என்று நாரன் நகைத்தான்.
உலோகஒலிகள் கேட்கத் தொடங்கின. நாரன் “இது மணப்பொருட்களுக்கான அறை. சுக்கு, மிளகு, சீரகம் என ஐம்பத்தாறு வாசனைப்பொருட்களை இங்கே வைத்திருக்கிறோம். அஹிபீனாவும் ஃபாங்கமும் கூட இங்கே சமையல்பொருட்கள்தான். பீதர்நாட்டு வேர்கள் சில உள்ளன. விபரீதமான வாசனைகொண்டவை. ஆனால் மதுவுடன் உண்ணும் சில உணவுகளுக்கு அவை இன்றியமையாதவை” என்றான். அப்பாலிருந்து வெம்மையான காற்று வந்தது. “அடுமனைக்குள் செல்கிறோம். தங்கள் தமையனார் அங்குதான் இருக்கிறார்” என்றான் நாரன்.
பெரிய முற்றம்போல விரிந்துகிடந்த அடுமனையின் கூரையை மிக உயரமாகக் கட்டியிருந்தனர். இரண்டடுக்குக் கூரையின் நடுவே பெரிய கூம்புகள் உள்நோக்கிச்சென்று புகைபோக்கியில் முடிந்தன. கீழே இரண்டாமடுக்குக் கூரைக்கு நடுவே இருந்த பெரிய இடைவெளி வழியாக வெளிக்காற்று உள்ளே வந்தது. நான்குபக்கமும் விழிதிருப்பிய இடங்களில் எல்லாம் தீக்கொழுந்துகள் சீறி எழுந்து துடிக்க பெரிய கலங்களையும் உருளிகளையும் நிலவாய்களையும் ஏந்திய அடுப்புகள் அருகே தோலால் ஆன அடியாடை மட்டும் அணிந்த சமையற்காரர்கள் பணியாற்றிக்கொண்டிருந்தனர். “வாருங்கள் இளவரசே” என்றான் நாரன்.
அடுப்புகள் பன்னிரண்டு நீண்ட வரிசைகளாக இருந்தன. ஒவ்வொரு வரிசைக்கு முன்னாலும் பாத்திரங்களையும் பொருட்களையும் கொண்டு வருவதற்கான உந்துவண்டிகள் வந்துபோவதற்கான கருங்கல்தளம் இருந்தது. அடுப்புகளுக்குப் பின்பக்கம் அதேபோன்ற இன்னொரு பாதையில் விறகுவண்டிகள் உருண்டுவந்தன. அடுப்பின் இருபக்கமும் மண்ணால் ஆன நாலைந்து படிகள் மேல் ஏறிச்சென்று நிற்பதற்கான பீடங்கள். அவற்றுக்கு அருகே கரண்டிகளை நாட்டி நிறுத்துவதற்கான மரத்தாலான நிலைகள். எல்லா அடுப்புகளின் இருபக்கமும் இரும்பாலான தூண்கள் நடப்பட்டு நடுவே இரும்புச்சட்டகம் பதிக்கப்பட்டிருந்தது.
பீடங்களில் ஏறி நின்றவர்கள் மரத்தாலான பிடி போட்ட செம்புச் சட்டுவங்களால் உருளிகளில் வெந்துகொண்டிருப்பனவற்றை கிளறினர். கரண்டிகளாலும் அரிப்பைகளாலும் புரட்டினர். சகட ஓசையுடன் விறகுவண்டிகளும் பொருள் வண்டிகளும் வந்து அவற்றை இறக்கிச் சென்றன. அடுப்பின் பின்பக்கம் எரிகோளன் நின்று நெருப்பைப் பேணினான். அடுப்பின் முன்பக்கம் அடுநாயகங்கள் நின்று சமையலை நிகழ்த்தினர். எல்லா அடுப்புகளும் சர்ப்பங்கள் போல சீறிக்கொண்டிருந்தன. “ஏன் சீறுகின்றன?” என்றான் அர்ஜுனன். “அவற்றுக்கு அடியில் குழாய் வழியாக காற்று வருகிறது. வெளியே பத்து யானைகள் நின்று சக்கரத்துருத்திகளை சுழற்றிக்கொண்டே இருக்கின்றன. அவற்றில் இருந்து காற்று வந்து விறகை வெண்ணிறத்தழலாக எரியச்செய்கிறது” என்றான் நாரன்.
