‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 39

பகுதி ஏழு : கலிங்கபுரி

[ 3 ]

பயிற்சிக்களம் புகுவதற்கான ஆடையுடன் அர்ஜுனன் கூடத்தில் வந்து காத்து நின்றபோது மாலினி “வில்வித்தையில் இனி தங்களுக்கு யார் பயிற்சியளிக்க முடியும் இளவரசே? பாவம் கிருபர், அவர் தங்களைப்பார்த்து திகைத்துப்போயிருக்கிறார்” என்றாள். அர்ஜுனன் “பயிற்சி என்பது கற்றுக்கொள்வதற்காக அல்ல” என்றான். மாலினி “வேறெதற்கு?” என்றாள். “நான் வேறெதையும் விளையாட விரும்பவில்லை” என்றான் அர்ஜுனன்.

“ஏன்?” என்று அவள் மீண்டும் வியப்புடன் கேட்டாள். “விளையாட்டு இரண்டுவகை. கைகளால் விளையாடுவது ஒன்று. என் தமையன்கள் பீமனும் துரியோதனனும் ஆடுவது அது. இன்னொன்று கண்களால் விளையாடுவது. அதில்தான் என் மனம் ஈடுபடுகிறது.” சற்று தலைசரித்து சிந்தித்துவிட்டு அர்ஜுனன் சொன்னான் “கண்களால் ஆடப்படும் பிற எல்லா விளையாட்டுகளும் வில்விளையாட்டின் சிறியவடிவங்கள்தான்.”

எப்போது அவன் பெரியவர்களைப்போல பேசுவான் என மாலினி அறிந்திருந்தாள், வில்லைப்பற்றிப் பேசும்போது மட்டும். புன்னகையுடன் “இனி நீங்கள் எவரிடம் போரிடமுடியும் இளவரசே?” என்றாள். “பரசுராமர் அழிவில்லாமல் இருக்கிறார். மலையுச்சியில் சரத்வான் இன்னும் இருக்கிறார். அக்னிவேசரும் இருக்கிறார். ஏன் நம் பிதாமகர் பீஷ்மரும் இருக்கிறார்.”

மாலினி நகைத்தபடி “அதாவது நீங்கள் களமாட பிதாமகர்களும் குருநாதர்களும் மட்டுமே உள்ளனர் இல்லையா?” என்றாள். அர்ஜுனன் சிந்தனையால் சரிந்த இமைகளுடன் “அவர்களைப்பற்றி நமக்குத்தெரிகிறது, அவ்வளவுதான். எனக்கு நிகரான வில்வீரர்கள் இப்போது எங்கோ இரவுபகலாக வில்பயின்றுகொண்டிருப்பார்கள். நாணொலிக்க அவர்கள் என் முன் வந்து நிற்கையில்தான் நான் அவர்களை அறியமுடியும். ஒவ்வொரு கணமும் அப்படி ஒருவனை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்.”

“அப்படி ஒருவன் இருக்க முடியாது இளவரசே” என்றாள் மாலினி. “நிச்சயமாக இருப்பான். ஏனென்றால் வில்லை ஏந்தும்போது என்னுள் உருவாகும் ஆற்றல் என்பது என்னுடையது அல்ல. அதே ஆற்றலை காற்றிலும் வெயிலிலும் நெருப்பிலும் நீரிலும் என்னால் பார்க்கமுடிகிறது. அந்த ஆற்றல் இங்கே இயற்கையில் எல்லாம் உள்ளது. அதைத்தான் கிருபரும் சொன்னார். இதை மூலாதாரவிசை என்று சொன்னார். மனிதனின் மூலாதாரத்தில் குண்டலினி வடிவில் உள்ளது இந்த ஆற்றல். இயற்கையிலும் பாதாளத்தில் கருநாகவடிவில் உள்ளது என்று தனுர்வேதம் சொல்வதாகச் சொன்னார். அப்படியென்றால் இந்த ஆற்றல் இங்கெல்லாம் உள்ளது. எனக்குக் கிடைத்ததைப் போலவே பிறருக்கும் கிடைத்திருக்கும்.”

“நீங்கள் இந்திரனின் மைந்தர் அல்லவா?” என்றாள் மாலினி. அவனுடைய முதிர்ந்தபேச்சு அவளை அச்சத்துக்குள்ளாக்கியது. தன் கைகளில் வளர்ந்த சிறுவன் விலகிச்செல்வதாக உணர்ந்து அவள் முலைகள் தவித்தன. “ஆம், நான் இந்திரனின் மைந்தன். இடிமின்னலின் ஆற்றலைக் கொண்டவன். ஆனால் சூரியனும் இந்திரனுக்கு நிகரானவனே. வருணனும் அஸ்வினிதேவர்களும் மாருதியும் எல்லையற்ற ஆற்றல்கொண்டவர்கள்தான். விண்ணில் தேவர்களே இன்னும் வெற்றிதோல்விகளை முடிவுசெய்யவில்லை. மண்ணில் எப்படி முடிவுசொல்லமுடியும்?” என்று அவன் சொன்னான். தலையைச் சரித்து “கிருபர் என்னிடம் அதைத்தான் சொன்னார். நான் வில்விஜயன் என்ற எண்ணத்தைத்தான் நான் வென்றபடியே இருக்கவேண்டும் என்று…”

