‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 33

பகுதி ஆறு : அரசப்பெருநகர்

[ 8 ]

ஏழுநாட்கள் கங்கை வழியாக வணிகர்களின் படகில் பயணித்து துரோணர் பாஞ்சாலத்தின் தலைநகரமான காம்பில்யத்தை வந்தடைந்தார். உத்தரபதத்தில் இருந்து பெருகி அகன்று விரியத்தொடங்கிய கங்கை அங்கே மறுஎல்லை தெரியாத நீர்விரிவாக மாறியிருந்தது. அவர் ஏறிவந்த உமணர் படகு கங்கையில் சென்றுகொண்டிருந்த பெருங்கலங்களின் அருகே சென்றபோது அவற்றின் விலாக்கள் மலைப்பாறைகள் போல செங்குத்தாகத் தலைக்கும் மேல் எழுந்துமுற்றிலும் திசையை மறைத்தன.

நூறு பாய்கள் எழுந்து புடைத்த கலங்கள் சினம் கொண்டு சிறகு சிலிர்த்தெழுந்த வெண்சேவல்கள் போலிருந்தன. அவற்றின் நீண்ட அமரத்தில் சேவலின் கொண்டைப்பூ போல செந்நிறக்கொடிகள் பறந்தன. அருகே சென்ற பெருங்கலம் ஒன்றின் கொம்பொலி நூறுயானைகள் சேர்ந்து பிளிறியதுபோல ஒலித்தது. அவரைத் திகைக்கச்செய்த ஒவ்வொரு பெருங்கலமும் அதைச் சிறியதாக்கிய இன்னொன்றை நெருங்கிச்சென்றது.

“அவையனைத்தும் வணிகப்பொருட்களால் நிறைந்தவை” என்றான் படகோட்டியான மகிஷகன். “இமயமலையடுக்குகளில் இருந்து சிற்றோடைகளனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து கங்கையாகி வருவது போல கங்கைத்தடமெங்கும் விளையும் அனைத்தும் ஆறுகள் வழியாகவும் சாலைகள் வழியாகவும் கங்கைக்கு வருகின்றன. உணவும், நெய்யும், துணியும், தோலும் என மானுடருக்குத் தேவையான அனைத்தும். அங்கே கடலோரப்பெருந்துறைகளில் இப்படகுகளை சிப்பியோடுகளாக ஆக்கும் அளவுக்கு பெரிய மரக்கலங்கள் நின்றிருக்கின்றன. ஆயிரக்கணக்கான பாய்கள் கொண்டவை அவை.” துரோணர் திகைத்த விழிகளுடன் அவன் சொற்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்.

“அனைத்துப்பொருட்களும் துறைமுகங்களில் தங்களை பொன்னாக மாற்றிக்கொள்கின்றன” என்றார் அவருடன் வந்த சூதரான கூஷ்மாண்டர். “மானுடரின் அனைத்து உணர்வுகளும் மெய்ஞானமாக ஆவதைப்போல. அந்தப்பொன்னை மீண்டும் இம்மண்ணிலுள்ள அனைத்துமாக ஆக்கிக்கொள்ள முடியும். ஆகவே பொன்னை தன் களஞ்சியத்தில் சேர்ப்பவன் இவ்வுலகிலுள்ள அனைத்தையும் சேர்த்துக்கொள்கிறான் என்கிறார்கள்.” பாய்மரத்தைப்பிடித்துக்கொண்டிருந்த மகிஷகன் “சூதரே, அந்தப் பொன் யவனநாட்டில் மண்ணுக்குள் இருந்து தோண்டி எடுக்கப்படுகிறது. கலமேறி இத்தனை தொலைவு வந்து தன்னை பொருட்களாக மாற்றிக்கொண்ட பின்னரே அது மதிக்கப்படுகிறது” என்றான்.

“அன்றொருநாள் பீதவணிகன் ஒருவன் சொன்னான். யவனத்துக்கு அப்பால் ஏதோ ஒருநாட்டில் பொன்னை உருக்கி ஊற்றி கருங்கற்களை இணைத்து வீடுகட்டுகிறார்கள் என்று” என்றான் படகைத் துழாவிக்கொண்டிருந்த ஒரு குகன். கூஷ்மாண்டர் நகைத்து “ஆம், பொன் என்பது பேரறம். அது எங்கோ கருவறையிலோ கருவூலத்திலோ வாழ்கிறது. அன்றாடநியாயங்கள் நம்மிடம் புழங்கும்பொருட்கள். அவை பொன்னால் மதிப்பிடப்படுகின்றன. பொன் அவற்றுக்கு மதிப்பை அளிக்கிறது” என்றார். மகிஷகன் “இறுதியில் ஒரு கவிதையை கொண்டுவந்து சேர்த்துவிட்டீர். வாழ்க! இச்சொற்களுக்காக உங்களுக்கு கள்ளுக்குரிய நாணயத்தை விட்டெறிவர் வணிகர்” என்று சிரித்தான். “வணிகருக்கென்ன, ஓங்கிச்சொல்லப்படும் எதுவும் அவர்களுக்கு கவிதையே” என்றார் கூஷ்மாண்டர் சிரித்தபடி.