அர்ஜுனன் பீமனைக் கண்டுவிட்டான். எதிர்மூலையில் பெரிய மண்குதிர் ஒன்றின் முன் பீமன் நின்றிருந்தான். அர்ஜுனன் அருகே சென்று “அண்ணா” என்றான். பீமன் திரும்பிப்பார்த்து கண்களால் நகைத்துவிட்டு இரு என சைகை காட்டினான். அவன் முன் இருந்தது பெரிய சிதல்புற்று என்றுபட்டது. சிவந்த மண்ணால் ஆன கூம்பில் பல இடங்களில் வட்டமான துளைகள் இருந்தன. அவையெல்லாமே கனத்த மண்தட்டுகளால் மூடப்பட்டிருந்தன. பீமன் ஒரு மண்தட்டை அதன் மரத்தாலான பிடியைப்பிடித்து எடுத்து வைத்துவிட்டு மரப்பிடி போட்ட நீண்ட செம்புக்கம்பியின் முனையில் இருந்த கொக்கியால் உள்ளிருந்து சுடப்பட்ட அப்பங்களை எடுத்து பெரிய மூங்கில்கூடையில் போட்டான்.
“உள்ளே அவற்றை அடுக்கி வைத்திருக்கிறீர்களா?” என்றான் அர்ஜுனன். “இல்லை, உள்ளே கம்பிகள் இருக்கின்றன. அவற்றில் ஒட்டிவைத்திருக்கிறேன். அவற்றில் நேரடியாக அனல் படக்கூடாது. இவை உறையடுப்புகள். இவற்றின் மண்சுவர்கள் மிகச்சூடானவை. அந்தச்சூடு காற்றில் வந்து இவற்றை சமைத்துவிடும்.” வெளியே நீட்டிக்கொண்டிருந்த மரக்கைப்பிடியை பிடித்து இழுத்து ஒவ்வொரு கம்பித்தடுப்பாக விலக்கி பின்னிழுத்து மேலும் கீழே சென்று அங்கிருந்த கம்பி அடுக்குளில் வெந்த அப்பங்களை எடுத்தான். அவன் ஒரு துளைக்குள் இருந்த அப்பங்களை எடுத்துமுடித்ததுமே அந்தக்கூடையை அவ்வழியாக வந்த வண்டியில் தூக்கிவைத்து கொண்டுசென்றார்கள். “அங்கே போஜனமந்திரத்தில் நான்காயிரம்பேர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள்” என்றான் பீமன்.
மீண்டும் கீழிருந்தே கம்பித்தடுப்புகளை உள்ளே தள்ளி நீள்வட்டமாக தேன்தட்டு போல பரப்பப்பட்ட கோதுமைமாவை அந்தக் கம்பியால் எடுத்து உள்ளே அடுக்குவதை அர்ஜுனன் கண்டான். நூறு அப்பங்களை அடுக்கி முடித்ததும் மூடிவைத்துவிட்டு “இது பொறுமையாகச் செய்யவேண்டிய பணி. அம்புவிட்டு மனிதர்களைக் கொல்வது போல எளிதல்ல. கண்ணும் காதும் மூக்கும் நாக்கும் கையும் ஒன்றாகவேண்டும். சித்தம் அந்த ஐந்து புரவிகளையும் நடத்தவேண்டும்” என்றான்.
“இதோ இந்த அடுப்பில் பன்னிரண்டு அடுகலங்கள் உள்ளன. பன்னிரண்டிலும் பன்னிரண்டு பதங்களில் அப்பங்கள் வெந்துகொண்டிருக்கின்றன. மூக்கைக்கொண்டு எந்த அடுகலம் வெந்துவிட்டது என்று அறியவேண்டும். உடனே இந்தத் தட்டை விலக்கி அனல் வாயை மூடிவிட்டு மூடியைத் திறந்துவிடவேண்டும். சற்று தாமதித்தாலும் அப்பம் கருகிவிடும்” என்றான். “கூடவே அடுகலங்களின் மேலே பார்த்துக்கொண்டும் இருக்கவேண்டும். சில அடுகலங்கள் அதிக வெப்பம் கொண்டு சிவந்துபழுத்துவிடும்.” அர்ஜுனன் “நீங்கள் சாப்பிட்டுப்பார்ப்பீர்களா?” என்றான். “சமைக்கும்போது சாப்பிடக்கூடாது. வயிறு நிறைந்தால் உணவின் வாசனை பிடிக்காமலாகும். நாவில் சுவையும் மறக்கும். சுவையறிவது மூக்கைக்கொண்டுதான். ஆனால் நாக்குதான் மூக்குவழியாக அச்சுவையை அறிகிறது.”