“அதைத்தான் நானும் நினைத்தேன். என் அம்புகளால் இந்திரமிருகங்கள் கட்டவிழ்ந்தபோது அத்தனைபேர் குரலெழுப்பினார்கள். மறுநாள் என்னிடம் மூத்ததமையனார் சொன்னார், அத்தனைபேரும் என்னை வெல்லும் ஒருவனைப்பற்றிய கனவுடன்தான் திரும்பிச்சென்றிருப்பார்கள் என்று. அவர்கள் அனைவரும் என் தோல்விக்காக காத்திருக்கிறார்கள். அவர்களின் கண்களுக்கு முன்னால் தோல்வியின்றி இறுதிநாள்வரை நின்றிருப்பேன் என்றால் மட்டுமே நான் வென்றவன்.”

சட்டென்று அர்ஜுனன் சிரித்து “மூத்த தமையனார் சொன்னார், நான் தோற்று மடிந்தேன் என்றால் இதே மக்கள் குற்றவுணர்வுகொண்டு என்னை மாவீரன் என்று கொண்டாடுவார்கள். எனக்காக சூதர்கள் கண்ணீர்க் கதைகளை உருவாக்குவார்கள். வாழ்விலும் புராணங்களிலும் ஒரே சமயம் வெற்றிகொண்டு நிற்பது தேவர்களாலும் ஆகாதது என்றார் தமையனார்.”

“நீங்கள் வில்வீரர். எதற்காக உங்கள் தமையனாரின் வெற்றுத் தத்துவங்களுக்கு செவிகொடுக்கிறீர்கள்?” என்று மாலினி சினத்துடன் சொன்னாள். “அவரால் இன்னமும்கூட வேலும் வாளும் ஏந்தமுடியவில்லை. எந்நேரமும் அமைச்சர்களுடன் அமர்ந்து ஓலைகளை வாசித்துக்கொண்டிருக்கிறார். இதற்குள்ளாகவே தோள்கள் கூன்விழுந்துவிட்டன.” அர்ஜுனன் “அவர் ஏன் படைக்கலம் பயிலவேண்டும்? அவரது இருகைகளாக நானும் இளையதமையனும் இல்லையா என்ன?” என்றான்.

“ஆம், உங்களனைவருக்கும் வஞ்சமாகவும் விழைவாகவும் அன்னையும் இருக்கிறார்கள். நீங்கள் அவர்கள் நினைப்பதை நடத்தினால் மட்டும்போதும்” என்றபடி மாலினி எழுந்தாள். தன் எல்லைவிட்டு பேசிவிட்டோமோ என்ற ஐயம் அவளுக்கு வந்தது. ஆனால் அர்ஜுனன் நகைத்தபடி “ஆம், அன்னை முப்பதுவருடங்களுக்குப்பின் நிகழப்போவதைக்கூட நிகழ்த்திவிட்டார்கள். அவை நிகழவே வேண்டாம். ஒரு நல்ல சூதனிருந்தால் நேரடியாகவே காவியமாக்கிவிடலாம் என்று தமையனார் சொன்னார்” என்றான்.

இடைநாழியில் தருமன் குரல் கேட்டது. “ரதத்தை திருப்பி நிறுத்து.” அவன் பாதக்குறடு ஒலிக்க உள்ளே வந்து “விஜயா, கிளம்பிவிட்டாயா? நான் கிளம்பும்நேரம் மறைந்த உக்ரசேனரின் புதல்வர்கள் வஜ்ரசேனரும் சக்ரபாணியும் வந்துவிட்டார்கள். இருவருமே நம் படைப்பிரிவுகளில் துணைத்தளபதிகளாக இருக்கிறார்கள்” என்றான்.

அர்ஜுனன் “நான் நெடுநேரமாகக் காத்திருக்கிறேன்” என்றான். தருமன் “வா… ரதத்தில் விதுரரும் இருக்கிறார். கிருபரைக்காண வருகிறார்” என்றான். அர்ஜுனன் முகத்தைச் சுளித்து “அவர் எதற்கு?” என்றான். “அவரது ரதத்தில் செல்கிறோம். அவரது நேரம் மிக அருமையானது. ரதத்தில் செல்கையில் நகரைச்சுட்டிக்காட்டி நமக்கு நிறைய புதியவற்றைச் சொல்வார். கிளம்பு!”

