காந்தி கடிதங்கள்

காந்தியத்தின் மீது மிகப் பெரிய காதல் எனக்கு

உங்களின் வலைப்பூவில் நான் அதிகம் விரும்பியவைகளில் முக்கியமானது காந்தியம் பற்றியப் பதி வுகள். கூடிய விரைவில் அதை ஒரு நூலாக உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

அகிலன்

அன்புள்ள அகிலன்,

தமிழினி பதிப்பகம் ‘இன்றைய காந்தி’ என்றபேரில் இக்கட்டுரைகளை நூலாக வெளியிடுகிறது. ஏறத்தாழ 500 பக்கம் கொண்ட பெரிய நூல். நூல் ஏற்கனவே அச்சுக்குப் போய்விட்டது. அதிலுள்ள கட்டுரைகளையே நீங்கள் வாசிக்கிறீர்கள்

ஜெ

 

ஜெயமோகன்,

நலமா? மிகுந்த இடைவெளிக்கு பிறகு மீண்டும் எழுதுகிறேன். இருப்பினும் உங்களுடைய வலைத் தளத்தை தொடர்ந்து வாசித்துக்கொண்டு தான் இருக்கின்றேன்.  அதனால் தங்களுடன் தொடர்பில் இருந்து கொண்டிருப்பதாகவே எண்ணம் !

தங்கள் காந்தி குறித்த கட்டுரைகளை வாசித்தேன் காந்தியை அணுக வேண்டிய கோணத்தையும் அறிந்து கொண்டேன். அவரை பற்றி எனக்குள் இருந்த புரிதல்களையும் அறிதல்களையும் விரிவு படுத்இ கொண்டேன் அல்லது சரியாக தெரிந்து கொண்டேன் எனலாம்.  ஒரு சிலர் குறிபிட்டது போல் தங்கள் பதிவுகள் இணையத்திற்கு தக்க எளிமையாக இல்லை என்று தோன்றவில்லை.  வெறும் பொழுது போக்கினை மையமாக கொண்ட எத்தனையோ தளங்கள் உள்ளன்.  உங்கள் தளம் அப்படியில்லை. உங்கள் பதிவிடல்களை வாசிப்பது மூலம் என்னை போன்ற சாதாரண அல்லது தொடக்க நிலை வாசகர்கள் மேலும் விரிவைடந்த , பல்வேறு வாசிப்பு தளங்களுக்கு செல்லமுடிகிறது. நன்றி.

முறையீடு’  ஒரு முறை அல்ல பலமுறை வாசித்துவிட்டேன். அதற்காக உங்களுக்கு கிடைத்த எதிர்வினைகளையும்  படித்தேன்.  அதை போன்றதொரு சூழ்நிலையை  நானும் அதே சமயத்தில் கடந்து வந்திருந்தேன். அகவே அதை இன்னும் நெருக்கமாக உணரமுடிந்தது.

உங்கள் பதிவுகளை வாசிக்கும் பொழுதெல்லாம் உங்களக்கு எழுதுவேண்டும் என்று தோன்றும். இருப்பின் சூழ்நிலையையும் காலத்தையும் இன்றுதான் உருவாக்கிக் கொள்ள முடிந்தது. உங்களால் இத்தனை பணிகளுக்கு இடையும் எப்படி இத்தனை பதிவிட முடிகிறது?

கொற்றவை படித்து விட்டேன். எஸ் ராமகிருஷ்ணனின் நெடுங்குருதியும் படிதேன்.

நன்றி,

சுந்தரவடிவேலன்.

 

அன்புள்ள சுந்தரவடிவேல்

நீங்கள் முக்கியமான நாவல்களை வாசிப்பது குறித்து மகிழ்ச்சி. பொதுவாக நவீன நாவல்களை வாசித்தால் எங்காவது நேரிலோ இணையத்திலோ அவற்றைப்பற்றி விவாதித்துப் பார்ப்பது நல்லது. அது நமக்கே ஒரு தெளிவை உருவாக்கும்.

என்னுடைய காந்தி பதிவுகள் காந்தியைப்பற்றிய ஐயங்களுக்கு பதில் என்ற வகையில் ஆரம்பித்தவை. அவை காந்தியைப்பற்றிய என்னுடைய ஆய்வுகள் அல்ல. ஆய்வு என்றால் அதை வெறு கோணத்தில் என் நடைமுறையனுபவங்கள் சார்ந்தே எழுதவேண்டும். இத்தகைய ஒரு நூலுக்கான தேவை உள்ளதே இது உருவாகக் காரணம் எனலாம்

ஜெ

 

அன்புள்ள திரு. ஜெயமோகன்,

நீங்கள் இந்த இணையத்தளத்தில் எழுதத் தொடங்கிய நாள் முதலாக இங்கே நீங்கள் எழுதும் எல்லாவற்றையும் காலம் தாழ்த்தியாவது படித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் முன் வைக்கும் கருத்துகள் ஆழ்ந்த சிந்தனையைத் தூண்டுகின்றன; சில நேரங்களில் என் பார்வையும் மாற்றமடைந்திருப்பதை உணர்ந்திருக்கிறேன்; அதற்கு உங்கள் கட்டுரைகளும் ஒரு காரணமாக இருக்கக் கூடும்.

காந்தி சலிப்பூட்டுகிறாரா? கடிதங்கள்

இன்று இந்தப் பக்கத்தில் இருக்கும் ‘ஏன் இப்படி நீண்ட கட்டுரைகளாக எழுதுகிறீர்கள்? யார் படிப்பார்கள்?’ என்ற கடிதங்களையும் அதற்குத் தங்கள் மறுமொழிகளையும் படித்தவுடன் வந்த உந்துதலில் எழுதுகிறேன். என்னைப் போன்ற பல பேர் சத்தம் போடாமல் இக்கட்டுரைகளை விரும்பிப் படித்துக் கொண்டிருக்கலாம். உங்களுக்காக நீங்கள் எழுதும் கட்டுரைகள் எங்களுக்கும் பயன்படுகின்றன. அவற்றைத் தொடர்ந்து எழுதுங்கள்.

அன்பன்,
குமரன்.

அன்புள்ள குமரன்

கண்டிப்பாக. கணக்குகளைப் பார்த்தால் காந்தி கட்டுரைகள் அதிகம்பேர் விரும்பி வாசிக்கக் கூடியனவாக உள்ளன. இவற்றின் பதிவுகள் உடனடியாக இருக்காது. ஏனென்றால் இவை வாசிப்பவருக்குள் விவாதங்களாகவே உள்ளே நுழையும். அவ்விவாதங்கள் தெளிந்து அவரது நிலைபாடாக ஆவதற்குக் கொஞ்சநாள் ஆகக்கூடும்.

