கமலா தாஸ் பற்றி நான் எழுதிய அஞ்சலிக்கட்டுரையையும் அதை ஒட்டி உருவான வந்த எதிர்வினைகளுக்கு அளித்த விரிவான பதில்களையும் இங்கே காணலாம். இவை வெறும் அக்கப்போர்கள் அல்ல. ஓர் எழுத்தாளரின் அந்தரங்கம் எந்த அளவுக்கு விவாதிக்கப்படலாம், அவரே அதை முன்வைக்கும்போது எந்த அளவுக்கு விவாதிக்கலாம் என்னும் தளத்தில் விரியும் விவாதம் அது. கமலாதாஸின் கதைகளுக்கும் அவரது மனநிலைகளுக்கும் உள்ள தொடர்பையும் அவரது கட்டற்ற மனநிலையாலேயே அவர் ஒரு முக்கியமான படைப்பாளியாக ஆனதையும் விரிவாகப்பேசுபவை இக்கட்டுரைகள். இதே அளவுகோலையெ எந்த ஆண் எழுத்தாளரைப்பற்றிப் பேசும்போதும் நான் கொண்டிருக்கிறேன் என்பதை காணலாம்.
அந்த விவாதங்களை பெண்களின் கூட்டறிக்கை எந்த அளவுக்கு திரித்திருக்கிறது என்பதை வாசகர்கள் காணலாம், ஓர் உதாரணத்துக்காக. கமலாதாஸின் உடல் பற்றி ஏன் பேசப்பட்டது என்றால் அவர் அதை முதன்மையாக முன்வைத்து எழுதினார் என்பதனால்தான். அவரது பேசுபொருள் அது என்பதனால்தான். ஜி நாகராஜனைப்பற்றிப் பேசும்போது விபச்சாரம் பற்றி ஏன் பேசப்படுகிறது என்றால் அவர் அதை எழுதினார் என்பதனால்தான்
அதை திரித்து வசைக்காக பயன்படுத்திக்கொள்ளும் சிறுமை! இப்படித்தான் நாம் இலக்கியவிவாதங்களை எதிர்கொள்ளப்போகிறோம் என்றால், இப்படித்தான் இலக்கியம் சார்ந்த கருக்களை விவாதிப்போம் என்றால் இவர்கள் அறிந்த இலக்கியம்தான் என்ன? பரிதாபம் என்பதற்கு அப்பால் என்ன சொல்ல?
இந்தக்குறிப்பிலும் மீண்டும் அவ்வரியைச் சொல்கிறேன். பெண்களில் இந்தச் சில்லறை மனநிலைகளில் இருந்தும் வம்புகளில் இருந்தும் எழுந்து இலக்கியத்தின் அழகியலை, இலக்கியத்தின் கருத்தியலை விவாதிக்கும் நிமிர்வுள்ள குரல்கள் வந்தாக வேண்டும்.