காந்தியின் கிராமசுயராஜ்யம் – 3

இந்தியப் பஞ்சாயத்து ராஜ் சட்டம் ஏப்ரல் 24, 1993 முதல் அமலுக்கு வந்தது. அதற்கு முன்னரே பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே கிராம நிர்வாகத்துக்காக ஜனநாயகப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்படும் கிராமசபைகள் இருந்தன. 1950 இந்திய அரசியல்சட்ட வரைவுக்குழு ஓரளவு அதிகாரம் கொண்ட கிராமப்பஞ்சாயத்துக்களை அமைக்க ஆவனசெய்தது. அதன் பின் பல சிறிய சட்டத் திருத்தங்களுடன் கிராமப்பஞ்சாயத்துக்கள் தேர்தல்கள் மூலம் அமைக்கப்பட்டன. ஆனால் இவையெல்லாமே உண்மையான நிதியாதராமோ, நிர்வாக அதிகாரமோ இல்லாதவை. அரசாங்கத்தின் அடிப்படை அலகான கிராமநிர்வாகத்துக்கு  உதவக்கூடியவை மட்டுமே.

அரசியல்சட்ட நிர்ணயசபை விவாதங்களில் காந்தியவாதிகளான மகாவீர் தியாகி போன்றவர்கள் பஞ்சாயத்து அமைப்பின் தன்னாட்சி உரிமைக்காக கோரியபோது அக்கோரிக்கையின் முதல் எதிரியாக அம்பேத்கார் இருந்தார். இந்தியக்கிராமங்கள் சாதிவெறியிலும் மூடநம்பிக்கைகளிலும் ஊறிக்கிடப்பவை என்று குற்றம்சாட்டிய அம்பேத்கார் அவை இந்தியாவின் வளர்ச்சிக்கு பெரும்தடையாக அமையும் என்றார். கிராம சுயராஜ்யம் என்பது கிராமங்களில் உள்ள சாதிவெறி கொண்ட நிலக்கிழார்களுக்கு அதிகாரம் வழங்குவது மட்டுமே என்றார்.

வலுவான மைய அதிகாரத்தின் ஆட்சி ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்றாகவேண்டும் என்றும், அதன்மூலம் கிராமங்களின் சுய அதிகாரத்தின் முதுகெலும்பு முறிக்கப்படவேண்டும் என்றும், அம்பேத்கார் சொன்னார். இந்தியாவை தொழில்மயமாக்கியும் நகர்மயமாக்கியும் முன்னேற்றப்பாதையில் கொண்டுவர வேண்டும் என்றார். ஆனால் காந்தியவாதிகளின் தொடர் மன்றாட்டு காரணமாகவும், நிலவருவாய் சார்ந்த நிர்வாகத்தில்  கிராமபஞ்சாயத்து என்பது ஒரு நடைமுறைத்தேவையாக இருந்தமையாலும் பஞ்சாயத்து அமைப்பு கொண்டுவரப்பட்டது.

ஒருவகையில் அம்பேத்கார் சொன்னது உண்மை. சென்னையில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரியான த்ரென்ஹ்மீர், எம்.சி.ராஜா போன்றவர்களின் அறிக்கைகளையும் உரைகளையும் இன்று வாசிக்கும்போது முழுக்க முழுக்க நில உரிமையாளர்கள் அடங்கிய, அவர்களின் நலனுக்காகவே செயல்பட்ட அமைப்புகளாகவே அக்காலத்து கிராமசபைகள் இருந்திருப்பது தெரியவருகிறது. தலித்துக்கள் போன்ற நில அடிமைகள் விடுதலை பெறுவதற்கான எல்லா வழிகளையும் கிராமசபைகள் அடைத்தும் வந்திருக்கின்றன. ஆகவே அன்றிருந்தநிலையில் அவற்றை அப்படியே சுயமாக விடுவது நல்லதல்ல என்பது உண்மைதான்.

ஆனால் அம்பேத்கார் காண மறந்தது ஒன்றுண்டு. அரசின் நிர்வாக அலகாக கிராமத்திற்குச் செல்லும் அதிகாரியும் சாதிய நோக்கு கொண்டவனாக இருக்கலாம் என்பதுதான் அது. அவனுக்கு கிராமம் மீது கட்டற்ற அதிகாரத்தை அளிக்கிறது அம்பேத்காரின் மைய நிர்வாக முறை. அவன் அங்கே சர்வவல்லமை பொருந்திய அரசின் பிரதிநிதியாக இருக்கிறான். கடந்த ஐம்பதாண்டுகளில் கிராமங்களை நிர்வாகம்செய்யும் அரசாங்க அதிகாரிகள் பழைய நிலப்பிரபுக்களை விட ஆபத்தான எதிர்ச்சக்திகள் என்பது நிரூபணமாகியிருக்கிறது.

