கீதையை ஏன் பயில வேண்டும்? ஒரு மதநூலாக அதைப் பயின்றாக வேண்டிய கட்டாயம் இந்துவுக்கு சற்றும் இல்லை. இந்துமதம் அப்படி எந்தக் கட்டாயத்தையும் விதிக்கவில்லை. வழிபாட்டு நூலாகவும் அது இன்றியமையாதது அல்ல. வேதங்கள், திருமுறைகள், திருவாய்மொழிகள் போன்றவையே அவ்வகையில் முக்கியமானவை.
கீதை ஒரு தத்துவ நூல், ஞான நூல் என்ற இருவகையிலும்தான் அதை வாசிக்க வேண்டிய தேவை எழுகிறது. இந்திய தத்துவமரபை கற்க விரும்புகிறவர்களுக்கு அது தவிர்க்க இயலாத நூலாகும். இந்து மெய்ஞான மரபை அறிய விரும்புகிறவர்களுக்கும் அது இன்றியமையாதது. இந்து மரபு சார்ந்து ஞானத்தேடலில் இருப்பவர்களுக்கு அது முக்கியமான முதல்நூல்.
பண்டைய தத்துவம் எதற்காக?
இந்தத் தளத்தில் அடிக்கடிக் கேட்கப்படும் சில வினாக்கள் உள்ளன. முதல் வினா, பண்டைய தத்துவத்தை ஏன் இன்று பயில வேண்டும் என்பது. இந்தத் தத்துவங்கள் முளைத்த வாழ்க்கைச் சூழல் இன்று இல்லை. இவை எதிர்கொண்டு பேசிய சூழலும் மாறிவிட்டது. இன்று ஏராளமான நவீன அறிவுத்துறைகள் உருவாகியுள்ளன. அறிவியல் பெரும் மலர்ச்சி அடைந்துள்ளது. தத்துவத்தில்கூட பெரும் பாய்ச்சல்கள் நடந்து முடிந்துள்ளது. உலகளாவிய தத்துவ நோக்குகளும் உலகம் தழுவிய தத்துவ விவாதங்களும் இன்று நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் இரண்டாயிரம் வருடத் தொன்மை கொண்ட ஒரு நூலை கூர்ந்து வாசிப்பதற்கான தேவை என்ன?
இந்த வினாவின் அடிப்படை என்பது சிந்தனையை நேற்றைய சிந்தனை, இன்றைய சிந்தனை என்று பிரித்துப் பார்ப்பதாகும். இந்தப் பிரிவினையை எந்தக் கோட்டில் வைத்து நடத்துவது? இன்றைய சிந்தனை என்பதை எந்த அளவுகோலை வைத்து தீர்மானிப்பது? சென்ற வருடம் சென்ற மாதம் சென்ற நிமிடம் நிகழ்ந்த சிந்தனையைக்கூட அப்படி பழையது என்று சொல்லிவிடலாமே? சிந்தனை வரலாற்றை எடுத்து ஆராய்ந்தால் இப்படி சிந்தனையை பிரித்துக்கொள்வது குத்துமதிப்பான ஒரு மன உருவகம் மட்டுமே என்று புரியும். மானுட சிந்தனையை ஒரு முன்னோக்கிய நேர்கோட்டுப் பயணமாக இவர்கள் உருவகித்துக் கொண்டுள்ளார்கள். அதாவது அதை ஒரு ஓடும் கார் ஆக உருவகிக்கிறார்கள். ஒரு நீர் இறைக்கும் இயந்திரமாக ஏன் உருவகிக்கக் கூடாது? அதாவது மனித சிந்தனையை பல முனைகளில் நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒர் இயக்கமாக ஏன் கருதக்கூடாது?
ஏன் என்று பார்ப்போம். முன்னோக்கிய பயணம் என்றால் தொடர்ச்சியாக பழைய விஷயங்கள் எப்போதைக்குமாக நிராகரிக்கப்பட்டபடியே இருக்க வேண்டும். மானுட சிந்தனையின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால் அவ்வாறு ஒரு தொடர் நிராகரிப்பை நாம் பார்க்க முடியாது. அந்த கோணத்தில் மானுட சிந்தனையை ஒரு காட்டுக்குத்தான் ஒப்பிட முடியும். சில காலங்களில் சில பகுதிகள் முழு வேகத்துடன் வளர்ந்து அடர்கின்றன. பிறகு அவை தேங்க இன்னொரு மறைந்திருந்த பகுதி வளர்ச்சி பெறுகிறது. தங்கள் இயக்கத்தில் தங்களுக்கேயான ஒரு இயங்கியலை அவை கொண்டுள்ளன. ஒன்றுடன் ஒன்று மிக நுட்பமாக அவை உரையாடிக் கொள்கின்றன.
