«

»


Print this Post

மலேசியா ஒரு கடிதம்


அண்ணன் ஜெயமோகனுக்கு,

மலேசிய அரசியல் குறித்து தமிழக எழுத்தாளர்கள் அறிந்திருப்பது மிக அவசியம் ஆகும். சிறுபான்மை இனத்தவரின் தாய்மொழியான தமிழ் மொழிக்கு ஏற்படப்போகும் அரசியல் பின்னடைவுகள் குறித்த கட்டுரைகளை உலக வாசகர்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். உங்கள் வலைத்தல கவனத்திற்கு:

அன்மையில் மலேசிய கல்வி அமைச்சு எஸ்.பி.எம் தேர்வில் மாணவர்கள் 10 பாடங்கள் மட்டுமே இனி எடுக்க முடியும் என்கிற சட்டத்தை அமலுக்குக் கொண்டு வரப்போவதாக அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு நாடளவில் மலேசியத் தமிழர்களிடமிருந்து பெரும் எதிர்வினையையும் திருப்தியின்மையையும் எழுப்பியுள்ளது. கட்டம் கட்டமாக எதிர்ப்பு அலைகள் பரவியபடியே இருப்பதால், இந்தச் சட்ட அமலாக்கம் குறித்துத் தீவிரமாகச் சிந்திக்கவும் கலந்துரையாடவும் வேண்டியிருக்கிறது. மேலும் வாசிக்க:

1. சிறுபான்மை இனத்தின் தாய்மொழிக்கு – மொழி பேரழிவு
http://bala-balamurugan.blogspot.com/2009/12/blog-post_03.html

2.எஸ்.பி.எம் தேர்வு குறித்த அமைச்சரவை தீர்மானமும் மீண்டும் அதிருப்தியும்
http://bala-balamurugan.blogspot.com/2009/12/blog-post_05.html

3. தமிழ் மொழி (நீக்குதல் – நீங்காமை) பின்விளைவுகள்
http://bala-balamurugan.blogspot.com/2009/12/blog- post_07.html

4. தேர்வு பாடங்களா கட்டாய பாடங்களா? எதை எடுப்பது? எதை விடுவது?
http://bala-balamurugan.blogspot.com/2009/12/blog-post_10.html

5.தமிழ் மொழி & தமிழ் இலக்கியம் மீட்புக் குழு நடத்திய கவன ஈர்ப்புக் கூட்டம் – 1 (தாய்மொழியைத் தற்காப்போம் என்கிற எழுச்சிக் குரல்)
http://bala-balamurugan.blogspot.com/2009/12/1.html

அன்புடன்
கே.பாலமுருகன்
மலேசியா
http://bala-balamurugan.blogspot.com/

 

அன்புள்ள பாலமுருகன்,

 

சுட்டிகளை வாசித்தேன். விரிவாக மேற்கொண்டு வாசித்தபின்னரே பேச முடியும்.

 

ஆனால் ஒன்று சொல்ல விரும்புகிறேன். இது நான் அங்கே மலேசியாவுக்கு வந்தபோதும் உணர்ந்த விஷயம்… அங்கே உள்ளவர்களில் கணிசமானவர்கள் ஐம்பதுகளில் தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்கள் உருவாக்கிய மொழிவெறி, இனவெறி மனநிலையில் இருக்கிறார்கள். உலகிலேயே தமிழ்தான் பழைய மொழி, ஒருலட்சம் ஆ ண்டுகள் பழையது என்றெல்லாம் பேராசிரியர்கள் மேடையில் பேசக்கேட்டேன்.

