‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 35

பகுதி ஆறு : அரசப்பெருநகர்

[ 10 ]

தங்கள் பன்னிரு குழந்தைகளுடன் மாலையொளியில் விண்ணில் உலா சென்ற சுதாமன் என்னும் மேகதேவதையும் அவன் மனைவி அம்புதையும் கீழே விரிந்துகிடந்த பூமாதேவியைப் பார்த்தனர். உயிரற்று செம்பாறையின் அலைகளாகத் தெரிந்த பூமியைக் கண்டு அம்புதை “உயிரற்றவள், தனித்தவள்” என்றாள். “இல்லை அவள் ஆன்மாவில் சேதனை கண்விழித்துவிட்டது. உயிர் எழுவதற்கான பீஜத்துக்காக தவம்செய்கிறாள்” என்று சுதாமன் சொன்னான். “தேவா, அந்தத் தவம் கனியும் காலம் எது?” என்று அம்புதை கேட்டாள். “அதை முடிவிலா வான்வெளியை தன் உள்ளங்கையாகக் கொண்ட முழுமுதலே அறியும்” என்று சுதாமன் விடையிறுத்தான்.

அப்போது ஒருவரை ஒருவர் பிடித்துத் தள்ளியும் துரத்தியும் ஓடிவிளையாடிக்கொண்டிருந்த அவர்களின் குழந்தைகளில் இளையவளான குசையை மூத்தவர்களான ஜலதனும் முதிரனும் பிடித்துத்தள்ள அவள் தன் சிறகுகளின் சமநிலையை இழந்து கீழே விழுந்தாள். பிற குழந்தைகள் கூச்சலிட்டதைக் கண்டு சுதாமனும் அம்புதையும் திரும்பிப்பார்க்கையில் வெண்ணிற இறகுபோல மிக ஆழத்திற்குச் சென்றுகொண்டிருக்கும் குசையைக் கண்டனர். அம்புதை கீழே சென்று குழந்தையை மீட்டுவர எண்ணியபோது சுதாமன் அவள் கையைப்பிடித்து “நிலத்தை அடைந்ததுமே அவள் நீர்த்துளியாகப் பரவி மறைந்திருப்பாள். இனி அவளை மேகமாக மீட்க முடியாது” என்றான்.

கண்ணீர்த்துளிகள் சிந்த தாயும் உடன்பிறந்தாரும் விண்ணில் நின்று கீழே நோக்கினர். மண்ணில் விழுந்த குசை பல்லாயிரம் நுண்ணிய நீர்த்துளிகளாக மாறி அந்தியின் செவ்வொளியின் தங்கத்துருவல்களாக மிதந்து மண்ணைநோக்கி இறங்கினாள். அத்திவலைகள் வந்து தொட்டபோது பூமியின் உடல் சிலிர்த்துக்கொண்டது. கீழைவான் சரிவில் எழுந்த பிரம்மத்தின் இடிக்குரல் ‘த- தாம்யத – தத்த – தயத்வ!’ என்று முழங்கியது. அந்தக்கணம் நிகழ்ந்ததை அறிந்து விண்ணிலெழுந்த தேவர்கள் வாழ்த்தொலி எழுப்பினர்.

தன் மகளைப் பார்ப்பதற்காக மீண்டும் வானுக்கு வந்த அம்புதை பல்லாயிரம் பசுமுளைகள் மண்ணைக்கீறி வெளியே எழுந்திருப்பதைக் கண்டாள். அவளைத்தொடர்ந்து வந்த சுதாமன் அவள் தோளைப்பற்றியபடி “அவள் உன் கருவில் உதித்தவள். பூமாதேவியின் அறப்புதல்வி. மண்ணில் அவள் முடிவிலாது பெருகுவாள்” என்றான். அம்புதை தன் இரு வெண்சிறகுகளையும் விரித்து கடலை நோக்கிச் சென்றாள். அங்கே கருமைகொண்டு அலையடித்த நீர்வெளியில் இருந்து தன் சிறகுகளால் நீரை மொண்டு வானிலெழுந்து தன் மகள்மீது பொழிந்தாள். அவளுடைய துணைவனும் பதினொரு மைந்தர்களும் தங்களுக்கு இனியவளான குசைக்கு இரவும் பகலும் முறைவைத்து நீரூற்றினர்.