ஆகவே மானுட சிந்தனை என்பது ஒர் ஒட்டு மொத்தமான பெரு நிகழ்வாகும். இன்றைய சிந்தனை என்று ஒன்றை எடுத்துக் கொள்ள முடியும் என்றால் இக்கணத்துச் சிந்தனை என்றும் ஒன்றை உருவகித்துக் கொண்டு பிறவற்றை நாம் நிராகரிக்க வேண்டும். அது சாத்தியமல்ல. மனித சிந்தனையின் எந்த ஒரு கூறினையும் அப்படி துண்டுபடுத்தி எடுத்து விட முடியாது. அப்படிக் கூறுபவர்கள் எந்த ஒரு சிந்தனைத் தளத்திலும் ஆழமான அறிமுகம் அற்றவர்களாக இருப்பதைக் காணலாம். பொதுவாக இந்தியாவில் இவ்வாறு இந்திய மரபின் பழைய நூல்களை நிராகரிப்பவர்கள் அவர்கள் நம்பி ஏற்கும், பரபரப்புடன் விதந்தோதும், மேலைச்சிந்தனைகள் நேரடியாகவே கிரேக்க, லத்தீன் தொல்பழங்காலச் சிந்தனைகளுடன் தொடர்பு கொண்டிருப்பதை அறிந்திருக்க மாட்டார்கள். அந்த நவீனச் சிந்தனைகளை அவற்றின் பீடங்களான தொன்மை மரபுகளிலிருந்து பிரிக்க முடியாது என்றும் அறிந்திருக்க மாட்டார்கள்.
ஓர் உதாரணம், இன்றும் தமிழில் இலக்கிய வட்டாரங்களில் அதிநவீனச் சிந்தனைத்தளமாக விவாதிக்கப்படும் ழாக் தெரிதாவின் மொழியியல் கோட்பாடுகள். இவை பின் அமைப்புவாதம் (Post Structuralism) என்று அடையாளப் படுத்தப்படுகின்றன. இவை இன்றைய மோஸ்தரான பின் நவீனத்துவ (Post Modernism) சிந்தனைகளின் அடித்தளமாக அமைபவை. ஆனால் நாம் கூர்ந்து இதன் பின்னணியைப் பார்த்தோமெனில் பெர்டினன்ட் ரஸ்ஸல் மற்றும் விட்ஜென்ஸ்டீனின் மொழிக் கோட்பாடுகளின் நீட்சியாகவும் வளர்ச்சியாகவும் இவற்றைப் புரிந்து கொள்வோம்.
மேலும் பின்னகர்ந்து நிகழ்வியலின் (Phinominology) விவாதங்களுடன் அதற்குள்ள தொடர்பைக் காணலாம். மேலும் பின்னகர்ந்து இதன் தர்க்க அமைப்பு ஸீனோ (Zeno)வின் புதிர்மொழி முறையில் இருந்து எழுவதைக் காண்போம். அதிலிருந்தும் பின்னகர்ந்தால் பழங்கால ஸோ·பிஸ்டுகளிடமும் (Sophists) ஸ்கெப்டிக்குகளிடமும் (Skeptics) சென்று சேர்வோம். அத்துடன் சிந்தனை என்பது ஒன்றிலிருந்து இன்னொன்று பிறப்பது மட்டுமல்ல, ஒன்றுடன் ஒன்று உரையாடுவதன் மூலம் உருவாவது என்ற தெளிவு நமக்கு இருக்குமானால் நாம் தெரிதா கடுமையாக நிராகரிக்கும் தரப்புகளிடமும் அவரது வேர்கள் இருப்பதைக் காண்போம்.
ஆகவே ”நவீன சிந்தனை” ”புதிய சிந்தனை” என்றெல்லாம் ஏதும் இல்லை. இருப்பது ”சிந்தனை” ஒன்றுதான். இதுவரையிலான மானுட சிந்தனையின் வெளியில் சுதந்திரமாக அனைத்துடனும் மோதி அனைத்திலிருந்தும் சாரம் பெற்றுதான் சிந்தனைக்கூறுகள் உருவாகின்றன. இவ்வாறு சிந்தனையை ”சிந்தனைவெளியாக”க் காண்பவர்கள் சிந்தனையின் முக்கியத்துவத்தை மட்டுமே பார்ப்பார்கள், அதன் காலத்தைப் பார்க்க மாட்டார்கள். தெரிதாவை வைத்துக் கொண்டு ஸீனோவை நிராகரிக்கலாம் என்று கூற முற்படமாட்டார்கள்.
