தலைமறைவு

நகைச்சுவை

தமிழ்நாட்டில் அதிகமாகப் புழங்கும் சொல் என்ன என்பதை தெரிந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. செல் பேசியை எடுத்ததுமே ஹலோ என்பதற்குப்பதிலாக அதைச் சொல்லலாம் என்றும். ஆரம்பத்தில் அதிர்ச்சிதான். ”ஹலோ நான் ஜெயமோகன் பேசுறேன்..” என்ற பவ்யமான குரலுக்குப் பதிலாக ”தாயோளி!” என்று தெளிவாக ஒரு குரல் ”சார்?” ”தாயோளி!” ”யாரு வேணும்?” ”நீதாண்டா வேணும் தாயோளி” ”ஸாரி நீங்க வேற யாரையோ கேக்குகிறீங்க…அது நான் இல்ல…” ” டேய் தாயோளி” ”ஸாரி சார்,நீங்க நம்பர் செக் பண்ணுங்க…” ”டேய் நீதாண்டா…அது.. ” ”அப்டீங்களா? ”ஆமாடா தாயோளி, எங்க தெய்வத்தப்பத்தி நீ எழுதிருவியாடா? எழுதிட்டு வாழ்ந்திருவியா? டேய்..”

அனுபவப்புரிதல்களின் நாட்கள். ஒட்டுமொத்தமாக புரிந்துகொண்ட விஷயம் என்பது இலக்கியம் ஒருபோதும் வெகுஜனப் புகழ்பெறக்கூடாது என்பது. பெரும்பாலான செல் அழைப்புகள் ஒரே இடத்திலிருந்து எழுந்தவை. ஒருவர் மூச்சிரைக்க பேசி முடிக்கிறார். ”…தாயளி டேய், தாயளி வெட்டிருவோம்டா… தாயளி துண்டு துண்டா நறுக்கிருவோம்டா…டேய் தாயளி…டேய்.. தாயளி… ” ஒரே சொல்லை மேற்கோள் குறி, ஆச்சரியக்குறி, அரைப்புள்ளி, கால்புள்ளி, முற்றுப்புள்ளி எல்லாவற்றுக்கும் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதில் எனக்கு சற்றே இலக்கணச்சிக்கல். பேசியவர் உடனே ”…மச்சான் நீ பேசுடா…”என்று குடுக்க இன்னொருவர் செல்பேசியை வாங்கி ஆவலுடன் மூக்கருகே கொண்டுசென்று  ”புஸ்ஸ்ஸ்” என்று சீறி மீண்டும் ஆரம்பிக்கிறார். ”தாயோளி…டேய்…”

பதினைந்து நாட்களுக்குள் நானே ஒருமாதிரி ‘கண்டிஷன்’ ஆகி செல்லை எடுத்ததுமே சாந்த கம்பீரத்துடன் ”தாயளி ஜெயமோகன் பேசுறேன் தாயளி” என்று ஆரம்பித்து பேச ஆரம்பித்தேன். வீட்டிலும் அவ்வப்போது சோம்பல் முறிக்கையிலும் ,கனமாக எதையாவது தூக்கும்போதும், எண்பது கிலோ எடையுடன் ஹீரோ என் கால்நடுவே புகுந்து மறுபக்கம் [ஊழையும் உப்பக்கம் காண்டல்] செல்லும்போதும் அச்சொல் கசிய ஆரம்பித்தது. பேப்பர்போடவோ தபால் கொடுக்கவோ யாராவது வந்தால்கூட நான் கெட்டவார்த்தை கேட்கத் தயாராக ஆகி பவ்யமாக நின்றேன். அவர்கள் விசித்திரமாகப் பார்த்து திரும்பிச் செல்லும் போது சமயங்களில் கொஞ்சம் ஏமாற்றமும் வர ஆரம்பித்தது.