“எங்குசெல்கிறீர்?” என்று கூஷ்மாண்டர் துரோணரிடம் கேட்டார். “காம்பில்யத்துக்கு” என அவரை நோக்காமல் துரோணர் பதில் சொன்னார். “முன்பு சென்றிருக்கிறீரா?” என்று கூஷ்மாண்டர் கேட்க “இல்லை” என்றார் துரோணர். “காம்பில்யம் மிகப்பெரிய நகரம். அதைக்கண்டு அஞ்சிவிடாதீர். நீர் அதில் பாதிகொடுங்கள் என்று கேட்பதற்காகச் செல்லவில்லை. ஏதோ வாழும் வழிதேடித்தான் செல்கிறீர்” என்றார் கூஷ்மாண்டர். “ஷத்ரியனுக்கு வாளேந்தி பணிபுரியும் உரிமை உண்டு. ஆகவே நிமிர்ந்து செல்லும்.” துரோணர் தலையசைத்தார். “உமது தோற்றம் ஷத்ரியர்களுக்குரியதாக இல்லை. உம்மைப்பார்த்தால் வேடர் போலிருக்கிறீர். உமது சொற்களைத்தான் அவர்கள் நம்பவேண்டும்” என்றார் கூஷ்மாண்டர்.

“ஷத்ரியர்களுக்கு அங்கே கோட்டைக்காவலிலும் துறைமுகக் காவலிலும் பணிகொடுக்கிறார்கள். நல்ல ஊதியம் என்பதனால் சிற்றூர்களில் இருந்து ஒவ்வொருநாளும் ஷத்ரியர்களும் வினைவலர்களும் காம்பில்யத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்கள்…” என்றான் மகிஷகன். “இரண்டு தலைமுறைகாலமாக இரண்டாகப்பிரிந்திருந்த பாஞ்சாலம் இன்று ஒன்றாகிவிட்டிருக்கிறது. ஐந்து நதிகள் பாயும் அதன் நிலம் அன்னைப்பன்றியின் வயிறுபோன்று வளம் மிக்கது” என்றார் கூஷ்மாண்டர். “எப்போது பாஞ்சாலம் ஒன்றாயிற்று?” என்று துரோணர் நீரைப்பார்த்துக்கொண்டு கேட்டார்.

“பாஞ்சாலத்து மன்னர்கள் பாஞ்சாலத்தின் ஐந்து பெருங்குலங்களில் இருந்தும் மனைவியரை ஏற்கவேண்டுமென்பது ஐந்துகுலங்களையும் இணைத்து பாஞ்சலத்தை அமைத்த மூதாதையான பாஞ்சாலமுல்கலரின் காலம் முதல் வகுக்கப்பட்ட குலமரபு. பாஞ்சாலத்தை ஆண்ட சகதேவருக்கு இரு மைந்தர்கள். அவரது முதல்மைந்தர் பிருஷதர் சிருஞ்சய குலத்து அரசியான பூஷையின் மைந்தர். இரண்டாவது மைந்தர் சோமகசேனன் சோமககுலத்தைச்சேர்ந்த அரசி கோமளையின் மைந்தர். சகதேவர் நோயுற்றிருக்கையிலேயே இரு உடன்பிறந்தாரும் பூசலிட்டுப் பிரிந்தனர். சிருஞ்சயர்களுடன் கிருவிகுலத்தவர் சேர்ந்துகொண்டனர். துர்வாசகுலமும் கேசினிகுலமும் சோமககுலத்துடன் இணைந்தன” கூஷ்மாண்டர் சொன்னார்.

“இருதரப்பினரும் இளவரசர்களின் தலைமையில் கங்கைக்கரையில் போரிட்டனர். ஆயிரம் பாஞ்சாலர்கள் களத்தில் இறந்தனர். அவர்களின் விதவைகளும் அன்னையரும் விரித்த கூந்தலுடன் காம்பில்யத்தின் அரண்மனை வாயிலில் வந்து நின்று கண்ணீர்விட்டழுதனர். மாளிகைமீது சாவுப்படுக்கையில் கிடந்த சகதேவர் தன்னை உப்பரிகைக்குக் கொண்டுசெல்லச்சொல்லி அங்கே படுத்தபடியே தன் குலத்துப் பெண்களின் அழுகையைக் கேட்டார். பெண்கள் மண்ணை அள்ளி அவரை நோக்கி வீசி தீச்சொல்லிட்டனர். ‘என்னை முனியுங்கள் அன்னையரே. உடன்படாத இரு மைந்தரைப் பெற்ற பழிக்காக ஆயிரம்கோடி ஆண்டுகள் நரகத்தில் வாழ்கிறேன். என் குலத்தை முனியாதீர்’ என்று அவர் கைகூப்பினார். ‘இனி உங்கள் மைந்தரின் குருதி இம்மண்ணில் விழாதிருக்க நான் முறைசெய்கிறேன்’ என்று வாக்களித்தார்” என்றார் கூஷ்மாண்டர்.

