காந்தியின் கிராமசுயராஜ்யம் – 1

எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,

இது நான் தங்களுக்கு எழுதும் முதல் கடிதம்.என் வாழ்வின் முழு முதற் கடிதம் என்றே சொல்லலாம்,(விடுமுறை விண்ணப்பங்களையும், தேர்வுகளுக்கு எழுதியதும் தவிர்த்து). சமிபகாலமாக தங்கள் வலை பக்கத்தை வாசிக்கிறேன். மிக்க நன்றி. இந்திய பண்பாடு மற்றும் வேர்களை அறிய ஒரு துண்டுகோலாக இருக்கிறது உங்களது எழுத்து. முடிந்த வரை நடுநிலையோடு பதிவு செய்வதாகவே தோனுகிறது. நன்கு சிந்திக்க தூண்டுகிறது. மேலும் வாசிக்க தூண்டுகிறது.

காந்தி பற்றியே நான் பேச விரும்பிகிறேன். காந்தி பற்றிய பெரிய தாக்கம் எதுவும் எனக்கு இருந்ததில்லை. ஒரு பெரிய மரியாதையை இருந்தது. அவருடைய போராட்ட முறை மேல் எனக்கு மதிப்பு இருந்தது. இன்னும், அது வெள்ளையர்களுடன் மட்டும் செல்லுபடி யாகும் அல்லது காந்தியாரால்  மட்டுமே நிகழ்த்த இயலும். ஆகவே, அது காலவதியாகி விட்டதாகவே ஒரு எண்ணமுண்டு.

உங்களது காந்தி பற்றிய பதிவுகள், என்னுள் ஒரு ஆவலை, தாக்கத்தை ஏற்படுத்தியது. காந்தி பற்றி வாசிக்க ஆரம்பித்தேன். அவருடைய சுய சரிதைஇலிருந்து ஆரம்பித்தேன். மெதுவாக என்னை பாதித்து, ஒரு ஆதர்ச நாயகனகவே மாறிவிட்டார். இதுவரை காந்தி ஜெயந்தி ஒரு விடுமுறையாக இருந்த எனக்கு, (இன்று இல்லை, நான் இந்திய மண்ணில் இல்லை) ஒரு வித்தியாசமான, அக மலர ஒரு சக மனிதனை எண்ணி பூரிக்கும் நாளாக உள்ளது. நன்றி, திசை காட்டியமைக்கு. நீங்கள் ஒவ்வொரு தர்க்க மில்லாதரீதியான  கடிதத்துக்கும் பதில் அளிப்பது, என்னை போன்றர்வளுக்கே…

எனக்கும் சில சந்தேகங்கள் உண்டு. கிராம சுய ராஜ்யம். நான் இன்னும் இதை பற்றி விரிவாக வாசிக்க வில்லை. என்னுடைய அனுமானங்களின் பேரில் சில கேள்விகள்,

இதை இரண்டு வகையாகவே நான் பார்க்கிறேன்,

1. கிராம நிர்வாகம், அரசியல் கட்டமைப்பு.
2. தொழில், வணிகம்.

கிராம நிர்வாகம் : இது மிக அவசியம் என்றே நானும் கருதுகிறேன். கிராம நிர்வாக பணியாளர்கள், அந்த கிராம மக்களுக்கு பதில் சொல்ல தேவை இருந்தால் மட்டுமே, அது சிறப்பாக இருக்கும். இன்றும் அவர்களுடைய அலட்சியபோக்கு மற்றும் பிற எல்லா தவறுகளுக்கும் காரணம் அதுவே.  ஒரு பள்ளி ஆசிரியரோ, மின்சார அலுவல உழியரோ, அவர்கள் வேலை செய்யும் பகுதி மக்களுக்கு பதில் சொல்ல தேவை இல்லை. எனவே தான், மின் பொறியாளர் வீடு இருக்கும் இடத்தில் மின்சாரம் எப்போதும் இருப்பதும், ஆசிரியர்கள் மிக நன்றாக பாடம் எடுப்பது, inspection நேரங்களிலும் நடக்கிறது.

காந்தியார் இதை நன்கு கண்டிருந்தார். ஆனால், இவ்வாறு கிராம நிர்வாகம் மக்களிடம் இருந்தால், சாதியம் நம் சமுதாயத்தை இன்னும் அழித்துருக்கும் இல்லையா? ஒரு சாதி மற்றொரு சாதியை dominate செய்து, சாதி கொடுமைகள் மேலும் தொடரவே வாய்ப்பு உள்ளது. இன்றும் இவை நீக்க மற உள்ளது, (வெளிநாடுகளிலும்). இது ஒரு பெரிய நோயாகி எல்லாவற்றையும், பாதிக்குமே,  காந்தியார் இதை எதிர்கொள்ள ஏதேனும் சொல்லி இருக்கிறாரா?

தொழில், வணிகம்: கிராம தன்னிறைவு, அந்த இடத்தில கிடைப்பதை வைத்து, தொழில், வணிகம்  என்பது, இன்றை சுழலில் பார்த்தால், வாய்ப்பே இல்லை.

