இருபது வருடக்காலம் பல்வேறு குருகுல அமைப்புகளின் வழியாகவும் அறிஞர்கள் வழியாகவும் நூல்கள் வழியாகவும் அலைந்த நாட்களில் எழுதிய நாட்குறிப்புகளின் தொகுப்பு ஒன்று என்னிடம் உள்ளது. அதை சமீபத்தில் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தேன். கீதை வரிகள், பைபிள் வரிகள், குறள், நித்ய சைதன்ய யதி கூறிய வரிகள், நாராயண குருவின் வரிகள், என் அலுவலக முகப்பில் உள்ள டீக்கடைக்கு வரும் அய்யப்பன் ஆசான் என்ற முதிய விவசாயி கூறிய வரிகள் என விதவிதமாக குவிந்திருந்த பக்கங்கள் வழியாகச் சென்றபோது சட்டென்று தோன்றியது ‘இது ஒரு அந்தரங்கமான கீதை’ என்று. வேடிக்கையாக ”ஜெயமோககீதை” என்று கூறிக்கொண்டேன்.
ஆனால் அது ஒரு அடிப்படையான கருத்துதான். ஒவ்வொருவருக்கும் அப்படி அவர்களைப் பாதித்த வரிகள் இருக்கும். அவ்வரிகளில் சாரமானவற்றை மட்டும் சேர்த்தால் ஒரு கீதை வருகிறது. பள்ளிக்கூட காதலி போட்டுக் கொடுத்த ‘ஆட்டோ கிரா·பின்’ கீழ் எழுதிய வரி முதல் நாமே எழுதிய புதுக்கவிதை வரை அதில் இருக்கலாம். இந்த அந்தரங்க கீதையே நமக்குரியது. கிருஷ்ணரின் கீதையல்ல நம்முடைய ‘மதநூல்.’ நாமே அடைந்த இந்த சொந்த கீதையே நமது மதநூல். நம்மை ஆக்குவதும் வழி நடத்துவதும் இதுவே.
நாம் வாசிக்கும் எதையும் நமது மனம் இந்த சொந்த கீதையின் வரியாக மொழியாக்கம் செய்தபடியே உள்ளது. பெரும்பாலானவர்கள் முக்கியமான வரிகளை நினைவுகூரும்போது வார்த்தைகள் மாறிப்போய் வரியின் பொருள் சிறிது திரிந்திருப்பதைக் காணலாம். இது அந்த நபர் அவ்வரியை உள்வாங்கிக் கொண்ட முறையைச் சார்ந்ததாகும். உதாரணமாக என் நண்பர் ‘மனிதர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் ஆகும்போது யுகம் தோறும் நான் அவதரிப்பேன்’ என்று கீதையில் கிருஷ்ணர் கூறியிருப்பதாகக் கூறினார். உண்மையில் ‘தர்மம் அழிந்து அதர்மம் மேலோங்கும்போது நல்லவர்களைக் காத்து அல்லோர்களை அழிக்க யுகம் தோறும் நான் அவதரிக்கிறேன்’ என்பதுதான் கீதையின் வரி. நண்பர் மனதில் அவ்வரி ஏன் அபப்டி மாற்றம் அடைந்தது? தர்மம் அழிந்து அதர்மம் மேலோங்கும்போது நல்லவர்கள் முயற்சி செய்து முடியாமல் ஆகும் என்றால் அதன் ஆண்டவன்வந்தால் போதும் என்று நினைக்கிறார் அவர். அந்நண்பரின் அக இயல்பு இதில் உள்ளது.