பல வருடங்களுக்கு முன் இலக்கியக் கோட்பாட்டாளராகிய டி.எஸ்.எலியட் தன் ”மரபும் தனித்திறனும்” (Tradition and Individual Talent) என்ற பிரபலமான கட்டுரையில் ”கலை வளர்வதில்லை, அதன் மூலப்பொருட்கள்தான் காலம்தோறும் மாறுகின்றன” என்று கூறினார். சட்டென்று ஒர் அதிர்ச்சியை உருவாக்கும் சொற்றொடர் இது. சாதாரணமாக நாம் ”தமிழ் இலக்கிய வளர்ச்சி” எனறெல்லாம் கூறுகிறோம். ஆனால் கலையின் சாரம்சத்தில் ”வளர்ச்சி” என்று உண்டா என்ன? உண்டு என்றால் இன்றைய சாதாரணமான கவிஞன் கூட கம்பனைவிடப் பெரிய கவிஞனாக இருக்க வேண்டும். நியூட்டனுக்குத் தெரிந்ததைவிட அதிக அறிவியல் என்னுடைய பத்தாம் வகுப்பு படிக்கும் மகனுக்குத் தெரியுமே! ஆனால் அப்படி இல்லை. கம்பன் கம்பன்தான். ஆம், கலை வளர்வதில்லை, மாறுகிறது அவ்வளவுதான். அதன் கூறுபொருள், கூறுமுறை இரண்டும் மாறிக்கொண்டே இருக்கின்றன. கலை என்று நாம் கூறும் அடிப்படை இயல்பு என்றும் அப்படியேதான் உள்ளது.
இது தத்துவ சிந்தனைக்கும் பொருந்தும். தத்துவ சிந்தனை உருவாகும் சூழலும் எதிர்கொள்ளும் சூழலும் தொடர்ந்து மாறுகின்றன. தத்துவத்தில் கருவிகள் தொடர்ந்து மாறுகின்றன. பத்தொன்பதாம் நூற்றாண்டு தத்துவ ஞானிகள் பலர் கணித வல்லுநர்களாக இருக்கையில் தொல்பழங்கால தத்துவ ஞானிகள் பலர் கவிஞர்களாக இருந்திருக்கிறார்கள். இன்றைய தத்துவ ஞானிகள் இயற்பியலின் கருத்துக்களை தங்கள் கருவிகளாகப் பயன்படுத்திக் கொள்வதைக் காண்கிறோம். பிளேட்டோ, ரஸ்ஸல், கார்ல் பாப்பர் ஆகிய மூவருக்கும் இடையேயான வேறுபாடு முறையே இதுதான். ஆனால் தத்துவம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்றும் மாறாதவை. தத்துவம் கண்டடையும் பதில்களும் அப்படித்தான். அதாவது எது தத்துவமோ அந்த மையம் காலத்திற்கேற்ப மாறாமலேயே உள்ளது.
ஆகவே ஒரு தத்துவ மாணவனுக்கு பழைய தத்துவம் புதிய தத்துவம் என்ற பேதம் இல்லை. அனைத்துமே அவனுக்கு ஒரு பரந்த கருத்து வெளியில் உள்ள உயிருள்ள தரப்புகள் மட்டுமே. அனைத்துடனும் விவாதித்தபடியே அவன் தன் தேடலை முன்னெடுத்துச் செல்வான். அத்துடன் சமகாலத்தில் உள்ள எந்தக் கருத்துக்கும் பழங்காலம் முதல் தொடர்ந்து வரும் ஒரு விவாதத் தொடர்ச்சி இருக்கும் என்பதை அவன் அறிந்திருப்பான். உதாரணமாக மீண்டும் தெரிதாவுக்குச் செல்லலாம். எளிமையாகக் கூறப்போனால் தெரிதா கூறும் மையக் கருத்து இதுதான். மொழியின் செயல்பாட்டில் வார்த்தைகளுக்கும் அவற்றின் அர்த்தங்களுக்கும் இடையே நிரந்தர உறவு இல்லை. அதாவது இன்ன வார்த்தைக்கு இன்ன பொருள் என்று வகுத்துள்ள ஒரு நிரந்தர அமைப்பே கிடையாது. அது தருணம் சார்ந்ததும் தற்செயலானதுமாகும். [Arbitrary] வார்த்தைகளுக்கு அவை பயன்படுத்தப்படும் பண்பாட்டுச் சூழலும் தருணமும் தொடர்ந்து அர்த்தம் தந்தபடியே உள்ளன. ”வார்த்தை மீது அர்த்தம் வழுக்கிச் செல்கிறது.” என்பது பல்லாயிரம் முறை மேற்கோள் காட்டப்பட்ட தெரிதாவின் கோட்பாடாகும். வார்த்தைக்கு அர்த்தம் தருவது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கும் பண்பாடும் வாழ்வின் புழக்கமும்தான்.
