நயத்தக்கோர்

இரவுணவில் மூக்கால் மணிநேரம் பிள்ளைகளுடன் அரட்டையடிப்பதென்பது ஒரு பழக்கமாக வைத்திருக்கிறேன். அப்போது படிப்பு விஷயங்கள் பேசப்பட மாட்டாது. அனுபவங்கள், வேடிக்கைகள், நினைவுகள், நக்கல்கள், கிண்டல்கள் மட்டுமே. சிரித்து உருண்டு, புரைக்கேறி, கண்ணீர் மல்கி எழுந்தால் ஒருநாள் முழுக்க மனதில் நிறைந்த சலிப்புகளை வெல்லமுடியும்.

அபூர்வமாக பேச்சு உணர்ச்சிகரமாக ஆவதுண்டு. இன்று அப்படி ஒரு சந்தர்ப்பம். சைதன்யா அவள் அம்மாவின் உறவினர் வீட்டுக்குப் போன அனுபவத்தைச் சொன்னாள். அங்கே ரேஷன் அரிசியில் சாப்பாடு போட்டார்கள். ஒரே வீச்சம். சாப்பிடவே முடியவில்லை. “ஆனால் நீ சொல்லியிருக்கியே அதெல்லாம் பாக்கக்கூடாதுன்னு… அதான் அப்டியே சாப்பிட்டுட்டேன். அதைப்பாத்துட்டு அந்த மாமி நெறையச் சாப்பிடு கண்ணு என்று ஏகப்பட்ட சோறு போட்டுவிட்டங்க. அப்புறம் என்னாலே நடக்கவே முடியவில்லை. பஸ்சிலே ஏறினதுமே தூங்கிட்டேன். தஞ்சாவூரையே பாக்க முடியலை” என்றாள்.

“அதான் பாப்பா நாகரீகம்ங்கிறது…” என்றேன். “நம்ம வீட்டுலே நமக்குப் பிடிச்சதைச் சாப்பிடலாம். ஆனா அவங்க வீட்டிலே நாம அவங்க குடுக்கிறதைத்தானே சாப்பிட்டாகணும். நமக்கு ஒருத்தர் உபசரிச்சுட்டு குடுக்கிறதை வேண்டாம்னு சொல்றது மாதிரி கேவலம் ஒண்ணுமே கெடையாது. அவங்களுக்கு கொஞ்சம்கூட மனசு கோணக்கூடாது… நம்ம முகத்திலே நமக்கு அதுபிடிக்கலைன்னு ஒரு சின்ன தடம்கூட தெரியப்பிடாது”

“தெரியும்” என்று கையை நக்கி “அன்னைக்குச் சொல்றப்ப என்னமோ திருக்குறள்கூட சொன்னே” என்றாள். நான் “பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க நாகரீகம் வேண்டுபவர்” என்றேன். “சோத்துலே நஞ்சை ஊத்தறத கண்ணால பாத்தாக்கூட நாகரீகமானவங்க அதை சாப்பிட்டுட்டுதான் வருவாங்க”

சட்டென்று ஒரு நினைவு. சுந்தர ராமசாமியும் நானும் கேரளத்தில் ஓர் ஊருக்கு ஓர் இலக்கியக் கூட்டத்துக்குச் சென்றிருந்தோம். சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. வெளிவந்திருந்த காலகட்டம் அது. திடீரென்று ஏகப்பட்ட கிறிஸ்தவ வாசகர்கள். ஒருவர் கூட்டம் முடிந்தபின் மாலை அவரது வீட்டில் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும் என்றார். சுந்தர ராமசாமி வழக்கமாக ஒப்புக்கொள்ள மாட்டார். ஆனால் ஒத்துக்கொண்டுவிட்டார்.

அந்த வாசகர் ஒரு ஆட்டோ ஓட்டுநர். அவரைப்பற்றி எங்கோ எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். நானும் அவரும் அவாரது ஆட்டோவில் அவரது வீட்டுக்குப் போனோம். சிறிய வீடு. ஒரு கூடம், சிறிய படுக்கையறை, சமையலறை. நேரமாகிவிட்டிருந்ததனால் போனதுமே கூடத்திலேமேயே மேஜை போட்டு சாப்பாடு பரிமாறினார்கள். அகலமான பீங்கான் தட்டில் செக்கச்சிவந்த பெரிய அரிசி சோறு. இன்னொரு கிண்ணத்தில் சிவப்பான மீன் கறி. அவ்வளவுதான், வேறு எதுவுமே இல்லை.

