‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 26

பகுதி ஆறு : அரசப்பெருநகர்

[ 1 ]

முழுமைவெளியில் முடிவிலிக்காலத்தில் பள்ளிகொண்டவன் தன்னை தான் என அறிந்தபோது அவனுடைய அலகிலா உடல் உருவாகியது. அவனுள் எழுந்த முதல் இச்சை அதில் மயிர்க்கால்களாக முளைத்தெழுந்தது. பின்னர் அவன் உடலை மென்மயிர்ப்படலமாக பரவி நிறைத்தது. தன்னுள் மகத் எழுந்து அகங்காரமாக ஆன கணம் அவன் மெய்சிலிர்த்தபோது ஒவ்வொரு மயிர்க்காலும் எழுந்து அவற்றின் நுனியில் மகாபிரபஞ்சங்கள் உருவாயின. அம்மகாபிரபஞ்சங்கள் தன்னுள் தான் விரியும் முடிவிலா தாமரைபோல கோடானுகோடி பிரபஞ்சங்களாயின. ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் ஒவ்வொரு காலம் நிகழ்ந்தது. அக்காலங்கள் துளிகளாகப்பெருகி மகாகாலத்தில் சென்றணைய குன்றாக்குறையா கடலாக அது அலையின்றி விரிந்துகிடந்தது. அவன் அகம் அணைந்து சிலிர்ப்படங்கும் மறுகணம் மயிர்க்கால்கள் சுருங்க அனைத்து மகாபிரபஞ்சங்களும் அவனிலேயே சென்றணைந்தன.

பிரபஞ்சத்தாமரை என்னும் அனல்குவை வெடித்துக்கிளம்பும் தீப்பொறிகளே விண்ணகங்கள். அவற்றில் புனிதமானது பூமி. அது பிறந்து நெடுங்காலம் உயிரற்ற வெறும் பாறைவெளியாக விண்ணுக்குக்கீழே விரிந்திருந்தது. எவராலும் கேட்கப்படாமையால் பொருளேறாத சொல் என. வணங்கப்படாமையால் தெய்வமாக ஆகாத கல் என. தன்னசைவற்ற அந்தப் பருப்பொருள்மேல் முழுமுதலோனின் விழிபட்டதும் அதற்குள் மகத் விரிந்து அகங்காரமாகியது. தன்னை அது ஐந்தாகப்பிரித்து அறியத்தொடங்கியது. நிலம் நீர் காற்று ஒளி வானம் என்னும் ஐந்தும் ஒன்றின்மேல் ஒன்று கவிந்தன. ஒன்றை ஒன்று நிறைத்தன. ஒன்றை பிறிது வளர்த்தன. ஒளி வானை நிறைத்தது. வானம் மண்ணில் மழையெனப் பெய்தது. மண்ணை காற்று விண்ணிலேற்றியது.

அவ்விளையாடலின் ஒருகணத்தில் விண்ணில்பரவிய ஒளி மழையினூடாக மண்ணை அடைந்து முளைத்தெழுந்து காற்றிலாடியது. இளம்பச்சைநிறமான அந்த உயிர்த்துளியை புல் என்றனர் கவிஞர். நான் என்றது புல்துளியின் சித்தம். இங்கிருக்கிறேன் என்றறிந்தது அதன் மகத். இப்பூமியை நான் ஆள்வேன் என்றது அதன் அகங்காரம். மண் பசும்புல்லெனும் மென்மயிர்ப்பரப்பால் மூடப்பட்டது. அதில் ஒளியும் காற்றும் பட்டபோது பூமி புல்லரித்தது. ஒவ்வொரு புல்லும் ஒவ்வொரு வடிவை கண்டுகொண்டது. நான் அருகு என்றது ஒரு புல். நான் தர்ப்பை என்றது இன்னொன்று. பாலூறிய ஒன்று தன்னை நெல் என்றது. நெய்யூறிய ஒன்று தன்னை கோதுமை என்றது. இன்னொன்று தன்னுள் இனித்து கரும்பானது. பிறிதொன்று தன்னுள் இசைத்து மூங்கிலானது. தன்குளிரை கனியச்செய்து ஒன்று வாழையாகியது. தாய்மை முலைகளாக கனக்க ஒன்று பலாவானது. கருணைகொண்ட ஒன்று கைவிரித்து ஆலாயிற்று. வானம் வானமென உச்சரித்து ஒன்று அரசாயிற்று. மண்வெளி பசுங்காடுகளால் மூடப்பட்டது.

மண்ணை பசுமைகொண்டு இருண்டு பின்னிக் கனத்து மூடியிருக்கும் இவையனைத்தும் புல்லே என்றறிக. புல்லால் புரக்கப்படுகின்றன பூமியின் உயிர்கள். வெண்புழுக்கள், பச்சைப்பேன்கள், தெள்ளுகள், தவ்விகள், கால்கள் துருத்திய வெட்டுக்கிளிகள், விழித்த தவளைகள், செங்கண் உருட்டிக் குறுகும் செம்போத்துக்கள், கரிய சிறகடித்து காற்றில் எழுந்தமரும் காக்கைகள், வானில் வட்டமிடும் கழுகுகள். புல்லை உண்டு வாழ்கின்றன மான்கள், பசுக்கள், சிம்மங்கள், குரங்குகள், மானுடகுலங்கள். புல் சிலிர்த்தெழுகையில் பிறக்கின்றறன உயிர்க்குலங்கள். புல்லடங்குகையில் அவையும் மண்ணில் மறைகின்றன. புல்லில் எழுந்தருளிய அன்னத்தை வாழ்த்துவோம்! புல்லுக்கு வேரான மண்ணை வணங்குக! புல்லில் ரசமாகிய நீரை வணங்குக! புல்லில் ஆடும் காற்றை வணங்குக! புல்லில் ஒளிரும் வானை வணங்குக! புல்லாகி வந்த ஒளியை வணங்குக!

