பெண் ,ஒழுக்கம், பண்பாடு:இரு கேள்விகள்

ஐயா, நான் உங்கள் பதிவுகளை கடந்த மூன்று மாதமாக படித்து வருகிறேன். உங்கள் எழுத்துகள் என்னை பண்படிதிக்கொள்வதற்கு மிகவும் உதவுகிறது.மிக்க நன்றி.
எனதுள் எழுந்த ஒரு கேள்விக்கு விடை தேடி களைத்துவிட்டேன்.

முடிவாக உங்களிடம் கேட்கலாம் என்று எழுதுகிறேன்.

பண்பாட்டிற்கும் கலாசாரத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?

ராஜ்குமார்

அன்புள்ள

இரண்டு வெவ்வேறு சூழல்களில் உருவாக்கப்பட்ட இரு சொற்கள் மட்டும்தான் அவை. கிட்டத்தட்ட ஒன்றையே குறிக்கின்றன. கல்ச்சர் என்ற சொல் கலாச்சாரம் என்று மொழியாக்கம் செய்யப்பட்டது. டி.கெ.சிதம்பரநாத முதலியார் அதே சொல்லை பண்பாடு என்று மொழியாக்கம் செய்தார்.

ஆனால் நடைமுறையில் நுட்பமான ஒரு வேறுபாடு உள்ளது. ஒரு கலாச்சாரத்தில் உள்ள நன்மை தீமை இரண்டையுமே குறிக்கும் சொல்லாக உள்ளது கலாச்சாரம். ஆயுதக்கலாச்சாரம், வெடிகுண்டுக் கலாச்சாரம் என்றெல்லாம் சொல்கிறோமே. கல்ச்சர் என்பது இருள் ஒளி இரண்டும் கலந்ததே என்ற புரிதல் இச்சொல்லுக்குப் பின்னால் உள்ளது. கலாச்சாரம் என்ற சொல்லுக்கு சரியான சொற்பொருள் கலை+ ஆசாரம் என்பது. ஆனால் நடைமுறையில் அந்த தளம் இல்லாமலாகிவிட்டிருக்கிறது.

பண்பாடு என்பது பண்படுதலை மட்டுமே குறிக்கிறது. எதிர்மறைப்பண்புகளுக்கு இடமில்லை. எந்த ஒரு சமூகமும் அதன் வளர்ச்சிப்போக்கில் பண்படவே செய்கிறது என்ற ஒரு இலட்சியவாத அணுகுமுறை இச்சொல்லின் பின்னால் உள்ளது. ஆகவே எங்கெல்லாம் மேம்படுதல், நுண்மையாதல் என்ற பொருள் உள்ளதோ அங்கே பண்பாடு என்ற சொல்லை கையாளலாம்.

ஆங்கிலத்தில் கல்ச்சர் என்ற சொல்லுக்கு பல பொருள்கள் உண்டு. முக்கியமாக இரண்டு. அமெரிக்கன் கல்சர் என்பது வேறு கல்சர்ட் பெர்ஸன் என்பது வேறு. நமக்கு இரு சொற்கள் உள்ளன. அமெரிக்கக் கலாச்சாரம் என்றும் பண்பாடுள்ளவர் என்றும் சொல்கிறோம்.

தமிழ்க் கலாச்சாரம் என்றால் தமிழ்நாட்டின் கறுப்பும் வெளுப்பும் கலந்த வாழ்க்கைமுறையைச் சொல்கிறது. தமிழ்ப்பண்பாடு என்றால் தமிழ் மரபு நம் கைகள் வரை கொண்டுவந்து சேர்த்துள்ள மேன்மைகளை மட்டுமே குறிக்கிறது.

