«

»


Print this Post

இளையராஜா,சாரு:கடிதங்கள்


அன்புள்ள ஜெ,

 

சாருவின் பல கட்டுரைகளை நானும் படிப்பதுண்டு. குறிப்பாக இசைகுறித்த அவரது பிரதாபங்களையும், அவர் கடவுளைக் கண்ட கட்டுரைகளையும். அவர் கடவுளைக் கண்ட கட்டுரைகள் குறித்து எனக்கு பெரிதும் கருத்து ஏற்படவில்லை. காரணம் இது போன்ற பற்பல கட்டுரைகளை பல்லாயிரம் முறை படித்தாகி விட்டது. இதை விட அற்புதமான கட்டுரைகளையும் பேச்சுக்களையும் ஆந்திரத்தில் கிறுத்துவ மிஷனரிகளும், காஞ்சி, திருவண்ணாமலை  மக்களும் அளித்து படித்திருக்கிறேன். ஒரு சமூகத்தை ஒட்டுமொத்தமாக இல்லாவிட்டாலும் ஒரு குழுவின் கருத்தையேனும் மாற்றியமைக்கும் வலிமை எழுத்தாளனுக்கு உள்ளது. எப்போதுமே வலிமையுடன்-அதிகாரத்துடன் பொறுப்பும் சேர்ந்தே வருகிறது என்று நினைப்பவன் நான். ஆனால் ஒரு எழுத்தாளனுக்குரிய ஆளுமையோ பொறுப்புணர்வோ தென்படுவதாகத் தெரியவில்லை.

 

அவரது புத்தகமாக நான் முதலில் படித்தது ஸீரோ டிகிரி. ஸீரோ டிகிரி எனக்குப் புரியாதபோதும் (கலகக்காரர்களுக்கு மட்டுமே புரியும் போல), மற்றவர்கள் அதற்களிக்கும் முக்கியத்துவம் பார்க்கையில் ஒருவேளை அது நன்றாகவே இருந்திருந்தாலும், அவரது மற்ற படைப்புகளைப்பார்க்கையில், ஸீரோ டிகிரி ஒரு விபத்தோ என்று தோன்றுகிறது. வடிவத்தைத் தவிர இதில் என்ன புதிய விஷயம் இருக்கிறது (அதுகூட பழையது என்று சொல்கிறார்கள்) என்று எனக்குப் புரியவில்லை. ஒருவேளை எனக்கு அது ஒருநாளும் புரியாது போலும். திலகாஷ்டமஹிஷபந்தனம் போல ஒரு சிறப்பான நூல் இது என்று நினைக்கிறேன்.

 

இசைகுறித்து சாருவுக்கு இவ்வளவு திட்டமான கருத்துக்களை எடுத்துவைக்கும் அளவுக்கு பயிற்சியோ, அனுபவமோ இல்லை என்று அவரது பல இசைகட்டுரைகளை படித்தபோது தெளிவாகவே புரிகிறது. இதுகுறித்து ஏதாவது கூறப்போய் “விளித்தல் விகாரத்தில்” முடிவதில் இஷ்டமில்லாததால், வேண்டாம்.

 

ஏன் இவருக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்து எழுதுகிறீர்கள் என்று எனக்குப் புரிவதே இல்லை. ஒருவேளை உங்களுக்கு நேர் எதிரான ஒரு பிம்பம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அதனால் ஏற்படும் விளைவா? நா.காமராஜன் என்ற கவிஞர் ஒருமுறை சொன்னார், “போய்வா நதியலையே” என்ற பாடல் நான் எழுதியது, அதுதான் உலகிலேயே சிறந்த தமிழ்ப்பாடல் என்று. டி.ராஜேந்தரும், சிம்புவிடமும் தென்படுவது “மிகவும் மேலதிகமான தன்னம்பிக்கை”. இவர்களின் வரிசையில் சாருவை விரைவில் சேர்த்துவிடலாம் போல இருக்கிறது.

 

நித்யானந்தர் குறித்து எனக்கு எந்த கருத்தும் இல்லையென்றாலும், வியாபாரம் நல்லமுறையில் நடக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன். இன்னும் இன்னும் உலகுக்கு கொடுப்பதற்கு ஏதேனும் புதிய செய்தி இருக்கிறதா? அதற்கான அவசியம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா? நான் நினைக்கவில்லை. ஏனெனில் ஒவ்வொரு மனிதனின் வாழ்கையுமே ஒரு மகத்தான செய்திதான் என்று நினைக்கிறேன்.