குசை மண்ணில் புல்லிதழ்களாக எழுந்தாள். பச்சைக்கரங்களை வான் நோக்கி விரித்து வெய்யோன் விடுத்த அமுதை வாங்கி உண்டாள். அவள்மேல் அன்னையும் சோதரர்களும் பெய்த பேரன்பு நீர்த்துளிகளாகத் தங்கி ஒளிவிட்டது. வேர்களில் ஊறி உடலெங்கும் ரசமாயிற்று. தன் முழு உயிராற்றலாலும் அவள் விண்ணுக்கு ஏறிவிட முயன்றாள். மேலும் மேலுமென கைநீட்டித் தவித்தாள். இரவின் இருள்வெளிக்குள் கீழை வான்வெளியில் எழுந்த இடியோசை அவள் செவியில் முதல் மந்திரத்தை அருளியது.

‘தாம்யத’ என்னும் சொல்லை அவள் கற்றுக்கொண்டாள். ’அமைக!அமைக!அமைக!’ என்று தன்னுள் சொன்னபடி அவள் ஊழ்கத்திலாழ்ந்தாள். வானோக்கி எழும் அவள் விருப்பு அங்கே நின்றது. அந்த ஊழ்கத்தின் இன்பம் அவளில் வெண்மலர்க்கொத்துகளாக பூத்தெழுந்து காற்றில் குலைந்தாடியது. அப்போது நடுவானில் எழுந்த இடியோசை இரண்டாவது அகச்சொல்லை அவளுக்கு அளித்தது. ‘தத்த!’. அவள் அச்சொல்லையும் தன்னுள் நிறைத்துக்கொண்டாள். ‘அளி! அளி அளி!’ என்று சொல்லச்சொல்ல அவள் அகம் கனிந்து ஊறிய கருணை அந்த மலர்க்கொத்துகளின் மணிகளில் பாலாகியது.

பின்னர் மேலைவானில் எழுந்த மூன்றாவது இடியோசை அவளுக்கு இறுதி அகச்சொல்லை வழங்கி முழுமைசெய்தது. ‘தயத்வ!’. அவள் தன் பல்லாயிரம் கதிர்மணிகளால் தலைதாழ்த்தி அச்சொற்களை ஏற்றுக்கொண்டாள். ‘கருணை! கருணை! கருணை’ என நீண்ட அந்தத் தவம் அவற்றை விதைகளாக்கி மண்ணில் பரப்பியது. பச்சைப்பெருங்கம்பளமாக மாறி குசை பூமியை உரிமைகொண்டாள். விண்ணிலெழுந்த தேவர்கள் கீழே பூமாதேவி பச்சைநிறமாக விரிந்திருப்பதைக்கண்டு மகிழ்ந்து புன்னகைசெய்தனர்.

குசையின் நூறாயிரம்கோடிக் குழந்தைகள் பூமிப்பெருவெளியை நிறைத்தனர். அவர்களனைவரிலும் சேதனையாக நிறைந்து அவள் வானைநோக்கி விரிந்திருந்தாள். விரிந்து விரிந்து பூமியை முழுமையாக நிறைத்து அவள் அசைவிழந்தவளானாள். தன் உடலால் தானே கட்டுண்டவளாக கோடிவருடகாலம் அப்படியே கிடந்தாள். விண்ணில் உலாவந்த சுதாமனும் அம்புதையும் பதினொரு மைந்தர்களும் அவளைக் கண்டு “ஏன் துயருற்றிருக்கிறாய் குழந்தை?” என்று வினவினர். “அன்னையே, கணந்தோறும் உருமாறும் மேகங்களின் புதல்வி நான். இங்கே கரும்பாறைகள் போல் அசைவிழந்திருக்கிறேன்” என்றாள் குசை.