பக்கத்தில் ஒரு பெரிய பித்தளை உருளியை இருகாதுகளிலும் கனத்த சங்கிலிகளை மாட்டி மேலிருந்த இரும்புச்சட்டத்தில் கட்டினார்கள். பின்னர் அச்சங்கிலியுடன் இணைந்த சக்கரத்தைச் சுற்ற உருளி மேலெழுந்தது. ஒருபக்கம் அதை மெல்லப்பிடித்து அப்படியே அசைத்து முன்னால் வந்து நின்ற வண்டியில் அமரச்செய்து அதன் காதுகளை வண்டியின் கொக்கிகளுடன் இணைத்தபின் பெரிய செம்பு மூடியால் அதை மூடி தள்ளிக்கொண்டு சென்றனர். “எந்தப் போர்க்கலையைவிடவும் நுட்பமானது இது. சற்று பிசகினாலும் உருளி கவிழ்ந்துவிடும். அங்கிருக்கும் அனைவரும் வெந்து கூழாகிவிடுவார்கள்” பீமன் சொன்னான்.
“நீங்கள் போர்க்கலையை வெறுக்கத் தொடங்கிவிட்டீர்கள் அண்ணா” என்றான் அர்ஜுனன். “ஆம், மனிதர்களைக் கொல்வதைப்போல இழிசெயல் ஒன்றுமில்லை. இங்கே நின்று அன்னம் எழுவதைக் கண்ட ஒருவன் உடல் என்பது எத்தனை மகத்தானது என்பதை உணர்வான். ஒரு தலையை கதையால் உடைக்க சிலநொடிகள் போதும். அந்தத் தலையை அதன் தாய் பெற்று உணவூட்டி வளர்த்து எடுக்க எத்தனை நாட்களாகியிருக்கும். எத்தனை அடுமனையாளர்களின் உழைப்பால் அந்த உடல் வளர்ந்து வந்திருக்கும்!” பீமன் அடுத்த அடுகலத்துக்குள் இருந்து அப்பங்களை எடுக்கத் தொடங்கினான். “மூடர்கள். வெற்று ஆணவம் கொண்ட வீணர்கள். படைக்கலம் ஏந்தி நிற்கும் மனிதனைப்போல கீழ்மகன் எவனும் இல்லை.”
“பிதாமகர் பீஷ்மர் கூடவா?” என்றான் அர்ஜுனன். “ஆம், அவரும் அப்படித்தான் இருந்தார். இந்த அடுமனை வழியாக நான் அடைந்த மெய்யறிவை பாரதவர்ஷம் முழுக்கச் சுற்றி அவர் இப்போதுதான் அடைந்திருக்கிறார்” என்றான் பீமன். “நான் இந்த அடுமனையில் அனல்முன் நிற்கையில் மட்டும்தான் மானுடனாக உணர்கிறேன். என் கையால் அன்னம் பிறந்து வரும்போது என் உடல் சிலிர்க்கிறது. இதோ பன்னிரண்டு கருவறைகள். பன்னிரண்டு கருவாய்கள். உள்ளிருந்து நான் எடுப்பவை சின்னஞ்சிறு மதலைகள். புத்தம்புதியவை. அவை சற்றுநேரத்திலேயே மானுட உடலாகின்றன. மண்ணில் வாழத்தொடங்குகின்றன.”