கங்கையின் கரையில் தன் குருகுலத்தில் இருள் விலகாத காலைநேரத்தில் பரத்வாஜ முனிவர் தன் முன் செவியும் கண்ணும் சித்தமும் ஒன்றாக அமர்ந்திருந்த மாணவர்களுக்கு கற்பித்துக்கொண்டிருந்தார். “புல்லை அறிக. புல்லை அறிந்தவன் இப்புவியை அறிந்தவனாகிறான். ஐம்பெரும்பருக்களையும் அறிந்தவனாகிறான். ஆக்கமும் அழிவும் நிகழும் நெறியை அறிந்தவனாகிறான். புல்லைக்கொண்டு அவன் பிரம்மத்தையும் அறியலாகும்” தன்னருகே இருந்த ஒரு கைப்பிடி தர்ப்பைப்புல்லை எடுத்து முன்வைத்து பரத்வாஜர் சொன்னார். “புற்களில் புனிதமானது என தர்ப்பை கருதப்படுகிறது. ஏனென்றால் நீரும் நெருப்பும் அதில் ஒருங்கே உறைகின்றன. வேதங்களை ஜடங்களில் நதிகளும், மலர்களில் தாமரையும்,தாவரங்களில் தர்ப்பையும், ஊர்வனவற்றில் நாகங்களும் ,நடப்பனவற்றில் பசுவும், பறப்பனவற்றில் கருடனும் கேட்டறின்றன என்று நூல்கள் சொல்கின்றன.”

“குசை, காசம், தூர்வை, விரிகி, மஞ்சம்புல், விஸ்வாமித்திரம், யவை என தர்ப்பை ஏழுவகை. குசை காசம் ஆகிய முதலிரண்டும் வேள்விக்கு உகந்தவை. தூர்வையும் விரிகியும் அமர்வதற்கு உகந்தவை. மஞ்சம்புல் தவச்சாலையின் கூரையாகும். விஸ்வாமித்திரம் போர்க்கலை பயில்வதற்குரியது. யவை நீத்தார் கடன்களுக்குரியது என்பார்கள். நுனிப்பகுதி விரிந்த தர்ப்பை பெண்மைகொண்டது. எனவே மங்கலவேள்விகளுக்கு உகந்தது. அடிமுதல் நுனிவரை சீராக இருப்பது ஆண்மை திரண்டது. அக்னிஹோத்ரம் முதலிய பெருவேள்விகளுக்குரியது அது. அடிபெருத்து நுனிசிறுத்தது நபும்சகத் தன்மைகொண்டது. அது வேள்விக்குரியதல்ல.”

“புனிதமானது இந்த சிராவண மாத அவிட்ட நன்னாள். இதை தர்ப்பைக்குரியது என முன்னோர் வகுத்தனர். இந்நாளில் வேதவடிவமான தர்ப்பையை வழிபட்டு குருநாதர்களை வணங்கி புதியகல்வியைத் தொடங்குவது மரபு. அதன்பொருட்டே இங்கு நாம் கூடியிருக்கிறோம்” என்று பரத்வாஜர் சொன்னதும் அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் கைகூப்பி “ஓம்! ஓம்! ஓம்!” என்றனர். பரத்வாஜர் எழுந்து கைகூப்பியபடி குருகுலமுற்றத்தில் அமைக்கப்பட்டிருந்த வேள்விமேடைக்குச் சென்றமர்ந்தார். அவரைச்சுற்றி அவரது மாணவர்கள் அமர்ந்துகொண்டார்கள். அரணி கடைந்து நெருப்பை எழுப்பி எரிகுளத்தில் நெருப்பை மூட்டினர். வேதமுழக்கம் எழுந்து பனிமூடிய காடுகளுக்குள்ளும் நீராவி எழுந்த கங்கைப்பரப்பிலும் பரவியது.

வேள்விமுடிந்து எழுந்ததும் பரத்வாஜர் பல்வேறு குலங்களில் இருந்து அங்கே பயில வந்திருந்த இளையமாணவர்களிடம் “இனியவர்களே, இன்று உபாகர்ம நாள். உங்கள் ஒவ்வொருவரையும் தர்ப்பை தேர்ந்தெடுக்கவேண்டும். உங்கள் வாழ்வின் வழிகளை அதுவே வகுக்கவேண்டும். அதன் பின் உங்கள் வாழ்க்கை முழுக்க தர்ப்பை உங்களைத் தொடரும்” என்றார். வேள்விக்களத்தின் முன்னால் அமைக்கப்பட்டிருந்த பெரிய மண்பீடத்தில் அனைத்துவகை தர்ப்பைகளும் கலந்து விரிக்கப்பட்டிருந்தன. பரத்வாஜர் பீடம் நிறைந்த தர்ப்பைக்கு முன் நின்று வேதமந்திரங்களைச் சொல்லி அதை வணங்கினார். அவரது மாணவர்கள் ஒவ்வொருவராக வந்து தர்ப்பையை வணங்கினார்கள்.