அன்றைய சுழலிலும்,  ஒரு கிராமம்,  புவி மற்றும் இதர காரணிகளால், இது சாத்தியமா? ஒரு வறண்ட பூமி, விளைச்சள்ளுக்காக, வேறு நில பகுதியை சார்ந்துருக்கும்,  இன்னும் விரிவாக இதை சொல்ல இயலும், உங்களுக்கு என்னுடைய கேள்வி புரியும் என நினைக்கிறன். மேலும், ஒரு சமுகம் அதன் புவீயல் காரணிகளால் மேம்படைய, கீழ் செல்ல வாய்ப்பு உள்ளது. இது சமுக சம நிலையை பாதிக்கும் என்றே தோனுகிறது?

நடைமுறையில் காந்தி இதை எப்படி யோசித்தார்?  இன்னும் இதை பற்றிய அறிய ஆவலாய்  உள்ளது, தொடர் வாசிப்புக்கு வேறு புத்தகங்கள் இருந்தால் கூறவும்.

எந்த ஒரு பொருளியல் எதிர்பார்ப்பு இல்லாமல் நீங்கள் செய்யும் இந்த பணி தொடர வாழ்த்துக்கள்,

என்னுடைய காந்தி ஜெயந்தி நாள் கொண்டாட்டமாக, அவரை பற்றி மேலும் தெரிந்து கொள்ள ஒரு முயற்சியாக கருதுகிறேன். தங்களுக்கும் காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்.

அன்புடன்,
ர.மணி

பின் குறிப்பு: முதல் தமிழ் கடிதம், எழுத்து, கருத்து தவறுகளை பொறுத்துகொள்ளவும். கிராம சுய ராஜ்யம் ரீதியாக என்னுள் இன்னும் பல கேள்விகள் உள்ளது, ஆனால்,ஆனால், அதை பற்றி வாசித்து தெரிந்து கொள்ளாமல் கேட்டு தங்கள் நேரத்தை வீணடிக்க விருப்பம் இல்லை.


அன்புள்ள வினாயக சுப்ரமணி அவர்களுக்கு,

சாதாரணமாக நம்மில் பெரும்பாலானவர்கள் காந்தியின் கிராமசுயராஜ்யத்தைப்பற்றிக் கேள்விப்படும்போது ‘என்ன, முட்டாள்தனமால்ல இருக்கு?’ என்றுதான் எண்ணிக்கொள்வோம். கிராம சுயராஜ்யத்தின் சாத்தியங்களைப்பற்றி பேசுவதற்கு முன்பாக இந்த மனநிலை ஏன் உருவாகிறது என்றே நாம் யோசிக்க வேண்டும். அந்த மனநிலைதான் கிராம சுயராஜ்யத்திற்கு முக்கியமான எதிர்சக்தி.

நாம் இப்போது உலகமெங்கும் உருவாக்கி வைத்துள்ள அமைப்புதான் சாத்தியமான மிகச்சிறந்த அமைப்பு என்றும் இதில் பல பிரச்சினைகள் இருந்தாலும் பெரும்பாலும் எல்லாம் சரியாக இருக்கின்றன என்றும் நம்பிக்கொண்டிருக்கிறோம். இந்த அமைப்பைச் சார்ந்த கல்வியே நமக்கு வழங்கப்படுகிறது. இந்த அமைப்பின் நிறுவனங்களில் நாம் வேலைசெய்கிறோம். இந்த அமைப்பை நம்பியே நம் குழந்தைகளை வளர்க்கிறோம். ஆகவே என்பது நமக்கு கையில் இருக்கும் அனைத்தையும் கைவிட்டுவிட்டு முற்றிலும் புதிய ஓர் இடத்துக்குச் செல்வது என்றே பொருள்படுகிறது. அது நமக்கு அதிர்ச்சியை அளிக்கிறது.

உண்மையில் நாம் இன்று உருவாக்கி வைத்திருக்கும் இந்த அமைப்பு எப்படிப்பட்டது? சமீபத்தில் நடந்த சில சொந்த அவதானிப்புகளைச் சொல்கிறேன். மூத்த வழக்கறிஞர் ஒருவருடன் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தேன். இந்திய மத்திய உளவுத்துறையின் உயரதிகாரி ஒருவரும் அருகே இருந்தார். சமீபத்தில் நிலஊழல் புகார் சொல்லப்பட்ட ஒரு நீதிபதியைப்பற்றி கேட்டேன் ”அவரு எப்டி உண்மையிலேயே ஊழல்செய்றவர் தானா?”

வழக்கறிஞர் சொன்னார் ”ஊழல் செய்யாத நீதிபதீன்னு உயர்நீதிமன்ற சரித்திரத்திலேயே ஒண்ணுரெண்டுபேரைத்தான் சொல்ல முடியும். சிலர் பொதுவா சின்ன விஷயங்களிலே நீதியோட இருப்பங்க. பெரும்பாலும் எல்லாருக்குமே ஊழல் செய்றதிலே ஒரு நீக்கு போக்கு இருக்கும். ரொம்பவும் அநீதியா போயி ஒண்ணைச் செஞ்சிர மாட்டாங்க. அப்றம் மாட்டிகிடற மாதிரி ஆயிடும், பேரு கெட்டுபோயிடும்னு பயப்படுவாங்க. ஆனா நடைமுறையிலே எனக்குத்தெரிஞ்சு எல்லா நீதிபதிகளும் பணம் வாங்கிட்டுதான் தீர்ப்பு சொல்றாங்க….”

