கீதை, கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்.

தங்களுடைய கீதை வழிகள்  கட்டுரை படித்துக்கொண்டிருக்கிறேன். கீதை தர்க்க நூல் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். கீதை ஒப்பற்ற நூல் என்பதை தங்களின் ஒவ்வொரு கட்டுரையின் மூலமும் நீங்கள் நிரூபித்து வருகிறீர்கள்.  உங்களுடய தர்க்க வழியும் சரியான முறையில் அமைந்து உங்கள் கட்டுரைகளை சிறப்பிக்கின்றன. இந்து மதத்தின் சம்பிரதாயங்களை மற்ற மதத்தின் சடங்குகளுடன் ஒப்பிடும் முன் சிலவற்றை நாம் கருத்தில் கொள்ளவேண்டும் என நினைக்கிறேன்.
இந்து மதம் மனிதர் அனைவரும் ஒரே அச்சில் வார்த்த பதுமைகளாக கருதுவதில்லை. மனிதர்கள் வெவ்வேறு வகையினர் என்பதால் அவர்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்கு வெவ்வேறு வழிகள் தேவைப்படலாம் என்பதை கருத்தில் கொள்கிறது.   இது பல்வேறு சடங்கு மற்றும் வழிமுறைகள் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது. ஆனாலும்  இம்மதத்தைசார்ந்தவன் மற்றவர் வழிமுறையையும் மதிக்கிறான். அதுவும் ஆன்மீக முன்னேற்றதிற்கானதுதான் என ஒத்துக்கொள்கிறான். இம்மதத்திற்குள் ஒருவழிமுறையிலிருந்து மற்றொரு வழிமுறைக்கு மாறுவது மிக இயல்பாக நடைபெறுகிறது. சமூகத்தில் எவ்வித அதிர்வலைகளையும் பெரிதாக ஏற்படுத்துவதில்லை. எனக்கு தெரிந்தவரை சைவர்கள், கீதையை படிப்பதிலும் விளக்குவதிலும், வைணவர்களைவிட சிறந்து விளங்குகிறார்கள். என் முன்னோர்கள் சைவர்கள் என்றே நினைக்கிறேன். நான்  சைவ மரபை பின் பற்றுபவனாகவே இருந்துவந்துள்ளேன். இருப்பினும் இது நான் கீதையை படிப்பதற்கு தடையாக இருந்ததில்லை. மாறாக நான் சைவனாக இருப்பதால் கீதையை ஒரு தத்துவநூலாக என்னால் கற்க முடிந்தது. கண்ணனை ஒரு நண்பனை அல்லது ஒரு ஆசிரியனைப்போல் கொள்ளமுடிந்தது.  இந்து மத பிரிவுகள் மற்றும் அதற்கான சடங்குகளை மற்ற மதத்து பிரிவுகளுடனும் சடங்குகளுடன் ஒப்பிட முயல்வது தவறு என்றே கருதுகிறேன்.

 நம்பிக்கைகளை பற்றி மிக தெளிவாக எழுதியிருந்தீர்கள். கடவுள் உண்டு- இல்லை என்ற quantum theory  போன்ற இருமைப்பார்வை நீண்ட நெடுங்காலமாகவே இந்திய மரபில் இருந்துவருகிறது. நம்மாழ்வாரின்(?) ‘உளன் அவன்’ எனத்தொடங்கும் பாடல், அருணகிரி நாதரின் பாடலான  ‘உருவாய்  அருவாய் உளதாய் இலதாய்’  மற்றும் ‘வானாகி மண்ணாகி’ எனத்தொடங்கும் பாடலில்வரும் தொடரான ‘உண்மையுமாய் இன்மையுமாய்’ போன்றவை  உடனடியாக என் நினைவிற்கு வருகின்றன. இவற்றை எழுதியவர்கள் பெரும்பக்தர்கள் என்பதை நாம் நினவில்கொள்ளவேண்டும்.