ஏறத்தாழ இதே சிந்தனையை நாம் மீமாம்சகர்களிடம் காணலாம். இந்திய சிந்தனை மரபில் உள்ள ஆறு தரிசனங்களில் ஒன்றான பூர்வ மீமாம்சை மொழியின் பயன்பாட்டை மிக விரிவாக ஆராய்வதாகும். சொல்லுக்கும் பொருளுக்குமான உறவு நிரந்தரமானதல்ல என்றும் சூழல் மூலம் சொல்மீது பொருள் ஏற்றப்படுகிறது என்று கூறும் மீமாம்சகர் ”பொருளேற்றம்” என்பது குறித்தே விரிவாக யோசித்திருக்கிறார்கள். மீமாம்சைக்கும் நவீன மொழியியல் கோட்பாடுகளுக்கும் இடையே உள்ள பொதுவான கூறுகளைப் பற்றி இன்றைய மொழியியல் கோட்பாடுகளின் முதல் தொடக்கம், பிரான்ஸில் நிகழ்ந்த காலகட்டத்தில் சார்போன் பல்கலையில் ஹென்றி பெர்கஸனிடம் மாணவராக இருந்த நடராஜகுரு கவனித்திருக்கிறார். மீமாம்சையைப்பற்றி பிரஞ்சு தத்துவ அறிஞர் லாக்கோம்ப் கடுமையாக விமரிசிக்கும்போது நடராஜ குரு மீமாம்சகர்களின் சாதனை மொழியின் அடிப்படைகளை உருவகித்ததில் உள்ளது என்றுகூறி மாக்ஸ்முல்லரின் கீழ்க்கண்ட உதாரணத்தை எடுத்துக் கொடுக்கிறார்.
”மொழி என்பது சிந்தனைகளின் ஒரே நிகழ்வுவடிவம் என அவர்கள் [மீமாம்சகர்] அறிந்திருந்தனர். சொற்கள் இல்லாமல் மானுடர் பிறரது சிந்தனைகளை அறிய முடியாது, தன்னுடைய சிந்தனைகளையே நிகழ்த்திக்கொள்ள இயலாது. சிந்தனை வழியாக என்ன கூறப்பட்டிருக்கிறது என்று ஆராய்ந்து உணர்வதற்கு முன்னரே ஒரு மாணவன் அச்சொற்களை அறியவேண்டியிருக்கிறது…. அவர்கள் இன்றைய நவீன தத்துவ சிந்தனையாலர்கள் கூட உணராத ஒன்றை அறிந்திருந்தனர். அதாவது வெளிபாட்டுநிலை [Vorstellung] கருத்துநிலை [Begriff] ஆகிய இரண்டுக்கும் நடுவே அடிப்படையான வேறுபாடு உள்ளது. உண்மையான சிந்தனையில் அவை பிரிக்கப்பட இயலாதவை” நடராஜ குரு இச்சிந்தனைகளுக்கு இன்றைய நவீன மொழியியலுடன் உள்ள உறவை எடுத்துக்காட்டுகிறார். நவீன மொழியியல் கோட்பாடுகள் இந்தியவியல் ஆழ்ந்து பயிலபப்ட்ட அதே ஜெர்மானிய பல்கலைக் கழகங்களில் உதித்தன என்பதையும் சுட்டிக்காட்டவேண்டும்.
எது தரிசனங்களிலும் உபநிடதங்களிலும் உள்ளதோ அது மகாபாரத்ததிலும் இருக்கும் என்ற அடிப்படையில் தேடியபோது மகாபாரதம் சாந்தி பர்வத்தில் தருமரின் முடிசூட்டுக்குப் பின்னர் வரும் தர்ம உபதேசங்களில் பீஷ்மர் சொல்வதாக சுவேதகேது என்னும் முனிவரின் கதையைக் கண்டுகொண்டேன். மகாபாரத்தில் உள்ள இப்பகுதி தெளிவாகவே இடைச்செருகல்தான். பல்வேறு நீதிநூல்களை பீஷ்மரின் வாயிலிருந்து தருமன் கேட்டதாக சொல்லப்படுகிறது இதில். [இந்நூல்களை சிறு உபநிடதங்கள் என்றோ நீதி நூல்கள் என்றோ சொல்லலாம்.] சுவேதகேது சாந்தோக்ய உபநிடதத்தில் வரும் கதாபாத்திரம். தத்வமசி என்ற மகாவாக்யம் இவருக்குத்தான் சொல்லபப்ட்டது. ஆனால் இந்தக்கதையில் சுவேதகேது வேறு ஒருவர்போல தெரிகிறார். அவரிடம் அவரது மனைவி உரையாடுவதுபோல உள்ளது இந்தச் சிறிய உபநிடதம்.