அர்ஜுனன் “நான் அவருடன் வரமாட்டேன்” என்றான். தருமன் திகைத்து மாலினியைப் பார்த்துவிட்டு “ஏன்?” என்றான். “நான் வரமாட்டேன்… நான் இன்றைக்கு பயிற்சிக்குச் செல்லவில்லை” என்று அர்ஜுனன் சென்று பீடத்தில் அமர்ந்துகொண்டான். “விஜயா, நீ சிறுவன் அல்ல. இளவரசர்கள் ஒவ்வொரு சொல்லையும் தெரிந்து சொல்லவேண்டும்” என்று தருமன் சற்றுக்கடுமையான குரலில் சொன்னான்.

“நான் வரமாட்டேன். நான் அவருடன் வரமாட்டேன்” என்று அர்ஜுனன் கூவினான். தருமன் “ஏன்? அதைச்சொல்” என்றான். கண்களில் கண்ணீர் தேங்க அர்ஜுனன் “நான் அவரை வெறுக்கிறேன்” என்றான். தருமன் கண்கள் இடுங்கின. “ஏன் என்று நீ சொல்லியாகவேண்டும்!” “எனக்கு அவரைப் பிடிக்கவில்லை” என்றான் அர்ஜுனன் மீண்டும்.

தருமன் மாலினியைப் பார்த்து “என்ன நடந்தது?” என்றான். மாலினி “நான் ஏதுமறியேன். முன்பு இந்திரவிழாவின்போது அரசியுடன் வண்டியில் வந்தார். வந்து இறங்கியதுமே விதுரரை வெறுத்துப்பேசத் தொடங்கிவிட்டார். அன்றுமுதல் அப்பெயர் சொன்னாலே சினந்து எழுகிறார்” என்றாள். “உம்” என்ற தருமன் “விஜயா, நீ இப்போதே வந்து ரதத்தில் ஏறவேண்டும். விதுரரிடம் உரியமுறையில் முகமனும் நற்சொற்களும் பேசவேண்டும். நீ அவரை விரும்பவில்லை என்பதை அவர் அறியலாகாது. எப்போதுமே அறியக்கூடாது. இது என் ஆணை” என்றான்.

அர்ஜுனன் எழுந்து “ஆணை மூத்தவரே” என்று தலைவணங்கிவிட்டு தலைகுனிந்து கண்களை சால்வையால் துடைத்தபடி நடந்தான். தருமன் “மூடா, கண்களை கட்டுப்படுத்துகிறாய் என்று அறிந்தேன். கண்ணீரைக் கட்டுப்படுத்த கற்கவில்லையா நீ?” என்றான். அர்ஜுனன் தலைகவிழ்ந்து நடந்தான்.

வெளியே நின்ற தடம் அகன்ற ரதத்தில் இருவரும் ஏறிக்கொண்டதும் அர்ஜுனன் “வணங்குகிறேன் அமைச்சரே” என்றான். விதுரர் “வெற்றியுடன் இரு” என்று வாழ்த்தினார். அர்ஜுனனின் உடலசைவு வழியாகவே அவன் உணர்ச்சிகளை விதுரர் அறிந்துவிட்டதுபோலத் தோன்றியது. அவர் உடலிலும் ஓர் இறுக்கம் உருவானது. ரதம் அஸ்தினபுரியின் வீதிகள் வழியாகச் சென்றுகொண்டிருந்தபோது விதுரர் ஒரு சொல்லும்பேசாமல் தெருக்களையே நோக்கிக்கொண்டிருந்தார். தருமன் சில கேள்விகள் கேட்டபோது சுருக்கமான பதிலை அளித்தார்.

கிழக்குவாயில் முன் இருந்த அந்தப்பெரிய கதாயுதத்தைப் பார்த்ததும் தருமன் “அது அனுமனின் கதாயுதம் என்கிறார்களே?” என்றான். “ஆம். உத்தர கங்காபதத்தில் மாருதர்களின் நாடுகள் முன்பு இருந்திருக்கின்றன. அவர்களின் குலதெய்வம் மாருதியாகிய அனுமன். அனுமனின் பெரும் சிலைகளை அவர்கள் அங்கே நிறுவியிருக்கிறார்கள். அச்சிலைகளில் ஒன்றின் கையில் இருந்த கதாயுதம் இது என நினைக்கிறேன்” என்றார் விதுரர். “துரியோதனனைக் கொல்பவன் எவனோ அவன் அதை கையிலெடுப்பான் என்று ஒரு சூதன் பாடக்கேட்டேன்” என்றான் தருமன். விதுரர் “சூதர்கள் ஆற்றலுள்ளவனை வெறுக்கிறார்கள். அவன் வீழ்வதற்காக சொற்களுடன் காத்திருக்கிறார்கள்” என்றார்.