“சகதேவரின் கோரிக்கைப்படி ஐந்துகுலங்களின் மூதாதையரும் காம்பில்யத்தில் அகத்தியகூட மலையுச்சியில் இருந்த அகத்தியலிங்க ஆலயத்தருகே கூடினர். அதன்படி பாஞ்சாலம் இருநாடுகளாக பிரிக்கப்பட்டது. சத்ராவதியை தலைநகரமாகக் கொண்ட உத்தரபாஞ்சாலம் சோமகசேனனுக்கும் காம்பில்யத்தை தலைநகராகக் கொண்ட தட்சிணபாஞ்சாலம் பிருஷதனுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு எல்லைகள் வகுக்கப்பட்டன. இரு நாட்டு எல்லைகளை ஏற்றுக்கொள்வதாக ஐங்குலங்களும் அகத்தியலிங்கத்தின் மீது ஆணையிட்டு உறுதிகொண்டனர். அன்றுமுதல் இருநாடுகளும் தனித்தனியாகவே ஆளப்பட்டன” கூஷ்மாண்டர் சொன்னார்.

மகிஷகன் “ஆனால் அதன்மூலம் இருநாடுகளுமே சிறியவையாக ஆயின. காம்பில்யத்துக்குச் செல்லும் கடல்வணிகர்கள் சத்ராவதியை விலக்கினர். சத்ராவதிக்குச் செல்லும் கூலவணிகர்கள் காம்பில்யத்தை விட்டகன்றனர். இருதுறைகளையும் நாடாமல் பெருநாவாய்கள் மேலும் தெற்கே எழுந்த மகதத்தின் துறைகளை நோக்கி செல்லத்தொடங்கின. சோமகசேனன் நோயுற்றுப் படுக்கையில் விழுந்தபின்னர் சத்ராவதி விதவைக்கோலம் பூண்டது” என்றான். “பதினெட்டாண்டுகாலம் நானும்கூட காம்பில்யத்திலும் சத்ராவதியிலும் படகணைத்ததில்லை.”

“ஆனால் சத்ராவதியை வெல்லும் விருப்பிருந்தாலும் அதற்கான ஆற்றல் பிருஷதனுக்கு இருக்கவில்லை. ஐங்குலங்களில் மூன்று சத்ராவதியுடன் இருந்தமையால் அவர் அஞ்சினார். சோமகசேனருக்கு மைந்தர்கள் இல்லை. ஆகவே அவரது இறப்புக்குப்பின் இரு பாஞ்சாலங்களும் ஒன்றாகி தன் மைந்தனின் குடைக்கீழ் வரும் என்று பிருஷதர் எண்ணினார்” என்றார் கூஷ்மாண்டர். “ஆனால் பிருஷதனின் மைந்தனான யக்ஞசேனன் இளமையிலேயே அகத்திலும் புறத்திலும் ஆற்றலற்றவன் என்று அறியப்பட்டான். ஐந்துகுலத்தவருமே அவனை இழிவாக எண்ணினர். அவனைப்பற்றிய இளிவரல்பாடல்களைப் பாடும் சூதர்களுக்கு உத்தர பாஞ்சாலர்கள் மட்டுமின்றி தட்சிணபாஞ்சாலர்களும் உரக்க நகைத்தபடி நாணயங்களை வீசுவதை கண்டிருக்கிறேன்.”

“அகத்தியகூட மலையடிவாரத்தில் மூன்றாண்டுகளுக்கொருமுறை நிகழும் ஐங்குல உண்டாட்டு நிகழ்வில் அனைத்துப் போர்விளையாட்டுகளிலும் யக்ஞசேனன் ஏளனத்துக்குரிய முறையில் தோற்றான். அவனுக்கு பதினைந்து வயதிருந்தபோது நடந்த உண்டாட்டுக் களியாட்டத்தில் விற்போரில் அவன் வில்லுடன் களமிறங்கினான். அவன் களம்நடுவே வந்தபோதே பெண்கள் வாய்பொத்திச் சிரிக்க இளைஞர்கள் கூச்சலிட்டு குதிக்கத் தொடங்கிவிட்டனர். அவன் ஐம்பது அம்புகளை விட்டான். கயிற்றிலாடிய எந்த நெற்றையும் அவை சென்று தொடவில்லை. பாதி அம்புகள் முன்னதாகவே மண்ணைத் துளைத்தன. ‘மகாபாஞ்சாலன் மாமன்னன் பிருதுவைப்போல பூமாதேவியுடன் போரிடுகிறான்!’ என்று சூதர்கள் பாடிச்சிரித்தனர். வில்லைத் தாழ்த்தி அவன் பின்னகர்ந்தபோது சோமககுலத்தைச் சேர்ந்த சிறுமியொருத்தி பருத்திப்பஞ்சில் விதையை நீக்கும் வில் ஒன்றை கொண்டுவந்து அவனிடம் கொடுத்தாள். அன்று நானிருந்தேன். பல்லாயிரம்பேர் சிரித்து மண்ணில்புரள்வதை அன்று கண்டேன்.”