ஜெ

 

ஹாய்,

நீங்கள் காந்தி குறித்து எழுதும் கட்டுரைகள் நீளமானவையாகவும் இணையத்துக்குப் பொருத்தமில்லாமலும் இருக்கின்றன என்று சிலர் எழுதிய கடிதங்களை வாசித்தேன். உங்கள் விளக்கத்தையும்

நான் தனிப்பட்ட முறையில் அந்த பதிவுகளை மிகவும் விரும்பி வாசித்தேன் என்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அவை விரிவான ற்றாய்ச்சியும் அந்த ஆராய்ச்சியை தெளிவாக முன்வைக்கும்தன்மையும் கொண்டிருந்தன. எனக்காவே நீங்கள் இந்த ஆய்வுகளைச் செய்து முன்வைப்பதாக எனக்குத் தோன்றியது.

ஒரு கருத்தை நாம் ஆதரிப்பதற்கோ எதிர்ப்பதற்கோ முன்னால் அந்த கருத்தின் தொடக்கத்தையும் பின்னணியையும் அறிந்துகொள்ளவேண்டும் என்பது கட்டாயம். உங்கள் எழுத்து என்னை அஷிஷ் நந்தி போன்றவர்களின் எழுத்தை நோக்கிக் கொண்டுசென்றது. குகாவின் எழுத்துக்களை நான் முன்னதாக வாசித்திருக்கிறேன். [அவர் இந்துவில் எழுதும்போது]  அவருக்குகாந்தி மீது உள்ள மதிப்பைப் பற்றி அறிவேன். நான் காந்தியின் எழுத்துக்களையும் வாசிப்பதுண்டு

இவற்றை வாசிப்பதனூடாக நான் உங்களுடன் முற்றிலுமாக உடன்படாத நிலைக்கு வந்துசேரக்கூடும். [பெரும்பாலும் இருக்காதென்றாலும்] ஆனால் அப்படி நடந்தால்கூட அதுவும் உங்கள் எழுத்தின் வெற்றிதான். ஒருவரை ஒரு சமகால கருத்தில் இருந்து அதன் மூலம் நோக்கிச் செல்லவைக்கிறதல்லவா அது? தகவலறிவுள்ள ஒரு விவாதத்தின் விளைவு அதுவே

வாசகர்களுக்கு நிறையச் சொல்லக்கூடிய உங்களைப்போன்ற எழுத்தாளர்களுக்கு மேலதிக ஆற்றல் உள்ளது

அன்புடன்

எஸ்.சுரேஷ் [தமிழாக்கம்]

 

அன்புள்ள சுரேஷ்

நன்றி

தகவல்களின் தொடக்கத்தை தேடிச்செல்வது முக்கியமானதே. ஆனால் அதைவிடவும் உக்கியமானது சென்றகால நிகழ்ச்சிகளைப்பற்றிய ஒரு ஒட்டுமொத்தமான மனவரைபடம் இருப்பது என்பது. இன்றுள்ள யதார்த்தத்தில் இருந்து தொடங்கி கடந்தகாலத்திற்குச் சென்று அங்குள்ள எல்லா விஷயங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்படுத்தி ஒரு பெரிய சித்திரமாக என்ன நடந்தது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரையும் அவரவருக்கான இடத்தில் அமர்த்த வேண்டும். ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் அவற்றுக்குரிய காரண காரியங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு விஷயத்திற்கும் அதற்கான விளக்கங்களை நாமே அடைய முடியும். என்னுடைய கட்டுரையில் நான் பொதுவான தகவல்களையே அதிகமாகச் சொல்லியிருக்கிறேன். ஆனால் அத்தகவல்களை ஒன்றுடன் ஒன்று இணைத்து எனக்கான வரலாற்று வரைபடம் ஒன்றை உருவாக்கியிருக்கிறேன். அதை வாசகர்களின் பரிசீலனைக்காக முன்வைத்திருக்கிறேன் தன்னுடைய சொந்த வரைபடத்தின் அடிப்படையில் அதை வாசகர்கள் ஏற்கலாம், மறுக்கலாம். உதிரியுதிரியாக அபிப்பிராயங்களை உருவாக்கிக் கொண்டு மறுத்தால் அதை நான் பொருட்படுத்துவதில்லை. அதாவது ஒட்டுமொத்தமாக பார்க்கவைப்பது மட்டுமே என்னுடைய கட்டுரைகளின் நோக்கம்

 

அன்புள்ள ஜெயமோகன்,

காந்தியின் மகன்கள் கட்டுரையின் மூன்று பகுதிகளையும் இப்போது வாசித்தேன். தனிப்பட்ட காழ்ப்புகளினால் காந்தி எளிமையான எதிரியாக கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் அவரது மகன்களைபற்றிய நல்ல சித்திரங்களை அளித்தமைக்கும் அவர்களுக்கு அவருடனிருந்த நல்ல உறவுகளைப்பற்றி சொன்னமைக்கும் நன்றி. உங்கள் கட்டுரைகள் வழியாகவே மணிலாலுக்கு தென்னாப்ரிக்க விடுதலை போராட்டத்தில் உள்ள பங்களிப்பைப் பற்றி அறிந்தேன்.

நீங்கள் குறிப்பிட்ட சில தேதிகளைக் கவனித்தேன். நீங்கள் முதல் கட்டுரையில் ஹரிலால் தவிர பிற குழந்தைகள் தென்னாப்ரிக்காவில் பிறந்ததாக எழுதியிருந்தீர்கள். அடுத்த கட்டுரையில் மணிலால் குழந்தையாக தென்னாப்ரிக்காவுக்கு கொண்டுசெல்லப்பட்டதாக எழுதியிருந்தீர்கள்.

