பகுதி ஆறு : அரசப்பெருநகர்
[ 7 ]
அஸ்வத்தாமனுடன் காலையில் கங்கைக்குச் செல்லும்போது ஒவ்வொரு காலடியிலும் தன் அகம்பெருகி முழுமையடைவதுபோல துரோணர் உணர்வதுண்டு. கருக்கிருட்டு இருக்கையிலேயே எழுந்துகொள்வது அவரது வழக்கம். அவர் எழுவதற்குச் சற்றுமுன்னரே கிருபி எழுந்துவிட்டிருப்பாள். குடிலின் வடக்குப்பக்கமாக கூரையிறக்கி எழுப்பிய சாய்ப்பறையில் முக்கல் அடுப்பில் சுள்ளிவிறகில் நெருப்பு எழுந்துவிட்டிருக்கும். அதன் செவ்வொளியில் சாணிமெழுகப்பட்ட மரப்பட்டைச்சுவர்களும் கொடிகளில் தொங்கிய மரவுரியாடைகளும் நெளிந்துகொண்டிருக்கும். வேள்விசாலையொன்றுக்குள் விழித்தெழுவதுபோல உணர்வார்.
இருகைகளையும் விரித்து நோக்கி புலரியின் மந்திரத்தை முணுமுணுத்தபின் எழுந்து ஈச்சம்பாயைச் சுருட்டி குடிலின் மூலையில் வைத்துவிட்டு முற்றத்தில் இறங்கி தொட்டி நீரில் முகத்தையும் கைகால்களையும் கழுவிவிட்டு வானைப்பார்த்து நின்று தனுர்வேத்தின் இறைவனாகிய சுப்ரமணியனை துதிக்கும் ஆறு மந்திரங்களைச் சொன்னபின்னர் உள்ளே வந்து துயின்றுகொண்டிருக்கும் மைந்தனை அவனுடைய மெலிந்த காலில் மெல்லத்தொட்டு குரலில்லாமல் எழுப்புவார். அவர் தொட்டதுமே அவன் நாண்விலகிய வில் என துள்ளி எழுந்து “விடிந்துவிட்டதா தந்தையே?” என்பான்.
சிறுவர்களைப்போல புத்துணர்ச்சியுடன் எவரும் புதியநாளை எதிர்கொள்வதில்லை என்று துரோணர் ஒவ்வொரு நாளும் நினைப்பதுண்டு. கங்கையைப்போல முந்தையநாள் முற்றிலும் வழிந்தோடிச் சென்றிருக்க புத்தம்புதியதாக இருப்பான் அஸ்வத்தாமன். பாயிலிருந்தே எழுந்தோடி உரத்த பறவைக்குரலில் “விடிந்துவிட்டது! நான் கங்கைக்குச் செல்லவேண்டும்…!” என்று கூச்சலிடுவான். அவன் அன்னை குடுவையிலிருந்து எள்ளெண்ணையை எடுத்து வருவதற்குள் “விரைவாக! விரைவாக!” என்று குதிப்பான். அவனுடைய குடுமியை விரித்து எண்ணையை நீவியபடி “நேரமாகவில்லை. இன்னும் கரிச்சான் கூவவில்லை” என்று கிருபி சொல்வாள். “கரிச்சான் கூவுகிறது… இதோ நான் கேட்டேன்” என்று சொல்லி ‘கூ கூ’ என ஒலியெழுப்பி வெண்பற்கள் காட்டி நகைத்தபடி அவன் கைதட்டி துள்ளுவான்.
இரண்டுநாழிகை தொலைவிலிருக்கும் கங்கைக்கு இருளில் நடந்து செல்லும்போது அவன் இன்னொருவனாக ஆகிவிடுவான். பத்து அங்கங்களும் நான்கு பாதங்களும் கொண்ட தனுர்வேதத்தின் அனைத்து மந்திரங்களையும் அவர் ஒவ்வொருநாளும் முழுமையாகவே ஒருமுறை சொல்லிக்கொள்வார். மூச்சொலி மட்டுமே ஒலிக்க அவன் அதைக்கேட்டபடி தன் மெல்லிய விரல்களால் அவர் கைவிரலைப் பிடித்துக்கொண்டு உடன் வருவான். செல்லும்போதே பல்துலக்க ஆலவிழுதும் உடல்தேய்க்க வேம்பின் தளிரும் பறித்துச்செல்வார்.
இளவெம்மையுடன் கரையலைத்து ஓடிக்கொண்டிருக்கும் கங்கையில் அவனை நீரில் இறக்கி தனுர்வேதத்தை சொன்னபடியே வேம்பின் தளிரை கல்லில் அரைத்தெடுத்த விழுதால் அவனுடைய இளந்தோள்களையும் மெல்லிய கைகளையும் தேய்த்து நீரள்ளி விட்டு கழுவுவார். அவன் உடல் குளிரில் சிலிர்க்கையில் மயிர்க்கால்களை கைகளில் மென்மணல் போல உணரமுடியும். நூற்றெட்டு முறை மூழ்கி எழும்போது ஒவ்வொரு முழுக்குக்கும் தான் கற்ற ஒரு மூலமந்திரத்தைச் சொல்வார். அதை திரும்பச்சொன்னபடி கரையோரத்தில் இடையளவு நீரில் அவனும் மூழ்குவான்.