“அவள் சோமககுலத்தைச்சேர்ந்த குலத்தலைவர் புருஜனரின் மகள் அகல்யை. அவளுடைய சிரிப்பைக் கண்டு தன்னையறியாமலேயே யக்ஞசேனன் அந்த வில்லை வாங்கிவிட்டான். தன்னைச்சூழ்ந்தெழுந்த சிரிப்பின் ஓசையை அதன்பின்னர்தான் கேட்டான். வில்லை வீசிவிட்டு அழுதபடியே ஓடி தன் ரதத்தில் ஏறிக்கொண்டான். அன்றிரவு அவன் கத்தியால் தன் கழுத்தை அறுத்துக்கொள்ள முயன்றபோது அவன் சேவகன் தக்கதருணத்தில் வந்து தடுத்ததனால் உயிர்தப்பினான். அமைச்சர் பார்ஸ்வர் மறுநாள் விடிவதற்குள்ளாகவே அவனை அழைத்துச்சென்று அக்னிவேசரின் குருகுலத்தில் கொண்டு சேர்த்தார் என்று சொன்னார்கள்” கூஷ்மாண்டர் சொன்னார்.

கூஷ்மாண்டர் தொடர்ந்தார் “எட்டு வருடங்களுக்குப்பின் திரும்பிவந்தபோது யக்ஞசேனனின் கண்ணும் கையும் வில்லும் ஒன்றாகிவிட்டிருந்தன. ஐங்குல உண்டாட்டில் கையில் வில்லுடன் அவன் இறங்கி நின்றபோது அனைவரும் அமைதிகொண்டு நோக்கி நின்றனர். அவன் அக்னிவேசரிடம் சென்றதை அனைவரும் அறிந்திருந்தனர். ஐம்பது இலக்குகளை வளைந்துசெல்லும் இருபத்தைந்து அம்புகளால் அவன் வீழ்த்தினான். ஒரு நெற்றை விண்ணிலேற்றி பறவையென சுழன்று சுழன்று நிற்கச்செய்தான். அவன் வில்லைத் தாழ்த்தியபோது ஐந்து குலங்களும் ஆர்ப்பரித்து வாழ்த்தொலி எழுப்பின.”

“சத்ராவதியின் சோமகசேனன் இறந்தபோது உத்தரபாஞ்சாலத்தின் இளவரசனாக யக்ஞசேனனையே ஐந்துகுலங்களும் தேர்வுசெய்தன. பிருஷதனின் மரணத்துக்குப்பின் அவன் இரு பாஞ்சலங்களையும் இணைத்து துருபதன் என்னும் பேரில் அரியணை அமர்ந்தான். களத்தில் தன்னை அவமதித்த சோமககுலத்தலைவர் புருஜனரின் மகள் அகல்யையை மணந்து அரசியாக்கினான். இன்று காம்பில்யத்தின் அரசனாக வீற்றிருக்கிறான். அவன் அரசு சர்மாவதிக்கும் கங்கைக்கும் நடுவே விரிந்திருக்கிறது. அவனை அஸ்தினபுரியும் இன்று அஞ்சுகிறது.”

“பாஞ்சாலத்தின் அரியணையில் துருபதனை அமர்த்தியது அக்னிவேசரின் தனுர்வேதமே என்று சூதர்கள் இன்று பாடுகிறார்கள். காம்பில்யத்தில் நடந்த துருபதனின் முடிசூட்டுவிழாவிற்கு அக்னிவேச குருகுலத்தின் தலைவர் இரண்டாம் அக்னிவேசரும் அவரது மாணவர்களும் வந்திருந்தனர். அவர்கள் கங்கையில் படகிறங்கியபோது துருபதனே நேரில் வந்து அக்னிவேசரின் பாதங்களை தன் சென்னியில் சூடினான். அவரை பொன்னாலான ரதத்தில் அமரச்செய்து நகரத்துத் தெருக்கள் வழியாக அணிக்கோலத்தில் அழைத்துச்சென்றான். காம்பில்யத்து மக்கள் மலரும் அரிசியும் தூவி அவரை வாழ்த்தினர். அக்னிவேசரை கை பற்றி அழைத்துச்சென்று பாஞ்சாலத்தின் சிம்மாசனத்தில் அமரச்செய்து அவர் காலடியில் தன் மணிமுடியையும் செங்கோலையும் வைத்து வணங்கினான். அன்று அச்சபையில் நானுமிருந்தேன்” கூஷ்மாண்டர் சொல்லி முடித்தார்.

துரோணர் பெருமூச்சுடன் அசைந்து அமர்ந்தார். “நாம் மாலைக்குள் காம்பில்யத்தின் பெருந்துறையை சென்றடைவோம் வீரரே. தாங்கள் அங்கே எவரைப்பார்க்கவேண்டும்?” என்று கூஷ்மாண்டர் கேட்டார். துரோணர் “எனக்கு அங்கு ஒருவரை மட்டுமே தெரியும்…” என்றார். “பெயரைச் சொல்லும். எனக்குத்தெரியாத ஷத்ரியர் எவரும் காம்பில்யத்தில் இல்லை. நான் வருடத்திற்கொருமுறை அங்கே சென்றுகொண்டிருக்கிறேன்” என்றார் கூஷ்மாண்டர். “நான் துருபத மன்னரைத்தான் பார்க்கச்செல்கிறேன்” என்றார் துரோணர். கூஷ்மாண்டர் உரக்க நகைத்து “அதாவது அவரை உமக்குத்தெரியும்… சரிதான். நான்தான் தவறாகப்புரிந்துகொண்டேன்” என்றார். மகிஷகன் “துருபதமன்னரை பாரதவர்ஷத்தில் அனைவரும் அறிவர் வீரரே. ஆனால் அவருக்கு அந்தப்புரத்தைத்தான் நன்றாகத் தெரியும்” என்றான்.

