‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 36

பகுதி ஆறு : அரசப்பெருநகர்

[ 11 ]

கோதையின் கரையிலிருந்த ராஜமகேந்திரபுரியின் பெருந்துறை முனையில் உதர்க்கர் என்னும் சூதருடன் நின்று கடலில் இருந்து பீதர்களின் பெருங்கலமொன்று எழுந்து வருவதைப் பார்த்து நின்றான் இளநாகன். கோதாவரி கடல்முகம்கொண்ட ஆழ்ந்த காயலின் ஓரத்திலிருந்தது ராஜமகேந்திரபுரி. அதன் துறைமேடையில் நின்று பார்த்தபோது கிழக்கே தொடுவானத்தில் கோதையின் இளநீல நீர்ப்பரப்பு கடலின் கருநீலவெளியை முட்டும் கோடு தெரிந்தது. அந்தக்கோட்டில் கொடியில் அமர்ந்த சிறுபறவைகள் போல நாவாய்கள் நின்றாடிக்கொண்டிருந்தன.

கிருஷ்ணவேணியின் கரையிலிருந்த தான்யகடகத்தில் இருந்து கடல்முகப் பெருந்துறைகொண்ட இந்திரகிலத்துக்கு வந்து அங்கே சிலநாட்கள் தங்கியபின் கோதாவரியைப் பார்ப்பதற்காகவே வடமேற்கே சென்ற பொதிவண்டிகளுடன் இணைந்துகொண்டான். அவை யவனர்கலங்கள் கொண்டுவந்த பொருட்களுடன் சிற்றூர்கள் செறிந்த பெருஞ்சாலை வழியாகச் சென்றன.

எழுபதுநாட்கள் பொதிவண்டிகளுடன் சென்று அஸ்மாகநாட்டை அடைந்தான். கோதையின் கரையில் எழுந்த சிறிய படகுத்துறை நகர்களில் ஒன்றாகிய வெங்கடபுரியிலும் நரசபுரியிலும் சிலமாதங்கள் இருந்தான். வெயில் எரிந்து நிற்கும் விரிந்த வயல்வெளிகளால் சூழப்பட்ட சின்னஞ்சிறு கிராமங்கள் வழியாக அலைந்தான். பேராலமரங்கள் எழுந்து நின்ற ஊர்மன்றுகளில் அமர்ந்து தென்னகத்தில் கண்டவற்றையும் வடபுலம்பற்றிக் கேட்டவற்றையும் சொல்லி பரிசில்பெற்று மீண்டான். பின்னர் பாமனூரிலிருந்து படகிலேறி ராஜமகேந்திரபுரியை நோக்கி பயணமானான்.

பகல் முழுக்க கோதையின் நீர்ப்பெருக்கு வழியாக மேற்கே அஸ்மாகநாட்டிலிருந்து வந்த படகிலமர்ந்து இருபக்கமும் செறிந்திருந்த நூற்றுக்கணக்கான படகுத்துறைகளையும் அவற்றுக்கு அப்பால் எழுந்த சுங்கமாளிகைகளையும் கற்கூரையிட்ட வீடுகள் குழுமிய சிற்றூர்களையும் பார்த்துக்கொண்டிருந்தான். “ஒவ்வொரு சிற்றுயிருக்கும் அதற்கான தெய்வம் உண்டு இளம்பாணரே. அவ்வுயிர் தன் உணர்ச்சிகளின் உச்சத்தை அடையும்போது அத்தெய்வம் மகிழ்கிறது” என்றார் பிரதிஷ்டானபுரியிலிருந்து கிளம்பி கிருஷ்ணபுரியில் அவனுடன் இணைந்துகொண்ட வடபுலத்துச் சூதரான உதர்க்கர்.

“தெய்வங்கள் பருவுடல் இன்மை என்னும் துயர்கொண்டவை. அவற்றின் அகம் வெளிப்பட உயிர்களும் உடல்களும் தேவையாகின்றன. ஆயிரம் பல்லாயிரம் உயிர்களில் ஒன்று தனக்கு விதியும் சூழலும் வகுத்த எல்லையை மீறி மேலெழுந்து தெய்வங்களை நெருங்குகிறது. தங்கள் தவம்விட்டெழுந்த தெய்வங்கள் கீழிறங்கி அவற்றின் ஆன்மாவில் குடியேறி உடலை ஊர்தியாக்கிக் கொள்கின்றன. மதகளிற்றின் மத்தகத்திலும், சினங்கொண்ட சிம்மத்தின் உகிர்களிலும், பருந்தின் அலகுகளிலும், நச்சரவத்தின் பல்லிலும், தேளின் கொடுக்கிலும் தெய்வங்கள் எழுகின்றன.”