காளியை வழிபடும் பக்தர் ஒரு பெரும் ஞானியாகக்கூடும் ஒரு இராமகிருஷ்ண பமஹம்சரைப்போல. பிள்ளையாரை வழிபடும் ஒருவன் விநாயகர் அகவல் படிப்பான். என்றாவது ஒருநாள் அதன் பொருளை அறிய முயல்வான். முருகனை வழிபடும் ஒருவன் கந்தர் அனுபூதியில் வரும் ”எல்லாமற என்னை இழந்த நலம்”,  ”சும்மா இரு சொல்லற” மற்றும் “யானாகிய என்னை விழுங்கி வெறும் தானாய் நிலை நின்றது தற்பரமே”  போன்ற சொற்றொடர்களை விளங்கிக்கொள்ள என்னைப்போல் முயற்சிக்கமாட்டானா என்ன? ஆன்மீக நிலையில் கீழே இருக்கும் ஒருவனை இந்துமத சடங்குகள் ஒவ்வொன்றும் ஒரு படிக்கட்டாய் இருந்து உயர்த்திவிடுகின்றன. நாம் சற்று உயரத்தில் சென்று விடுவதால் கீழ் படிக்கட்டுகள் தேவையற்றதாய் ஆகிவிடுவதில்லை. சிலர் படிக்கட்டுகளையே முடிவான நிலையாக கருதுகிறார்கள் என்பது உண்மைதான். ஆனாலும் விரைவில் அவர்கள் தன் ஆன்மீக பயணத்தை தொடர ஆரம்பிப்பார்கள் என்பது நிச்சயம். சற்று நேரம்பிடிக்கலாம். சிலசமயம் மற்றொரு பிறவி(?).

மிகச்சிறந்த உபநிஷதங்கள் யாவும் ஒரு கதையில் அல்லது  நாடகச்சூழலில் பொருத்தப்பட்டே அமைக்கப்பட்டுள்ளது. எனவே கீதையும் அதை எழுதியபோது ஒரு பொருத்தமான சூழலிலேயே அமைக்கப்பட்டிருக்கும் எனக்கருதுகிறேன். எனக்குதெரிந்தவரை மகாபாரதத்தைவிட பொருத்தமான சூழல் கீதைக்கு இருப்பதாய் தோன்றவில்லை, மகாபாரதம் என்ற தங்க பதக்கத்தில் பதிக்கபட்ட மாணிக்கத்தைபோல் கீதை விளங்குகிறது. கீதை முதலில் வந்ததா அல்லது மகாபாரதம் முதலில் வந்ததா என்பது தேவையற்ற ஒன்றாக நான் கருதுகிறேன். கண்ணனே கீதைதத்துவம்  சூரியனுக்கு முன்னரே கூறப்பட்டதாக கீதையில் கூறியள்ளான். தத்துவம் புதியதல்ல ஆனால் கூறியவிதம் மகாபாரத சூழலுக்கு மிகவும் ஏற்புள்ளதாக எனக்கு தோன்றுகிறது.
கீதையை ஒருவனுக்கு இந்துமதம் அறிமுகப்படுத்துகிறது. அதை விளங்கிக்கொள்வதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுக்கிறது. அவனை கீதையை கற்பதற்கு பயிற்சிஅளிக்கிறது.ஆன்மீக விஷயங்களை பொருத்தவரையில் எனக்கு வரலாறு என்ன சொல்கிறது என்பதைப்பற்றி அக்கறையில்லை. நான் ஏன் கீதையின் காலம் மற்றும் மற்ற மதத்தினுடனான தொடர்பு ஆகியவற்றை ஆராயவேண்டும்?

 சிலர் கீதையை வணங்கமட்டுமே செய்கிறார்கள் என்பதை நானும் கண்டிருக்கிறேன். அது தவறாய் எனக்கு தோன்றவில்லை. சிறுவர்கள் பெருக்கல் வாய்ப்பாட்டை, கணக்கு சமன்பாடுகளை மனப்பாடம் செய்வதுபோல் தான் அது. மேல்வகுப்பிற்கு போகும்போது அதன் உட்கருத்துகளை புரிந்துகொள்வர்.  அவர்களுக்கான கீதை தருணத்தை காலம் ஏற்படுத்திக்கொடுக்கும். அதற்கான வாய்ப்பு மற்றவர்களை விட இவர்களுக்கு அதிகம் இருக்கிறது என்பது என் எண்ணம்.

உங்கள் கட்டுரை நான் கீதையை மேலும் விளங்கிக்கொள்ள மிகவும் துணைபுரிகின்றன. நன்றி

அன்புடன்
த.துரைவேல்

****

அன்பு ஜெமோ..

