புத்தக விற்பனை கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்

பாரா அவரது தளத்தில் எழுதிய இந்தக்கட்டுரை வாசித்தீர்களா அவரது கருத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா?

http://www.writerpara.com/paper/?p=930

அவர் இப்படிச் சொல்கிறார். ‘ஜெயமோகனுக்கும் ராமகிருஷ்ணனுக்கும் சாருவுக்கும் மாங்கு மாங்கென்று பக்கம் பக்கமாகக் கடிதம் எழுதுகிற வாசகர்களைப் போல் எங்களில் யாருக்கும், யாரும் கடிதங்கள் எழுதுவதில்லை. எப்போதாவது கடிதங்கள் வரும். அடுத்து என்ன புத்தகம் என்று கேட்டு. ஆனால், இந்தக் கடிதம் எழுதாத வாசகர்கள் யாரும் காசு கொடுத்துப் புத்தகம் வாங்கத் தவறுவதில்லை. வருடம்தோறும் நியாயமான அளவில் புத்தக விற்பனை அதிகரிக்காமலும் இல்லை.

உண்மையான வாசகர்கள் கடிதம் எழுதிக்கொண்டிருப்பதில்லை என்பதுதான் இதில் நான் பெற்ற செய்தி. என் மதிப்புக்குரிய நண்பர்களுக்கும் அத்தகைய கடிதம் எழுதாத வாசகர்கள் நிறைய சேர எம்பெருமானைப் பிரார்த்திக்கிறேன்.

ஒரு இளம் எழுத்தாளர் யுவகிருஷ்ணா இப்படி பதில் சொல்கிறார் ஜெமோவை விட எனக்கு ராயல்டி அதிகமாக கிடைக்கிறது என்கிற ஒரு விஷயத்தை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை

சரவணன்

 

அன்புள்ள சரவணன்

பாரா கருத்து சொல்லவில்லை. அனுதாபம் தெரிவித்திருக்கிறார். அவர் சொல்வது உண்மை. தமிழில் பொதுவான உபயோக எழுத்துக்கு ஒரு வாசகர்கள் தரப்பு உண்டு. இலக்கியத்திற்கும் கருத்துக்களுக்கும் அப்படி அல்ல. அதற்கான தொடக்கப்பயிற்சி உள்ளவர்கள் தமிழில் குறைவு. உள்ளவர்கள் புத்தகங்கள் வாங்குவதுமில்லை.

கடிதம் எழுதுபவர்கள் வாசிப்பதில்லை என்று சொல்லமாட்டேன். ஆனால் அவர்களில் மிகப்பெரும்பாலானவர்கள் நூல்களை வாசிப்பதில்லை. இணையவாசகர்களில் 10 சதவீதம் பேர் புத்தகங்களை வாசித்தாலே நிலைமை மிகவும் மாறிவிடும். அது நடக்க வாய்ப்பில்லை

இணையத்தில் உள்ள பொதுவான நிலைமையே இதுதான். ஒருமுறை நானும் ஒரு பேராசிரியரும் கண்ணகி சிலைவிவகாரம் எரிந்துகொண்டிருந்தபோது இணையப்பதிவுகளில் சிலப்பதிகாரத்தையோ ஏதேனும் ஒரு கண்ணகி நூலையோ குறிப்பிடும் ஏதாவது கட்டுரை வருகிறதா என்று தேடினோம். ஏமாற்றம்தான்.  இணையத்தில் வாசித்தவற்றுக்கு இணையத்தில் எதிர்வினையாற்றிக்கொண்டிருந்தார்கள்.

ஜெ

 

அன்புள்ள ஜெ,

உங்கள் கடிதம் மனச்சோர்வளித்தது. உண்மையில் நானும் உங்களுடைய ஒரு நூலைக்கூட வாங்கியதில்லை. இணையத்தில் வாசித்ததுடன் சரி.இணையத்தில் எழுதுவதைப்பற்றி உங்களுக்கு மனச்சோர்வு ஏற்பட்டதா?