ஆனால் அம்பேத்கார் கணித்ததற்கு நேர்மறாக பலவீனமாக இருந்தாலும் பஞ்சாயத்துமுறையில் இருந்த ஜனநாயகம் கிராமங்களின் சாதியக்கட்டமைப்பைத் தகர்க்க ஆரம்பித்தது. பெரும்பாலானகிராமங்களில் பெரும்பான்மையினராக இருப்பவர்கள் நிலமில்லா மக்களே. வயதுவந்தோர் வாக்குரிமை அவர்களை அதிகாரம் கொள்ளச் செய்தது. நிலஉடைமையாளர்கள் வாக்குகளுக்காக சேரிகளுக்குச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இக்காரணத்தால் இந்தியாவில் பஞ்சாயத்துத் தேர்தல்கள் மட்டும் அதிகமான வன்முறையையும் அமைதியின்மையையும் உருவாக்கக்கூடியனவாக இருந்தன. அந்த வன்முறை ஒரு வலுவான தடுப்புமருந்து உடலுக்குள் செல்லும்போது உருவாகும் காய்ச்சல் போன்றது.

ஆனால் அதையே காரணமாகக் காட்டி பெரும்பாலான மாநிலங்களில் பஞ்சாயத்துத் தேர்தல்கள் முற்றிலுமாக ரத்துசெய்யப்பட்டன. இந்தியாவில் எங்குமே பஞ்சாயத்து ஆட்சி தொடர்ச்சியாக நிகழ பிராந்திய அரசுகள் அனுமதிக்கவில்லை. குறிப்பாக ஆதிகக்சாதிக்கு எதிரான போர் மூலம் அரசதிகாரத்தை அடைந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் திராவிட இயக்கங்களின் ஆட்சியில் பஞ்சாயத்து முறையே கைவிடப்பட்டது. ஏனென்றால் அம்பேத்கார் அஞ்சியதற்கு மாறாக பஞ்சாயத்துமுறை தலித்துக்களுக்கு நேரடியாகவே அதிகாரம் அளிக்கக்கூடியது. அது கிராமத்தில் உள்ள அதிகார அமைப்பை நில உடைமை என்ற அடிப்படையில் இருந்து மக்கள் எண்ணிக்கை என்ற அடிப்படையில் மாற்றியமைக்கிறது.

பஞ்சாயத்து ராஜ் இந்தியாவில் கொண்டுவரப்பட்டு தமிழ்நாட்டில் பஞ்சாயத்துத் தேர்தல்கள் நடந்தபோதுதான் மேலவளவு, பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் போன்ற பல பிரச்சினைகள் முன்னுக்குவந்தன என்பதைக் காணலாம். இப்பிரச்சினைகள் உருவாவதே அவை தீர்க்கப்படும் என்பதற்கான தொடக்கம். சுதந்திரம் கிடைத்து அரைநூற்றாண்டுக்காலமாக புதையுண்டுக் கிடந்த பிரச்சினைகள் இவை என்பதை கணக்கில் கொள்ளவேண்டும். பஞ்சாயத்து சுய ஆட்சி முறையின் சாத்தியங்கள் என்ன என்பதைக் காட்டும் ஆதாரம் இது. பிற எல்லா சீர்திருத்தங்களும், அரசியல் செயல்பாடுகளும் அடித்தள மக்களுடன் தொடர்பில்லாமல் அவர்களின் தலைக்குமேல் அலையடித்துச் சென்றுவிடும். பஞ்சாயத்துத்தேர்தல் அப்படியல்ல. அது அவர்களின் வாழ்க்கையை சென்று தொடுகிறது. ஆகவே அவர்களின் உண்மையான பிரச்சினைகள் பற்றிக்கொள்கின்றன. தீர்வை கட்டாயமாக்குகின்றன.

இந்தியப் பஞ்சாயத்துராஜ் திட்டம் என்பது காந்தியின் கனவுக்குச் சம்பந்தமே இல்லாத ஒன்று. இதற்குள்ள நிதியதிகாரம் என்பது மிகச்சொற்பம். அதுவும் மேலிடத்தில் இருந்து அனுமதிக்கப்பட்டு வரவேண்டும் என்னும்போது நடைமுறையில் கிராமசுயராஜ்யம் என்ற கருத்தே அடிபட்டுப்போகிறது. அதிகாரிகளுக்குக் கீழே கிராமப்பஞ்சாயத்தினர் கைகட்டி நிற்க நேர்கிறது. சொல்லப்போனால் அதிகாரிகளுக்கு சேவகம்செய்யும் அமைப்பாகவே இன்றைய பஞ்சாயத்து உருவகிக்கப்பட்டிருக்கிறது. பஞ்சாயத்து அமைப்புக்குள் அரசியல்கட்சிகள் ஊடுருவி அங்கும் அவர்களின் ஊழலாட்சியை உருவாக்குகிறார்கள். பஞ்சாயத்துத் தேர்தல்கள் பிறதேர்தல்கள்போல நிதிவிரயம் மற்றும் முறைகேடுகளுடன் நடக்கின்றன.