மறைந்த நண்பர் சோதிப்பிரகாசம் ஒருகட்டத்தில் நீதிமன்றம் செல்வதையே தவிர்த்துவிட்டிருந்தார். பிற வழக்கறிஞர்களுக்கு வழக்குக்கான வாதங்களை எழுதிக்கொடுப்பதுடன் சரி. அவர் உயர்நீதிமன்ற விவவாகரங்களைப்பற்றி நிறையவே சொல்லியிருக்கிறார். ஆனாலும் முப்பது வருடம் வழக்கறிஞராகப் பணியாற்றிய ஒருவர் அதைச் சொன்னபோது அதிர்ச்சியாக இருந்தது. ”அப்ப நீதிமன்றத்திலே நடக்கிற விவாதங்களுக்கு ஒண்ணும் அர்த்தம் இல்லியா?”

”இல்லேன்னு சொல்லிட முடியாது. அதை ஒட்டித்தானே தீர்ப்பு எழுதணும். வழக்கு ரொம்ப வலுவா இருந்தா அதுக்கேத்தமாதிரிதானே மேற்கொண்டு பேச்சு நடக்கும். அதுக்கெல்லாம் கோர்ட்ல விவாதம் பண்ணித்தானே ஆகணும்?” என்றார்.. நான் ”ரெண்டுபேருமே பணம் கொடுக்க வந்தா?” என்றேன். ”ரெண்டையும் வாங்கிட்டு சமரசமா தீர்ப்பு சொல்வாங்க” பெரும்பாலும் எல்லா தீர்ப்புகளும் கொடுக்கப்படும் பணத்தின் அடிப்படையில் நடக்கும் சமரங்கள்தான்.

”சரி ஒரு ஏழை நீதி கேட்டு வந்தா என்ன ஆகும்?” வழக்கறிஞர் கொஞ்சநேரம் யோசித்துவிட்டு ”அதுக்கு ஒண்ணுமே செய்ய முடியாது. இதுவரை நான் சிவில் கேஸ்களிலே வெறும் நீதி மட்டுமே ஜெயிச்சதுன்னு கேள்விப்பட்டதே கெடையாது” என்றார்.

சோதிப்பிரகாசம் ஒருமுறை ஜெயலலிதா வழக்கு குறித்து பேசும்போது புன்னகை செய்தபடி ”இதுவரை இந்தியாவிலே பணக்காரங்க யாராவது ஏதாவது வழக்கிலே கடைசியா தண்டிக்கப்பட்டதா கேள்விப்பட்டிருக்கீங்களா?” என்றார். ”அபூர்வமா அப்டி நடக்கும். அங்க இவனைவிட பெரிய பணக்காரன் பாதிக்கப்பட்டிருப்பான். இந்தியாவிலே நடந்த மிகப்பெரிய அரசியல் படுகொலைகளிலே கூட உண்மையான கொலைக்காரங்க தண்டிக்கப்பட்டதே கெடையாது” என்றார் அவர்.

அப்படியானால் எதைநம்பி நம் நீதிமுறை இயங்குகிறது? ”பொதுவா நம்ம நாட்டிலே ஒரு நீதியுணர்ச்சி இருக்கு. ரொம்பக்கொஞ்சம்பேர்தான் அத்து மீறி எதையாவது செய்றாங்க. இந்தியாவிலே  வாழ்நாளிலே ஏதாவது ஒரு விஷயத்துக்காக கோர்ட்டுக்கு வர்ரவங்க அரை சதவீதம்பேரு கூட கெடையாது. நம்ம கிராமங்களிலே இன்னைக்கும் கிராமப்பஞ்சாயத்து முறை, சாதிப்பஞ்சாயத்து முறை நடைமுறையிலே இருக்கு. அங்கேயே தொண்ணூத்தொன்பது சதவீதம் வழக்குகளையும் விசாரிச்சு முடிச்சுடறாங்க. அங்கேருந்து கோர்ட்டுக்குவந்தா ரெண்டுபக்கத்துக்கும் பெரும் செலவு…ஏன் கோர்ட்டுக்கு அலைஞ்சே லை·ப் காலியாயிடும். அதனால அங்கயே போய் முடிச்சுகிடறாங்க…அதனாலதான் இந்தியா ஓடிட்டிருக்கு”

சிலநாட்களுக்கு முன் நானும் வசந்தகுமாரும் ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளரான குமரிமைந்தனிடம்  அவரது இயக்க அலுவலகத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். ஊழலைப்பற்றிப் பேச்சு வந்தது. குமரிமைந்தன் மிக யதார்த்தமான மனிதர், துறையில் கலகக்காரராக இருந்து வேட்டையாடப்பட்டவர். ”பொதுப்பணித்துறையிலே ஊழல் எத்தனை சதவீதம் இருக்கும்?” என்றேன். ”எல்லா திட்டங்களும் அதிலே அரசுக்கும் அதிகாரிகளுக்கும் என்ன லாபம்னு மட்டும் பார்த்துத்தான் போடப்படுது. ஊழல் நோக்கு இல்லாத திட்டம்னு ஒண்ணுமே கெடையாது. முதலீட்டுத்தொகையிலே எழுபதுசதவீதம் வரை பலவகையிலே ஊழலா போயிடும்…” நான் ஆச்சரியத்துடன் ”எழுபது சதவீதமா சார்?” என்றேன்