மீண்டும் குடிலைவந்தடையும்போது தனுர்வேதம் முழுமைபெற்றுவிட்டிருக்கும். ‘ஓம் தத் சத்’ என்று மும்முறை சொல்லி முடிப்பார். திண்ணையில் மரவுரிவிரித்து அமர்ந்து இந்திரனையும் வருணனையும் எண்ணி ஊழ்கத்திலமர்ந்து தன் குருநாதரை எண்ணி அதை முழுமைசெய்து விழிதிறந்து எழுவார். அப்போது கிருபி சூடான கஞ்சியை மண்கலத்தில் வைத்து அவர்களுக்காகக் காத்திருப்பாள்.
அஸ்வத்தாமாவை அவர் தன்னுடன் அழைத்துக்கொண்டு குருகுலத்துக்குச் செல்வார். சிறுகுழந்தையாக அவன் இருக்கையிலே அவனை கைகளில் எடுத்தபடி அவன் விழிகள் வழியாக உலகை நோக்கிக்கொண்டு செல்வதில் தொடங்கிய வழக்கம். ஈச்சையோலை ஆடும்போது அவன் காணும் குதிரைப்பிடரியை அவரும் காண்பார். புல்வெளியில் காலையொளியில் பறந்து சுழலும் தட்டாரப்பூச்சிகளைச் சுட்டிக்காட்டி ‘தீ!’ என்று அவன் சொல்லும்போது கையருகே பறந்த தட்டாரப்பூச்சியிடமிருந்து கைகளை விலக்கிக்கொண்டு ‘ஆ சுடுகிறது! சுடுகிறது!’ என்று அவர் கூவுவார். தொலைவில் காற்றிலாடும் வேங்கைமரம் யானையாகும். மேகங்கள் ஆவியெழும் அப்பங்களாகும்.
குழந்தையை பீடத்தில் அமரச்செய்துவிட்டு அவர் படைக்கலப்பயிற்சியளிப்பார். அஸ்வத்தாமன் விழிதிறந்த நாள்முதல் வில்லையும் வேலையும்தான் பார்த்து வளர்ந்தான். முழந்தாளிட்டு எழுந்தமர்ந்ததுமே தவழ்ந்துசென்று அவன் வில்லைத்தான் கையிலெடுத்தான். சிரித்தபடி அவனை அள்ளியெடுத்த துரோணர் “அவன் ஷத்ரியன். வஞ்சமும் சினமும்தான் ஷத்ரியனை ஆக்கும் முதல்விசைகள். காட்டுநெருப்பென அவன் பாரதவர்ஷம் மீது படர்ந்தெழுவான்” என்றார்.
விடிகாலையில் நீராடிவந்த துரோணர் வஜ்ரதானியத்துடன் கிழங்குகளையும் கீரையையும் கலந்து காய்ச்சப்பட்ட கஞ்சியை கோட்டிய மாவிலைக் கரண்டியால் அள்ளிக்குடித்துக்கொண்டிருந்தபோது கிருபி மெல்ல ஒருமுறை அசைந்தமர்ந்தாள். கஞ்சியை குடித்து முடித்த அஸ்வத்தாமன் பாளைக்கலத்தை கொண்டு சென்று வெளியே வீசிவிட்டு அங்கே மரத்தில் வந்து அமர்ந்து குரலெழுப்பிய காகத்தைப் பார்த்து மறுகுரலெழுப்பிக்கொண்டிருந்தான்.
துரோணர் விழிகளை தூக்காமலேயே அவள் சொல்லப்போவதற்காக செவிகூர்ந்தார். மைந்தன் பிறந்தபின்னர் கிருபி மூன்றாவது பிறப்பெடுத்தாள். குருதிவாசம் மாறாத குழந்தையுடன் அவள் படுத்திருக்கையில் அருகே சென்று குனிந்தபோது அவருள் அவ்வெண்ணம் எழுந்தது. அவள் இளமையின் சிரிப்பையும் பின்னெழுந்த கண்ணீரையும் முற்றிலும் உதறி வெறும் அன்னை விலங்காக அங்கே கிடந்தாள். கனத்த முலைகள் மரவுரியாடைக்குள் கசிந்துகொண்டிருந்தன. அவள் அக்குளில் கழுத்தில் வாயில் எல்லாம் விலங்கின் மணமே நிறைந்திருந்தது. அவள் கண்களை சந்தித்தபோது அவை நெடுந்தொலைவில் எங்கோ இருப்பதைக் கண்டார்.