“நீங்கள் மாறிவிட்டீர்கள் அண்ணா” என்றான் அர்ஜுனன். “வளர்ந்துவிட்டேன். அன்னையிடமும் பெரியதந்தையிடமும் சொல்லிவிட்டேன். நான் சமையல்பணியை மட்டும்தான் செய்யவிருக்கிறேன். என் குருநாதர் மந்தரர்தான். அவரைப்போல அன்னம் வழியாக பிரம்மத்தை அறிந்தேன் என்றால் நான் முழுமைகொண்டவன்” பீமன் சொன்னான். “நீயும்தான் வளர்ந்துவிட்டாய். உன்னிலிருந்த அந்தச் சிறுவன் இந்த ஒன்றரை வருடங்களில் மறைந்துவிட்டான். எப்போது நீ கல்விச்சாலையை விட்டு விலகினாயோ அப்போதே ஆண்மகனாக ஆகத்தொடங்கிவிட்டாய்.” அர்ஜுனன் புன்னகையுடன் “அன்னை என்ன சொன்னார்கள்?” என்றான். “சிரித்துக்கொண்டு பேசாமலிருந்தார்கள். ஆனால் பெரியதந்தை எழுந்து நின்று கைகளைத் தட்டிக்கொண்டு நடனமிட்டு சிரித்துக் கொண்டாடினார். சரியான முடிவு மைந்தா என்று என்னை அணைத்துக்கொண்டார். விழிகளிருந்தால் நான் செய்திருக்கக்கூடிய பணி அதுவே. அன்னமே பிரம்மம் என்கின்றன உபநிடதங்கள். அடுமனை பிரம்மலீலை நிகழும் இடம். அது ஒரு தவச்சாலை என்றார்” என்று பீமன் சொன்னான்.
சிரித்தபடி “அவர் உணவை இங்குவந்து மல்யுத்தவீரர்களுடன் அமர்ந்து உண்ணவே விரும்புவார். அவருக்கு உணவு பரிமாற இங்கே உள்ளவர்கள் முந்துவார்கள். நான் அந்த வாய்ப்பை எவருக்கும் அளிப்பதில்லை. உணவும் உண்பவனும் ஒன்றாகும் இருமையற்ற பெருநிலை அவர் உண்ணும்போதுதான் நிகழும்” என்றான் பீமன். “நான் அங்கே உணவறையை உனக்குக் காட்டுகிறேன். பல்லாயிரம் கைகள் வாய் என்னும் வேள்விகுண்டத்துக்கு அவியிடுவதைக் காணலாம். உள்ளே எரியும் நெருப்பு பிரம்ம ரூபனாகிய வைஸ்வாநரன், புடவியெங்கும் ஆற்றலை அன்னமாக்குபவன். அன்னத்தை ஆற்றலாக்குபவன். அன்னத்தை தன் ஊர்தியாகக் கொண்ட காலரூபன்.” பீமன் அங்கே வந்த ஒருவரிடம் “பீஜரே, இதைப்பார்த்துக்கொள்ளும்” என்றபின் அர்ஜுனனிடம் “வா” என்று சொல்லி நடந்தான்.
பெரிய இடைநாழிகளில் வண்டிகள் செல்வதற்கான பன்னிரண்டு கல்பாதைகள் போடப்பட்டிருந்தன. எட்டுபாதைகளில் வண்டிகளில் உணவு சென்றுகொண்டிருந்தது. நான்குபாதைகளில் ஒழிந்த வண்டிகள் வந்துகொண்டிருந்தன. ஆவியெழும் அப்பங்கள், சோறு, வஜ்ரதானியக் களி, நெய்மணம் எழுந்த பருப்பு, கீரை… “பின்காலையில் இருந்தே அங்கே மதியஉணவுப் பந்திகள் தொடங்கிவிடும். பின்மதியம் வரை அவை நீடிக்கும்.” அர்ஜுனன் சிரித்து “பந்திக்கு முந்துபவர்கள் இருப்பார்களே?” என்றான். “சுவையறிந்தவன் முந்தமாட்டான்” என்றான் பீமன். “முந்திவந்து உண்பது ஒரு சுவை என்றால் பிந்திப்பசித்து வந்து உண்பது வேறொரு சுவை. இரண்டுமே பேரின்பம்.”