“துரோணரில் எழுந்தவள் குசை. தர்ப்பையில் வாழும் தெய்வம் அவள். அனலை தன்னுடலின் ரசமாகக் கொண்டது தர்ப்பை என்கின்றன நூல்கள்” உதர்க்கர் சொன்னார். “தனிமையின் உச்சத்தில் துயரின் இறுதிமுனையில் வாழ்வும் இறப்பும் ஒன்றையொன்று அறியும் அருங்கணத்தில் ஆன்மா தன் தெய்வத்தைக் கண்டடைகிறது. அதன்பின் அதற்குக் கண்ணீரில்லை. அலைபாய்தல்கள் இல்லை. தொடுக்கப்பட்ட அம்பின் விரைவு மட்டுமே அதில் கூடுகிறது” தன் யாழை விலக்கி நாணைத் தளர்த்தியபடி மெல்ல நகைத்து உதர்க்கர் சொன்னார். “அக்கணமே உரிமையாளன் பின்னால் வாயூற வாலாட்டித் தொடரும் நாய் போல அவனை காவியம் பின்தொடரத் தொடங்கிவிடுகிறது.”

ராஜமகேந்திரபுரி சதகர்ணிகளின் வடக்கு எல்லையில் இருந்தது. கலிங்கமும் சாலிவாகனமும் ஒன்றுடன் ஒன்று மருப்பு தொடுக்கும் எல்லை அது என்றனர் வணிகர். கலிங்கத்தில் முடிசூடும் ஒவ்வொரு அரசனும் அதன்மேல் படைகொண்டுவந்தான். வென்றவன் அந்நகரை ஆள தோற்றவர்களிடம் ஒப்பம்செய்துகொண்டான். தோற்றவர்கள் வெல்வதற்காகக் காத்திருந்தனர். சாலிவாகனமும் கலிங்கமும் ஆடும் பந்து அது என்றனர் படகில் வந்த வணிகர்கள். அதன் துறைமுகப்பில் எழுந்து நின்றிருந்த சதகர்ணிகளின் மாகாளை வடிவத்தைக் கண்டு இளநாகன் கேட்டான் “இப்போது இதை ஆள்பவர்கள் சதகர்ணிகளா?” சிரித்தபடி வணிகன் சொன்னான் “ஆம், நாம் சென்றுசேர்வது வரை காளை அங்கிருக்கும் என நம்புவோம்.”

படகிலிருந்து கரையிறங்கும்போது மாலைவெயில் பழுக்கத் தொடங்கியிருந்தது. உப்பு ஊறிவழிந்த உடலுடன் இளநாகன் “இங்கே நல்ல நீரோடை ஒன்றை கண்டடையவேண்டும்” என்றான். “ஆம், அதற்குமுன் சிறந்த பனங்கள்ளை” என்ற உதர்க்கர் “பொறு” என்றார். கைசுட்டி “அந்தப்பெருங்கலங்கள் துறைநுழையும் காட்சி சிறப்புடையது என்று கேட்டிருக்கிறேன். பார்ப்போம்” என்றார். இளநாகன் கண்மீது கைவைத்து “அத்தனை தொலைவிலும் தெரிகின்றன என்றால் அவை பீதர்களின் மாபெரும் கலங்கள். அவை கடலாழம் விட்டு வரமுடியாது. இங்கு கோதையின் ஆழம் அவற்றுக்குப் போதாது” என்றான். “பீதர்கலங்கள் தரைதட்டுமென்றால் அவற்றை அப்படியே நிறுத்தி மெல்ல உடைத்துப் பிரிப்பதன்றி வேறு வழியே இல்லை என்று கேட்டிருக்கிறேன்.”

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

“ஆனால் ராஜமகேந்திரபுரியின் துறை இங்குதான் உள்ளது. நூற்றெட்டு முகநீட்சிகள் கொண்ட இந்தப்பெருந்துறை அவற்றுக்காகவே அமைக்கப்பட்டது” என்றார் உதர்க்கர். அவர்கள் கரையில் காத்துநின்றனர். அங்கே நின்றிருந்த பல்லாயிரம் பேரும் காத்துநிற்கிறார்கள் என்பதை இளநாகன் உணர்ந்தான். கோதைக்குள் நின்றிருந்த சிறியபடகில் இருந்தவர்கள் செந்நிறக்கொடியை காற்றில் வீச கரையில் நின்ற பல்லாயிரம் வணிகர்களும் ஏவலரும் வினைவலரும் எழுப்பிய குரல்கள் இணைந்து பேரோசையாகச் சூழ்ந்தன. துறையில் நின்றிருந்த நூற்றுக்கணக்கான காவல் மாடங்களின் நூலேணிகளில் பாய்ந்தேறிய வீரர்கள் செந்நிறக்கொடிகளை மேலெழுப்ப துறைக்குப்பின்பக்கம் எழுந்த கோட்டையிலும் அப்பாலும் ஓசை வெடித்தெழுந்தது.