சரவணன்

 

அன்புள்ள சரவணன்

கண்டிப்பாக. உண்மையில் சென்ற வருடத்து ராயல்ட்டியை பார்த்தபோது அதில் இருந்த தீர்மானமான நிராகரிப்பு கடுமையான சோர்வை அளித்தது. அது எழுத்தின் மீதுள்ள சோர்வல்ல. எழுத்து என்னுடைய ‘மிஷன்’ என்னுடைய தேடல். ஆனால் பிரசுரம் சம்பந்தமானது. எனக்கு உண்மையான வாசகர் மிக மிக குறைவு, எதிர்காலத்தில் உருவாகி வரலாம், இப்போது இல்லை.

ஜனவரி முதல் இணையத்தில் எழுதுவதை நிறுத்திக்கொண்டால் என்ன என்ற எண்ணமும் இருக்கிறது. வாசகர்க ளைப்பற்றி கவலைப்படாத எனக்கேயான எழுத்துக்களை அப்போதுதான் உருவாக்க முடியும். கொஞ்சம் பெரிய கனவுகள் உள்ளன.

ஜெ

 

வணக்கம் குரு.,

நலமே காண விழைகிறேன்.,விவேக் ஷன் பேக்கின் இரண்டாவது சிறுகதையின் தமிழாக்கம் வாசித்தேன்..

“ஜானகிராமுக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவன் அசோக் ஜானகிராமின் வயதுதான்”. சற்று குழப்புகிறது., இதில் பிகெ வின் வயதை குறிப்பிடுகிறீர்களா?

“புத்தக வெளியீடு,கடிதங்கள்”ளில்
“லட்சம் பிரதிகளா? நக்கலா? பத்துநூலும் வருடத்திற்கு ஆயிரம் பிரதிகள் விற்றாலே எனக்கெல்லாம் கொஞ்சம் மேட்டிமைத்தனம் பேச்சு நடத்தையில் வந்துவிடும் என்று நினைக்கிறேன்”.. இவ்வாறான சொற்கள் தங்களின் இயல்பே.. இருந்த போதிலும் அதில் வாசகரின் ஜாதியை குறிப்பிட்டு சொல்ல வேண்டுமா என்ன?

“உழக்குக்குள் வழக்கு” சொல்லாடல் நகைச்சுவையாக இருந்தாலும்., நிறையவே சிந்திக்க வைக்கிறது., வருத்தமும்.

தங்களின் பழைய நூல்கள் மறுபதிப்புக்குள்ளாவது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.. பதிப்பகத்தாருக்கு நன்றிகள்..

பணிவன்புடன்..

மகிழவன்.

 

அன்புள்ள மகிழவன்,

ஆனந்தக்கோனார் என்பது அந்த வாசகரின் புனைபெயர். அப்பெயரில் தான் இணையத்தில் எழுதுகிறார். ஆகவேதான் அதைச் சொன்னேன்.  பொதுவாக ஒருவரின் சாதியைச் சொல்வதிலோ பேசுவதிலோ தப்பேதும் இல்லை என்றே எண்ணுகிறேன். அது குல அடையாளம். அவர் விரும்பினால் சொல்லலாம். அதை இழிவாகவோ உயர்வாகவோ சொன்னால்தான் தவறு

விவேக் சிறுகதையில் அது கைப்பிழை, திருத்திக்கொள்கிறேன். நன்றி

ஜெ

 

வணக்கம் ஜெயமோகன் சார்

//நீங்கள் புண்படாவிட்டால் ஒன்று சொல்கிறேனே, இப்போது சட்டென்று ஏதோ ஒரு நூல் உங்களுக்கு தேவைப்படுகிறது. அதனால் இந்தக் கோபம். மற்றபடி ஒரு முந்நூறு ரூபாய்க்காவது நீங்கள் இணையம் வழியாக புத்தகம் வாங்கியிருப்பீர்கள் என நான் நம்பவில்லை
//

எவ்வளவு பெரிய உண்மை இது..

