‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 24

பகுதி ஐந்து : நெற்குவைநகர்

[ 4 ]

இரு மனிதர்கள் பகை கொள்ளும்போது தெய்வங்கள் மகிழ்ச்சி கொள்கின்றன. தமது ஆற்றலின் எல்லைகளை அறிந்துகொள்வதற்காகவே அவை மானுடரை கருவாக்குகின்றன. உள்ளங்களையும் சித்தங்களையும் தோள்களையும் படைக்கலன்களையும் சூழலையும் அவை எடுத்துக்கொள்கின்றன. ஆடி முடித்து குருதியையும் கண்ணீரையும் நினைவுகளையும் விட்டுவிட்டு மறைகின்றன. பகைகொண்ட இருமனிதர் பூசனையிட்டு பலிகுறிக்கப்பட்ட விலங்குகளைப்போல தெய்வங்களுக்கு விருப்பமானவர்கள்.

பகைகொண்ட மானுடரில் ஒன்பது தெய்வங்கள் குடியேறுகின்றன. முதலில் ஐந்து பாதாளநாகங்கள் ஓசையில்லாமல் வழிந்து அவர்களில் சேர்ந்து இருளுக்குள் சுருண்டுகொள்கின்றன. ஒன்றை ஒன்று நோக்கும் இருதலைகள் கொண்ட ஐயத்தின் நாகமான விப்ரமன், மூன்றாகப்பிரிந்த நாக்குள்ள தர்க்கத்தின் நாகமான ஹேதுமான், எப்போதும் நடுங்கிக்கொண்டிருக்கும் அச்சத்தின் நாகமான பரிதப்தன், ஒன்றின் மீது ஒன்றாக மூன்று படங்கள் கொண்ட ஆணவத்தின் நாகமான அஸ்மிதன், வாலும் தலையும் ஒன்றேபோலிருக்கும் தனிமையின் நாகமான ஏகாந்தன்.

அந்நாகங்களின் வாய்க்குள் உறையும் ஒளிமணி வடிவில் நான்கு வானகதெய்வங்கள் வந்தமைகின்றன. வீரத்தின் தெய்வமான சௌர்யன் எட்டுகைகளிலும் படைக்கலங்கள் கொண்டவன், கூர்மதியின் தெய்வமான தீவ்ரன் ஒளிவிடும் வைரவிழிகள் கொண்டவன், நினைவுத்திறனின் தெய்வமான ஸ்மாரன் முடிவிலாது ஓடும் மணிகள் கொண்ட ஜெபமாலையை வலக்கையிலும் இடக்கையில் விளக்குச்சுடரையும் ஏந்தியவன், ஒருமையுள்ள சித்தத்தின் தெய்வமான யோகன் தாமரைபோல் கால்குவித்து தன்னுள் தானாழ்ந்து அமர்ந்தவன்.

பகைகொண்டவர்களை ஒருவருக்கொவர் முற்றிலும் நிகரானவர்களாக ஆக்குகின்றன தெய்வங்கள். ஒருவரை ஒருவர் தவம்செய்கிறார்கள். அந்தத் தவம் மூலம் ஒருவரை ஒருவர் நிரப்பிக்கொள்கிறார்கள். ஒருவர் பிறராக ஆகிறார்கள். அவர்களின் சூழலால் சுற்றத்தால் பிறிதொன்றிலாத ஆன்மாவின் தனித்தன்மையால் ஓர் அணுவிடை அவர்கள் நிகர் இழந்தால்கூட தெய்வங்கள் அதை நிரப்ப முட்டி மோதுகின்றன. அவர்களை நிகராக்கிக்கொண்டே சென்று முற்றிலும் சமன் நிகழ்ந்த கணத்தில் விலகிக்கொண்டு ஆட்டத்தை குனிந்து நோக்குகின்றன. தெய்வங்களுக்காக மனிதர்கள் ஆடும் ஆட்டத்தில் மனிதர்களுக்காக தெய்வங்கள் ஆடத்தொடங்கிவிடுவதைக் கண்டு அவர்கள் இருவரையும் படைத்த பிரம்மன் புன்னகை செய்துகொள்கிறான்.

துரியோதனனின் பேச்சுக்களையும் கையசைவுகளையும் பார்த்த தம்பியர் அவன் பீமனைப்போல ஆகிவிட்டிருப்பதாக உணர்ந்தனர். ஐயத்துடன் துச்சாதனன் துச்சலனிடம் அதைச் சொன்னான். “இளையபாண்டவனுக்கு நாகங்களின் அருளிருக்கிறது. அதனால்தான் அவன் கங்கையின் ஆழத்திலிருந்து மீண்டு வந்தான். அவனுடைய ஏவல் நாகங்கள் ஒவ்வொருநாளும் அவனுடைய உள்ளை அள்ளி வந்து நம் தமையனுக்குள் நுழைத்துக்கொண்டிருக்கின்றன” என்றான். துச்சலன் திகைத்த விழிகளுடன் வெறுமனே நோக்கினான்.

