பெண்ணெழுத்து – பெண்களின் கடிதங்கள்

வணக்கம்.

நேற்று ஒரு தமிழகப் பதிப்பாளருடன் பேசினேன். அவர் சொன்னார், இன்று பெண்கள் உடல் குறித்து, உடல்மொழி பற்றி எழுதும் எழுத்துகள்தான் விற்பனையாகிறது என்று. மேலும் அவர்கள் என்ன எழுதுகிறார்கள், எப்படி அதைச் சொல்கிறார்கள் என்பதை வாசிப்பதற்காகத்தான் அவர்கள் நூல்களை வாங்குகிறார்கள் என்று. மற்றொன்றும் சொன்னார், ஃபேஸ்புக்கில் அல்லது இணையத்தில் ஏதாவது சர்ச்சைக்குரிய ஏதாவது ஒன்றைப் பேசி பேரைப் பிரபலமாக்க வேண்டும்.

உங்கள் கட்டுரையை முதலில் படித்தபோதே அது எனக்கு நியாயமானதாகவே பட்டது, இப்போது அதன் நிதர்சனத்தை உணரவும் முடிகிறது.

உண்மையில் நீங்கள் குறிப்பிட்டிருப்பதுதான் உண்மையான நிலை. எள்ளல் தொனி இல்லாமல், சற்று வருத்தமான தொனியில், ஒரு பாசாங்கான அக்கறையுடன் நீங்கள் அதைச் சொல்லியிருந்தால் ஒருவேளை அதனை நேரடியாக ஏற்றிருப்பார்கள். இப்போதும் தன்னளவில் ஒவ்வொருவருக்கும் உங்கள் கட்டுரையின் நியாயம் நிச்சயம் புரிந்திருந்தாலும், அதை தன்னிலையில் மறுப்பதற்காக எதையெதையோ எழுதி, தங்களையே மேலும் கேவலப்படுத்திக்கொள்கிறார்கள்.

எழுத்தின் நிலையும், எழுத்தாளர் பிரபலமாவதற்கான காரணங்களும் மிகவும் வருத்தம் அளிக்கின்றன. முதலில் எனக்கு எழுத்தாளர்களைப் பெண்கள், ஆண்கள் என்று பார்ப்பதில் உடன்பாடில்லை. பாலைமீறி, எழுத்தின் தரத்தினடிப்படையில் ஒருவர் வாசிக்கப்பட வேண்டும் என்பது என் கருத்து.
ஆனால் இப்போது, பெண்களின் எழுத்து மனதின் வக்ரத்தை வடிகட்டுவதற்காக வாசிக்கும் நிலை அதிகரித்து வருவது அதை அறிந்து அதற்குத் தீனி போடும் நிலையில் எழுதப்படுவது இன்னும் அதிக அயர்ச்சியைத் தருகிறது.

பிரசுரமாகும் பல எழுத்துகள் எத்தனைதூரம் திருத்தப்பட்டு வருகிறது என்பதை அறிவேன். முக்கியமான சில படைப்பாளிகளின் எழுத்துகளின் கையெழுத்துப் பிரதிகளைப் பார்த்திருக்கிறேன். அவர்களது தானா என்று பெரும் சந்தேகம் எழும். திருத்துபவரே அதை மறு உருவாக்கம் செய்கிறார்.

பெண்களிடம் தங்களுக்குத் தேவையான சலுகைகளைப் பெறுவதற்காக அவர்களது நூல்களைப் பிரசுரிப்பவர்களையும் தெரியும். இவையெல்லாம் நிச்சயம் உங்களுக்கும் தெரிந்திருக்கும்.யதார்த்த நிலை இதுதான்.

இதைத்தான் எதிர்க்க வேண்டும். பெரும் ஆற்றலாலும் வல்லமையாலும் உழைப்பாலும்.ஆனால் அதைவிடுத்து, திறன்மிக்க எழுத்தாளர்களே தரம் குறைந்து ஏன் தெருச்சண்டை போடுகிறார்கள் என்பது உண்மையிலேயே எனக்குப் புரியவில்லை.