”இங்கே நடக்கிற எல்லா அரசியல்கட்சிகளும் தேர்தல்களும், அரசியல்வாதிகளோட சொந்த வாழ்க்கையும், லட்சக்கணக்கான அதிகாரிகளோட ஆடம்பர வாழ்க்கையும், எல்லாம் பொதுப்பணித்துறையிலே முதலீடு செய்யப்படுற பணத்திலே இருந்து தானே நடந்திட்டு இருக்கு?” என்றார் குமரிமைந்தன். சொல்லச்சொல்ல அதன் நம்பகத்தன்மை அதிகரித்து கடுமையான சோர்வை உருவாக்கியது. கிட்டத்தட்ட மூன்றில் ஒருபங்குத் திட்டங்கள் நூறுசதவீதம் ஊழலுக்குச் சென்றுவிடுகின்றன என்றார் குமரி மைந்தன்.

இந்தத் திட்டங்களுக்கான நிதியை வசூலிக்கும் வரிவசூல் அமைப்பில் முப்பது சதவீதம் வரை வசூலிக்கையிலேயே ஊழலுக்குச் சென்றுவிடுகிறது என்றார் அவர். விற்பனை, சரக்குப்போக்குவரத்து, உற்பத்தி வரித்துறைகளில் ஊழலே அன்றாட நிர்வாகமாக உள்ளது.  அந்தப்பணாம் மேலிடத்தில் பலவகையில் பிரிக்கப்பட்டு பலவகையில் ஒதுக்கப்பட்டு திட்டங்களாக வரும்போது அதிலும் ஊழல். அத்திட்டங்கள் நிறைவேற்றப்படும்போது மேலும் ஊழல்

அப்படிபபர்த்தால் மக்களிடம் வசூலிக்கப்படும் நூறு ரூபாயில் அதிகபட்சம் ஐந்து ரூபாய்தான் மக்களுக்கு திருப்பி அளிக்கப்படுகிறது. ”அப்படியும் இந்தியா எப்படி ஓடிக்கொண்டிருக்கிறது?” என்றேன். ”இந்தியா முழுக்க சின்னச்சின்ன தொழில் உற்பத்தி முறைகளை மக்கள் கடுமையாக உழைச்சு நடத்திட்டிருக்காங்க. அந்த வருமானம் நேரடியா அவங்க கைகளுக்கு போகுது. அது ஓரளவு நம் சமூகத்தை தூக்கி நிறுத்திட்டிருக்கு”

ஆனால் இந்த ஊழல்அமைப்பு இந்தியாவுக்கு மட்டும் உரியதா? மேலைநாடுகளில் இது இல்லையா? மேலைநாடுகளில் இந்த ஊழல் முறைப்படுத்தப்பட்டிருக்கிறது அவ்வளவுதான் வேறுபாடு. மேலைநாடுகளில் பொதுமக்களின் குடிமை உணர்ச்சி மிக அதிகம். ஊடகங்கள் வலுவானவை. ஆகவே ஓர் இடக்கரடக்கல் தேவையாகிறது.  பொதுமக்களை நேரடியாக பாதிக்கும் விஷயங்களில் ஊழல் நிகழ முடியாது. சிறிய ஊழியர்கள் அல்லது நடைமுறைத்தளத்தைச் சேர்ந்தவர்கள் ஊழல் செய்ய முடியாது. அவர்கள் நுட்பமாக கண்காணிக்கப்படுகிறார்கள். கடுமையாக தண்டிக்கவும்படுகிறார்கள். ஆகவே அமைப்பு பழுதிலாது மேலே செல்கிறது.

ஆனால் எந்நிலையிலும் பெரும் பொருளியல் மோசடிகள் தண்டிக்கப்படுவதில்லை, அவை சமரசம்தான் செய்யப்படுகின்றன. உயர்தளத்தில் நீதி எப்போதுமே ஒரு கொடுக்கல்வாங்கலாகவே உள்ளது.  முதல் உலக நாடுகளில் மாபெரும் கட்டுமானங்களில் எண்பது சதவீதம் வரை ஊழல் மூலம் பலர் கைகளுக்குச் சென்று மறைகிறது. வரிவசூலில் அளிக்கப்படும் சலுகைகள் மூலம் பெரும் ஊழல் நடந்துகொண்டிருக்கிறது. இந்தப்பணம் மூலமே கோடானுகோடிகள் புரளும் அரசியல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