பேசிக்கொண்டிருக்கும் பீமனில் துரியோதனன் வந்து செல்வதைக் கண்டு தருமன் அஞ்சினான். “தம்பி, அவனை ஆட்கொண்டிருக்கும் தெய்வங்களே உன்னிலும் நுழைந்துகொண்டிருக்கின்றன” என்றான். பீமன் நகைத்தபடி “எனக்குள் எதுவும் அன்னமாக மட்டுமே நுழையமுடியும் மூத்தவரே” என்றான். திரும்பி வந்த பீமன் வேறு ஒருவன் என்பதை தருமன் உணர்ந்திருந்தான். என்ன நடந்தது என மீளமீளக்கேட்டும் பீமன் கங்கையில் கால்கள் கொடிகளில் சிக்கி மூழ்கிவிட்டதாகவே சொன்னான். ஆனால் அதில் எப்படியோ கௌரவர்களின் பங்கு ஒன்று உண்டு என தருமன் உய்த்தறிந்திருந்தான்.

தான்யகடகத்திற்கு சென்றுகொண்டிருந்த திமிலில் கீகடரின் நண்பரான விஸ்வகர் அஸ்தினபுரியின் கதையை சொல்லிக்கொண்டிருந்தார். பொதிசுமந்த திமில்கள் ஆற்றின் பெருக்கில் இறங்கிக்கொண்டிருந்தன. பிரம்புகளை அடர்த்தியாகப்பின்னி செய்யப்பட்ட அவற்றின் உடலுக்குள் நீர் நுழையாத கனத்த தோலுறை இருந்தது. விஜயபுரியில் இருந்து வண்டியில் வந்து எத்திபொத்தலாவில் அப்படகுகளில் ஏறிக்கொண்டபோது அவற்றின் வடிவம் இளநாகனை திகைக்கச்செய்தது. பிரம்புச்சுருள்களால் ஆன தீபவடிவத் திமில்கள் நீரில் நிலைகொள்ளாது எழுந்தமைந்துகொண்டிருக்க பெரிய கழிகளை ஊன்றி அவற்றைச் செலுத்தும் திமிலோட்டிகள் அவற்றை நீரில் மிதக்கவிட்டு அமரத்தில் அமர்ந்திருந்தனர். பொதிகள் ஏற்றப்பட்டு அவை கனத்து அமிழ்ந்ததும் அவற்றின் உடல்கள் அமைதிகொண்டன.

கிருஷ்ணையின் விரைந்த நீர் அவற்றை அள்ளி சுழற்றிக்கொண்டுசெல்லும்போதுதான் அந்த வடிவின் நோக்கத்தை இளநாகன் உணர்ந்தான். கரையோரத்தில் எழுந்து நின்ற பாறைவிளிம்புகளிலும் ஆற்றுக்குள் அவ்வப்போது செங்குத்தாக எழுந்த கரிய அடுக்குப்பாறைகளிலும் முட்டிக்கொண்டாலும் திமில்கள் உடையவோ கவிழவோ இல்லை. மோதலின் விசையை அவற்றின் மூங்கில்பின்னல் உடலே எடுத்து பகிர்ந்துகொண்டது. அவற்றின் திசையை திமிலோட்டிகள் கழிகளால் கட்டுப்படுத்தி கொண்டுசென்றார்கள். அவை ஒன்றை ஒன்று முட்டியும் விலகியும் முன்பின்னாகச் சுழன்றும் சென்றன.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

படகில் ஏறிக்கொண்டு காத்திருந்தபோது கீகடர் “தான்யகடகம் நெற்குவை நகரம். ஆந்திரப்பெருநிலத்தில் உள்ள நெல்லெல்லாம் கிருஷ்ணை வழியாக அங்குதான் வந்துசேர்கின்றன. நெல்மூட்டைகள் நகரைவிடப்பெரிய அடுக்குகளாக அமைந்திருக்கும்” என்றார். “பெருநாவாய்கள் கிருஷ்ணை வழியாக தான்யகடகத்தின் பெருந்துறை வரை வரும். பொன்னையும் மணிகளையும் மதுவையும் பட்டுகளையும் கொடுத்து நெல்கொண்டுசெல்வார்கள். யவனர்களும் காப்பிரிகளும் சோனகர்களும் பீதர்களும் அங்கே நகரமெங்கும் நிறைந்து தங்கள் மொழியில் பேசிக்கொண்டிருப்பார்கள்.”