ஜெ

****************
வணக்கம்
எனக்கு மன உளைச்சல் தரும் விதமாக சில கேள்விகள் உள்ளன. அதை உங்களிடம் தான் கேட்க முடியும். ஏன் என்றால் கலாச்சாரம் சார்ந்த கேள்வி. உங்களால் தான் அதற்கு பதில் தர முடியும் என்பது என் நம்பிக்கை

சமீப காலமாக bpo, call centre, software போன்ற துறைகளில் நடக்கும் கலாச்சார கேடுகள் குறித்து பல செய்திகள் வருகின்றன. பெண்கள் குடிக்கிறார்கள், புகை பிடிக்கின்றனர். பல ஆண் நண்பர்களுடன் செக்ஸ் வைக்கிறார்கள் என்று செய்திகள் வருகின்றன. (இங்கு ஒரு விஷயம் எல்லாரும் அப்படி அல்ல ஆனால் ஒரு குறிப்பிட்ட சதவிதம்.) இது சென்னை, கோவை போன்ற பகுதி இளம் பெண்கள் கூட இப்படி ஆகின்றனர் என்று கூறுகிறார்கள். இதை புதுமை என்றும் இதனால் என்ன தவறு என்றும் கேட்கிறார்கள். சமீபத்தில் விஜய் டி.வியில் இப்படிக்கு ரோஸ் நிகழ்ச்சியில் இது பற்றிய கலந்துரையாடல் நடந்தது. அதில் அவர்கள் நடப்பது உண்மை என்று சொல்கின்றனர்.

இதை பார்க்கும், செய்தி படிக்கும் கிராமப்புற மாணவர்கள், கீழ் நடுத்தர வர்க்க ஆண் பெண்கள் மன உளைச்சலுக்கும் ஆளாகின்றனர். குறிப்பாக நாம் எதை சமூக ரீதியாக குறிப்பாக பெண்கள் செய்யா மாட்டார்கள் என்று நினைகிறோமோ அதை புரட்சி என்ற பெயரில் செய்யும் போது நம் மனம் ஏற்க மறுப்பது ஏன்?

இதை எதிர்கொள்ள கிராமத்தில் வளர்ந்த என் மனம் தயங்குகிறது. ஒருவகையில் கலாச்சார அதிர்ச்சி ஏற்படுகிறது. ஆனால் ஆண்கள் செய்யும் எந்த தவறும் மனதை பாதிக்கவில்லையே என்ன செய்வது.? தங்கள் பதிலை எதிர்பார்கிறேன்.

ரகு

அன்புள்ள ரகு

உங்கள் கேள்விக்கு நீங்களே பதிலையும் சொல்லிவிட்டீர்கள். கிராமத்தில் வளர்ந்த மரபு சார்ந்த மனத்தின் ஒரு பழக்கம் மட்டும்தான் அது.

உங்கள் சிக்கல் பெண்கள் சில மரபு மீறல்களைச் செய்வது. ஆண்கள் செய்வது உங்களுக்கு பிரச்சினையாக இல்லை. ஏன்? நம் பண்பாடு சங்ககாலம் முதலே ஆணுக்கு ஒழுக்கநெறிகளை வலியுறுத்தியதாக தெரியவில்லை. கற்பு என்பது பெண்ணுக்கே சொல்லபப்ட்டது. தலைவன் பரத்தமையும் கள்ளுமாக களித்தால் தலைவி சற்றே ஊடுவதுடன் சரி.

ஆனால் சங்ககாலத்தில் திருமணத்துக்கு முந்தைய ஆண்பெண் உறவு களவு என்ற பேரில் அனுமதிக்கப்பட்டிருந்தது என்பதையும் நாம் காண்கிறோம். அதே சமயம் பெண்களின் கற்பு கடுமையாக காவலுக்கு உரித்தாக்கப்பட்டது. பெண் ஆணுக்கு அடங்கி குடும்பம் என்ற அமைப்புக்குள் வாழ வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
அதன்பின் சமண, பௌத்த மதங்கள் வந்தன. அவையே இன்றும் நீடிக்கும் அறநெறிகளையும் ஒழுக்க நெறிகளையும் வகுத்தன. அந்த சமூக உருவாக்கப்போக்கின் உச்சமே குறள். குறள் கற்பை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானதாக ஆக்குகிறது. பெண் ஆணுக்கு கீழே இசைந்து வாழும் குடும்ப உறவை வலியுறுத்துகிறது.

அதன் பின்னர் தமிழ்நாட்டில் சில நூற்றாண்டுக்காலம் நிலையான அரசுகள் இல்லாத அராஜக காலகட்டம் நிலவியது. இக்காலகட்டத்தில் நமது சமூகம் தன்னை ஆமைபோல ஓட்டுக்குள் இழுத்துக்கொண்டு சுருங்கிக் கொண்டது. பெண்கொள்ளை என்பது ஓர் அன்றாட நிகழ்வாக நடந்த அக்காலகட்டத்தில் வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டிவைத்தலும், குழந்தை மணமும் உருவானது. பெண்ணுக்கான இன்றைய நடத்தைக் கட்டுப்பாடுகள் அவ்வாறு உருவானவை.