”எழுத்துக்களை மாறுபாடுகளுடன் உச்சரிப்பதனால் வருவதே சப்தம் என்று அழைக்கப்படுகிறது. சப்தத்தால் எது குறிக்கப்படுகிறதோ அதுவே அர்த்தம் என்று சொல்லப்படுகிறது” என்று ஸ்வேதகேது சொல்கிறார். சப்தத்துக்கும் அர்த்தத்துக்கும் உள்ள உறவென்ன என்று மனைவி கேட்கிறாள். சுவேதகேது சொல்கிறார் ”சப்தத்துக்கும் அர்த்தத்துக்கும் நிலையான உறவு ஏதும் இல்லை. தாமரை இலையில் நீர் இருப்பதுபோல சப்தம் மீது அர்த்தம் இருக்கிறது” இவ்வரியை தெரிதாவின் வரியுடன் வாசகர்கள் ஒப்பிட்டுக்கொள்ளலாம். தொடர்ந்து மொழியைப்பற்றிய மீமாம்ச தரிசனம் விரிவாகவே பேசப்படுகிறது.
இன்னொரு வகையிலும் பண்டைய சிந்தனைகளின் முக்கியத்துவம், இன்றியமையாமை குறித்து நாம் யோசிக்கலாம். நாம் சதுரங்கம் விளையாடும்போது அந்த விளையாட்டுக்கான முன்னமைப்பு ஒன்றைப் பொதுவாக ஏற்றுக்கொள்கிறோம். கறுப்பு வெள்ளைக் கட்டங்கள், ராஜா, ராணி, குதிரை, மந்திரி, சிப்பாய் போன்ற காய்கள் என சதுரங்கத்திற்குத் தேவையாக உள்ள அம்சங்கள் பல உண்டு. இவை எல்லாமே பொதுவாக ஏற்கப்பட்ட அடையாளங்கள் அல்லது குறியீடுகள். அத்துடன் ஆட்டம் நிகழ்வதற்கான விதிமுறைகள், வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும் முறைகள் போன்றவையும் உள்ளன. இதே போன்று மானுடசிந்தனை என்னும் பிரம்மாண்டான ஆட்டம் பற்றியும் யோசிக்கலாம். இதற்குத் தேவையான இரு அடிப்படைகள் குறியீடுகளும் விதிமுறைகளும் ஆகும். இவை இல்லாமல் வெறும் கையால் நாம் முழம்போட முடியாது.
உதாரணம் அணு. இன்று ‘அணு இயற்பியல்’ என்ற தனி அறிவியல் துறையே உள்ளது. அணு என்பது ஒரு மானுட உருவகம் மட்டுமே. இயற்கையின் ஒரு நிகழ்வை அல்லது இயங்கு விதியை அணு என்று நாம் உருவகித்துக் கொள்கிறோம். அணு என்ற உருவகத்தை புராதன கிரேக்க மரபிலும் காண்கிறோம். புராதன இந்திய ஞான மரபில் வைசேஷிகத்திலும் காண்கிறோம். குவாண்டம் என்பதும் ஒளிவேகம் என்பதும் பரிமாணம் என்பதும் எல்லாம் சிந்திக்கும் வசதிக்காக உருவகிக்கப்பட்டவை – சிந்தனைக்கான கருவிகள்- மட்டுமே.
இன்று நாம் சிந்திப்பதற்குப் பயன்படுத்தும் உருவகங்களும் சிந்தனையின் இயங்கு விதிகளும் மானுடசிந்தனை எப்போது தொடங்கியதோ அப்போது முதலே உருவாகி வரத் தொடங்கியவை. இவை இல்லாமல் சிந்திப்பது மொழி இல்லாமல் பேச முற்படுவது போன்றதாகும். ஒவ்வொரு கணமும் சிந்தனைகள் இந்த மாபெரும் குறியீட்டமைப்பை மாற்றியமைக்கின்றன, இயங்கு விதிகளில் புதியவற்றைச் சேர்க்கின்றன. ஆயினும் சிந்தனை என்பது இந்த மாபெரும் வெளிக்குள்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு இலக்கியப் படைப்பும் மொழியில் ”புதிதாக” ஒன்றை நிகழ்த்துகிறது – ஆயினும் அது மொழிக்குள்தான் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அது போலவே இதுவும்.