“மண்ணை அடைந்து குளிர்ந்ததுமே நீ உன்னை மறந்துவிட்டாய் மகளே” என்று சுதாமன் சொன்னான். “ஆன்மாவில் அனலும் சிறகுகளில் நீரும் கொண்ட விண்மேகம்தான் நீயும். உன்னுள் உறங்கும் எரியை நீயே காண்பாய்.” குசை தன் வேர்களைச் சுருக்கிக்கொண்டு இலைகளை ஒடுக்கிக்கொண்டு நீரைத் தவிர்த்து தவம்செய்தாள். அவளுடைய பசிய உடல் வற்றி பொன்னிறமாகியது. காற்றில் அவள் அசைந்தபோது வாள்கள் போல தாள்கள் உரசிக்கொண்டன. பின் அந்தியில் சுடரும் மேகம்போல அவள் அனல்வண்ணம் கொண்டாள்.  ‘நானே எரி’ என அவள் உணர்ந்த கணத்தில் பற்றிக்கொண்டாள். விண்ணிலெழுந்த வானவர்கள் மண்ணில் விரிந்த எரிவெளியைக் கண்டு அந்தி வானம் சரிந்துவிட்டதென்ற எண்ணத்தை அடைந்தனர்.

எரிந்தழிந்த சாம்பல்வெளியில் குசை வேர்களாக மண்ணுக்குள் இருந்தாள். ‘நான் நீர்’ என அவள் உணர்ந்தபோது வேர்களில் வாழ்ந்த உயிர் தளிர்களாக மேலெழுந்தது. மீண்டும் நீரை உண்டு வானைப் பருகி அவள் பசுமைவெளியானாள். எரி என உணர்கையில் எரிந்தும் நீர் என உணர்கையில் முளைத்தும் அவளுடைய லீலை தொடங்கியது. அவள் இளந்தளிர்களில் வெயில்படுகையில் நீரும் நெருப்பும் ஒன்றென ஆகி அவை ஒளிவிட்டன.

கங்கைக்கரைச் சதுப்பில் தன் சிறகுகளை விரித்து மாலைக் காற்றிலாடி நின்றிருந்த குசை தன் வழியாக ஊடுருவிச்செல்லும் துரோணரைக் கண்டாள். அவர் கையிலிருந்த தர்ப்பையை தன் மெல்லிதழ்களால் தொட்டாள். அவர் நடந்த காலடிகளில் புல்லிதழ்கள் அழுந்தி எழுந்தன. அன்புடன் கைநீட்டி அவர் உடலை வருடி வருடி வளைந்தன. தன்னுள் எழுந்த விசையால் ஒருகணம்கூட நிற்க முடியாதவராக அவர் இருந்தார். ஒரு சொல்லில்கூட தங்கமுடியாத அகம் கொண்டிருந்தார். கூந்தல் அவிழ்ந்து தோள்களில் கிடந்தது. தாடி காற்றில் பறந்தது. சுருங்கிய கண்களில் ஈரம்பழுத்து வெண்விழிகள் சிவந்து கருவிழிகள் அலைபாய்ந்தன. உதடுகளை வெண்பற்கள் குருதிவழிய இறுகக் கடித்திருந்தன. சீறும் மூச்சில் ஒடுங்கிய நெஞ்சு எழுந்தமிழ்ந்துகொண்டிருந்தது.