 

ஐம்பதுகளின் திராவிட இயக்க மேடை போல, எண்பதுகலின் ஈழவிடுதலை இயக்க மேடைகள் போல மித மிஞ்சி உணர்ச்சிகளை தூண்டிவிடுவது வசபாடுவது என்ற அளவில் பேசினார்கள். நிதானமான குரல்களை கேட்க முடியாதவர்களாக, கசப்பை உமிழ்பவர்களாக, பலர் இருந்தார்கள். அப்படி வெறுப்பின் வெறியின் குரலில் பேசுபவர்கள் ‘உணர்ச்சிகொன்ட தமிழர்களாகவும்’ அப்படி அன்றி யதார்த்தத்தை கருத்தில் கொன்டு பேசுபவர்கள் மொழி- இன உணர்வு இல்லாதவர்களாகவும் கருதப்படுவதை கண்டேன்.

 

இந்த போக்குதான் இன்னமும் ஆபத்தானது. கிருமி ஆபத்தானதல்ல, அதற்கு உங்கள் உடல் அளிக்கும் எதிர்வினை பெரிய நோயாக ஆகக்கூடிய்து. உங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ இதுதான் என் உறுதியான கருத்து. இதற்காக பத்துபேர் என்னை தமிழ்த்துரோகி என்றாலும் பிரச்சினை இல்லை.

 

மேலும் மலேசிய தமிழர்கள் விரும்பி கூப்பிட்டு உபசரித்து கேட்கும் தமிழ்நாட்டு மேடைப்பேச்சாளர்கள் எந்தவிதமான பொறுப்பும் இல்லாதவர்கள். ஒருமேடையில் அங்கே கூடியிருப்பவர்களின் கைதட்டலுக்காக எதையும் பேசுபவர்கள். வெறுப்பு, கசப்பு, அபத்தமான சுயபெருமிதம், வகைகெட்ட வரலாற்றுபோதம், ஆபாசமான எளிமைப்படுத்தல்கள் — இவைதான் அதற்கான வழிகள். ஈழத்தமிழர்களைப்போலவே இங்குள்ள போலி அரசியல்வாதிகளின் மேடை முழக்கங்களை அப்படியே நம்புகிறவர்களாக இருக்கிறார்கள் மலேசியத்தமிழர்களும்.

 

இந்த ஆசாமிகளின் உணர்ச்சிக்கொந்தளிப்புக ளை நம்பி ஈழத்தில் தமிழினம் அழிந்து வேலிக்குள் முடங்கி கிடக்கிறது. இந்த ஆசாமிகள் அதற்கும் மேடைநாடகமாடி காசு பார்க்கிறார்கள். இவர்கள் இறகிலிருந்து ஒரு தூவல்கூட உதிர்வதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

 

எந்த ஒரு உரிமைப்போராட்டமும் எவருக்கு எதிராக அது நடத்தப்படுகிறதோ அவர்களில் சிறந்தவர்களின் மனசாட்சியுடன் பேசுவதாக இருகக்வேண்டும். அவர்களில் உள்ள நீதிமான்கள் ஆதரிப்பதாக இருகக்வேண்டும். மலேசிய மக்களுக்கு எதிரான வெறுப்பைக் கக்குவதாக  தமிழர் போராட்டம் அமைந்தது என்றால் அதன் மூலம் இழப்பவர்கள் தமிழர்களாகவே இருப்பார்கள். மலேசிய அரசு ஓர் ஒற்றைபப்டையான அமைப்பை உருவாக்க எண்ணலாம்.  தமிழர்கள்அதனுடன் போராடி தனித்தன்மைகளுக்கு குரல்கொடுக்கலாம். ஆனால் அது மலேசியாவுக்கு எதிரானதாக ஆகுமென்றால் அதன் விளைவுகள் கசப்பானவையாகவே இருக்கும்

 

மலேசிய தமிழர்கள் ஒன்றை உணர்வது நல்லது, அவர்களுக்கு தமிழ்நாட்டில் யாரும் துணையில்லை. இங்கே உள்ளவர்கள் அங்கே வந்து தமிழ்வீரம்பேசி காசு சேர்த்து திரும்பும் போலிகள் மட்டுமே. ஆபத்தில் எவருமே கூட இருக்க மாட்டார்கள். இங்கே உள்ள தமிழர்களுக்கே அவர்களால் லாபமில்லை. மலேசியத்தமிழர்கள் தங்கள் வாழ்க்கையை தங்கள் வலிமையால் அமைத்துக்கொள்ள வேண்டும்.