ஆகவே இன்றைய சிந்தனை என்பது நேற்றைய சிந்தனை மீது நிகழும் ஒரு மாற்றமே. இன்றைய என் உடல் நேற்றைய என் உடல் வளர்ந்தும் சிதைந்தும் உருவானதே. உடல் என்பதே இவ்வாறு தொடர்ந்து நடைபெறும் ஒன்றுதான். என் குழந்தையுடல் காலவதியாக விட்டது, ஆகவே இன்றைய உடலே எனக்குப் போதும் என்று கூறமுடியுமா என்ன? சிந்தனையை அதன் முழுமையுடன் மட்டுமே ஒருவரால் அணுக முடியும்.
ஆகவே சிந்தனையுலகில் நுழையும் தேடலுள்ள ஒருவருக்கு அவருடைய தேடலுடன் உரையாடும் நூல் எது என்பது மட்டுமே வினாவாக இருக்க இயலும். எந்த நூல் தேவை எது தேவையில்லை என்பதை அவரது தேடல் மட்டுமே தீர்மானிக்கவும் வேண்டும்.
தத்துவம் எதற்காக?
இரண்டாவது வினா முதல்வினாவின் விரிவாக்கம். தத்துவம் எதற்காக? தத்துவக் கல்வி ஒருவனுக்கு தருவது என்ன?
நீண்ட நெடுங்காலமாகவே இந்த வினா இருந்திருக்க வேண்டும். ஏனெனில் தத்துவக் கல்வியின் தேவை குறித்து பெரும்பாலான தத்துவ நூல்களே எடுத்துப் பேசுகின்றன. பிளேட்டோ தத்துவக் கல்வி சமநிலை நோக்கினை அளிக்கும் என்கிறார். பிரம்ம சூத்திரம் போன்ற நூல்களில் அந்நூல்களின் தத்துவ நோக்கு அளிக்கும் பயன் பற்றி கூறப்பட்டுள்ளது. கீதையும் அதைப் பற்றிப் பேசுகிறது. தன்னுடைய புகழ்பெற்ற மேலைத்தத்துவ அறிமுக நூலின் தொடக்கத்தில் ”தத்துவக் கல்வி எதற்காக?” என்ற தலைப்பில் வில் துரன்ட் எழுதியுள்ள குறுங்கட்டுரை மிகத் தெளிவான ஆத்மார்த்தமான பதிலாகும்.
என் நோக்கில் கீதையோ அல்லது வேறு எந்த நூலோ எவருக்கும் ஞானத்தையும் விடுதலையையும் சமநிலையையும் அளிப்பதில்லை. இவற்றை அடைய நூல்களைக் கற்க வேண்டும் என்ற தேவையும் இல்லை. ஞானமும் விடுதலையும் சமநிலையும் ஒருவர் தனக்குத்தானே தேடிக் கொள்ளும் அக இயல்புகள். தன் ஆளுமையாக ஒருவர் ஈட்டிக் கொள்ளும் செல்வங்கள் அவை. எவருடைய சிந்தனையும் நமக்கு உதவுவதில்லை, நமது சொந்த சிந்தனைகளே நமக்கு உதவும். வாழ்நாளெல்லாம் மாபெரும் நூல்களைக் கற்று ஆராய்ந்து விவாதித்து வாழும் பலர் வெற்றுப் பண்டிதர்களாக, வீங்கிய அகந்தை மட்டுமே கொண்ட அசடர்களாக, இருப்பதை நான் தொடர்ந்து கண்டு வருகிறேன். எதையுமே கற்காத எளிய விவசாயிகள், அன்னையர் கனிவும் நிறைவும் கொண்ட முழு மனிதர்களாகத் திகழ்வதையும் காண்கிறேன்.
புத்தகம் மனிதர்களை விடுவிக்குமெனில் பைபிளை வாழ்நாள் முழுக்க வாசிக்கும் கிறிஸ்தவர்கள் அனைவரும் அதன் சாரமான அன்பையும் அறத்தையும் அடைந்தவர்களாக இருக்க வேண்டும். ஆனால் அப்படி அல்ல என்பதையும் பலசமயம் அவர்கள் கண்மூடித்தனமான நம்பிக்கையும் குறுகிய மதவெறியும் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை§யே நாம் காண்கிறோம். எல்லா மதநூல்களுக்கும் இது பொருந்தும்.