துரோணருக்குப் பின்னால் இருந்த மாலைவெயிலில் முன்னால் நீண்டு விழுந்த செந்நிழல் மடிந்து எழுந்து ஒரு மனிதராயிற்று. செந்நிறப்பிடரிமயிர் பறக்க செந்நிறத்தாடி மார்பில் அலையடிக்க ஊருவர் எரிவிழிகளுடன் கையில் தர்ப்பையுடன் நின்றார். “நான் பிருகுகுலத்து ஊருவன். புல்நுனியை தழலாக்கியவன்” என்று அவர் சொன்னார். துரோணர் அடுத்த அடிவைக்க ருசீகர் தீச்சுடர் ஆடும் நீர்மணிகள் போன்ற விழிகளுடன் எழுந்து “நான் பார்க்கவ ருசீகன். அணையமுடியாத அழலை ஏந்தியவன்” என்றார். அந்நிழலின் நிழலென ஜமதக்னி எழுந்து வந்தார். “அனலைச் சொல்லாக்கி ஊழ்கத்திலமர்ந்தவன். என்பெயர் பார்கவ ஜமதக்னி” என்றார். அவருக்குப்பின்னால் குருதிபடிந்த மழுவுடன் எழுந்தவர் “எரியெனும் புலித்தோலில் அமர்ந்த யோகி நான். என்பெயர் பரசுராமன்” என்றார்.

புல்லசையாமல் பின் தொடரும் நிழல்களுடன் துரோணர் நிற்காமல் சென்றுகொண்டிருந்தார். தன் விரித்த உள்ளங்கையில் ஊர்ந்துசெல்லும் அச்சிற்றெறும்பை திகைத்த விழிகளுடன் குசை குனிந்து நோக்கிக்கொண்டிருந்தாள். ‘மகனே மகனே’ என அவள் கூவியதை அவர் மானுடச்செவிகள் கேட்கவில்லை. ஆனால் எங்கோ எவரோ தன்னை நோக்கி கூவுவதை அவர் ஆன்மா உணர்ந்துகொண்டிருந்தது. இறுகப்பற்றிய உள்ளங்கைத் தசையில் நகங்கள் குத்தியிறங்க எரிகல் வான்வளைவில் சரிவதுபோல அவர் சென்றார்.

அவர் முன் விழுந்த நிழல் சிதைந்த உருக்கொண்ட கரியமுனிவராக எழுந்து நின்றது. துயர்படிந்த விழிகளுடன் “என்னை ததீசி என்கின்றன புராணங்கள். முன்பு விருத்திராசுரனைக்கொல்ல படைகொண்டெழுந்த இந்திரனுக்கு நான் என் முதுகெலும்பை அளித்தேன். ஆயிரம் வருடம் என் முன்னோர் காயும் கனியும் தின்று மண்ணிலெவருக்கும் குடிமைசெய்யாது காட்டில் வாழ்ந்து வைரமாக்கிக்கொண்ட முதுகெலும்பு அது. தேவர்கள் அசுரரை வென்றதும் அதை மண்ணில் வீசினர். வைரம்பாய்ந்தவை ஒருபோதும் மட்குவதில்லை” என்றது.

உடலில் பாய்ந்த இரும்புத்தண்டுடன் இன்னொரு நிழல்வடிவம் எழுந்து நின்று “ஆணிமாண்டவ்யர் என்று என்னை சொல்கிறார்கள். என் தவத்தால் நான் கழுவிலேற்றப்பட்டேன். முறியாத கழுவுடன் உயிர்த்தெழுந்தேன். என் உடலில் இருந்து இக்கழு விலகாதவரை எனக்கு வீடுபேறில்லை என்றனர் விண்ணவர்” என்றது. “இதயத்தில் பாய்ந்த இந்தக் கழுவை நான் செரித்துக் கரைத்து உடலாக்கிக் கொள்ளவேண்டும். குருதியின் உப்பாலும் கண்ணீரின் உப்பாலும் இதை அரித்துக்கொண்டிருக்கிறேன்.”

ஆட்டுத்தலையுடன் எழுந்துவந்த ஒருநிழல் பெருமூச்சுவிட்டது. “நான் தத்யங்கன். பேரின்ப ஞானத்தைப் பெற்றமையாலேயே சிரமறுக்கப்பட்டேன். காடுமுழுமையும் தேர்ந்து கதிர் உண்ட நான் அனைத்தையும் உண்ணும் வெள்ளாட்டின் தலைபெற்றேன்.”