அதன்பின் ஆங்கில ஆட்சிக்காலத்தில் ‘விக்டோரியன் மொராலிட்டி’ என்று சொல்லப்படும் ஆங்கிலேய ஒழுக்கக் கெடுபிடிகள் இங்கே வந்தன. நிர்வாணமும், காமமும் ஒருவகை மனித இயல்பாக காணும் மரபு இங்கிருந்தது. வழிபடும் தெய்வத்தின் பெண்குறியைப்பற்றிய வருணனைகளே இலக்கியத்தில் உள்ளன. அன்றாடம் சொல்லவும் பட்டன. நாம் அவற்றை ஆபாசம் என்று அடையாளம் காண ஆரம்பித்தது விக்டோரிய யுகத்தில்தான். இன்றும் நாம் ஆபாசம் என எண்ணும் விஷயங்கள் அக்காலகட்டத்தில் உருவானவை

பின்னர் ஐரோப்பிய மறுமலர்ச்சியின் அலைகள் நம்மை வந்தடைந்தன. பெண்கள் கல்விகற்பது, பொதுஇடங்களில் நடமாடுவது, பொதுவிஷயங்களில் ஈடுபடுவது, வேலைபார்ப்பது போன்றவை படிப்படியான சமூகப்போராட்டம் மூலம் அடையப்பெற்றன. விதவை மறுமணம் பெண்களுக்குச் சொத்துரிமை போன்றவைஎ வலியுறுத்தப்பட்டது. குழந்தை மணம் போன்றவை நிறுத்தப்பட்டன.

இவ்வாறு படிப்படியாக ஒழுக்க நெறிகளில் வளர்ச்சியும் பின்னடைவும் இருப்பதைக் காணலாம். அதாவது ஒழுக்கம் என்பது மாறாத ஒரு மானுட மதிப்பீடு அல்ல. அது வரலாற்று ரீதியானது. வரலாற்றின் தேவைக்கு ஏற்ப வளர்ச்சியும் மாற்றமும் அடைவது.

பெண்கள் குட்டைப்பாவாடை அணிவதையோ சிகரெட் பிடிப்பதையோ கண்டு உங்களுக்கு ஏற்படும் அதே அதிர்ச்சியும் கலக்கமும் பெண்கள் முகத்திரை போடாமல் வீட்டுக்கு வெளியே செல்வது ஓட்டலில் சாப்பிடுவது போன்றவற்றைக் கண்டு உங்கள் பாட்டிக்கு ஏற்பட்டிருக்கும்.

நம் நாட்டில் விதவை மணம் ஒழுக்கக் கேடாக பார்க்கபப்ட்டது. இப்போதும் பலசாதிகளில் அப்படித்தான். மணமுறிவு இன்றும் நம் நாட்டில் பெரும் ஒழுக்கக் கேடே. காதலை ஒழுக்கக்கேடாகப் பார்க்கும் மக்கள் இருக்கிறார்கள்.

யு.ஆர்.அனந்தமூர்த்தியின் அவஸ்தே என்ற நாவலில் கதாநாயகனின் காதலி சிகரெட் பிடிக்கிறாள். அது அவன் அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. ஒழுக்கக்கேடு என்கிறாள். கதாநாயகன் ”நீ புகையிலை சேர்த்து வெற்றிலை மெல்கிறாயே. அதைப்போலத்தான் இதுவும். இரண்டுமே புகையிலை”என்கிறான்.

ஒட்டுமொத்தமாக வரலாற்றை நோக்கி, காலந்தோறும் இந்த மாற்றம் நடந்துகொண்டுதான் இருக்கும் என்று புரிந்து கொள்ளும் ஒருவர் ஒழுக்க மாறுதல்களைக் கண்டு அதிர்ச்சி ஏதும் அடையமாட்டார். இயல்பாகவே எடுத்துக்கொள்வார்.