ஆனாலும் இந்திய சமூகச்சூழலில் பஞ்சாயத்துராஜ் திட்டம் அற்புதங்களைச் செய்திருக்கிறது என்கிறார்கள். கிராமங்களுக்கு ஒரு சபையும் அதற்கு ஓரளவு அதிகாரமும் நிதிவசதியும் அளிக்கப்பட்டபோது ஏராளமான கிராமங்கள் சட்டென்று வளர்ச்சிப்பாதையில் அடியெடுத்து வைத்தது தெரிந்தது. ஆசிய வங்கி போன்ற உலக நிதியுதவி நிறுவனங்களே அதை வியப்புடன் பதிவுசெய்திருக்கின்றன. ஆந்திரா, மத்தியப்பிரதேசம் முதலிய மாநிலங்களில் மிகப்பெரிய சமூகமாற்றத்தை அது உருவாக்கியிருக்கிறது.

குமரிமாவட்டத்திலேயே நான் சில கிராமங்களில் அதை நேரில் கண்டிருக்கிறேன். உதாரணம் மேல்புறம், ஒசரவிளை. இவ்விரு கிராமங்களிலும் சுத்தமான கழிப்பறைகளை பஞ்சாயத்துகள் கட்டிக்கொண்டன. கிராமப்பொதுக்கூடங்கள் அமைந்திருக்கின்றன. சாலைகளும் குடிநீர் வசதிகளும் மேம்பட்டிருக்கின்றன. எத்தனையோ வருடத்து அரசு நிர்வாகத்தில் சாத்தியமே இல்லாமலிருந்தவை சில வருடங்களில் நிகழ்ந்திருக்கின்றன. அந்தக்கிராமத்தின் மக்களிடம் ஒரு எளிய விழிப்புணர்ச்சியும் ஒற்றுமையும் இருந்தாலே போதும் ,பஞ்சாயத்துராஜ் திட்டம் அற்புதங்களைச் செய்யக்கூடியது.

கடந்த அரைநூற்றாண்டில் இந்தியக் கிராமங்களுக்கு இந்திய அரசு செய்தது என்ன? ஓரளவுக்குச் சாலைபோட்டுக்கொடுத்தது மின்சாரம் அளித்தது தவிர எதையுமே செய்யவில்லை என்பதே உண்மை. கிராமங்கள் தாங்களாகவே முண்டியடித்து பிழைத்து வருகின்றன. கிராமங்களின் வாழ்க்கைக்கு அடித்தளமாக உள்ள வேளாண்மை பசுமைப்புரட்சிமூலம் நஷ்டவணிகமாக ஆக்கப்பட்டது. கிராமத்து விளைபொருட்களும் கைவினைபொருட்களும் நகரச்சந்தைகளுக்காக உற்பத்திசெய்யப்படும் நிலை உருவாகியது. அவற்றுக்கு நகரத்தினரே விலை நிர்ணயம்செய்கிறார்கள். கிராமங்கள் நகரங்களை நம்பியே வாழ நேரிட்டுவிட்டிருக்கிறது. நகரங்களுக்கு சேவகம்செய்யும் கூலிப்பட்டாளமே இந்தியக்கிராமங்கள் என்றால் அது மிகையல்ல.

இதுவரை கிராம மேம்பாட்டுக்கு போடப்பட்ட எல்லா திட்டங்களும் தோல்வியே என்று என்னிடம் வட்டாரகிராம அலுவலராக இருந்து ஓய்வுபெற்ற என் சித்தப்பா ஒருமுறை சொன்னார்.  ஏனென்றால் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாத அளவுக்குச் சட்டச் சிக்கல்கள் இருக்கும். அவற்றுக்கும் அந்தக்கிராமச் சூழலுக்கும் சம்பந்தமே இருக்காது. அரசு என்ன உத்தேசிக்கிறது என கிராமவாசிகள் புரிந்துகொள்ளவே மாட்டார்கள்.