சமூக ஊடகங்களில் நேரம் செலுத்துவதில்லை. அதில் இடம்பெறும் சர்ச்சைகள், விவாதங்களில் எனக்குப் பெரிய ஆர்வமில்லை. அதனால் அம்பையின் ஃபேஸ்புக் கருத்துகளை இப்போதுதான் பார்த்தேன். எனக்கு மிகவும் வருத்தமாகவும் ஒரு பெண்ணாக அவமானமாகவும் இருக்கிறது. அதுவும் அம்பை முதிர்ச்சியடைந்த, வயதாலும் அறிவாலும் ஏன் இவ்வளவு இறங்கிப் பேசுகிறார் என்று புரியவில்லை. அவர் எழுத்துகளைப் படித்து, அவருடன் சகஜநிலையில் பேசும் வரையிலும் அவர் மீது ஒரு பிரமை இருந்தது. ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னர் அவரது பேச்சு அவரது ஆளுமைக்கு ஒவ்வாததாக இருந்தது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்தபோது, அவரிடம் பெரிய மாற்றம் தெரிந்தது. இப்போது மீண்டும் அவர் கருத்துகளைப் படிக்கும்போது, ஏன் இப்படி ஆனார் என்ற கேள்வியே எழுகிறது. எந்த ஆதங்கம், என்ன இயலாமை அவரை இப்படி ஆக்கியுள்ளது எனத் தெரியவில்லை. நல்ல ஒரு எழுத்தாளரின் இத்தகைய வெளிப்பாடு அவர்மீதான மதிப்பீடுகளை ஏற்படுத்தி விடுகிறது. இது அவருக்குப் புரியாமலா இருக்கும்?

எழுத்துலகில் தற்போது நீங்கள் ஒரு பிதாமகராக உயர்ந்து வருகிறீர்கள். உங்கள் எழுத்துப் பணியையும் தாண்டி, சமூக அக்கறையுடன் சிந்திக்கிறீர்கள், செயல்படுகிறீர்கள். முக்கியமான எல்லா மனிதர்களையும் மனிதர்களாக மதித்துப் பேசும் பண்பாளராக வளர்ந்திருக்கிறீர்கள். இது சாதாரணமாகச் சாத்தியமாகாது. அறிவின் முதிர்ச்சி மட்டுமே இம்மனநிலைக்குப் போதாது. ஆன்மீக முதிர்ச்சியும் வேண்டியிருக்கிறது. எத்தனை பெரிய மனிதராக இருந்தும், துளியளவு அகந்தையும் இன்றி எப்படிப்பட்டவரையும் மதித்து, அவர் கருத்தைக் காது கொடுத்துக் கேட்கும் பண்பை மிகச் சிலரிடம் தான் பார்த்திருக்கிறேன் – எனது அனுபவத்தில்.

நீங்களும் அவர்களுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருப்பதை விடுத்து, அவர்களை வழிப்படுத்தலாம், நேரடியாக இல்லாமல் மறைமுகமாக. அது உங்களுக்குச் சாத்தியமான ஒன்று என நினைக்கிறேன்.

அன்புடன்
லதா

அன்புள்ள லதா,

வெவ்வேறு முறை எனக்கு அம்பையுடன் தொடர்பு கொள்ள வேண்டியிருந்திருக்கிறது. எப்போதுமே அவர் முதிர்ச்சியுடன் நடந்துகொண்டதாக நினைவில்லை. வருத்தமும் நகைப்பும் அளிக்கும் பல தருணங்களை அறிவேன். தன்னை கொதிக்கும் அனல்நிலையில் வெளிப்படுத்தியாகவேண்டிய கட்டாயத்தை அவர் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். அந்தப்பாவனைகளே அவரை இயக்குகின்றன. ஆனால் தனிப்பட்ட ஆளுமை முதிர்ச்சி என்பது ஓர் எழுத்தாளரின் இன்றியமையாத குணாதிசயம் அல்ல. கமலாதாஸ் ஒருபோதும் முதிர்ச்சியுடன் இருந்ததில்லை. ஆனால் அந்தக்கொந்தளிப்பை கலையாக ஆக்க அவரால் முடிந்தது. அம்பையின் அந்த வேகமே அவரை எழுத்தாளராக ஆக்கும் விசை. எது ஒருவரின் ஆளுமையின் சிறப்பம்சமோ அது நேரடியாக வெளிவருவதே கலை. அது பாசாங்காக மாறும்போதே சரிவு தொடங்குகிறது.