”அப்பா, நீ கொஞ்சம் கொஞ்சமா ஸ்க்ரூ லூஸாகிட்டு வாரே”என்றான் அஜிதன். ”அப்பவெ இப்டித்தானே இருக்காரு?”என்றாள் மனைவி. ” ஜெயன்,நீ இங்க இருந்தாத்தானே பிரச்சினை? பேசாம எங்கியாம் வெளியூரு போயிட்டுவா…” என்றாள். ”அப்பா யூ ஆர் எ சைக்காலஜிகல் புல் ஷிட்” என்றாள் சைதன்யா. ரஸ்ஸல் க்ரோ மரைகழன்றவராக நடிக்கும் ‘ஏ ப்யூடி ·புல் மைண்ட்’ல் இருந்து பொறுக்கிய வசனம். ”மை மதர் இஸ் அ ப்யூடி·புல் வுமன்  ஆன்ட் மை ·பாதர் இஸ் அ ப்யூடி·புல் மைண்ட்” என்று சைதன்யா கண்டுகொண்ட நாட்கள்.

வெளியூருக்கு எப்படிப்போவது? யாராவது கண்டு கொண்டால்? ”ஆமா நீ பெரிய உலகப்புகழ்…யாரு கண்டுக்குவா? பேசாம போ…”என்றாள் அருண்மொழி. ”தமிழ்நாட்டிலே பத்திரிகையிலே பேரு வரக்கூடிய யாருமே பஸ்ஸிலே போக மாட்டாங்க அப்பா…”.  எங்கே செல்வது? பாலா ஷ¥ட்டிங்குக்கு கூப்பிட்டுக் கொண்டே இருந்தார். போய் பத்து நாள் நிற்கலாம். சிங்கம்புலியிடம் பேசினால் சிரிப்பு. ஆர்தர் வில்சனை கண்டாலே மனம் மலரும். மேலும் சினிமா ஷ¥ட்டிங்கில்தான் நாம் ஒரு முக்கியமான மனிதர் என்ற தகவலை நாம் அறிகிறோம். சும்மா இருந்து களைத்துப்போகும்போது ஆப்பிள் ஜூஸ் தருவார்கள்.

சரி என்று துணிந்து கிளம்பினேன், நள்ளிரவில். கரெண்ட் கட்டாகியிருந்த நேரம். முழுக்கை சட்டை பாண்ட் ஷ¥ போட்டு, தலையில் ஒரு மங்கி கேப் போட்டு கண்ணாடியும் வைத்துக் கொண்டபோது என் உடலில் மூக்கும் உதடும் மட்டுமே வெளியே தெரிந்தது. மூக்கையும் வாயையும் மறைப்பது காஷ்மீர் வழக்கம் . நம் ஊரில்செய்தால் தீவிரவாதி என்பார்கள். ஏர் பேகுடன் வெளியே வந்தபோது ஹீரோ பயந்து பின்வாங்கி ஒருகணம் ஸ்தம்பித்து ஸ்டீரியோபோனிக் ஒலியில் பவ் பவ் என்றது. ‘டேய்’ என்றேன். மூக்கை தூக்கி முகர்ந்து வாலை ஆட்டியது.ஆனாலும் ஜாக்ரதையாக பக்கத்தில் வராமல் நின்றுகொண்டிருந்தது.

இரவின் வழியாகச் சென்றேன். எதிரே வந்த ஒருவர் திடுக்கிட்டு என்னைப்பார்த்தபின் சாலையோரம் ஒதுங்கி அதிகபட்ச இடைவெளி விட்டார். நான் பேருந்துக்கு நின்ற இடத்தில் இருவர் நின்றிருந்தார்கள். என்னைப்பார்த்ததும் வேட்டியை கீழே தழைத்து குரலை குறைத்து நழுவினார்கள். உருட்டுவண்டி டீக்கடைக்காரர் விளக்கை ஊதி அணைத்துவிட்டு ‘வணக்கம் சார்’ என்றார். மங்கி கேப்பை ரோந்துபோலீஸ்தான் போடுமோ? மாமூல் ஏதாவது கொடுப்பாரோ என்ற நப்பாசை. ஆனால் வேறு யாராவது கிரிமினல்கள் அடித்துவிட்டால்?