அஸ்வர் “நூறாண்டுகளுக்கு முன்பு என் முதுமூதாதை பஞ்சகர் இங்கே வந்தபோது இது ஒரு சிற்றூர். கிருஷ்ணை நதி வளைந்து விரைவழிந்து செல்வதாலும் பாறைகள் இல்லாமலிருந்ததனாலும் இங்கே திமில்கள் ஒன்றுகூடும் சந்தை ஒன்று உருவாகத் தொடங்கியிருந்தது. கடலுக்குள் இருந்து பெருநாவாய்கள் வரத்தொடங்கவில்லை. முற்காலப்பெயர் சாலவனம். இங்கிருந்த காட்டை ஆண்ட குலத்தலைவன் கிருஷ்ணையின் கரையில் ஒரு அன்னசாலையை அமைத்து வணிகர்களிடம் தீர்வை பெற்றுக்கொண்டிருந்தான்…” என்றார்.

“அவனை அன்னவாகனன் என்றும் சாலவாகனன் என்றும் வணிகர்கள் சொன்னார்கள். பஞ்சகர் அவனுடைய அன்னசாலையில் ஒருநாளில் பத்தாயிரம் இலைகள் விழுந்தன என்று வியந்து எழுதியிருக்கிறார்” என்றார் அஸ்வர். “இன்று சாலவாகனர்கள் அரசர்களாக ஆகிவிட்டனர். கொடியும் குடையும் படையும் கோட்டையும் கொண்டவர்கள். தங்கள் நாணயங்களிலும் முத்திரைகளிலும் தங்களை சாதவாகனர் என்றும் சதகர்ணி என்றும் பொறித்துக்கொள்கிறார்கள். கிழக்கே கலிங்கமும் வடக்கே விதர்பமும் மேற்கே மாளவமும் அவர்களை கட்டுப்படுத்தும் எல்லைகள்.”

படகு கிளம்பி நீரொழுக்கில் சென்றபோது அருகே வந்த படகில் இருந்த ஒரு சூதரைக்கண்டு கீகடர் “விஸ்வகரே நீரா? நீரும் உமது குழுவினரும் கலிங்கத்தில் நோய் கண்டு மாண்டுவிட்டீர்கள் என்றல்லவா அறிந்தேன்?” என்றார். அவர் உரக்கநகைத்து “நீர் திருவிடத்தில் போரில் மாண்டதை கண்ணால் கண்டதாக சரபனும் கிரீஷ்மனும் என்னிடம் பத்துமுறை உறுதி சொன்னார்கள்” என்றார்.

“சூதர்களுக்கு நூறு இறப்பு. நூறு பிறப்பு” என்றார் கீகடர் சிரித்துக்கொண்டு. “அங்கே என்ன செய்கிறீர்? எங்கள் படகில் ஏறிக்கொள்ளும். நாட்பட்ட வியாதிபோல விடாது கூடவரும் முற்றிய பழங்கள் குடம் நிறைய இருக்கிறது.” விஸ்வகர் நகைத்துக்கொண்டு “ஆம், சொல்மகளும் கள்மகளும் ஒருகுலம். மூப்படையும்தோறும் அழகுகொள்பவர்கள்” என்றார். படகுகள் நடுவே போடப்பட்ட பலகை வழியாக இப்பால் வந்து “என் துணைவர்கள் இருவரும் கலிங்கத்தில் வயிற்றுநோயால் இறந்தனர். அது முதல் நானும் என் யாழுமே இருக்கிறோம்” என்றார். “இனிய யாழ். தனிமைக்கு அது சிறந்த துணையே” என்றார் கீகடர்.

அனலில் சுட்டமீனையும் இலையில் பொத்தி ஆவியில் வேகவைத்த அரிசி அப்பத்தையும் தின்று மீசையை நீவிவிட்டபடி விஸ்வகர் மரப்பலகையில் நன்றாகச் சாய்ந்து கிருஷ்ணையை நோக்கினார். “பாரதவர்ஷத்தின் கரிய நீள் குழல் என இந்நதியைச் சொல்கிறார்கள். கிருஷ்ணவேணி என்றுதான் பழைய பாடல்கள் சொல்கின்றன” என்றார். “இந்நீருக்கு சற்று இரும்புச்சுவை உள்ளது. இதன் ஆழ்நீலநிறம் அவ்வாறு வருவதே” என்றார் கீகடர். விஸ்வகர் பெருமூச்சுவிட்டு “நான் தான்யகடகம் சென்று அங்கிருந்து நாவாய் வழியாக தாம்ரலிப்தி செல்கிறேன். கங்கையில் நுழைந்து ஆரியவர்த்தத்தை கோடைகாலத்தில் சென்றடைவேன் என நினைக்கிறேன்” என்றார். தன்னுள் சற்றுநேரம் ஆழ்ந்து அமர்ந்துவிட்டு “அங்கே நான் விட்டுவிட்டு வந்தவை எவையும் இருக்காது. புதிய குழந்தைபோல புது ஒளியில் விழிமலர்ந்து புதிய நிலத்தில் கால்வைத்து மீண்டும் வாழத்தொடங்கவேண்டும்” என்றார்.