பெரிய வண்டி ஒன்றை சுட்டிக்காட்டி பீமன் சொன்னான் “அஷ்டஃபலம். எட்டு காய்கறிகள். பூசணிக்காய், கும்பளங்காய், வெள்ளரிக்காய், வழுதுணங்காய், புடலங்காய், வாழைக்காய், கருணைக்கிழங்கு, முக்கிழங்கு. எட்டும் எட்டுவகைக் காய்கள். பூசணிக்காய், கும்பளங்காய், வெள்ளரிக்காய் மூன்றும் நீர்த்தன்மை கொண்டவை. வழுதுணங்காய், புடலங்காய் இரண்டும் விழுதுத்தன்மைகொண்டவை. பிற மூன்றும் மாவுத்தன்மை கொண்டவை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை, ஒவ்வொரு வாசனை. அவை வேகும் நிலையும் வேறு வேறு. அதற்கேற்ற அளவுகளில் நறுக்கவேண்டும். அதற்கேற்ற சரிநிலைகளில் கலக்கவேண்டும். அஷ்டஃபலம் அமைந்து வருவதென்பது ஒரு மகத்தான இசை நிகழ்வதுபோல என்று பெரியதந்தையார் சொன்னார். நான் சமைத்த அஷ்டஃபலத்தை உண்டுவிட்டு நீ பிரம்மத்தை நெருங்குகிறாய் குழந்தை என்று என்னை வாழ்த்தினார்.”
முதல் அன்னமண்டபத்தில் இரண்டாயிரம்பேர் உண்டுகொண்டிருந்தனர். ஓசையிலாது ஓடும் வெண்கலத்தாலான சக்கரங்கள் கொண்ட வண்டிகளில் கொண்டுசெல்லப்பட்ட உணவை பரிசாரகர்கள் விளம்பிக்கொண்டிருக்க பந்திக்கு இருமுனையிலும் இரு சாலைப்பிள்ளைகள் நின்று அன்னவரிசையை மேற்பார்வையிட்டு ஆணைகள் கொடுத்துக்கொண்டிருந்தனர். “இங்கே திங்கள் கிழமையும் வெள்ளிக்கிழமையும் ஊனில்லாத சாத்வீக உணவுதான். பிறநாட்களில் ஊனும் ஊன்நெய்யும் கொண்ட ராஜச உணவு” என்றான் பீமன். “சாத்வீக உணவுண்ணும் நாட்களில்தான் இத்தனை பேச்சுக்குரல் இருக்கும். மற்றநாட்களில் வாயின் ஒலி மட்டும்தான்.”
உண்ணும் முகங்களை நோக்கியபடி அர்ஜுனன் நடந்தான். விழித்த கண்கள், உணவை நோக்கி குனிந்த உடல்கள், உண்ணும்போது ஏன் இத்தனை பதற்றமாக இருக்கிறார்கள், ஏன் இத்தனை விரைவுகொள்கிறார்கள்? அஸ்தினபுரியில் ஒருநாளும் உணவில்லாமலானதில்லை. ஆயினும் உணவு அந்த விரைவைக் கொண்டுவருகிறது. எல்லா விலங்குகளும் ஆவலுடன் விரைந்து உண்கின்றன. உணவு அற்றுப்போய்விடும் என அஞ்சுபவர்களைப்போல. அதையே பீமன் சொன்னான் “அவர்கள் அத்தனை பேருமே விரைந்து உண்கிறார்கள். தீ அப்படித்தான் அன்னத்தை அறிகிறது. இங்கிருந்து நான் பார்த்துக்கொண்டிருப்பேன். எனக்கு இது ஒரு பெரும் வேள்விக்கூடமென்று தோன்றும்.”
பந்திகளுக்கு ஓரமாக அர்ஜுனனை அழைத்துச்சென்று சிறிய ஓர் அறையை அடைந்தான் பீமன். “இதுதான் குருநாதர் இருக்குமிடம். அவரால் இப்போது நடமாடமுடியாது. பத்தாண்டுகளுக்கு முன்புவரை அடுகலம் முன்னால் அவரே நிற்பார். அவரைச் சந்தித்ததும் நீ அவரது பாதங்களைப் பணிந்து வணங்கவேண்டும். உனக்கும் என்றாவது மெய்யறிதல் கிடைக்கலாம்.” அர்ஜுனன் “அவர் சூதர் அல்லவா?” என்றான். “நீ நோயுற்றிருக்கிறாய் என்பதற்கான சான்று இந்தக் கேள்வி. உனக்கு மருத்துவன் தேவை. ஞானம் தீ போன்றது. அது பிறப்பைப் பார்ப்பதில்லை. அறிவை நமக்களிப்பவன் இறைவன். அவன் பாதங்களின் பொடிக்கு நிகரல்ல நால்வேதங்களும்.”