அர்ஜுனன் அவ்வப்போது ஓரக்கண்ணால் விதுரரையே நோக்கிக் கொண்டிருந்தான். விதுரர் அப்பார்வையை உணர்ந்துகொண்டுமிருந்தார். தருமன் “நான் சிலநாட்கள் மார்திகாவதிக்குச் சென்று தங்கியிருக்கலாமென எண்ணுகிறேன் அமைச்சரே. முதுதந்தை குந்திபோஜர் என்னை அங்கே வரும்படி அழைத்துக்கொண்டிருக்கிறார். அவர்கள் பார்த்தனையும் பார்த்து நெடுநாட்களாகின்றன” என்றான். விதுரர் “சென்று வரவேண்டியதுதான். நான் யாதவ அரசியிடம் பலமுறை சொன்னேன், ஒருமுறை மார்த்திகாவதிக்கு சென்றுவரலாமே என்று. அஸ்தினபுரியை விட்டு எங்கும் செல்வதாக இல்லை என்று சொல்லிவிட்டார்கள்” என்றார்.

அர்ஜுனன் உரக்க “அவர்களுக்கு ஆலோசனை சொல்லுமிடத்தில் எவரும் இல்லை. அவர்களுக்கே எல்லாம் தெரியும்” என்றான். விதுரரின் முகம் சிவந்தது. ஆனால் அதை உடனடியாக வென்று “மன்னிக்கவேண்டும் இளவரசே, அரசிகளுக்கு ஆலோசனை சொல்வதுதான் அமைச்சரின் பணி” என்றார். “நீங்கள் பெரிய தந்தையின் அமைச்சர் அல்லவா?” என்றான். தருமன் உரக்க “பார்த்தா, நீ என்ன பேசுகிறாய்?” என்றான். அர்ஜுனன் தலைகுனிந்து “பொறுத்தருள்க மூத்தவரே” என்றான்.

விதுரர் “அவர் சொல்வது ஒருவகையில் சரியே” என்றார். “அரசி என்னிடம் எதுவும் கேட்பதில்லை. நான் சொல்வதை கருத்தில் கொள்வதுமில்லை. ஆகவே நான் ஏதும் சொல்லாமலிருப்பதே உகந்தது.” தருமன் “அவன் சிறுவன். அவனுக்கு ஏதோ மனக்குழப்பம். அதை நீங்கள் பெரிதுபடுத்தவேண்டாம்” என்றபின் அர்ஜுனனிடம் “பார்த்தா, இனிமேல் நீ பெரியவர்களின் பேச்சுக்குள் நுழையாதே” என்றான். “ஆணை மூத்தவரே” என்று அர்ஜுனன் தலைகுனிந்தான்.

அதன்பின் ரதம் ஓடும்போது விதுரர் ஏதும் பேசவில்லை. தருமனும் பேசவில்லை. அர்ஜுனனும் விதுரரும் அந்த சிறிய ரதத்தட்டின் மீது முடிந்தவரை இடைவெளிவிட்டு விலகி நிற்பதை அவன் கண்டான். அவனுக்கு அது முதலில் திகைப்பையும் பின்பு புன்னகையையும் உருவாக்கியது.

கிருபரின் குருகுலத்தில் மாணவர்கள் ஏற்கனவே கூடியிருந்தனர். கௌரவர்கள் கதைபழகிக்கொண்டிருக்க கிருபர் ஒரு சிறிய மேடையில் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். ரதம் நின்றபோது விதுரர் இறங்கி சற்றுத்திரும்ப அவர் விழிகளும் அர்ஜுனன் விழிகளும் சந்தித்து விலகிக்கொள்வதை தருமன் கண்டான்.

விதுரர் கிருபரை வணங்கி அருகே செல்ல தருமன் “பார்த்தா, உன்னிடம் நான் கூடுதல் ஏதும் சொல்லவில்லை. நீ வில்விஜயன். மண்ணில் உனக்கு நிகரான எவருமில்லை. எனவே நீ என்றென்றும் தனிமையிலேயே வாழக் கடன்பட்டவன். அதை மறக்காதே” என்றான். அர்ஜுனன் “நான் எவரையும் நாடவில்லை” என்றான். “நாடுகிறாய்… நீ முதலில் விழைவது நம் அன்னையின் அன்பை. ஆனால் அவள் உன்னை வில்விஜயனாக மட்டுமே பார்க்கிறாள்.”

“எந்தப்பெண்ணையும் நான் பெரிதாக நினைக்கவில்லை. அன்னையையும்” என்றான் அர்ஜுனன் உரக்க. தருமன் “நீ அந்தப்புரத்தில் கைக்குழந்தை போல இருப்பாய் என்று எனக்குத் தெரியும். நீ கேட்டதை எல்லாம் மாலினி என்னிடம் சொல்லவும் செய்தாள்” என்றான் தருமன். “நான் அவளிடம் ஒன்றும் சொல்லவில்லை. அவள் பொய் சொல்கிறாள். நான் அரண்மனைக்குச் சென்றதுமே லட்சுமணன் போல அவள் முலைகளையும் மூக்கையும் அறுப்பேன்” என்று அர்ஜுனன் கூவினான்.