 

-ராம்

 

அன்புள்ள ராம்

ஓர் எழுத்தாளராக சாருவை நான் எப்படிப்பார்க்கிறேன் என்பதை தமிழிலக்கியம்
குறித்து எழுதும் விமரிசகன் என்ற முறையில் பதிவுசெய்யவேண்டிஅய்து என்
கடமை. அதைச் செய்திருக்கிறேன்

வாசகர்கள் அந்தக்கருத்துக்களுடன் விவாதிக்கலாம், ஏற்கலாம், மறுக்கலாம்

ஜெ

அன்புள்ள ஜெ,

சாரு இளையராஜாவை பற்றி எழுதுவதை நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். எனக்கு இசை ஞானம் தங்களை விடவும் மிக மிக குறைவு:) ஆனால் சாரு இளையராஜா குறித்து சொல்வதில் எனக்கு உடன்பாடு உண்டு. 1984’ல் த்ரில்லர் இசைதட்டு வெளி வந்த சமயம் – பாப் என்றால் ஒன்றுமே தெரியாது, ஜாக்ஸன் பாடிய வரிகள் ஒன்றும் விளங்கவில்லை(இப்போதும் தான் :), டிவி பார்த்தது கிடையாது – பில்லி ஜீனையும், த்ரில்லரையும் கேட்ட போது உணர்ந்த பரவசம் இன்றும் நினைவிருக்கிறது. கண்டங்கள், கலாச்சாரங்கள் தாண்டி என்னுள் எதிரொலித்தது அந்த இசை. இன்று ரஹ்மானால் அதை செய்ய முடிகிறது. ஸ்லம் டாக்கின் ஜெய் ஹோ பாட்டை பல தடவை கேட்டு விட்டு அது காதுகளில் இடை விடாமல் ரீங்காரமிடுகிறது என்றார் அமெரிக்க நண்பர். அவருக்கு ஜோதா அக்பரில் வரும் “ஹ்வாஜா மேரி ஹ்வாஜா”வை அனுப்பி வைத்தேன். கேட்டு விட்டு அசந்து விட்டார். உள்ளத்தை நிரப்புகிறது என்றார் இந்திய இசைக்கும் இஸ்லாமிய கலாச்சாரத்துக்கும் அறிமுகமில்லாத நண்பர். இந்த கண்டம், கலாச்சாரம் தாண்டி இசையால் ஒரு உள்ளத்தை தொடுவது ஜாக்ஸன், ரஹ்மான் போன்றோரால் தான் முடியும்.

ராஜாவின் பல ஆரம்ப கால பாடல்கள் எனக்கு மிக விருப்பமானது. இப்போதும் விடாமல் கேட்கிறேன். ஆனால் அவர் ஒரு தமிழ் இசையமைப்பளார் மட்டுமே. என்ன தான் இசை ஞானி என்றும் மயிஸ்த்ரோ என்றும் அழைக்கப்பட்டு தூக்கிவிடப்பட்டாலும் அவரால் மற்ற மொழிகளில் நிலைக்க முடியவில்லை. அவரின் இசை எந்த ஒரு தாக்கத்தையும் வடக்கில் ஏற்படுத்தவில்லை.

தூர்தர்ஷனில் 90களில் சூப்பர் ஹிட் முக்காப்லா என்று டாப் டென் இந்தி பாடல் நிகழ்ச்சி அனைவரும் அறிந்தது. ரோஜா படம் வெளியிடப்பட்ட போது மஹாராஷ்டிராவில் படித்த நண்பன் சக வட நாட்டு நண்பர்கள் ரோஜாவின் தமிழ் பாடல்களுக்கு அடிமையாயிருந்ததை குறிப்பிட்டான். சில மாதங்களிலேயே அந்த மொழியாக்கம் செய்யாத தமிழ் பாடல்கள் முதன் முறையாக சூப்பர் ஹிட் முக்காப்லாவில் ஒலித்த போது கண்ணீர் நிரம்பியது. இது தான் ராஜாவுக்கும் ரஹ்மானுக்கும் உள்ள வித்தியாசம். என்னைப்பொறுத்தவரை ராஜா 70’ல் 80’ல் இல்லாமல் 90’இன் இண்டெர்நெட் யுகத்தில் படைக்க ஆரம்பத்திருந்தாலும் இதையே தான் செய்திருப்பார். ராஜாவைப் பற்றி சிறு குறை சொன்னாலே அடிக்க வரும் அளவுக்கு அவருக்கு தமிழர்களிடையே எல்லா வித பொருளாதர தளங்களிலும் ரசிகர்கள் உண்டு என்பது உண்மை. ஒரு நண்பன் என்னுடன் பேசுவதையே நிறுத்திவிட்டான். அதனால் இத்தோடு நிறுத்திக்கொள்கிறேன்.