கோட்டையின் இருபக்கமும் விரிந்துசென்ற கருங்கல்பாதைகளில் நின்றிருந்த வெள்ளெருதுக்களால் இழுத்துவரப்பட்ட பொதிவண்டிகள் ஒன்றுடனொன்று முட்டி நிரைவகுத்தன. துறைமேடையில் நின்று பார்க்கையில் முடிவற்ற மணிமாலை போலத் தெரிந்தது வண்டிநிரை. தெற்கே போடப்பட்ட கனத்த மரப்பாலம் வழியாக இருபது களிறுகள் இருள்வழிந்திறங்குவதுபோல செவியாட்டி உடல்ததும்ப துதிக்கையால் பாலத்தைத் தொட்டு ஆராய்ந்தபின் மெல்லக் காலடி எடுத்துவைத்து வந்து வரிசை கொண்டன.

வணிகர்களும் கைகளில் வண்ணக்கொடிகளுடன் துறைமுகத்தின் பொறிச்சிற்பிகளும் காத்திருந்தனர். கடலில் இருந்து எழுந்து நதிவழியாகச் சுழன்று நகர்நோக்கிச் சென்ற காற்றில் உப்புவீச்சம் இருந்தது. அது உடலைத்தொட்டதும் வியர்வை குளிர்ந்து விலகி உப்பு தோலைக் கடித்தது. இளநாகன் மாலைவெயிலில் கண்கூசும் ஆடிப்பரப்பாகக் கிடந்த கோதையைப் பார்த்துக்கொண்டு நின்றான்.

அருகில் சென்ற பொறிச்சிற்பி ஒருவர் கோதைக்குள் நின்றிருந்த மரத்தூண் ஒன்றில் சிறிய ஆப்புகளாக பொறிக்கப்பட்டிருந்த அளவுகளை குறிக்கத்தொடங்கியபோதுதான் கோதை வீங்கிப்பெருத்திருப்பதை இளநாகன் கண்டான். அருகே சென்று நோக்கியபோது அது கடலில் இருந்து கரைக்குள் பெருகிச் சுழித்துச் சென்றுகொண்டிருப்பதை உணரமுடிந்தது. கடல்பாசிகளும் கொடிகளும் நீரில் மிதந்து அலைபாய்ந்து விரிந்து பின் குவிந்து சென்றுகொண்டிருந்தன. வெண்ணிற நாய்க்குடை போன்று நீரில் மிதந்த ஒன்று தன் குடைவட்ட விளிம்புகளை நீரில் அலைத்துக் கொண்டு நீந்திச்சென்றபோதுதான் அது ஒரு மீன் என இளநாகன் அறிந்தான்.

நீரின் அளவு ஏறி ஏறிவந்து படிகளை விழுங்கியது. விரைவிலேயே இளநாகன் நின்றிருந்த படியை நீர் அடைந்து அவன் முழங்காலுக்கு எழுந்தபோது அவன் பின்பக்கம் படிகளில் ஏறி விலகினான். வலப்பக்கம் மீன்பிடித்துறைகளில் இருந்து சிறிய படகுகளில் மீனவர்கள் கூச்சலிட்டபடி நீரில் பாய்ந்து பெருக்கின் நடுவே சென்றனர். படகுகளில் இருந்து தட்டாரப்பூச்சியின் சிறகுகள் போல வலைகள் எழுந்து வட்டமாக நீரில் விழுந்து வளையங்களைக் கிளப்பின. நூற்றுக்கணக்கான வளையங்கள் ஒன்றுடனொன்று முட்டி வடிவிழந்து அலைகளாயின.

இளநாகன் கடலுக்குள் மிகச்சிறியதாகத் தெரிந்த பீதர்கலம் ஒன்று சற்றுப் பெரிதாகிவிட்டிருப்பதைக் கண்டான். நீர்விளிம்புவரை சென்று நோக்கி நின்றான். பீதர்கலத்தின் பாய்களில் சில மட்டும் விரிந்து முன்னால் புடைத்து நின்றன. அதன் தீபமுகத்தில் இருந்த பெரிய கொம்பு பலர் சேர்ந்து அழுத்திய துருத்தியால் ஊதப்பட்டு யானைபோலப் பிளிறியது. அணுக அணுக அதன் செந்நிறவண்ணம் பூசப்பட்ட பன்னிரு அடுக்குகளும் நூறு பாய்மரத் தண்டுகளும் முகப்பில் வெண்ணிறப்பற்கள் தெரிய விழிஉருட்டி இளித்த யாளிமுகமும் தெளிவடைந்தபடியே வந்தன. அதன் மேல்தட்டில் நின்ற கடலோடிகளின் செந்நிறத் தலையணிகளும் வெள்ளை ஆடைகளும் துலங்கின.