பஸ் வந்தது. ஏறி அமர்ந்து விட்டேன். செல்போன் அடித்தது.எடுத்து ”தாயளி?” என்றேன். ”ஜெயன், இது நாந்தான். பஸ் ஏறிட்டியா?” ”ம்” என்று சொல்லி அணைத்துவிட்டு டிக்கெட் எடுத்தேன். ஓரமாக அமர்ந்து கண்களை மூடினேன். ஆனால் மனம் விழித்திருந்தது. யாரும் எக்கணமும் தோளில் தட்டி ”சார் நீங்க?” என்று கேட்கக் கூடும். கற்பனைக்கைகள் தோளுக்கு அரை அங்குலம் அப்பால் நின்றிருந்தன. அசைந்தால் அவை என் மீது பட்டுவிடும். மீண்டும் செல். எடுத்தேன். ”தாயேளி…டேய்..” இது எந்த ஊர் என்று தெரியவில்லை. உச்சரிப்பில் ஊருக்கு ஊர் வேறுபாடு உண்டு. ‘தாளி’ என்றால் அது நெல்லை. ‘தயளி’ என்றால் சேலம். இப்படியே போனால் பத்துநாளில் நெல்லைக்கும் கோயில்பட்டிக்கும் கூட வித்தியாசம் தெரிய ஆரம்பித்துவிடும்போல.

மதுரை வரை ஒவ்வொருகணமும் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை. மதுரை பேருந்து நிலையத்தில் குனிந்து நடந்தேன். மார்ச் மாத வெப்பத்தில் உள்ளே தலை புழுங்கி மூக்கு அடைத்தது. மாட்டுத்தாவணி மத்தியப் பேருந்து நிலையத்திலேயே ஒரே ஒரு மண்டையில்தான் மங்கிகேப் இருந்தது. சிறுநீர் கழிக்கப்போனேன். யாருமில்லை. சூட்கேசை கீழே வைக்கமுடியாமல் இரவெல்லாம் பெய்த சிறுநீர் பெருநீராக ஓடிக் கொண்டிருந்தது. ஒருகையால் காரியம் முடித்து விட்டு மங்கிகேப்பை எடுத்து மூளைக்கு சற்று ஆசுவாசமளிக்க விரும்பினேன். காலிடுக்கில் சூட்கேஸை இடுக்கிக் கொண்டு கேப்பை எடுக்க சூட்கேஸ் நழுவியது அதைப்பிடிக்கும் பதற்றத்தில் மங்கிகேப் கீழே விழுந்தது.

தலைகுனிந்து நான் வெளிவந்ததைப் பார்த்தால் யாரோ என்னை கழிப்பறைக்குள் வைத்து கற்பழித்துவிட்டதாகவே தோன்றும்.  எதிரே ஒரு முரட்டு ஆள் வந்தவன் என்னைக் கூர்ந்து பார்த்தபின் கடந்துசென்றான். கையில் ஆயுதமேதும் இல்லையோ? ஆட்களை கூட்டிக்கொண்டு வரச்சென்றிருக்கிறானோ? கடைக்குப்போய் ”ஒரு மங்கி கேப் குடுங்க” என்றேன். ‘மங்கியா சார்?” ”ஆமா” ”கைப்பிள்ளைக்கா?” ”இல்ல எனக்குத்தான்”  கடைக்கார பாய் என்னை கூர்ந்து நோக்கியபின் பிரமை பிடித்தது போல மங்கி கேப் எடுத்து தந்தார். போட்டுக் கொண்டேன். ” ஆஸ்த்மாவா சார்?” ”ஆமா…” ‘வெறும் வயத்துல நல்லா வெந்நீ குடி சார்.ஆஸ்துமா பறந்துரும்..” ”டிரை பண்ரேன் பாய்…” ஏறிக் கொண்டென். பஸ்ஸின் இரு வாசல்கள் வழியாகவும் பல ஏறினார்கள். சன்னல் வழியாக குதிக்க முடியுமா என்று பார்த்தேன். முயற்சி செய்யலாம்தான்.