 

இது ஒரு சிவில் பிரச்சினை. சிவில் பிரச்சினைகள் சிவில் மட்டத்தில் நிதானமான நீன்டகால நடவடிக்கைகள் வழியாகவே முன்னகர முடியும். அபத்தமான உணர்ச்சிக்கொந்தளிப்புகளும்  அசட்டுப்பெருமிதங்களும் நம்மை அழிக்கும். சமநிலையும் நிதானமும் கொண்ட தலைவர்கள் மட்டுமே பேசட்டும். பொறுமையும் ஒற்றுமையும் மட்டுமே வலிமையாக அமையட்டும்

 

 

மலேசிய தமிழர்கள் போராடிக்கொன்டிருப்பது ஒற்றைமத அமைப்புள்ள ஒரு நாட்டுடன். அதிலும் இஸ்லாம் மிக எளிதாக ஒற்றைப்படையான இறுக்கமான அரசை அமைக்கக்கூடியது. அத்தகைய அரசுடன் போராடுவதென்பது எளிய விஷயம் அல்ல.  இன்று அங்கே ஒருவகையான ஜனநாயக பாவனை இருக்கலாம், ஆனால் எப்போது வேன்டுமானாலும் அத்தகைய ஒற்றைமத அரசுகள் சர்வாதிகாரம் நோக்கிச் செல்லல்லாம். ஆகவே மிதமிஞ்சிய எச்சரிக்கையுடன் செயல்படவேண்டிய விஷயம் இது.

 

மலேசிய இஸ்லாமியர் அராபியர் போலன்றி இன்னமும் க னிவும் நிதானமும் கொன்ட கீழைநாட்டு மக்கள் என்பதே என் எண்ணம். இஸ்லாமின் சாரத்தில் இரு அம்சங்கள் உண்டு, ஒன்று அதன் அபாரமான சகோதரத்துவம். இன்னொன்று சமூகத்தை ஒற்றை ராணுவமாக ஆக்கும் அதன் இறுக்கமான மையநோக்கு. நாம் அந்த சகோதரத்துவத்தை நோக்கியே பேசவேண்டும்.  நான் மலேசியா வந்து அங்குள்ளவர்களின் அதீத உணர்ச்சி வெறிகளைக் கண்டவன் என்ற முறையில் எனக்கு அப்படி ஒரு கவனம் இருக்கிறதா என்ற பயம் நிறையவே இருக்கிறது.

 

இந்த உரிமைப்போராட்டம் ஒரு பத்து  வருடம் நடக்கிறது என்று கொள்வோம். பல படிகளாக, பற்பல கோரிக்கைகளாக அது நீடிக்கிறது என்று கொள்வோம். அந்த பத்துவருடங்களில் தமிழர் தரப்பு தங்கள் பேதங்களை மறாந்து தங்களைமேலும் மேலும் ஒற்றுமைப்படுத்திக்கொண்டு வலிமைப்படுத்திக்கொன்டு மேலே செல்கிறதென கொள்வோம். அப்போது, முழுமையானவெற்றியை உலகின் எந்த சக்தியாலும் தடுத்துவிட முடியாது

 

அவ்வாறே ஆகுக

மலேசியா, மார்ச் 8, 2001

மலேசியா மறுபக்கம்

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/5741

2 comments

 1. Dondu1946

  பிப்ரவரி 1969-ல் அறிஞர் அண்ணா மறைந்தபோது அவரது மரணச் செய்திகள் மலேசிய தமிழ்ப்பத்திரிகைகளில் வந்த ஜோரில் மலேசிய மாநில கவர்னர் ஒருவரின் மரணச்செய்தி ஏதோ ஒரு பின்பக்கத்தில் ஒரு காலமாக முடங்கியது.

