ஆண் என்பது…

அன்புள்ள ஜெயமோகன்,

கடந்த சில மாதங்களாக ஒரு சிறிய நிகழ்வு என்னை படுத்திக்கொண்டே இருந்தது. இன்று உங்களின் “தோழிக்கு ஒரு கடிதம்” படித்ததும் ஓரளவு அந்த நிகழ்வை புரிந்துகொள்ள முடிந்தது.

நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்கு முன்பு, என் மகனுடன் பனிசறுக்கு விளையாட சென்றிருந்தேன். இருவருக்கும் இது தான் முதல் வருடம், எனவே அரைகுறை. நான் மித்திரனை விட மோசம். அங்கு கீழே பள்ளத்தாக்கிலிருந்து மலை உச்சிக்கு கன்வேயர் பெல்ட் ஒன்று தரையிலிருந்து 20 – 30 அடிக்கு மேலே 1 KM நீளத்திற்கு சுற்றிகொண்டிருக்கும். அதில் இரண்டு பேர் அமரக்கூடிய பெஞ்சுகள் தொங்கிகொண்டிருக்கும். மலைக்குகீழே அது வரும்போது வேகமாக உட்கார்ந்துகொள்ள வேண்டும். உச்சிக்கு போனதும் அந்த பெல்ட் பக்கவாட்டில் மடிந்து திரும்பி கீழ் நோக்கி வரும். அதற்குள் பெஞ்சிலிருந்து எகிறி குதித்து சறுக்கி விலகி செல்லவேண்டும். இதை என்னால் சரியாக செய்ய முடியாது. மித்திரன் சின்னபையன் ஆனதால் தானாக செய்யவே முடியாது. நான் அவனை ஒரு கையில் பிடித்துகொண்டு குதித்து சறுக்கி செல்லவேண்டும்.

அன்று நான்கு தடவை போனேம். ஒவ்வொரு தடவையும், அவனை பிடிக்காமலே நான் மட்டும் பயத்தில் குதித்தோ இல்லை அவனை தாறுமாறாக இழுத்துக்கொண்டு குதித்தோ விழுந்துகொண்டிருந்தேன். பெஞ்ச் திரும்பும் போது அவனை கீழே நெட்டி தலைகுப்புற தள்ளிவிட்டு செல்லும். அந்த வினாடியில், மித்திரன் இருப்பது மறந்து, அவனுக்கு உதவி செய்ய வந்தது மறந்து, என் மேல் மட்டுமே என் உள்மனது கவனம் வைத்திருந்தது எனக்கு பெரிய அதிர்ச்சியாக இன்றுவரை இருக்கிறது. சாசுவதமான சமயத்தில் அவனுக்காக என்னவேண்டுமானாலும் செய்ய போகிறேன் என்று பேசியும் நினைக்கும் நான், ஒரு அவசர கணத்தில் என் மேல் மட்டும் கவனம் கொண்டவனாக நடந்துகொண்டது நினைத்து வந்த ஆச்சிரியமும் பயமும் இன்னும் நீங்கவில்லை. உங்கள் பதிவை படித்து கொஞ்சம் சமாதனம் சொல்லிக்கொள்ள முடிந்தாலும்…..அது பயத்தை போக்கவில்லை.

அன்புடன்,
கெளதம்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 34
அடுத்த கட்டுரைவள்ளுவரும் அமணமும்