நம் வாழ்வில் இருந்து நாம் எதைப் பெற்றுக் கொள்கிறோம் என்பதே நம்மை உருவாக்குகிறது. நூல்களில் இருந்தும் வாழ்வில் இருந்தும் நாம் பெற்று நம் வாழ்வில் பயின்று நம் இயல்பில் கலந்து நாமாகவே ஆகிவிடும் விஷயங்களே நம்மை உருவாக்குகின்றன. அத்தகைய உருவாக்கம் நமது தொடர்ந்த தேடல் மூலமே நிகழ்கிறது. என்னுடைய தேடல் என்னை மானுட சேவை நோக்கி இட்டு செல்கிறது, என் கேள்விகளுக்கு அதுவே பதில் தருகிறது என்றால் எந்த ஞான குருவும் என்னிடம் ”போய் தத்துவம் பயில்க” என்று கூறமாட்டார். என் வழி அறிவார்ந்த தேடல் என்றால், அறிவுத்தள விடைகளே என்னை நிறைவு செய்யுமென்றால், நான் இயல்பாகவே நூல்களை நோக்கி வருவேன். அப்போது தத்துவம் எனக்குத் தேவையாகிறது. அப்படி தேடிவரும் தத்துவ மாணவனுக்கு உரியது கீதை.
யாருக்கு உரியது தத்துவம்? ‘எந்த விஷயத்திலும் நடைமுறை சார்ந்தும் செயல்தளம் சார்ந்தும் அளிக்கப்படும் பதில்களால் திருப்தியடைய மாட்டேன், எனக்கு சாராம்சமான பதில்தான் தேவை’ என்று எண்ணும் தேடல் கொண்டவனுக்கு உரியது தத்துவம். அது எந்தத் துறையாக இருப்பினும் சரி. இந்த ஒவியம் அழகானது என்றும் இது அழகற்றது என்றும் பகுக்கும் ஓர் ஓவியன் ”அழகு என்றால் என்ன?” என்று கேட்டுக் கொண்டால் தத்துவத்திற்குள் வருகிறான். இது மேலான இலக்கியம், இது கீழான இலக்கியம் என்று வாசித்து முடிவு செய்யும் இலக்கியவாதி கருத்துலகில் மேல்-கீழ் எப்படி உருவாகிறது என்று யோசித்தால் தத்துவத்திற்குள் வந்து விடுகிறான்.
தத்துவ சிந்தனை நம்மை மையங்கள் சார்ந்து சிந்திக்க வைக்கிறது. நடைமுறை வாழ்க்கையில் பல்கிப் பெருகும் வகைபேதங்களுக்குள் இயங்கும் அடிப்படைச் சக்திகளை கண்டடைய வைக்கிறது. அதன்மூலமே ஒட்டு மொத்தப் பார்வை உருவாகிறது. சமஸ்கிருதத்தில் இதை தரிசனம் என்பார்கள். நான், நீ, அவள், இவன் என்று பார்ப்பது நடைமுறைப் பார்வை. நாம் என்றும் மானுடம் என்றும் பார்ப்பது தரிசனம். அது தத்துவம் மூலமே அடையப் பெறுகிறது ”வசுதைவ குடும்பகம்” (உலகமே ஒரு குடும்பம்!) என்ற தரிசனம் அப்படி ஒர் உச்ச நிலை தத்துவம் மூலம் சென்று சேர்ந்த மனம் அடைந்த தரிசனமாகும்.
கவிதையானாலும் கதையானாலும் ஓவியமானாலும் ஏன் கட்டடக் கலையே ஆனாலும் இத்தகைய ஒரு தரிசனம் நிகழும் போதே மானுட வெளிப்பாடு உச்சம் கொள்கிறது. மகத்தானது என்று கொள்ளப்படுகிறது. இன்று நாம் நம் வாழ்வை கட்டியெழுப்பியுள்ள அடிப்படைச் சிந்தனைகள் அனைத்துமே தத்துவ சிந்தனை மூலம் அடையப்பட்ட தரிசனங்களில் இருந்து முளைத்தவைதான். கபிலர் முதல் கார்ல் மார்க்ஸ் வரை உதாரணம் கூறலாம்.
தத்துவம் மனிதனை மேலே தூக்குகிறது. தான் வாழும் கால, இட, வரலாற்றுச் சூழலைத் தானே ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் உயரத்தை அப்போது அவன் அடைகிறான். ஆகவே எந்த ஒரு தளம் சார்ந்தும் நுண்மைக்கும் பொதுமைக்கும் தத்துவம் மூலமே சென்றடைய இயலும். தத்துவார்த்தமாக ஆகாத சிந்தனை என்பது நடைமுறைச் சிந்தனையாக, தொழில்நுட்பச் சிந்தனையாக மட்டுமே நின்றுவிட நேரும்.
