அன்புள்ள ஜெயமோகன் சார், நலமா?
ஞாநி சங்கரன் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகியிருக்கிறார். அவர் ஆலந்தூரில், ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்ட போது, அவரை ஆதரித்து எழுதினீர்கள். அதை உங்களின் ஒரு நகைச்சுவை கட்டுரை என்கிற அளவிலேயே எடுத்துக்கொண்டேன்.
தான் போட்டியிட்ட கட்சியிலிருந்து ஒருவர் விலகுவதென்பது அரசியலில் ஒன்றும் புதியதல்ல. எனினும் ‘உயர்ந்த சிந்தனை தளத்தில்’ இயங்கிக் கொண்டிருக்கும் ஞாநிக்கும் இதுதான் நிலைமை என்றால், அவரை ஆதரித்து எழுதிய உங்களின் மனஓட்டம் இப்பொழுது எப்படியிருக்கிறது?
“விதிசமைப்பவர்கள்” கட்டுரையில் நீங்கள் ஒரு இடத்தில் குறிப்பிட்டதைப் போல், சமூகத்தை முன்னெடுத்துச் செல்பவர்கள் நேரடி அதிகாரத்திற்கு வரக்கூடாது. எனினும் எப்படி இப்படி ஆதரித்து (அவருக்கு ஓட்டு போடச்சொல்லி) எழுதினீர்கள்?
-எம்.எஸ்.ராஜேந்திரன்.திருவண்ணாமலை.
அன்புள்ள ராஜேந்திரன்,
நான் ஞாநியை ஆதரித்தது அவர் வெல்வார், அரசு பொறுப்பில் வருவார் என்பதற்காக அல்ல. அவர் அவசரபுத்தி கொண்டவர். சென்னையில் இருந்து கொண்டு மொத்த தமிழகத்தையும் உள்ளங்கையில் வைத்திருப்பதுபோலப் பேசும் மயிலாப்பூர்-திருவல்லிக்கேணி திண்ணைப்பேச்சு அறிவுஜீவி வர்க்கத்தைச் சேர்ந்தவர். எளிய அரசியல்சரிகளை ஏற்றுக்கொண்டு கொப்பளிப்பதை சிந்தனை என்றும் சமூகச்செயல்பாடு என்றும் எண்ணுபவர். இத்தகைய ஒருவர் மிகமோசமான நிர்வாகியாகவே இருக்கமுடியும்.
நான் அவரை ஆதரித்தது மிக எளிய இரு காரணங்களுக்காக. ஒன்று அவர் தனிப்பட்டமுறையில் நேர்மையானவர். இரண்டு இன்று இந்திய அரசியலில் உருவாக வேண்டிய ஊழல் குறித்தான எதிர்ப்புணர்வின் அடையாளமாக அவருக்குக் கிடைக்கும் வாக்குகள் அமையும். அவருக்குக் கிடைத்த வாக்குகள் என்னை மிக ஏமாற்றமடையச் செய்கின்றன.
ஞாநி ஆம் ஆத்மியில் இவ்வளவுநாள் இருந்ததே ஆச்சரியம். அவரை நெடுங்காலமாக எனக்குத்தெரியும். எங்கும் எதிலும் தன் குரல் தனித்தும் ஓங்கியும் ஒலிக்க வேண்டும் என்பதையே தன் முதல் இலக்காகக் கொண்ட அவரைப் போன்றவர்கள் எந்த இயக்கத்திலும் நீடிக்கமுடியாது. அவரது அகங்காரம் அதற்கு அனுமதிக்காது.
இயக்கச்செயல்பாடு என்பது எதுவாக இருந்தாலும் தன்னைப்போன்றவர்களுடன் தொடர்ந்து உரையாடுவதும் விட்டுக்கொடுப்பதும் சமரசம் செய்து கொள்வதும்தான் அதில் முக்கியம். ஏனென்றால் ஓர் இயக்கத்தை இணைக்கும் பொதுவான அக்கறைகளுக்கு நிகராகவே இயக்கங்களுக்குள் தனிமனித அகங்காரங்களும் செயல்படுகின்றன. மிகச்சிறிய அகங்கார மோதல்கள்கூட பெரிய பிளவுகளுக்கும் மோதல்களுக்கும் காரணமாக அமைகின்றன. பொதுவான செயல் திட்டம் மற்றும் இலக்கை முன்வைத்து அன்றாடத்தளத்தில் தொடந்து சமரசம் செய்து கொள்ளாமல் எந்த இயக்கமும் இயங்க முடியாது.
இருவகை மனிதர்கள் இயக்கங்களில் நீடிக்கமுடியாது. சில விழுமியங்களை அல்லது இலட்சியங்களை மூர்க்கமாக ஏற்றுக்கொண்டு, சொல்லும் செயலும் அதுவாகவே இருந்து, எந்தவித சமரசங்களுக்கும் ஆட்பட மறுப்பவர்கள் முதல்வகை. அவர்கள் எல்லா இயக்கங்களில் இருந்தும் வெளியேறிக்கொண்டே இருப்பார்கள். தன் கருத்து என்பதை தன் ஆளுமை, தன் அடையாளம் என எண்ணும் அகங்காரம் கொண்டவர்கள் இரண்டாம் வகை.
ஞானி இரண்டாம் வகை. அவர் தன் கருத்துக்களை முன்வைக்கும் விதத்தை, அக்கருத்துடன் முரண்படுபவர்களை அவர் கையாளும் விதத்தில் உள்ள கசப்பை, தன் கருத்துக்கள் முழுமையாகவே தவறெனத் தெரிந்தாலும் கொள்ளும் வீம்பை கவனித்தால் இது தெரியும். அவர் அரசியல்வாதி அல்ல. அரசியல் சிந்தனையாளர் அல்ல. சமூகச்செயல்பாட்டாளர் அல்ல. இதழாளர், பத்தி ஆசிரியர், அவ்வளவுதான். அதை அவர் செய்யலாம்.
ஞானி ஃபேஸ்புக்கில் நேரத்தை வீணடிப்பதாகவும் அங்கே அவரது ஆளுமையை மதிக்காமல் குதறி வைக்கிறார்கள் என்றும் நண்பர்கள் வருந்தினார்கள். போலிப்பெயர்களுடன் காற்றாலைப்போர் செய்வதை விடுத்து அவர் இதழ்களில் எழுத வேண்டும்.
எதையும் பெரிதாக யோசிக்காமல் உடனடியாக எதிர்வினையாற்றும் நேர்மையான சாமானியனின் குரலுக்கு ஒரு மதிப்புண்டு. அதுதான் ஞானியின் முக்கியத்துவம். இன்று அப்படி அவரை விட்டால் மிகச்சிலரே உள்ளனர்.
ஜெ