சிரித்தபடி நடந்த தருமன் பின்னால் ஓடிவந்து அவன் சால்வையைப் பற்றியபடி “நான் பெண்களை வெறுக்கிறேன். பெண்கள் எல்லாருமே பசப்புகிறார்கள். பொய் சொல்கிறார்கள்… அவர்கள்…” என்று அர்ஜுனன் மூச்சிரைத்தான். “பெண்கள்மேல் பெரும் மோகம் கொண்டவர்கள் எல்லாருமே பெண்களை வெறுப்பவர்கள்தான்” என்று தருமன் நகைத்தான். “இல்லை… எனக்கு பெண்களை பிடிக்கவில்லை. நான் வெறுக்கிறேன்” என்றான் அர்ஜுனன். “பார்த்தா, நீ பெண்களின் நாயகன். அதை நிமித்திகர்கள் சொல்லிவிட்டார்கள்” என்று தருமன் சிரித்தான்.

“நான் அன்னையை வெறுக்கிறேன்” என்றான் அர்ஜுனன் நின்று உதடுகளைக் குவித்தபடி. அவன் கண்களில் கண்ணீர் நிறைந்திருந்தது. “இல்லை. உன் வாழ்நாள் முழுக்க நீ அவளை வழிபடுவாய். பிறிதொரு பெண்ணையும் அவள் இடத்திலே வைக்கமாட்டாய். நாம் ஐவரும் அப்படித்தான். சக்ரவர்த்தினிகளுக்கு மைந்தர்களாகப் பிறந்ததன் விளைவு அது” என்றான் தருமன். “ஆனால் நீ ஒன்றை உணரவேண்டும், அன்னையரும் பெண்கள்தான்.”

அர்ஜுனன் கண்கள் சுருங்கின. தருமன் விழிகளைத் திருப்பி “கங்கையை மதிப்பிடும் அளவுக்கு கரைமரங்களுக்கு வேர்கள் இல்லை என்று கற்றிருக்கிறேன். அதைத்தவிர நான் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்றான். அர்ஜுனன் ஏதோ சொல்லவந்தபின் தணிந்தான்.

கிருபர் அவர்களை நோக்கி கைநீட்டி அழைத்தார். தருமன் அவர் அருகே சென்று வணங்கினான். அர்ஜுனன் பின்னால் சென்று நின்று மெல்லியகுரலில் “வணங்குகிறேன் ஆசிரியரே” என்றான். “வெற்றியும் நல்வாழ்வும் அமைக” என்று வாழ்த்திய கிருபர் விதுரரிடம் “நானே மாலையில் சென்று பீஷ்மபிதாமகரைக் கண்டு வணங்குகிறேன். அவரது ஆணைப்படி செய்யலாம்” என்றார்.

விதுரர் கிருபரை வணங்கிவிட்டு தருமனிடம் “நான் பீஷ்மபிதாமகரைச் சந்திக்கச் செல்கிறேன் தருமா. உனக்குரிய ரதத்தை அனுப்புகிறேன்” என்றார். அவர் செல்கையில் அர்ஜுனனை அணுகும்போது காலடிகள் மெல்லத்தயங்குவதை தருமன் கண்டான். அர்ஜுனன் தன் கையிலிருந்த வில்லை நோக்கி குனிந்திருந்தாலும் உடலால் அவரைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனைத் தாண்டிச்சென்றபோது விதுரரின் நடை தளர்ந்தது. அவர் சென்று ரதத்தில் ஏறிக்கொண்டார். ரதம் திரும்பும்போது மீண்டும் அவர் பார்வை வந்து அர்ஜுனனை தொட்டுச் சென்றது.

விதுரர் விலகிச் சென்றபின் கிருபர் மெல்ல நகைத்தபடி “பீஷ்மபிதாமகர் வனவாசம் முடிந்து வந்திருக்கிறார். மைந்தர்களின் கல்வி முறைப்படி அமைந்துள்ளதா என்று அறிய விரும்புகிறார்” என்றார். “அரசர்களுக்கு படைக்கலக் கல்வியே முதன்மைக் கல்வி. அவர்கள் கற்கும் அரசு சூழ்தலும் மதிசூழ்தலும் உறவுசூழ்தலும் படைக்கலங்களின் வழியாகவே கற்கப்படவேண்டும். அக்கல்வியை முழுதளிக்கக்கூடிய ஆற்றல் எனக்கில்லை என்றே உணர்கிறேன். அதை பிதாமகரே முன்வந்து செய்யவேண்டும்.”