  இது கிறித்து அப்போதைய மலேசிய பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் தன் அதிருப்தியை தெரிவித்திருந்தார்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

 2. ஜெயமோகன்

  அன்பின் ஜெயமோகனுக்கு,

  இது வெறுமனே உணர்ச்சிக் கொந்தளிப்பு என எண்ணிவிட வேண்டாம். மலேசிய பெரும்பான்மை மேலாதிக்க சக்திகளின் அரசியல் சூழ்ச்சியை நோக்கிய எதிர்க்குரலாகத்தான் கருத வேண்டும். மலேசியாவில் பிறந்து வளர்ந்த அதன் அரசியல் குறித்து அருகாமையில் இருந்து பார்த்த ஒரு காரணத்திற்காக மட்டும் இதைச் சொல்லவில்லை.

  பல வருடங்கள் சிறு சிறு அளவில் சொந்த இனத்தைச் சேர்ந்த அமைச்சர்களாளேயே தூரோகம் செய்யப்பட்டு ஏமாற்றப்பட்ட மேலாண்மை அதிகாரத்தின் முன் இப்பொழுது குறிப்பிட்ட சில ஆர்வளர்களினால் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் அது முழுமையானதொரு வெற்றியை நோக்கியும் சென்றதாகச் சொல்லவும் முடியாது. எதிர்க்கட்சிகள் உருவாக்கிய எதிர் அலைகள் (ஹிண்ட்ராப்) இப்பொழுது பல பல சிறு கட்சிகளாக உடைந்து நிற்கிறது. இதையும் அந்த விழிப்புணர்வு குறித்த மதிப்பீடுகளுக்கு உதவும்.

  இத்துணை வருடம் காலம் ஏமாற்றப்பட்டதன் ஒடுக்கப்பட்டதன் விளைவுதான் மலேசிய தமிழர்கள் வீதிக்கு வந்தார்கள் ஒட்டு மொத்த போராட்ட உணர்வை வெளிப்படுத்த. (2007-இல் நடந்த ஹிண்ட்ராப் பேரணி)

  நிச்சயம் உங்களை அப்படியொரு அடையாளத்திற்குள் வைக்கப்போவதில்லை. இது உங்களின் கருத்து. மேலும் தாங்கள் கட்டாயம் மலேசிய அரசியல் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் நான் சொல்லவில்லை. தற்போதையா மலேசிய அரசியல் சூழல் (குறிப்பாக தமிழ் மொழி) குறித்து உலக வாசகர்களுக்குத் தெரிவிக்கும் பொருட்டே தங்களுக்கு தகவல் அனுப்பியிருந்தேன்.

  குறிப்பு: சொந்தக் கோவிலுக்கு 10 பேராகக் கூடி சென்றாலே தமிழர்களைக் கண்டீப்பதும் கைது செய்வதும் என்கிற நெருக்கடிகளை பார்க்கும்போது, இந்த மாதிரியான சிறு சிறு உணர்ச்சி சலசலப்புகள் ஏற்பட்டுவிடுகிறது. மேலும் நீங்கள் கூறியவற்றில் பல விசயங்கள் உண்மையே. தமிழ் நாட்டு தமிழர்களால் மலேசிய தமிழர்களுக்கு எந்த வகையிலும் பாதுகாப்போ ஆதரவோ இல்லைத்தான். முடிந்தால் இங்கு ஒரு மாநாடு நடத்தி எப்படிப் பணம் சம்பாரிப்பது என்றுதான் ஒரு சில வியாபாரிகள்(எழுத்தாளர் /பதிப்பகத்தார் எனும் போர்வையில் இருப்பவர்கள்) சிந்திக்கக்கூடும்.

  தங்களின் உடனடி கருத்திற்கு நன்றி அண்ணா.

  கே.பாலமுருகன்
  மலேசியா
  http://bala-balamurugan.blogspot.com/

Comments have been disabled.