ஆண்பெண் உறவுகள் சீரழிந்துவிட்டன என்பதை மனிதர்களைக் கவனிப்பவன் என்ற வகையில் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்பதை ஒர் அளவையாகக் கொண்டீர்கள் என்றால் எல்லாக் காலத்திலும் ஆண்பெண்களில் மிகச்சிறிய விழுகாடினர் மட்டுமே அப்படி இருந்திருக்கிறார்கள் என்றே சொல்வேன்

பெண்கள் வீட்டுக்குள் பூட்டி வைக்கப்பட்ட காலத்திலேயேகூட பலபெண் உறவும் பல ஆண் உறவும் சாதாரணமாக நிகழ்ந்திருக்கிறது என்பதை பல்வேறு வயோதிகர்களுடன் பேசும்போதும் அக்கால எழுத்துக்களைப் படிக்கும்போதும் காணமுடிகிறது. அக்கால குடும்பங்களுக்குள்ளும் சாதிகளுக்குள்ளும் பாலுறவுகள் கண்டும் காணாமலும் விடப்பட்டன.

சொல்லப்போனால் சென்ற காலங்களைவிட பெண் இப்போது சுதந்திரமாக இருப்பதனால் கட்டாயப்படுத்தி அவளை ஆண் அடையமுடியாத நிலை இன்று உள்ளது. ஆகவே பலபாலுறவு கட்டுக்குள் உள்ளது என்றே எண்ணுகிறேன்.

பல பாலுறவுக்கான தேடல் என்பது மனித இயல்பு. ஒருவனுக்கு ஒருத்தி என்பது ஓர் உயர்ந்த விழுமியம். பொய் சொல்லலாகாது என்பது ஓரு சமூக விழுமியம். பொய் பெரும்பாலும் சொல்லப்படும் என்பது ஒரு சமூக உண்மை.

ஆகவே இப்போது பாலுறவு கட்டவிழ்ந்துள்ளது என்பது ஒரு மனப்பிரமை. உண்மையில் எல்லா காலகட்டத்திலும் இதே குரலை முந்தைய தலைமுறை எழுப்பியிருக்கிறது.
இன்னும் ஒன்று உண்டு. ஒழுக்கம் அனைவருக்கும் ஒன்றாக இங்கே எங்கும் இருக்கவில்லை. அறைக்குள் அடைக்கப்பட்ட பெண்ணுக்கும் வயலில் வேலைசெய்யும் பெண்ணுக்கும் ஒழுக்க நெறி வேறு வேறுதான். சாதிக்குச் சாதி இடத்துக்கு இடம் ஒழுக்கம் மாறுபடுகிறது.

அறம் வேறு ஒழுக்கம் வேறு என்ற புரிதல் நமக்குத்தேவை. மானுடகுலத்தை உருவாக்கும் சில மாறா அடிப்படைகள்தான் அறம் என்று சொல்லப்படுகின்றன. எளியோனை வலியோன் அழித்தல் கூடாது என்ற அறத்தின் அடிப்படையில்தான் சமூகமே உள்ளது. அதைப்போல பல அறங்கள் உள்ளன. உண்மை, கருணை, சமத்துவம் போன்று பல அறங்களால் ஆனது நம் வாழ்க்கை.

ஒழுக்கம் என்பது அறத்தின் அடிப்படையில் அமைந்திருக்கையில் அது நல்லொழுக்கம். அறமீறலை நிகழ்த்தும் என்றால் அது தீய ஒழுக்கம். இவ்வாறே ஒழுக்கத்தைப் புரிந்துகொள்ள முடியும். ஒரு பாலியல்போக்கு என்பது பிறரை ஏமாற்றுவதாகவோ, சுரண்டுவதாகவோ அமையுமென்றால் அதை ஒழுக்கமின்மை என்று கொள்ளலாம்.

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்

என்ற குறள் ஒழுக்கத்தின் நோக்கத்தைச் சொல்கிறது. அது மேலான வாழ்க்கையை அளிக்கிறது. ஒரு செயல்பாடு விழுப்பம் அளிக்குமென்றால் அது ஒழுக்கமே ஆகும்.

ஜெ

[மறுபிரசுரம் 2009 ]

முந்தைய கட்டுரைஅருவி
அடுத்த கட்டுரைஅசைவம் – இரு கடிதங்கள்