நிழல்களிலிருந்து எழுந்து வந்தபடியே இருந்தனர் மண் மறைந்தவர்கள், அனலடங்காதவர்கள், தனியர்கள். பத்து நூறு பல்லாயிரமெனப் பெருகிச்சென்றனர் காலகாலங்களாக வஞ்சமிழைக்கப்பட்டு புதைக்கப்பட்டவர்கள். அநீதியின் சிதைமேல் எரிந்தவர்கள். துரோகத்தின் கழுவில் அமரவைக்கப்பட்டவர்கள். மறதியால் மூடப்பட்டவர்கள். சூதர்களால் மாறுவேடமிடப்பட்டவர்கள். இருண்டுவந்த அந்தியில் அவர்களின் நிழல்கள் இணைந்தும் பிரிந்தும் நடனமிட்டன.

இருளுக்குள் நடந்துகொண்டிருந்த அவர் முன் அலையடிக்கும் பசுந்தளிர் ஆடையும் விரிந்துகாற்றிலாடும் வெண்மலர்க்கொத்து போன்று கூந்தலுமாக குசை வந்து நின்றாள். “நில், மகனே!” என்றாள். அவள் முகத்தையும் தோற்றத்தையும் துரோணர் முன்பு கண்டிருக்கவில்லை என்றாலும் அவள் மணத்தை அறிந்து அவரது அகம் சிலிர்த்து அசைவிழந்தது. “யார்?” என்று நடுங்கும் குரலில் கேட்டார். “உன் அன்னை. கருவுற்ற மடியை நீ அறிந்ததில்லை. நீ விழுந்து எழுந்து வளர்ந்தது என் மடியில். நீ முகம் மறைத்து விளையாடியது என்கூந்தல்கற்றைகளில். மார்புடன் அணைத்துத் துயின்றது என் ஆடைநுனியை. என்றும் உன் கையில் இருக்கும் அந்த தர்ப்பை என் சுட்டுவிரல். விண்மேகங்களான சுதாமனுக்கும் அம்புதைக்கும் மகளான என்னை குசை என்பார்கள்” என்றாள்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

தன்னையறியாமலேயே இருகைகளையும் கூப்பிய துரோணர் கால்கள் தளர்ந்து அமர்ந்து கூப்பியகரங்களுடன் முன்னால்சரிந்து அவள் மடியில் விழுந்து முகம்புதைத்தார். நாணலில் அருவி விழுந்ததுபோல அவர்மேல் அழுகை நிகழ்ந்தது. உடைந்து உடைந்து பொழிந்துகொண்டிருந்தன சொற்குவைகளனைத்தும். அவருடைய தலைமேல் அன்னையின் மெல்லிய கைகள் வருடிச்சென்றன. “அன்னையே! அன்னையே! அன்னையே!” என்று துரோணர் அழுதார். “எனக்கு எவருமில்லை. எனக்கு எவருமில்லை அன்னையே” அவர் கன்னங்களை தன் விரல்களால் வருடி குசை கனிந்த குரலில் சொன்னாள். “நான் இருக்கிறேன் மகனே. நீ பிறந்த கணம் முதல் உன்னுடன் நான் இருந்துகொண்டிருக்கிறேன்.”

“நான் இனி என்னசெய்யவேண்டும்? அன்னையே, இக்கணமே என்னை உன்னுள் அணைத்துப் புதைத்துக்கொள். இனி மானுடர் விழிகள் என்மேல் படலாகாது. இனி ஒரேயொரு மனிதனின் இளிநகையைக்கூட நான் காணலாகாது. இனி தாங்கமாட்டேன் அன்னையே. என்னைக் காத்தருள்!” கருக்குழந்தை என தன் உடலைக்குறுக்கி அவள் மென்மடியில் சுருண்டு கொண்டார். அவரது கைகால்கள் வலிப்பு வந்தவை போல அதிர்ந்துகொண்டிருந்தன. “இந்த அவமதிப்பை உன் மைந்தனுக்கு ஏன் வைத்தாய் அன்னையே? ஒவ்வொரு அவமதிப்பிலும் என் ஆன்மா எரிந்தழிகிறது. நூறுநூறாயிரம் முறை இறந்தெழுந்துவிட்டேன். போதும் தாயே.”