தேனியில் பப்பீஸ் ஓட்டலில் இருந்த வாட்ச்மேன் பொருட்படுத்தவில்லை. அப்போது விடிய ஆரம்பித்திருந்தது,சாரல் மழைவேறு. காலையில் ஆர்தர் வில்சன் வந்தார். அதன் பின் சிங்கம்புலி. அதன் பின் ரவி. யாருக்கும் என்ன பிரச்சினை என்றே தெரிந்திருக்கவில்லை. ”ஆமா யாரோ என்னமோ சொன்னாங்க…என்ன பிரச்சினை?”என்ற அளவில் உரையாடல்கள் தொடங்கின.” இதெல்லாம் சினிமாவுக்குள்ள பத்துமடங்கு பேசுற விசயம்சார்…இதுக்குப்போயா கலாட்டா?” ”சார் எளுதிட்டாரே. பேசுறது வேற எளுதறது வேற…” ”நம்மாளுக புத்தி எப்டீன்னா சினிமால கவற்சி காட்டலாம் நேரில செய்யப்பிடாது.நேரில புகை பிடிக்கலாம் சினிமால புகை பிடிக்கப்பிடாது…”

ஏழெட்டு தேனிக்காரர்கள் வந்திருந்தார்கள். பாலா எல்லாருக்கும் அறிமுகம் செய்து வைத்தார் ”சார் பெரிய எழுத்தாளர். தலைமறைவா இருக்காரு…” அவர் திகைத்து வாய்திறந்து மூளைத்திகிரி கிரீச்சிடத் தவித்து ”தாய்லாந்திலயா சார்?”. ”இல்ல இங்கதான்…” என்றேன் பலவீனமாக.பாலா சொன்னார் ”சாருக்கு நெல்லிக்கா ஜூஸ் குடுரா…தலைமறைவா இருக்காருல்ல?” சிங்கம்புலி சொன்னார் ”சார் அந்த எடம் ·பீல்டு….. அந்தப்பக்கமா போயி தலைமறைவா நின்னுக்குங்க…” ‘பீயாரோ’வை கூப்பிட்டு நான் தலைமறைவாக இருப்பதைப் பற்றி செய்திகள் போடலாம் என்று விவாதம் நிகழ்ந்தது. புகைப்படங்கள் பின்னாலிருந்து எடுக்கப்படும், மங்கி கேப்புடன்தான்.

கொஞ்சநாளில் தலைமறைவாகவே அலைவது நன்றாக பழகிவிட்டது. சென்னைப் பல்கலைக்கு ஒரு கருத்தரங்குக்காகப் போனேன். எழுத்தாளர்கள் தலைமறைவாக அலைய பல்கலைகழகத்தைவிடச் சிறந்த இடம் வேறு ஏது? மலையாளக்கவிதை பற்றி அரங்கிலிருந்து கேள்வி.  ”கேள்வி புரியலீங்க, இன்னும்கொஞ்சம் சத்தமா கேட்டா தாயளி .. இல்ல தெளிவா கேட்டா தேவலை..” சிதம்பரம் நாட்டியாஞ்சலிக்குப்போனேன். கடலூர் சீனு வந்து பக்கத்தில் அமர்ந்து ”சார், நம்மாளுக எல்லாரும் உங்களைத்தான் பாக்குறாங்க… ” ”அய்யோ எல்லாருக்கும் தெரியுமா? ”பின்ன தெரியாம? உங்களை தெரியாதா? ஆனா பக்கத்துல வரமாட்டாங்க…நீங்க தலைமறைவால்ல இருக்கீங்க?” ”அவங்களுக்கு எப்டி தெரிஞ்சுது? ”நான் சொல்லிட்டேன்ல?”

திரும்பி வரும்வழியில் ஆசுவாசம். அப்பாடா பத்துநாட்கள் தாண்டிவிட்டன. பத்துநாட்களுக்குமேல் ஒரு விஷயத்தை நினைவில் நிறுத்திக்கொள்ள தமிழ்மக்கள் என்ன முட்டாள்களா? செல்பேசி அழைப்புகளும் ஒருநாளுக்கு இருபது முப்பதாக குறைந்துவிட்டன. ஆனால், அதோ கும்பகோணத்தில் போஸ்டர்கள். வண்ணபுகைப்படங்கள். நானேதான். கல்கி வார இதழின் அட்டைக்கட்டுரை. ‘பெரியார் மேல் பாய்கிறார் ஜெயமோகன்!!!!!!’ என்ன உரையாடல் நடந்திருக்கும்? ”மாப்ள தப்பிச்சிட்டானேடா…என்ன பண்ரே உங்க பத்திரிகையில நீ ஒரு கவர் ஸ்டோரி போடறே…தாயளி ஓடட்டும்.  என்ன சொல்றே?”