“அவர் இப்போது மிக விடுபட்ட நிலையில் இருக்கிறார். எதையும் அவர் அறிந்துகொள்ள விழையவில்லை. எங்கும் வருவதுமில்லை. தன் படைக்கலப்பயிற்சியைக்கூட விட்டுவிட்டார்” என்றான் தருமன். “சொல்லப்போனால் மைந்தர்களின் பெயர்களைக்கூட அவர் அறிந்திருக்கவில்லை.” கிருபர் நகைத்து “கௌரவர் நூற்றுவரின் பெயர்களை நானுமறியேன்” என்றார்.

அர்ஜுனன் கிருபரை வணங்கி வில்லை எடுத்து நாணேற்றினான். கிருபர் “இலக்கு சூழ்ந்து அம்பு தொடு” என்றபின் அவனருகே சென்று அவன் பின்னால் நின்றபடி சொன்னார் “தனுர்வேதம் சதுஷ்பாதம் என்று அழைக்கப்படுகிறது. தேர், யானை, குதிரை, காலாள் என்னும் நான்கு வகைப் படைப்யிற்சிகளுமே சதுஷ்பாதம் எனப்படுகின்றன. வில்லேந்தியவன் நான்குவகை படைகளைப்பற்றியும் அறிந்திருக்கவேண்டும் என்பது நெறி.”

“ஏனென்றால் படைக்கு ஒரு வில் தேவையாகிறது” என்றார் கிருபர். “ரதமேறியவனை எதிர்கொள்ளும் வில்லில் ஒரேசமயம் நான்கு நாண்கள் கட்டப்பட்டிருக்கவேண்டும். நான்குதொலைவுகளில் ரதம் ஒரேசமயம் இருக்கமுடியும். யானைப்படையை எதிர்கொள்ளும் வில்லோ ஓங்கியதாகவும் கனத்த யானைத்தோல் நாண்கொண்டதாகவும் இருக்கவேண்டும். யானையின் மத்தகத்தைப் பிளக்கும் அம்புகளை அதுவே செலுத்த முடியும்.”

“குதிரைப்படையை குறுகிய விரைவான வில்லாலும் காலாள்களை வானிலிருந்து பொழியும் அம்புகளாலும் எதிர்கொள்ளவேண்டும். அனைத்துப் படைகளையும் அறிந்தவன் எடுக்கும் வில்லே ஆற்றல்மிக்கது என்றார்கள் முன்னோர். பார்த்தா, நாணை மாற்று” என்றபடி கிருபர் தருமனிடம் “வில்லில் அம்புகோர்க்கும் விரைவில் நாண்மாற்றுபவனையே தனுஷ்மான் என்கின்றன நூல்கள்” என்றார். அதற்குள் அர்ஜுனன் தன் வில்லில் நாணை மாற்றிவிட்டான். அவனைப்பார்த்தபின் தருமன் கிருபரை நோக்கி புன்னகைசெய்தான். கிருபர் “வில் கருணைகாட்டாத தெய்வம். ஒவ்வொருநாளும் அவியளிக்காதவனை அது துறக்கிறது. நீ இங்கிருந்து சென்றபின் வில்லைத் தீண்டுவதேயில்லை” என்றார். தருமன் பார்வையை விலக்கிக் கொண்டான்.

“தனுர்சாஸ்திர சம்ஹிதை படைகளை ஐந்துவகையாகப் பிரிக்கிறது” என்றார் கிருபர். “யந்திரமுக்தம், பாணிமுக்தம், முக்தசந்தாரிதம், அமுக்தம், பாகுயுத்தம். இவற்றில் பாணிமுக்தம் யந்திரமுக்தம் ஆகிய இரண்டிலும் அம்புகள் உள்ளன. கைகள் ஏந்தியவில்லால் தொடுக்கப்படுவது பாணிமுக்தம். பொறிகள் விடுக்கும் அம்புகள் யந்திரமுக்தம். இயற்கைவிசைகளான காற்றையும் நீரையும் அனலையும் போருக்குப் பயன்படுத்துவது முக்தசந்தாரிதம். கையிலேந்திய கதையும் வில்லும் அமுக்தம். மற்போரே பாகுயுத்தம் எனப்படுகிறது. அனலையும் நீரையும் காற்றையும்கூட அம்புகளால் ஆளமுடியும் என்று சொல்கின்றனர் தனுர்வேதஞானிகள். எந்தை சரத்வான் அதில் வித்தகர் என்று அறிந்திருக்கிறேன்.”

“குருநாதரே, அதை நான் எப்போது கற்பேன்?” என்றான் அர்ஜுனன். “அதை நான் கற்பிக்கமுடியாது. அதற்குரிய ஆசிரியரை நீயே கண்டடையவேண்டும்” என்றார் கிருபர். அர்ஜுனன் அவரை கூர்ந்து நோக்கினான். “அந்த ஆசிரியர் உன்னையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். மேலான கல்வி என்பது இரு தெய்வங்கள் ஒன்றையொன்று கண்டுகொள்ளும் தருணத்தில் நிகழ்வது. தயை என்னும் தெய்வம் குருவையும் சிரத்தை என்னும் தெய்வம் சீடனையும் ஆள்கிறது. அவர்கள் இணையும் தருணத்தில் வித்யை என்னும் தெய்வம் ஒளியுடன் எழுகிறது.”