அவரது தலையை தன் மார்போடணைத்து கன்னத்தில் தன் மென்கூந்தலிழைகள் படும்படி குனிந்து குசை அவர் காதில் சொன்னாள் “நானறிந்ததையே உனக்கும் சொல்கிறேன் மகனே.” புல்நுனிகளை வருடிச்செல்லும் மென்காற்று என அவள் ஒலித்தாள். ‘த- தாம்யத – தத்த – தயத்வ’. கடும்வலிகொண்டவர் போல துரோணர் மெல்லப்புரண்டு அவளை நோக்கினார். ’தாம்யத’ என்று அவள் உதடுகள் உச்சரித்தன. கோல்பட்ட நாகமெனச் சினந்து தலைதூக்கி துரோணர் கூவினார். “பொறுமையா? இன்னும் பொறுக்க என்னால் இயலாது. அச்சொல் என்னை எரிக்கிறது. ஒருபோதும் முடியாது.”

அவள் அவரது குழலை வருடி இனிய துயருடன் சொன்னாள் ‘தத்த’. துரோணர் இல்லை இல்லை என தலையை அசைத்தார். “இல்லை அன்னையே. என்னிடமிருப்பவற்றை எல்லாம் கொடுத்துவிட்டேன். இனி நான் கொடுப்பதற்கேதுமில்லை. இவ்வுலகம் எனக்கு எதையும் அளிக்கவுமில்லை. என்னிடம் அச்சொல்லை மறுமுறை சொல்லவேண்டாம்.” பெருமூச்சுடன் குசை சற்றுநேரம் பேசாமலிருந்தாள். காற்று அவர்களைச் சூழ்ந்து கடந்துசென்றபோது அவளுடைய ஆடை அவர்மேல் பறந்தாடியது. கண்களை மூடியபடி படுத்திருந்த துரோணரின் இமைக்குள் விழிகள் துடித்தாடிக்கொண்டிருக்கும் அசைவை அவள் பார்த்திருந்தாள்.

பின்பு அவரது கொதிக்கும் நெற்றியில் கைவைத்து குசை சொன்னாள் ‘தயை’. துடித்து எழுந்து நின்ற துரோணர் கை நீட்டி உரக்கக் கூவினார் “யார் மீது? யார் மீது நான் கருணை காட்டவேண்டும்? என்னைப் புழுவாக்கி குனிந்து நோக்கிச் சிரிக்கும் கண்களிடமா? என் மேல் நடந்துசெல்லும் கால்களிடமா? அதையா நீ எனக்குச் சொல்கிறாய்?” வெறுப்பும் குரோதமுமாக சுளித்த முகத்துடன் மூச்சுவாங்க அவர் சொன்னார் “ஆம், நீ அதைத்தான் சொல்லமுடியும். நீ தெய்வம். தெய்வங்கள் உனக்களித்த சொற்களையே நீ சொல்வாய். தெய்வங்களால் கைவிடப்பட்டவனுக்குச் சொல்ல உன்னிடம் சொற்களில்லை. இம்மண்ணில் எவரிடமும் ஏதுமில்லை.”

கைகளை திரும்பத்திரும்ப உதறியபடி துரோணர் “போதும் போதும்” என்றார். திரும்பி நடந்த அவரை பின்னால் ஓடிச்சென்று கைகளைப்பற்றி அவள் தடுத்தாள். “மகனே, நில்! நான் சொல்வதைக் கேள்!” அவள் கையை உதறி துரோணர் சொன்னார் “விடு என்னை. இனி எனக்கு நீயும் இல்லை. இப்பிரபஞ்சத்தில் அனைத்தும் என்னை கைவிட்டுவிட்டன. இனி நான் தனியன். முடிவிலாக்காலம் வரை பாதாள இருளில் கிடக்கிறேன். என்னுள் எரியும் நெருப்பில் வேகிறேன். என் ஊனையும் நிணத்தையுமே தின்று வாழ்கிறேன்… போ!” தன் கையிலிருந்த தர்ப்பையை ஓங்கியபடி அவர் கூச்சலிட்டார் “இதோ என்னை ஒருபோதும் பிரியாத உன்னையும் உதறுகிறேன்…”