பரத்வாஜரின் இளையமாணவர்கள் பன்னிருவர் முற்றத்தில் நிரைவகுத்து நிற்க மூத்தமாணவர்கள் அவர்களின் விழிகளை மரவுரிநாரால் இறுகக் கட்டினார்கள். “இளையவர்களே, நேராகச்சென்று தர்ப்பைபீடத்தில் இருந்து கை தொடும் முதல் தர்ப்பையை எடுங்கள். அது உங்களிடம் எதைச் சொல்கிறதோ அதைச்செய்யுங்கள். அதுவே உங்களுக்கு தர்ப்பையை ஆளும் வேதமூர்த்திகள் அருளும் ஆணை” என்றார் பரத்வாஜர்.

முதல் மாணவன் கைகளை நீட்டியபடி கால்கள் பின்ன நடந்துசென்று குனிந்து தன் விரல்கள் தொட்ட முதல் தர்ப்பையை கையில் எடுத்தான். அது ஆண் குசை. கூடி நின்ற மாணவர்கள் ஓங்காரம் எழுப்பினர். அவன் அதை தன் மணிக்கட்டில் சுற்றிக்கொண்டான். அவனை ஒரு மூத்தமாணவன் கைப்பிடித்து அழைத்துச்சென்று பரத்வாஜரின் அருகே நிறுத்த அவர் அவன் தலையைத் தொட்டு “மகாவைதிகனாக வருவாய். மூவேதங்களும் உனக்கு வசப்படும். விண்ணை எட்டும் பெருவேள்விகளுக்கு அதிபனாக அமர்வாய். ஆம், அவ்வாறே ஆகுக!” என வாழ்த்த அவன் அவர் பாதங்களைத் தொட்டு வணங்கி அவர் அருகே நின்றான்.

அடுத்த இளம் மாணவன் மிகச்சிறியவன். சிறியகரங்களை நீட்டிச்சென்று பெண் காச தர்ப்பையை எடுத்தான். அதை தன் விரல் மோதிரமாக அணிந்துகொண்டான். “உன்னிடம் என்றும் அன்னை காயத்ரி கனிவுடன் இருப்பாள். உன் வேதம் வானை கனியவைக்கும். மண்ணை செழிக்கவைக்கும். மைந்தராகவும் செல்வங்களாகவும் வெற்றிகளாகவும் பொலியும். ஆம், அவ்வாறே ஆகுக!” என்று பரத்வாஜர் வாழ்த்தினார்.

பன்னிரண்டு இளையமாணவர்களும் தர்ப்பை தொட்டு எடுத்து வாழ்த்துபெற்று நின்றபின் பரத்வாஜர் எழப்போனபோது பரத்வாஜரின் முதிய சமையற்காரரான விடூகர் முன்னால் வந்து வணங்கி “குருபாதங்களை வணங்குகிறேன். என் சொற்களில் தவறிருப்பின் என்னை முனிந்து தீச்சொல்லிடுக. இந்த நன்னாளில் தங்கள் குருதியில் பிறந்த இம்மைந்தனுக்கும் காயத்ரியை அருளவேண்டும்” என்று சொல்லி தன் வலக்கையில் பிடித்திருந்த நான்குவயதான சிறுவனை மெல்ல முன்னால் தள்ளி முற்றத்தில் நிறுத்தினார்.

பரத்வாஜரின் முகம் சற்று சுருங்கியதை மாணவர்கள் கண்டனர். மாணவர்கள் சிலர் விடூகரை வெறித்துநோக்கினர். அவர் எந்தப்பார்வையையும் சந்திக்காமல் தலைகுனிந்து நிற்க அவர் முன் அந்த மெலிந்த கரிய சிறுவன் விரிந்த இளம் விழிகளில் திகைப்புடன் அவர்களை மாறிமாறி நோக்கி நின்றிருந்தான். அவர்கள் அனைவருமே அச்சிறுவனை அறிந்திருந்தனர் எனினும் அவன் அங்கிருப்பதையே அறியாதவர்களாக வாழப்பழகியிருந்தனர். நான்கு வருடங்களாக அவன் அவர்கள் எவர் விழிகளாலும் பார்க்கப்படாமல் சமையற்கட்டிலும் புறஞ்சோலையிலுமாக விடூகரின் கைகளில் வளர்ந்துவந்தான்.