“நாம் ஒரு பசுவை வாங்கினாலென்ன?” என்று அவள் கேட்டபோது திடுக்கிட்டவர் போல நிமிர்ந்து ஒன்றையொன்று தொட்ட புருவங்களுடன் நோக்கினார். கிருபி அந்தப்பார்வையை சந்தித்து “சிறிய பசு போதும். சிறிதளவுக்கே பால்கிடைத்தால் போதும். ஆயர்குடிகளில் வளர்ச்சியற்ற பசுக்களை குறைந்த விலைக்கு அளிப்பார்கள்” என்றாள்.
அவள் சொல்லும்போதே அதன் வாய்ப்புகளை தொட்டுத்தொட்டுச்சென்றது அவரது உள்ளம். சுவரில் முட்டிய பாம்பு சீறித்திரும்புவதுபோல சட்டென்று சினம் கொண்டு எழுந்தது. “உனக்கு எதற்கு பசு? இங்கே இதுவரை நாம் பசுக்களை வளர்த்ததில்லை” என்றார். கிருபி “அஸ்வத்தாமாவுக்கு நாம் இதுவரை பசும்பால் கொடுத்ததும் இல்லை” என்றாள். துரோணர் “ஆம், அவன் ஏழை ஷத்ரியனின் எளிய மைந்தன். அவனுக்கு அன்னப்பாலே போதும்” என்றார். கிருபி “குருகுலப்பயிற்சியில் பிற மாணவர்கள் ஓடுவதுபோல தன்னால் ஓடமுடியவில்லை என்று சொன்னான். போர்ப்பயிற்சி பெறும் குழந்தைக்கு ஊனுணவு இல்லையென்றாலும் சிறிதளவு பாலேனும் வேண்டுமல்லவா?” என்றாள்.
துரோணர் தலைகுனிந்து சொல்லின்றி கஞ்சியை குடித்துமுடித்து எழுந்து பின்பக்கம் சென்று கையையும் வாயையும் கழுவிக்கொண்டார். அவளில் வெல்லமுடியாத வல்லமையுடன் வளர்ந்து நின்ற அந்த அன்னைவிலங்கை எதிர்கொள்ள ஒரே வழி சினம்தான். அது அவளை ஒன்றும் செய்வதில்லை, ஆனால் அவள்முன் இருந்து விரைவாக விலகிச்செல்ல உதவுகிறது. துரோணர் அவள் தன்னை நோக்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தார்.
உள்ளே வந்து சால்வையை எடுத்து அணியும்போது பதினெட்டுவருடங்களில் கிருபி தன்னிடம் வைத்த முதல்கோரிக்கை அது என்று எண்ணிக்கொண்டார். திரும்பியபோது சாய்ப்பறை வாயிலில் நின்றிருந்த கிருபியைக் கண்டு தலைகுனிந்து “என்னிடம் ஏது பணம்? நீ ஏதாவது சேர்த்து வைத்திருக்கிறாயா?” என்றார். அவள் “இங்கே எதை பணமாக ஆக்கிக்கொள்ள முடியும்?” என்றாள். அவருக்கு மாதம்தோறும் ஊரிலிருந்து தானியங்கள் மட்டும்தான் ஊதியமாக கொடுக்கப்பட்டது. காய்கறிகளை கிருபி குடிலுக்குப்பின்னால் பயிரிட்டுக்கொண்டாள்.
“பணமிருப்பது வணிகர்களிடமும் ஷத்ரியர்களிடமும் மட்டும்தான்” என்று கிருபி சொன்னாள். “அவர்களிடம் கேட்டுப்பாருங்கள். பதினெட்டுவருடங்களாக இந்த ஊரில் தனுர்வேதம் கற்பிக்கிறீர்கள். உங்களிடம் கற்று வளர்ந்தசிலரும் இங்கிருக்கிறார்கள்.” ஒவ்வொரு முகமாக துரோணரின் சிந்தையில் ஓடியது. கிருபி மீண்டும் எதையோ சொல்லத்தொடங்குவதற்குள் அவர் இறங்கி இருளில் நடந்தார். அஸ்வத்தாமன் ஓடி அவருடன் வந்து சேர்ந்துகொண்டான்.
அஸ்வத்தாமன் “தந்தையே, எனக்கு கதாயுதப்பயிற்சியை எப்போது தொடங்குவீர்கள்?” என்றான். துரோணர் “உன்னால் கதாயுதத்தை தூக்கமுடியாதே…” என்றார். “பெரிய மாணவர்கள் அனைவருமே வீட்டில் பால் குடிக்கிறார்கள். ஆகவேதான் அவர்களின் தசைகள் விரைவாக வளர்கின்றன. என்னிடம் ஜெயசேனன் அவன் நாளும் மும்முறை பால் அருந்துவதாகச் சொன்னான்” என்றபடி அஸ்வத்தாமன் அவருடன் ஓடி வந்தான். “நான் கேட்டேன், பசு இரண்டுமுறைதானே பால் கறக்கும் என்று. அவன் அதற்கு போடா என் வீட்டில் ஐந்து பசுக்கள் இருக்கின்றன என்றான்.”