காம்பில்யத்தின் படித்துறையில் துரோணர் இறங்கியபோது நகரின் நூற்றுக்கணக்கான கற்தூண்களில் நெய்ப்பந்தங்கள் எரியத்தொடங்கிவிட்டிருந்தன. நகரமெங்கும் உயர்ந்த காவல்மாடங்களிலும் மாடச்சிகரங்களிலும் பொருத்தப்பட்ட விளக்குகள் செஞ்சுடர் விரித்தன. மீன்நெய்விளக்குகள் எரியும் படகுகளும் பெருங்கலங்களும் நீர்ப்பிம்பங்களுடன் சேர்ந்து அலைகளில் ஆட நகரமே தீப்பற்றி எரிவதாகத் தெரிந்து துரோணர் திகைத்து நின்றார். கூஷ்மாண்டர் தன் முழவுடன் இறங்கி “அந்தி எழுந்துவிட்டது வீரரே. இனி கள்ளின்றி கணமும் வாழமுடியாது…” என்றபடி நடந்து சென்றார். அவரது தோள்களை முட்டிக்கொண்டு வணிகர்களும் வினைவலர்களும் நடந்துகொண்டிருந்தனர். ஒருவன் “வீரரே, வழிவிடுங்கள்” என்றபோது திடுக்கிட்டு நடக்கத் தொடங்கினார்.

காம்பில்யத்தின் சிறிய கோட்டைவாயிலில் கதவுகளோ காவலோ இருக்கவில்லை. எறும்புக்கூட்டம்போல சென்றுகொண்டிருந்த மக்களால் தள்ளப்பட்டு துரோணர் உள்ளே நுழைந்தபோதுதான் அதுவரை காட்டுக்குள் விழும் அருவியோசை என ஒலித்துக்கொண்டிருந்தது மக்களின் ஒலி என்று அறிந்தார். ஒன்றுடன் ஒன்று முட்டி நின்றிருந்த எருதுவண்டிகளில் வண்டிக்காரர்கள் எழுந்து நின்று முன்னால் நோக்கி கூச்சலிட்டுக்கொண்டிருந்தனர். புரவிகளில் தோள்களில் வில்லுடன் சென்றுகொண்டிருந்த வீரர்கள் வழிகளில் நெரித்துநின்றவர்களை அதட்டி விலக்கிச் சென்றனர். அந்தி இருளும்தோறும் நகரின் ஓசை கூடிக்கூடி வருவதாகத் தோன்றியது.

சாலையின் இருபக்கமும் சிறுவணிகர்கள் நான்குகால்களில் நிறுத்தப்பட்ட பலகைகளில் பரப்பிய பொருட்களை கூவி விற்றுக்கொண்டிருந்தனர். உள்ளே கங்கைமீனை வைத்து சுட்டு எடுத்த கிழங்குகள், தேனில் ஊறவைத்த கனிகள், உரித்தெடுத்து பாடம்செய்யப்பட்ட பாம்புத்தோல்கள், உடும்புத்தோல்கள், புலித்தோலாடைகள், மான்தோலாடைகள், செந்நிறமும் நீலநிறமும் ஏற்றப்பட்ட மரவுரிநார்கள், ஈச்சைநார்ப் பெட்டிகள், செம்பாலும் பித்தளையாலுமான சிறிய கருவிகள், குத்துவாட்கள், குதிரைவாலால் செய்யப்பட்ட பொய்முடிகள், மரப்பாவைகள்… துரோணர் ஒவ்வொன்றையும் பார்த்து அந்தப் பார்வையாலேயே நடைதேங்கி பின்னால் வந்தவர்களால் உந்தப்பட்டு முன்னேறிச்சென்றார்.

முதல்காவல்மாடத்தைக் கண்டதும்தான் தன்னினைவடைந்தார். பாஞ்சாலத்தின் தாமரைமுத்திரை கொண்ட தலைப்பாகையுடன் நின்றிருந்தவன் நூற்றுவர் தலைவன் என்று கண்டுகொண்டு அவனை அணுகி, “வீரரே, நான் அரண்மனைக்குச் செல்லவேண்டும். எவ்வழி செல்வதென்று சொல்லுங்கள்” என்றார். அவரை ஏறிட்டு நோக்கிய பூமன் “அரண்மனைக்கா? நீரா?” என்றான். அவரது பழைய மரவுரியாடையையும் பயணத்தால் புழுதிபடிந்த குறிய கரிய உடலையும் நோக்கி “இன்று இனிமேல் அரண்மனையில் கொடைநிகழ்வுகள் ஏதுமில்லை” என்றான். துரோணர் “நான் உங்கள் அரசன் யக்ஞசேனனை பார்க்கவேண்டும்” என்றார். அவன் முகத்தில் சினம் சிவந்தேறியது. “மன்னரின் பெயரைச் சொல்வது இங்கே தண்டனைக்குரிய குற்றம்” என்றான்.