ஆனால் இந்தியாவில் மிக வெற்றிகரமாக ஒரு கிராமமேம்பாட்டுத் திட்டம் செயல்படுகிறது — மகளிர் சுய உதவிக்குழுக்கள். அதுவும் காந்திய வழிமுறைகொண்ட ஓர் திட்டமே. அவற்றிலும் இந்தியாவுக்கே உரிய ஊழல்கள், முறைகேடுகள், அரசியல்சதிகள் உண்டு என்றாலும் அவற்றை மீறி அவை குறிப்பிடத்தக்க சாதக விளைவுகளை உருவாக்கியிருக்கின்றன.காரணம் யாருக்கு லாபம் இருக்கிறதோ அவர்களிடமே பொறுப்பு அளிக்கப்படுகிறது, அவ்வளவுதான்.

குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்தத் திட்டம் வங்கதேச காந்தியப்பொருளியலாளரான முகமது யூனுஸ் அவர்கள் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய கிராமப்புற பெண்கள் வங்கி என்ற அமைப்பை நகல்செய்து இந்தியாவில் அறிமுகம்செய்யப்பட்டது என்பதுதான். அவரோ இந்தியாவில் ஐம்பது வருடங்கள் முன்பு காந்திய யுகத்தில் கதர்கிராமத் தொழிற்குழுக்களை முன்மாதிரியாகக் கொண்டு அவற்றை அமைத்தார்! அரைநூற்றாண்டுக்கு முன்னர் தமிழகத்தில் சௌந்தரம் ராமச்சந்திரன் அவர்களின் முயற்சியில் பல வெற்றிகரமான கிராம மகலிர்குழுக்கள் அமைந்திருக்கின்றன.

குமரிமாவட்டத்து மகளிர் சுய உதவிக்குழுக்களை ஒருங்கிணைத்து சேவைசெய்துவரும் சுந்தர லட்சுமணன் அவர்களின் உதவியுடன் ஒருமுறை அந்த அமைப்புகளைச் சேர்ந்த பெண்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களிடம் உருவாகியிருந்த தன்னம்பிக்கையும், மிகச்சிறிய அளவிலானாலும் அவர்களின் சுயசம்பாத்தியம் அவர்களுக்கு அளிக்கும் விடுதலையும் வியப்பூட்டுவனமாக இருந்தன. நம்முடைய பெண்களின் பெருமிதம் கொள்ளச்செய்யும் கற்பனைத்திறனும் ஒற்றுமைத்திறனும் நிர்வாகத்திறனும் அங்கே காணக்கிடைத்தது.

காந்திய வழிமுறைகளின் ஆகச்சிறந்த விளைவாக இந்தியாவில் சுட்டிக்காட்டப்படுவது ‘அமுல்’. விவசாயிகளின் சிறு சிறு கூட்டமைப்புகளாக காந்திய முறையில் 1946ல் காந்தி உயிருடன் இருக்கும்போதே ஆரம்பிக்கப்பட்டது அந்த அமைப்பு.  குஜராத்தில் கைரா என்ற மாவட்டத்தில் இருந்த மேய்ப்பர்கள் தங்கள் பொருட்களுக்கு போதிய விலைகிடைக்கவில்லை என்று மனக்குறையுடன் தங்கள் தலைவரும் காந்தியவாதியுமான திருபுவன் தாஸ் பட்டேல் என்பவரின் தலைமையில் வல்லபாய் பட்டேலை தொடர்பு கொண்டார்கள். வல்லபாய்பட்டேல் காந்தியவழிமுறைகளின்படி விவசாயிகள் இணைந்து பால்விற்பனைக்கான கூட்டமைப்பை உருவாக்க ஆலோசனைசொல்லி தன் அரசியல் மாணவரும் காந்தியவாதியுமான மொரார்ஜி தேசாயை அந்த செயல்பாட்டை ஒருங்கிணைக்கும்படி ஆணையிட்டார்.

மொரார்ஜி தேசாயின் வழிகாட்டலில் முழுக்கமுழுக்க காந்திய முறைப்படி சிறிய சிறிய மேய்ப்பர்களின் கிராகசபைகளாக பால்கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டு ஒருங்கிணைக்கபப்ட்டன. அந்த இயக்கம் குஜராத் முழுக்க பரவி குஜராத்தின் தலையெழுத்தையே மாற்றியமைத்தது. பிற்காலத்தில் அமுல் நிறுவனத்தின் வெற்றிகள் அனைத்துக்கும் காரணமாக அமைந்த வி.குரியன் அதில் பொறுப்புக்கு வந்தார். ஆனந்த் என்ற ஊரில் பால்கூட்டுறவு சங்கங்களின் தலைமையகம் அமைந்தது. அரைநூற்றாண்டில் அமுலின் வரலாறு ஒரு மாபெரும் வெற்றிக்கதை. இந்தியா முழுக்க பால் உற்பத்தியை தன்னிறைவு கொள்ளச்செய்தது அமுலின் முன்னுதாரணம்தான்.  கிட்டத்தட்ட மூன்றுகோடி மேய்ப்பர்கள் இணைந்துள்ள அமுல் உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி-வணிக நிறுவனங்களில் ஒன்று.