மற்றபடி பட ஒலிப்பதிவு, இந்திய படங்களில் இசையமைப்பாளரின் பணி பற்றி நீங்கள் எழுதியதுக்கு உடன்படுகிறேன்.

அன்புடன் சிவா

 

 

 

அன்புள்ள சிவா,

இந்த விவாதத்தை இசை சார்ந்து நான் மேலே கொண்டுசெல்ல மாட்டேன், எனக்கு அந்த தளம் பரிச்சயமில்லாதது.

 

ஆனால் இலக்கியம் சார்ந்தும் எப்போதும் இந்த வினா உண்டு. ஆர்.கே.நாராயணன் ல.ச.ராமாமிர்தம் யார் மேல்? நாராயணன் உலகமெங்கும் செல்கிறார். ல.ச.ராவை தமிழ்ப்பண்பாட்டுக்குள் வராமல் வாசிக்க முடியாது. அரவிந்த் அடிகாவை யாரும் வாசிக்கலாம். சிவராம காரந்தை கன்னடப்பண்பாட்டுக்கு மனதை கொடுக்காமல் வாசிக்க முடியாது.

 

சினுவா ஆச்சிபி ஆப்ரிக்க நாவலாசிரியர் அல்ல என்றே நான் சொல்வேன், அவர் ஆப்ரிக்கர்களைப் பற்றி பொதுவான உலக வாசகர்களுக்கு எழுதுபவர். அவர் காட்டும் ஆப்ரிக்கா அல்ல ஆப்ரிக்கா. அது நாம் காணவிரும்புவது மட்டுமே. நம் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப எழுதப்பட்டது

 

நான் வோல் சொயிங்கா அல்லது பென் ஒக்ரியையே நாடிச்செல்வேன். எனக்கு தேவையானது அசலான பண்பாட்டு தன்மை கொண்ட எழுத்தே.

 

நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம். எதிர்காலத்தில் புதுமைப்பித்தன் முதல் ஜெயமோகன் வரை உள்ள தமிழ் எழுத்தாளர்கள் பழசாகி தேவையில்லாமல் ஆகிப்போகலாம். சென்னை மாமிகள் ஆங்கிலத்தில் எழுதும் நாவல்கள் வழியாக தமிழ் இலக்கியம் வாழலாம். உலகளாவ தமிழிலக்கியமே அதுவென பேசப்படலாம். உலகில் எல்லாருக்கும் எந்த சிரமமும் இல்லாமல் அது புரியலாம்.

 

இருந்தாலும் நான் இங்கேயே நிற்பேன்

 

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/5738/

6 comments

Skip to comment form

 1. ஜெயமோகன்

  அன்புள்ள ஜெ,

  எனக்கு ஒரே நேரத்தில் ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. தமிழின் முக்கிய எழுத்தாளரான உங்களுக்கு முதன்முதலாக எழுதிய
  கடிதத்துக்கு நீங்கள் உங்கள் தளத்திலேயே பிரசுரித்து பதிலும் கொடுத்திருந்தீர்கள் – அதற்கு நன்றி.

  நான் எனது முந்தைய மடலில் குறிப்பிடாமல் விட்டதை நீங்கள் மிகச்சரியாக கண்டுகொண்டுள்ளீர்கள். நான் சாரு இளையராஜாவை விமர்சிக்கவே
  கூடாது என்று நினைக்கவில்லை. இளையராஜா ஒன்றும் கடவுள் இல்லையே – மேலும் நம் மாநிலத்தில் கடவுள் கூட கேள்விக்கு அப்பாற்பட்டவர் இல்லையே :-)

  எனது ஆதங்கமெல்லாம், எந்தவித லாஜிக்கான காரணங்களும் இல்லாமல் போகிற போக்கில் இளையராஜா மேல் சாரு புழுதிவாரித் தூற்றுவதும் –
  ராஜாவின் இசையை ரசிப்பவர்களெல்லாம் ஏதோ மட்டரகமான ரசிப்புத் தன்மை கொண்டவர்கள் என்பது போலவும்.. மேன்மையான இசை
  ரசனை என்பது அரபி இசையும், ரெகெட்டன் இசையும், ஆப்ரிக இசையும் தானென்பது போலவும் எழுதுவது தான்.