ஓப்லா விஸ்வேஷ்

 

அன்புள்ள விஸ்வேஷ்

நீங்கள் சொன்ன பிழையை ஏற்கனவே காந்திய அமைப்பில் இருந்து சுட்டிக்காட்டி திருத்திவிட்டேன். அது கவனப்பிழை. காந்தியின் இரு குழந்தைகள் இந்தியாவிலும் கடைசி இருகுழந்தைகள் ஆப்ரிக்காவிலும் பிறந்தனர்

இந்தக்கட்டுரைகள் பெரும்பாலும் நினைவுகளில் இருந்தும் நூல்களில் இருந்து குறித்தெடுத்து தாள்களில் வைக்கப்பட்டிருந்த குறிப்புகளில் இருந்தும் எழுதப்பட்டவை. ஆரம்பகாலத்தில் குறிப்புகளை சுருக்கமாக எழுதும் வழக்கம் எனக்கிருந்தது. இன்று  இருபது வருடம் கழித்து பல குறிப்புகளை வாசிக்கும்போது சில குறிப்புகள் ஒன்றுமே புரியவில்லை! மேலும் குறிப்புகளை தனித்தாள்களாக நூல்களுக்குள் செருகி வைக்கும் வழக்கம் இருந்தது. நாலைந்து முறை கீழே விழுந்து எடுத்து வைக்கப்பட்ட குறிப்புகள் கலந்து முன்பின்னாக மாறி விட்டன. சில நூல்களின் பக்கவாட்டில் சில வரிகள் எழுதியிருக்கிறேன். இப்போது என்ன ஏது என்றே புரியவில்லை.

நித்ய சைதன்ய யதிதான் மூன்று விஷயம் சொன்னார். 1. குறிப்புகளை முழுமையான சொற்றொடர்களில், அதாவது கட்டுரை போலத்தான் எடுக்கவேண்டும். சுருக்கமாக எழுதிக்கொள்ளக் கூடாது. 2. குறிப்புகளுடன் சேர்த்தே சொந்த மதிப்பீடுகள் மற்றும் கருத்துக்களையும் முழுமையான வரிகளில் எழுதவேண்டும் 3 குறிப்புகளை தனி நோட்டுகளில்தான் எழுதிக்கொள்ள வேண்டும் 4. குறிப்புநோட்டுகளுக்கு எண் போட்டு சம்பந்தப்பட்ட நோட்டுகளில் அந்த எண்களை எழுதி வைக்கலாம்.

அதை முழுமையாக கடைப்பிடிக்கவில்லை. நினைவுத்திறந் மீதான அதீத நம்பிக்கை.  இனிமேல் செய்ய வேண்டும்.

ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன்,
நலம் தானே? தங்களின் காந்தியை பற்றிய கட்டுரைகள்  ஒவ்வன்ராக நேரம் கிடைக்கும்  போது படித்து வருகிறேன். மிக அருமையாக உள்ளன . பல கோணங்களில் புதிய புரிதல்களை ஏற்படுத்தியுள்ளன. இப்பொழுது தான் காந்தியும் காமமும் கட்டுரைகளை படித்து முடித்தேன். காந்தியின் பரிசோதனைகளை பற்றியதை விட, காமத்தை பற்றிய என் பல எண்ணங்களை பரிசீலனை செய்து பார்க்க வாய்ப்பாக அமைந்தது.

நீங்கள் அலெக்ஸ் அவர்களின் கடித தொடர்பில் பின்வருமாறு குறிபிட்டுருந்தீர்கள்.

காந்தியின் சோதனைகளை சாமானிய மனம் கொண்டவர்கள் தாங்களும் செய்வார்களா என்றால் செய்யமாட்டார்கள். ஆனால் அதை அருவருப்பூட்டும் ஆபாசமான ஒரு செயல்பாடாக எண்ண மாட்டார்கள். அவர்கள் ராமகிருஷ்ணரையோ அரவிந்தரையோ அப்படி எண்ணவுமில்லை

தொடர்ந்து தமிழில் எழுத முடியாமைக்கு மன்னிக்கவும். 15 நிமிடங்களுக்கு மேல் தமிழில் தட்டச்சிட முடியவில்லை.

நீங்கள் அறிந்திருப்பீர்கள், ராமகிருஷ்ண பரமஹம்சர் அந்த தாந்த்ரீகச் சோதனைகளை வேரு பெண்களிடம் செய்யவில்லை. வைஷ்ணவி பைரவியின் சீடானாக அவர் தாந்த்ரீகச் செயல்பாடுகளில் ஈடுபட்டபோதுகூட நிர்விகல்பத்தை பரிசோதனை செய்யும்போது அவர் ஒரு சிறுமியின் காலடியில் அந்த மலர்களை வைத்துவிட்டு சமாதிக்குச் சென்றுவிடுகிறார். பின்னாளில் அவரால் மாமிசத்தைத் தீண்ட முடியவில்லை. அதை தொட்டு தேவிக்கு படைத்தபின் பிரசாதமாக தன் கைகளை நாவால் தொட்டு நக்கிக்கொள்கிறார்.

ஆரம்பத்தில் அன்னை சாரதா தேவி முதன் முதலாக தட்சிணேஸ்வரத்திற்கு வந்தபோது அவர் அவளை தன்னுடன் தூங்குமாறு சொல்கிறார். அவர் அவள்மேல் தனக்கு காமம் ஏற்படுகிறதா என்று சோதனை செய்துகொள்ள விரும்பினார். ஆனால் தாயின் உணர்வன்றி வேறெதையுமே அவர் உணரவில்லை. வாமாசாரம் குறித்து கேட்கப்பட்டபோது உண்மையை நோக்கிச்செல்ல அதுவும் ஒரு வழிதான் ஆனால் பின்கொல்லை வழி என்றார் ராமகிருஷ்ணன். அனைவருக்கும் உரியதல்ல அது என்றார். இன்னொரு இடத்தில் அவை கலியுகத்துக்கு உரியவை அல்ல என்று சொல்லியிருக்கிறார்.நான் மகாத்மாவை குறைசொல்லவில்லை, ஆனால் ராமகிருஷ்ண பரமஹம்ஸர் தந்த்ராவின் அதிர்ச்சியூட்டும் பல விஷயங்களை பயிற்சி செய்து பார்க்கவில்லை என்று சொல்ல வருகிறேன்

நீங்கள் விரிவாக எழுதியவற்றை வாசித்தபோதிலும்கூட காந்திஜியின் வழிமுறைகளைப்பற்றி எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது. அவரது மகத்துவம் ஐயத்திற்கப்பாற்பட்டதே. நான் அரவிந்தர் மீது ஆழமான மதிப்பு உள்ளவன். அரவிந்தர் காந்திஜியின் வழிமுறைகளை ரஷ்ய கிறித்தவத்தின் சுயவதை மற்றும் சமண மதத்தின் கொல்லாமை ஆகியவற்றின் கலவை என்று சொன்னது எனக்குள் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது. அவர் காந்தியின் வழிமுறைகள் இந்தியாவுக்கு அன்னியமானவை, ஐரோப்பிய மனம் கொண்டவை, இந்து மனநிலைக்கு எதிரானவை என்று சொல்லிவந்தார்.