“நிகரற்ற சமையல்ஞானி அவர்” என்றான் பீமன். “அவரைப்பற்றி இப்போதே நூற்றுக்கணக்கான புராணங்கள் உலவுகின்றன. அவர் சமைக்காத ஊனுணவை தொடமாட்டேன் என்று துர்க்கையே சன்னதம் வந்து சொன்னாள் என்று சென்ற மாதம் ஒரு சூதர் சொல்லிக்கொண்டிருந்தார்” என்றான் பீமன். “நான் அவரைப்பற்றி பெரியதந்தையிடமிருந்துதான் அறிந்தேன். சேவகன் சுக்குநீரை கொண்டுவரும்போதே மந்தரர் கைபட்ட சுக்குநீர் என்று சொல்லிவிட்டார். வெறும் சுக்குநீர். அதில் ஒருவரின் கைநுட்பம் இருக்குமென்றால் அவர் மனிதனல்ல தேவன் என்று தெளிந்தேன்.”
“ஞானியின் கைபட்டால் எதுவும் தெய்வமாகும் என அவரைக் கண்டபின்புதான் அறிந்தேன். அவர் பாதங்களைப் பணிந்து எனக்கு மெய்மையை அருளுங்கள் தேவா என்று கேட்டேன். என்னை அணைத்து என் தலையில் கைகளை வைத்தார். பின்னர் வெற்றிலையில் களிப்பாக்குடன் சற்றே வெல்லமும் சுக்கும் இரண்டுபாதாம்பருப்புகளும் வைத்து சுருட்டி அளித்தார். அதற்கிணையான சுவையை இன்றுவரை நான் அறிந்ததில்லை. ஒவ்வொருநாளும் அதை நானே செய்துபார்க்கிறேன். அது தெய்வங்களுக்கு அருகே நின்றுகொண்டிருக்கிறது. என் கையில் மானுடச் சுவையே திகழ்கிறது” பீமன் சொன்னான்.
“ஆனால் ஒருநாள் அவரை நானும் சென்றடைவேன் என்று உணர்கிறேன். அந்தச்சுவை என் நாவில் அழியாமல் பொறிக்கப்பட்டிருக்கிறது. கவிஞன் நாவில் எழுத்தாணியால் பொறிக்கப்பட்ட ஓங்காரம் போல. அது என்னை வழிநடத்தும். ஒருவேளை நான் இன்னும் கனியவேண்டியிருக்கலாம். ஆனால் குருவருள் எனக்குண்டு. ஏனென்றால் இருபதாண்டுகளாக அவர் எவருக்கும் நேரடியாக கற்பிப்பதில்லை. என்னை அவரது பாதங்களுக்குக் கீழே அமரச்செய்து கற்றுத்தந்தார். என்னை அவர் தேர்ந்தெடுத்தார் என்று இங்கே பிற சூதர்கள் சொன்னார்கள். அப்படியென்றால் நான் இப்பிறவியிலேயே பிரம்மத்தை அறிவேன். வீடுபேறு பெறுவேன்.”
சிறிய அறையில் ஈச்சை நாரால் ஆன சாய்வுநாற்காலியில் மந்தரர் சாய்ந்து படுத்திருந்தார். அங்கிருந்து பார்க்கையில் மொத்தப் பந்தியும் தெரிந்தது. அவர் கைகளை மார்புடன் அணைத்துக்கொண்டு தொங்கிய கீழ்தாடையுடன் தளர்ந்த இமைகளுடன் அரைத்துயில்கொண்டவர் போல உணவுண்பவர்களை பார்த்துக்கொண்டிருந்தார். “அவருக்கு மைந்தர்களும் சிறுமைந்தர்களும் உள்ளனர். நான்கு தலைமுறை மைந்தர்கள் சமையல்செய்கிறார்கள். அத்தனைபேருக்கும் இல்லங்கள் உள்ளன. ஆனால் அவர் இங்கே பகலெல்லாம் உணவுண்பவர்களை நோக்கி அமரவே விரும்புவார். இது அவரது தவம்” என்றான் பீமன் மெல்லிய குரலில்.