இருவகை அணுகுமுறைகள்
கீதையையோ, பைபிளையோ, குறளையோ மட்டுமல்ல எல்லா நூல்களையும் வாசிப்பதற்கும் உள்வாங்கிக் கொள்வதற்கும் தர்க்க பூர்வமாகவும் பயன்பாட்டு ரீதியாகவும் உதவியான வழிமுறை அதை நம்முடைய அக வாழ்க்கை, நமது அனுபவதளம் சார்ந்து பொருள் கொள்ள முயல்வதுதான். நம்மில் இருந்து வெளியேறி நாம் அறியாத ஒன்றை நாம் நம்ப வேண்டுமென்ற கட்டாயமே அறிவுக்கு எதிரானது. நம்மைப் பொருத்தவரை திட்டவட்டமானதாக நம்மிடம் இருப்பது நமது அனுபவங்களும் அவற்றின் மேலான நமது மனத்திறப்புகளும்தான். அவற்றை ஆதாரமாகக் கொண்டு நாம் எதையும் பரிசீலிப்பதே இயல்பானதாகும். உண்மையில் இதுவே மானுட சிந்தனையின் அடிபப்டை இயங்குமுறையும்கூட .சாதாரணமாக நாம் செய்து கொண்டிருப்பதை மேலும் சுய பிரக்ஞையுடன் செய்வதையே இங்கு குறிப்பிடுகிறேன்.
உதாரணமாக ‘காகம் மல்லாந்து பறந்தது’ என்று ஒருவன் கூறினால் நாம் நம்ப மாட்டோம். நமது புலன் அனுபவ மண்டலத்தில் அது நிகழ்வதைக் காண வேண்டுமென எண்ணுவோம். அதேபோல ‘உண்மையான அன்பு மிகப் பெரிய ஒருங்கிணைக்கும் சக்தி’ என்று ஒருவன் எழுதினால் அதை நமது அனுபவத்தர்க்கம் மூலம் பரிசோதனை செய்கிறோம். இதையே நான் தர்க்கபூர்வ அணுகுமுறை என்கிறேன். ஆங்கிலத்தில் Approach of reason என்பார்கள். தமிழாக்கமாக கரணிய அணுகுமுறை என்ற சொல்லை பயன்படுத்துகிறார்கள்.
கரணிய அணுகுமுறைக்கும் சாதாரணமாக நாம் இங்கு பகுத்தறிவு நோக்கு என்று கூறுவதற்கும் (Rational approach) பெரும் வேறுபாடு உள்ளது. பகுத்தறிவு நோக்கு என்பது பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஓங்கி ஒலித்த புலனறிவு வாதத்தின் அணுகுமுறையாகும். புலன் சார்ந்ததும் மிகமிகப் பொதுப்படையானதுமான ஒரு பார்வையை அனைத்திலும் போட்டுப் பார்ப்பது இது. அன்றாட நடைமுறை வாழ்வின் தளங்களுக்கு இது உதவுமேயொழிய தத்துவ ஆய்வுக்கோ, இலக்கிய ரசனைக்கோ, ஏன் உயர்அறிவியல் சிந்தனைக்கோ முற்றிலும் உதவாது. கரணிய அறிதல் முறையில் இரு அடிப்படைகள் உள்ளன. முன்பே கூறிய புலனறிவு, ஊக அறிவு ஆகியவை. அவற்றில் புலனறிவை மட்டுமே முன் வைப்பதுதான் பகுத்தறிவு. காகம் மலலந்து பறந்ததா என்று பார்க்க அது உதவும். அன்பை அறிய அது உதவாது
உதாரணமாக தமிழ்நாட்டில் பகுத்தறிவு நோக்கின் முதல் அரசியல்பிரச்சாரகராக விளங்கிய மறைந்த ஈ.வெ.ராமசாமி அவர்கள் கீழ்க்கண்ட குறளை பொதுமேடையில் சொல்லி கடுமையாகச் சாடுவார் என்கிறார்கள்.
”தெய்வம் தொழாஅன் கொழுநன் தொழுதெழவாள்
பெய்யெனப் பெய்யும் மழை”
என்று குறளை விரித்து அவர் படிபபராம். அதன்பின் ”’இங்கே கணவனைக் கும்பிடும் பெண்கள் யாராவது இருந்தால் எழுந்து சொல்லுங்கள், மழை பெய்கிறதா என்று பார்ப்போம்” என்று அறைகூவுவாராம். இதுவே பகுத்தறிவு நோக்கு. மேலோட்டமான அன்றாடத் தர்க்கம் மட்டுமே இதில் உள்ளது.