நான்குவருடங்களுக்கு முன் கங்கைக்கரை குகர்கள் எழுவர் ஒரு பெரிய மரக்குடத்தை தலையிலேந்தி பரத்வாஜரின் குருகுலத்தை தேடிவந்தனர். அந்தக்குடத்துக்குள் ஆறுமாதமான சிறுகுழந்தை இருந்தது. குடத்தை குருபீடத்தில் அமர்ந்து மாணவர்களுக்கு வேதாங்க பாடம் சொல்லிக்கொண்டிருந்த பரத்வாஜரின் முன்னால் வைத்து வணங்கி “முனிவரை வணங்குகிறோம். எங்கள் குடியைச்சேர்ந்த ஹ்ருதாஜி என்ற சிறுமகள் கருவுற்று இம்மகவைப் பெற்றாள். பேற்றுப்படுக்கையில் இருந்து எழாமலேயே வெம்மை நோய் கண்டு அவள் உயிர்துறக்கும்போது உங்கள் பெயரைச் சொல்லி இம்மகவு உங்களுடையது, இது இங்கேயே வளரவேண்டும் என்று ஆணையிட்டாள். அதன் பொருட்டு ஆறாம்மாதத்துச் சடங்குகள் முடிந்ததும் இதை இங்கே கொண்டுவந்தோம். ஏற்றருள்க” என்றார்கள்.

பரத்வாஜர் இறுகிய முகத்துடன் கூப்பியகரங்களுடன் கண்மூடி அமர்ந்திருந்தார். மாணவர்கள் கழுத்தைத் திருப்பாமலேயே குழந்தையை நோக்கினார்கள். சிறிய கரிய குழந்தை குடத்துக்குள் கைகால்களை அசைத்தபடி கூட்டுப்புழு போல நெளிந்தது. பரத்வாஜர் கண்களைத் திறந்து அடைத்த குரலில் “ஆம், அவன் என் மைந்தன். இங்கேயே வளரட்டும்” என்று சொன்னபின் எழுந்து ஒருமுறைகூட குடத்தை நோக்காமல் நடந்து கங்கைக்கரைக் காட்டின் அடர்வுக்குள் நுழைந்து மறைந்தார். அவர்களிடமிருந்து குழந்தையை விடூகர் பெற்றுக்கொண்டார்.

அவன் அதன்பின் ஒருபோதும் சபை முன் தோன்றவில்லை. அவனுக்கு பெயர் சூட்டப்படவில்லை. துரோணம் என்னும் மரக்குடத்தில் வந்தமையால் அவனை சீடர்கள் சிலர் துரோணன் என அழைக்க அப்பெயரே நிலைத்தது. சமையலறையில் விடூகரின் தனிமையைப்போக்கி, மாணவர் உண்டு எஞ்சிய உணவை உண்டு, புறஞ்சோலைகளில் புற்களைப்பிடுங்கி பறவைகளைத் துரத்தி, மண்ணிலாடி அவன் வளர்ந்தான். மெலிந்த கைகால்களைக் கொண்டவனாகவும் ஒடுங்கிய முகம் கொண்டவனாகவும் இருந்த அவனை காட்டில்கண்டவர்கள் ஒரு வேடர்குலத்துச் சிறுவன் என்றே எண்ணினார்கள்.

எப்போதாவது அவன் வேள்விமுற்றத்துக்கு வந்தால் முதியமாணவர்கள் அவனை நிஷாதனைத் துரத்துவதுபோல கைகளைத் தூக்கி ஓசையிட்டு விலகிச்செல்ல ஆணையிட்டனர். அவன் பரத்வாஜரின் மாணவர்கள் அனைவரையும் அஞ்சினான். அவர்கள் செல்லும்பாதைகளில் இருந்து எப்போதும் விலகியிருந்தான். நீர்மொள்ளவோ தர்ப்பைவெட்டவோ அவர்கள் காட்டுக்குள் செல்லும்போது எதிரே அவன் வந்தால் அக்கணமே எலிபோல புதர்களுக்குள் பாய்ந்து மறைந்தபின் ஒளிரும் சிறுவிழிகளால் இலைகளுக்குள் இருந்து அவர்களை நோக்கினான். அவர்கள் மண்ணிலூன்றிச்சென்ற வலுவான கால்களையே அவன் அதிகமும் அறிந்திருந்தான்.

அவனுக்கு பேச்சுவருவதற்கு முன்னரே விடூகர் பரத்வாஜரை சுட்டிக்காட்டி அவனுடைய தந்தை அவர்தான் என்று சொல்லியிருந்தார். அவன் கைக்குழந்தையாக இருக்கையில் மும்முறை அவனை பரத்வாஜரின் முன்னால் விடூகர் கொண்டுசென்றார். மும்முறையும் சினத்தால் சிவந்த விழிகளைத் தூக்கி ‘உம்’ என உறுமினார் பரத்வாஜர். அவர் நடுங்கும் கைகளுடன் அவனை திரும்ப எடுத்துக்கொண்டு சமையலறைக்குள் ஓடிவிட்டார். அதன்பின் அவர் அவனை தந்தைக்குக் காட்டவேயில்லை. அவன் உடல்மேல் தந்தையின் விழிகூட படவில்லை.

ஆனால் அவன் அவரைப்பார்த்துக்கொண்டே இருந்தான். அவர் காலையில் கங்கையில் நீராடும்போது அவன் கரைமேட்டில் தர்ப்பைப்புல் அடர்வுக்குள் ஒளிந்து அமர்ந்து நோக்கியிருப்பான். மார்பில் படர்ந்த வெண்தாடியுடன் மரவுரி அற்ற உடலுடன் நீரில் நின்று அவர் தன் மூதாதையருக்கும் ஆசிரியர்களுக்கும் நீரள்ளி விடும்போது அவன் சிறிய நெஞ்சு எழுச்சியால் எழுந்தமரும். அவருக்கு விடூகர் உணவைக் கொண்டுசெல்லும்போது அவரது ஆடையைப்பற்றியபடி அவனும் செல்வான். குடிலின் கதவுக்கு அப்பால் ஒளிந்து நின்றபடி விரிந்த விழிகளால் அவர் உண்ணுவதைப் பார்த்திருப்பான்.