நானும் பல பெண்படைப்பாளிகளின் கைப்பிரதிகளைக் கண்டு திகைத்திருக்கிறேன். கைப்பிரதியைச் செம்மையிடுவதென்பது எங்கும் நிகழ்வதுதான். ஆனாலும் இந்த அளவுக்கா என்ற வியப்பு ஏற்படும். ஆரம்பகட்டத்தில் அது நியாயப்படுத்தக்கூடியதுதான். ஆனால் பத்தாண்டுகளுக்குப்பின்னரும், எழுத்தாளர்கள் அடையக்கூடிய அனைத்து மதிப்புகளையும் பெற்றபின்னரும், உலக அரங்குகளில் தமிழை பிரதிநிதித்துவம் செய்யும் குரல்களாக தங்களை முன்னிறுத்திக்கொண்டபின்னரும்கூட அவர்கள் அப்படியேதான் இருக்கிறார்கள். இங்கே இதெல்லாம் போதும் என்ற எண்ணத்தையே அடைந்திருக்கிறார்கள். அதுதான் வருத்தமானது.

ஜெ

*

திரு ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம். இரண்டு நாட்களுக்கு முன்பு கோவையில் உங்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. கேளாமல் கிடைத்த அருளாக இனித்தது. எங்கு ஜெயமோகன் என்ற எழுத்தாளரை ஜெயமோகன் என்ற மனிதர் விழுங்கி இருப்பாரோ என்ற அச்ச உணர்வுடன் வந்த எனக்கு, அத்வைதத்தை உணர்ந்த சிலிர்ப்பு வந்தது.

என்னை பேச வைக்கக் கூடாது என்று சத்தியம் வாங்கிக்கொண்டு தான் கலெக்டர் அவர்களுடன் வந்தேன். ‘நீ என்ன செய்வதாய் அவரிடம் சொல்ல?’ என்று அவர் கேட்டதற்கு, ‘வெட்டியாக இருக்கிறேன்’ என்று சமாளிக்குமாறு விண்ணப்பித்துக்கொண்டேன். அப்படிச் சொன்னால் தாங்கள் மேலும் பல கேள்விகள் கேட்கக் கூடும் என்று எச்சரித்து வைத்தார்.

படப்புடன் தான் அறைக்குள் நுழைந்தேன். அறைக்குள் இருந்தவர்களின் கண்கள் என்னை பலவிதமான் கேள்விகள் கேட்பதை என்னால் உணர முடிந்தது. அமைதியின்மையின் சின்னமாக விளங்கிய உங்களை கண்ட பின்பு தான் துணிவு வந்தது. வந்தவுடன் கையொப்பம் வாங்கும் படலம் நிறைவேறியது, “பார்கவி அவர்களுக்கு” என்று நீங்கள் எழுதியிருந்தது சற்று வலித்தது. உங்களை பெயர் சொல்லி குறிப்பிட்டிருக்கிறேன், ஏக வசனத்தில் விமர்சித்தும் இருக்கிறேன், இறைவனை பக்தன் சுட்டுதல் போல. வாசகனுக்கு படைப்பாளியிடம் இருக்கும் உரிமை படைப்பாளிக்கு வாசகன் மீது இல்லை போலும் என்று மனதை தேற்றிக்கொண்டேன். உங்கள் படைப்பே எனக்கு சொந்தம் என்கின்ற பொழுது, இது என்ன கையொப்பம் வாங்கும் அபத்தம் என்று கூட தோன்றியது. சம்பிரதயத்திற்காக ஐந்து நிமிடம் உரையாற்றிய உங்களிடம் என் கோபத்தை காட்டியதாக இருக்கட்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

அதற்கு பிறகு நடந்தவை எல்லாம் “இனிமை” என்ற தலைப்பின் கீழ் தொகுக்க வேண்டியது. அந்த இருபது நிமிடஙகளில் என் கண்களும் செவிகளும் உங்களை உள் வங்கிக்கொண்டிருந்தது. என் முகத்தை கவ்விய புன்னகையை துடைக்க முடியவில்லை. என்னை சரியான பைத்தியம் என்று ஜெமோ கருதியிருப்பார் என்று கலெக்டர் அவர்களிடம் கூறினேன். கர்வத்தை கூட்டும், அதில் தவறில்லை என்று அவர் மறுமொழி அளித்தார். முந்தைய நாள் விழாவில் இருக்கையின் முனைகளை சிக்கென பிடித்த அந்த ஆளுமையின் அசௌகரியத்தை எண்ணி சிரித்துக்கொண்டேன்.