அஸ்வத்தாமனின் அகம் முழுக்க பால் பற்றிய எண்ணங்களே இருந்தன. துரோணர் பேச்சை வேறுதிசைநோக்கி கொண்டுசென்றார். “கதை தோளுக்குரிய படைக்கலம். வாள் கைக்குரியது. வில்லோ கண்ணுக்குரியது. தோளைவிட கையை விட விரைவானது கண். ஆகவேதான் வில்லேந்தியவனே வெல்லற்கரியவன் எனப்படுகின்றான்.” அஸ்வத்தாமா அவரது கைகளைப் பற்றிக்கொண்டான். “படைக்கலநூல்களில் தனுர்வேதம் மட்டுமே வேதங்களுக்கு நிகரானது. ஏனென்றால், விராடபுருஷனின் விழிகளாக விளங்குபவை வேதங்கள். தனுர்வேதம் மானுடவிழிகளில் தொடங்கி பரமனின் விழிகளைப் பேசும் நூல்.”
குருகுலத்தில் காலைப்பயிற்சிகள் முடிந்தபின் சிறுவர்கள் துரோணரை வணங்கி விற்களை ஆயுதசாலைக்குள் அடுக்கிவிட்டு விடைபெற்றனர். தன் சால்வையை உதறி சீர்ப்படுத்தி அணிந்துகொண்டு அவரும் அவர்களைத் தொடர்ந்து ஊருக்குள் நுழைந்தார். அவர் ஊருக்குள் செல்வது குறைவாதலால் எதிரே வந்தவர்கள் விழிகளில் அரைக்கணம் தெரிந்து மறைந்த வியப்புடன் வணங்கினர். அவர் அங்கே வந்தபோது இருந்தபடியே இருந்தது பிரமதம். ஆனால் தெருக்களில் நடமாடுபவர்களில் பலர் புதியமுகங்களாகத் தெரிந்தனர். அவரிடம் சிறுவர்களாக வித்தை கற்றவர்கள் மீசைகனத்த இளைஞர்களாகியிருந்தனர்.
ஊர்ணநாபர் மறைந்தபின் அவரது முதல்மைந்தன் சுதர்மன் ஊர்த்தலைவனாக இருந்தான். அவரிடம் ஏழுவருடம் படைக்கலப்பயிற்சி பெற்றுச் சென்றபின் அவனை கொற்றவை ஆலயத்துக்கு வழிபடவருகையில் மட்டுமே துரோணர் பார்த்திருந்தார். தேன்மெழுகிட்டு நீவிய கரிய மீசையை சுருட்டி விட்டு கனத்தகுழலை உச்சியில் குடுமியாகக் கட்டி நிறுத்தி கையில் கங்கணங்களும் காலில் கழல்களுமாக தோளுக்குமேல் உயர்ந்தவேலுடன் வந்த சுதர்மன் “துரோணரே, இந்த ஆலயத்தைச் சுற்றி இப்படி புல்மண்டியிருக்கிறதே. ஆயுதப்பயிற்சி முடிந்தபின் தாங்களும் மாணவர்களுமாக இதை தூய்மைசெய்தாலென்ன?” என்று கேட்டான்.
துரோணர் தணிந்த குரலில் “படைக்கலப்பயிற்சிக்கு புல்பரப்புதான் தேவை” என்றார். “ஏதாவது குறையிருந்தால் வந்து என்னிடம் சொல்லுங்கள்” என்றபின் மீசையை நீவியபடி “கொற்றவை ஆலயத்துக்கு பூசகர் தினமும் வருகிறாரல்லவா?” என்றான். “ஆம்” என்றார் துரோணர். “வரவில்லை என்றால் என்னிடம் வந்து சொல்லும்… பூசனைகள் ஒருபோதும் முடங்கக்கூடாது. கொற்றவையே இவ்வூருக்குக் காப்பு. என் முதுமூதாதை பிரகல்பர் கார்த்தவீரியனின் படைகளுடன் போரிடச்சென்றபோது நிறுவி வழிபட்ட தெய்வம் இது. தெரியுமல்லவா?” என்றான் சுதர்மன்.
ஊர்த்தலைவரின் இல்லத்துக்கு முன்பு போடப்பட்டிருந்த ஈச்சைப்பந்தலில் பிரமதத்தின் ஷத்ரியர்களும் வணிகர்களும் கூடி அமர்ந்திருந்தனர். நடுவே பீடத்தில் சுதர்மன் மீசையை நீவியபடி உரத்தகுரலில் பேசிக்கொண்டிருந்தான். துரோணர் சென்று பந்தல் முன் நின்றபோது அனைவரும் திரும்பிப்பார்த்தனர். அவர் வணங்கியதும் தலையசைத்து வணக்கத்தை ஏற்றுக்கொண்டபின் திரும்பிக்கொண்டனர். சுதர்மன் உரக்க “துரோணரே, ஆபத்து என ஏதுமில்லையே?” என்றான். “இல்லை” என துரோணர் சொன்னதும் திரும்பிக்கொண்டு உரையாடலைத் தொடர்ந்தான்.