கரணிய நோக்கு வரலாற்றுப் பின்னணியை, இலக்கிய அணியின் அழகியல் தன்மைகளை, சமூகவியல் விதிகளை எல்லாம் கணக்கில் கொண்டு அக்குறளை நோக்கும். அப்போது குறளாசிரியர் கற்பு என்ற விழுமியத்தை இயற்கை விதிகளைப் போல நிரந்தரமானதும் மனிதனுக்கு அப்பாற்பட்டதுமாகக் காட்ட விரும்புகிறார் என்று புரிந்து கொள்வோம். களவும் கற்பும் இணையான இருவகை ஒழுக்கங்களாகக் கருதப்பட்ட ஒரு பண்பாடு தமிழ்நாட்டில் சங்க காலத்தில் இருந்தது. சிலப்பதிகாரத்தில் கற்பு மட்டுமே உயரிய ஒழுக்கமாக முன்வைக்கப்பட்டு அது தெய்வநிலைக்கு உயர்த்தப்பட்டது. அக்காலகட்டத்தைச் சேர்ந்த குறள், அந்த மாறிய விழுமியத்தை நீதியாக மாற்ற முயல்கிறது. ‘காதல் இருவர் கருத்தொருமித்தல்’ ஆக இருந்த கற்பு ‘ஒருவனைப் பற்றி ஒர் அகத்து இருத்தல்’ என்று மாறுவதன் சித்திரம் இக்குறளில் உள்ளது. கற்புக்கு அளவீடாக கணவன் மாறுகிறான். காதலன் இல்லாமலாகிறான்.
இந்த சமூக மாறுதல்களைக் காட்டும் இக்குறள் தமிழ்ச் சமூகம் பழங்குடிப் பண்புகளை விட்டு விலகி, பேரரசுகள் மற்றும் பெரும்தொகைப் பண்பாடு என்று இன்னொரு காலகட்டத்திற்கு செல்வதைக் காட்டுகிறது. இவ்வாறு ஆராயவும் அறியவும் இக்குறளில் முடிவில்லாத வாய்ப்புகள் உள்ளன. இங்கு மழை பெய்யுமா பெய்யாதா என்பது அல்ல இங்குள்ள கேள்வி. கற்பு என்ற விழுமியம் தெய்விகமானதா அல்லவா என்பதே. இதுவே கரணிய நோக்கு ஆகும்.
கரணிய நோக்கும் பண்டை ஞானமும்
கீதை உள்ளிட்ட பண்டைய நூல்களை கரணிய நோக்கில் அணுகும் போது ஒவ்வொரு தருணத்திலும் நான் இதுநாள்வரை கற்ற அனைத்துமே எனக்குத் தேவையாகின்றன. மேலும் மேலும் கற்கவும் வேண்டியுள்ளது. பகுத்தறிவு நோக்கு ஒவ்வொரு புது அறிவையும் எளிமைப்படுத்தி நம்மை நோக்கி இழுக்க முயலுகிறது. ஏற்கனவே நாம் அறிந்து உறுதியாக நம்பும் விஷயங்களைக் கொன்டே அனைத்தையும் ஆராய வைக்கிறது பகுத்தறிவு நோக்கு. நாம் அறிந்தவற்றின் எல்லையை அறிபவற்றால் விரித்துக்கொள்வ்தே கரணிய நோக்கு.கரணிய நோக்கு நம்மை நகர்த்தி ஒவ்வொரு நூலையும் நோக்கி இட்டுச் செல்கிறது. அதுவே சிந்தனைத் துறையில் வளர்ச்சி என்பது. பகுத்தறிவாளன் கையில் துணிக்கடைகாரனின் முழக்கோல் போல ஒரு மாறாத அளவுகோல் மட்டுமே இருக்கும். எதுவுமே அவருள் புகுவதில்லை. ஆகவே அவர் வளர்வதேயில்லை.
