கீதை அறிவுலகில்

இந்து ஞான மரபு என்றால் என்ன?

  1. வேதங்கள்,
  2. ஆறுமதங்கள் (சைவம், வைணவம், சாக்தம், கெளமாரம், காணபத்தியம், செளரம்)
  3. ஆறுதரிசனங்கள் (சாங்கியம், யோகம், வைசேஷிகம், நியாயம், பூர்வமீமாம்சம், உத்தரமீமாம்சம் அல்லது வேதாந்தம்)
  4. முத்தத்துவங்கள் (உபநிடதங்கள், கீதை, பிரம்ம சூத்ரம்)

இது நெடுங்காலமாக இருந்துவரும் வைப்புமுறையாகும். இதில் வேதாந்தத்திற்கு பல மூலநூல்கள் இருந்தாலும் முதல்நூல் பிரம்ம சூத்திரம்தான். உபநிடதங்களும் கீதையும்கூட வேதாந்த நூல்களே. அப்படிப்பார்க்கும்போது இந்து ஞான மரபில் வேதாந்தம் மேலதிக அழுத்தம் தரப்பட்டுள்ளதாகத் தோன்றும். அது உண்மையல்ல என்று என்னுடைய ஐயத்திற்குப் பதிலாக நித்ய சைதன்ய யதி கூறினார். இந்நூல்களை வேதாந்த தரிசனமாகப் பயில்வது ஒரு தளம். தூய தத்துவ நூல்களாக மேலதிகமாகப் பயிலவேண்டும் என்பதே மரபின் உட்கிடையாகும். அதாவது இவற்றை ஒரு மதத்துடனும் தரிசனத்துடனும் தொடர்புபடுத்தாமல் தத்துவத்திற்குரிய வழிமுறைகளை மட்டும் கையாண்டு ஆராயவேண்டும். ஆகவேதான் வைணவ நூலான கீதைக்கு இந்திய ஞானமரபின் எல்லா தளங்களிலும் முக்கியத்துவம் உருவாயிற்று.

மேலே குறிப்பிட்ட பட்டியலில் நூல் தொகைகளும் சிந்தனைமரபுகளும் மதங்களும் குறிப்பிடப்பட்டிருக்கையில் இரு நூல்கள் மட்டுமே தனிச் சிந்தனை மரபுக்கான முக்கியத்துவத்துடன் குறிப்பிடப்பட்டுள்ளன. பிரம்ம சூத்திரம் ஒன்று, கீதை இன்னொன்று. இவ்விரு நூல்களுக்கும் இன்று வரையிலான இந்து தத்துவ சிந்தனை மரபில் உள்ள இடம் அத்தகையது. இவ்விரண்டில் பிரம்மசூத்திரம் அதன் கறாரானதும் அடர்த்தியானதுமான தத்துவத்தன்மை காரணமாகவும் திட்டவட்டமான தரப்பு காரணமாகவும் முற்றிலும் அறிஞர்களுக்கு உரியதாக மட்டுமே உள்ளது.

ஆனால் கீதை அதன் உரையாடல்தன்மை, கவித்துவம், மற்றும் பன்முகத்தன்மை காரணமாக காலம் செல்லச் செல்ல மேலும் மேலும் முக்கியத்துவம் அடைந்தது. இன்று கிட்டத்தட்ட இந்து மெய்ஞான மரபின் தலை நூல் என்று கருதப்படும் இடத்தைப் பெற்றுள்ளது.

பகவத்கீதை பதிமூன்றாம் அத்தியாயம் நான்காம் பாடலில்

ரிஷிகள்
பற்பல யாப்புகளில்
பற்பல கோணங்களில்
இவ்வுண்மையைப் பாடியுள்ளனர்.
தெளிவாக வரையறுத்து
பிரம்மசூத்திரப் பாடல்களாக
இயற்றியுள்ளனர்

என்று வருகிறது. இது பிரம்ம சூத்திரம் நூலைக் குறிக்கிறதா என்பது சிலருக்கு ஐயமாக உள்ளது. நடராஜகுரு பிரம்ம சூத்திரம் என்றே எடுத்துக் கொள்கிறார். ஆகவே கீதையின் காலத்திலேயே பிரம்ம சூத்திரம் புகழ்பெற்றிருந்தது என்று பரவலாகக் கூறப்படுகிறது. ‘கீதா ரகஸ்ய’த்தில் பாலகங்காதர திலகர் இப்பாடலின் முதல்வரி வேதங்களையும் உபநிடதங்களைக் குறிக்கையில் இரண்டாம்வரி பிரம்ம சூத்திரத்தையும் குறிக்கிறது என்கிறார். அப்படியானால் கீதாசாரியனுக்கு பிரம்ம சூத்திரம் தெரிந்திருக்கிறது. அதில் கூறப்பட்டுள்ளவற்றின் நீட்சியும் விரிவாக்கமுமே தான் கூறுவது என்று அவன் கூறுகிறான்.