இந்திய வரலாற்றை மட்டுமல்ல உலக வரலாற்றை எடுத்துக்கொண்டால்கூட 2004க்கான நோபல் பரிசு பெற்ற கென்ய பசுமைசெயல்பாட்டாளரான வங்காரி மாதாய், 2006 க்கான நோபல் பரிசுபெற்ற வங்கதேச கிராமிய வங்கியாளர் முகம்மது யூனிஸ் போன்ற கணிசமானவர்களிடம் நாம் காண்பது ஹிந்து சுயராஜ்யம் நூலில் காந்தி கூறுவதுபோன்ற செயல்பாட்டையே. காந்திய அணுகுமுறை என்பது மையப்படுத்தப்பட்ட அதிகாரம் மூலம் ஒரு செயல்பாட்டை அடித்தளத்திற்குக் கொண்டுசென்று நடைமுறைப்படுத்துவதற்கு நேர் எதிராக அடித்தளத்தில் அங்குள்ள சாத்தியங்களை பயன்படுத்திக்கோண்டு சிறுகச் சிறுக ஒரு செயல்பாட்டை ஆரம்பித்து மையம்நோக்கி தொகுப்பது ஆகும். இன்றுவரை உலகம் முழுக்க மீண்டும் மீண்டும் வெற்றிகரமானதாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது இந்தவழிமுறை.

இந்த பின்புலத்தில் நாம் காந்தியின் கிராமசுயராஜ்யம் என்ற நூலை பார்க்கவேண்டும். அதை ஒரு முழுமையான செயல்திட்டம் என்றோ கோட்பாடு என்றோ கொள்ள முடியாது. அது உண்மையில் ஒரு நீளமான கட்டுரை மட்டுமே. அதில் உள்ளது ஒரு தரிசனம்.  பெரியவற்றை நோக்கி உலகம் திரும்பியிருந்த காலகட்டத்தில் ஓர் அரசியல்ஞானி சிறியவற்றின் வல்லமையை உணர்ந்து முன்வைத்த நூல் அது. உலகை வெல்லும்  பேராசையை உயர் இலட்சியமாகக் கொண்ட ஒரு காலகட்டத்தில் சுயகட்டுப்பாட்டை விழுமியமாக முன்வைத்தது. அரசாங்கங்களில் இருந்து அரசியலை தனிமனிதர்களுக்குக் கொண்டு வருகிறது. அதிகாரச் சமநிலைகளை நம்பி சமூகத்தை உருவகிக்காமல் விழுமியங்களை நம்பி உருவகிக்க முடியுமா என்று பார்க்கிறது.

அந்த அடிப்படைத்தரிசனமே கிராமசுயராஜ்யம் என்பது. அதை அடைவதற்கான பயணத்தில் காந்தி சொல்லும் எல்லா வழிகளையும் நாம் நிராகரித்துவிட்டுக்கூட இந்தக்காலகட்டத்துக்காக புதிதாக உருவாக்கிக் கொள்ள முடியும். பல கோணங்களில் அதை பிற்கால காந்தியர்கள் முன்னெடுத்திருக்கிறார்கள். காந்திய சிந்தனை என்பது காந்தியில் நின்றுவிடுவதல்ல. காந்தியர்கள் பல தளங்களில் பல்வேறு வகைகளில் கிராமசுயராஜ்யத்தின் தரிசனத்தை விரிவாக்கம் செய்திருக்கிறார்கள். காந்தி ஒருவிதைதான், காந்தியம் ஒரு காடு

இன்றைய காந்தியர்களை பொதுவாக இரு வகைகளாகப் பிரிக்கலாம். காந்தியின் கொள்கைகளை அறிந்து அவற்றை தங்கள் சிந்தனையாலும் செயல்முறைகளாலும் வளர்த்துக்கொண்டவர்கள். மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா,ஜெ.ஸி.குமரப்பா, லாரி பேக்கர் போல. காந்தியை போதிய அளவுக்குக் கற்காமலேயே சமகாலத்தை தங்கள் நோக்கில் ஆராய்வதனூடாக காந்தியை மிக நெருங்கி வந்து பின்னர் காந்தியை அறிந்துகொண்டவர்கள். மசானபு ·புகுவோகா,இ.எம்.ஷ¤மாக்கர், இவான் இலியிச் போன்றவர்கள் போல.

