அரசியலாதல்

யாராவது அரசியல் என்றாலே ஒருமாதிரி நமைச்சல் கொடுக்கிற இடத்துக்கு நம்மைக் கொண்டு வந்து சேர்த்து விட்டிருக்கிறார்கள். புரட்சிக்கும் கலகத்திற்கும் அடுத்தபடியாக சீரழிக்கப்பட்ட சொல் அது. அதைச் சொன்னாலே கட்சி கட்டி சண்டை போடுவது, எதையும் புரிந்து கொள்ள மறுத்து ஒரேப் பிடிவாதமாக நிற்பது, எதைப்பேசினாலும் ஒரே புள்ளியில் கொண்டுசென்று சேர்ப்பது என்றெல்லாம்தான் நம் அறிவுச்சூழலில் பொருள்.

அத்துடன் சிற்றிதழாளர்கள் எதற்கெடுத்தாலும் அந்தச் சொல்லை பயன்படுத்துவார்கள். ‘நீங்க சொல்றதுலே அரசியல் இருக்குங்க’, ‘இந்த கதையோட அரசியல் என்னன்னா..’ ‘அவனுக்கும் எனக்கும் நடுவிலே அரசியலுங்க’ என்றெல்லாம். என்ன சொல்ல வருகிறார்கள் என்றே புரியவில்லை. ஒருநாள் ஓர் இளம் அரிவுஜீவி ”மாஸ்டர், நல்ல அரசியலா ஒரு டீய போடுங்க” என்றார். வாய்தவறி சொல்லியிருக்கமாட்டார் என நம்புகிறேன்.

ஆகவேதான் எழுத்தாளர்கள் அரசியல் என்றாலே உதறுகிறார்கள். எனக்கும் அந்த உதறல் உண்டு. நூற்றுக்கு தொண்ணூறு அரசியல் விஷயங்களில் வாயைத் திறக்க மாட்டேன். இந்தக் குறிப்புகளையும் கட்டுரைகளையும் எனது இணையதளம் கொடுத்த கட்டாயத்தால்தான் எழுதினேன்.

என்னுடைய அரசியலென்பது எழுத்தாளனின் அரசியல். எந்த மொழியுணர்ச்சியால், வரலாற்றுணர்ச்சியால், மனிதமனங்களை அறியும் உணர்ச்சியால் நாவல்களை எழுதுகிறேனோ அதே நுண்ணுணர்ச்சிகளால்  அரசியலை புரிந்துகொள்ளவும்  எதிர்வினையாற்றவும் விவாதிக்கவும் முடியுமா என்று பார்க்கிறேன். ஆகவே அவ்வப்போதுள்ள உணர்ச்சிகள் சார்ந்து இவை வெளிப்பாடு கொள்கின்றன. அவற்றுக்குள் முரண்பாடுகள் இருக்கலாம். தெளிவின்மையும் இருக்கலாம். எழுத்தாளனிடம் தருக்கத்தை ரொம்பவும் எதிர்பார்க்கக்கூடாது.

உலகம் முழுக்க எழுத்தாளர்கள் அரசியலில் எதிர்வினையாற்றியிருக்கிறார்கள். தங்கள் அகத்தை எவை பாதிக்கின்றனவோ அவற்றுக்கு மட்டும். இவையும் அத்தகையவை மட்டுமே. என்னுடைய ஆதர்சமுன்னோடிகள் ஓ.வி.விஜயன், ஆனந்த் போன்ற மலையாள எழுத்தாளர்கள். படைப்பிலக்கியத்தையும் அரசியலையும் சேர்த்தே எழுதியவர்கள்.

‘நாய் சந்தைக்குப் போனதுபோல’ என்பார்கள் எங்களூரில், எல்லாவற்றையும் மோந்து பார்த்துவிட்டு திரும்பிவிடுவது. கிட்டத்தட்ட அரசியலில் என் ஈடுபாடு அப்படித்தான். சரி, சும்மா திரும்ப வேண்டாமே என காலைத்தூக்கி வருகைப் பதிவுசெய்த தடங்கள் இவை.

தமிழில் நான் பெரும்பாலும் ஒத்துக்கொள்ள முடியாத தரப்பை முன்வைப்பவர் ஞாநி. அரசியல் கருத்துக்களில் ஒரு வகையான படபடப்பும் அவசரமும் அவரிடமுள்ளன, வரலாற்று விரிவில் வைத்து பார்க்கும் நோக்கு குறைவு என்பது என் மதிப்பீடு. ஆனால் அவரது நேர்மையும் துணிச்சலும் என்னை எப்போதுமே கவர்பவை. அவர் ஒரு தனிநபர் இயக்கம்.

அவர் குமுதம் இதழில் நாடகம் குறித்து எழுதிய ‘ருத்ராட்சப்பூனைகளே..’ என்ற  கட்டுரையை என் பன்னிரண்டு வயதில் நான் வாசித்தேன். அந்த இதழ் பக்கமும் அவரது புகைப்படமும்கூட இன்னமும் நினைவில் இருக்கின்றன. அன்றுமுதல் கிட்டத்தட்ட முப்பத்தைந்து வருடங்களாக அவரை தொடர்ந்து கூர்ந்து வாசித்து வருகிறேன். நான் அவரது ஆராதகன் என்றி சொல்ல தயக்கமில்லை.

ஞாநிக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்கிறேன். வாசித்துவிட்டு அவர் எதிர்க்க நிறைய இருக்கிறது இதில்

‘நலம்’ சிலவிவாதங்கள்

‘சிலுவையின் பெயரால்’ கிறித்தவம் குறித்து..

‘புதியகாலம்’ சில சமகால எழுத்தாளர்கள்

‘பண்படுதல்’ பண்பாட்டு விவாதங்கள்