துரோணர் கைகளை கட்டிக்கொண்டு பந்தலின் தூணருகே காத்து நின்றார். அவர்கள் வரவிருக்கும் இந்திரவிழாவுக்கான நிதிசேகரிப்புபற்றி பேசிக்கொண்டிருந்தனர். பிரமதத்தில் கரையிறங்கும் ஒவ்வொரு வணிகரிடமும் சுங்கம் கொள்ளலாம் என்றார் ஷத்ரியரான சுதனுஸ். “இப்போதே இங்கு வணிகர்கள் பலர் வருவதில்லை. சுங்கம் கொள்ளத் தொடங்கினால் நமது பொருட்களுடன் நாம் அவர்களைத் தேடிச்செல்லவேண்டியிருக்கும்” என்றார் வணிகரான ஆரியவான். ஊரில் அனைவருக்கும் வரிபோடுவதன்றி வேறுவழியில்லை என்று ஷத்ரியரான காகக்துவஜர் சொல்ல வணிகரான சித்ரகர் “அனைவருக்கும் ஒரே வரியை எப்படிப்போடுவது? பொருள்நிலை நோக்கி போடவேண்டும். ஏழைகளிடம் குறைவான வரியே கொள்ளப்படவேண்டும்” என்றார். சுதனுஸ் “தாங்கள் ஏழை என சொல்லவருகிறீர்களா வணிகரே?” என்றார்.
எங்கும் நில்லாமல் பேச்சு சென்றபடியே இருந்தது. அது ஒருவரை ஒருவர் இழுத்து கீழே தள்ளமுயலும் சிறுவர்களின் விளையாட்டு போலத் தோன்றியது துரோணருக்கு. அவர் பொறுமையின்றி சற்று அசைந்தபோது அவ்வசைவால் கலைந்து அனைவரும் திரும்பிப்பார்த்த பின் மீண்டும் பேசிக்கொள்ளத் தொடங்கினர். சற்றுநேரம் கழித்து துரோணர் மெல்லக் கனைத்தார். சுதர்மன் சுருங்கிய முகத்துடன் திரும்பி அவரை நோக்கியபின் பிறரிடம் பேச்சை நிறுத்தும்படி கைகாட்டி “என்ன துரோணரே? ஏதாவது சொல்ல விழைகிறீரா?” என்றான். “ஆம்” என்றார் துரோணர். தணிந்த குரலில் “எனக்கு ஒரு பசு வேண்டும்” என்றார்.
அதை சரியாக செவிமடுக்காதவன் போல சுதர்மன் “பசுவா?” என்றான். “உமக்கா? உமக்கெதற்குப் பசு?” பிறரை நோக்கியபின் உரக்க நகைத்தபடி “பசுவை வைத்து மாணவர்களுக்கு ஏதேனும் வித்தை கற்பிக்கவிருக்கிறீரா என்ன?” என்றான். வணிகர்கள் சிரித்தனர். துரோணர் “என் மைந்தன் அஸ்வத்தாமா போர்க்கலை பயில்கிறான். என் குருகுலநெறி காரணமாக நான் ஊனுணவு உண்பதில்லை. ஆகவே அவனுக்கு பால் தேவைப்படுகிறது” என்றார். “நீர் ஷத்ரியர்தானே? ஏன் ஊனுணவு உண்பதில்லை? அருகே பெரிய குறுங்காடு உண்டல்லவா? அங்கே முயல்களுக்கும் மானுக்கும் பஞ்சமில்லை” என்றார் சுதனுஸ். “ஊன் விலக்குவது அக்னிவேசகுருகுலத்தின் நெறி” என்றார் துரோணர்.
“யாரது அக்னிவேசர்? ஊன்விலக்குபவர் போரில் மட்டும் கொலை செய்வாரா என்ன?” என்றார் காகத்துவஜர். துரோணர் ஒன்றும் சொல்லவில்லை. “பசுவை வாங்க விரும்பினால் வேளாண்குடிகளில் எங்காவது சென்று கேட்டுப்பார்க்கவேண்டியதுதானே?” என்றார் சித்ரகர். துரோணர் “என்னிடம் பணமில்லை. இங்கே எனக்கு பணம் ஊதியமாக அளிக்கப்படுவதில்லை” என்றார். அதை தன் மீதான குற்றச்சாட்டாக சுதர்மன் எடுத்துக்கொண்டான். உரக்க “ஆம், அது நீர் என் தந்தையிடம் ஒப்புக்கொண்ட முறை. அன்று இங்கே உணவு மலிந்திருந்தது. கோதுமையும் வஜ்ரதானியமும் தினையும் களஞ்சியங்களை நிறைத்திருந்தன. இப்போது மழைபொய்த்து வேளாண்குடிகள் இல்லங்களிலேயே காலையுணவுக்கு கிழங்கும் கீரையும் உண்கிறார்கள். ஆயினும் நாங்கள் உமக்கு தானியமளிப்பதை நிறுத்தவில்லை” என்றான்.