ஆனால் கீதையைப் பார்க்கையில் இந்தக் குறிப்பிட்ட பாடல்வரி மட்டும் தனியாக நிற்பதாகப்படுகிறது. இது ஒரு பிற்சேர்க்கையாக இருக்கலாமென்பது என் ஊகம். கீதை மறு உருவாக்கம் செய்யப்பட்டது என்று கொண்டால் அப்போது சேர்க்கப்பட்ட வரி இது. அக்காலத்தில் முந்தைய கீதை வடிவமும் பிரம்ம சூத்திரம் அளவுக்கே முக்கியத்துவம் கொண்டதாக, இரு ஞானக்குரல்கள் என்ற அளவுக்கு பேசப்பட்டதாக இருந்திருக்கலாம். இவ்வரி அதையே குறிப்பிடுகிறது என்று கூறலாம். அதாவது கீதையின் இவ்வரி எழுதப்பட்டபோது கீதையே பிரம்ம சூத்திரமளவுக்கு அங்கீகாரம் பெற்ற நூலாக இருந்தது.

கீதையின் இந்த முக்கியத்துவம் குன்றாமல் தொடர்ந்து வருவதைக் காண்கிறோம். தொல்புராணங்களில் உள்ள கீதை குறித்த இரு புகழ்பாடல்கள் இன்றும் பெரும்பாலான கீதை உரைகளின் முகப்பில் காணப்படுகின்றன.ஒன்று  வராக புராணத்தில் உள்ள ‘கீதா மகாத்மியம்’ என்ற செய்யுள். இரண்டு ‘வைஷ்ணவ்ய தந்திர சாஸ்திரம்’ நூலில் இருந்து எடுக்கப்பட்ட ‘கீதாதியானம்’

புராண மரபுக்கே உரித்தான முறையில் இவை கீதையை இரு கோணங்களில் ஒரே சமயம் வகுத்துக் கொள்ள முயல்கின்றன. ஒன்று, நடைமுறை மதத்தின் சடங்கு – பக்தி சார்ந்த தளம். இன்னொன்று உயர் தத்துவத்தளம். (புராணங்களின் பணியே இவ்விரு தளங்களையும் கற்பனை விரிவு மூலம் இணைப்பதாகவே இருக்கும்.) கீதா மகாத்மியம் கீதையின்மீது உச்சகட்ட பக்தியை வெளிப்படுத்தி அதைப் படிப்பதனால் உருவாகும் நடைமுறைப் பயன்களை பட்டியலிடுகிறது. தன் பன்னிரண்டாவது செய்யுளில் ‘கீதையின் மூன்றாவது யோகத்தை வாசிப்பதன் மூலம் கங்கையில் நீராடிய அதே புண்ணியத்தை அடையலாம்’ என்கிறது அது. அதே சமயம் ‘கீதை மெய்யான ஞானம், பிரம்மத்தின் வடிவம்’ என்கிறது. ‘அது மூன்று வேதங்களும் ஆகிறது. இறுதி மெய்நிலையும் ஆகிறது. உண்மையான தத்துவ ஞானம் அதுவே’ என்றும் கீதையை வரையறை செய்கிறது.

கீதா தியானமும் இவ்வகைப்பட்டதே. கீதையை மெய்ஞான அமுதத்தை ஊட்டும் அன்னையாக வருணிக்கிறது. அது முன்வைக்கும் உருவாக்கத்தை நாம் அனைவரும் கேட்டிருப்போம். உபநிடதங்கள் என்ற பசுவில் இருந்து அர்ஜுனன் என்ற கன்றின் பொருட்டு தூயவனாகிய ஆயன் – கண்ணன் – கறந்தளித்த பால் அது.மகாபாரதத்தின் கீதைத்தருணத்தையும் இதேபோல பெரியதோர் கவியுருவகமாகக் காட்டுகிறது இந்த செய்யுள்நூல். இதைத்தவிர புராதனமான பல நூல்களில் கீதை குறித்த துதிகள் பல தென்படுகின்றன.