கீகடர் “காசிக்கு மீள்கிறீரோ?” என்றார். “இல்லை. நான் அஸ்தினபுரிக்குச் செல்கிறேன்” என்றார் விஸ்வகர். “காந்தமலை போல சூதர்களை எல்லாம் அந்நகர் இழுத்துக்கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் ஒரு முதுசூதரைக் கண்டேன். அஸ்தினபுரியில் என்ன நிகழ்கிறது என்று சொன்னார். காவியமொன்று சிலந்திவலை போல விரிந்துகொண்டிருக்கிறது என்றார். மானுடர் அதில் சிறுபூச்சிகள் போல சிறகு அதிர பறந்து வந்து விழுந்துகொண்டிருக்கிறார்கள். சூதர்கள் அங்கே சென்றுசேர்வதென்பது தேன் குடத்தில் விழுந்து உயிர்துறக்கத்துடிக்கும் ஈயின் இச்சையால்தான்.”

கீகடர் “என்ன நிகழ்கிறது அங்கே?” என்றார். “அஸ்தினபுரியின் இளவரசர்கள் நடுவே மின்னும் கொலைவாள் வைக்கப்பட்டுவிட்டது” என்றார் விஸ்வகர். அந்தச்சொல்லாட்சியால் அகம் நிலைத்து அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தனர். பின்னர் கீகடர் சிரித்தபடி “காட்டில் வேட்டையும் நாட்டில் போரும் நிகழாமல் படைப்புநெறி செயல்படுவதில்லை விஸ்வகரே” என்றார்.

விஸ்வகர் “மதம்பொழியும் யானைமுகத்தில் ஈக்கள்போல சூதர்கள் அவர்களிருவரையும் மொய்த்துக்கொண்டு ரீங்கரிக்கிறார்கள். எங்குசென்றாலும் அஸ்தினபுரியிலிருந்து வருகிறேன் என்று சொல்லி ஒரு சூதன் பாடத்தொடங்கிவிடுகிறான், அனைத்தையும் அருகிருந்து கண்டவன்போல. நடக்கப்போவது அனைத்தையும் முன்னறிந்தவன் போல. அவற்றில் எது மண்ணின் உண்மை எது சூதனின் உண்மை என்று சூதர்களாலேயே இனிமேல் சொல்லமுடியாது” என்றார். “இரு இளவரசர்களும் சந்தித்துக்கொண்டதைப்பற்றி பாகுவிஜயம் என்னும் ஒரு காவியத்தை நேற்று கேட்டேன். இருவரையும் உள்ளங்கையில் வைத்துப் பார்த்தது போல பாடுகிறான் சூதன்.”

அவர்கள் தான்யகடகத்துக்குச் செல்லும் வழியில் விஸ்வகர் அதை யாழிசைத்துப்பாடினார். இருமருங்கும் செங்குத்தாக உயர்ந்து நின்ற அடுக்குப்பாறைகளுக்குமேல் எழுந்து வேர்களால் பாறைகளைக் கவ்வி நின்ற மரங்களை அண்ணாந்து நோக்கியபடி இளநாகன் அதைக் கேட்டுக்கொண்டிருந்தான். வேர்கள் பாறைகளின் இடுக்குகள் வழியாக உறைந்த ஓடை போல வழிந்து கீழே பாறைவிளிம்பை அலைத்து ஓடிய கிருஷ்ணையின் ஆழ்நீல அலைகளில் மிதந்து கொண்டிருந்தன. பெரிய மீன்கள் காலம் நிலைத்த பார்வையுடன் மேலெழுந்து வந்து சிறகுகள் அலைபாய அசையாமல் நின்றன.

கங்கையில் நீராடி மேலாடையைப் பிழிந்துகொண்டு மேலேறிவந்த பீமன் வேர்ப்படிகள் வழியாக இறங்கிவரும் துரியோதனனைக் கண்டு சித்தம் உறைந்து அங்கேயே நின்றுவிட்டான். ஒருகணம் திகைத்தான் என்றாலும் துரியோதனன் தன்னை மறுகணமே நிலைப்படுத்திக்கொண்டான். பார்வையை விலக்கிக்கொண்டு திடமான சீரான காலடிகளுடன் அவன் இறங்கி வந்தான். இருவருமே அடைந்த முதல் எண்ணம் ‘இவன் என்னைப்போலவே இருக்கிறான்’ என்பதுதான். அருகணைந்து ஒருவரை ஒருவர் நோக்கியபோது ஆடிப்பாவையை கண்ணோடு கண்நோக்கும் திகைப்பை அவர்கள் அறிந்தனர். கடந்து செல்லும்போது ஒருவர் இன்னொருவரை முழு உடலாலும் உணர்ந்துகொண்டிருந்தனர்.