“நான் யக்ஞசேனனுடன் அக்னிவேசகுருகுலத்தில் பயின்றவன். பரத்வாஜரின் மைந்தனாகிய என்பெயர் துரோணன்” என்று அவர் சொன்னபோது பூமனின் விழிகள் மாறின. “வீரரே நீர் அரசரின் சாலைத்தோழராக இருக்கலாம். ஆனால் அவர் இன்று சாலைமாணாக்கர் அல்ல. பாஞ்சாலத்தின் பேரரசர். கங்கைக்கரை உருளைக்கற்களில் ஒன்று சிவலிங்கமாக கருவறையில் அமர்ந்தபின் அதன் இடமும் பொருளும் வேறு. அக்னிவேசரின் மாணவர் என்கிறீர். இந்த எளிய உலகியல் உண்மையை அறியாமலிருக்கிறீர்” என்றான். துரோணர் “என்னை உங்கள் அரசர் நன்கறிவார். என்னை அவரிடம் அழைத்துச்செல்க” என்றார்.

“வருக வீரரே” என்றபடி பூமன் கையசைத்து ஒரு புரவி வீரனை அழைத்தான். “அந்தப்புரவியில் நீங்கள் வாருங்கள்” என்றபடி தன் புரவியில் ஏறிக்கொண்டான். இருவரும் மக்கள் நெரித்துக்கொண்டிருந்த வணிகவீதியைக் கடந்து உள்கோட்டையின் வாயிலை அடைந்தனர். அங்கே காவலர்களிடம் துரோணரைப்பற்றி பூமன் சொன்னபோது அவர்கள் ஐயத்துடன் அவரை திரும்பி நோக்கினர். ஒருவன் “அக்னிவேசரின் மாணவர் என்று தோன்றவில்லை. மலைவேடன் போலிருக்கிறார்” என்று மெல்லியகுரலில் சொல்வதை துரோணர் கேட்டார். பூமன் “ஆம், நானும் அவ்வண்ணமே எண்ணினேன். ஆனால் அவரது இடத்தோளிலுள்ள வடு கனத்த அம்பறாத்தூணி தொங்குவதனால் உருவாவது. அவர் விரல்கள் பெரும் வில்லாளிக்குரியவை” என்றான்.

உள்கோட்டைக்குள் பெருவணிகர்களும் ஷத்ரியர்களும் வாழும் அடுக்கு மாடங்கள் வாயில்தூண்களில் தழலாடும் பந்தங்களின் ஒளியில் திரைச்சீலை ஓவியங்கள் போலத் தெரிந்தன. அகன்ற சாலையில் அரிதாகவே ரதங்களும் புரவிகளும் சென்றன. மாளிகைமுற்றங்களில் வேல்களும் விற்களுமாக காவல் நின்றவர்கள் அவர்களை வியப்புடன் நோக்கினர். கிளைகள் பிரிந்து சென்ற மையச்சாலையின் மறுமுனையில் அரண்மனைக்கோட்டையின் வாயில் இருந்தது. அதன் மேல் இருந்த முரசுமாடத்தின் இரு பெருமுரசுகள் பந்தங்களின் செவ்வொளியை எதிரொளித்து குளிர்கால நிலவுகள் போலத் தெரிந்தன. செவ்வொளி மின்னிய பெரிய கண்டாமணி மரத்தாலான மாடத்துக்குள் தொங்கியது.

அரண்மனைக்கோட்டைக்கு மறுபக்கம் செங்கல் பரப்பப்பட்ட விரிந்த முற்றத்துக்கு அப்பால் அரண்மனை வளாகம் தெரிந்தது .பாஞ்சாலத்தின் தாமரைக்கொடியுடன் பறந்துகொண்டிருந்த வெண்ணிறச்சுதையாலான ஏழடுக்கு மாளிகைக்கு இருபக்கமும் மூன்றடுக்கு மாளிகைகள் நிரைவகுத்திருந்தன. பூமன் புரவியிலிருந்து இறங்கி “வீரரே, நீங்கள் அரசரைப்பார்க்க வந்த சாலைத்தோழர் என்பதனால் இப்போது அழைத்துவந்தேன். அரசர் அந்திக்குப்பின் எவரையும் பார்க்க ஒப்புவதில்லை” என்றான். “நான் தங்கள் வருகையை அரசரின் காவல்நாயகத்திடம் அறிவிக்கச் சொல்கிறேன். அவர் விழைந்தால் இப்போது தாங்கள் அரசரைச் சந்திக்கலாம். இல்லையேல் இங்கே விருந்தினர் தங்கும் குடில்கள் உள்ளன. அங்கே தங்கி இளைப்பாறி நாளை அவைகூடுகையில் அரசரைக் காணலாம்.”