ஆனால் முதலாளித்துவம் வளர்ந்துள்ள நாடுகளில் வரிவசூல்பணத்தில் கணிசமான பகுதி வளர்ச்சிப்பணிகளுக்கு வருகிறது. வளராத நாடுகளில் நிகழ்வது போல அதில் தொண்ணூறுசதவீதம் ஊழலுக்குச் செல்வதில்லை. காரணம் அதற்கான தேவை அங்கே இல்லை. அங்கே பிறநாடுகள் மீதான வணிகத்தில்தான் மிகப்பெரும்பகுதி ஊழலால் அரசியல் அதிகாரத்தின் கைகளுக்குச் சென்று சேர்கிறது. எண்ணை, சுரங்கத்தொழில், ஆயுத உற்பத்தி துறைகளில் தொண்ணூறுசதவீத வருமானம் நிழலில் கரைந்து மறைகிறது. அதுவே சர்த்தேச அளவில் ஊழலைப் பரப்புகிறது. சர்வாதிகாரிகளையும் குற்றக்குழுக்களையும் தீவிரவாதத்தையும் உருவாக்குகிறது.

இதைப்பற்றிப் பலநூறு பக்கங்கள் இன்றுவரை எழுதப்பட்டுள்ளன. எந்த அளவுக்கு முதலாளித்துவப்பொருளியலைப் பற்றி வாசிக்கிறோமோ அந்த அளவுக்கு  நாம் ஆழமான மனச்சோர்வடைந்து  அவநம்பிக்கையாளர்களாக ஆகிவிடுவோம். அந்த மனச்சோர்வு நம்மை இடதுசாரியாக ஆக்குமென்றால் நாம் காண்பது இன்னும் பரிதாபமான யதார்த்தத்தை. இன்றைய சீனா முழுக்க முழுக்க உயர்மட்ட ஊழலாலேயே ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று என்பது வெளிப்படையான யதார்த்தம். ஆனால் நேற்றைய சோவியத் ருஷ்யா எப்படி இருந்தது? அதுவும் அப்படித்தான் இருந்தது என இன்று பலநூறு ஆவணங்கள் மூலம் தெரியவருகிறது.

சீனாவில் தனியார் முதலாளிகளை அனுமதிக்க அதிகார பூர்வ முடிவுகள் எடுக்கப்பட்டதுமே சில வருடங்களில் பலநூறு மாபெரும் முதலாளிகள் உருவாகி வந்தார்கள். அவர்கள் எங்கே இருந்தார்கள்? சீன கம்யூனிச அமைப்புக்குள்தான். சீனா கம்யூனிச நாடாக இருந்தபோது அதிகார வர்க்கத்துக்குள் இருந்துகொண்டு கோடிகளைக் குவித்தவர்கள்தான் அவர்கள். இதுவே ருஷ்யாவிலும் நடந்தது. ருஷ்யாவில் தனிநபர்களை ஊழல் செய்யவிட்டு அரசு அதில் பங்குபெறவில்லை. மாறாக அரசே ஊழலை ஒரு ‘தேசிய’ நோக்குடன் ஒருங்கிணைத்து நடத்தியது. பழைய சோவியத் கம்யூனிஸ்டு நாட்டில் பெரும் ஊழல்கள் சைபீரிய வதைமுகாம்களை ஒருங்கிணைத்தவர்களால் செய்யபப்ட்டன என்று தெரியவரும்போது வியப்பாகவே இருக்கிறது.

முதலாளித்துவம், கம்யூனிசம் இரு அமைப்புகளுமே போரில்லாமல் இயங்கமுடியாது என்ற யதார்த்தம் அரைநூற்றாண்டு வரலாற்றால் திட்டவட்டமாக நிறுவப்பட்டிருக்கிறது. அவற்றின் உற்பத்தி அமைப்புகளில் கிட்டத்தட்ட பாதிப்பங்கு போருக்கான பொருட்களை மட்டுமே உற்பத்தி செய்கின்றன.சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தபோது போர்களில் உயிரிழந்த அமெரிக்கர்களுக்கான கல்லறைத்தோட்டங்களை பார்த்தேன். பசும்புல் வெளி மீது அழகாக அமைக்கப்பட்ட வெண்சிலுவைக்குறிகள் பல கிலோமீட்டர் தூரத்துக்கு பரவிக்கிடந்தன. 1930 முதல் தொடர்ந்து அமெரிக்கா எப்போதுமே போரில் ஈடுபட்டபடி இருந்திருக்கிறது. உலகில் எங்கோ ஒர் இடத்தில் அமெரிக்கா போர் செய்யாத நாளே இல்லை. தன் குடிமக்களில் ஒரு சாராரை கொன்று அடைந்த வளமே அதன் ஆடம்பரமாக நம் கண்களுக்குப் படுகிறது.

சோவியத்நாட்டிலும் இப்படித்தான் இருக்கும்போலும். இந்நாடுகள் தங்கள் மண்ணில் போரை நடத்தாமலிருக்கலாம், ஆனால் எங்கோ போர் நடந்தாகவேண்டும். அந்த தொலைதூர நாடுகளில் இந்த ஆதிக்க சக்திகளை எதிர்த்துப் போரிட்டு அழிந்து மண்மூடி மறைந்த மக்களுக்கு அந்த பசும்புல்வெளிச் சிலுவை என்ற கௌரவம் கூட கிடையாது. அவர்கள் முதலாளித்துவ-கம்யூனிச இயந்திரங்களின் ஆலைக்கழிவுகள் மட்டுமே. பத்துவருடம் உலகில் போர் நிகழாவிட்டால் அமெரிக்காவும் ஐரோப்பாவும் சீனாவும் சரிந்துவிடும் என்பதே உண்மை. இந்நாடுகளின் வருவாயின் பாதிப்பங்கு இவற்றால் ராணுவத்துக்குச் செலவிடப்படுகிறது. அது பசித்த மக்களின் பணம். போரின் அழிவின்மீது, அநீதியின்மீது, பஞ்சங்களின் மீது கட்டப்பட்டிருக்கின்றன இவ்விரு பொருளியல்களும்.