கீதை உள்ளிட்ட பண்டைய நூல்களை ஆராயும்போது நம்முடைய கரணிய நோக்கு மிக விழிப்புடன் இருக்க வேண்டியுள்ளது. ஏனெனில் இன்றைய நூல்கள் நம் இருபத்தொன்றாம் நூற்றாண்டு கரணிய அறிவுடன் உரையாடும் பொருட்டு எழுதப்படுபவை. ஆகவே அவை நமக்கு இயல்பாகவே பொருந்தி வருகின்றன. கீதை நாம் சற்றுமறியாத வேறு ஏதோ ஒரு காலகட்டத்தில் வேறு ஒருவகை மக்கள் திரளால் உருவாக்கப்பட்ட ஒரு நூல். அது நம்முடன் பேசுவதில்லை, நாம்தான் அதனுடன் உரையாட வேண்டும். அதன் தர்க்க முறை, அதன் உருவக முறை, அதன் சொல்லாட்சி ஆகியவற்றைப் பயின்று அதனுள் செல்ல வேண்டும். ஏனெனில் அது அறிந்து கூறும் உண்மை நமக்குத்தேவை.
பகுத்தறிவு நோக்கு ஓங்கி நின்ற பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர் தங்களுக்காக உருவாக்கப்படாத, தங்களுடன் உரையாடாத அனைத்தையுமே அறிவுக்குப் பொருந்தாதது, மூடத்தனமானது என்று நம்பினர். பல்வேறு அன்னிய மக்களின் கதைகளும் சடங்களும் நம்பிக்கைகளும் ஏன் அறிவியல் முறைகளும்கூட அவர்களால் இகழப்பட்டன. நமது பகுத்தறிவாளர்களின் முன்னோடிகள் அந்த ஐரோப்பியப் பகுத்தறிவாளர்களே. யோசித்துப் பார்ப்போம், நம் ‘இந்நாட்டு இங்கர்சால்’கள் இங்குள்ள ஒரு பழங்குடி சமூகத்தின் கதைகளையும் சடங்குகளையும் எப்படி மதிப்பிட்டார்கள்? அந்த மக்களின் விவசாய அறிவையும் வன அறிவையும் மருத்துவ அறிவையும் எப்படி மதிப்பிட்டார்கள்? அவையனைத்துமெ அவர்களின் நோக்கில் மூடநம்பிக்கைகள்தான். இதைப் போன்றே ஐரோப்பியப் பகுத்தறிவுவாதிகள் தங்களுக்கு அன்னியமானவற்றைப் புறக்கணித்தனர், எள்ளி நகையாடினர். ஐரோப்பா அல்லாத மொத்த உலகையும் பிற்பட்டதாக எண்ணினர்.
உண்மையில் இருபதாம் நூற்றாண்டு ஐரோப்பாதான் கரணிய நோக்கையும் உலகுக்கு அளித்தது. மாகவிஞர் கதே அதன் முதல்புள்ளி என்பதுண்டு. பகுத்தறிவு நோக்குக்குப் பதிலாக கரணிய நோக்கு மேலோங்கியபோது உலகின் அனைத்துப் பண்பாடுகளையும் பண்டைய ஞானங்களையும் நுண்மாண் நுழைபுலம் தேர்ந்து அணுகும் இன்றைய நோக்கு உருவானது. இன்று நமது பழங்குடிகளின் மருத்துவ ஞானம் பற்றி நம்மைவிட அறிந்தவர் ஐரோப்பியரே. ஆஸ்திரேலியப் பழங்குடிக் கதைகளில் உள்ள முற்றிலும் வேறுபட்ட பிரபஞ்ச உருவகம் குறித்த விரிவான அறிவியலாய்வுகளைச் செய்ய அவர்களால் முடிகிறது. இந்திய மெய்ஞானத்தைக் கற்க நாம் அவர்களையே நாடவேண்டியுள்ளது. கரணிய அறிவு ஞானத்தையே தேடுகிறது. அதன் வெளிப்பாட்டு முறைகள் எதுவாக இருப்பினும் அவற்றை வரலாற்று, சமூகப், பண்பாட்டுச் சூழலில் நிறுத்திப் புரிந்து கொள்ள முயல்கிறது. கால-இட-பண்பாட்டு எல்லைகளை இதன் மூலம் அது தாண்டிச் செல்கிறது. அதன் விளைவாக உலகு தழுவிய மானுட ஞானம் என்ற ஒன்றை அது உருவாக்குகிறது. இன்று அனைத்து நூல்களின்மேலும் நமக்குத் தேவையானது அத்தகைய நோக்கே.