தொன்மையான காலம் முதல் கீதைக்கு உரைகள் பல இருந்துள்ளன. அநேகமாக எல்லா குருகுல பரம்பரையும் தங்களுக்கென ஒரு உரையைக் கொண்டிருக்கும் என்று ஊகிக்கலாம். நவீன காலத்தில் இந்தப் போக்கு மேலும் வலுவாகவே தொடர்கிறது. நடராஜ குருவின் மதிப்பீட்டில் பிற்கால வேதாந்த மரபின் முதன்மை ஆசிரியர்களான சங்கரர் (கி.பி.788-826) , ராமானுஜர்(கி.பி.1017-1137), மத்வர்(1119-1317) ஆகியோரின் உரைகள் சிறந்தவையும் மையமானவையுமாகும். தத்துவ வாசகன் அவற்றை ஒப்பிட்டு ஆராய்ந்து உணர்தல் வேண்டும்.

இன்றுவரை வந்து கொண்டிருக்கும் கீதை உரைகள் அனைத்துமே குறிப்பிட்ட மூன்று மரபுகளில் ஒன்றைச் சார்ந்தவையாக இருப்பதைக் காணலாம். தமிழ்நாட்டில் பெரும்புகழ் பெற்ற சுவாமி சித்பவானந்தரின் கீதை உரை சங்கரரின் உரையின் வழிவந்தது. வேதாந்த நோக்கு உடையது. ராமகிருஷ்ண மடம் வெளியிடும் உரைகளும் அத்வைத நோக்கு கொண்டவையே. அரவிந்தர், நடராஜகுரு, சுவாமி சின்மயானந்தா, கிரிதாரிப் பிரசாத் போன்றவர்களின் உரைகளும் சங்கரரின் அத்வைத நோக்கு ஓங்கி நிற்பவையே. கிருஷ்ணபிரேமி, முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார் போன்ற புகழ்மிக்க உபன்னியாசகர்களின் வழி ராமானுஜரை பின்தொடர்வது. இந்திய அளவில் இன்று அதிகமாகக் கிடைக்கும் கீதை உரையான பக்திவேதாந்த சாமி பிரபுபாதாவின் ‘பகவத்கீதை – உண்மையுருவில்’ என்ற நூல் (அகில உலக கிருஷ்ணபக்தி இயக்கம் வெளியீடு) மத்வரின் ஞானமரபை அடியொற்றியதாகும்.

முதல் மூவர் உரைகளே அதிகமாக குருகுலங்களில் கற்கப்படுகின்றன. மேலதிக ஆராய்ச்சி செய்பவர்கள் வல்லபாச்சாரியர், நிம்பார்க்கர், ஸ்ரீதர ஸ்வாமி, அனந்தகிரி போன்றவர்களின் உரைகளையும் கணக்கில் கொள்வதுண்டு. இந்த மூன்று உரையாசிரியர்களில் ராமானுஜர் மத்வச்சாரியர்  இருவரும் இரண்டு வைணவ பக்தி மார்க்கங்களை உருவாக்கியவர்கள். அவை இன்றும் வலுவுடன் உள்ளன. ஆகவே அவர்களின் அணுகுமுறை கீதையை ஒரு வைணவ பக்திநூலாக வரையறை செய்வதில்தான் தொடங்குகிறது. சங்கரரின் அணுகுமுறை முற்றிலும் தத்துவம் சார்ந்ததாகவும் ஞானத்திற்கும் முக்திக்கும் முக்கியத்துவம் தருவதாகவும் உள்ளது. ஆகவேதான் நவீன காலத்தில் கீதையை ஆராய்ந்த சிந்தனையாளர்களில் பெரும்பாலானவர்களில் சங்கரரின் தாக்கம் அதிகமாக உள்ளது.