ஆனால் யாரும் இப்படி வெளீப்படையாகச் சொல்வதில்லை

ஜெயக்குமார்

 

அன்புள்ள ஜெயக்குமார்

அது உண்மை. உண்மையைச் சொல்வதில் என்ன பிழை? அது நாம் எங்கிருக்கிறோம் என நமக்குக் காட்டுகிறதல்லவா?

ஜெ

 

அன்புள்ள எழுத்தாளர் அவர்களுக்கு!

வணக்கம்!

நான் சென்ற வாரம்தான் காடு நாவலை படித்தேன். படித்தவுடன் அதை நான் என் நண்பர்களுக்கு பரிந்துரைத்தேன். இரு நண்பர்களுக்கு பரிசாகவும் அளித்தேன். படிப்பார்கள் என்று நம்புகிறேன். தமிழ் தெரியாத நண்பர்களுக்கு அதை எப்படி அளிப்பது என்று யோசித்தபோது, இன்று உங்கள் இணையத்தில் காடு ஆங்கில மொழியாக்கம் கண்டு அறிந்தேன். கவிதா பதிப்பகத்தின் முகவரி அனுப்ப இயலுமா? அல்லது கோவையில் அந்த மொழியாக்கம் கிடைக்குமா? நாவல்  குறித்த எனது புரிதலை பற்றி பிறகு எழுதிகிறேன். ஏனென்றால் ஒவ்வொரு முறையும்  ஒவ்வொரு தடத்தில் படித்து கொண்டிருக்கிறேன்.!

நன்றிகள்!

தண்டபாணி!


Best wishes!
Dhandapani

 

காடு மொழியாக்கம் ஜானகி வெங்ண்ட் ராமன் பிரசுரம்

Indian Writing , New Horizon media 33/15 Eldams Road Chennai 60018

ஜெ

 

அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு

தாங்கள் பாலாஜி கோனார் அவர்களுக்கு எழுதிய பதிலை படித்தேன்.  அதில் தாங்கள் குறிப்பிட்ட ஒரு விஷயம் என்னை இந்த கடிதம் எழுத தூண்டியது.

நான் தங்கள் புத்தகங்களை இதுவரை படித்ததில்லை.  தங்கள் கட்டுரைகளும் மற்ற blog post களும் தான் படித்திருக்கிறேன்.  ஆகையால் தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தை பிரபலமாக்க முடியாமல் போன காரணங்களில் நானும் ஒரு காரணமாகிறேன்.  தங்கள் எழுத்தை படித்த பிறகும், அது சிறப்பாக இருக்கு என்ற போதிலும், அவை என்னை கவர்ந்துள்ளன என்றாலும், நானாக விரும்பிச்சென்று  தாங்கள் எழுதிய எந்த ஒரு புத்தகத்தையும் வாங்கவில்லை.  இது என்னுடைய சோம்பேறித்தனத்தை காட்டுகிறதா அல்லது வேறு எதாவது காரணம் உள்ளதா என்று எனக்கு விளங்கவில்லை.

அனால் தங்களுக்கும் தங்கள் புத்தகங்களை பிரசுரிக்கும் நிறுவனங்களுக்கும் எனது ஒரு விண்ணப்பம் – technology மாறிக் கொண்டு வருகிறது.  ஆங்கில புத்தகங்களுக்கு இன்றும் பெரும் மவுசு இருந்தாலும், அவர்களுக்கும் இதே நிலை வரும் என்பது தெரிகிறது.  விற்பனைகள் குறையும் இந்த காலகட்டத்தில் அவர்கள் அதை கடக்க அமேசானின் Kindle எனும் யுக்தி மூலம் என் போன்ற சோம்பேறிகளையும் சென்றடைகிறார்கள்.  Kindle மூலமாக புத்தகங்களை வாசகர்கள் தங்கள் PDAகளில் இறக்கி (download) அதனுள் எப்பொழுது வேண்டுமானாலும் படிக்கிறார்கள்.  இந்த மாதிரி வாங்கும் பிரதிகள் சற்று மலிவாகவும் இருப்பதால் அதனை வாங்க அதிகம் யோசிப்பதும் இல்லை.