அரவிந்தர் பேசியது ஷத்ரிய வழிமுறைகளைப் பற்றித்தானா என்று சந்தேகமாக இருக்கிறது. அரவிந்தர் அரசியலை விட்டு விலகி பாண்டிசேரியில் இருந்தபோதும் காந்திஜியை கடுமையாக விமரிசனம்செய்துவந்தார். கடைசிவரை தன்னுடைய எண்ணங்களை மாற்ற்க்கொள்ளவுமில்லை. அவர் கோகலேயையும் கடுமையாக எதிர்த்தார். வங்கத்தில் ஆரம்பித்த புரட்சி இயக்கத்தை நீர்த்துப்போகச்செய்தவர் காந்தி என்றார் அரவிந்தர். நான் இன்னமும் இவை குறித்து முழுமையாக வாசிக்கவில்லை. ஆனால் இந்த விஷயங்களைப்பற்றி ஒரு முழுமையான சித்திரத்தை நான் அடையவேண்டும் என்று எண்ணுகிறேன்.

உங்கள் கட்டுரைகள் பலவிஷயத்தை சரியான பாரவையில் கொண்டுவந்து வைக்க உதவின. உங்கல் விரிவான வாசிப்பு மற்றும் தேடல் மூலம் நீங்கள் தொகுத்துச் சொல்லும் விஷயங்களை  என்னைப்போன்ற ஒருவன் எளிதில்  அடைவது சாத்திய்டமில்லை. நன்று

ஏற்கனவே இரு கடிதங்கள் எழுதியிருந்தேன்.  அவை ஸ்பாமுக்குப் போயினவா என்று பாருங்கள்

ராஜ்குமார்

 

 

அன்புள்ள ராஜ்குமார்

நீண்ட ஆங்கிலக் கடிதங்களுக்கு நான் சில சமயம் பதிலளிக்க தாமதமாகும். அவற்றை மொழியாக்கம் செய்தே என் இணையதளத்தில் போடமுடியும். கொஞ்சம் பிறகு பார்க்கலாம் என்று வைத்தால் தள்ளிப்போய்விடும். மன்னிக்கவும்.

நீங்கள் சொன்ன விஷயங்களை பெரும்பாலும் என் கருத்துக்களுடன் ஒட்டியே புரிந்துகொள்கிறேன். காந்தி தாந்த்ரீக வழிமுறைகளை முறையான வழிகாட்டலுடன் சீராகச் செய்யவில்லை, ஆகவே அவற்றால் அவருக்கு பயன்கள் விளையவும் இல்லை. இந்தியாவில் இதர்காக பல்லாயிரம் வருடப்பழமை கொண்ட ஒரு குருமரபு இருந்ததை வர் பொருட்படுததவில்லை. அவர் அவற்றை மேலைநாட்டு நிரூபணவாத முறைபப்டி சோதனைசெய்ய விரும்பினார்.

காந்தியின் மனம் மேலைநாட்டு மனம், அரவிந்தர் எழுதியதை நானும் வாசித்திருக்கிறேன். அரவிந்தரின் இக்கருத்துக்களை நானும் சுந்தர ராமசாமியும் விரிவாக வாசித்து விவாதித்திருக்கிறோம். [ராமசாமிக்கு ரகசியமாக அரவிந்தர் பிடிக்கும்] காந்தி எல்லா விஷயங்களையும் அவர் மேலைநாட்டில் கற்ற, அன்று பிரபலமாக இருந்த அறிவியல்முறையான நிரூபணவாதம்,  எதையும் அடிபப்டைக் கோட்பாடாக சுருக்கும் குறைத்தல்வாதம் ஆகியவற்றின் அடிப்படையிலேயே அணுகினார். இந்தியா சார்ந்த பல விஷயங்களை அவர் தவறாகப் புரிந்துகொள்ள அது வழி வகுத்தது. ஆனால் நாம் காணாத பல விஷயங்களைதாவர் பார்க்கவும் உதவியது.

ஆனால் காந்தி காலனியாதிக்கவாதிகளின் கோணத்தில் சிந்திக்க திட்டவட்டமாக மறுத்துவிட்டவர். அவருக்கும் நேரு, அம்பேத்காருக்கும் இடையேயான வேறுபாடே இதுதான். காந்தி ஐரோப்பிய மாற்றுச்சிந்தனையாளர்களை நோக்கி நகர்ந்தவர். நேருவும் அம்பேத்காரும் காலனியாதிக்கவாதிகளின் வரலாறு, பொருளாதாரம், சமூகவியல் ஆய்வுகளை ஒட்டி மேலே செல்ல முயன்றவர்கள்.

காந்தியின் ஐரோப்பியத்தன்மையே அவரது பலம் என்று நான் எண்ணுகிறேன். ஏனென்றால் ஜனநாயகம் என்ற அமைப்பே ஐரோப்பியத்தன்மை கொண்டதுதான். ஜனநாயகத்தை விடவும் படைப்பூக்கம் கொண்ட அரசின்மைவாதம் ஒன்றும் காந்தியிடம் இருந்தது. அதுவும் ஐரோப்பியத்தன்மை கொண்டதே. அந்த ஐரோப்பியத்தன்மை காரணமாகவே காந்தி இந்தியாவின் நிலப்பிரபுத்துவ மனநிலைகளில் இருந்து மேலெழுந்து ஒரு ஜனநாயக வழிமுறைகளுக்குச் செல்ல முடிந்தது.

அரவிந்தரிடம் இருந்த இந்திய நோக்கு காலத்தால் பழைமையானது. அது எத்தனை தூரம் இந்தியாவில் வேருள்ளதாக இருந்தாலும் சரி அது புதியகாலகட்டத்தின் நுட்பங்களையும் சவால்களையும் உள்வாங்கிக்கொண்ட ஒன்றாக இருக்கவில்லை. அது ஜனநாயகத்துக்கு பொருத்தமற்றது. ஆகவே ஜனநாயக யுகத்தில் அழிவுகளை உருவாக்கக்கூடியது.