கீதை பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கில ஜெர்மானிய மொழிபெயர்ப்புகள் வழியாக உலகளாவிய தத்துவ ஆய்வாளர்களின் கவனத்திற்கு வந்தது. 1785ல் சார்ல்ஸ் வில்கின்ஸ் (Charles Wilkins) கீதையை ங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார். எமிலி பர்னா·ப் (Emilie Burnouf) மொழிபெயர்த்த பிரஞ்சு வடிவம் 1861ல் வெளியிடப்பட்டது. ஜெர்மானிய மொழியில் மார்க்ஸ் முல்லரால் 1882 ல் கீதை மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க தகவல் என்னவென்றால் இந்து மெய் ஞான மரபின் விளைகனியான கீதை, இந்து மெய் ஞான மரபின் வேறு நூல்கள் எதுவுமே வெளிவராத நிலையில் தனியாகவே மேலைநாட்டு ஆய்வாளர்களுக்கு வாசிக்கக் கிடைத்தது – அந்நிலையிலேயே அவர்களை அது கவர்ந்தது என்பதே. இன்று உலகமெங்கும் பெரும்பாலான மொழிகளில் கீதைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மொழியாக்கங்களும் ஆயிரக்கணக்கான உரைகளும் உள்ளன.

உலகமெங்கும் உள்ள தத்துவ ஆய்வாளர்களின் சிந்தனைகளில் கீதை ஆழமான செல்வாக்கைச் செலுத்தியுள்ளது. புகழ்பெற்ற தத்துவ அறிஞர்கள் கீதையைப் பற்றி என்னென்ன சொன்னார்கள் என்று பார்க்கும் ஒருவர் முடிவற்ற புகழ்மொழித் தொகுப்பு ஒன்றை உருவாக்க ஆரம்பிப்பார். சர்.எட்லின் ஆர்னால்ட் கீதையை ஆங்கிலச் செய்யுள் வடிவில் மறு ஆக்கம் செய்தது இன்றும் பெரிதும் விரும்பப்படும் நூலாகும். கீதையின் முரணியக்க அணுகுமுறையைப் பற்றி மேலைநாட்டு தத்துவ ஆய்வாளர்கள் விரிவாக எழுதி ,கிரேக்க முரணியக்க சிந்தனைகளுடன் ஒப்பிட்டு ஆராய்ந்திருக்கிறார்கள். இன்று கீதை குறித்த ஆய்வுகளில் நாம் ஆங்கில, ஜெர்மானிய, பிரெஞ்சு ஆய்வாளர்களின் பெயர்களைக் குறிப்பிடாமல் பேசவே முடியாத நிலை உள்ளது.

சொல்லப்போனால் இந்திய மறுமலர்ச்சியின் காலகட்டத்தில் நாம் கீதையை ‘இந்தியாவின் பெருமிதம்’ ஆகவும், இந்து மதத்தின் பதாகையாகவும் முன் வைக்கவே முயன்றோம். தத்துவார்த்தமாக கீதையை எதிர்கொண்டவர்கள் சிலரே. மேலைநாட்டு ஆய்வாளர்களே அதைச் செய்தனர். அவர்களை அடியொற்றியே நாம் இன்று கீதையைப் பற்றி தத்துவார்த்தமாக சிந்திக்க வேண்டியுள்ளது என்பதே உண்மை.

இந்திய மறுமலர்ச்சி என்று நாம் இப்போது குறிப்பிடும் காலகட்டம் பதினெட்டாம் நூற்றாண்டில் தொடங்கி பத்தொன்பதாம் நூற்றாண்டில் முடிவுற்றது. இந்துமத மறுமலர்ச்சி, சமூக சீர்திருத்த நோக்கு, இந்திய தேசிய உணர்வு ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து உருவம் கொண்ட காலகட்டம் இது. தத்துவ சிந்தனைகளின் களமாக இருந்த குருகுல மரபுகள் மெல்ல மெல்ல வழக்கொழிந்திருந்தன அப்போது. இந்துமதம் சடங்குகள், நம்பிக்கைகள் மட்டும் சார்ந்து இயங்கிக் கொண்டிருந்தது. மூட நம்பிக்கைகளும் தீயபழக்கங்களும் மேலோங்கியிருந்தன. தத்துவ நூல்களும் மெய்ஞான நூல்களும் அறிஞர்களுக்கே தெரியாத நிலை இருந்தது. இந்நிலையில் உருவான மதமீட்பு இயக்கங்கள் இந்துமதத்தின் தத்துவார்த்த அடித்தளத்துக்கு முக்கியத்துவம் தந்து பேச ஆரம்பித்தன. வேதங்களின் ஞான காண்ட பகுதி, உபநிடதங்கள், கீதை, பிரம்ம சூத்திரம், பிற்கால வேதாந்த மரபுகள் ஆகியவை குறித்த விரிவான கவனம் இந்திய சமூகத்தில் உருவாக்கப்பட்டது. மார்க்ஸ் முல்லர் முதலிய மேலை நாட்டு இந்தியவியலாளர்களால் தொகுக்கப்பட்டும் மொழியாக்கம் செய்யப்பட்டும் அளிக்கப்பட்ட மூலநூல்களும் கோட்பாடுகளும் இதற்கு உதவின.