இந்நாடுகளில் இந்த அமைப்புகள் அம்மக்களுக்கு அளிக்கும் வசதிகள் என்பவை ஒருவகை லஞ்சம் மட்டுமே. உலகின் வளங்களில் பெரும்பகுதியை ராணுவ வன்மை மூலம், மோசடி மற்றும் ஆதிக்கம் மூலம் சுரண்டும் அமெரிக்கா அதன் சிறு பகுதியை தன் நாட்டில் சாலைபோடவோ பாலம் கட்டவோ சமூகநலத்திட்டங்களுக்கோ செலவிடுகிறது. அதை மட்டும் கண்டு அந்நாடு நன்றாக இருக்கிறது என்றும், அந்த முறையே சிறந்த பயன் விளைவிக்கிறது என்றும் நம்மில் சிலர் சொல்லலாம். ஆனால் அதை அடைய உலகின் பலநூறு நாடுகளைச் சுரண்டி பட்டினி நோக்கித்தள்ளவேண்டியிருக்கிறது என்ற உண்மையை நாம் காண்பதில்லை. அந்நாட்டு மக்களிலும் பெரும்பாலானவர்கள் காண்பதில்லை.

அமெரிக்காவும் ஐரோப்பாவும் செய்யும்  வெளிநாட்டு வணிகத்தில் மிகப்பெரும்பகுதி ஆயுதங்கள்தான். அந்த ஆயுதங்களை வாங்க மூன்றாமுல நாடுகளில் அவை தங்களுக்குச் சாதகமான பொம்மை அரசுகளை உருவாக்குகின்றன. அந்த அரசுகள் தங்கள் மக்களை பட்டினியில்தள்ளிவிட்டு ஆயுதம் வாங்குகின்றன. அந்த ஆயுதங்களை அவர்கள் பயன்படுத்துவதற்காக அமெரிக்க ஐரோப்பிய ஊடகங்கள் அந்நாட்டு வரலாறுகளை திரித்து கசப்புகளை உருவாக்கிப் பரப்பி போர்களையும் கலகங்களையும் நிகழ்த்துகின்றன. காங்கோவிலும் உகாண்டாவிலும் எத்தியோப்பியாவிலும் ஏன் கறுப்புமக்கள் கூட்டம் கூட்டமாகச் சாகிறார்கள்? அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் முதலாளித்துவம் வாழ்வதற்காகத்தான்.

இந்த நிலைதான் சோவியத் ருஷ்யாவிலும் இருந்தது. மத்திய ஐரோப்பிய நாடுகளை தன் பிடியில் வைத்து ஒட்டச்சுரண்டித்தான் சோவியத் ருஷ்யா தன் பேரமைப்பை உருவாக்கி வைத்திருந்தது. ஒரு கட்டத்தில் ஐரோப்பா போதாமலானபோது அது ஆப்கானிஸ்தானிலும் ஈரானிலும் பரவ முயன்றது. அம்முயற்சி ராணுவரீதியாக தோற்றபின் அதனால் அந்த பேரமைப்புக்கு தீனி போட்டு மாளவில்லை. அமைப்பு சரிந்தது. இன்று சீனா பட்டினிநிலங்களான ஆப்ரிக்க நாடுகள் மீது தன் இரும்புக் கைகளைப் பரப்பி அள்ளி உண்டுகொண்டிருக்கிறது.

இவ்விரு பொருளியல்களும் ஆதிக்கத்தை எப்படி அமைத்துக்கொள்வது என்ற முறையில் மட்டுமே மாறுபடுகின்றன. மற்றபடி சமூக இயக்கம்,சமூக வளார்ச்சி ஆகியவற்றைப் பற்றிய இவற்றின் கருத்துக்கள் முற்றிலும் சமமானவை. தொழில்நுட்பம் குறித்து இவை ஒரே நம்பிக்கையையே கொண்டுள்ளன. இயற்கையை  முடிந்தவரைச் சுரண்டி, மனிதர்களின் நுகர்வு வெறியை திருப்திசெய்து, பெரும்  லாபம் அடையும் பல்வேறு உத்திகளையே இவை தொழில்நுட்பம் என்கின்றன.