துரோணர் அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை. சுதர்மன் “நீர் இங்கே வந்தபோது முப்பது மாணவர்கள் இருந்தார்கள். இப்போது எட்டு மாணவர்கள்தான். அதற்கேற்ப உமது ஊதியத்தையும் குறைத்துக்கொள்ளலாம் என்று வணிகர்கள் சிலர் சொன்னார்கள். உமது இல்லத்துக்குப் பின்புறம் உம் மனைவி காய்கறிகள் பயிரிடுகிறாள். அது ஊருக்கு உரிமையான நிலம். அதையும் உமது ஊதியமாகவே கணித்துக்கொள்ளவேண்டும் என்றார்கள். நான் அதை செவிகொள்ள மறுத்துவிட்டேன். என் தந்தை அளித்த வாக்கை மீற நான் விரும்பவில்லை” என்றான். சித்ரகர் “ஊர்க்கணியாருக்கே போகத்துக்கு ஒருமுறைதான் தானியம் வழங்குகிறோம். அவர் இல்லையேல் இங்கே விதைப்பும் அறுவடையும் நிகழமுடியாது” என்றார்.
துரோணர் தலைவணங்கி திரும்பப்போனபோது சுதர்மன் “அதோ வேப்பமரத்தில் கட்டப்பட்டிருக்கிறதே அந்தப் பசுவை கொள்கிறீரா துரோணரே?” என்றான். துரோணர் கணநேரத்தில் எழுந்த நம்பிக்கையுடன் “ஆம்” என்றார். “ஆனால் அதற்கு நீர் பிராமணனாக மாற வேண்டுமே” என்று சுதர்மன் தொடையில் அடித்தபடி நகைத்தான். வணிகர்களும் ஷத்ரியர்களும் சேர்ந்துகொண்டனர். “என் தந்தையின் திதிநாளில் தானம் கொடுப்பதற்குரிய பசு அது…” என்றான் சுதர்மன். “இவர் தன்னை பிராமணர் என்றே எண்ணியிருக்கிறார். ஊனுணவும் விலக்குகிறார். இவரையே பிராமணனாக எண்ணிக்கொள்ள நெறியிருக்கிறதா என்று பார்க்கவேண்டும்” என்றார் வணிகரான பிரபுத்தர். “இவரா, இவரை ஷத்ரியர் என்று ஒருமுறை சொன்னபோது உத்கலத்திலிருந்து வந்த ஒரு வணிகன் இவர் ஷத்ரியரே அல்ல. ஏதோ மலைவேடன் வேடமிட்டு வந்து நம்மை ஏமாற்றுகிறான் என்றான்” என்று சுதர்மன் சொன்னான்.
துரோணர் திரும்பி தலைகுனிந்து நடந்தார். “துரோணரே” என்றபடி வணிகரான பரிக்ரமர் தன் கனத்த பண்டி குலுங்க பின்னால் வந்தார். “தங்களுக்கு நான் ஒரு பசுவைத் தரமுடியும்… அதற்கான விலையை நான் சிறுகச்சிறுக பெற்றுக்கொள்கிறேன்.” துரோணர் “என்னிடம் பணமே வருவதில்லை வணிகரே” என்றார். “நான் தருகிறேன். என் படகுக்குக் காவலாக வில்லேந்தி வாருங்கள்.” துரோணர் சினத்தை விழிகளில் மட்டும் நிறுத்தி “இங்கு நான் குருகுலம் நடத்துகிறேனே” என்றார். “இந்தச்சிற்றூரில் எட்டு சிறுவர்கள் எதை கற்கப்போகிறார்கள்?” என்றார் பரிக்ரமர். துரோணர் பெருமூச்சு விட்டபின் திரும்பி நடந்தார். “என்ன சொல்கிறீர்?” என்று பரிக்ரமர் கேட்டதை பொருட்படுத்தவில்லை.
அவர் திரும்பிவந்தபோது படி ஏறும்போதே புரிந்துகொண்ட கிருபி ஒன்றுமே கேட்கவில்லை. அவள் ஏதாவது கேட்டால் நன்றாக இருக்குமே என்று அவர் எண்ணிக்கொண்டார். ஒவ்வொரு கணமும் அவளுடைய குரலுக்காக அவரது முதுகு காத்திருந்தது. பின்னர் ஆழ்ந்த தன்னிரக்கம் அவருள் நிறைந்தது. அதை கிருபி மீதான சினமாக மாற்றிக்கொண்டார். விழித்திருக்கும் நேரமெல்லாம் அவளுடன் அவர் அகம் சொல்லாடிக்கொண்டே இருந்தது. ‘நீ என்னை துரத்துகிறாய். புழுவை குத்தி விளையாடும் குழந்தைபோல என்னை வதைக்கிறாய். சொற்கள் வழியாக நான் என்னை நியாயப்படுத்திக்கொள்வேன் என்பதனால் சொல்லின்மையால் என்னைச் சூழ்ந்திருக்கிறாய்.’ சொற்கள் கசந்து நிலைத்து உருவாகும் வெறுமையில் ஒருகணம் திகைத்தபின் மீண்டும் திரும்ப சொற்களுக்குள் புகுந்துகொண்டார்.