  உதாரணமாக நீங்கள் ரோசாவசந்தின் இந்த பதிவை படித்திருப்பீர்கள் – http://rozavasanth.blogspot.com/2009/12/sinuses-3.html

  அதில் கண்டுள்ள விமர்சனங்களை ஒத்தது தான் எனது விமர்சனமும் – இளையராஜா சம்பந்தமாக மட்டும். நான் முந்தைய மடலில் சொன்னது போல இங்கே வடக்கில் ராஜாவின் பா இசையை கொண்டாடுகிறார்கள்.. வெளியாகி இத்தனை நாளுக்குப் பிறகும் எஃப்.எம் ரேடியோக்களில் அந்தப்
  படத்தின் பாடல்கள் தொடர்ந்து வந்துகொண்டு தான் இருக்கிறது. அப்படத்தின் தீம் ம்யூசிக் தான் இங்கே இப்போது பாப்புலரான ரிங் டோ ன்.
  சாருவோ இங்கே வந்து பார்த்தவர்போல வடக்கில் இளையராஜா பா படத்துக்கு அமைத்த இசையைப் பார்த்து வடக்கில் சிரிக்கிறார்கள் என்கிறார்.

  அதே போல் தான் பழசிராஜா இசை குறித்து இவர் பேசியுள்ளதும். எனக்குத் தெரிந்த மலையாள நன்பர்கள் பழசிராஜாவின் இசையைக்
  கொண்டாடுகிறார்கள் – அவர்கள் இளையராஜாவை தம்மவராகவே பார்க்கிறார்கள். மலையாள தொலைக்காட்சிகளில் வரும் இசைப் போட்டி
  நிகழ்ச்சிகளில் ‘இளையராஜா’ சுற்று என்றே ஒன்று வைத்திருக்கிறார்கள். பலர் ‘தும்பி வா’ தமது குடும்பப் பாட்டு என்று சொல்வதைக்
  கேட்டிருக்கிறேன்.. ஆனால் இவரோ அதற்கு நேர் மாறாகச் சொல்கிறார். நான் கேரளம் சென்றதில்லை – ஆனால் நிறைய மலையாள நன்பர்கள்
  உண்டு. அவர்கள் சொல்வதும் இவர் சொல்வதும் நேர்மாறாக இருக்கிறதே?

  நீங்கள் முடிந்தால் எனக்கு ஒரு உண்மையைத் தெளிவுபடுத்துங்கள் – எங்களை விட உங்களுக்கு கேரளம் பற்றி அதிகம் தெரிந்து இருக்கும் தானே?

  இவர் சொல்வது போல மெய்யாகவே அங்கே இவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள் தானா? எனக்கு பழக்கமான
  மலையாள நன்பர்களிடம் கேட்டுவிட்டேன் – அவர்களுக்கு சாரு என்றால் யார் என்றே தெரியவில்லை.. அவர்களும் ஓரளவுக்கு வாசிக்கும் பழக்கம்
  உள்ளவர்கள் தான். இவர் சொல்வதைப் பார்த்தால் ஏதோ இவர் தான் மலையாளிகளுக்கு இப்போதைய சூப்பர் ஸ்டார் என்பது போல்
  இருக்கிறதே?