அருகே வரும்தோறும் அது எத்தனைபெரிய கலம் என்று தெரிந்து இளநாகன் வியந்து நின்றான். மாபெரும் மாளிகை எனத் தெரிந்த அது அணுகும் தோறும் குன்றில் பரவிய பெருநகர் போல மாறியது. நகரம் ஒன்று கனவிலென மிதந்து அணுகியது. அதன் மேல் பறந்த யாளிமுகம் பொறிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான கொடிகள் வண்ணப் பறவைக்கூட்டங்கள் போலச் சிறகடித்தன. மீன்நெய்யும் அரக்கும் சுண்ணமும் சேர்த்துப்பூசப்பட்ட அதன் விலாவிரிவு இருள்போல பார்வையை மறைத்தது. அருகே வந்தபின்னர்தான் அது அலைகளில் ஆடுவதைக் காணமுடிந்தது.

மேலும்மேலுமென நெருங்கிவந்த பீதர்கலம் பாய்களைச் சுருக்கிக்கொண்டு மீண்டும் கொம்பொலி எழுப்பியது. அதன் விலா மலைப்பாறை என தலைக்குமேல் எழுந்து திசையை மூடியது. மிகமெதுவாக அது அணுகி வந்தபடியே இருந்தது. துறைமேடையை முட்டி உடைத்துவிடுமென்ற அச்சத்தை இளநாகன் அடைந்த கணம் அதன் மறுபக்கம் நான்கு பெரிய பாய்கள் விரிந்தெழுந்து அதை அசைவிழக்கச்செய்தன. கலத்திலிருந்த நூற்றுக்கணக்கான பீதர்கள் கூச்சலிட்டபடி பாதாளநாகம்போல தடித்திருந்த பெரிய வடங்களை இழுத்து நீரிலிட்டனர். அவற்றுடன் இணைக்கப்பட்ட சிறிய வடங்களை படகில் சென்றவர்கள் பற்றிக்கொண்டு கரைக்குக் கொண்டுவர அவற்றை கரையிலிருந்த சக்கரங்களில் பிணைத்தனர் பொறிச்சிற்பிகள்.

அச்சக்கரங்களை யானைகள் இழுத்துச் சுழற்ற வடங்கள் மேலேறி இறுகின. வடங்கள் இறுகி முனகியபோது கலம் மெல்ல அசைந்து அணுவணுவாக நெருங்கி வந்து அலைகளில் ஆடி நின்றது. அது ஆடுகிறதென்று எண்ணும்போது மட்டுமே அதன் ஆட்டம் கருத்தை அடைகிறது என்பதை இளநாகன் கண்டான். சிற்பிகள் ஆணைகளைக் கூவ யானைக்கூட்டங்கள் வேறு சில இரும்புச்சக்கரங்களை சுழற்றத்தொடங்கின. கனத்த தடிகளாலான துறைமுகப்பு இரு பாலங்களாக மெல்ல நீண்டு பீதர்கலத்தின் அடித்தளத்தைத் தொட்டு இணைந்துகொண்டது. பீதர்கலத்தின் வாயில் திறந்ததும் காவல்மாடங்களில் முரசுகள் ஒலிக்க கொடிகள் சுழன்றன. பாலங்களில் ஒன்றின் வழியாக எறும்புகள் போல எருதுகள் இழுத்த வண்டிகள் பீதர்கலத்துக்குள் நுழையத்தொடங்கின.

உதர்க்கர் “அங்கே அடுத்த கலம் கிளம்பிவிட்டது” என்றார். “தெற்கே இத்துறையில்தான் பீதர்கலங்கள் அதிகமாக வருகின்றன என்கிறார்கள். அவர்கள் விரும்பும் நெல் இங்குதான் குவிந்துள்ளது.” இளநாகன் மீண்டும் அந்த பீதர்களின் கலத்தைப் பார்த்தான். நூற்றுக்கணக்கான மூங்கிலேணிகள் கீழிறங்க அவற்றிலிருந்து பீதர்கள் சிரித்துக்கொண்டும் கூச்சலிட்டுக்கொண்டும் சிலந்திக்கூட்டங்கள் போல இறங்கி துறைமேடையில் குதித்து தங்கள் தளர்வான உடைகளை உதறிக்கொண்டு கைகால்களை விரித்தும் சுருக்கியும் துள்ளிக்குதித்தும் மகிழ்ந்தனர்.

“இரவாகிவிட்டது. இன்னும் வெம்மை அணையவில்லை” என்றான் இளநாகன். “சாலிவாகனநாடு கொடுவெயிலுக்கு புகழ்பெற்றது” உதர்க்கர் சொன்னார். “இங்கே வருடத்தில் நான்கு மழைதான். ஆகவேதான் நெல்லை அச்சமில்லாமல் வெறும் வானுக்குக் கீழே அடுக்கி வைக்கிறார்கள்.” வெயில் பொழிந்த மேகமில்லாத வானத்தை ஏறிட்டுநோக்கி “உயர்ந்த கள்ளால் கொண்டாடப்படவேண்டிய இனிய வெம்மை” என்றார். இளநாகன் நகைத்து “ஆம் ஐயமே இல்லை” என்றான்.