பீமன் அசையாமல் நின்றுகொண்டிருந்தான். துரியோதனனின் கால்கள் தயங்கின. பீமனின் உடலில் ஓர் அசைவு நிகழ்ந்ததும் துரியோதனன் நின்றுவிட்டான். இருவரும் மீண்டும் விழிகளால் சந்தித்துக்கொண்டனர். அத்தருணத்தில் சொல்வதற்கு ஒன்றுமே இல்லாமலிருக்கும் என்பதை உணர்ந்து பீமன் திகைப்படைந்தான். பீமனின் விழிகள் அத்தனை ஒழிந்தவையாக இருக்குமென அறிந்து துரியோதனனும் வியந்துகொண்டான். அந்தத் தருணத்தின் எடையாலேயே அதை உடனே தவிர்த்துவிடவேண்டும் என்ற விருப்பமே அவர்கள் இருவரிடமும் இருந்தது.

அவர்களைச் சுற்றி மலர்களில் வண்ணத்துப்பூச்சிகளாகவும் மரக்கிளைகளில் சிட்டுக்குருவிகளாகவும் காலடியில் நகரும் சிற்றுயிர்களாகவும் தெய்வங்கள் சூழ்ந்து அவர்களை பார்த்துக்கொண்டிருந்தனர். பதைப்புடன் அவர்கள் வண்ணச்சிறகுகளை அடித்துக்கொண்டனர். பரபரப்புடன் ஏறி இறங்கி தங்களுக்குள் கூரிய சொற்களால் பேசிக்கொண்டனர், ஒற்றைச்சொல்லை சுமந்தபடி நெளிந்தனர்.

குழந்தைமையின் தெய்வமான சலபை வண்ணத்துப்பூச்சியாக சிறகுகளில் பெரிய நீலவிழிகள் மலர்ந்து அசைய பீமனின் அருகே வந்து காற்றில் எழுந்தமைந்தாள். தாய்மையின் தெய்வமான ஜனன்யை கனத்த இல்லத்தை முதுகில் சுமந்தபடி ஏழுவண்ணத் தடமொன்றை இழுத்தபடி நத்தை வடிவில் துரியோதனின் கால்களை தொடவந்தாள். முதிரா இளமையின் தெய்வமான கிசோரகன் செம்பட்டுச் சிட்டுக்குருவியாக விருட் என சிறகுகளை அடித்தபடி காற்றில் தாவி ஏறிச் சுழன்று வந்து அவர்களை சுற்றிப்பறந்தான். விண்ணவர்களின் வாழ்த்து மெல்லிய குளிர்காற்றாக கங்கையின் அலைகளில் பரவி எழுந்து வந்தது. வானில் அவர்களுக்குமேல் கந்தர்வர்கள் விரித்த வெள்ளிச்சாமரம் ஒளியுடன் விரியத்தொடங்கியது.

அக்கணத்தில் பீமனின் இடத்தோளில் வாழ்ந்த பெருநாகமான மகாஜயன் தன் வன்தசைகள் புடைக்க மெல்ல அசைந்து எழுந்தான். அதைக்கண்டதுமே துரியோதனனின் தோள்களில் ராகு இறுகிப்புடைத்து எழுந்தான். பீமனின் வலத்தோளில் வாழ்ந்த ஜயன் மகாஜயனின் தலையை அழுத்திப்பற்றிக்கொள்ள பீமனின் உடலில் தசைகள் எழுந்தன. துரியோதனனின் வலத்தோளில் வாழ்ந்த கேது எழுந்துநெளிந்து அமைந்தான். நான்கு நாகங்களும் ஒன்றையொன்று பார்த்தபடி இறுகி நெளிந்தபோது விண்ணில் தேவசாமரத்தின் ஒளி இருண்டது. கங்கை தன் இனிய மூச்சை அடக்கிக்கொண்டு நோக்கினாள். ஜனன்யை தன் உடலை கூட்டுக்குள் இழுத்து சுருண்டுகொண்டாள். கிசோரகன் உச்சிமரக்கிளைமேல் சென்று அமர்ந்து விழிகளை விண் நோக்கி திருப்பிகொண்டான். சலபை தன் சிறகுகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்து விழிகளை மூடி ஒரு இலைமேல் அமர்ந்தாள்.

ஒரு சொல்லும் பேசாமல் அவர்கள் விலகிச்சென்றனர். அந்தக்கணத்துக்கு முன்புவரை அவர்கள் மற்றவரைப்பற்றியே எண்ணிக்கொண்டிருந்தனர். அதன்பின் அவர்கள் இருவருமே தங்களைப்பற்றி எண்ணிக்கொண்டு சென்றனர். பீமனின் பெருந்தசைகளில் துரியோதனன் தன் உடலைக் கண்டான். துரியோதனனின் உடலில் பீமன் தன்னைக் கண்டான். ஆடிமுன் நின்று தன் ஒவ்வொரு தசையையும் நோக்கிக்கொண்டிருந்தனர். கனத்த காலடிகளில் ஒன்று இறங்கிச்செல்ல ஒன்று ஏறிச்செல்ல மெல்ல நெடுமூச்செறிந்து மரங்கள் அசைந்தன. கங்கையின் காற்று அங்கே எஞ்சியிருந்த எண்ணங்களை அள்ளி வீசி அவ்வெட்டவெளியை தூய்மையாக்கியது.