  அடுத்து, மலையாளிகள் எல்லோரும் ஏதோ சாக்ரட்டீஸ், அரிஸ்டாட்டில் போன்றவர்களின் மறுபிறப்பு போலவும் – தமிழர்கள் மொத்தமாக லும்பன்கள்
  போலவும் சொல்கிறார். ஆனால் எல்லா ஊரிலும் அரசியல்/கலை/இலக்கிய/சமூக உணர்வு மட்டம் உயர்ந்து இருப்பவர்கள் குறைவான சதவீதம் பேர்கள் தான் இருப்பார்களென்பதும் – கேரளமும் தமிழகமும் மேற்கு வங்கமும் இந்தியாவின் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அவ்வகையில்
  கொஞ்சம் மேம்பட்ட நிலையில் இருக்கிறது என்பதும் – குறிப்பாக கேரளமும் மேற்குவங்கமும் தமிழகத்தைவிட அவ்வகையில் கொஞ்சம்
  உயர்வான நிலையில் இருக்கிறது என்பதும் எனது புரிதல். ஆனால் சமூக பொருளாதார மட்டத்தில் தமிழகம் இம்மாநிலங்களைக் காட்டிலும்
  மேம்பட்ட நிலையில் இருக்கிறது என நினைக்கிறேன் – முதலாளித்துவ பொருளுற்பத்தி முறைகளில், நிலச்சீர்தம் செய்தது, அதிக நகரமயமாக்கம்
  (43% – இந்தியாவிலேயே அதிகம்) போன்ற அலகுகளில் தமிழகம் மேம்பட்ட நிலையில் தான் இருக்கிறது என்று நினைக்கிறேன். கலை இலக்கியம்
  போன்ற துறைகளில் கொஞ்சம் பின்தங்கி இருக்கலாம்(இவ்விரு மாநிலங்களோடு ஒப்பிடுகையில்).. ஆனால் வடக்கே உள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மிக மிக மேலாகவே தமிழகம் உள்ளது என்று புரிந்து வைத்திருக்கிறேன்.

  மேலும் இப்படி வேறுபட்ட கலாச்சாரங்கள் கொண்ட மாநிலங்களின் கலை இலக்கிய ரசிப்புத் தன்மையை ஒப்பிட்டு விமர்சிப்பது சரியானது தானா?

  மற்றபடி, ஜெயகாந்தன் குறித்து நீங்கள் எழுதிய பதிவுகள் வாசித்தேன். மிகவும் பிடித்திருந்தது. நான் பத்தாம் வகுப்பு படிக்கும் காலத்தில் என்னை மிகவும் ஆட்கொண்டிருந்த எழுத்தாளர் அவர்.பின்னர் ஓஷோ வந்தார்.. ஜெயகாந்தனை விலகிவிட்டார்… – இப்போது ஓஷோவும் போய்விட்டார் hahaha – ஊரை விட்டு வந்ததில் கொஞ்சம் வாசிப்பு குறைந்து விட்டது. இந்த முறை ஊருக்கு வரும் போது நிறைய புத்தகங்கள் எடுத்து வரவேண்டும் – குறிப்பாக பரணில் உள்ள பழைய ஜெயகாந்தன் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகளை எடுத்து வரவேண்டும்.. பத்து வருடங்கள் கடந்துவிட்ட பின் இப்போது ஜெயகாந்தன் தனது படைப்புகளினூடாக எப்படித் தெரிகிறார் என்று கவனிக்க வேண்டும் என்ற ஆவலை உங்கள் பதிவு ஏற்படுத்தியது.

  With Regards

  Sravana
  [email protected]

 2. pgomat

  எழுத்தில் மொழியை கடப்பது மிக கடினம். நல்ல மொழி பெயர்ப்பாளர் + பரந்த பார்வை தேவை. வைரமுத்துவால் கடக்க முடியாது (அவரது ஊடகம் எழுத்து, பார்வை, நடை தமிழ் மற்றும் தமிழ் சார்ந்த அழகியல்). தமிழில் ஆர்வம் உள்ளர்வர்கள் மட்டுமே படிக்க முடியும். இசை’யின் நோக்கமே மொழியை கடப்பது.

  அதனால் தான் சில எழுத்தளர்களால் மட்டும் தவின்ச்கி சொவின்ச்கி பலவாக படிக்க முடிகிறது (சாமானியனால் அல்ல ). இசை அப்படியல்ல, திடீர்னு அரபிக் இசை தமிழ் கிராமபுரத்தில் கேட்கும், ரசிக்க படும். தமிழ், ஹிந்தி படங்களில் காபி அடிக்க பட்ட பல பாடல்கள் (கொரியா, அரபிக், ஆங்கிலம், தாய்லாந்து, இலங்கை இருந்து) நல்ல வரவேற்பை பெற்றது.

  இளையராஜா தென்மாங்கு, கர்நாடகம் இவை தாண்டி பெரிததாக செல்ல வில்லை என்றே எண்ணுகிறேன். திராவிட கழகம் போன்று ஒரு அடித்தளம் அமைத்து தந்தார் என்பதில் மறுப்பேதும் இல்லை. பா படத்தின் இசை என் வடக்கத்திய நண்பர்கள் யாரும் பெரிதாக கூறவில்லை. ஓகே என்று தான் சொன்னார்கள்.

