அம்பை

தி இண்டு நாளிதழில் அம்பை எழுதிய தரமற்ற ஓர் எதிர்வினைக்கு எதிராக நான் அளித்த பதில் என் தளத்தில் வெளியாகியிருக்கிறது. அதையொட்டி சில கடிதங்கள் வந்தன.

இணையத்தின் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று எந்த ஒரு விவாதத்திலும் இலக்கியத்துக்கும் அறிவுச்செயல்பாட்டுக்கும் முற்றிலும் புதியவர்கள் உள்ளே வருவது. விவாதங்கள் வழியாகவே பலர் இலக்கியம் மற்றும் அறிவுச்செயல்பாடுகளுக்கு அறிமுகமாகிறார்கள். விவாதங்களை வெறும் வம்புமீதான ஆர்வம் காரணமாக கவனித்து எதையாவது எதிர்வினைசெய்துவிட்டு விலகிவிடுபவர்களே பெரும்பாலானவர்கள். அனால மிகச்சிலர் தொடர்ந்து வாசிக்கக்கூடியவர்கள்.

முதல்வகையினரை நான் கருத்தில்கொள்ள விரும்பவில்லை. இரண்டாம்வகையினர் இவ்விவாதங்கள் வழியாக பிழையான மனப்பதிவுகளுக்குச் சென்றுவிடக்கூடாது என்பதை எப்போதும் கருத்தில்கொள்கிறேன். முன்பு எஸ்.வி.ராஜதுரை சார்ந்த விவாதங்களில்கூட அவ்விவாதங்களில் இருந்து எஸ்.வி.ராஜதுரையின் பங்களிப்பு பற்றிய எதிர்மறைப் படிமம் உருவாகிவிடலாகாது என்பதை கருத்தில்கொண்டேன். அம்பை குறித்த விவாதங்களிலும் இதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அம்பை [சி.எஸ்.லட்சுமி] தமிழ் அறிவியக்கத்தின் முக்கியமான பெயர்களில் ஒன்று. தமிழ்ச்சிறுகதைகளில் சில குறிப்பிடத்தக்க கதைகளை எழுதியிருக்கிறார். என்னுடைய நவீனத்தமிழிலக்கிய அறிமுகத்திலும் வேறுபல கட்டுரைகளிலும் அவரது பங்களிப்பைப்பற்றி எழுதியிருக்கிறேன்.

இப்பங்களிப்பை விமர்சகனாக நான் இரு பகுதிகளாகப் பார்க்கிறேன். ஒன்று, தமிழ்ச்சிந்தனைப் பரிணாமத்தில் அவரது பங்களிப்பு. இரண்டு இலக்கியத்தில் கலைரீதியான அவரது பங்களிப்பு. முதல்பங்களிப்பு மிகமிக முக்கியமானது. இரண்டாம் பங்களிப்பு மிகக்குறைவானது என்பது என்னுடைய கணிப்பு. இக்கணிப்புகள் ஒன்றுடன் ஒன்று பொருந்துபவை மட்டுமல்ல ஒன்றை ஒன்று புரிந்துகொள்ள உதவக்கூடியவையும் கூட.

தமிழில் பெண்களின் எழுத்துக்களில் வணிக எழுத்துக்கும் இலக்கியத்துக்கும் நடுவே உள்ள ஓர் இடத்தை நிரப்பியவை கலைமகள் வெளியிட்ட படைப்புகள். ஐம்பதுகள்முதல் பெண்கள் இதழாக வெளிவந்த கலைமகள் குறிப்பிட்ட பொது இயல்புகள் கொண்ட பெண் எழுத்தாளர்களின் ஒரு வரிசையை உருவாக்கியது.

இலக்கியப்படைப்புகளுக்கு இன்றியமையாத செறிவும் தீவிரமும் தனித்தன்மையும் அமையாத படைப்புகள் அவை. அதேசமயம் வணிக எழுத்துக்களுக்குரிய திட்டமிட்ட உற்பத்தித்தன்மை அற்றவை. ஆத்மார்த்தமானவை. பெண்களின் பல்வேறு வாழ்க்கைத்தருணங்களை பதிவுசெய்பவை. இவ்வரிசைப் பெண் எழுத்தாளர்களில் அநுத்தமா,ஆர்.சூடாமணி, ராஜம்கிருஷ்ணன் மூவரும் முக்கியமானவர்கள். எம்.ஆர்.ராஜம்மா, கமலா சடகோபன் போன்று பல அடுத்தகட்ட பெண் எழுத்தாளர்கள் இவர்களில் உண்டு.

தமிழில் வணிகரீதியான பெண்எழுத்து என்பது எழுத்து தோன்றிய காலம் முதல் உள்ளது. அவர்களில் பல நட்சத்திரங்கள் முதலில் கலைமகளில் எழுதி, பின்னர் வணிகஇதழ்களுக்குச் சென்றவர்கள் அம்பையும் கலைமகளில் இருந்து தொடங்கியவர். அவரது ஆரம்பகாலப் படைப்புகள் எல்லாவகையிலும் கலைமகள் படைப்புகளே. பின்னர் எழுபதுகளில் அவர் தமிழில் பெண்ணியசிந்தனைகளை அறிமுகம் செய்த படைப்பாளியாக பரிணாமம் பெற்றார். அச்சிந்தனைகளை தமிழில் அறிமுகம்செய்தவர், தமிழ்ச்சிந்தனைப்புலத்தில் அவற்றை முக்கியமான தரப்பாக நிறுவியவர் என்றவகையில் அம்பையின் பங்களிப்பு மிகமுக்கியமானது. அதற்கு ஒரு தொடர்ச்சியும் வளர்ச்சிப்பரிணாமமும் உண்டு.