உள்ளே சென்று அவர் முன் நின்றபோதும் அவர் அசையவில்லை. பீமன் “வணங்குகிறேன் குருநாதரே” என்றான். அவரது விழிகள் திரும்பின. பழுத்த நெல்லிக்காய் போல அவை நரைத்திருந்தன. சுருக்கங்கள் செறிந்து செதிலாகிவிட்டிருந்த உடலிலும் முகத்திலும் புன்னகை ஒளியுடன் எழுவதை அர்ஜுனன் கண்டான். மோவாய் விழுந்து பல்லே இல்லாத வாய் திறந்து உதடுகள் உள்ளே மடிந்து ஆடின. அமரும்படி கை காட்டி அர்ஜுனனை நோக்கி இது யார் என்று சைகையால் கேட்டார். “இவன் என் தம்பி, இளையபாண்டவனாகிய அர்ஜுனன்” என்றான் பீமன். அர்ஜுனன் குனிந்து அவர் பாதங்களைத் தொட்டு வணங்க அவர் அவன் தலையில் கையை வைத்து சொல்லின்றி வாழ்த்தினார்.
பீமன் அவரது கால்களின் கீழ் அமர்ந்துகொண்டு அவரது பாதங்களைப்பிடித்து தன் மடிமேல் வைத்துக்கொண்டு விரல்களை மெல்ல இழுத்து நீவத்தொடங்கினான். “இன்றுதான் இவன் சமையலறைக்குள் வருகிறான் குருநாதரே. சமையல் என்பது ஒரு ஞானமார்க்கம் என்று சொல்லிக்கொண்டிருந்தேன்” என்று உரத்த குரலில் சொன்னான். அவர் உதடுகள் இலைநுனிகள் போல பதற ஏதோ சொன்னார். அர்ஜுனன் பீமனை நோக்க “எல்லா செயலும் ஞானமார்க்கமே என்று சொல்கிறார்” என்றான் பீமன்.
வெளியே பந்திமுடிந்து அனைவரும் எழுந்துகொள்ளும் ஒலி கேட்டது. அவர் தலைதூக்கி இலைகளைப் பார்த்தார். “சமைப்பவன் எப்போதும் எச்சில் இலைகளைப் பார்க்கவேண்டும் என்று சொல்வார். எவை எஞ்சுகின்றன எவை உண்ணப்பட்டுள்ளன என்பதுபோல அவனுக்கு அறிவை அளிக்கும் இன்னொன்றில்லை என்பார். ஒருமுறைகூட அவர் எச்சில் இலைகளை பார்க்காமலிருந்ததில்லை” என மெல்லிய குரலில் பீமன் சொல்லிவிட்டு அவரிடம் உரக்க “அஷ்டஃபலம் இன்று நன்றாக வந்திருக்கிறது” என்றான். அவர் சொன்னதை உடனே அர்ஜுனனிடம் “ஆனால் கருணைக்கிழங்கில் பாதிக்குமேல் நீர் தேங்குமிடங்களில் விளைந்தவை என்கிறார்” என்றான்.
புன்னகையுடன் அவர் ஏதோ சொன்னார். “சுவையை மனிதர்கள் இழந்துவருகிறார்கள். ஏராளமான உணவு சுவையை அழிக்கிறது என்கிறார்” என்றபின் பீமன் “குருநாதரே, இவனுக்கும் தாங்கள் மெய்மையை அருளவேண்டும்” என்றான். அவர் புன்னகையுடன் திரும்பிப்பார்த்தபின் கையைத் தூக்கி வாழ்த்துவதுபோல சொன்னார். “மெய்யறிவை அடையும் நல்வாய்ப்புள்ளவன் நீ என்கிறார். உன் கண்களில் அது தெரிகிறதாம். உன் ஞானாசிரியன் உன்னைத் தேடிவருவான் என்கிறார்.” அவர் சிரித்துக்கொண்டே ஏதோ சொல்ல பீமன் “உன்னைப்போன்றே பெருங்காதலன் ஒருவனே உனக்கு ஞானமருள முடியும் என்றும் அவன் உனக்கு தோள்தழுவும் தோழனாகவே இருக்கமுடியும் என்றும் சொல்கிறார். தோழன் வடிவில் குருவை அடைபவன் பெரும் நல்லூழ் கொண்டவன் என்கிறார்” என்றான் பீமன்.