சிந்தனையில் மூழ்கி வில்லுடன் நின்ற அர்ஜுனனை நோக்கி கிருபர் சொன்னார். “அஸ்திரம் சஸ்திரம் என்னும் இருபெரும்பிரிவுகளாக படைக்கருவிகளைப் பிரிக்கிறார்கள். விலகிச்செல்பவை அஸ்திரம். அவற்றுக்கு ஒற்றை இலக்கு. கையிலிருப்பவையும் கைவிட்டு திரும்பி வரும் சக்கரம் போன்றவையும் சஸ்திரம். அவற்றுக்கு இலக்குகள் பல. இலக்கை நோக்கி கிளம்பிவிட்ட படைக்கலங்களை தவிர்ப்பதும் தடுப்பதுமே வில்லாளியின் பணி. சஸ்திரங்கள் என்றால் அவை மீண்டும் வரும் வழியையே முதலில் கருத்தில்கொள்ளவேண்டும்.”

தன் இடையிலிருந்து ஒரு சிறிய சக்கராயுதத்தை எடுத்து வீசி “அதைத் தாக்கு” என்றார் கிருபர். காற்றில் மிதந்து சுழன்று சென்ற சக்கரம் வளைந்து கூரிய முனை ஒளியுடன் சுழல அர்ஜுனனை நோக்கி வந்தது. அவன் தன் அம்பை அதை நோக்கி எய்ய அது அம்பில் பட்டு விலகிச்சுழன்று அவனை நோக்கியே வந்தது. கிருபர் அவனை அது அணுகுவதற்குள் கையை நீட்டி அதைப்பிடித்துக்கொண்டார். “சஸ்திரத்தின் இயல்பு அது. அஸ்திரத்தில் அதை தொடுக்கையில் வில்லாளியின் அகம் எழுந்த அகக்கணம் மட்டுமே உள்ளது. சஸ்திரத்தில் அதை ஏந்திய போராளி எப்போதும் இருந்துகொண்டிருக்கிறான். நீ இதை எப்படித் தடுப்பாயென அறிந்தே இதை வீசினேன். என்னை அறியாமல் நீ இதை வெல்லமுடியாது.”

180
ஓவியம்: ஷண்முகவேல்

மீண்டும் அவர் அதை வீசினார். சக்கரம் திரும்பிவந்தபோது அர்ஜுனன் அதை அம்பால் அடித்து அது திசைதிரும்பியதும் இன்னொரு அம்பால் அடித்தான். அது சுழன்று மண்ணில் இறங்கி வெட்டிச்சரிந்து நின்றது. “ஆம், அதுவே வித்தை. ஓடும் மானுக்கு ஒருமுழம். பறக்கும் கொக்குக்கு பத்துமுழம்” என்றபடி கிருபர் சென்று அந்த சக்கராயுதத்தை கையில் எடுத்தார்.

“இன்னுமொரு பிரிவினையும் உண்டு. தனுர்வேதஞானிகள் சிலர் ருஜு, மாயை என்று அதை இரண்டாகப்பிரிக்கிறார்கள். அம்புகளால் தாக்குவது ருஜு. அம்புகளைக்கொண்டு மாயத்தோற்றங்களை உருவாக்குவது மாயை. மழை இடி மின்னல் காற்று என்னும் அனைத்து மாயைகளையும் அம்புகளால் உருவாக்கமுடியும்” என்றார் கிருபர்.

அர்ஜுனன் சிந்தனையுடன் “ஆசிரியரே, ருஜு, மாயை என்றால் அதுவல்ல என்று நினைக்கிறேன்” என்றான். கிருபர் சுருங்கிய புருவங்களுடன் திரும்பி நோக்கினார். “நான் அம்பை என் வில்லில் தொடுக்கும் கணத்துக்கு முன்னரே என் அகம் அந்த இலக்கைத் தாக்கிவிடுகிறது. மறுகணம் அம்பு அதைத் தாக்குகிறது. அகம் தாக்கும் விசையில் பாதியைக்கூட அம்பு அடைவதில்லை. அகம் நிகழ்கிறது, அம்பு அதை நடிக்கிறது. அகத்தை ருஜு என்றும் அம்பை மாயை என்றும் நூலோர் சொல்கிறார்கள் என எண்ணுகிறேன்” என்றான் அர்ஜுனன்.

