ஆசிரியருக்கு,
என்னுடைய படத்துடன் அம்பை எழுதிய ஒரு கட்டுரை தமிழ் ஹிந்து தளத்தில் வெளிவந்துள்ளது. தனிப்பட்டமுறையில் என்னை இழிவுசெய்யக்கூடிய நோக்கம் கொண்ட கட்டுரை அது. அதில் சில குறிப்பிட்ட எழுத்தாளர்கள் நடந்துகொண்ட முறை பற்றி எந்த வித ஆதாரமும் இல்லாத வரிகள் பல உள்ளன. அவையெல்லாம் என்னைக்குறிப்பவை என்னும் பொருள்வரும்படி அக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது, வெளியிடப்பட்டுள்ளது.
சென்ற இருபத்தைந்தாண்டுக் காலமாக எழுதிவரும் நான் எந்த ஒரு தருணத்திலும் எந்த ஒரு பெண் எழுத்தாளரையும் தனிப்பட்ட முறையில் விமர்சித்ததில்லை. நேரிலோ, கடிதங்களிலோ, தொலைபேசியிலோ. எவரிடமும் எவ்வகையான தொடர்புகளையும் வைத்துக்கொண்டதில்லை. ஏனென்றால் ஒரு சிறு முரண்பட்ட கருத்து முன்வைக்கப்பட்டால் கூட உடனே அதை பாலியல் சீண்டலாக மாற்றிக்காட்டி தாக்குதலில் ஈடுபடும் பல பெண்ணெழுத்தாளர்களை நான் அறிவேன்.
தமிழிலும் இந்திய மொழிகளிலும் எழுதிய முதன்மையான பெண் எழுத்தாளர்களை விரிவாக அறிமுகம் செய்து ஏராளமான கட்டுரைகளை எழுதியவன் நான். அவர்களின் கலைத்திறனைப் புகழ்ந்தும், அவர்களைப் புரிந்துகொள்ளும் வழிகளை விவாதித்தும் நான் எழுதிய கட்டுரைகளே இன்றும் பெண்ணெழுத்தைப் புரிந்துகொள்ள உதவியானவை. அம்பை உட்பட எந்தப்பெண்ணும் இன்னொரு பெண்ணெழுத்தாளரைப் பற்றி அப்படி எந்தக் கட்டுரையையும் எழுதிவிடவில்லை.
கடந்தகாலத்தில் பெண் எழுத்துக்களைப் பற்றி, பொதுவாழ்க்கையில் பெண்களைப்பற்றி சிலர் தரக்குறைவாக விமர்சித்தபோதெல்லாம் மிகக்கடுமையாக அதற்கு எதிராக எதிர்வினையாற்றியவன் நான். அக்கட்டுரைகள் எல்லாமே இன்றும் வாசிக்கக் கிடைக்கின்றன. பொதுவாழ்க்கைக்கு வரும் பெண்களின் ஒழுக்கத்தை விவாதிக்க முற்படும் ஆண்களை கண்டித்து நான் எழுதிய முப்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன.
ஒருதருணத்திலும் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கை, ஆளுமை எதையும் நான் பேசுபொருளாகக் கொள்வதில்லை. அவர்கள் படைப்பில் எதை முன்வைக்கிறார்களோ அதை மட்டுமே பேசுகிறேன். அதற்கப்பால் செல்லக்கூடாதென்ற கொள்கை வைத்திருக்கிறேன்
நான் எழுதிய விமர்சனக் குறிப்பை மிகத்தெளிவாகவே அளித்திருக்கிறேன். தமிழில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலானவர்கள் எதையும் படிப்பதில்லை. பொருட்படுத்தும்படி எதையுமே எழுதியதும் இல்லை. இது வாசிக்கக்கூடிய அனைவருக்குமே தெரியும். அவர்கள் பெண்ணியக் கோஷங்களைப் போடுவது, தடாலடியாக பாலியல் விஷயங்களை எழுதுவது, ஊடகங்களில் முண்டியடித்து இடம்பெறுவது, அரசியல் ஆகியவை மூலம் மட்டுமே எழுத்தாளர்களாக அறியப்படுகிறார்கள். பலர் நாலைந்துவரிகள் கொண்ட சில சில்லறைக் கவிதைகளுக்கு அப்பால் ஏதும் எழுதியதில்லை.
இவர்களை எழுத்தாளர்களாக முன்வைக்கும்போது உண்மையில் எழுதிக் கொண்டிருப்பவர்கள் மறைக்கப்படுகிறார்கள் என்பதே என் கருத்து. அவர்களில் முனைப்புடன் எழுதும் பெண்களும் அடக்கம். தரமான படைப்புகளை அளித்த பெண்கள் அனைவரையும் சென்ற காலங்களில் நான் சுட்டிக்காட்டியிருக்கிறேன். இக்கட்டுரையிலும் அவர்களைச் சுட்டிக்காட்டியே எழுதியிருக்கிறேன். இந்திய மொழிகளில் எழுதும் சாதனையாளர்களைச் சுட்டிக்காட்டி விளக்கி அந்த தரத்தில் எழுதும்படி ஒரு வாசகனாக என் எதிர்பார்ப்பை பதிவு செய்திருந்தேன். அதற்குத்தான் இத்தகைய எதிர்வினைகள்.
இலக்கியம் எழுதுபவர்கள் அனைவருமே விமர்சனத்துக்கும் உரியவர்களே. விமர்சிக்கப்படுபவர்கள் அதற்கு விமர்சனத்தின் மொழியில் பதில் கூறவேண்டும். அந்த விவாதம் வழியாகவே இலக்கியம் செயல்படமுடியும். பாரதி, புதுமைப்பித்தன் முதல் இன்று எழுதுபவர்கள் வரை அனைத்து எழுத்தாளர்களைப் பற்றியும் பல்லாயிரம் பக்கங்களில் விரிவான விமர்சனங்களை எழுதியவன் நான். இலக்கிய விமர்சனம் என்பது உலகெங்கும் உள்ள இலக்கிய நடவடிக்கை.
அதை அறிவுத்தளத்தில் எதிர்கொள்ளாமல் அங்கும் பெண் என்னும் ஆயுதத்தையே இவர்கள் பயன்படுத்துகிறார்கள். நான் சொன்னது இதையேதான். அம்பை உட்பட்டவர்கள் செய்வது ஒரு மிரட்டல். பெண்களை விமர்சித்தால் உன்னை பொதுவெளியில் தாறுமாறாக எழுதி அவமதிப்போம் என்னும் எச்சரிக்கை. இத்தனை விரிவாக எழுதும் என்னைப் போன்ற ஒரு விமர்சகனே இதைத்தான் சந்திக்கவேண்டும் என்றால் மற்றவர்கள் வாயே திறக்கமுடியாது என்பதே இவர்கள் விடுக்கும் செய்தி.
பெண்ணெழுத்து என்னும் பேரில் இவர்கள் எழுதிய இலக்கியம் தரமற்றது என்றும், தரமான பெண்ணெழுத்து உள்ளதே அந்த தரத்தில் ஏன் எழுதக்கூடாது என்றும் எழுதினால் அதை பெண்ணை பாலியல் ரீதியாக அவமதிப்பது, பெண்குலத்தை இழிவுபடுத்துவது என்றெல்லாம் திரித்து எதிர்கொள்ளும்போக்கு அநாகரீகமானது. சிறுமை மிக்கது.
ஜெ [தி ஹிந்து தமிழ் நாளிதழுக்கு எழுதப்பட்ட கடிதம். ]