அவர்கள் நகருக்குள் நுழைந்தனர். ராஜமகேந்திரபுரி பெருவணிகர்களின் நகரம். அவர்களின் மாளிகைகள் ஒன்றுடன் ஒன்று தோள்முட்டி வெள்ளையானைநிரை போன்று நின்றுகொண்டிருந்தன. மாளிகைகளின் மேல் வேயப்பட்டிருந்த கூரை வளைந்து வளைந்து வெயிலில் ஒளிவிட்டது. “அரக்காலான கூரைகளா?” என்றான் இளநாகன். “இந்நகரில் பாரதவர்ஷத்தின் பொருட்களைவிட பீதர்களின் பொருட்களே மிகை. அது பீதர்நாட்டு வெண்களிமண்ணாலான ஓடு. அவற்றை இல்லங்களில் பதிப்பதே ஒருவனை பெருவணிகனெனக் காட்டும்” என்றார் உதர்க்கர். “அவை வெண்கலத்துக்கும் செம்புக்கும் நிகரான விலைகொண்டவை.”

வணிகர்களின் இல்லங்களின் முகப்பில் பீதர்நாட்டுக் களிமண் சிலைகள் வளைந்துவளைந்து பரவிய வண்ண உடைகளில் பொன்னிற அணிப்பின்னல்களும் உருண்டுதெறித்த விழிகளும் திறந்த வாய்க்குள் பெரிய பற்களுமாக நின்றிருந்தன. “பீதர்களின் பூதங்கள் வல்லமை மிக்கவை என்கிறார்கள். ராஜமகேந்திரத்தின் வணிகர்களின் கருவூலத்தை அவைகளே காக்கின்றன.” வணிகர்களின் வீட்டு முகப்பில் பீதர்களின் யாளிகள் வாய்திறந்து வளைந்து வெருண்டு நோக்கின.

பீதர் இனத்துப் பணியாளர்கள் பெரிய ஆடைகளுடன் ஆடியாடிச் சென்றுகொண்டிருந்தனர். “இவர்கள் பீதர்நாட்டவரல்ல. கிழக்கே கடாரத்திலும் சாவகத்திலும் மணிபல்லவத்திலும் இருந்து பீதர்களால் பிடிக்கப்பட்டு அடிமைகளாக கொண்டுவந்து விற்கப்பட்டவர்கள். எத்தனை வருடமிருந்தாலும் நம் மொழிகளை இவர்கள் கற்றுக்கொள்வதில்லை என்பதனால் மந்தணம் காக்க முடியும்” என்றார் உதர்க்கர். “ஆனால் அவர்களின் பெண்டிர் காக்கும் மந்தணங்கள் பத்துமாதங்களிலேயே வெளிப்பட்டுவிடுகின்றன.”

ராஜமகேந்திரபுரியின் வணிகவீதி பீதநாட்டின் வீதிபோலவே தோன்றியது. பீதர்களின் குதிரைவண்டிகள். அவர்களின் அகலமான படைக்கலங்கள். அவர்கள் மட்டுமே பூசிக்கொள்ளும் குருதிநிறமான சுவர் வண்ணங்கள். பெருவீதியில் இருந்து பிரிந்துசென்ற சிறிய வினைவலர் வீதிகளில் மக்கள் நெருக்கியடித்துக்கொண்டிருந்தனர். “பீதர்கலங்கள் வரும்நாள் இங்கே மக்கள் கள்ளைத்தவிர எதையும் அருந்துவதில்லை” என்றார் உதர்க்கர். “சாலிவாகன நாடெங்குமிருந்து பரத்தையர் இங்கே வந்து கூடிவிடுவார்கள். திரும்பிச்செல்லும்போது உடலெங்கும் பொன் சுமந்திருப்பார்கள்.”

இளநாகன் நகைத்து “பீதர் குழந்தைகளும் பொன்போன்றிருக்குமே” என்றான். உதர்க்கர் அவனிடம் குரல் தாழ்த்தி “அதற்கு தேனைப் பயன்படுத்தலாமென இப்பரத்தையர் கற்றிருக்கிறார்கள். இங்கே கள்ளுக்கு நிகராக தேனும் விற்கப்படுவது அதனாலேயே” என்றார். “நல்லவேளை அதற்கு கவிதையை பயன்படுத்தலாமென எவரும் கண்டறியவில்லை” என்று இளநாகன் உரக்க நகைத்தான்.