நிறைய கேள்விகள் மனதில் இருந்தது. விழா கூடத்தில் இருந்த பெண்கள் ஒருவருக்கும் நவீன தமிழ் இலக்கிய வாசிப்பு கிடையாது என்று நண்பர் ஒருவர் சொன்னதற்கு வழக்கமான கோபம் வரவில்லை. அம்பை அவர்களின் பெண்ணியப் புரிதலாக அது தோன்றியது. கோட்பாடு, கொள்கைகள் , அனுபவம் இன்றி பிறக்கும் வெற்று வாக்கியமாக அது அமைந்திருந்தது. இருந்தும், அதன் பின்னணியை நான் உணர்வதாக எண்ணுகிறேன்.

என் கருத்து:

பெண்ணியத்திற்கும் தலித்தியத்திற்கும் குறிக்கத்தக்க ஒற்றுமைகள் உண்டு. எப்படி ஜெயகாந்தனின் “நிக்கி” இன்று பாடப்புத்தகங்களில் இருந்து மறைகிறதோ, நாளை உத்தர ராமாயணமும், பாஞ்சாலி சபதமும் மறையும். எப்படி ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவனை, எவ்வளவு தகுதி இருந்தும் இந்த உலகம் பறையனாக தூற்றுகிறதோ, ஒரு பெண் , தன் வாழ்நாள் முழுவதும் பெண்ணுடல் ஊடாகவே பார்க்கப்படுகிறாள். பெரும்பான்மமையான பெண்கள் இதை உண்மை நிலை என்று ஒதுக்கிவிடுகிறார்கள். சிலருக்கு இந்த பார்வை ருசிக்கிறது . பெண்ணியவாதிகளுக்கு இது போராட்ட குணத்தையும், வெறுப்பையும் காழ்ப்புணர்ச்சியையும் ஒருங்கு தருகிறது. தாக்குதலே தற்காப்பு என்ற தாரக மந்திரத்தோடு செயல்படுகிறது. இத்தனை பரந்த பெண் சமூகத்தில் இந்த பெண்ணிய வாதி தான் தன்னை எதிர் வினை ஆற்றுவதற்கு தயார்படுத்திக்கொள்கிறாள் என்றால் அது மிகையல்ல. இந்தச் சிக்கலை தர்க்க ரீதியாக அணுகுவதற்கு ஒட்டுமொத்த சமூகத்தின் புரிதலும் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது.

ஆம், இன்றைய பெண்ணியவாதிகளுக்கு வாசிப்பு அனுபவம் போதவில்லை தான். அனால் அவளுடைய வாழ்க்கை அனுபவம் அவளை நிராசையால் நிரப்பி விட்டிருப்பது மறுக்க முடியாத உண்மை. இருத்தலுக்கே போராட வேண்டிய அவளுடைய சிந்தனைகள் வெறுப்பை உமிழ்ந்து விடுகிறது. அதுவே அவளை ஆண்கள் கொச்சைபடுத்தும் சராசரி பெண்ணாக்கி விடுகிறது என்பதை அவள் அறிவாளா? அம்பை போன்ற எழுத்தலருக்காவது (அச்சுப்பிழை தான், எதிர்பாராத அங்கதமோ?) இந்த புரிதல் இருந்திர்க்கலம்.

வெறுப்பையும் நிரசையயையும் துடைக்காமல் ரௌத்திரம் பழகுவதால் என்ன பயன்? ஒரே வரியில் “பெண்” என்ற வார்த்தையையும் ஏதோ ஒரு எதிர்மறையான பொருள் தரும் சொல்லையும் மட்டுமே படித்துவிட்டு மேலுக்கும் கீழுக்குமாய் குதிப்பது பரிதாபகரமானது. தரவுகளை கோர்க்காமல் வெற்றுச் சொற்களை உதிர்ப்பது பேதைமை. “நான் அபலை” என்று சொல்லாமல் சொல்கிறது. தன் உடலை அடையாள படுத்திக்கொள்கிறது . அது கருப்பு, குண்டு, அசிங்கம் என்றோ வெள்ளை, நளினம், அழகு என்றோ வருணிக்கப்படுவது. மிச்சம் மீதி இருக்கும் நுண்ணுணர்வுள்ள ஆண்களை, சமூகத்தை, புரிதலின் எல்லை கோட்டிற்கு அப்பால் துரத்த வல்லது.