அவர் உண்டு எழுந்துசென்றதும் விடூகர் திரும்பி அவனை நோக்கி புன்னகைசெய்து அருகே அழைத்து தந்தை உண்ட இலையில் எஞ்சிய ஒரு அப்பத்தையோ கனியையோ எடுத்து அவனுக்குக் கொடுப்பார். அணில்பிள்ளைபோல இருகைகளாலும் அதை வாங்கிக்கொண்டு விரைந்தோடி வெளியே தவிடுசேர்க்கும் குழிக்கும் தானியக்குதிருக்கும் நடுவே உள்ள சிறிய இடைவெளிக்குள் புகுந்துகொண்டு அதை அவன் உண்பான். மெல்ல ஓசைகேட்காது வந்து அப்பால் நின்று அவன் உண்பதை விடூகர் நோக்குவார். அப்பத்தை மீண்டும் மீண்டும் நோக்கி கைகளால் வருடி அவன் உண்பதைக் கண்டு கண்கள் கலங்க பெருமூச்சுவிடுவார்.

கங்கைக்கரையில் இருந்த குசவனம் என்னும் தர்ப்பைக்காட்டில் தனிமைத்தவம் செய்யப்போன பரத்வாஜரின் தவம் ஹ்ருதாஜி என்னும் குகர்குலத்துப்பெண்ணால் கலைந்த கதையை சீடர்கள் சிலகாலம் பேசிக்கொண்டனர். ஆழ்தவம் என்பது பாற்கடலை கடைதல். அமுதம் தோன்றுமுன்னர் விஷமெழும். காமம் பல்லாயிரம் தலைகள் கொண்ட நாகமாக சீறிஎழுகையில் எதிர்ப்படும் பெண் பேரழகு கொள்கிறாள் என்றார் பரத்வாஜரின் முதல்மாணவரான சமீகர். எளியமானுடரால் தாளமுடியாத அப்பெருங்காமத்தைக் கடப்பது யோகிகளாலும் சிலசமயம் இயல்வதல்ல. அத்தருணத்தில் தவம் சிதறிய யோகிகளே மண்ணில் அதிகம்.

அக்கணத்தில் தன்னை இழக்கும் துறவி மீண்டும் பிரம்மசரிய நெறிகொண்டு குருவிடமிருந்து முதல் தர்ப்பையைப் பெற்று உபவீதம் அணிந்த நாளுக்கே திரும்பிவிடுகிறார். அனைத்து வழிகளையும் தொடக்கத்திலிருந்து மீண்டும் ஏறிவருகிறார். தன் தவம் கலைத்த பெண்ணை வெறுத்துத் தீச்சொல்லிட்ட முனிவர்கள் உண்டு. தன்னை அறிந்தவரோ தன்னைத்தானே வெறுப்பார். பரத்வாஜர் தன் வடிவமான மைந்தனை வெறுக்கிறார் என்றார் சமீகர். “அது தன் காமத்தை வெறுக்கும் யோகியின் கசப்பு” ஹ்ருதாசியின் மைந்தன் அவளைப்போன்றே கரிய சிற்றுருவம் கொண்டிருந்தான்

தன் முன் நின்றிருந்த துரோணனை பரத்வாஜர் பொருளற்ற விழிகளால் சிலகணங்கள் நோக்கினார். அவரது இதழ்கள் அசைந்தால் அவனைத் தூக்கி விலக்க மாணவர்கள் ஒருங்கினர். பரத்வாஜர் நெடுமூச்செறிந்து “ஆம், அவன் தந்தைவழியில் அந்தணனே. காயத்ரி சொல்லும் உரிமை அவனுக்குண்டு” என்றார். மாணவர்களின் உடல்கள் மெல்லத்தளர்ந்த அசைவு பரவியது.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

துரோணனை காலையிலேயே குளிக்கச்செய்து புதிய மரவுரி ஆடை அணிவித்து மென்குழலை குடுமியாகக் கட்டி வெண்மலர் சூட்டி அழைத்துவந்திருந்தார் விடூகர். “மைந்தா உன் தந்தையை வணங்கு” என்றார். துரோணன் அவரை திரும்பி நோக்கியபின் அசையாமல் நின்றான். அவனுடைய சிறிய கரிய உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. “செல்க மைந்தா” என்று விடூகர் மீண்டும் சொன்னார்.