அவர்கள் மையச்சாலையில் இருந்து பக்கவாட்டில் திரும்பி சிறிய சாலைக்குள் சென்றனர். அதிலிருந்தும் வழிகள் பிரிந்துசென்றுகொண்டே இருந்தன. பல நிற மக்கள் தோளோடு தோள் நெருக்கிச் சென்றுகொண்டிருந்த ஊடுவழிகளில் வெயிலுக்காக தலைக்குமேல் பெரிய பனைமரத்தட்டிகளைக் கட்டியிருந்தனர். தரை அவ்வப்போது நீர் தெளிக்கபப்ட்டு ஈரமாக்கப்பட்டமையால் குளிர்ந்திருந்தது. வணிகர்கள் இருபக்கமும் சின்னஞ்சிறுகடைகளுக்குள் பலவகையான பொருட்களுடன் அமர்ந்துகொண்டிருந்தனர்.

அங்கிருந்த அனைத்துக்கட்டிடங்களும் பனையால் ஆனவை என்பதை இளநாகன் கண்டான். பனைமரத்தடிகளை நட்டு பனைநாரையும் ஓலைகளையும் கொண்டு முடையப்பட்ட தட்டிகளால் சுவர் எழுப்பியிருந்தனர். பனைமரதடியை பிளந்து அடுக்கி பனையோலை வேயப்பட்ட கூரைகள். பனைமட்டையாலான இருக்கைகள். கதவுகள் கூட இரண்டு அடுக்குப் பனையோலையால் ஆனவை. கூடைகள், பீடங்கள், கலங்கள் என கண்ணுக்குப்பட்ட அனைத்துப்பொருட்களும் பனையால் ஆனவையாக இருந்தன.

பீதவணிகர்களின் சிறுகுழு ஒன்று காற்றில் எழுந்து படபடக்கும் பெரிய அங்கிகள் அணிந்து உரக்கப்பேசிக்கொண்டு சென்றது. எப்போதும் முதுகில் எடைசுமந்து செல்பவர்கள் போன்ற நடை. பீதர்களைக் கடந்து சென்றபோது அவர்களில் முதியவர் தோல்சுருங்கி அடர்ந்த இடுங்கிய கண்களுடன் சிரித்து செம்மொழியில் “நலமான நாள் சூதர்களே” என்றார். “ஆம் பீதர்கள் இன்று நிலம் தொட்டிருக்கிறார்கள். சூதர்களுக்கு மது வழங்கிக் கொண்டாடவிருக்கிறார்கள்” என்றார் உதர்க்கர். “ஆம், ஆம்” என்று முதியபீதர் உடம்பை வளைத்து சிரித்தபடி சொன்னார்.

பெரிய மண்குடங்கள் ஈரமணல் குவைகளின் மேல் உடல் குளிர்ந்து கசிய வாய் நுரைத்து வழிய அமர்ந்திருந்த பெருங்கள்சாலை கரிய பனைத்தடித்தூண்களின் மேல் அமர்ந்த பனையோலைக்கூரையால் கவிழ்க்கப்பட்டிருந்தது. மணல்தரையில் பனைமரத்தடிகளை மூங்கில்களால் இணைத்துப் போடப்பட்ட இருக்கைகளை நிறைத்தபடி அந்நேரத்திலும் மகிழ்நர்கள் கூடியிருந்தனர். அனைவரும் உரக்கப் பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் உள்ளே நுழைந்ததும் “பீதர்கள்!” என ஒரு மகிழ்நன் எழுந்து கை தூக்கி கூவ பிறர் திரும்பி நோக்கி ‘ஓ!’ என குரலெழுப்பி வரவேற்றனர். பீதர்களும் கைகளைத்தூக்கி அவர்களை வாழ்த்திச் சிரித்தனர்.

குளிர்ந்த மண்மொந்தைகளில் நுரைத்து எழுந்த பனங்கள்ளை தங்கள் கைகளாலேயே வாங்கி முதலில் சூதர்களுக்கு அளித்தனர் பீதர். “இனியது… மிக இனியது” என்றார் முதுபீதர். “பனை ஒரு பாதாள நாகம். நாம் அருந்துவது அந்தக் கருநாகத்தின் இனிய விஷம்” என்றார் உதர்க்கர். முதுபீதர் “அந்த மரத்தை நான் பார்த்திருக்கிறேன்” என்றார்.

“கேளுங்கள் வணிகரே, முன்பொருகாலத்தில் தென்திருவிடத்தில் வான்பொய்த்து பெரும் பஞ்சம் வந்தது. உயிர் வறளும் தாகத்தால் தவித்த குரங்குகள் பாம்பின் உடல் ஈரமானது என்று எண்ணி நாவால் நக்கிப்பார்த்தன என்று அப்பஞ்சத்தைப்பற்றி கவிஞர்கள் பாடுகிறார்கள். அன்று அடிமைக் குலத்தைச் சேர்ந்த விரூபை என்னும் கணவனை இழந்த தாய் தன் பன்னிரு குழந்தைகளுடன் பசியால் வாடினாள். அவளுடைய முலைகள் சுருங்கி உடலுக்குள் மறைந்தன. பெற்றவயிறு வற்றி முதுகெலும்பில் ஒட்டியது.”