துரோணர் புரவியிலிருந்து இறங்கி தரையில் நின்றார். பூமன் சென்று காவல்நாயகத்திடம் துரோணரைப்பற்றி சொன்னான். பெரிய தலைப்பாகையும் மார்பில் மணியாரமும் அணிந்திருந்த காவல்நாயகம் எழுந்து வர அவருக்குப்பின்னால் ஒருவீரன் ஆடிபதிக்கப்பட்ட கைவிளக்குடன் வந்தான். விளக்கொளியை அவன் துரோணர் மீது வீச காவல்நாயகம் துரோணரை கூர்ந்து நோக்கினார். “வீரரே, தாங்கள் அக்னிவேசரின் குருகுலத்தில் பயின்றமைக்கான சான்று என ஏதேனும் வைத்திருக்கிறீரா?” என்றார். துரோணர் தன் இடையிலிருந்த தர்ப்பைத் தாளை எடுத்துக்காட்டி “இதைக்கொண்டு என்னால் எவரையும் கணப்போதில் கொல்லமுடியும். வில்லேந்தியவனைக்கூட” என்றார். “பரசுராமரும் பீஷ்மரும் சரத்வானுமன்றி என்முன் வில்லுடன் நிற்கும் மானுடர் எவரும் இன்றில்லை.”

காவல்நாயகம் அவரது முகத்தையும் தர்ப்பையையும் மாறிமாறி அச்சத்துடன் நோக்கிவிட்டு தலைவணங்கினார். “இச்சொற்களன்றி ஏதும் தேவையில்லை உத்தமரே. அடியேன் சொற்பிழை இழைத்திருந்தால் பொறுத்தருள்க” என்றார். “நான் அரசரிடம் தெரிவித்து மீள்வது வரை இந்தக் காவல்மாடத்திலேயே அமர்ந்திருங்கள்.” துரோணர் “இல்லை, நான் இங்கேயே நிற்கிறேன். சென்று வருக” என்றார். காவல்நாயகம் தன் சால்வையை அணிந்துகொண்டு அரண்மனையை நோக்கி விரைந்து சென்றார். கைகளைக் கட்டியபடி துரோணர் நிலம் நோக்கி அசையாமல் நின்றார்.

சற்றுநேரத்திலேயே காவல்நாயகம் திரும்பி வந்தார். அருகே வரும்தோறும் அவரது கால்கள் தயங்கின. அவர் முன் வந்து நின்றபோது துரோணர் நிமிர்ந்து அவரை நோக்கினார். “உத்தமரே, அரசர் தங்களை அறியார்” என்றார். துரோணர் ‘ம்?’ என்று முனகினார்.

காவல்நாயகம் குரலைத் தாழ்த்தி “தங்கள் பெயரையும் குலத்தையும் சொன்னேன். தங்கள் தோற்றத்தையும் விவரித்தேன். துரோணர் என்று எவரும் தன்னுடன் சாலைமாணாக்கராக இருக்கவில்லை என்றார்” என்று சொல்லி “அவர் மறந்திருக்கலாம். நெடுங்காலமாகிறது. நாட்களை நிறைக்கும் அரசுப்பணிகள். நீங்கள் நாளை அவரை சபையில்…” என்று சொல்ல துரோணர் இடைமறித்து “வீரரே, அவர் இங்கு வந்து இந்த தர்ப்பையைத் தொட்டுச் சொல்லட்டும், என்னை அறியமாட்டாரென்று. அதுவரை நான் இவ்விடத்திலிருந்து அசையப்போவதில்லை” என்றார்.

“உத்தமரே, தாங்கள் இங்கே…” என்று காவல்நாயகம் தயங்க “என்னை இவ்விடத்திலிருந்து அகற்ற உங்கள் நால்வகைப்படைகளாலும் முடியாது. தேவையற்ற குருதியை நான் விரும்பவில்லை” என்றார் துரோணர். “உள்ளே சென்று உமது அரசரிடம் சொல்லுங்கள். இம்மண்ணிலேயே ஆற்றல்மிகுந்த தாவரம் போல ஒருவன் இங்கே நிற்கிறான் என்று” தர்ப்பையை கையிலேந்தி துரோணர் சொன்னார். “இது ஆயிரம் ஆலமரங்களுக்கு நிகரானது. இலையாலோ கிளையாலோ ஆனதல்ல, வேராலானது. தன் உயிர்ச்சாரமாக நெருப்பை கொண்டிருப்பது.”

