அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
ஞாநியும் ஆம் ஆத்மியும் என்ற கட்டுரை படித்தேன். உங்களது எல்லா ஞாநி பற்றிய குறிப்புகளிலும் “ஞாநி ஒரு நேர்மையாளர்” என்ற பதத்தை தவறாமல் குறிப்பிடுகிறீர்கள், எல்லா கட்டுரைகளிலும் இது தவறாமல் வருகிறது. ஆனால் எனக்கு இது பற்றி ஒரு கேள்வி உண்டு, நேர்மையாளர் என்றால் என்ன? “லஞ்சம்” வாங்காமல் இருத்தலா? உழைப்பின்றி பலன் அடையாமல் இருத்தலா? அது மட்டும்தான் நேர்மைக்கு அடையாளமா?
இதன் அடிப்படையில் ஞாநி நேர்மையாளர்தான், ஆனால் தனது கருத்திற்கு நேர்மையாக இருத்தலும், கொள்கை என ஒன்றை கொண்டால் அதில் வலுவிலக்காமல் இருத்தலும் நேர்மைதானே? முன்பு மனுஷ்யபுத்திரனுக்கும் ஞானிக்கும் ஏற்பட்ட கருத்து மாறுபாட்டு “சண்டையையே” எடுத்துகொள்கிறேன், எல்லாவற்றையும் விமர்சிக்கும் மனுஷ்யபுத்திரன் சுஜாதா தொடர்பான எதையும் விமர்சிக்காமல் கள்ள மவுனம் சாதிக்கிறார் அல்லது பட்டும்படாமல், யாருக்கும் நோகாமல் விமர்சிக்கிறார் அதற்க்கு காரணம் சுஜாதாவின் ராயல்டியால் அவர் பெரும் பயன்தான், அது மிகவும் நேர்மையற்ற செயல்” என்பதுதான் ஞாநியின் குற்றசாட்டாக இருந்தது. “ஒரு எழுத்தாளன் எல்லா விஷயங்களையும் விமர்சித்தே ஆகவேண்டும் என்று யாரும் வற்புறுத்த முடியாது, அதேபோல் உங்களுக்கு தவறு என்று தோன்றுவது எனக்கு தவறு என்று தோன்றாமல் இருக்கலாம் என்று ஒரு சப்பைகட்டு கட்டினார் (அனைத்தும் நினைவில் இருந்து எழுதுகின்றேன், வார்த்தைகள் மாறி இருக்கலாம், ஆனால் சொன்னது இதுதான்).
ஆனால் ஞாநி ஒரு அரசியல் விமர்சகராக முன்தைய ஆட்சியை விமர்சித்த அளவு இந்த ஆட்சியை விமர்சிப்பதில்லை என்ற ஒரு குற்றசாட்டு ஞாநி மேல் அப்படியே உள்ளது. அதை பொய் பிரச்சாரம் என்று சொல்லி சென்று விடுகிறார். ஆனால் அவரது “ஒ பக்கங்கள்” முந்தைய ஆட்சியின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் விமர்சித்து களைகட்டி கொண்டிருந்தது. அதனாலேயே அது அனைவருக்கும் தெரிந்த ஒரு தொடர் கட்டுரையாக இருந்தது.அதனாலேயே குமுதம், விகடன் என்று தொடர்ந்து துரத்தப்பட்டு கல்கியை சரணடைந்தது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஆட்சி மாறியவுடன் அந்த தொடர் நீர்த்துபோய் பொதுவான உலக பிரச்சனைகளை பற்றியே பேசியது, ஒ பக்கங்களுக்காக புத்தகம் வாங்கியது போக இப்போது கொடுக்கும் கட்டுரைகளையே அவர்கள் பிரசுரிக்க ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள். இப்போது வருகிறதா இல்லையா என்பதே தெரியவில்லை, அவரது வலைத்தளத்திலும் அப்படியே உள்ளது. இல்லை, இந்த ஆட்சி ஒரு போற்றத்தக்க ஆட்சி என்றால் ஒரு அரசியல் விமர்சகராக அதுவும் சொல்லப்படவேண்டும் இல்லையா? ஏனெனில் “குட்டுவது” மட்டும் ஞானி தன்மையல்ல, “பூங்கொத்து” கொடுப்பதும்தானே?