மீண்டும் மங்கி கேப். அதை கண்டுபிடித்தவன் அவன் தலைமறைவாக அலையும்போது கண்டுபிடித்திருப்பானோ? அண்னாச்சி ராஜகோபால், டாக்டர் பிரகாஷ் அளவுக்கு நானும் புகழ்பெற்று விட்டேன். ஆனால் ஜனங்களின் நினைவு கொஞ்சம் குழப்பமானது. ஜீவஜோதியைப் பற்றி என்னிடம் நலம் விசாரித்தாலும் விசாரிப்பார்கள். 

தஞ்சையில் ஒரு குண்டான கருப்பான ஆசாமி என்னை உற்று பார்த்தார். சற்றே திடுக்கிட்டார். மீண்டும் பார்த்தார். சிந்தனைசெய்தார் மீண்டும் பார்த்தார். குழம்பினார். சட்டைக்குப் பின் இருந்து – அரிவாள் அல்ல- கர்சீபை எடுத்து முகம்துடைத்தபின் என்னை மீண்டும் பார்த்தார். சரிதான். மங்கிகேப் அத்தனை பிரயோசனமானது அல்ல போலும். என்ன செய்வது ? எழுந்து போனால் அவரைத்தாண்டித்தான் போகவேண்டும். மேலும் இன்னும் சிலர் பார்க்கவும் இடமாகும். அய்யா என்று காலில் விழுந்தால்? அடித்தால் ஏர் பேகை வைத்து தடுக்க முடியுமா? வாய்ப்பில்லை. ஊமை மாதிரி கதறினால் என்ன? அனுதாபம் கிடைக்கும்தான். ஆனால் நடந்ததைச் சொல்லி உதவியே கேட்க முடியாமலும் போகுமே.

அவர் என் எதிரே வந்து அமர்ந்து ஓரக்கண்ணால் பார்த்தார். இதயம் வேகமாக அடித்தால் ஹார்ட் அட்டாக் வருமா? இதயம் பற்றிய எந்த சந்தேகத்தையும் நாஞ்சில்நாடனிடம்தான் கேட்க வேண்டும். தன் இதயத்தை ஒரு செல்லப்பிராணி போல பேணி வளர்த்து வருகிறார். சட்டென்று யாரையெல்லாம் செல் பேசியில் கூப்பிடலாமென்று சிந்தனை செய்தேன். சுகாவை கூப்பிடலாம். என்ன ராகத்தில் அழுவதென்றாவது சொல்லுவார். ஈரோடு கிருஷ்ணன்? ”முதல்ல நீங்க அடிய பட்டிருங்க சார், அதுக்கு ஐபிஸியிலே என்ன கிளாஸ்னு பாப்போம்” ஆசாமி மீண்டும் பார்த்தார். மீண்டும் பார்த்தபின் எழுந்து அருகே வந்தார். ”அது நான் இல்லை”என்று சொல்லப்போனேன். வாய் அசையவில்லை.

”சார் நீங்க?” என்றார். நான் பலவீனமாக புன்னகை புரிந்து இல்லாத எச்சிலை விழுங்க முயன்றேன் ”நீங்க?” என்று மேலும் தயங்கியபின் ”நீங்க கோபாலகிருஷ்ணன்தானே? சோளிங்கர்ல ரைஸ்மில் வச்சிருக்கீங்கள்ல? ”. என்ன ஏது என்று புரியவில்லை. ”ஏது இந்தப்பக்கம்? என்னதெரியல்ல? ” ”நான் வேற சார்…ஆளு மாறிட்டுது உங்களுக்கு… ”  ”அப்டியா?” . ” ஆமா சார், நமக்கு திருவனந்தபுரம் .. ” என்றேன்.”அப்டியா?” என்று மீண்டும் பார்த்தபின் ”சாரி சார் மங்கிகேப் இருக்கறதனால ஆள தெரியல்ல…ரொம்ப நாளாச்சு பாத்து” என்ரார் ”பரவால்ல”ரென்று நெடுமூச்சு விட்டேன்.

ஆனால் கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது.

[முதற்பிரசுரம் 2006/ மறுபிரசுரம்]

முந்தைய கட்டுரைஊட்டி நண்பர்கள் வருகை
அடுத்த கட்டுரைமோஹித்தேவும் மருந்தும் மிதவையும்