மரக்கிளைமேல் இருந்த கிசோரகன் வானில் சுழன்றுகொண்டிருந்த செம்பருந்து ஒன்றின் விழிகளை சந்தித்தான். “அரசே, நான் இக்கணங்களில் துடித்துப்பறப்பவன். நீங்கள் முக்காலங்களிலும் வட்டமிடுபவர்” என்றான். “சொல்லுங்கள் தேவ, இனி எப்போது? அடுத்த தருணம் எது?” மெல்ல காற்றிலிறங்கி அருகே வந்து வளைந்து செம்பருந்து சொல்லிச் சென்றது. “இனி இறுதிப்போர். தெய்வங்கள் ஆடும் களம். காலம் விளைந்து முழுத்த கணம்.”

தன் கூட்டுக்குள் இருந்த ஜனன்யை நடுங்கினாள். அதிர்ந்த விழிகளுடன் எழுந்த சலபை இலைகளின் அதிரும் விளிம்புகளுக்கு வளைந்து வளைந்து காட்டுக்குள் சென்று மறைந்தாள். தேவர்களும் விண்ணவரும் ஒருவர் விழியை ஒருவர் நோக்காது தலைகுனிந்து நடந்து விலகினர். அவர்களுக்கு முடிவின்மை எனும் தீயூழ் விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் காண்பதேதும் புதியவை அல்ல. ஆகவே ஒவ்வொன்றிலும் பொறிக்கப்பட்டுள்ள இனி என்னும் முடிவிலியை அவர்கள் அறிவதில்லை. எனவே அவர்கள் நம்ப ஏதுமில்லை. எதிர்பார்க்கவும் கனவுகாணவும் ஏதுமில்லை. தோழர்களே முள்மீதமர்ந்து சிறகடிக்கும் வண்ணத்துப்பூச்சியின் பேதமைதான் எத்தனை மகத்தானது! எத்தனை வகையான அறியாமைகளால் வாழ்த்தி மண்ணுக்கனுப்பப்பட்டவன் மானுடன்!

திமில் முதலை போல நீரை அமைதியாக கிழித்துச்செல்ல இளநாகன் சொல் விம்மும் நெஞ்சுடன் அமர்ந்திருந்தான். விஸ்வகர் தன் யாழை எடுத்து தோலுறையால் மூடும் ஒலி மட்டும் கேட்டது. அனைத்தும் ஒரு பெருங்காவியம் என்று இளநாகன் நினைத்தான். நிகழ்வனவெல்லாம் காவியமாகிக்கொண்டிருக்கின்றன. காவியம் நிகழ்வுகளின் பின்னால் வந்து நின்று பொறுமையிழந்து தன் மத்தகத்தால் முட்டிக்கொண்டிருக்கிறது. ‘விரைக… இன்னும் விரைக!’

தான்யகடகத்தை அடைந்த திமில்கள் விரைவழிந்து ஒன்றை ஒன்று முட்டி நின்றன. கிருஷ்ணை வழியாக வந்த பெருநாவாய்கள் ஒன்றுடன் ஒன்று தோள்முட்டி அசைந்துகொண்டிருந்த துறைக்குமேல் உருளைப்பாறைகளை அள்ளிவைத்து கட்டியதுபோன்ற கோட்டைச்சுவர் நெல்மூட்டைகளால் ஆனதுபோலத் தோன்றியது. அதன் உச்சியில் சதகர்ணிகளின் அமர்ந்த மாகாளைச் சிலை செருக்குடன் தலைசரித்து அமர்ந்திருந்தது.

கரையில் இருந்து யானைகள் வடங்களால் இயக்கிய கனத்த மரத்தடிகளால் ஆன நெம்புகோல் விற்கள் அரக்கர்களின் கைகள் போல இறங்கி நதிக்குள் நின்ற திமில்களை நோக்கி வந்தன. கயிற்றுவலைகளில் நெல்மூட்டைகளைப் போட்டு அவ்விற்களின் இரும்புக்கொக்கிகளில் வினைவலர் மாட்டினர். விற்கள் அவற்றைத் தூக்கி வானில் சுழற்றி கரையில் கொண்டுசென்று அங்கே இருந்த அடுக்குகள் மேல் வைத்துக்கொண்டிருந்தன. துறைமுகம் நூற்றுக்கணக்கான கைகள் கொண்ட சிலந்தி போலிருப்பதாக இளநாகன் எண்ணிக்கொண்டான்.