மனுஷ்யபுத்திரனை “கள்ள மவுனம் சாதிப்பதாக” சொன்ன ஞாநியின் இந்த செயல்பாடும் நேர்மையின் கீழ்தான் வருமா? அரசாங்க அலுவலகத்தில் சில முக்கிய பதவிகளில் இருப்பவர்கள், நேர்மையானவர்கள் பிரச்சனையான சமயங்களில் “லீவில்” போய்விடுவார்கள். பிரச்சனை எல்லாம் முடிந்தவுடன் பின் ரிஜாய்ன் பண்ணிகொள்வார்கள். அது ஒரு சுமூகமான ஏற்பாடு. ஆனால் அப்போதும் அவர்களை நாம் நேர்மையானவர்கள் என்றுதான் வகைபடுத்த வேண்டுமா?
ஞானி இந்த தேர்தலில் தோற்றது மிகவும் கவலைக்குரிய விஷயம், ஒரு மாற்று சிந்தனை அரசியல் ஆதரிக்கபடவேண்டும் என்ற விருப்பம் நிராசையாக்கப்பட்டது. நீங்கள் கூறியது போல் ஏமாற்றத்திர்க்குரியது, ஆனால் அதற்கும் அவர்தானே காரணம். அவரது தோல்வி ஒரு அரசியல் விமர்சகராக அவரது அறுவடை என்றுதான் சொல்லுவேன். அரசியல் விமர்சகனின் நிரந்தர பதவி எதிர்கட்சி மட்டுமே, எந்த ஆட்சி வந்தாலும். ஒரு அரசை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தாமல், ஒரு அரசியல் விமர்சகராக விமர்சனம் பண்ணாமல், எந்த விமர்சனங்களும் அற்று, தேர்தலில் மட்டும் “அந்த கட்சிக்கு ஒட்டு போடாதீர்கள், எனக்கு போடுங்கள்” என்று சொல்வது எப்படி நியாயம். அரசியல்வாதிகள், தேர்தலுக்கும் மட்டும் தொகுதிபக்கம் தலைகாட்டுவது போல், தேர்தல் பிரச்சாரத்தில் மட்டுமா ஒரு அரசியல் விமர்சகன் அரசை விமர்சனம் பண்ணுவது? நான் இப்படிதான் எடுத்து கொள்கிறேன்,என் பார்வை சரியா அல்லது தவறா என்று தெரியாது.
இதை ஏன் உங்களுக்கு எழுதுகின்றேன் என்றால், எல்லோரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்களே, சமூக வெளியில் செயல்படும் அனைவரும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொள்வதும், சந்தேகங்களை எழுப்பி நிவர்த்தி செய்து கொள்வதும் இன்றியமையாதது. ஞாநியை பற்றிய உங்களது பல கட்டுரைகள் சமநிலையானது, அவர் மேலான உங்களது விமர்சனங்களை / ஆதரவுகளை நீங்கள் தொடர்ந்து வெளிபடுத்திகொண்டே வந்திருக்கிறீர்கள். அதை அவர் மேலான உங்களது நம்பிக்கை என்றே உணர்கிறேன், விமர்சனம் என்பதே ஒருவர் மீதான பெருமதிப்பு என்றே எடுத்து கொள்கிறேன். ஆனால் நான் அறிந்தவரை, ஞாநி மேல் வேறு யாரும் விமர்சனங்களை வைப்பதில்லை, (அவர் மதிப்பறியா பேஸ் புக் விமர்சனங்களை நான் எடுத்து கொள்வதில்லை) ஒருவேளை உங்கள் விமர்சனங்களை அவர் தவறாகவும் எடுத்து கொள்ளலாம், எனக்கு தெரியவில்லை.
இங்கு நான் ஞாநி பற்றி சொன்ன எவையும் மாங்கா புளித்ததோ வாய்புளித்ததோ என்று சொல்லவில்லை, ஒரு நம்பிக்கைக்குரிய, இருக்கும் வெகு சில அரசியல் விமர்சகர்களில் ஞாநியும் ஒருவர் அவர் கள்ள மவுனம் சாதிப்பது அவரது நேர்மையை சந்தேகிக்க வைக்கிறது அல்லது “நேர்மை” என்பதற்கான விளக்கம் என்ன என்று குழப்புகிறது.
முருகதாஸ்
அன்புள்ள முருகதாஸ்,
ஞாநி நேர்மையானவர் என்று நான் சொல்வது ஒரே அர்த்ததில்தான் தன் கருத்துக்களைக்கொண்டு பொருளியல் சார்ந்த சுயலாபம் அடைய அவர் முயல்வதில்லை- நான் அறிந்தவரை. ஆகவே அக்கருத்துக்களை நாம் நம்பலாம்.
அத்தகைய நம்பிக்கையை நாம் அளிக்கக்கூடிய கருத்துக்கள் இன்று மிகமிக அபூர்வம்
ஜெ
ய