தாங்களும் தங்கள் புத்தகங்களை ஏன் இவ்வாறு விற்க முயற்சி செய்யகூடாது?  இதனால் உலகெங்கும் பரவி உள்ள தங்கள் வாசகர்களும் படிக்க கூடும்.  புத்தகம் வாங்க தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய அவசியமும் இருக்காது.

இந்த கருத்தை தாங்கள் ஏற்றுகொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

இப்படிக்கு
சங்கரன்

பி. கு: நான் தமிழில் எழுதி பல ஆண்டுகள் ஆகின்றன. அதோடு computer’ல் இவ்வளவு பெரிய கடிதம் முதல் முதலாக எழுதுகிறேன்.  பிழைகளை பொருத்து கருத்தை மற்றும் ஏற்று கொள்ளுங்கள்.

அன்புள்ள சங்கர்

பொதுவாக இணையத்தில் இத்தகைய ஆலோசனைகள் வருகின்றன. செய்துபார்ப்பவர்கள் பார்க்கட்டும். ஆனால் இங்கே உள்ள சிக்கல் என்னவென்றால் பண்பாட்டுப்பிரச்சினைகளுக்கு தொழில்நுட்பம் மூலம் தீர்வுகாண முயல்வதில் உள்ள முரண்பாடுதான்.

தமிழ்நாட்டில் ஏன் நூல்கள் விற்கவில்லை? நூல்களுக்கு நுகர்வுமதிப்பு இல்லை என்பதே முதற்காரணம். தேவையில்லாத ஒரு பொருளை எப்படி  விற்பது என்பதே சிக்கல். அதீத விளம்பரம் மூலம் விற்பது முதலாளிய அமைப்பில் சாத்தியம். ஆனால் அதற்கான முதலீடு இல்லை

ஏன் நுகர்வு இல்லை? என் இணையப்பதிவுகளையே நான் கவனிக்கிறேன். சினிமா, சினிமா இசை சம்பந்தமான பதிவுகளுக்கு வரும் வருகைகள் பிறவற்றுக்கு இல்லை. இணைய அரட்டைகளிலேயே கூட சினிமாதான் அதிகம்.

ஏனென்றால் நம் மக்களுக்கு சினிமா அல்லாமல் வேறு எதுவுமே தெரியாது என்பதே. இதில் பாமர இளைஞர்கள் உயர்படிப்பு படித்த இளைஞர்கள் என்ற வேறுபாடே இல்லை. பிந்தையவர்கள் ‘அறிவுபூர்வமாக’ ஆராய்வது போல ஒரு பாவனையை சில சமயம் மேற்கொள்கிறார்கள் அவ்வளவுதான். மற்றபடி அதே வணிக சினிமாதான் இருவருடைய ரசனையும்

 

கலைகள், அறிவுத்துறைகள் இரண்டிலும் ஈடுபட ஒரு தொடக்கம் தேவை. அந்தத் தொடக்கம் நம்முடைய பண்பாட்டால் நம் இளைஞர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு ஒரு தொடக்கம் இருப்பது வணிகசினிமாவில் மட்டுமே.  ஆகவே எளிதில் அதற்குள் நுழைகிறார்கள். பேசுகிறார்கள், வாசிக்கிறார்கள்.

 

இலக்கியம் தத்துவம் அரசியல்கோட்பாடு போன்றவற்றில் அவர்கள் நுழைவதற்கு அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் நிலையைப்பற்றிய ஒரு குற்றவுணர்ச்சி, ஒரு போதாமை உணர்ச்சி தேவையாகிறது. உலகில் மற்ற சமூகங்களேதும் இப்படி இரவுபகலாக வணிகசினிமாவில் மூழ்கிக்கிடக்கவில்லை என்று அவர்களே உணர வேண்டும். அந்த உணர்விருந்தால், கொஞ்சம் முயற்சி இருந்தால், எளிதில் பிறவற்றில் நுழையலாம். ஆனால் அந்த குற்றவுணர்ச்சி உருவாவதற்கே இங்கே வழியில்லை.

