நேற்றிரவு ஒன்பது மணியளவில் ஷாஜி எழுதிய கட்டுரை ஒன்றை மொழியாக்கம்செய்துகொண்டிருந்தேன், உயிர்மை இதழுக்காக. வானொலி பற்றிய கட்டுரை. என்னுடைய வானொலி நினைவுகள் எழுந்தன. எங்கள் வீட்டில் வானொலி இல்லை. அப்பாவுக்கு அந்தமாதிரி நாகரீகமெல்லாம் பிடிக்காது– பிள்ளைகளை ‘அட்சர விரோதிகள்’ ஆக்கிவிடும் என்ற எண்ணம். ஓரளவு சர்¢தான் போலிருக்கிறது. நாங்கள் மூவருமே எதையாவது படித்துக் கொண்டுதான் இருந்தோம்.
ஆனாலும் இசைக்காக நான் ‘நாயாய்’ அலைந்து திரிந்திருக்கிறேன். பாடல்கள் ஒலிக்கும் நேரத்தில் மதியவெயிலில் வீடுகளுக்கு வெளியே நின்று வியர்த்து தகித்து பாட்டு கேட்பேன். இசையே பித்தாக வாழ்க்கையை நடத்திவரும் நண்பர் சுகா [சுரேஷ் கண்னன்] யுவன் போன்றவர்களிடம் பேசும்போது அவர்கள் சொல்லும் பெரும்பாலான பாடல்களை நான் கேட்டிருப்பது தெரிகிறது. என் கவனத்துக்கு வராமல் போன முக்கியமான பாடல்கள் குறைவே. அப்படியானால் எனக்கும் கொஞ்சம் இசையார்வம் இருந்திருக்கிறது.
ஷாஜியின் கட்டுரை சம்பந்தமே இல்லாமல் பல பிம்பங்களை மனைதில் எழுப்பியது. நான் பாட்டுகேட்டு நிற்கும் காட்சி. கேட்ட பாடல்கள். பாடல்கள் ஒரு குறிப்பிட்ட கால இடத்துடனும் மனநிலையுடனும் இணையும் விதத்துக்கு நிகரே இல்லை. ‘செந்தாமரையே செந்தேனிதழே…’ ஏ.எம்.ராஜா இடைவேளைக்குப் பின் திரும்பிவந்தபோது பாடியபாடல். உடனே ‘முத்தாரமே உன் ஊடல் என்னவோ’ என்ற பாடல். அத்துடன் இணைந்து ‘எங்குமே ஆனந்தம், ஆனந்தமே ஜீவனின் மகரந்தம்’ கண்டசாலாவின் பாடல்.
சுகாவை கூப்பிட்டு அந்தப்பாடல்களை எப்படி கேட்பது என்றேன். http://music.cooltoad.com என்ற இணையதளத்தை சொல்லி அங்கே சென்று பதிவிறக்கம் செய்யலாம் என்றார். உடனே பதிவிறக்கம் செய்துவிட்டேன். என்னிடம் அகலக்கற்றை இணைய இணைப்பு இல்லை. பதிவிறக்கம் செய்ய மிகவும் தாமதமாகும். இருந்தாலும் அந்தப்பாடல்களை பெற்று கேட்க ஆரம்பித்தேன். வழக்கம்போல நான் பாட்டு கேட்க ஆரம்பித்தால் விசித்திரமான பித்துநிலை கைகூடிவிடும். அந்த பாடல்களில் இருந்து விதவிதமான மனநிலைகள், சிந்தனைகள், காட்சிபிம்பங்கள். வெளிவரவே முடியாது. இரவெல்லாம், விடியும் வரை அந்த மூன்றுபாடல்கள்தான்.
அந்தப்பாடல்களில் உள்ள பொதுத்தன்மை என்ன? அனிச்சையான ஒரு மனத்தேர்வு இருப்பதனால் ஏதோ ஒரு பொதுத்தன்மை இருந்தாகத்தான் வேண்டும். மூன்றிலும் ஆண்குரல் சன்னமாக, சற்று கம்மியது போல ஒலிக்கிறது. இனம்புரியாத சோகம் கலந்தது போல. ஆனால் பாட்டில் சோகம் இல்லை. ஒன்று இயற்கையை வருணிக்கும்பாடல். பிற இரண்டும் காதல் பாடல்கள். கண்டசாலா குரலில் எப்போதுமே சோகம் இருக்கும். ராஜா சிலசமயம் கொஞ்சுவார். இந்த பாடல்கள் பெரும்பாலும் கீழ்ஸ்தாயியில் ஒலிக்கின்றன. என்ன பொதுக்கூறு இருக்கும்? சரி, அதைக் கண்டுபிடித்துத்தான் என்ன ஆகப்போகிறது?