வங்க எழுச்சி தோல்வியடைந்த பின்னர்தான் அரவிந்தர் பாண்டிசேரிக்கே வந்தார். வங்க எழுச்சி ஜனநாயகத்தன்மை அற்றது. சாகச நோக்கு கொண்டது. அறிவுமேட்டிமைவாதம் அதன் சாராம்சம். அது ‘நீர்த்து’போய் ஜனநாயக போராட்டமாக ஆனதனால் இந்தியா தப்பியது. இல்லையேல் அது இன்னொரு நக்சலைட் போராட்டமாக ஆகியிருக்கும், அவ்வளவுதான். பிரிட்டிஷ் சக்தியை வெல்லும் திறன் அதற்கு கொஞ்சம்கூட இருக்கவில்லை. உதிரி சாகஸங்கள் பிரிட்டனின் அடித்தளமான இந்திய மக்களின் அங்கீகாரத்தை அசைக்காது. பெருவாரியான மக்களை பங்குகொள்ளச்செய்து காந்தி நடத்தியபோராட்டங்களுக்கே அந்த வலிமை இருந்தது. அரவிந்தரால் காந்தியை புரிந்துகொள்ள முடியவில்லை. ஏனென்றால் அவர் ஜனநாயகத்தை புரிந்துகொள்ளவில்லை.

*

பொதுவாக ராமகிருஷ்ணர் போன்றவர்களின் வரலாற்றில் சில சிக்கல்கள் உள்ளன. ஒருபக்கம் நம்முடைய ரா.கணபதி வகையறாக்கள் எழுதும் நவீன புராணங்கள். மறுபக்கம் மேலைநாட்டு ஆய்வாளர்கள் உள்நோக்குடன் எழுதும் அவதூறுகள். நாம் நடுவே ஒரு பாதையை தேர்வுசெய்ய வேண்டியிருக்கிறது.

ராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஆரம்ப காலத்தில் தாந்த்ரீகச் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கிறார். தாந்த்ரீகம் என்றாலே ரகசியம். ஆகவே அவை அதிகமாக எழுதப்பட்டதில்லை. ஆனால் ஒரு நிர்வாணப்பெண்ணின் மடியில் தான் படுக்க வைக்கப்பட்டதையும் அப்போது அழுததையும் அவர் சொல்லியிருக்கிறார். கன்னிபூஜை இல்லாமல் தாந்த்ரீகமே இல்லை. ஐந்து மகாரங்களில் ஒன்று மைதுனம். ஆனால் தாந்த்ரீக செயல்களை சக யோகினிகளுடன் மட்டுமே செய்வதே இந்திய வழக்கம்.

ராமகிருஷ்ணர், அரவிந்தர் மட்டுமல்ல நாராயணகுரு, வள்ளலார் ஆகியோரும் தாந்த்ரீகச்செயல்களை பரிசீலனைசெய்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவர்களின் தேடல் காலகட்டத்தில். அவர்கள் பிறகு அவற்றை நிராகரித்திருக்கிறார்கள். ஞானமார்க்கத்தையோ பக்தி மார்க்கத்தையோ தேர்வு செய்திருக்கிறார்கள்.

ஜெ

 

மதிப்பிற்குரிய ஜெ.,
காமத்தைப் பொருத்தவரை ஓஷோவின் கொள்கைகளை ஏற்கிறீர்களா? ஓஷோவின்  (காமக்)கொள்கைகள் ஓஷோ போன்ற ஞானிகளுக்கு சரி. சாமானியனுக்கு பொருந்துமா? நடைமுறைச் சாத்தியமா?
காந்தி (சமணர்கள்) இதற்கு நேர் எதிர். அவரது “காமக்கொலை” நடைமுறைச் சாத்தியமற்றது.
பதில் தெரிந்த மாதிரியும் தெரியாத மாதிரியும் குழப்பமாக இருக்கிறது. காமத்தைக் கொண்டாடுவதும் தவறு. கொன்று போடுவதும் தவறு.
வெங்கடேஷ்

அன்புள்ள வெங்கடேஷ்

 

ஓஷோ பேசுவதெல்லாமே வாழ்க்கையை வாழ விரும்புகிறவர்களுக்காக அல்ல. வாழ்க்கையை அறிய விரும்புகிறவர்களுக்காக. இருவரும் ஒருவருக்கொருவர் முற்றிலும் வேறுபட்டவர்கள். வாழ்க்கையை வாழவிரும்பும் குடும்பத்தலைவர்களும் தலைவிகளும் ஓஷோவை வாசிககமலிருப்பதே மேல். அவர் சிந்திக்க வைப்பவரல்ல, சிந்தனைகளை குழப்புபவர். ஏற்கனவே சிந்தனைகளை மூளைக்குள் அடைந்த்துக்கோண்டு இறுகியவர்களை உடைக்கும் ரசாயனம் அவர்.  அந்த உடைவிலிருந்து தானே மீளும் தன்மை கொண்டவர்களுக்கு மட்டுமே அவரை புரிந்து உள்வாங்கமுடியும்

ஜெ

 

ஜெ..

எரிக் எரிக்ஸனின் பொடனியிலேயே ஒண்ணு போட்டீங்க. நெம்ப நல்லா இருந்திச் சிங்க.

நானுங்கூடி நெம்ப நாளு யாராச்சியும் இங்கிலிஸில் எழுதியிருந்தா “தொர இங்கிலிஸ் பேசுது”ன்னு நம்பீருவனுங்க.  அது அப்படியே நெசமாயிருங்க.

டாமினிக் லாப்பியரின் நள்ளிரவி ல் சுதந்திரம் புத்தகத்தையும் அப்படியே நம்பீட்டிருந்தனுங்க.  வைக்கோல் போர்ல கோணூசியத் தேடறது நெம்ப கஷ்டங்க.