இது சிக்கலானதோ கற்றுத் தேர வேண்டிய சிறப்பு அணுகுமுறையோ அல்ல. நாம் இயல்பாகவே செய்வது இதைத்தான். முன்முடிவுகள் இல்லாமல், நாம் கற்ற அனைத்து ஞானத்தையும் பயன்படுத்தி, நம் மனம் முற்றிலும் தெளிவடையும் வரை ஆராய்வதே கரணிய நோக்கு. நாம் கற்கும்தோறும் அது விரிவடைகிறது. தெளிவு கொள்கிறது. இங்கு நாம் நம்மை திருப்திப்படுத்த வேண்டியுள்ளது. பிறருடைய தர்க்க புத்தியை திருப்திப்படுத்துவதைவிட இது கஷ்டமானதாகும்.
கரணிய நோக்கு என்பது அறிபடுபொருள் ஒவ்வொன்றிலும் அதுவரை மானுட ஞானம் அடைந்த அனைத்து வழிமுறைகளையும் போட்டுப் பார்க்கும் முயற்சியாகும். ஆகவே அது தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கிறது. இப்போது நான் ஐம்பது வருடம் முந்தைய கீதை உரைகளை வாசிக்கும்போது அவை பல வகையிலும் பின் தங்கியிருப்பதை உணர்கிறேன். அனுபவ ஞானத்தின் ஒளியும், உள்ளுணர்வின் மின்னல்வீச்சும் அவற்றை முக்கியமானவையாக ஆக்குகின்ற அதேசமயத்தில் ஆய்வின் தீவிரத்தில் அவை பின் தங்கியிருப்பதையும் காண்கிறேன். சிறந்த உதாரணம் காந்தியின் கீதை உரைகள்தான். காரணம் அவர் தன் காலத்தைய கீதை ஆய்வுகளின் ஒளியில் கீதையை ஆராய்ந்தார். அதற்குப் பிறகுதான் ஐரோப்பிய கீதை ஆய்வாளர்களின் ஆழமான விரிவான ஆய்வுகள் மொழிபெயர்ப்பில் வெளிவந்தன. நான் அவற்றை கற்றுத் தெளிந்த நடராஜகுருவின் ஆய்வின் மேல் ஏறிநின்று கீதையைப் பார்க்கிறேன்.
ஆம், கரணிய ஞானம் தொடர்ந்து வளர்ந்துகொண்டிருப்பதாகும். என்றென்றும் மாறாத விவேகத்தையும் உள்ளுணர்வையும் அது ஆராயும்போது புதிய புதிய தளங்கள் திறந்தபடியேதான் உள்ளன. என்னுடைய இந்த ஆய்வில் ராகுல் சாங்கிருத்யாயன், டி.டி.கோசாம்பி, கெ.தாமோதரன், ஈ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடு, தேவிபிரசாத் சட்டோபாத்யாய போன்ற மார்க்ஸிய அறிஞர்களின் ஆய்வுகளைப் பரிசீலிக்கிறேன். இந்த அம்சத்தை சித்பவானந்தரின் கீதை ஆய்வுகளில் காணமுடியாது. இவ்வாறு வளரும் கரணிய அறிவே எந்த நூலையும் பயில்வதற்குரிய மிகச்சிறந்த ஆயுதமாகும்.
இங்கே ஒன்று குறிப்பிட விரும்புகிறேன். கரணிய வாசிப்பு என்னும்போது நான் முந்தைய அத்தியாயங்களில் கூறிய உள்ளுணர்வு சார்ந்த வாசிப்பை நிராகரிக்கவில்லை. அதுவும் கரணிய நோக்கில் உட்பட்டதேயாகும். தர்க்க மனம் சார்ந்த வாசிப்பும் சரி ஆழ்மனம் சார்ந்த தியானபூர்வ அறிதலும் சரி கரணிய முறைமைக்குள் கொண்டுவரப்பட வேண்டும். இது இயல்பே. உதாரணமாக நான் கீதையை வாசிக்கும்போது என்னுடைய உளப் பலவீனத்தால் விசித்திரமான கெட்ட கனவுகளுக்கு ஆளாகிறேன் என்று கொள்வோம். அதை என் ஆழ்மன வாசிப்பாகவா கொள்வேன்? இல்லை. அதை தர்க்கப்பூர்வமாகப் பகுத்துப் பார்த்து அதன் உளவியல் வேர்களை கெல்லி எறியவே முயல்வேன்.