காந்தியக் கோட்பாட்டாளர்களிலும் இருவகை உண்டு. காந்தி கூறியவற்றை தங்கள் அடிப்படை நம்பிக்கையாகக் கொண்டு அவற்றை நடைமுறைகளாக ஆக்க முயன்றவர்கள். உதாரணம் ஜெ.சி.குமரப்பா, சுந்தர்லால் பகுகுணா, அண்னா ஹசாரே, ஜெகன்னாதன் -கிருஷ்ணம்மாள், ராமச்சந்திரன்- சௌந்தரம் போன்றவர்கள். காந்தியத்தின் அடிப்படையான தரிசனத்தை மட்டும் எடுத்துக்கொண்டு நவீன காலத்தைய தேவைகளுக்காக முழுமையாக மறு ஆக்கம் செய்து முன்னெடுக்கமுடியுமா என்று பார்த்தவர்கள். உதாரணம் இவான் இலியிச், லாரி பேக்கர்.

ஜெ.சி.குமரப்பா

இந்தியாவின் காந்திய முன்னோடிகளில் எல்லாமே காந்தியைப்பற்றிய அபரிமிதமான வழிபாட்டுணர்வு நிறைந்திருக்கிறது. ஒரு அவதானிப்பை காந்தி சும்மா சொல்லியிருக்க மாட்டார் என்ற ஆழமான நம்பிக்கை அவர்களிடம் உண்டு. குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவரும் மதுரை காந்திகிராம் பல்கலை நிறுவனருமான ராமச்சந்திரன் அவர்கள் ஓய்வுக்காலத்தில் குமரிமாவட்டத்தில் தங்கியிருந்தபோது அவரை சுந்தர ராமசாமி அறிமுகம் செய்து வைக்க சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது. காந்தியம் முழுமையான ஒரு சித்தாந்தம் என்றும் அதன் நடைமுறைச் சாத்தியங்களைப்பற்றி மட்டுமே நாம் பேசவேண்டும் என்று அவர் எண்ணியதாக தோன்றியது.

ராமச்சந்திரன் காந்தியுடன் அவரது ஆசிரமங்களில் இருந்தவர். காந்தியுடன் நீண்ட உரையாடல்களில் ஈடுபட்டவர். காந்தியின் பிம்பம் அவர் நெஞ்சில் ஒளியுடன் இருந்தது. பாபு என்னும்போதே முகமும் குரலும் நெகிழ்ந்தன. அந்தப்புள்ளியே அவரது சிந்தனைகளின் மையமாக இருந்தது. காந்திய வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்காக ராமச்சந்திரன் உருவாக்கியது மேலைபாணியிலான ஒரு பாடத்திட்டத்தை மட்டுமே.  பாடத்திட்டம் வழிமுறைகளையே கொண்டுசெல்கிறது, மனநிலைகளை அல்ல. ஆகவே கடைசியில் காந்தியப்பொருளியல் என்று ராமச்சந்திரன் உத்தேசித்தது கைத்தொழில் பயிற்சி மட்டுமே என்றாகியது. நடைமுறை இன்றைய காந்திகிராமம் என்பது ஒரு தோல்வி. அதற்கும் காந்தியத்திற்கும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லை.

ராமச்சந்திரன் ஜே.சி.குமரப்பாவைப்பற்றி பேசினார். குமரப்பா காந்தியப்பொருளியல் கட்டுமானத்தை உருவாக்குவதற்கான மனிதசக்தியைப் பற்றி கவலைப்படவில்லை என்றும் மனிதர்களைப் பயிற்றுவிக்கவே காந்திகிராமப் பல்கலை உருவாக்கப்பட்டது என்றும் சொன்னார். நவீன காலகட்டத்தில் இளைஞர்களுக்கு காந்திய முறைப்படிக் கற்றுக்கொடுக்கப்படவேண்டும் என்றார். ஆனால் காந்தியத்திற்கான சமூகக் கட்டுமானம் இல்லாத நிலையில் அந்த இளைஞர்கள் முதலாளித்துவ அமைப்புக்குள் உழைக்க முயலும்போது காந்தியம்  உதவுமா என்ற ஐயம் எனக்கு எழுந்தது.அன்று ராமச்சந்திரனிடம் பேசும்போது இந்த வரிகளை உருவாக்கும் முதிர்ச்சி எனக்கு இருக்கவில்லை.