பாலா

பாலா,

டொமினிக் லாப்பியரின் நூல் நம்பத்தக்க ஆதாரங்கள் நிறைய உள்ள நூல். ஆனால் பிரிட்டிஷ்காரர்கள் மேலானவர்கள், இந்தியர்களுக்கு அசலான திறமை கொஞம் கம்மி என்ற வழக்கமான கோணம் அதில் உண்டு. ஆகவே எல்லா பிரிட்டிட்ஷாரும் கொஞ்சம் தூக்கபப்ட்டிருப்பார்கள். அதை கணக்கில்கொண்டு வாசிக்கவேண்டும்.ஆனால் அன்றும் இன்றும் இந்த ‘வாய்நாற்றம்’ இல்லாமல் உரையாடத்தக்கமாஇரோப்பிய ஆய்வாளர்கள் எவருமே இருப்பதாகத் தெரியவில்லை. எனக்கு குறைந்தது பதினைந்துபேரை நேரிலேயே தெரியும்…

ஜெ

 

வணக்கம் ஜெ…
காந்தி சார்ந்த அணைத்து கட்டுரைகளும் வாசித்தேன் . ஆழமும், பொருளும் நிரம்பி இருக்கின்றன. படிக்கும் பழக்கமும் , விவாதித்து முடிவெடுக்கும் பழக்கமும் , புரிந்து கொள்ளாமல் கவர்ச்சிக்காக ஏற்கும் பழக்கமும் மலிந்து வரும் நிலையில்; ஒரு எழுத்தாளனாக, நீங்கள் உங்களுடைய வசீகரத்தை உபயோகித்து கருத்து மாற்றங்கள் நிகழ வாய்ப்பளிப்பது உங்கள் கடமை . செவ்வனே செய்து வருகிறீர்கள். நன்றி.

காந்தி பிரிவினையின் பொது மிகவும் சோர்வுற்றிருந்ததால் அதை தடுக்க உண்ணாவிரதம் இருக்கவில்லை என்று கூறியிருந்திர்கள். அனால் உண்மையில் காந்தி ஜின்னா வை தன்னால் மாற்றி தன் வழிக்கு கொண்டு வரமுடியும் என்ற நம்பிக்கையை இழந்து விட்டிருந்ததாகவே எனக்கு படுகிறது. மேலும் பிரிவினையால் ஜின்னாவும் முஸ்லிம் லீகும் அடையும் பயன்கள் அவர்கள் காதில் பஞ்சாகவும் பலன்களை தவிர வேறெதையும் பார்க்காத கிட்டப்பார்வையாளர்களாக மாற்றிவிட்டிருந்தது.

காந்தியும் காமமும் கட்டுரை மிகவும் அதிர்ச்சியாக அமைந்தது . இவ்விசயங்களை இப்போதே முதல் முதலாக கேள்விபடுகிறேன் . நல்லவேளை அவரின் சோதனைகளை உங்கள் வாயிலாக அறிந்தேன் . இல்லாவிடில் அது ஒரு எதிர்மறையான விளைவை என்னிடம் உருவாக்கி இருக்கும்.

– தமிழரசன்

 

அன்புள்ள தமிழரசன்

உண்மை. குகா அவரது காந்திக்கு பின் இந்தியா நூலில் அதைத்தான் சொல்கிறார். ஜின்னா தன்னை அப்படி வைத்துக்கொண்டிருந்தார். இப்போது ஜின்னாவை வெள்ளையடிக்க பலர் முயன்று கொண்டிருக்கிறார்கள். சில  விஷயங்களை குகாவின் நூலையே ஆதாரமாகக் கொண்டு சொல்கிறேன் [கிழக்கு பிரசுரம்]

1. பாகிஸ்தானில் இந்துக்கள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டபோது அதைத்தடுக்க ஜின்னாவோ இஸ்லாமிய தலைவர்களோ எதுவும் செய்யவில்லை. அந்த கலவர இடங்களுக்கு ஜின்னாவோ பிறரோ செல்லவில்லை. மாறாக இந்தியாவில் இந்துக்கள் இஸ்லாமியர்களை கொல்வதர்கு எதிர்ப்பு தெரிவித்து உணர்ச்சிகரமான அறிக்கைகளை விட்டுக்கொண்டிருந்தார்கல். அது வெறுப்பை மேலும் விசிறிவிட்டது

2 ஆனால் காந்தி இஸ்லாமியர்களை இந்துக்கள் தாக்கிய பகுதிகள் நடுவே தன்னந்தனியாக நடந்து சென்றார். தன் உயிரை பணயம் வைத்து கலவரத்தை நிறுத்தினார். காந்தி மேஜிக் என அவரது எதிரிகளே அதை புகழ்ந்தனர். ஆனால் அதன் பொருட்டு காந்தி இந்துக்களால் இந்து துரோகி என வசைபாடப்பட்டார், இன்றும் வசைபாடப்படுகிறார். அவரது மாபெரும் துரோகமாக இதைத்தான் சுட்டிக்காட்டுகிறார்கள்.

3 ஆனால் காந்தி இந்து வெறியனால் சுட்டுக்கொல்லப்பட்டபோது, அதற்குக் காரணம் அவர் இஸ்லாமியர்களை பாதுகாத்ததே என்ற உண்மையை அறிந்துகொண்டே, ஜின்னா சொன்னார். ‘காந்தியின் மரணம் இந்துக்களுக்கு இழப்பு’ என. சிறிய அளவில்கூட ஓர் இரங்கலை அவர் தெரிவிக்கவில்லை. உலகிலேயே காந்திகொலைக்கு இரங்கல் தெரிவிக்காத தேசத்தலைவர் அவரே.

ஜெ

 

ஜெமோ அண்ணா.

உங்கள் புத்தகங்கள் கிடைக்குமிடம் பற்றி ஒருவர் கேட்டிருந்தார் ,

சுதர்சனில் காடு , ஏழாம் உலகம் , மற்றும் இலக்கிய அறிமுக வரிசை கிடைக்கிறது ,

கோவை விஜயாவில் கன்யாகுமரி முதல் ஊமைசெந்நாய் வரை அனைத்து சிறுகதைகள்நாவல்கள் கிடைக்கின்றன , (ஆனால் அவர்கள் கடையையே ஒளித்துதான்வைத்துள்ளார்கள் , திருப்பூரில் ஒரு கடை உள்ளதாம் , 5 வருடமாக அங்கேசுற்றும் எனக்கு இதுவரை தெரியாது)

உங்கள் பதிவுகள் பெரிதாக , கனமான விசயங்களை கொண்டுள்ளதால் படிக்க
முடியவில்லை என சொல்கிறார்கள் , இரண்டு வருடங்களாக (நம்ம ஆனந்தவிகடனுக்குஒரு தேங்க்ஸ்)  ஒரு கட்டுரை கூட படிக்காமல் இருந்ததில்லை , (சிலவிசயங்களில் ஆர்வமில்லாவிட்டாலும்)