அவன் நடுங்கும் கால்களுடன் முன்னால் செல்லச்செல்ல அவன் உடல் குறுகியபடியே வந்தது. குருபீடத்தருகே சென்று பரத்வாஜரின் கால்களைத் தொட அவன் குனிந்தபோது அவர் அவனுடைய அழகற்ற சிறிய உடலை வெறுப்பில் கோணலாகிய உதடுகளுடன் நோக்கி தன்னையறியாமலேயே கால்களை பின்னுக்கிழுத்துக்கொண்டார். அவர் தொடக்கூடுமென்ற எதிர்பார்ப்பில் சிலிர்த்த தோலும் குறுகிய தோளுமாக நின்ற துரோணன் நிமிர்ந்து அவரை நோக்கி சிறிய உதடுகளை அசைத்தான். “தந்தையே” என அவன் அழைத்த அகச்சொல் உதடுகளை அடையவில்லை. பல்லாயிரம் முறை அவனுள் ஒலித்தழிந்த அழைப்புகளில் ஒன்றாகவே அதுவும் ஆகியது. அவர் செருமியபோது அவன் திடுக்கிட்டு உடலதிர பின்னுக்கு நகர்ந்துகொண்டான்.

பரத்வாஜர் கண்களைக் காட்ட அவரது மாணவன் ஒருவன் வந்து அவனுக்கு வேள்விச்சாம்பலால் திலகமிட்டான். மரவுரியால் துரோணன் கண்களைக் கட்டி அவனிடம் தர்ப்பைபீடத்திலிருந்து ஒரு தர்ப்பையை எடுக்கும்படி சொன்னான். அவனை கொண்டுசென்று முற்றத்தில் நிறுத்தினான். அதுவரை இருந்த பதற்றம் விலகி துரோணனின் உடல் எளிதாகியது. அதுவரை பிற மாணவர்கள் தடுமாறியதை அவன் கண்டிருந்தான். திசையுறுதிகொண்ட காலடிகளுடன் அவன் நடந்தான்.

துரோணன் கங்கைக்கரையின் தர்ப்பைக் காட்டிலேயே வளர்ந்தவன். அவன் அறிந்த ஒரே விளையாட்டுப்பொருள் அதுவே. இயல்பாக அவன் தர்ப்பைபீடத்தை அடைந்து கையை நீட்டி எடுத்தது ஒரு ஆண் விஸ்வாமித்திரப்புல்லை. அவன் எடுத்ததுமே மாணவர்கள் பெருமூச்சுவிட்ட மெல்லிய ஓசை எழுந்தது. அதை எடுத்து நிமிர்ந்த அவன் அக்கணம் தலைக்குமேல் நின்ற மரக்கிளையில் இருந்து சிறகடித்தெழுந்த சிறிய குருவியின் ஓசையை நோக்கி அந்த தர்ப்பைப்புல்லை வீசினான். தர்ப்பை பாய்ந்த குருவி கீழே விழுந்து சிறகடிக்க குனிந்து சென்று தர்ப்பைப்புல்லைப் பற்றி அதை தூக்கிக்கொண்டான்.

சுற்றிலும் எழுந்த கலைந்த மென்குரல் முழக்கத்தை தனக்கான பாராட்டாக துரோணன் எண்ணினான். முதல்மாணவன் வந்து தன் கண்கட்டை அவிழ்த்ததும் தந்தையிடமிருந்து வாழ்த்துச் சொல்லை எதிர்நோக்கி துரோணன் தலையைத் தூக்கினான். பரத்வாஜர் பெருமூச்சுடன் உடல்நெகிழ்வதைக் கண்டு மேலும் இரு அடிகள் எடுத்துவைத்தான். அவர் அவனை நோக்காமல் “சமீகரே, இவன் பிராமணனல்ல என்று தர்ப்பை சொல்லிவிட்டது. இவன் ஷத்ரிய தர்மத்தை கடைப்பிடிக்கட்டும். வில்வித்தை கற்க இவனை அக்னிவேசரிடம் அனுப்புங்கள்” என்று ஆணையிட்டார். சமீகர் புன்னகையுடன் “ஆணை” என்றார்.

பரத்வாஜர் திரும்பி தன் கமண்டலத்தை எடுத்துக்கொண்டு நடக்க மாணவர்கள் அவரைத் தொடர்ந்தனர். அவரும் மாணவர்களும் காட்டுப்பாதை வழியாக கங்கையை நோக்கிச் சென்றனர். திகைத்தபடி முற்றத்தில் நின்ற துரோணனின் அருகே வந்து அவன் மெல்லிய தலைமயிர்மேல் கைவைத்து விடூகர் கேட்டார் “ஏன் குழந்தை அப்படிச்செய்தாய்? ஒரு பிராமணன் செய்யும் செயலா அது?” தலையைத் தூக்கி அவரை நோக்கிய துரோணன் “ஏன் உத்தமரே, நான் அப்படி செய்யக்கூடாதா?” என்றான். “நீ பிராமணன் அல்லவா குழந்தை?” என்றார் விடூகர்.

“நான் காட்டில் நாணலாலும் தர்ப்பையாலும் அப்படித்தானே விளையாடுகிறேன்? அவர் நான் நாணலை வீசும் திறனை பார்த்ததே இல்லையே. அதனால்தான்…” என்றான் துரோணன். மனநெகிழ்வுடன் அவனை இழுத்து அணைத்துக்கொண்டு “சரி, உன் தலைவிதி அவ்வண்ணமென்றால் அதுவே நிகழட்டும்” என்றார் விடூகர். “உத்தமரே, தந்தை என்னை ஏற்றுக்கொள்ளமாட்டாரா? பிறரைப்போல என்னையும் அருகே அமரச்செய்து உபவீதம் அணிவித்துக் வேதம் கற்பிக்க மாட்டாரா?” என்று துரோணன் கேட்டான். விடூகர் பதில் சொல்லாமல் பெருமூச்சுவிட்டார்.