கீதையை இக்காலகட்டத்தில்தான் இந்து மதமும் இந்திய சமூகமும் ‘மறுகண்டுபிடிப்பு’ செய்தன. நாடெங்கும் கீதை உரைகளும் கீதை வகுப்புகளும் நடந்தன. ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம் போன்ற மதச்சீர்திருத்த அமைப்புகள் இதில் பெரும்பங்கு வகித்தன. கீதைக்கு நாம் இன்று காணும் மதநூல் என்றும் பிம்பம் இக்காலகட்டத்தில் உருவானதே. ஆரியசமாஜிகளுக்கு கீதை இரண்டாம்பட்சமான நூலே. ஆனால் பிரம்ம சமாஜிகள் கீதையை பைபிளைப்போல வார வழிபாட்டுக்குரிய ஒரு மூலநூலாக மாற்றினார்கள். அவ்வழிபாட்டுக் கூடல்களில் கீதை கூட்டாக பஜனை செய்யப்பட்டது. இவ்வியக்கங்களினாலும் இதன் அறிஞர்களாலும் கீதைக்கு விரிவான உரைகள் பல எழுதப்பட்டன.

பாலகங்காதர திலகர் 1935ல் எழுதிய மாபெரும் நூலான ‘கீதை ரகசியம்’ ஒரு முன்னோடி நூலாக கருதப்படுகிறது. இவ்வகையில் கீதையின் கர்மயோக அம்சத்தை வலியுறுத்தி எழுதப்பட்டதே காந்தியின் கீதை விளக்கம். ‘அனாஸக்தியோகம்’ என்று குறிப்பிடப்படும் இது 1946ல் வெளிவந்தது. அதே நோக்கின் விளக்கங்களாக வினோபாவின் கீதைப் பேருரைகள் அமைந்தன. இன்னொரு பக்கம் கீதையை இந்திய ஞான மரபின் உச்சமாகவும் இந்துமதத்தின் பொது மூலநூலாகவும் முன்வைக்கும் டாக்டர் ராதாகிருஷ்ணனின் ‘கீதை உரை’ நூல் 1948ல் ஆங்கிலத்தில் வெளிவந்து உலகப் புகழ் பெற்றது.

1905ல் வெளிவந்த அன்னிபெசன்ட் மற்றும் பகவான்தாஸ் இணைந்து எழுதிய கீதை விளக்கம் கீதையை இந்து மறைஞான [Mysticism] மரபின் மாபெரும் மூலநூலாக முன்வைத்தது. இது இன்றுவரை தொடர்ந்து பேசபப்ட்டுவரும் இந்தக் கோணத்தின் முன்னோடி நூலாகும். 1928ல் அரவிந்தர் கீதைக்கு எழுதிய சுருக்கமான உரை கீதையை ஒரு யோக நூலாக அணுகும் போக்கு கொண்டது. கீதையின் முரணியக்கம் நோக்கை விளக்க அவரால் முடிந்தது. அரவிந்தரின் ‘கீதை குறித்த கட்டுரைகள்’ (Essays on Gita) மேலும் வேதாந்தச் சார்பை வெளிப்படுத்துபவை.

இந்திய மொழிகளில் கீதை மிகவும் பிற்காலத்தில்தான் மொழிபெயர்க்கப்பட்டது – அதாவது இந்திய மறுமலர்ச்சியின் போது. இக்காலகட்டத்தில் இந்தியாவின் வட்டார மொழிகள் அனைத்துமே இலக்கியம் சார்ந்த புத்துணர்ச்சியை அடைந்தன. ஆங்கிலம் வழியாக உலக இலக்கியப் படைப்புகள் இம்மொழிகளில் மொழிபெயர்ப்பாகி வர ஆரம்பித்த அதேகாலத்திலேயே சம்ஸ்கிருதத்தில் இருந்து உபநிடதங்களும் கீதையும் மொழிபெயர்ப்பாயின. இக்காலகட்டத்திலேயே வங்கம் மலையாளம் போன்ற சில மொழிகளில் வேதங்களும் மொழிபெயர்க்கப்பட்டன.