பசியால் துடித்து இறந்துகொண்டிருந்த குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு அவள் காட்டுக்குள் சென்று அங்கே இருந்த ஒரு பாழும்கிணற்றில் அக்குழந்தைகளைத் தள்ளினாள். அந்தக் கிணறு காளராத்ரி என்று அழைக்கப்பட்ட பாதாள வாயில் என அவள் அறிந்திருக்கவில்லை. அவள் ஒவ்வொரு குழந்தையாகத் தூக்கி கிணற்றிலிட்டபோது அவை நீராக நிறைந்திருந்த அகால இருளில் விழுந்து கணநேரத்தில் கோடானுகோடி காதங்களைக் கடந்து அரவரசனாகிய வாசுகியின் கோட்டை வாயிலில் சென்று விழுந்தன. திகைத்தபடி நாகங்கள் சென்று செய்தி சொல்ல வாசுகி பெருஞ்சுருள்களாக எழுந்து அக்குழந்தைகளைப் பற்றிக்கொண்டான். அப்போது அவ்வன்னையும் வந்து அவன் மேல் விழுந்தாள்.

வாசுகி அன்னையிடம் அவள் வந்திருக்குமிடம் இருளுக்கு முடிவில்லாமையென்னும் பொருள் அளிக்கப்பட்டிருக்கும் பாதாள உலகம் என்று சொன்னான். “திரும்பிச்செல் அன்னையே. இங்கு நீ வாழமுடியாது” என்றான். “நான் திரும்பிச்செல்லமுடியாது. மண்ணுலகில் நான் வாழ ஏதுமில்லை. இந்த இருள்வெளியிலேயே வாழ்கிறேன். நீங்கள் என்னை திருப்பி அனுப்பினாலும் மீண்டும் இங்கேதான் வருவேன்” என்று அன்னை கண்ணீர்விட்டாள். “அன்னைவிழிமுன் மைந்தர் இறப்பதை விட பெரிய இருள் ஏதும் பாதாளத்தில் இல்லை அரவரசே” என்றாள்.

தலைகீழ்விண்ணகங்களின் பேரரசன் கனிந்தான். “அடைக்கலமென என் முன் விழுந்த உன்னை கைவிட நான் ஒப்பமாட்டேன். உன் மைந்தர் பசியகற்ற ஆவன செய்கிறேன்” என்றான். “என் முன் பசியோடிருக்கும் அனைத்துக்குழந்தைகளுக்கும் அமுதளித்தபின்னர் இறுதியாகவே நான் என் மைந்தருக்கு ஊட்டுவேன். பசித்துப்பார்த்திருக்கும் குழந்தைகளுக்கு முன் வைத்து என் மைந்தருக்கு உணவூட்டுவது தாய்மைக்கு அறமல்ல” என்றாள் அன்னை. “…ஆனால் நீ உன் குழந்தைகளை மட்டுமே என் காலடிக்கு அனுப்பினாய்” என்றான் வாசுகி. “ஆம், அன்னையென எனக்கு கொல்லும் உரிமை என் குழந்தைகளிடம் மட்டுமே. ஊட்டும் பொறுப்போ அனைத்துக்குழந்தைகளிடமும். என் கண்ணெதிரே இன்னொரு மகவு பசியால் இறக்கக் கண்டால் என் முலைகளில் அனலூறுகிறது” என்றாள் அன்னை.

தன் நீலமணிச் சிம்மாசனம் விட்டு எழுந்து அவளை வணங்கினான் வாசுகி. “அறவடிவமாக வந்து நிற்கும் அன்னையரால் வாழ்த்தப்பட்டு மன்னர்களின் மணிமுடி ஒளிகொள்கிறது தாயே. இதோ என் நாகங்களில் இரண்டை உனக்காக மண்ணுக்கு அனுப்புகிறேன். அவர்கள் உன் குலத்தை ஒருபோதும் பசிக்க விடமாட்டார்கள். வான் பொய்த்தாலும் மண் பொய்த்தாலும் தான் பொய்க்காமல் உங்களைக் காப்பார்கள். குருதி வற்றினும் கருணை வற்றா உன் முலைகள் போல என்றும் சுரப்பார்கள்” என்றான்.