காந்தியப்பொருளியல் என்பதன் பிதாவாக பொதுவாகச் சுட்டப்படுபவர் ஜெ.சி.குமரப்பா. குமரப்பாவின் பொருளியல்கோட்பாடுகளைப் பற்றி ஒரு பொதுவாசகன் என்ற நிலையில் நான் சென்ற காலங்களில் சில கட்டுரைகளை எழுதியிருக்கிறேன். குமரப்பாவின் சாதனை என்பது காந்தி கூறிய தரிசனங்களை எந்த அளவில் நடைமுறைக்குக் கொண்டுவர முடியும் என்பதை சோதனை முயற்சியாகச் செய்துபார்த்து அவற்றை கோட்பாடுகளாக வகுக்க முயன்றார் என்பதுதான். எதிர்மறைக்கூறு என்பது காந்திய தரிசனத்தில் இருந்து முன்னகராமல் அதை ஓர் அடிப்படை நம்பிக்கையாக வகுத்துக்கொண்டார் என்பது.

ஜெ.சி.குமரப்பா காந்திய கிராமியக் கட்டுமானத்தை உருவாக்க முயன்றவர்.  தஞ்சையில் பிறந்து இங்கிலாந்தில் கணக்கியலும்  அமெரிக்க பல்கலைகளில் பொருளியலும் கற்று இந்தியா திரும்பிய ஜெ.சி.குமரப்பா காந்தியால் கவரப்பட்டு இந்திய சுதந்திரப்போராட்டத்தில் பங்கெடுத்துக்கொண்டார். சுதந்திரத்திற்குப் பின்னர் மதுரை மாவட்டத்தில் உள்ள டி.கல்லுப்பட்டி என்ற சிற்றூரில் தங்கி கிராமியப்பொருளியல் குறித்து நடைமுறை ஆய்வை மேற்கொண்டார். நான் இருமுறை டி.கல்லுப்பட்டிக்குச் சென்று அங்குள்ள ஆய்வுமையத்தை பார்த்திருக்கிறேன். காந்திகிராமம் போலவே அதுவும் இன்று ஒரு தூலமான அமைப்பு மட்டுமே.

குமரப்பா காந்தியின் தரிசனங்களை அடிப்படையாகக் கொண்டார். ஒன்று, கிராமியப்பொருட்களாலான கிராமிய சிறு உற்பத்தி. இரண்டு, கிராமிய அளவிலான பொருளியல் நிர்வாகம். இவற்றின் சாத்தியங்கள் பலவற்றை அவர் வெற்றிகரமாக நிரூபித்துக்காட்டினார். குறிப்பாக அவர் முன்னெடுத்த கதர்சோப் மற்றும் வேம்பு சார்ந்த உற்பத்திப்பொருட்கள் கிராமிய அளவில் பெரிய புரட்சியை உருவாக்கின. சர்வோதய இயக்கம் எழுபதுகள் வரைக்கூட நமது கிராமியப்பொருளியலைத் தீர்மானிக்கும் அமைப்பாக இருந்துள்ளது. இன்று  அவ்வியக்கம் உருவாக்கிய கிராமிய உற்பத்தி மையங்கள் பெரும்பாலும் கைவிடப்பட்டு அழிந்த நிலையில் உள்ளன

குமரப்பாவின் பொருளியல் நம்பிக்கை காந்தியம் சார்ந்ததாக இருந்தது என்றாலும் அவரது ஆய்வுமுறை அவர் கற்ற மேலைநாட்டு நிரூபணமுறை சார்ந்ததாக இருந்து. கிராமியப்பொருளியலை சிறிய அலகுகளாகக் கட்டி ஒன்றுடன் ஒன்று குறைந்தபட்ச நிர்வாக- வணிக உறவுகளை உருவாக்கிக்கொண்டு ஒரு பெரிய வலைப்பின்னலாக  அதை ஆக்கி முதலாளித்துவ அமைப்புக்கு மாற்றாக கொண்டுவர முடியும் என அவர் எண்ணினார். ஆனால் உற்பத்திசெய்யப்பட்ட பொருட்கள் கச்சாவான கிராமியப்பொருட்களாக இருந்தன. தங்கள் சந்தையை வை கண்டுபிடிக்க முடியவில்லை.  நடைமுறையில் முதலாளித்துவ உற்பத்தி மற்றும் வினியோக அமைப்புடன் மோதவேண்டியிருந்த கிராமியப்பொருளியல் அரசு நிதிபெற்று தப்பிப்பிழைக்கும் நிலைக்குச் சென்றது.