நாம் பைபிளைப் படிக்கும்போது எடுத்த எடுப்பிலேயே அதில் வரும் பிரபஞ்ச உருவாக்கம் பற்றிய எளிய கதை நம்மைத் தாக்குகிறது. பக்தர்கள் அக்கதையை அப்படியே ஏற்று மேலே நம்பிச் செல்லத் தலைப்படுகிறார்கள். கரணிய வாசிப்பு இல்லாத பகுத்தறிவினர் ‘மொத்தப் பிரபஞ்சமும் ஏழுநாளில் படைக்கப்பட்டதா, என்னடா கதை இது?’ என்று நிராகரித்துவிடுவார்கள். கரணிய வாசிப்பு உடையவனுக்கு அது ஒரு புராதனமான மானுட தரிசனம் ஒரு குறிப்பிட்ட முறையில் வெளிப்படுத்தப்பட்டிருப்பது என்றே தெரியும். அதில் பிரபஞ்ச உருவாக்கம் உருவகம் செய்யப்பட்டுள்ள முறையை அவன் ஆராய்வான். அதற்கு யூத மதத்தின் பிற தொன்மங்களையும், யூதச் சடங்குகளையும், யூதச் சமூகவியலையும் அவர்களின் வரலாற்றையும் துணை கொள்வான்.
கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு பிரார்த்தனைக் கூடங்களின்போதும் இயேசுவின் உடலைத்தின்று ரத்ததைக் குடிக்கும் சடங்கு ஒன்றைச் செய்கிறார்கள். பகுத்தறிவு நோக்கில் குரூரமான காட்டு மிராண்டித்தனமான ஒரு சடங்கு என அதை நிராகரிப்பது மேலோட்டமானது. ஆனால் இன்றும் ஆப்ரிக்காவில் பல பழங்குடியினர் இறந்து போனவர்கள் மீது கொண்ட பேரன்பினால் அவர்கள் என்றும் தங்களுடன் அழியாது இருக்க வேண்டுமென்பதனால் இறந்த உடலின் சிறு பகுதியை மரணச்சடங்கின் ஒரு பகுதியாகப் புசிக்கிறார்கள் எனும்போது அதை புதிய முறையில் புரிந்து கொள்ள முடியும். அபிசீனியாவின் வழியாக யூதர்களிடம் சென்றடைந்த இச்சடங்கு இயேசுவை தன் மூதாதையாக, தன் உடலும் ரத்தமுமாக மாற்றிக் கொள்வதைக் குறிக்கிறது.
இயேசு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பதை கரணிய வாசிப்பு அத்தகைய உயிர்த்தெழுதல், மறுபிறப்பு பெரும்பாலான மதங்களில் பல்வேறு வடிவங்களில் இருப்பதை வைத்தே புரிந்து கொள்ளும். பிராமணர்கள் காயத்ரி உபதேசிக்கப் பெற்று பூணுநூல் அணிகையில் மறுபிறப்பு கொள்கிறார்கள். அதனால் அவர்கள் திவிஜன் (இருபிறப்பாளர்) என்று கூறப்படுகிறார்கள். இந்து சன்னியாசிகள் துறவு பெறும்போது உடை, பெயர் அனைத்தையும் மாற்றி ‘இறந்து பின்பு பிறக்கிறார்கள்.’ ஆன்மிகமான ஒரு மறுபிறப்பு குறித்து பல தொல்மதங்கள் பேசுகின்றன. வரலாற்று ஏசு சிலுவையில் மறைந்தார் – தொன்ம [Myth] வடிவமான ஏசு மறுபடி பிறந்தார்.