வாசுகியின் ஆணைப்படி இருளுக்குள் பல்லாயிரம் யோசனைத் தொலைவுக்கு கரிய பேராறுபோல நீண்டு நெளிந்து கிடந்த தாலை, மகிஷை என்னும் இரு நாகங்களும் மண்ணைப் பிளந்து வெளியே தலைநீட்டின. பாற்கடலில் அமுதுடன் எழுந்து வந்தவை வற்றா அமுதூட்டும் காமதேனு எனும் பசுவும் கல்பகம் என்னும் மரமும். மண்ணில் தவம்செய்த மாமுனிவர்கள் அவற்றின் நிழல்வடிவமாக இங்கிருந்த விலங்குகளிலும் மரங்களிலும் இருந்து உருவாக்கிக்கொண்டவை பசுவும் தென்னைமரமும். அவை மானுடர்க்கு அழிவில்லாமையை உணவாக அளித்துக்கொண்டிருந்தன.

மகிஷையும் தாலையும் விண்ணிலிருந்த அவ்விரு அமுதநிலைகளின் மாற்றுவடிவிலேயே தங்களை உருவாக்கிக் கொண்டன. கன்னங்கரிய காமதேனுவாக மகிஷை தன்னை உருவாக்கிக்கொண்டாள். அவளே எருமை என வடிவெடுத்து மண்ணை நிறைத்தவள். இருண்ட கல்பகமரமாக தாலை தன்னை முளைக்கச்செய்தாள். அவளே பனையெனும் மரமானாள்.

“விண்ணில் தேவர்களுக்கு ஆயிரம் தெய்வங்கள் இருக்கலாம். நதிகள் பாயும் மண்ணில் கொடியும் முடியும் குடியும் கொண்ட மானுடருக்கும் ஆயிரம் தெய்வங்கள் இருக்கலாம். ஆனால் மண்ணை விண்ணும் விண்ணை சொல்லும் கைவிட்ட நாடுகளில் வாழும் கோடானுகோடி எளிய மக்களுக்கு கண்கண்ட தெய்வம் எருமையும் பனையும்தான். அவர்களைப்போலவே கரியவை. கரும்பாறையென உறுதியானவை. ஒருபோதும் வற்றாதவை” என்றார் உதர்க்கர். “பேணினால் பசு. பேணாவிட்டாலும் எருமை. நீரூற்றினால் தென்னை. அனலூற்றினாலும் பனை. அன்னையும் வழித்துணையும் ஏவலும் காவலுமாகும் எருமை. வீடும் விறகும் பாயும் பையும் அன்னமும் பாலுமாகும் பனை.”

“மண்ணுக்குவந்த மாநாகங்களை வாழ்த்துவோம்! தெய்வங்கள் கண்மூடியபோதும் மூடாத கண்கள் கொண்ட அரவங்களை வாழ்த்துவோம்! உலகோரே, கேளுங்கள்! பீதர்களே, இந்த மண் வெண்ணிறத்தெய்வங்களால் ஆளப்படவில்லை. கரிய தெய்வங்களால் வாழவைக்கப்படுகிறது. ஒவ்வொரு துயருற்ற மனிதனுக்கருகிலும் கன்னங்கரிய தெய்வமொன்று பேரருளுடன் வந்தமர்கிறது. அநீதியிழைக்கப்பட்டவன் கண்ணீரை அது துடைக்கிறது. வஞ்சத்தில் எரிபவனை அது ஆரத்தழுவிக்கொள்கிறது.”

“கரியதெய்வங்களே, நீங்கள் மானுடரை கைவிடுவதில்லை. நீங்கள் என்றென்றும் வாழ்க!” உதர்க்கர் சொன்னபோது அந்தக் கள்சாலையில் இருந்த அனைவரும் எழுந்து கைகூப்பினர். “கருநாக விஷம் கனிந்த கள்ளை வாழ்த்துவோம். ஆன்மாவில் ஊறி நெளிந்தோடும் ஆயிரம் கனவுகளை வாழ்த்துவோம்” என்றார் உதர்க்கர். பீதர்கள் கைகளைத்தூக்கி ஆர்ப்பரிக்க அந்தக் கள்சாலைக்கு வெளியே சாலைப்போக்கர்கள் அனைவரும் திரும்பி நோக்கி புன்னகைத்தபடி கடந்து சென்றனர்.

கள்மயக்கில் ஒருவரை ஒருவர் தழுவியபடி கால்கள் தளர நடந்து ஊர்ச்சத்திரத்துக்குச் செல்லும்போது இளநாகன் கேட்டான் “சூதரே, ஒவ்வொருவரையும் காத்து நிற்கும் அந்தக்கரிய தெய்வத்தை நீர் என்றேனும் பார்த்திருக்கிறீரா?” மூடிமூடிவந்த கண்களை உந்தித்திறந்து ஏப்பத்துடன் சற்று கள்ளையும் துப்பி உதர்க்கர் சொன்னார் “காணாத எவருமில்லை இப்புவியில். அதை நாம் அன்னை என்றழைக்கிறோம்.”

முந்தைய கட்டுரைபின் தொடரும் நிழலின் குரல் -இலட்சியவாதத்தால் கைவிடப்படுதல்
அடுத்த கட்டுரைபெண்ணியமும் வெண்முரசும்