விற்களத்தில் பயிற்சி எடுக்கும்படி மாணவர்களிடம் சொல்லிவிட்டு துரோணர் கொற்றவை ஆலயத்தின் முன் பீடத்தில் அமர்ந்து நாணல்களைச் செதுக்கு அம்புகளாக ஆக்கிக்கொண்டிருக்கையில் களத்தில் உரத்த சிரிப்பொலிகளும் கூச்சல்களும் கேட்டன. அஸ்வத்தாமன் அவனைவிடப்பெரிய உடல்கொண்ட ஜெயசேனன் மேல் பாய்ந்து அவனை தலையால் முட்டித் தள்ளிவிட்டு பாய்ந்து அவரை நோக்கி ஓடி வந்தான். மல்லாந்து விழுந்த ஜெயசேனன் புரண்டு அருகே கிடந்த அம்பு ஒன்றை எடுத்தபடி துரத்தி வந்தான். அஸ்வத்தாமன் அழுதபடி ஓடிவந்து அவர் மடிமேல் விழுந்து தொடைகளைத் தழுவியபடி உடல்குலுங்கினான். பின்னால் ஓடிவந்த ஜெயசேனன் மூச்சிரைக்க “குருநாதரே, இவனை தண்டியுங்கள்… இவன் களநெறிகளை மீறி என்னைத் தாக்கினான்” என்று கூவினான்.
“ஏன்?” என்று துரோணர் கேட்டார். “இவன் எங்களிடம் பொய்சொன்னான். தானும் ஒவ்வொருநாளும் பாலருந்துவதாகச் சொன்னான். பசுவில்லாமல் எப்படி பாலருந்துவாய் என்றுகேட்டபோது அவன் அன்னை ஒவ்வொரு நாளும் காட்டுக்குள் சென்று குதிரைகளின் பாலை கறந்துகொண்டுவருவதாகச் சொன்னான்” என்றான் ஜெயசேனன். அவனுக்குப்பின்னால் வந்த பிருஹத்கரன் “அவனிடம் அந்தப்பாலைக் கொண்டுவரும்படி சொன்னோம். இன்று குடுவையில் அன்னப்பாலைக் கொண்டுவந்து அதுதான் பால் என்று சொல்கிறான். நாங்கள் சிரித்தபோது ஜெயசேனனை முட்டித்தள்ளினான்” என்றான்.
அவனுக்குப்பின்னால் வந்து நின்றிருந்த சுபாலன் “அன்னப்பாலை பசும்பால் என்கிறான்… இனி நெல்லை பசு என்று சொல்லப்போகிறான்” என்று சொல்ல பிற மாணவர்கள் நகைத்தனர். அவர்களின் ஒவ்வொரு சொல்லுக்கும் அஸ்வத்தாமாவின் உடல் அதிர்ந்து குறுகுவதை, தன் இடையில் அவன் கைகள் இறுகுவதை துரோணர் உணர்ந்தார். “ஆம், அவன் பொய் சொன்னது பிழையே. களநெறியை மீறியது அதைவிடப்பெரிய பிழை. எந்நிலையிலும் எவரும் நெறிகளை மீற ஒப்பமாட்டேன்” என்ற துரோணர் “அஸ்வத்தாமா, எழுந்து நில்” என்றார். அஸ்வத்தாமன் அவரது இடையை இறுகப்பற்றிக்கொண்டான். அவர் அவனைப்பிடித்து விலக்கி தூக்கி நிறுத்தினார்.
தோள்களைக் குறுக்கி தலைகுனிந்து நின்ற அஸ்வத்தாமனின் முகத்திலிருந்து விழிநீர் சொட்டிக்கொண்டிருந்தது. “ஜெயசேனா, இவனுக்கு பன்னிரு தண்டங்களை அளி” என்றார் துரோணர். மாணவர்கள் பலர் உரக்க “பன்னிரு தண்டங்கள்… பன்னிருதண்டங்கள்” என்று கூவினர். பிருஹத்கரன் ஓடிச்சென்று குருகுலக்குடிலில் இருந்து தண்டம் அளிப்பதற்கான பிரம்பை எடுத்துவந்தான். ஜெயசேனன் ஓடிச்சென்று அதை வாங்கிக்கொண்டான். சுபாலனும் இரு மாணவர்களும் அஸ்வத்தாமனை பிடித்து விலக்கி நிற்கச்செய்தார்கள். இளையவனாகிய சித்ரரதன் “அழுகிறான்” என்றான். சுபாலன் அவனைப்பிடித்துத் தள்ளி “விலகி நில் மூடா” என்றான்.