இத்தகைய வாசிப்பினை ஏன் நிகழ்த்த வேண்டும்? எதற்காக இப்படி ‘வலிந்து’ பொருள்கொள்ள வேண்டும்? இது வலிந்து பொருள் கொள்வது அல்ல. அப்படி பொருள் கொள்ள வேண்டிய தேவையும் இல்லை. பண்டைய ஞானம் அவர்களுக்குரிய ஒரு ‘தனிமொழி’யில்[ Meta language] கூறப்பட்டுள்ளது. அதுவே தொன்மங்கள். தொன்மமே சென்ற காலத்து ஞானத்தின் பேசுமொழியாகும் நடராஜகுரு இதை மூலமொழி (Proto Language) என்று குறிப்பிடுவதுண்டு. இந்த மொழிக்குள் சென்று அதில் கூறப்பட்டுள்ளது என்ன என்று அறிவதே நமது பணி. அவர்கள் அடைந்தது என்ன என்றும் அதில் எப்பகுதி நமக்குப் பயன்தரும் என்றும் அறிதல்.
இந்த ‘நவீன யுகத்திலும்’ அறிஞர்கள் மீண்டும் மீண்டும் பண்டைய நூல்களில் ஆழ்ந்து செல்வதற்கான காரணம் இதுவேயாகும். நாம் யோசிக்கும் கரணிய முறைக்கு மாறான யோசிக்கும் முறை அந்நூல்களில் நமக்காக உள்ளது. மேலும் அதற்கு இன்னொரு பயனும் உள்ளது. நம்மால் அள்ளப்படும் ஞானம் நமது கரணிய சிந்தனை முறை காரணமாக ஒருவிதத்தில் எல்லை வகுக்கப்பட்டுள்ளது. கரணிய நோக்கு இந்த யுகத்தின் வாழ்க்கைநோக்கு. ஆனால் கரணியத்தின் கருவிகளால் சிலவவற்றையே கையாள முடியும். அந்நிலையில் முற்றிலும் மாறுபட்ட இன்னொரு அறிதல் முறைக்கு உள்ளே செல்வது நமது கோணங்களை அதிகப்படுத்துகிறது. நம்முடைய நிலைப்பாடுகளையும் கருத்துக்களையும் பல்வேறு விதங்களில் பரிசீலிக்க உதவுகிறது
இன்றைய பின் நவீனத்துவ சிந்தனை இதை பெரிதும் வலியுறுத்துகிறது. கரணிய நோக்கை உறுதியாக கடைப்பிடிக்கும் அணுகுமுறையை ‘நவீனத்துவம்’ என்று வகைபப்டுத்தும் பின்நவீனத்துவர் அதை பலவழிகளில் தாண்டிச்செல்ல முயல்கின்றனர். கரணிய நோக்கின் தருக்கபூர்வ நோக்கை பித்து நிலைமூலமும் சிதறுண்ட நோக்கு மூலமும் முக்கியமற்றவற்றை முக்கியபப்டுத்தி கவனிப்பதன் மூலமும் மையங்களைவிட்டு விளிம்புகலுக்குச் செல்வதன் மூலமும் தாண்டிச்செல்ல முயல்கிறார்கள்.
கரணிய வாசிப்பின் மூலமே நாம் பண்டைய நூல்களை தர்க்க பூர்வமாக அணுக முடியும். இந்நூலில் உள்ளது அத்தகைய ஒரு முயற்சி. அதே சமயம் கரணிய நோக்குதான் மாறா உண்மையை அளிக்கும் என்று எண்ணி அதை எப்பாடுபட்டும் காத்துக்கொள்ளும் முயற்சி இதில் இல்லை. கரணிய நோக்கு இங்கு ஒரு தர அடையாலம். அதற்கு கீழே செல்ல அனுமதி இல்லை. மேலே செல்லும் வாய்ப்புகளை விடுவதும் இல்லை. கரணிய நோக்குக்கு மேலே சென்று அறிய முடியக்கூடியவற்றுக்கு என் பார்வை திறந்தே இருக்கிறது.