இக்காலகட்டத்தில் இந்திய மறுமலர்ச்சியின் ஊற்று முகமாக இருந்த வங்கம் இந்திய அளவில் பெரும் கவனத்திற்கு உள்ளாயிற்று. வங்க இலக்கியங்கள் எல்லா இந்திய மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டன. இந்தப் பாதிப்புகள் மூலம் இந்த மொழிகளில் புத்திலக்கியம் உருவாயிற்று. தமிழ் நவீன இலக்கியத்தின் முதல் குரலான பாரதியில் இந்த மூன்று பாதிப்புகளையும் காணலாம். ‘மேலை இலக்கியம் + இந்து தத்துவ இலக்கியம் + வங்க இலக்கியம்’ என்ற கலவைச் சூத்திரத்தை வள்ளத்தோள், நாராயணமேனன், குமாரன் ஆசான் (மலையாளம்), குவெம்பு (கன்னடம்) என்று பிற மொழி இலக்கிய முன்னோடிகளிடமும் காண முடிகிறது. இவ்வாறு கீதை இந்திய நவீன இலக்கியத்திலும் தன் பாதிப்பைச் செலுத்தியது.

தமிழில் பகவத்கீதைக்கு கிடைத்த புகழ்மிக்க முதல் மொழியாக்கம் பாரதியின் மொழியாக்கமே. அதற்கு முன்னரே சில செய்யுள் வடிவ மொழியாக்கங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது, ஆய்வாளர்கள் தெளிவுபடுத்த வேண்டிய தகவல் இது. பாரதிக்கு பிறகு பற்பல மொழியாக்கங்கள் கீதைக்குக் கிடைக்கின்றன. தமிழில் பல நூல்கள் வெளிவந்து போதிய கவனம் பெறாது போயிருக்கின்றன. டாக்டர் ராதா கிருஷ்ணன் அரவிந்தர் ஆகியோரின் நவீன உரைகலும் நிம்பார்க்கர் ஸ்ரீதரர் போன்றோரின் தொன்மையான உரைகளும் தமிழில் கடந்த அரை நூற்றாண்டுகாலத்தில் வெளியாகியிருக்கின்றன.

இந்திய வட்டார மொழிகளில் கீதைக்கு வந்த முக்கியமான உரை என்பது பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த மராட்டிய பக்த கவிஞர் ஞானேஸ்வர் அல்லகு தியானேஸ்வர் கீதைக்கு அருளிய விளக்கவுரைதான். இவை கீதை மீதான அனுபூதி சார்ந்த உபதேசப் பேருரைகள். மராட்டி இலக்கியத்தின் உரைநடை ஞானேஸ்வரில் இருந்து பிறந்தது என்கிறார்கள். மனு சுபேதார் இந்த நூலை ஆங்கிலத்தில் The Gita Explained by Dnyaneswar Maharaj என்ற பெயரில் வெளியிட்டபின் இது உலகப்புகழ் பெற்றது. பிற இந்திய வட்டார மொழிகளில் கீதை முற்காலத்தில் வெளிவந்ததாகத் தகவல் இல்லை.

இன்று நவீன வாசிப்பின் யுகத்தில் கீதைக்கு விதவிதமான வாசிப்புகள் கிடைக்கின்றன. பக்தி நூலாக, தத்துவ நூலாக, ஞான நூலாக, யோக விளக்கமாக, நடைமுறை செயல்விளக்க நூலாக, உளவியல் ஆக்கமாக, ஏன் சமீபகாலமாக ஒரு மேலாண்மை வழிகாட்டி நூலாகக் கூட கீதையை அணுகி வருகிறார்கள்.

கீதை இடைச்செருகலா? மூலநூலா?- கடிதம்
கீதை வழிகள்
கீதை : முரண்பாடுகள்
கீதா உபநிடதம்
கீதை அகம்
கீதைவெளி
கீதைத்தருணம்
கீதை இடைச்செருகலா? மூலநூலா?- கடிதம்
கீதையை எப்படிப் படிப்பது? ஏன்?
முந்தைய கட்டுரைநாமக்கல் ‘கூடு’
அடுத்த கட்டுரை'ஜெகமிதுவே ஒரு நாடகரங்கம்!'