துரோணன் ஒரு கணத்தில் அதைப்புரிந்துகொண்டு அவரது கைகளை உதறிவிட்டு பரத்வாஜரும் மாணவர்களும் சென்ற வழியில் ஓடினான். விடூகர் “குழந்தை… நில்” என்று கூவியபடி பின்னால் ஓடினார். துரோணன் ஓடும்போதே மனமுடைந்து அழத்தொடங்கினான். அவனுடைய கண்ணீர்த்துளிகள் சிறிய கரியமார்பில் விழுந்து சிதறின. விடூகர் அவனை தடுத்துப்பிடித்தபோது விம்மலும் தேம்பலுமாக அவன் சிறிய மார்பு அதிர்ந்தது. “என்ன செய்கிறாய் குழந்தை? அவரது ஆணையை நீ மீறலாமா?”

“நான் அவரது காலில் போய் விழுகிறேன் உத்தமரே. என்னை ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடுகிறேன். அவர் சொல்வதை எல்லாம் செய்வேன். அவர் விரும்பும்படியே வாழ்நாளெல்லாம் இருப்பேன்… என்னை அவரது பாதங்களில் அமரச்செய்யுங்கள் உத்தமரே” என்றான் துரோணன். “இல்லை குழந்தை. அவரது ஆணை முடிவானது. இனி உனக்கு அந்த வாய்ப்பு இல்லை” என்றார் விடூகர். துரோணன் அலறியபடி விடூகரின் கால்களைப்பற்றிக்கொண்டு அவர் தொடையில் முகம்புதைத்து கதறி அழுதான்.

விடூகர் அவன் தலையை வருடியபடி தானும் கண்ணீர் விட்டார். அவன் தேம்பலும் விம்மலுமாக அழுதடங்கியதும் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு மீண்டும் திரும்பி நடந்தான். “குழந்தை!” என விடூகர் பதறினார். “நான் வெறுமனே அவரைப்பார்க்கத்தான் போகிறேன்” என்றான் துரோணன். மெல்ல நாணற்காட்டுக்குள் நுழைந்து கங்கைக்கரையை அடைந்தான். அங்கே ஆழத்தில் மணல்கரையில் பரத்வாஜர் தன் மாணவர்களுடன் அமர்ந்திருப்பதைக் கண்டான்.

பரத்வாஜர் கங்கையின் மணலில் தன் இளம் மாணவர்களை அருகே வட்டமாக அமரச்செய்து அவர்கள் நடுவே அமர்ந்துகொண்டார். அவர்கள் ஒவ்வொருவரும் எழுந்து அவரை வணங்கி குருகாணிக்கை அளித்து அருள்பெற்றதும் அவர்களை நீராடிவரச்சொன்னார். அவர்கள் தங்களுக்கு தாய்தந்தையர் முன்னிலையில் உபநயனத்தின்போது அணிவிக்கப்பட்ட நூலால் ஆன உபவீதங்களை தலைவழியாகக் கழற்றி கங்கைநீரில் விட்டுவிட்டு எழுந்து ஈர உடையுடன் வந்து அவர் முன் அமர்ந்தனர். அவர் தர்ப்பையால் ஆன உபவீதங்களை அவர்களுக்கு அணிவித்தார். அவர்களின் காதில் காயத்ரி மந்திரத்தை உச்சரித்தார்.

இளம் மாணவர்கள் அனைவரும் மந்திர உபதேசம் பெற்றபின் மூத்தவர்கள் நீரில் தங்கள் பழைய உபவீதங்களைக் களைந்து புதிய உபவீதங்களை அணிந்துகொண்டனர். அவர்கள் பரத்வாஜரைச் சுற்றி அமர்ந்துகொண்டு ரிக்வேத அதிபதியான பிரஹஸ்பதியை வணங்கி காயத்ரி மந்திரத்தை உதடுகளில் இருந்து வெளியே வராமல் உச்சரித்தனர். சுட்டு விரலின் கீழே இருந்து விரல்களின் கணுக்களை இன்னொருவிரலால் தொட்டு கணுவுக்கொன்றாக பதினொரு சொற்களை சொல்லிக்கொண்டனர்.

துரோணன் அவ்வுதடுகளையே நோக்கிக்கொண்டிருந்தான். ஓர் உதட்டிலிருந்து இன்னொன்றுக்கு என அவன் பார்வை தேடிச்சென்றது. மெல்ல அசைந்து பரத்வாஜரின் உதடுகள் நன்கு தெரியும்படி அமர்ந்துகொண்டான். அவரது உதடுகள்தான் தெளிவான அசைவுகளுடன் அம்மந்திரத்தை சொல்லிக்கொண்டிருந்தன. மிக மிக அருகே அந்த ஒலி நிகழ்ந்தது. அவன் ஒரு அணுவிடை முன்னகர்ந்தால் அதை தன் அகத்தால் கேட்டுவிடமுடியும். ஆனால் அந்த எல்லைக்கு ஒரு மாத்திரை இப்பால் நின்று அவன் ஆன்மா முட்டிமுட்டித்தவித்தது.