நான் தனிப்பட்ட முறையில் பெண் என்ற ஒற்றை அடையாளத்தை சுமப்பதில்லை. சுமந்தால் ஒரு ஆணோடு என்னை தொடர்பு படுத்தாமல் இந்த சமூகம் ஓயமாட்டேன் என்கிறது. நட்பை கூட காதலின் விலைக்கு சீதனம் கொடுத்து வாங்க வேண்டி இருக்கிறது. பெண் என்பதற்காகவே ரசிக்கப்படுகிறேன். தேவதை ஆகிறேன், ராட்சசி ஆகிறேன். பூஜிக்கப்படுகிறேன், கொடுமைகளை சந்திக்கிறேன். அனால், நான் மட்டும் என்னை நானாக உணர்கிறேன். என்னை நம்புகிறேன். என்னை அளப்பரியாதவளாக உணர்கிறேன். வாசிக்கிறேன்.ஆக்க சக்தி ஆகிறேன்.

பெண் தன்னை பெண்ணாக மட்டுமே பார்த்தலை கைவிட வேண்டும். பரந்துபட்ட பார்வையை வளர்த்துக்கொள்ள வேண்டும். வாழ்வில் நாம் சுயமாக வாழ்ந்து அனுபவிப்பதை விட பல மடங்கு வாசித்து அனுபவிக்கலாம் என்ற எளிய உண்மையை பெண்கள் உணரவேண்டிய திருநாள் இந்நாளே. வாசித்தால், ஜெயமோகனின் பிரும்மாண்டமான படைப்புக்களையும் விமர்சனம் செய்யலாம். துணிவு இருந்தால் அவருடைய படைப்புகளில் அவ்வப்போது தலைதூக்கும் நரக வேதனைகள் அவருடைய தனிப்பட்ட வாழ்வில் சந்தித்த சோகங்களின் வெளிப்பாடா என்று கூட கேட்கலாம். ஒரு கூடை கதாபாத்திரங்களாக அவர் எப்படி வாழ்ந்து எழுதுகிறார் என்று வியக்கலாம். நீங்கள், இடது சாரியா வலது சாரியா என்று வினவலாம். ஜெமோ எத்தனை ஜெமொவடா என்று மெட்டமைத்துப் பாடலாம். அதற்கு முதலில் அவரின் எழுத்துக்களை படிக்க வேண்டும் என்ற தார்மீக கடமை உள்ளது.

இதைச் செய்யாமல் பெண்ணியம் பேசுவதை தவிர்க்கலாம். இல்லை இப்படிப் பேசுவதை பெண்ணியம் என்ற தலைப்பின் கீழ் தொகுக்காமல் இருக்கலாம். ஏனென்றால், உங்களால் என்னைபோன்ற வாசகரை (பெண் என்பதனால்!) ஜெமோ கண்டும் காணாமல் இருந்துவிடுகிறார்.

கேள்வி: வியாச பாரதத்தின் இடைச்செருகல்களை நீங்கள் எப்படி கையாளுகிறீர்கள்?

நன்றி.

அன்புடன்,
பார்கவி

அன்புள்ள பார்க்கவி,

எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் உள்ள உறவு என்பது வாசிப்பின் தருணத்தில் நிகழ்ந்து முழுமைகொள்வது. நேர்ச்சந்திப்பில் அது கலையாமலிருக்க ஒரே வழி இயல்பாக இருப்பதுதான். என் இயல்பு எப்போதும் எந்த ‘பொலிடிகல் கரெக்ட்னெஸ்’ ‘மேனர்ஸ்’ விதிகளுக்கு கட்டுப்படாமல் இருப்பது. தங்களைச் சந்தித்தது மகிழ்ச்சி

நீங்கள் என்னை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறீர்கள் என்று அறிவேன். அதனாலென்ன? கடுமையாக விமர்சனம் செய்பவர்களைத்தான் அன்றாடம் பார்த்துக்கொண்டிருக்கிறேனே. சந்திப்பு மகிழ்ச்சியூட்டுவதாக இருந்தது நன்றி.

பெண்களின் எழுத்துபற்றி நிகழ்ந்த விவாதத்தை இப்படி தொகுத்துச் சொல்ல விழைகிறேன். பெண்ணெழுத்து அல்ல எந்த ஒரு எழுத்துக்கும் எல்லா தரப்பும் அதன் மீதான தங்கள் விவாதத்தை முன்வைப்பதே இயல்பானது. அவசியமானது.அதுவே உண்மையான கருத்தாடலை உருவாக்கும். பெண்ணெழுத்து உண்மையான வளர்ச்சியை அடைய வழிவகுக்கும்.

என்னுடையது அழகியலை மையப்படுத்தும் தரப்பு. அதை நான் நேர்மையாகவும் கறாராகவும் முன்வைப்பதே சரியானது. எனக்கு அவை பெண்ணெழுத்துக்கள் அல்ல, எழுத்துக்கள்தான். ஏன் பெண்ணெழுத்து என்கிறேன் என்றால் அவர்கள் அப்படிச் சொல்லிக்கொள்வதனால்தான்.