 3. pgomat

  இன்னொன்று இது சாமானியர்களின் காலம். பியர் அளவுக்கு அளவுக்கு வயன் பிரபல்யம் அல்ல. இசையிலும் நாம் பார்த்தல் அடித்தட்டு மக்களின் உயிர் எழுச்சி இசையே பரவலாக ரசிக்க படுகிறது. மேட்டு தன்மை ஒரு சிலரால் குறுப்பிட்ட எல்லைக்குள் மட்டும் ரசிக்க படுகிறது. ஒரு மேட்டு தன்மை பிடித்தவர்க்கு இன்னொரு மேட்டுதன்மை பிடிக்காது. அடித்தட்டில் இந்த முரண் அதிகம் கிடையாது என எண்ணுகிறேன். அதனால் பலரும் அடையாள படுத்திக்கொள்ள முடியும்.

  இளையராஜா பாடலை கேட்டால் ஆட வேண்டும் என்று எனக்கு தெரிந்து தோன்றாது, ரசித்து லயிக்க மட்டுமே முடியும். எனக்கு பிடித்த வயன் பிற மேட்டு ரசனை உள்ளவர்க்கு பிடிப்பது கடினம். அனால் எனக்கு பிடித்த பியர் நிறைய பேர்க்கு பிடிக்கும். பாங்க்ரா , ஹிப் ஹோப் பரவலாக ரசிக்க படும் அளவுக்கு சிம்போனி முதலியவை இல்லை. இந்த காரணத்தினாலும் இளையராஜா அதிகம் வெளியே ரசிக்க படவில்லை என எண்ணுகிறேன்.

 4. Ramachandra Sarma

  இளையராஜா பாடல்களை லயிக்க மட்டும்தான் முடியுமா? என்ன பேச்சு இது?
  கண்ணாலே காதல் கவிதை, சென்பகமே சென்பகமே, வாவா அன்பே அன்பே என்றால் லயிக்கலாம். அதெப்படி மாங்குயிலே பூங்குயிலே, ராக்கம்மா கையத்தட்டு, ராக்கு முத்து ராக்கு, சந்தைக்கு வந்த கிளி, சின்ன ராசாவே இதெல்லாம் கிட்டா கூட கண்ணு சொக்கி லயிக்கலாமா என்ன? சும்மா வெறுப்பு ஏத்தாதீங்க.

  “இளையராஜா அதிகம் வெளியே ரசிக்க படவில்லை என எண்ணுகிறேன்”. என்ன கொடுமை சார் இது. எந்த வெளியே ? ஒரே பியர் வைன் ஆ இருக்கே போதைல எழுதினிங்களா என்ன?

 5. Ramachandra Sarma

  இளையராஜா தென்மாங்கு, கர்நாடகம் இவை தாண்டி பெரிததாக செல்ல வில்லை – உங்களை எதுவும் சொல்ல முடிவதில்லை. இதுக்கப்புறமும் சொல்ல எதுவும் இல்லை கூட.

 6. Tharamangalam Mani

  நண்பர்களே,
  இவையெல்லாம் படிக்கும்போது ஒரு ஆழ்நிலைக் கேள்வி எழுகிறது. இசையின் இலக்கு என்ன? ஒரு இசை அமைப்பாளனை எங்ஙனம் மதிப்பிடுவது? எல்லாப் பதிவுகளிலும் “இவரின் இசை இப்படிதான், இவருக்கு இவ்வளவு தான் தெரியும்” என்ற தீர்ப்பு மிகவும் சத்தமாக வெளிப்படுவதைப்போன்ற தோற்றம் தெரிகிறது.. நல்ல இசை என்பது கேட்பவனை பரவசப்படுத்துவது என்று நான் நினைதுக்கொண்டிருக்கிறேன். இதையெல்லாம் படிக்கும்போது, நல்ல இசை என்பது, மிகவும் பிரபல்லமாயிருக்கவேண்டும் என்ற கட்டாய தொனி வெகுவாக ஏன் காதில் ஒலிக்கிறது. இதை ஒரு படிக்கல்லாக எடுத்துக்கொண்டால், இளையராஜாஉம சரி, ரஹமானும் சரி உலக சந்தையில் பின் தங்கிதான் இருப்பார்கள். வரிசையில் வேண்டுமானால் வேறுபாடு இருக்கலாம். அப்படி ஒரு முதலிடம் வேண்டுமா என்ன?

Comments have been disabled.