கங்கையின் நீர்ப்பரப்பில் எழுந்த ஆவி ஒளிகொண்டது. இலைநுனிகள் கூர்மை பெற்றன. துள்ளும் மீன்கள் வெள்ளியென மின்னி நீரில் விழுந்தன. நீரலைகள் மேலும் மேலும் ஒளிகொண்டு வந்தன. பரத்வாஜரின் தாடியும் தலைமயிர்ப்பிசிர்களும் வெண்ணிற ஒளியில் மின்னத் தொடங்கின. அவர்களைச்சூழ்ந்திருந்த வெண்மணல் பரப்பு ஆழ்ந்த காலடித்தடங்களுடன் தெளிவடைந்தபடியே வந்தது. காட்டுக்குள் பறவைக்குரல்கள் கலந்த ஒலி உரத்தபடியே இருந்தது. ஒளியைச் சிதறடித்த சின்னஞ்சிறு சிறகுகளுடன் குருவிக்கூட்டம் ஒன்று காற்றில் சுழன்று பரத்வாஜருக்கு அப்பால் மணலில் இறங்கியது. குருவிகள் சிறிய முல்லைமொட்டுக்கால்களை தூக்கி வைத்து கோதுமை மணிபோன்ற அலகுகளால் தரையைக் கொத்தியபடி வால்கள் துடிக்க நடந்தன. அவற்றின் செம்மணிக்கண்களைக்கூட அவனால் பார்க்கமுடிந்தது.

பரத்வாஜரும் மாணவர்களும் நூற்றெட்டு முறை காயத்ரியை உச்சரித்துமுடித்தனர். கைகளை வானுக்குத்தூக்கி வணங்கிவிட்டு பரத்வாஜர் எழுந்தார். மாணவர்கள் ஒவ்வொருவராக எழுந்து அவர் கால்களைத் தொட்டு வணங்கியபின் விலகி நின்றனர். அவர் உதடுகளில் இருந்து தன் பார்வையை விலக்கிக்கொண்டு எழுந்தபோது துரோணன் மீண்டும் மனமுடைந்து அழத்தொடங்கினான். தன் விம்மல் ஒலியை தானே கேட்டதும் உதட்டை இறுக்கியபடி அழுகையை விழுங்கி கண்ணீரை உள்ளங்கைகளால் மாறிமாறி துடைத்தான். பெருமூச்சுகள் அவன் சிறிய உடலை உலுக்கின.

பின்னர் அவன் அங்கே நின்ற ஒரு தர்ப்பையைப் பறித்து கையில் வைத்து சுருட்டி குழலாக்கினான். அதை வாயில் வைத்து வழக்கம்போல ஊதியபோது எழுந்த ஒலியைக் கேட்டு திகைத்து மீண்டும் ஊதினான். ‘ஓம், பூர்புவ, சுவஹ!’ அவன் மீண்டும் ஊதியபோது உள்ளம் சிலிர்த்து அதைக் கேட்க காத்து நின்றது. ‘ஓம் தத், ஸவிதுர் வரேண்யம்!’ அந்த வரிகள் சற்றுமுன் பரத்வாஜரின் உதடுகளில் அசைந்தவை என அவன் அறிந்தான். ‘பர்கோ தேவஸ்ய தீமஹி! தியோ யோ ந ப்ரசோதயாத்!’

அவன் மீண்டும் அதை ஊதினான். பின் குழாயை வீசிவிட்டு நாணல்புதர்களை தாவிக்கடந்து ஓடத்தொடங்கினான். காட்டுக்குள் அவன் அறியாத ஊடுபாதைகளில் மூச்சிரைக்க ஓடிக்கொண்டிருந்தான். கங்கையின் கரையில் பல்லாயிரம் நாக்குகள் மந்திர உச்சரிப்பால் நடுநடுங்க நின்றிருந்த அரசமரத்தடியில் நின்று அந்த மந்திரத்தை தன் நாக்கால் சொன்னான்.

‘வரந்தருபவனாகிய சூரியனே
இருளை அகற்றுக!
உன் ஒளியால்
என் புலன்களை நிரப்புக!
மகத்தான சிந்தனைகள்
என்னில் எழுவதாக!

மீண்டும் மீண்டும் அதை அவன் சொல்லிக்கொண்டான். ஒவ்வொரு சொல்லையும் சொல்லுக்கப்பால் உள்ளவற்றையும். பின் அதை நிறுத்த அவனால் இயலவில்லை. அவன் அகச்சொல்லோட்டமே அதுவாக இருந்தது.

மூன்றுநாட்களுக்குப்பின் துரோணன் விடூகரின் கையைப்பற்றிக்கொண்டு அக்னிவேசரின் குருகுலத்துக்குக் கிளம்பும்போது ஆழ்ந்த அமைதிகொண்டவனாக இருந்தான். திடமான கால்களை எடுத்து வைத்து நிமிர்ந்த தலையுடன் திரும்பிப்பாராமல் சென்றான். குருகுலத்து வாயிலில் இருந்து ஒரு தர்ப்பைத் தாளை மட்டும் பிடுங்கி கையில் வைத்துக்கொண்டான். “அது எதற்கு?” என்றார் விடூகர். “இருக்கட்டும்” என்றான் துரோணன்.

முந்தைய கட்டுரைஅம்பை
அடுத்த கட்டுரைகன்னிநிலம் முடிவு – கடிதம்