தன் முன் கையில் வில்லுடனும் அம்புடனும் நின்றிருந்த அர்ஜுனனை குனிந்து நோக்கிய கிருபர் சிலகணங்கள் கழித்தே உயிர்ச்சலனம் கொண்டார். “பார்த்தா, இனி நான் உனக்குக் கற்பிப்பதற்கென ஏதுமில்லை. நீ கற்கவேண்டிய குருநாதர்களை தேடிச்செல்” என்றபின் தருமனை நோக்கி “நாளைமுதல் நீ மட்டும் வா” என்றார். தருமன் “குருநாதரே, மாணவனின் பொறையின்மையை குருநாதரல்லவா பொறுத்தருளவேண்டும்…” என அவரிடம் ஏதோ சொல்லப்போக கிருபர் புன்னகையுடன் “நான் அவன் குருநாதரல்ல. அவன் ஒருபோதும் என்னை அவ்வாறு அழைத்ததில்லை” என்றார்.

தருமன் திகைத்து நிற்க கிருபர் அர்ஜுனன் தலையில் கைவைத்து “நீ உலகை வெல்வாய்” என்று வாழ்த்திவிட்டு திரும்பிச் சென்றார். தருமன் சினத்துடன் முன்னால் வந்து “மூடா, குருநாதரிடம் எப்படிப் பேசுவதென்று நீ அறிந்ததில்லையா என்ன? நீ இப்போது பேசியது எத்தனை பெரிய குருநிந்தனை!” என்றான். “நான் என் எண்ணங்களை சொல்லக்கூடாதா?” என்றான் அர்ஜுனன். “எண்ணங்களைச் சொல்ல நீயா குருநாதர்? நீ கற்க வந்தவன்” என்றான் தருமன். “நான் கற்கும்பொருட்டே சொன்னேன்” என்று அர்ஜுனன் சொல்ல சினம் ஏறிய தருமன் தன் கையிலிருந்த வில்லால் அர்ஜுனன் காலில் அடித்து “நெறிகளை நீ கற்காவிட்டால் நான் கற்பிக்கிறேன். மூடா…” என்று கூவினான்.

தலைகுனிந்து நின்ற அர்ஜுனனைக் கண்டு மேலும் ஓங்கிய வில்லை கீழே போட்டு “அடக்கமின்மை அனைத்து ஞானத்தையும் அழித்துவிடும் பார்த்தா. அவர் ஞானி. ஆகவே வாழ்த்திச்செல்கிறார். முனிந்து தீச்சொல்லிட்டிருந்தால் என்ன ஆகும்?” என்றான் தருமன். அர்ஜுனன் தலைகுனிந்து அசையாமல் நின்றான். “குடிலுக்குச் சென்று அவர் காலடியில் தலைவைத்து விழுந்து பொறுத்தருளும்படி கேள்… போ” என்றான் தருமன். அர்ஜுனன் தலைவணங்கி “தங்கள் ஆணை” என்று சொல்லி காலடி எடுத்து வைத்ததும் “நில்!” என்றான் தருமன். “நீ வில்விஜயன். நாளை இந்த பாரதவர்ஷம் பாடப்போகும் காவியநாயகன். நீ எங்கும் தலைவணங்கலாகாது. குருநாதர்களின் முன் மட்டுமல்ல, மூதாதையர் முன்னும் தெய்வங்கள் முன்னும்கூட. நான் சென்று அவரிடம் இறைஞ்சுகிறேன்.”

அர்ஜுனன் “மூத்தவரே, என் குருநாதர் என்னைத்தேடிவருவார் என்று நிமித்திகர்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆகவேதான் நான் கிருபரை அவ்வாறு அழைக்கவில்லை” என்றான். “என் பொருட்டு நீங்கள் தலைவணங்குவதை நானும் ஏற்கமாட்டேன். நீங்கள் பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி. உங்களுக்குக் காவலாக நிற்க பெற்றெடுக்கப்பட்டவர்கள் நாங்கள்.” தருமன் பெருமூச்சுடன் “என்ன இருந்தாலும் நீ அப்படிச் சொல்லியிருக்கலாகாது பார்த்தா” என்றான். “அதை நான் இன்னும் பிழையென எண்ணவில்லை மூத்தவரே. குருநாதர்களும் மாணவர்களும் பிறந்து இறந்துகொண்டே இருப்பார்கள். வித்யாதேவி என்றென்றும் வாழ்வாள். அவள் வெல்லவேண்டும், பிறர் அனைவரும் தோற்றாலும் சரி” என்றான்.

“சிலசமயம் நீ குழந்தை. சிலசமயம் நீ ஞானி. உன்னைப் புரிந்துகொள்ள என்னால் ஆவதில்லை” என்று தருமன் பெருமூச்சுவிட்டான். “நீ சொன்ன அந்த குருநாதர் உன்னைத்தேடிவரட்டும். காத்திருப்போம்.”

வெண்முரசு விவாதங்கள்

முந்தைய கட்டுரைஆண்களின் கண்கள்…
அடுத்த கட்டுரைமழைப்பாடல்- காசோலை