அந்தத் தொழில்நுட்பம் மூலம் உலகை காப்பாற்றமுடியும், மானுட துயரங்களை முழுக்க ஒழிக்க முடியும் என்று சென்ற நூற்றாண்டின் தொட்க்கத்தில் அர்சியலாளர்கள் கனவு கண்டார்கள். அந்தக்கனவை அன்றுள்ள பெரும்பாலான சிந்தனையாளர்கள் பகிர்ந்துகொண்டார்கள். ஆனால் காந்தி அதை ஐயப்பட்டார். அதில் அறமீறலாக ஒன்று உள்ளது என்றார். தன் மகிழ்ச்சிக்காக இன்னொன்றை– இயற்கையை — மிதமிஞ்சி சுரண்டுவது ஒழுக்கமல்ல என்றார். தன் தேவைகளை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு சிந்திக்கும் எந்த கருத்தும் இயற்கைக்கு மாறானது, ஆகவே அது அழிவையே உருவாக்கும் என்றார்.

அவரது குரலின் சாராம்சமான தரிசனம் அன்று கண்டுகொள்ளப்படவில்லை. நுகர்வே மனிதனின் இன்பம் என்றும் இன்பமே நாகரீகத்தின் அளவுகோல் என்றும் ஆகவே நிறைய நுகரும் சமூகமே நாகரீகமானது என்றும் அன்றைய சிந்தனையாளர் நம்பினர். நேரு அவர்களின் கூற்றுக்களையே ஏற்றுக்கொண்டிருந்தார். முதலாளித்துவமும் கம்யூனிசமும் நுகர்வு மற்றும் தொழில்நுட்பம் குறித்து ஒரே பார்வையையே கொண்டிருக்கின்றன.

இவ்விரு பொருளியல்களையும் ஒன்றையொன்று எதிர்ப்பவை, ஒன்றுக்கு ஒன்று மாற்றானவை என்றுதான் நாம் எண்ணியிருப்போம். காந்தி இவ்விரண்டையுமே ஒன்றாக எண்ணுகிறார். ஒரு பொதுப்பண்பின் அடிப்படையில். இவை ‘ஹிம்சைப் பொருளாதாரம்’ என்கிறார். காந்தியின் கிராமசுயராஜ்யச் சிந்தனைகளின் ஊற்றுக்கண் இதுவே. இந்த வன்முறை அம்சம் இல்லாமல் ஒரு பொருளியல் கட்டுமானம் ஒன்றை உருவாக்க முடியுமா என்று சிந்திக்கிறார்.

இளம் வயதில் மார்க்ஸியக் கனவுகளுடன் காந்தியைச் சென்று சந்தித்த நித்ய சைதன்ய யதி மார்க்ஸியம் குறித்து ஆவேசமாக பேசத்தொடங்கும்போது ‘நான் இவற்றை வாசிக்கவில்லை என எண்ணுகிறாயா? வன்முறை இல்லாமல் இந்த கனவுகள் சாத்தியமா? வன்முறை எவர் செய்தாலும் வன்முறைதானே?’ என்று காந்தி பதில் சொன்னார் என நித்யா தன் சுயசரிதையில் எழுதுகிறார்.

வன்முறை எதற்காக தேவைப்படுகிறது? பொருளியல் மேலாதிக்கத்துக்காக. மேலாதிக்கம் பேராசையின் விளைவு. பேராசை நுகர்வு வெறியினால். நுகர்வுவெறி சுயக்கட்டுபாட்டால் மட்டுமே சமன்செய்யப்பட முடியும். ஆகவே காந்தி சுயக்கட்டுப்பாட்டில் இருந்து தொடங்கும் ஒரு சமூக அமைப்பைக் கற்பனைசெய்தார். அதுவே கிராமசுயராஜ்யம்.

மனிதனின் மகிழ்ச்சி நுகர்வில் இல்லை என்றால் எதில் உள்ளது? அடிப்படைத்தேவைகள் அனைவருக்கும் நிறைவேறுதல். அதன் விளைவாக நிறைவான மனம் கொண்ட மக்களின் சமூகம் உருவாதல். அச்சமூகத்தில் மேலான மானுட உறவுகள் பூத்தல். இயற்கையுடன் ஒன்றி வாழ்வதனால் உடல்நலம் சிறப்பாக இருத்தல். இத்தகைய மகிழ்ச்சி கொண்ட சமூகம் வன்முறையை மெல்ல மெல்ல இழக்கும். ஏனென்றால் வன்முறை உருவாவதே மகிழ்ச்சியில்லாத சமூகம் அம்மகிழ்ச்சியின்மைக்கு பிறரே காரணம் என எண்ணுவதனாலும் , மகிழ்ச்சியை பிறரை ஒடுக்குவதில் காண விழைவதனாலும்தான்.

அத்தகைய மகிழ்ச்சியான சமூகம் ஒன்றை காந்தி கற்பனை செய்கிறார். அந்தச் சமூகத்தில் தேவையான அனைத்துமே பெரும்பாலும் அங்கேயே உற்பத்தி செய்யப்படுமாகையால் போக்குவரத்து தேவையிருக்காது. பெருமளவிலான உற்பத்தி தேவை இருக்காது. ஆகவே தொழில்நுட்பமும் பெரிய அளவில் தேவை இருக்காது. தொழில்நுட்பம் இல்லையேல் இயற்கை மீதான வன்முறையும் நிகழாது.