அவர்கள் கரையிறங்கி சுமைதூக்கிகளும் யானைப்பாகர்களும் வண்டியோட்டிகளும் வேலேந்திய காவல்வீரர்களும் வெயிலில் வியர்வை வழிய கூச்சலிட்டுக்கொண்டிருந்த தான்யகடகத்தின் துறைப்பரப்பில் இறங்கி நடந்தனர். நெல்மூட்டைகளால் ஆன கோட்டைகள் என வளைந்து வளைந்து சென்றன கிட்டங்கிகள். உயரமற்ற கோட்டைவாயிலுக்கு காவலாக நின்றிருந்த வீரர்கள் நடந்துசெல்பவர்களை எவ்வகையிலும் கருத்தில்கொள்ளவில்லை.

தான்யகடகத்தின் நகர்மையம் நோக்கிச்செல்லும் பாதையின் இருபக்கமும் நூற்றுக்கணக்கான வணிகர்கள் மரத்தட்டிமேல் வைக்கோல்அடுக்கிக் கூரையிடப்பட்ட கடைகளில் அமர்ந்திருந்தனர். அக்கடைகளில் பலவண்ணத்தலைப்பாகைகளுடன் வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த வணிகர்கள் கூச்சலிட்டபடி கூடியிருந்தனர். அவர்கள் உண்ணுவதற்காக இஞ்சியுடன் வெல்லமும் புளிக்காயும் போட்டு காய்ச்சி குளிர்வித்தவையும் தேனில் மிளகிட்டு நீரூற்றிச்செய்யப்பட்டவையுமான பானகங்கள் மண்குடுவைகளில் சென்றுகொண்டிருந்தன. அந்த அங்காடியெங்கும் பலநூறுகடைகள் இருந்தாலும் ஒரு கடையிலும் விற்பனைச்சரக்கு என ஏதுமிருக்கவில்லை.

“இவர்கள் விற்பது எதை? அல்லது எதை வாங்குகிறார்கள்?” என்றான் இளநாகன். அப்போதுதான் அதைக் கண்டவராக கீகடர் “ஆம், இங்கே பொருட்களென ஏதுமில்லையே?” என்றார். விஸ்வகரும் சற்று வியப்புடன் “ஆம், அவர்கள் பேசுவதைக் கண்டால் தங்கள் கைகால்களைத்தான் விற்கிறார்கள் என்று தோன்றுகிறது” என்றார். “பார்ப்போமே” என கீகடர் ஒரு கடைநோக்கிச் சென்றார். தயங்கியபின் இளநாகனும் தொடர்ந்துசென்றான்.

வணிகர்கள் தனித்த சொற்களால் பேசிக்கொண்டார்கள். ஏடம், பிடகம், தலம், கடம், அக்கடம், இக்கடம், சிலகம், பலம், பனகம் என்னும் சொற்களை இணைத்து அவர்கள் சொல்வது எண்களை என இளநாகன் உணர்ந்ததும் அவன் அகமே கிளர்ச்சியுற்றது. “இது என்ன மொழி?” என்றார் கீகடர். பெருவணிகரான எல்லர் “பாணரே, இது இங்கு வணிகத்துக்குரிய குறிமொழி. ஒவ்வொரு எண்ணுக்கும் ஊருக்கும் பொருளுக்கும் வேறுசொற்கள் உள்ளன” என்றார். கீகடர் “கலைமகள் வற்றாத முலைச்சுரப்புடையவள்” என்றபின் “ஏடம் என்றால் என்ன?” என்றார். “ஒன்று” என்ற வணிகர் நகைத்தபடி “அதற்குமேல் சொல்பயிலவேண்டுமென்றால் நீங்கள் எங்களுடன் வணிகம்செய்யவேண்டும்” என்றார்.

விஸ்வகர் “இங்கே நீங்கள் செய்யும் வணிகம் என்ன?” என்றார். “நெல்மூட்டைகள்தான்” என்றார் எல்லர். “ஆனால் நாங்கள் இங்கே எதையும் காணவில்லையே?” “நெல்மூட்டைகள் நகருக்கு வெளியே கிருஷ்ணையைச் சுற்றி அடுக்கப்பட்டுள்ளன. எப்போதும் இந்நகரில் பலலட்சம் நெல்மூட்டைகள் இருக்கும்” என்றார் எல்லர். “ஆந்திரத்தின் விரிநிலம் முழுக்கச் சென்று வாங்கிக்கொண்ட நெல்லை வணிகர்கள் இங்கே கொண்டுவருவார்கள். பெருந்திமில்களிலும் மஞ்சல்களிலும் தோணிகளிலும் நெல்வந்துசேரச்சேர நாங்கள் அவற்றை வாங்கிக்கொள்வோம். அவற்றை நதிக்கரையில் அடுக்கி காவலிட்டுக்கொள்வோம்” என்றார் எல்லர்.