காந்தி மீதான ‘பக்தி’ இல்லாமல் காந்தியப் பொருளியலையும் நிர்வாகத்தையும் ஒரு விதைக் கருத்தாக அணுகும்போதே அதற்கு சமகால முக்கியத்துவம் உருவாகிறது என்று சொல்லலாம். காந்திய கிராமியப்பொருளியலின் அடிப்படை தரிசனம் என்பது கீழ்த்தள அலகுகளில் உள்ள தன்னிறைவே. உற்பத்தி-வினியோகம்-நிர்வாகம் ஆகியவற்றில் அது முழுமை பெறுவது. அதற்குரிய தொழில்நுட்பத்தை அது வளார்த்துக்கொள்வது. அதற்குரிய சமூகக் கட்டமைப்பையும் நுகர்வையும் உருவாக்கிக் கொள்வது. அந்த மையத்தில் இருந்து இன்றைய சூழலுக்கு ஏற்பச் சிந்தனைசெய்வதே சிறப்பாக இருக்க முடியும்.

ஒரு சாதாரண உதாரணமாக இப்படி சொல்லலாம். சிறிய மின்னணுக்கருவிகளை உருவாக்கும் கிராமம் ஒன்று தன்னிறைவு கொண்டதாக இருக்க முடியாதா? சூழலை அழிக்காத, குறைவான எரிபொருள்தேவை கொண்ட, சிறிய அன்றாட மின்னணுக்கருவிகளை ஏன் அகிம்சைத்தொழில்நுட்பம் என்று சொல்லக்கூடாது? ஏன் அவற்றுக்காக முயலக்கூடாது?

இந்தியாவில் கிராமராஜ்யம் குறித்துச் சிந்தனைசெய்தவர்கள் கிராமத்தை காந்தியின் கண் வழியாகவே கண்டார்கள். அந்தக்கிராமத்தில் இருந்து பழைமையை பிரிக்க முடியாது. 1988 ல் நான் சென்னையில் பிரபல காந்தியரான சுந்தர்லால் பகுகுணாவை ஒரு மாநாட்டில் சந்தித்தபின் தினமணியில் ஒரு கட்டுரை எழுதினேன். அந்த மாநாட்டு மேடையில் நிகழ்ச்சி முழுக்க பகுகுணா கைராட்டையில் நூல்நூற்றுக்கொண்டிருந்தார். நான் அவரிடம் இந்தக் கைராட்டை இன்றைய காலகட்டத்திற்கு பொருந்துவதா என்றேன். ஆமாம், ராட்டை என்றும் இந்தியாவுக்கு பொருந்துவதே என்றார்.

கைராட்டை காந்தி  அறிந்த ஒரு கருவி. மிகக்குறைவான ஆற்றலில் குறைவான சூழலழிவுடன் ஒரு மின்னணுக்கருவி அப்பணியைச் செய்யமுடியும் என்றால் அது காந்தியத்துக்கு ஏன் எதிராக இருக்க வேண்டும்? குமரப்பாவின் ஆசிரமத்தில் கட்டிடங்களாக இருந்தவை பெரிய குடில்களே. எளிமையான வீடுகள் என்று சொல்லும்போது ஏன் அவை களிமண் குடில்களாக இருக்கவேண்டும்? அதிநவீன சிறுவீடுகளாக ஏன் இருக்கக் கூடாது?

அக்கேள்வியை நான் லாரி பேக்கரிடம் கேட்டேன். அவர் புன்னகை செய்தபடி தன்னுடைய காந்திய கிராமத்தில் கிராமத்திலேயே தயாரான தரமான ஒயின் பரிமாறப்படும் சிறிய காற்றோட்டமான அழகிய மதுக்கூடமும் இருக்கும் என்றார். அந்த மதுக்கூடம் கிராமத்திலேயே சுடாமல் உருவாக்கப்பட்ட செங்கற்களாலும் களிமண்ணாலும் மரத்தாலும்  கட்டப்பட்ட ஒரு கலைப்படைப்பாகவே இருக்கும் என்று சொல்லி கண்களைச் சிமிட்டினார்.

காந்திய தரிசனத்தை முழுமையான தீர்வு என்றோ உலகை மாற்றும் கோட்பாடு என்றோ சொல்ல முடியாது. ஆனால் இன்று மானுடம் சந்திக்கும் பல பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அளிக்கும் ஒரு முக்கியமான சாத்தியக்கூறு அது. அதை எப்படி எவ்விதத்தில் முன்னெடுப்பது என்பதை அறிஞர்கள் , சமூகச்செயலாளிகள் தங்கள் தொடர்ந்த முயற்சியின்மூலம்  இனிமேல்தான் கண்டடைய வேண்டியிருக்கிறது.

முந்தைய கட்டுரைபுத்தக விற்பனை கடிதங்கள்
அடுத்த கட்டுரைஉயிர்மை வெளியீட்டு அரங்கு 3