வடவர் நூலா?
மூன்றாவது வினா தமிழ்ச் சூழலில் மட்டும் தொடர்ந்து எழுவதாகும். கீதை ”வடவரின்” நூல் அல்லவா? தமிழனுக்கு மெய்யியல் இல்லையா? ஏன் நாம் தமிழ் மெய்யியல் நூல்களை மட்டும் கற்று ஞானத்தை அடைய இயலாது? ”தமிழில் இல்லாதது இல்லை” என்றுதானே நம் முன்னோர் கூறியிருக்கிறார்கள்?
இது முழுக்க முழுக்க அரசியல் கூற்று. அறிவார்ந்த தேடலுக்கும் இதற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை. அறிவார்ந்த தேடல் உடையவர்களுக்கு மானுட சிந்தனை என்பது ஒன்றுதான். அதில் கால இட பேதங்கள் இல்லை. மானுட சிந்தனை எல்லாமே அவனுடையதுதான். அவனுடைய ஏற்பும் நிராகரிப்பும் அவனுடைய சொந்தத் தேடலின் அடிப்படையிலேயே அமையும். மத, இன, மொழி, தேசிய அடிப்படையில் அமையாது.
என்னைப் பொருத்தவரை எவ்விதமான பாகுபாடும் இல்லாமல் ஞான நூல்களை அணுகியுள்ளேன். என் இதுநாள் வரையிலான எழுத்துக்களை வைத்துப் பார்ப்பவர்கள் கீதை அளவுக்கே பைபிளும், குறளும், தம்மபதமும் எனக்கு முக்கியமானவை என்பதைக் கண்டிருக்க இயலும். என்னுடைய சொந்த சிந்தனை மண்டலத்தில் இவற்றுக்கு இடையே வேறுபாட்டைக்கூட நான் பல சமயம் உணர்வதில்லை. ஒரே நூலின் பகுதிகளாகவே இவற்றை என் அகம் உருவகம் செய்து கொள்கிறது.
தமிழ் என்றல்ல, சமஸ்கிருதமோ அரபியோ அராமிக்கோ பாலியோ எந்த மொழியிலும் ”எல்லாம்” இல்லை. உலகின் எந்த சிந்தனையையும் அதன் பிறப்பிடத்திற்குள் நிறுத்தி யோசிக்க முடியாது. நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சிந்தனைகள் ஒவ்வொரு கணமும் உலகம் முழுக்கப் பரவிக் கொண்டுதான் இருக்கின்றன. மானுட சிந்தனை என்பதே உலகளாவிய, முடிவுறாத, மாபெரும் உரையாடல்தான். திருக்குறள் ஆசிவக, சமண சிந்தனைகளின் விளைவாக உருவான ஆக்கம். ஆசிவகமும் சமணமும் ‘வடவர்’ சிந்தனைகள் அல்லவா?
கீதையை ஒட்டி உருவான பிற்கால வேதாந்தங்கள் மூன்றுமே தென்னாட்டில் உருவானவையே. அவற்றை வடவர்களுக்கு விட்டுக்கொடுக்க மாட்டோமா என்ன? உலகம் முழுக்க இருந்த சிந்தனைகள் நமக்கு வந்துள்ளன. நமது சிந்தனைகள் உலகம் முழுக்கச் சென்றுள்ளன. நமது சிந்தனையின் தடங்களை பிற பகுதிகளில் கண்டால் புளகாங்கிதம் அடைகிறோம். பிற சிந்தனைகள் ஏதும் நம்மில் இல்லை என்றும் வாதிடுகிறோம். சிந்தனைத்துறையின் குறுகிய போக்கு என்பது இதுதான். மனிதர்கள் மண்ணை நாடுகளாகவும் கண்டங்களாகவும் பிரித்து வைத்துள்ளனர். அதைப்பற்றி சற்றும் கவலைப்படாமல் விண்ணில் பறக்கின்றன வலசைப் பறவைகள்.
கீதையை வாழ்வின் அடிப்படைகளைப் பற்றிய தேடல் கொண்ட ஒருவர், அவற்றை தத்துவார்த்தமாகத் தெளிவுபடுத்திக் கொள்ள விழையும்போது படித்தாக வேண்டும். அவரது தேடல்களை அது அடுத்த தளத்திற்குக் கொண்டு செல்லும். அவர் தனக்குரிய சிந்தனையையும் தன் வாழ்க்கை தரிசனத்தையும் உருவாக்கிக் கொள்ள அது உதவும். அப்படி உதவக்கூடிய மிகச் சில முக்கிய நூல்களில் ஒன்று கீதை.