தங்களின் இந்த கீதை வழிகள்கட்டுரை பல விசயங்களை தொட்டுச் செல்வதே அதன் சிறப்பு. இறை நம்பிக்கை சம்பந்தமான விசயத்தில் ஒரு வரி வருகிறது..நான் என் தர்க்கத்தின் தடியுடன் போய் அவர்களை உடைக்க முயல்வதில் என்ன பொருள் இருக்க இயலும்?’ என்று. சரி..தடியை எடுத்துச் செல்லவேண்டாம். மெல்லிய குரலில் அவர்களை விலகிச் செல்ல கேட்கலாம் இல்லையா? நம்பிக்கை என்ற பெயரில் மற்ற மனிதர்களுக்கு கிடைக்க வேண்டிய பயனை தடுப்பவர்களை எப்படி கையாள்வது? பாலத்தை ராமர் கட்டினார் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை, அது  ஒரு நம்பிக்கைதான் என்று அகழாராய்ச்சி நிபுணர்கள் சொல்லிவிட்ட பின்பு, சொன்ன நிபுணர்களின் கையை பிடித்து திருகி அவர்களை பணி மாற்றம் செய்யும் அளவுக்கு சமூகத்தை அழுத்தும் இந்த நம்பிக்கையாளர்களை எப்படி சமாளிப்பதுஇயற்கையை மனிதன்  ஆராய்ந்து அதை தன் வசப்படுத்தும் போது மனிதன் இப்போது வைத்திருக்கும் இந்த இறை நம்பிக்கைகள் உதிர்ந்துவிட வாய்ப்புள்ளதாலே மனிதன் அஞ்சுகிறான்.அந்த அச்சம்தான் மற்ற மனிதர்களுக்கு இடைஞ்சலை கொடுக்கின்றது. இறை நம்பிக்கை என்பது தனி மனித விசயமாக இருக்கும்போதே அது ஒரு சமூக பிரச்சனையாகவும் இருப்பதால் அதை விவாதத்துக்குள் இறக்குவதை தவிர வேறு வழியில்லை. இறை நம்பிக்கையை முழுக்க முழுக்க தனிமனித விசயமாக பார்க்கமுடியாது என்பது என் கருத்து.

மற்றபடி கீதை படிப்பதற்கு ஒரு நல்ல நூல்.  அதில் ஒருவித விட்டேத்தியான, நம் கைகளில் ஒன்றும் இல்லை போன்ற ஒப்பியம் கலந்த சித்தர்கள் போக்கு தெரிவதாகவே நான் கருதுகிறேன்.

ச.மனோகர்

***

அன்புள்ள மனோகர்

நான் சொன்னவற்றைணிவ்வாறு வலியுறுத்த விரும்புகிறேன். தர்க்கம் போலவே நம்பிக்கையும் ஒரு கருவி. இரண்டுக்கும் பயன்கள் உண்டு. பயன்படுத்தப்படும் ஒரு பொருளை பயனற்றது என்று வாதிடுவதும் சரி வெல்வதும் சரி நடக்காத காரியம். நம்பிக்கையுடன் மோதும் தர்க்கம் வீணாக இயங்கும் இயந்திரம் போன்றது.

நம்பிக்கை அரசியல்,சமூகவியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும்போது அது வேறு ஒரு தளத்தை அடைகிறது. கண்டிப்பாக அது எதிர்க்க படவேண்டியதே. அது இவ்விவாதத்துக்குள் வராது. இது தனிமனித ஆன்மீக தேட்டம் தொடர்பான விவாதம் மட்டுமே. நம்பிக்கையின் அடிப்படையிலேயே உலகில் எப்போதும் சர்வாதிகாரங்களும் வன்முறைகளும் கட்டமைக்கப்படுகின்றன. தர்க்கம் என்பது ஜனநாயகத்தின் அடிக்கட்டுமானமாகும்.

இன்னொன்று உண்டு. ஒரு சமூகச் செயல்பாட்டில் தர்க்கமும் நம்பிக்கையும், மதமும் ஆன்மீகமும் , அறிவியலும் மூடநம்பிக்கைகளும் மோதியபடியேதான் இருக்க வேண்டும். அச்சமூகம் அந்த முரணியக்கம் மூலமே முன்னகர முடியும். சொல்லப்போனால் சமூகத்தில் சிந்தனை என்பது நிகழ்வதே ஒரு விவாதமாகத்தான்.  இந்த கீதை விவாதத்திலேயே ஒரு தரப்பை அப்படி முன்னிறுத்தி பிறவற்றுடன் விவாதிக்கும் போக்கை நாம் காணலாம்.  அதற்கும் தனிமனித ஆன்மீக தேட்டத்துக்கும் தொடர்பில்லை என்பதே என் எண்ணமாகும்.

ஜெயமோகன்

கீதை வழிகள்

முந்தைய கட்டுரைஒரு விழா
அடுத்த கட்டுரைகாந்தியின் எளிமையின் செலவு