வணிகசினிமா அல்லது கேளிக்கை தவறல்ல. ஆனால் அறிவியக்கத்திற்கும் கலைக்கும் மாற்றாக அது ஆகும்போதே இந்த தேக்கநிலை உருவாகிறது.

இக்காரணத்தால் நம் சமூகத்தில் கலையும் இலக்கியமும் சிந்தனையும் முக்கியமானவை என்ற எண்ணமே இல்லை. ஆயிரம் ரூபாய் செலவுசெய்து ஓட்டலுக்குச் செல்பவர்கள் ஐநூறு ரூபாய்செலவுசெய்து சினிமா பார்ப்பவர்கள் முந்நூறு ரூபாய்க்கு புத்தகம் வாங்குவதில்லை. வாங்க நினைத்தால்கூட கடைசிக்கணம் மனம் தயங்குகிறது. தேவையில்லை என்றும் வீண் செலவு என்றும் ஆழ்மனம் முரண்டு பிடிக்கிறது. அந்தப் பண்பாட்டுத் தேவைக்காக மனம் பயிற்றுவிக்கப்படவில்லை.

இந்தபண்பாட்டுச் சிக்கலை பண்பாட்டியக்கங்கள் மூலம் மட்டுமே தீர்க்க முடியும். அதுவன்றி இணையத்தில் கொடுத்தாலோ மின்னணுக்கருவியாகக் கொடுத்தாலோ ஒன்றும் நிலைமை மாறிவிடாது

ஜெ

 

உங்களுக்குக் கிடைத்த ராயல்ட்டி குறித்து எழுதியிருந்ததைப் பார்த்தேன். அதை ஓர் அளவுகோலாகக் கொள்கிறீர்களா என்ன?

ஜெய்சங்கர் அருணாச்சலம்

 

அன்புள்ள ஜெய்சங்கர்,

இல்லை. எழுத்தாளர்களை ராயல்டியை வைத்து அளப்பதில்லை. கவிதா பதிப்பகத்தில் எண்கணித நூல்களைப் போடும் ஒருவர் வருடம் ஐந்து லட்சம் ரூபாய் வரை ராயல்டி வாங்குகிறார்.

ஆனால் நூல்கள் புறக்கணிக்கப்படுவது முகத்திற்கு நேராக நாம் நிராகரிக்கப்படுவதே. இங்கே ஓர் எழுத்தாளன் அவன் ஒரு வருடத்திற்கு வாங்கும் வெள்ளைத்தாள் செலவுக்குக்கூட எழுதி பணமீட்டமுடியாது என்பது ஒரு பண்பாட்டுச்சூழல். அது நம்மிடையே பண்பாடு குறித்து பேசுபவர்களுக்கு ஒரு தகவலாக இருக்கட்டுமே.

இணையத்தில் நீங்கள் சுந்தர ராமசாமி முதல் நான் வரை எந்த ஒரு எழுத்தாளரின் பெயரை கூகிளில் தேடிப்பாருங்கள். மோசமான சமூக விரோதிகளைப் போல எழுத்தாளர்கள் வசைபாடப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். எந்த எழுத்தாளரைப் பற்றி நீங்கள் ஒரு வசை போட்டால்போதும் பின்னூட்டங்கள் வந்து குவியும். எந்த ஒரு அரசியல்வாதிக்கும் நடிகருக்கும் எவருக்கும் இந்த வசைகள் இருக்காது. காரணம் தமிழர்களின் அடிமனதில் அறிவியக்கம் மீது ஓர் அச்சம் இருக்கிறது.

வசையாளர்களில் பாதிப்பேர் இந்த எழுத்தாளர்களை பிழைப்பு வாதிகள் என்றும் எழுதி சம்பாதிப்பவர்கள் என்றும் எழுதியிருப்பார்கள். அவர்களுக்கும் ஒரு தகவலாக இருக்கட்டுமே.

 

ஜெ

முந்தைய கட்டுரைஜெயமோகன் நூல்வெளியீடு,முகங்கள்
அடுத்த கட்டுரைகாந்தியின் கிராமசுயராஜ்யம் – 3