எனக்குப் பகீரென்றது. சுந்தர ராமசாமி அய்யரென்ற தகவல் வாசகருக்கு தெரியும், அய்யர்கள் மீன் சாப்பிடமாட்டார்கள் என்றுதான் தெரியாது. நெய்மீன் [வஞ்சிரம்?] என்ற விலை அதிகமான மீன். பெரிய துண்டுகளாக போட்டு குழம்பு வைத்திருந்தார்கள். ஆனால் தொட்டுக்கொள்ள ஏதுமில்லை. அப்படி ஒரு வழக்கமே அவர்கள் வீட்டில் இல்லை போலும். அந்த மீனையே பொரிக்கும் எண்ணம்கூட அவர்களுக்கு இருக்கவில்லை.

ராமசாமி எம்.கோவிந்தனைப்பற்றிய ஏதோ கேள்விக்கு பதில் சொன்னபடி சாதாரணமாக வந்து அமர்ந்தார். அரைக்கணம் கூட முகம் மாறுபடவில்லை. ஆனால் அரைக்கணத்திற்கும் குறைவான நேரத்தில் என் கண்களை அவர் கண்கள் வந்து சந்தித்து தடுத்துச் சென்றன. நான் திக்பிரமை பிடித்து மேஜை முன் அமர்ந்தேன்.

அருமையான குழம்பு. சோறும் நல்ல சுவை. ஆனால் எனக்கு மரத்தூள் தொண்டையில் சிக்கியதுபோல இருந்தது. பிறந்த மறுநாளே மீன் சாப்பிடுவது போல ராமசாமி குழம்பை சோற்றில் பிசைந்து சாப்பிட்டார். நெய்மீனுக்கு நல்ல வேளையாக முள் கிடையாது. ராமசாமி சாப்பாட்டுப்பிரியர். சுவைத்து மெதுவாக ‘ஸ்டைலாக’ சாப்பிடுவார். அப்படித்தான் இதையும் சாப்பிட்டார்.

அந்த வீட்டுக்கு விருந்தாளிகளே வருவதில்லை போலும். அவர்களுக்கு உபசரிக்கவே தெரியவில்லை. ஏழெட்டுபேர் சாப்பிடும் சோற்றையும் கறியையும் அந்த அம்மாள் மேஜையிலேயே வைத்துவிட்டாள். மேஜைக்கு சுற்றும் அவர்களின் இரு பெண்களும் ஒரு பையனும் நின்று நாங்கள் சாப்பிடுவதை வேடிக்கை பார்த்தார்கள். ராமசாமி அந்தப்பிள்ளைகளிடம் அவர்கள் எங்கே பகலில் விளையாடுவார்கள் என்று கேட்டார். கூடத்தில் மாட்டியிருந்த கோணலான யானை எம்பிராய்டரி அந்த மூத்த பெண் பின்னியதா என்று கேட்டு ‘நன்றாக இருக்கிறது’ என்றார்.

அந்த அம்மாளிடம் அந்தப்பக்கமெல்லாம் ஏதோ காய் போட்டு மீன் சமைப்பார்களே என்றார். அந்த அம்மாள் பரவசத்துடன் “கொடம்புளி கொடம்புளி“ என்று சொல்லி அதை எப்படி போடுவதென சொன்னாள். “அருமையாக இருக்கிறது” என்றார் ராமசாமி. அவளுக்கு பதற்றத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் கதவு நிலையைப் பற்றிக்கொண்டாள். “எங்க ஊரிலே கொடம்புளி உண்டு” என்று அபத்தமாக உரக்கச் சொன்னாள். “உங்க ஊர் எது?” “பாலா” “அப்படியா? பாலாவிலே எனக்கு ஜோர்ஜ் என்று ஒரு கூட்டுகாரன் உண்டு” பாலாவில் அந்த அம்மையாரின் குடும்பத்தைப்பற்றி நான்கு கேள்விகள் கேட்டு தெரிந்துகொண்டார். அவரது மலையாளம் தமிழ் நெடியடித்தாலும் பிழையில்லாமலிருக்கும்.