ஜெயசேனன் பிரம்பை ஓங்கி வீசி அஸ்வத்தாமனின் தொடைகளில் அடிப்பதை துரோணர் ஒருமுறைதான் பார்த்தார். சிவந்த மெல்லிய காலில் அடிவிழுந்ததும் அஸ்வத்தாமன் ‘அன்னையே’ என்று முனகினான். அந்தச்சொல் துரோணரை நடுங்கச்செய்தது. அவர் பார்வையைத் திருப்பிக்கொண்டு செதுக்கியெடுத்த அம்புகளை அள்ளிக்கொண்டு குருகுடிலைநோக்கிச் சென்றார். அதன்பின் அஸ்வத்தாமன் ஓசையின்றி அடிகளை வாங்கினான். ஒவ்வொரு அடிவிழும் ஒலிக்கும் துரோணரின் உடல் அதிர்ந்தது. அடித்து முடித்த ஜெயசேனன் வந்து பிரம்பை திரும்ப வைத்துவிட்டு “குருநாதரே, அவனை என்ன செய்வது?” என்றான். “இன்று அவன் வீடுதிரும்பட்டும்” என்று சொன்னபோது துரோணர் குரல் உடைந்திருந்தது.
மீண்டும் வந்து பீடத்தில் அமர்ந்துகொண்டபோதுதான் தன் உடல் வியர்த்து வழிவதை துரோணர் அறிந்தார். காற்று வீசியபோது குளிர்ந்து முதுகு சிலிர்த்தது. தொண்டைக்குள் இருந்து குரலை எடுக்கமுடியவில்லை. ஜெயசேனன் “குருநாதரே, இன்றைய பயிற்சிகள் என்ன?” என்றான். “இன்று பயிற்சி முடிந்தது. நீங்கள் செல்லலாம்” என்று மெல்லிய குரலில் சொன்னபடி துரோணர் எழுந்துகொண்டார். அவர் நடந்தபோது ஜெயசேனன் “தங்கள் சால்வையை மறந்துவிட்டீர்கள் குருநாதரே” என்று எடுத்துத் தந்தான்.
காலைவெயிலில் கண்களை கூசிய புல்வெளி முடிவில்லாமல் விரிந்துகிடப்பது போலிருந்தது. ஒவ்வொரு அடியையும் நீருக்குள் தூக்கி வைப்பது போல வைத்து நடந்து சென்றார். குடம்நிறைய குளிர்நீரை எடுத்து அருந்தவேண்டும். காற்றுவீசும் ஏதேனும் ஒரு மரநிழலில் அப்படியே படுத்துவிடவேண்டும். இல்லை, நெஞ்சில் மாறி மாறி அறைந்தபடி வானம் வரை கேட்கும்படி கூச்சலிடவேண்டும்.
புல்வெளிக்கு அப்பால் கிருபி கூந்தல் கலைந்து பறக்க, நெகிழ்ந்து சரிந்த ஆடையை கைகளால் பற்றிக்கொண்டு ஓடிவருவதைக் கண்டு கால்கள் அசைவிழக்க நின்றுவிட்டார். அவள் நெடுநேரம் வந்தபடியே இருந்தாள். அது ஒரு கனவு என்ற எண்ணம் அவருள் வந்து சென்றது. தொலைவிலேயே அவளுடைய கடும்வெறுப்பில் வலிப்புகொண்ட முகமும் ஈரமான விழிகளும் நெரித்த பற்களும் தெளிவாகத் தெரிந்தன. திரைச்சீலையில் வரைந்திட்ட ஓவியம் போல அவள் முகம் அவர் முன் நெளிந்தபடி நின்றிருந்தது.
அவள் அருகே வந்ததை திடீரென்றுதான் உணர்ந்தார். “கிருபி, நான்…” என அவர் சொல்லத்தொடங்குவதற்குள் அவள் கையை நீட்டி சீறும் மூச்சு இடைகலந்த சொற்களில் சொன்னாள். “நீங்கள் பிராமணன் என்றால் சென்று தானம் வாங்குங்கள். ஷத்ரியன் என்றால் வில்லேந்திச்சென்று கவர்ந்து வாருங்கள். சூத்திரன்தான் என்றால் உழைத்து கூலிபெற்றுவாருங்கள். இல்லை வெறும் மலைவேடன் என்றால் இரவில்சென்று திருடிக்கொண்டுவாருங்கள்’ ஆங்காரமாக அவள் குரல் எழுந்தது ‘மனிதன் என்றால் வெறும்கையுடன் இனி என் இல்லத்துக்கு வரவேண்டாம்”
துரோணர் கைகளைக்கூப்பி “ஆம்… அவ்வாறே” என்று சொல்லிவிட்டு அக்கைகளில் கண்ணீர் வழியும் கண்களை வைத்து விம்மினார். பின்னர் அங்கிருந்தே திரும்பி நடந்தார்.