தலித் எழுத்துக்கள் மீதான என் அணுகுமுறையும் இதுவே. இமையம்,சோ.தருமன் போன்றவர்களை நான் முக்கியமான படைப்பாளிகளாக நினைக்கிறேன், எழுதியிருக்கிறேன் என்றால் அவை அழகியல்ரீதியான என் தேடலை நிறைவுசெய்யும் படைப்புகள் என்பதனால்தான். தலித் படைப்புகள் என்பதனால் அல்ல. இமையத்திற்கான இடத்தை விழி.பா.இதயவேந்தனுக்கு அளிக்கமாட்டேன்.

அந்த தரவேறுபாடு எனக்கு முக்கியமானது. அதை முன்வைப்பதே விமர்சகனாக என் பணி. அதை இன்னொரு அரசியல்கோணத்தில் ஒருவர் மறுக்கலாம் அதை அவர் முன்வைக்கலாம். அப்படித்தான் கருத்தியக்கம் செயல்படுகிறது.

பெண்களின் இந்த கோஷம்போல அபத்தமான ஒன்று வேறில்லை. இலக்கியம் என்பது தனிப்பட்ட அகப்பயணம் என்றும், தன் தனித்தன்மையை கண்டடைதலே அதன் இலக்கு என்றும் அதில் கூட்டம் சேர்ந்து கூச்சலிடுவதற்கு இடமே இல்லை என்றும் உணராமல் ஒருவர் இலக்கியமெழுதிவிடமுடியாது. இந்தப்பெண்கள் எழுதுவது நடையிலும் வெளிப்பாட்டிலும் கருவிலும் ஒன்றே போலிருப்பதற்கு இந்த ‘ஊர்வல’த்தன்மையே காரணம். இவர்கள் எவருக்குமே எந்தத் தனித்தன்மையும் இல்லை என்பதையே நான் சுட்டிக்காட்டினேன்

மேலும் மேலும் அவர்களுடைய தன்னம்பிக்கையின்மையை, பதற்றத்தையே வெளிக்காட்டுகிறார்கள். ஸ்க்ரோல் என்ற ஆங்கில இணைய இதழில் ஒரு பெண் இதைப்பற்றி எழுதிய குறிப்பை வாசித்தேன். எத்தனை மேலோட்டமான புரிதல். நான் எழுப்பிய மொத்த விவாதத்தையும் அவர்கள் வழக்கமாகப் பேசிக்கொண்டிருக்கும் ஆண்-பெண் வம்பாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். இந்த அசட்டுத்தனத்தை வெல்லாமல் இலக்கியத்துக்குள் வரமுடியாது

எங்கோ ஒரு பெண் இந்த விமர்சனத்தை தன் மீதான அறைகூவலாக எடுத்துக்கொள்வாள் என நினைக்கிறேன். அவள் எழுதுவதற்காகக் காத்திருக்கிறேன்

ஜெ

பிகு : மகாபாரதத்தில் மூன்று வகை ‘உபரி’ உண்டு. வியாசரால் ஜய என்ற பேரில் எழுதப்பட்ட நூலை வைசம்பாயனர் உள்ளிட்ட அவரது மானவர்கள் விரிவாக்கம் செய்தனர். பின்னர் பிருகு பிராமணர்கள் தங்கள் குலக்கதைகளையும் நம்பிக்கைகளையும் எழுதிச்சேர்த்தனர். கடைசியாக நம் நீண்ட பாகவத மரபு துணைக்கதைகளை சேர்த்துக்கொண்டே சென்றது- இப்போதும் சேர்க்கிறது

குணத்தால் இவை இருவகை. கவித்துவமாக விரிவாக்கம் செய்பவை. எளிய சாதிய அரசியலுக்குள் மகாபாரதத்தைக் கொண்டுசெல்லக்கூடியவை. நான் முதல்வகை இடைசசெருகல்களை பயன்படுத்திக்கொள்கிறேன். இரண்டாம் வகையை நிராகரித்துவிடுகிறேன்.

அத்துடன் வெண்முரசே மகாபாரதத்தில் ஒரு மாபெரும் இடைச்செருகல்தான்

அம்பையின் எதிர்வினை

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 29
அடுத்த கட்டுரைஅறைக்குள் ஒரு பெண்