அவர்கள் அத்தனை பேருக்கும் அந்த நாள் ஒரு மாபெரும் நிகழ்வாக இருந்திருக்கும் என தோன்றுகிறது. அவர் அருகிலேயே மொத்தக் குடும்பமும் நின்று வாயைப்பிளந்து வேடிக்கை பார்த்தது. பதினைந்து நிமிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு கிளம்பினோம். ராமசாமி அந்த வாசகரிடமிருந்து நாற்றமான ஒரு சிகரெட்டை வாங்கி புகை விட்டார்.

திரும்பி எங்கள் விடுதி அறைக்கு வந்தபின் கதவைச் சாத்தியதுமே நான்கேட்டேன் “இதுக்கு முன்னாடி மீன் சாப்பிட்டிருக்கீங்களா சார்?” “இல்லே… நல்லாவே இல்லியே… ரப்பர் மாதிரி இருக்கே” “குமட்டிச்சா?” என்றேன். ராமசாமி பதில் சொல்லவில்லை. அவரது இங்கிதங்களை நான் பொருட்படுத்துவதில்லை. “குமட்டிச்சுதானே?” என்றேன். “லுங்கியா கொண்டு வந்திருக்கேள்? சாயவேட்டி கட்டமாட்டேளா?”

தூங்குவதற்காக படுத்தவர் உடனே எழுந்து விட்டார் “ஒருமாதிரி இருக்கு…” என்றார். ஏதோ மாத்திரை போட்டுக்கொண்டார். “நீங்க அவங்ககிட்டே சொல்லியிருக்கலாம்” என்றேன். “அந்த வீட்டிலே வேறே ஃபுட்டே இல்லை. பாத்தேன். நான் சாப்பிடலைன்னா ஏமாற்றத்திலே அவர் அந்தம்மாவை போட்டு அடிச்சாலும் அடிப்பார். பரவாயில்லை. நாளைக்குச் சரியாயிடும்” நள்ளிரவு வரை ராமசாமி விழித்து அவஸ்தைப்பட்டார். மூக்கிலிருந்து தண்ணீர் வந்து கொண்டே இருந்தது. எனக்கு பயமாக இருந்தது. ஏதாவது ஆகிவிடுமா என்று. “கொஞ்சம் மூச்சு தெணறறது… பரவால்லை” என்றார்.

நானும் விழித்திருந்தேன். விஜயகிருஷ்ணன் என்ற சினிமா விமரிசகர் பற்றி சுந்தர ராமசாமி சொன்னார். எல்லா படங்களையும் கிழி கிழி என்று கிழிக்கும் அவர் கடைசியில் ‘நிதியுடெ கத’ என்று ஒரு படம் எடுத்தார். கேவலமான படம். ஆனால் அது ஒரு பெரிய கிளாசிக் என்று சொன்னார் “உண்மையிலேயே நம்பிண்டிருந்தார், அதான் பிரச்சினையே” என்றார் ராமசாமி. “இந்தப்படத்தை மனசுக்குள்ள அளவுகோலா வைச்சுண்டுதான் அவர் பரதனுக்கும் பத்மராஜனுக்கும் படம் எடுக்க தெரியலேன்னு சொல்லிண்டிருந்திருக்கார்” மூக்கு குழாய் போல ஒழுகியது. வாயில் எச்சில் வந்து துப்பிக்கொண்டே இருந்தார்.

மறுநாள் கிளம்பும்போது முகம் சற்று உப்பியபடி காணப்பட்டதை தவிர்த்தால் ஒன்றுமில்லை. “இதை நீங்க எங்கயும் சொல்ல வேண்டாம்” என்றார். நான் தலையசைத்தேன்.

நான் சொல்லி முடித்தேன். அஜிதன் பயங்கரமாக மனம் நெகிழ்ந்துவிட்டான். முகம் கலங்கி கண்கள் பளபளத்தன. “நீ இப்பல்லாம் அவரை பத்தி பேசினா அவர் எழுதியதைப்பத்தியே பேசறதில்லை” என்றாள் அருண்மொழி.

“உண்மைதான். இப்ப யோசிக்கிறப்ப எழுதினது பேசினது சர்ச்சை பண்ணினது எல்லாமே பின்னாலே போயிட்டுது… மனுஷங்க முழுமையா வாழற சில தருணங்கள் இருக்கு… அது மட்டும்தான் மிச்சம்னு தோணுது” என்றேன்.

[மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் 2009 டிசம்பர்]

முந்தைய கட்டுரைநகரங்கள்
அடுத்த கட்டுரைஅஞ்சலி : ராஜம் கிருஷ்ணன்