எதிரே பேருருக் கொண்டு நின்றிருந்த அன்னையின் விழிகளில் ஒரு நெருப்புத்துளி எழுந்தது. “மகனே, இப்புவியில் அன்னைக்கு மைந்தர்களன்றி தெய்வமில்லை. உன் ஒருவனின் சொல்லுக்காக மும்மூர்த்திகளையும் எரிப்பேன். சொல். நான் செய்யவேண்டியதென்ன?” அஞ்சி சற்றுப்பின்னடைந்து துரோணர் அவளைப் பார்த்தார். இடியோசையாக எழுந்து அன்னை கேட்டாள் “ஒரு வார்த்தை சொல். உனக்காக இப்புவியை அழிக்கிறேன். இந்நகரங்களும் ஜனபதங்களும் அரசுகளுமெல்லாம் என் உள்ளங்கைக் குமிழிகள்.” அவள் கூந்தல் நெருப்பலைகளாக எழுந்து பின்னால் பறந்தது. விழிகள் எரிவிண்மீன்களாகச் சுடர்விட்டன. வாய் வேள்விக்குளமென எரிந்தது.

“வேண்டாம்” என அஞ்சியபடிச் சொல்லி துரோணர் மேலும் பின்னடைந்தார். அவள் ஒளியில் அவரது நிழல்கள் பின்னால் விரிந்தெழுந்தன. ஒவ்வொருவராக தோற்றம் பெற்றெழுந்த நிழல்வடிவர்கள் மின்னும் கண்களுடன் பெருகிவிரிந்தனர். அவர்களின் ஒற்றைப்பெருங்குரல் எழுந்தது. ‘தீ! எங்களுக்குத் தீ வேண்டும்!’ துரோணர் “இல்லை… அதை நான் கோரவில்லை” என்று தடுமாறும் குரலில் சொல்ல அவரைச்சூழ்ந்து அக்குரல் மேலும் எழுந்தது. “இவனுள் ஓடும் காயத்ரிக்கு அனல்சிறகுகள் முளைக்கட்டும். அவள் தொட்ட இடங்கள் எரியட்டும்!” அன்னை “அவ்வாறே ஆகுக!” என்றாள்.

நெடுநேரம் கழித்து அந்த தர்ப்பைவயலில் இருந்து எழுந்து பெருமூச்சுடன் கங்கையை நோக்கிச் சென்றார் துரோணர். இருண்ட கங்கையின் நீர்ப்பெருக்கு அன்று அலைகளின்றி பளிங்குப்பரப்பாக இருந்தது. வானிலெழுந்த விண்மீன்களை அதில் பார்க்கமுடிந்தது. தன்னுள் எரிந்த விடாயை உணர்ந்து கரையில் மண்டிய உலர்ந்த தர்ப்பைகள் வழியாக இறங்கி வெடித்த சேற்றுப்பரப்பை அடைந்து நீரள்ளுவதற்காகக் குனிந்தார். அப்பால் ஒரு சிறு மின்மினி போல நெருப்பெழுவதைக் கண்டார். மின்னல் தரையில் நிகழ்ந்தது போல தர்ப்பைவெளி அனலாகியது. கையில் அவர் அள்ளிய நீரை நோக்கி கங்கையின் ஆழத்திலிருந்து குதிரைமுகம் கொண்ட செந்தழல் பொங்கி எழுந்தது.

முந்தைய கட்டுரைவள்ளுவரும் அமணமும்
அடுத்த கட்டுரைஓநாய்குலச்சின்னம்