ஓவியர் ஹீசைன் பற்றி எழுதி இந்து தாலிபானாயிருக்க வேண்டியது நாந்தான் ,
ஒருநாள் தள்ளிபோச்சு , தமிழில் இதுவரை இந்த விசயத்தை வெறுப்பில்லாம்
யாரும் பேசியதில்லை , போலி செக்யூலரிஸ்டுகள் சொல்லியிருந்தால் எங்களால்
நிச்சயம் ஏற்றுக்கொண்டிருக்க முடியாது ,

காந்தி சலிப்பூட்டுகிறாரா ? சத்தியமாக இல்லை , காந்தியை
வெறுத்த(முட்டாள்தனமாக) என்னை போன்றவர்களுக்கு திசைதிருப்பல் இந்த
கட்டுரைகள்தான் , காந்தி வெறுப்பு பேசப்படும் இடங்களில் மறுத்து பேச
நிறைய உங்களிடம் கிடைத்துள்ளது ,

உங்கள் கட்டுரைகளுக்கு அப்புறம்தான் தண்டியாத்திரை (அந்த எழுத்தாளர்
உங்களுக்கு கடிதம் எழுதியிருந்தார் , புத்தகம் மிக உபயோகமானது , புள்ளி
விவரங்களுக்கிடையில் நிறைய கிடைக்கிறது , )

ராமச்சந்திர குகாவின் காந்திக்கு பின் இந்தியா , ஏ.கே செட்டியாரின்
அண்ணலின் அரிசுவட்டில் , இஎம்எஸ் எழுதிய காந்தியம் குறித்த புத்தகம்
,அ.மார்ஸின் காந்தியும் சனாதானிகளும் ( அ.மார்க்ஸை தாலிபான்களின் கொபசெ
என்றுதான் எண்ணியிருந்தேன் , இந்த புத்தகம் அவரை பற்றிய முடிவுகளை
கலைத்து போட்டுவிட்டது) போன்ற புத்தகங்களை வாங்கி படிக்க தூண்டப்பட்டேன்
,

உங்கள் காந்தி புத்தக தொகுப்பு வெளிவருவதற்க்கு காத்துள்ளேன் ,

முறைப்பாடு கட்டுரை படித்தேன் , இன்னும் இதெல்லாம் உங்களுக்குள்
இருப்பதால்தான் நீங்கள் ஜெமோவாக இருக்கிறீர்கள் , மிக சிறந்த கட்டுரை ,

//. இணையத்தை புரிந்துகொள்ளாமல் எழுதக்கூடிய ஒரே மனிதர் நீங்கள்தான்.
இந்த மாதிரி கட்டுரைகளை நான் வேறு எந்த இணைய இதழிலும் பார்த்ததில்லை. //

சுத்தம் , என்ன சொன்னாலும் நீங்கள் மாறமட்டீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது
, இந்த தளம் வெறும் கதைகளுக்கான தளம் அல்ல, நீங்கள் வெறும்
இலக்கியவாதியும் அல்ல , ஒரு சிந்தனாவாதியின் தளம் இப்படிதான் இருக்கும் ,
நாளை பலர் உங்களை முன்னுதாரணமாக கொண்டு எழுதுவார்கள் ,

தமிழ் சூழலில் ஒரு ஆயிரம் தீவிர வாசகர்கள் கிடைப்பதே போதும் , அந்த
எண்ணிக்கையை எட்டியாயிற்று என நினைக்கிறேன் ,

தளத்தில் கோப்பு பகுதி செப்டம்பருக்கு அப்புறம் தொகுக்க படவில்லை ,
தானியங்கிதானே அது ?

மத்தகம் வரை உள்ளது   , அக்னிகாற்று எந்த தொகுப்பிலும் இல்லையே ,
இனிதான் வரவேண்டுமா ?

நிறைய பேசிவிட்டேனோ ? பதில் மெய்ல் எல்லாம் எழுதவேணுமென்பதில்லை அண்ணே ,

With Best Regards,

Arangasamy.K.V

 

அன்புள்ள அரங்கசாமி

விஜயா வேலாயுதம் அவர்களுக்கு இலக்கிய நூல்கள் விற்று லாபம் ஏதுமில்லை. அவரது நட்சத்திரங்கள் நித்யானந்த சாமிகளும் ஜக்கியும்  வைரமுத்துவும்தான். இலக்கிய நூல்கள் எல்லாமே கிடைக்கும். மாடிக்குப்போய் நீங்களே தேடி எடுக்கவேண்டும்

உசேன் குறித்து சொல்லும் முன் அதே அளவுகோலை எல்லாருக்கும் போடுவார்களா என்ற கேள்வியை கேட்டுக்கொன்டுதான் நாம் மதிப்பிட வேண்டும். உசேனின் கருத்துச் சுதந்திரத்துக்காக கத்துபவர்கள் ஈவேரா அவர்களாஇ பெரியார் என்று நான் சொல்வதில்லை என்பதற்காக வசைபாடுகிறார்கள்!

ஜெ

 

அன்புள்ள ஐயா

உங்கள் இணையதளத்தில் நீளமான கட்டுரைகளைப் பற்றி வந்த கடிதங்கலை வாசித்தேன். அவற்றை பொருட்படுத்தாதீர்கள். தரமும் வெகுஜன  அபிப்பிராயமும் சேர்ந்து போவது அபூர்வம். கட்டுரைகளை நீர்க்கச் செய்ய வேண்டாம்

முருவ வழிபாடு குறித்த உங்கள் விளக்கம், இந்து ஞானமரபு அளிக்கும் தத்துவம் குறித்த கருத்துக்கள் சிறப்பாக இருந்தன. நீங்கல் சொல்வதை என் அன்றாட வழிபாட்டில்நான் தினமும் உணர்ந்து அனுபவித்து வருகிறேன். நான் உங்கள் இணையதளத்தை வாசிக்க ஆரம்பித்து சிறிதுநாள்தான் ஆகிறது. அதற்குள் நான் அதன் அடிமையாகிவிட்டேன்

நன்றி

கோமதி

 

அன்புள்ள கோமதி அவர்களுக்கு

நீளமான கட்டுரைகளை நிறையபேர் வாசிக்கிறார்கள் என்றே என் கணக்குகள் சொல்கின்றன. இணையதள வருகை திருப்தியளிக்குபடியாகவே உள்ளது.