காந்தி நவீனத் தொழில்நுட்பத்தை மிகவும் ஐயப்பட்டார். அதன் சாராம்சமாக இருப்பது வன்முறையே என்றார். ஆகவே அதை முழுக்க நிராகரிப்பதற்கு முயன்றார். தொழில்நுட்பத்தை வன்முறையில்லாமல் நிகழ்த்துவது அனேகமாக சாத்தியமல்ல என்பதே காந்தியின் எண்ணம். ஏனென்றால் அது ஆதி நோக்கத்திலேயே இயற்கையைச் சுரண்டும் இலக்கு கொண்டது.

காந்தி சொன்ன கிராமிய அமைப்புகள் தங்களை தாங்களே முழுக்க நிர்வாகம் செய்துகொள்ளக்கூடியவை. ஆகவே அவற்றின் நிதி வெளியே உறிஞ்சப்படுவதில்லை. அவற்றுக்கான திட்டங்கள் எதுவும் வெளியே போடப்படுவதில்லை. யார் அத்திட்டங்களின் பலன்களை அனுபவிக்கிறார்களோ அவர்களே அத்திட்டங்களைச் செயல்படுத்துவார்கள். அவை தவறாக ஆனால் பாதிக்கப்படுவதும் அவர்களே. ஆகவே திட்டங்களை உடனடியாக அவர்களால் திருத்திக்கொள்ள முடியும்

அந்த அமைப்பில் அரசு என்பது ஓர் எளிய நிர்வாக-சமரச அமைப்பாக மட்டுமே இருக்கும். அதற்கு நிதி மற்றும் திட்டம் சார்ந்த வேலைகள் ஏதும் இருக்காது. மாபெரும் வரிவசூல் முறை இருக்காது. நேரடியாக அது உற்பத்தியிலும் வினியோகத்திலும் ஈடுபடாது. ஆகவே மாபெரும் அதிகாரிகள்கூட்டமைப்புக்கான தேவை இருக்காது. ஆகவே ஊழலுக்கு அங்கே இடமே இல்லை.

காந்தி இறந்து கால்நூற்றாண்டு கழிந்தபின்னர் மேலைச்சமூகத்தின் முக்கியமான அறிஞர்கள் தொழில்நுட்பத்தின் வன்முறையைப் பற்றி மிக விரிவாகவே பேசியிருக்கிறார்கள். பின்நவீனத்துவ யுகமே தொழில்நுட்பத்தின் மீதான ஐயத்தில் இருந்து உருவானதே. இன்றைய நவீனத்தொழில்நுட்பம் போரில்லாமல் வளரவே முடியாத ஒன்று என்று இப்போது கூறுபவர்கள் பின்நவீனத்துவர்கள். நவீனத்தொழில்நுட்பத்தின் மைய ஆளுமைகள் அனைவருமே போருடன் தொடர்புடையவர்கள் என்பது வரலாறு.

அந்த அளவுக்கு யோசிக்க வேண்டியதில்லை. உங்கள் வீட்டருகே ஒரு தொழிற்சாலை வருவதை நீங்கள் ஒத்துக்கொள்வீர்களா என்ற கேள்வியை மட்டும் கேட்டுக்கொண்டால் போதும். மாட்டீர்கள். அது வேறெங்காவது இருந்தாகவேண்டும். உங்களுக்காக அதை உங்களை விட எளிய வேறு எவரோ அதை சகித்துக்கொள்ள வேண்டும்.

சென்னை மக்கள் தங்கள் குப்பைகளையும் ஆலைக்கழிவுகளையும் கொடுங்கையூர் சகித்துக்கொள்ளட்டும் என எண்ணுவார்கள். சிகாகோ மக்கள் தங்கள் குப்பைகளை கப்பல் கப்பலாக ஏற்றி கொண்டுவந்து சென்னையில் கொட்டுவார்கள். உலகம் முழுக்க இன்று நடந்துகொண்டிருப்பது இதுவே. நவீனத்தொழில்நுட்பம் உலகத்திற்கு அளித்த கொடைகளை இதைப்பற்றிப் பேசாமல் எவரும் விவாதிக்க முடியாது.

காந்தி நவீனத்தொழில்நுட்பத்தை ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறாரா? இல்லை. அவர் எதிர்ப்பது அதில் உள்ளடங்கியிருக்கும் வன்முறையை மட்டுமே. காந்தி நவீனத்தொழில்நுட்பத்தின் பல அம்சங்களை ஏற்றுக்கொண்டவர். நவீனத்தொழில்நுட்பம் அதிலுள்ள பேராசையையும் வன்முறையையும் விட முடியுமென்றால் அது காந்திக்கு ஒவ்வாததாக இருக்க வாய்ப்பில்லை.

காந்தியின் இந்த இலட்சிய சமூக அமைப்பின் சாத்தியக்கூறுகள் என்ன? அது மனித நாகரீகத்துக்கு எதையாவது அளிக்க முடியுமா? அல்லது வெறும் கனவு மட்டும்தானா அது? நடைமுறையில் அது எங்காவது எவ்வகையிலாவது சாத்தியமாகியிருக்கிறதா?

[மேலும்]

முந்தைய கட்டுரைசில இணைப்புகள்
அடுத்த கட்டுரைஇளையராஜா,சாரு:கடிதங்கள்