அவரது The Face behind the mask ,Seven seas & seven mountains போன்ற நூல்கள் முக்கியமானவை. அம்பை அவரது ஸ்பாரோ அமைப்புக்காகத் தொகுத்தநூல்களும் முக்கியமானவை. அவற்றில் சிலகட்டுரைகளை என் மனைவி அருண்மொழிநங்கை முன்பு மொழியாக்கம் செய்திருக்கிறாள். இவற்றில் பல தமிழில் கிடைப்பதில்லை.

அம்பையின் புனைகதைகள் ஆரம்பகாலத்தில் நேரடியான உணர்வுகளுடன் பெண்அகத்தை சித்தரிப்பவையாக இருந்தன. தன் ஆளுமையை கண்டடைவதில் பெண் அடையும் அறச்சிக்கல்களைப் பேசுபவை அவை. அம்மா ஒரு கொலைசெய்தாள் அவ்வகைக்கு முன்னுதாரணமான ஆக்கம். ஆனால் பின்னாளில் அவரது கதைகள் வெறும் பெண்ணியப்பிரச்சாரக்கதைகளாகச் சரிந்தன. எல்லாவகையான அரசியல்சரிநிலைகளையும் சரியாகப்பேணும் புரட்சிப்பெண்கள் தோன்றும், அல்லது அப்பெண்ணின் பார்வையில் சொல்லப்படும் கதைகள் அவை. சில கதைகள் எளிய முற்போக்குத்திரிபுக்கதைகள்

இக்கதைகளுக்கு என் நோக்கில் பெரிய இலக்கிய மதிப்பு இல்லை. அவற்றிலுள்ள அறச்சீற்றத்துக்கு ஓரு சமகாலக் கலைமதிப்பு உண்டு. ஆனால் கலை என நான் நம்புவது மானுட இயல்பிலும் தரிசனத்திலும் உள்ள ஒரு காலாதீதத்தன்மையைச் சென்று தீண்டுவதுதான்.அந்தக்கோணத்திலேயே என் கணிப்பில் ஜார்ஜ் எலியட் பெரும்படைப்பாளி.குர்ரதுல்ஐன் ஹைதரும் ஆஷாபூர்ணாதேவியும் பெரும்படைப்பாளிகள். அம்பையின் எழுத்துக்களில் உள்ள சமகாலத்து வேகம் அவற்றை நிறுவுகிறது, அவற்றை முக்கியமான படைப்புகளல்லாமலும் ஆக்குகிறது.

பயங்கள் என்னும் அம்பையின் நாடகம் முக்கியமானது. அதுவும் பிரச்சாரநெடி கொண்டதே. ஆனால் வலுவான நிகழ்த்துகலைத்தன்மை அந்த ஓங்கிய குரலை நியாயப்படுத்துகிறது. சிந்தனையாளராக அம்பையின் இடம் முக்கியமானது, புனைவெழுத்தாளராக ஆரம்பத்திலேயே தேங்கிவிட்டது. அம்பையின் சிறகுகள் முறியும், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை இரு தொகுப்புகளிலும் நல்ல கதைகள் சில உள்ளன. காட்டில் ஒரு மான் முக்கியமற்ற கதைகள் கொண்ட தொகுப்பு.

அம்பையின் The Face behind the mask நூலை ரயிலில் வாசித்துக்கொண்டு வந்தேன். அம்பை அந்நூலில் இலக்கியத்தரம் என்பதை முன்னிறுத்துகிறார். தமிழில் எழுதிய பெண்கள் பெரும்பாலும் ஆத்மார்த்தமான இலக்கியமுயற்சி என்ற இலக்கை எடுத்துக்கொள்ளாமல் வணிகஎழுத்திற்குச் சென்றது ஏன், தங்களுக்கு உண்மையான உணர்ச்சிகள் இருக்கையில் வணிக எழுத்தின் நிரந்தரமான சூத்திரங்களுக்குள் சென்றது வழி எது என்ற மிகமுக்கியமான வினாவை எழுப்பிக்கொள்கிறார். விவாதிக்கவேண்டிய ஒரு வினா அது.

ஆனால் அவரே எந்த மதிப்பும் இல்லாத, வணிகரீதியான எழுத்துக்களைக்கூட படைத்திராத ஒரு பெண்கள் கூட்டத்தின் முகப்பில் கொடிபிடித்து வந்து நிற்கிறார். சிந்தனை என்பது எப்போதுமே ஒரு தனித்த பயணம்தான். தான் அடைந்தவற்றையும் நிராகரித்தபடி மேலும் மேலும் முன்னே செல்வதே அதிலுள்ள சவால். அமைப்புரீதியாகச் செயல்படும்போது இத்தகைய சரிவுகள் நிகழ்கின்றன. அந்தப்பட்டியலில் அம்பையும் மோகனா ராமசுந்தரமும் ஒரே வரிசையில் ஒரே தரத்தில் நிற்கவேண்டியிருக்கிறது என்பதே சங்கடமானது.

இந்த இயல்பான சிக்கலைத்தாண்டி அம்பையை வாசகர்கள் அவரது எழுத்துக்கள் வழியாக மதிப்பிடவேண்டுமென நினைக்கிறேன்

ம்பைக்கு இயல் விருது

எஸ்.வி.ராஜதுரையின் பங்களிப்பு

ஆர் சூடாமணி ஒரு மதிப்பீடு

கிருத்திகா ஓர் அஞ்சலி

அநுத்தமா

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 25
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 26