“நெல் கொண்டுவரும் உள்நாட்டு வணிகர்களால் பீதர்களிடமோ யவனர்களிடமோ நேரிடையாக வணிகம் செய்ய முடியாது. மொழியும் வணிகமுறைமையும் அவர்களுக்குத்தெரியாது. மேலும் பீதர்களின் நாவாய்களோ யவனக்கலங்களோ வருவது வரை இங்கேயே தங்கள் நெல்மூட்டைகளுடனும் கலன்களுடனும் காத்திருப்பதும் அவர்களுக்காகாது. நாங்கள் வாங்கி சேர்த்துவைத்து நல்லவிலை கிடைத்ததும் விற்றுவிடுவோம்” என்று சொன்னார் எல்லர். “எங்களுக்குள்ளேயே நெல்லை விற்போம். அடகு வைப்போம். புதியதிமில்கள் வரும்போது கையிருப்பை விற்றுவிட்டு குறைந்த விலைக்கு வாங்குவது மேலும் பொருளீட்ட உதவுவது…”

“ஆகவே இங்கே வந்து கிருஷ்ணைக்கரையில் அடுக்கப்படும் நெல்மூட்டைகள் இருந்த இடத்திலிருந்து அசையாமலேயே பலமுறை விற்கப்பட்டு பலர் கைகளுக்கு மாறிச்சென்றுகொண்டிருக்கும். அவற்றின்மேல் பல்லாயிரம் பணம் ஓடிக்கொண்டிருக்கும். சாலிவாகன நாணயங்கள் கலிங்க நாணயங்களாகும். அவை பீதர்மணிகளாகவும் யவனப்பொன்னாகவும் ஆகி மீண்டும் சுழன்றுவரும்… வந்திறங்கியபின் ஒரே முறைதான் அவை அடுக்கிலிருந்து எடுக்கப்படும். பெருநாவாய்களுக்குச் செல்லும்போது.”

“நெல்லை விற்பவர் இங்கே எதைக் கொண்டுவருவார்?” என்று இளநாகன் கேட்டான். “தன்னிடம் இருக்கும் நெல்லின் அளவைப்பற்றிய சொல்லை மட்டும்தான். பெருவணிகனின் சொல்லையே பொருளாகக் கொண்டு பொன்கொண்டு வாங்கிக்கொள்வோம். வணிகர் சொல்பிழைத்ததென்பது தான்யகடகம் இதுவரை அறியாதது” என்றார் எல்லர். “நான் வாங்கிய சொல்லை பிறிதொருவருக்கு விற்பேன். அவர் மீண்டும் விற்பார்…”

இளநாகன் வியந்து நோக்கினான். பெரிய செந்நிறத்தலைப்பாகையுடன் வந்த வணிகர் ஒருவர் “எல்லரே, வணங்குகிறேன்” என்றார். எல்லர் அவரை வரவேற்று அமரச்செய்வதை அவர்கள் நோக்கினர். முற்றிலுமாகவே மந்தணச்சொற்களில் நிகழ்ந்த விலைபேசலுக்குப்பின் இருவரும் விரல்களை மாறிமாறித்தொட்டுக்கொண்டு விலையை உறுதிசெய்தனர். வணிகர் சென்றதும் “நான் இப்போது இவரிடம் நாலாயிரம் மூட்டை நெல்லை வாங்கிக்கொண்டேன்” என்றார்.

“பணம் கொடுத்தீர்களா?” என்றார் கீகடர். “இல்லை பணம் அளிப்பதாக வாக்களித்தேன். இதை நாங்கள் சொல்பணம் என்கிறோம். வாங்கிய நெல்லை நான் இதேபோன்றே விற்பேன். நெல்மூட்டைகள் இறுதியாக பெருங்கலத்தில் ஏறும்போது பொருட்பணம் கொடுத்தால் போதும். அதைக்கூட சொல்லாகவே பெற்றுக்கொள்ளும் வணிகர்கள் உண்டு. சொல்லும்பொருளுமாக இருவகை பணம் இங்கே புழங்குகிறது. சொல்லை பொருள் பீடமாக அடியில் தாங்கி நிற்கிறது, பொருளின் நூறு படிமங்களாக சொல் பின்னிப்பின்னி வளர்ந்துகொண்டே செல்கிறது.”

“எங்கும் மானுட சிந்தனை ஒரே ஆட்டத்தையே சலிப்பின்றி ஆடுகிறது” என்றார் கீகடர் அவரிடம் பரிசில்பெற்றுத் திரும்பும்போது. “சாரமென ஒன்றை எங்கோ ஆழத்தில் நிறுத்திக்கொள்கிறது. அதன் மாயையைக்கொண்டு உலகு சமைக்கிறது.” விஸ்வகர் உரக்கநகைத்தபடி “சொல்லும்பொருளுமாக அமர்ந்தவர்கள் சிவனும்உமையும் என்கின்றனர் மெய்ஞானிகள். வணிகர்களும் அதையே சொல்வதனால் அது உண்மையென்றாகிறது” என்றார்.

முந்தைய கட்டுரைஅசைவம் – இரு கடிதங்கள்
அடுத்த கட்டுரைதமிழகக் கிராமங்கள்