கரணிய வாசிப்புக்கு நம்பிக்கை சார்ந்து இயங்குபவர்கள், அமைப்பு சார்ந்தவர்கள் கடும் எதிர்ப்பை முன்வைப்பார்கள். ஆனால் அவர்கள் எதிர்த்தாலும் ஆதரித்தாலும் அத்தகைய வாசிப்பினை அறிவார்ந்த சமூகம் தொடர்ந்து செய்தபடியே இருக்கும். அது இதுவரைக்கும் மானுட ஞானத்தைக் கொண்டு வந்து சேர்த்த முடிவில்லாத மானுடத் தேடலின் உந்துதல். அதை எவரும் தடுக்க இயலாது. வேண்டுமென்றால் அத்தகைய ஆய்வுகளை அமைப்புபலம் மூலம் தடுக்க முயலும் நூல்களை மறைவாக கரணிய ஆய்வுக்கு உள்ளாக்குவார்கள் அவ்வளவுதான்.
வாசிப்பு எதுவரை
கடைசியாக எழும் கேள்வி இது, கீதை போன்ற மூலநூல்களை இவ்வாறு ஒவ்வொருவரும் தங்கள் கரணிய நோக்கில் வாசித்து தங்கள் கீதையை உருவாக்கிக்கொண்டால் கீதையின் மூலப்பொருள் என்ன ஆவது?
தத்துவத்திற்கு இவ்வாறு ஒரு மாறாத கட்டுமானம் உண்டு என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. கீதையே தன்னை கரணிய ஆய்வுக்கு உட்படுத்துமாறு அறைகூவக்கூடிய ஒரு நூல். உலகில் இதுவரை உருவான அத்தனை நூல்களும் இவ்வாறுதான் வாசிக்கப்பட்டுள்ளன. கறாரான சட்டதிட்டங்களை மட்டுமே சொல்லும் குர்-ஆன் போன்ற நூல்களுக்கே ஹதீதுகள் என்ற பேரில் விளக்கங்களும் மேலதிக விளக்கங்களும் தேவையாகின்றன. இத்தனைக்கும் அதில் ஒரு சொல்லைக் கூட மாற்றவோ மறுக்கவோ கூடாது என்று ஆணையிட்டு அதற்கு நம்பிக்கையை காவல் வைத்துள்ள நூல் அது! உலகில் உள்ள அத்தனை நூல்களும் இவ்வாறு வாசகர்களால் தங்கள் கரணிய அறிவின் மூலம் வாசிக்கப்பட்டு தங்கள் அனுபவ மண்டலம் சார்ந்துதான் பொருள் கொள்ளப்படுகின்றன. தத்துவ நூல்களை விடுவோம், இந்திய அரசியல் சட்டம் என்று முற்றிலும் திட்ட வட்டமான முற்றிலும் புறவயமான நூல் நமது நீதி மன்றங்களில் ஒவ்வொரு நாளும் அலசி ஆராய்ந்து விளக்கம் தரப்படுகிறது அல்லவா?
கீதையை ஒரு மதநூலாகக் காணாமல் ஒரு விவாதப் பரப்பாக, ஞான மண்டலமாகக் காண வேண்டும் என்று முதலிலேயே கூறியது இதனால்தான். மாறிக்கொண்டே இருக்கும் அன்றாட வாழ்வின் முடிவிலா பகைப்புலத்தில் நின்று கீதை கூறும் மெய்ஞானத்தை, அழிவிலா விவேகத்தை மீண்டும் மீண்டும் கண்டடைய வேண்டியுள்ளது. சங்கரரும் ராமானுஜரும் உரை எழுதிய பிறகும்கூட அரவிந்தரும் சித்பவானந்தரும் எழுத வேண்டியிருப்பது அதனால்தான். நடராஜகுருவும் நித்ய சைதன்ய யதியும் எழுதிய பிறகும்கூட நான் எழுதத் துணிவது இதனால்தான்.
ஆம், இது என்னுடைய சொந்த கீதை. இதை வாசிப்பவர்கள் தங்கள் சொந்த கீதையை கண்டடைய இது உதவலாம். அவர்களுக்குக் கிடைக்கும் கீதா ஞான மண்டலத்தில் இதுவும் ஒரு துளி. மிகச் சிறிய துளி.
கீதை இடைச்செருகலா? மூலநூலா?- கடிதம்