‘எங்குமே ஆனந்தம்’ பாடலில் எங்குமே ஆனந்தம் பல்லவிக்குப் பின் வரக்கூடிய இசை அசாதாரணமான துயரத்துடன்தான் ஒலிக்கிறதென்று தோன்றுகிறது. ‘ஜீவனில் மேவுது காதல் தாகம்!’ அதில் துயரம் இருக்கத்தான் செய்கிறது. ‘மயலாலே அலையும் தரங்கம் ‘ என்ற வரிக்குப் பின் வரும் மெல்லிய ஆலாபனையும் சரி, ‘இதுகாதலோ’ என்ற வரியின் எடுப்பும் சரி, முடியும்போதுள்ள ஆலாபனையும்சரி துயரச்சாயையுடந்தான் இருக்கின்றன. அதை உணர்வு ரீதியாக புரிந்துகொள்ள முடிகிறது. இயற்கையின் முன் நாம் அடையும் மன எழுச்சியில் இருப்பது விளக்கமுடியாத உயிரின்துயரம். விசித்திரம்தான், எங்குமே ஆனந்தம் என்று துயரத்துடன் பாடுவது!
‘முத்தாரமே’ என்ற பாட்டிலும் ஒலிப்பது சோகம்தானா? ‘சொல்லாமல் தள்ளாடும் உன் உள்ளம் என்னவோ?’ பெண் குரலில் துள்ளல் இருக்கிறது. ராஜா துயரம் கலந்த குரலில்தான் பாடுகிறார். அந்த புல்லாங்குழல் அவரது துயரத்துடன்தான் கலந்து ஒழுகிச்செல்கிறது. ‘செந்தாமரையே’ பாட்டிலும் அந்த கித்தார் ஒலி இனம்புரியாத துயரத்துடன்தான் ஒலிக்கிறது. இதிலும் பெண்குரல் உற்சாகத்துடன் ஒலிக்க ஏ.எம்.ராஜா துயரச்சாயலுடன் பாடுகிறார்.
வெள்ளைச்சட்டையும் வேட்டியும் அணிந்து தொங்குமீசையுடன் முப்பத்தைந்து வருடம் முன்பு ‘செந்தாமரையே’ என்று பட்டாளம் அம்மன் கோயில் திருவிழாவில் மைக் பிடித்துப் பாடிய மணிகண்டன் என்ற அண்ணன் சிலவருடங்கள் கழித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது அம்மா மயக்கம் போட்டு விழுந்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்லபப்ட்டு பின் சுயநினைவுக்கு வரவேயில்லை. அவரது முடியெல்லாம் உதிர்ந்துவிட்டது, இமைமயிர்கள் கூட. கிழ ஆந்தைபோல திண்ணையில் குனிந்து அமர்ந்திருந்தாள். …..
ஈரமான மார்கழி இரவுகள். தென்னை மரங்களை அசைக்கும் காற்று.தொலைதூரத்திலிருந்து வரும் வயல் மணம். உழவுகாலத்து புளிச்சேறுமணம். ஆடிமாசத்து பச்சை மணம். பொதியேறும் காலத்து பால் மணம். அறுவடை காலத்து கதிர்மணம். நெல்லில் குடியேரும் தெத்துப்பூச்சியின் இலை கசங்கிய வாடை. எத்தனை மனிதர்கள்! பெரும்பாலும் வயலிலேயே வாழ்ந்தவர்கள். வயல்களில் பலநூறு ,பல்லாயிரம் முறை முளைத்து தழைத்து கதிரிட்டு சாய்ந்து அறுதடம் மட்டும் விட்டு மறைந்தவர்கள் . மீண்டும் மீண்டும் உழுது புரட்டப்படும் மண். அதன் அழியாத தொல்மணம்…
….பிம்பங்கள். பிம்பங்களை மட்டும் நெஞ்சில் மிச்சம் வைத்து விட்டு காலம் மண்ணில் உள்ள அனைத்தையும் அழித்து அழித்துச் செல்கிறது. இந்தபிம்பங்களும் என்னுடன் சேர்ந்து மண்ணில் மறையுமென்றால் எதன் பொருட்டு திரும்பத்திரும்ப இதை நிகழ்த்துகிறது அது?
எப்படியும் விடிந்துவிடுகிறது. விடியும்போது எல்லாம் சரியாகிவிடுகிறது.