காவல்நாயகம் சிலகணங்கள் சொல்லற்று ததும்பியபின் திரும்பி மீண்டும் அரண்மனை நோக்கி ஓடினார். சற்று நேரத்தில் அங்கிருந்து எட்டுகுதிரைகள் செங்கல்தளத்தில் குளம்போசை தடதடக்க விரைந்தோடி வந்தன. முழுகவசமணிந்த ஒருவன் அதில் பந்தங்களின் ஒளி தெரிய எரிந்துகொண்டிருப்பவன் போல குதிரைவிட்டிறங்கி “வீரரே இக்கணமே இங்கிருந்து விலகிச்செல்லவேண்டுமென உமக்கு ஆணையிடுகிறேன். இல்லையேல் அது எங்கள் மீதான போர் அறைகூவலாகவே பொருள்படும்” என்றான்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

தாழ்ந்த திடமான குரலில் “உங்கள் அரசன் வந்து என் கையிலிருக்கும் தர்ப்பைக்கு பதிலளிப்பது வரை நான் இங்கிருந்து விலகப்போவதில்லை. போரே உங்கள் அரசர் அளிக்கும் விடை எனில் அவ்வாறே ஆகட்டும்” என்றார் துரோணர். “சென்று அவனிடம் சொல், இம்மண்ணில் தன்னைத்தானே எரித்துக்கொள்ளும் ஆற்றல்கொண்ட ஒரே உயிர் தர்ப்பை என்று.”

கவசவீரன் திரும்பி குதிரைமேல் ஏறிக்கொண்டு அதே விரைவால் அதைத் திருப்பி வேலைச்சுழற்றிக்கொண்டு அவர் மேல் பாய்ந்தான். அவனுடன் வந்த எட்டுகுதிரைவீரர்களும் அசையாமல் பார்த்து நின்றனர். எவரும் பார்க்காத ஒரு கணத்தில் குதிரை கண்ணுக்குத்தெரியாத அரக்கக் கரத்தால் அறைபட்டது போல எம்பித்தெறித்து அந்த முற்றத்தில் கிடந்து கால்களை உதைத்துக்கொண்டது. அதிலிருந்து வீசப்பட்ட கவசவீரன் கவசங்கள் தெறிக்க மண்ணில் கிடந்து புரண்டு கையூன்றி எழப்பார்த்தான்.

துரோணர் தன் கையிலிருந்த தர்ப்பைத்தாள்களுடன் உரக்க “மூடர்களே, என்னை வெல்பவர் உங்களில் எவரும் இல்லை. வீணே உயிர்துறக்கவேண்டியதில்லை” என்றார். குதிரைவீரர்கள் அவர்களை அறியாமலேயே சில எட்டு பின்னால் சென்றனர். சூழ்ந்து நின்றவர்களிடமிருந்து வியப்பொலிகள் எழுந்தன.

கவசவீரன் முழங்காலை ஊன்றி எழுந்து மற்ற குதிரைவீரர்களை நோக்கி கைகாட்டி “கொல்லுங்கள்” என்றான். அவர்கள் தங்கள் குதிரைகளை ஐயத்துடன் ஓரிரு அடி முன்னால் கொண்டுவர காவல்நாயகம் உரத்த குரலில் “என்ன நெறி இது? ஒருவரைத் தாக்க ஒருபடையா?” என்று கூவி கையைத்தூக்கினார். “படைதிரண்டு வந்து ஒரு தனிமனிதரை வீழ்த்தினோம் என்று சூதர்கள் பாடுவார்களென்றால் பாஞ்சாலத்து ஐங்குலத்து வீரர்கள் அனைவரும் உடைவாளால் கழுத்தறுத்துச் சாகவேண்டியதுதான்.”

அவருக்குப்பின்னால் நின்றிருந்த காவல் வீரர்கள் “ஆம், உண்மை” என்று ஒரே குரலில் கூவினர். எண்மர் விற்களில் தொடுத்த அம்புடன் முன்னால் வர அதில் ஒருவன் “அது இங்கே நடக்காது நூற்றுவர்தலைவரே. அறத்துக்காக நாங்கள் எங்கள் குலதெய்வத்துடனும் போரிடுவோம்” என்றான்.

கவசவீரன் எழுந்து ஒற்றைக்காலை நொண்டியபடி நின்றான். அவன் குதிரை எழுந்து அப்பால் விலகி நின்று தன் காலை தரையில் தட்டிக்கொண்டிருந்தது. அதன் கழுத்தில் தைத்திருந்த தர்ப்பைத்தாளில் இருந்து வழிந்த குருதி பந்தங்களின் செவ்வொளியில் நிறமற்றதுபோல தரையில் சொட்டியது. மூச்சுசீற அது கனைத்துக்கொண்டு கழுத்தைத் திருப்பி தன் விலாவை அறைந்தது. அவன் தன் வீரனிடம் அதைப்பிடித்துக்கொள்ளச் சொல்லிவிட்டு அவனுடைய குதிரைமேலேறி திரும்பிச்சென்றான். பிற குதிரைவீரர்களும் அவனைத் தொடர்ந்தனர்.

கையிலிருந்த தர்ப்பையை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டு துரோணர் கால்களைப் பரப்பிவைத்து தலைகுனிந்து அசைவற்று நின்றார். அவரது உதடுகளில் காயத்ரி துடித்துக்கொண்டிருந்தது. ‘துரோணர்’ ‘பரத்வாஜரின் மைந்தர்’ ‘தனுர்வேதி’ என்ற மெல்லியகுரல்களும் பந்தங்கள் ஒளிரும் விழிகளும் அவரைச்சூழ்ந்துகொண்டிருந்தன.

முந்தைய கட்டுரைஒரு மரணவிதி
அடுத்த கட்டுரைதியடோர் பாஸ்கரனுக்கு விருது