நன்றி ஜெ

உயர்திரு ஜெ மோ சார்,

வணக்கம். திரு.ராமசுப்ரமணியம், திரு சிவகுமார் ஆகியோர் உங்கள்  இணையதளத்தில் கட்டுரைகள் போரடிப்பதாக உள்ளதாகவும் அதனால் ஜனரஞ்சகமாக எழுதவும் சொல்லியிருக்கிறார்கள். நான் அவர்களிடம் கைஎடுத்துக்கும்ம்பிட்டு கேட்டுக்கொள்கிறேன் அய்யா ராமசுப்ரமணியம் @ சிவகுமார் அவர்களே உங்களுக்கு படிக்க முடியவில்லை என்றால் படிக்காமல் இருந்து கொள்ளுங்களேன். ஏன் என் போன்றவர்களின் வாசிப்பில் மண்  அள்ளிப்போடுகிறீர்கள்?. ஜெ மோ சார் எழுதும் கட்டுரைகளின் தரத்தில் உங்களால் தமிழில் வேறு உதாரணம் காட்ட முடியுமா?

ஜெ மோ சார் தயவு செய்து உங்கள் இனைய தளத்தில் இதே தீவிரத்துடன் எழுதுமாறு உங்கள் பாதம் பணித்து வேண்டுகிறேன்.  இலவசமாக படிப்பதற்கு சங்கடமாகத்தான் இருக்கிறது. என் பொருளாதார நிலைமை சரியானவுடன் உங்கள் இணையதளத்தை  படிக்க நிச்சயமாக உங்களுக்கு பணம் செலுத்துவேன்.

பணிவுடன்

பெருமாள்

கரூர்

 

அன்புள்ள பெருமாள்

பொதுவாக கடிதங்களில் எல்லாவகையான கருத்துக்களும் வரும். என் இணையதளத்தை தீவிரமானா வாசிப்புக்காக மட்டுமே நடத்துகிறேன். இங்கே வருபவர்கள் அதற்காக மட்டுமே வருகிறார்கள் என்றே எண்ணுகிறேன்

ஜெ

 

அன்புள்ள ஜெயமோகன்

நமஸ்காரம்

காந்திக்கு நான்கு பையன்கள். இரு லால்கள் இரு தாஸ்கள். ஹரிலால் மணிலால் ராம்தாஸ் தேவதாஸ். இவர்களில் இருவர் இந்தியாவிலும் இருவர் ஆப்ரிக்காவிலும் பிறந்தவர்கள்.

காந்தி  வழிநடத்தியது நேட்டால் இந்திய காங்கிரஸை, ஆப்ரிக்க தேசிய காங்கிரசை அல்ல. 1913 அக்டோபர் 19ல் ல் காந்தி நேட்டால் இந்திய காங்கிரஸை வழிநடத்திய விதத்தை ஒத்துக்கொள்ளாமல், அதன் மூலம் எந்தப்பயனும் விளையவில்லை என்பதைக்கண்டு வெறுத்துப்போய், தென்னாப்ரிக்க இந்தியர்களில் ஒரு சாரார் டர்பன் நகரில் நேட்டால் இந்திய காங்கிரஸ் செயலர்கள் அங்கிலியா மற்றும் தாதா ஓஸ்மான் தலைமையில் கூடி காந்தியின் வழிமுறைகளை கண்டித்தார்கள். நேட்டால் இந்திய காங்கிரஸ் அவர்களின் ராஜினாமாக்களை ஏற்க மறுத்தது. மாறாக காந்தியின் போராட்டங்களுக்கான தன் ஆதரவை அது வாபஸ் பெற்றுக்கொண்டது. காந்தி பார்ஸி ரஸ்தம்ஜியின் வீட்டில் வைத்து  நேட்டால் இந்திய சங்கம் என்ற அமைப்பை உருவாக்கி பதிலடி கொடுத்தார். 1920ல் மறு உயிர்பெறும் வரை நேட்டால் நிதிய காங்கிரஸ் செயலிழந்தது

ராதா ராஜன்

 

அன்புள்ள ராதாராஜன்,

உங்கள் கடிதத்துக்கு நன்றி. முந்தைய கட்டுரைகளில் நேட்டல் இந்திய காங்கிரஸ் என்றே இருந்தது. காந்தியின் மகன்கள் கட்டுரையில் பிழை வந்துவிட்டது நீங்கள் சுட்டிக்காட்டிய கவனப்பிழையை காந்திய அமைப்பினர் ஏற்கனவே சுட்டிகாட்டியிருந்தார்கள். திருத்திக்கொண்டேன்.

காந்தி அவரது வழிமுறைகளை ஆரம்பித்தது தென்னாப்ரிக்காவில். அவருக்கே தெரியாத முறை அது. ஐரோப்பாவில் சில அரசின்மைவாதிகள் சிறிய அளவில் செய்து பார்த்தது. ஆகவே அதை பிறரைச் சொல்லி புரியவைக்கவும் ஏற்க வைக்கவும் அவரால் முடிந்திருக்காது என்பது இயல்பே. ஏன், காந்தியின் கடைசிக்காலம் வரை அவரது வழிமுறைகளை ஏற்காமல் ஒரு சாரார் பிரிந்துசென்றுகொண்டேதான் இருந்தார்கள்.

மூன்று விஷயங்கள் மட்டுமே கவனத்திற்குரியவை. 1. காந்தி 1920ல் தன் மகன் மணிலாலையும் ராம்தாஸையும் நேட்டால் இந்திய காங்கிரஸை வழிநடத்தவே தென்னாப்ரிக்காவுக்கு அனுப்பி வைத்தார் 2. தென்னாப்ரிக்க இந்தியர்கள் ஒட்டுமொத்த ஆப்ரிக்க சுதந்திரம், இன சமத்துவம் ஆகியவற்றுக்காகப் போராட தயாராக இருக்கவில்லை. கறுப்பர்களிடமிருந்து தங்களை மேம்படுத்திக்காட்டவும் அதன் பொருட்டு வெள்ளையரிடம் சமரசமாகபோகவும் எண்ணினர். அதை பின்னர் காந்தி ஏற்கவில்லை. மணிலால் நேட்டால் இந்திய காங்கிரஸ¤டன் மோதியதே அதனால்தான் 3. பின்னர் மண்டேலா தலைமையில் தென்னாப்ரிக்க தேசிய காங்கிரஸ் காந்திய இலட்சியங்களையும் வழிமுறைகளையும்தான் மேற்கொண்டது. இதை மண்டேலா அழுத்தமாக பதிவுசெய்திருக்கிறார்

ஜெ

முந்தைய கட்டுரைதிருமா
அடுத்த கட்டுரைஅறிவிப்பு