தமிழகக் கிராமங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

நலமா?

உங்களின் கிராமக் கழிப்பறைகள் பற்றிய கட்டுரை படித்தேன். தமிழகத்தின் இன்றைய கீழ்நிலை குறித்து தொடர்ந்து எழுதி வரும் ஒருசிலரின் நீங்களும் ஒருவர். தமிழ்நாட்டில் தொடர்ந்து பயணிக்கும் உங்களைப் போன்றவர்களின் கருத்துக்களில் தொனிக்கும் உண்மை மிக ஆழமானது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. வெற்றுக் கூச்சலே இன்றைக்கு வெற்றிக் கூச்சல் என்னும் நிலையில் பொது நல அக்கறை குறித்துத் தமிழ்நாட்டில் பேசுவது மிக, மிக அருகிப் போன ஒரு விஷயம். இன்னும் ஒரு பத்தாண்டுகளில் அப்பட்டிப்பட்டவர்கள் முழுமையாக இல்லாமலேயே போய்விடலாம்.

நான் தமிழ்நாட்டில் ஓரளவிற்குச் செழிப்பான (அல்லது செழிப்பாக இருந்த) தேனி மாவட்டத்தில் பிறந்து, ஏழு அல்லது எட்டு வயது வரை வளர்ந்தவன். என் பெற்றோர்கள் பின்னர் சென்னைக்குக் குடிபெயர்ந்தார்கள். இருப்பினும் இன்றளவும் மனதளவில் நானொரு கிராமத்தான்தான். நான் வளர்ந்த கிராமத்தில், பாட்டையா (அம்மாவின் அப்பா) வயலும், தோட்டமும் உடைய ஒரு முழு விவசாயி. அவரைப் போலவே அந்த கிராமம் முழுக்க அத்தனை பேர்களும் விவசாயமும் அதனை ஒட்டிய தொழில்களும் செய்து வந்தார்கள்.

காலையில் முதற் கோழி கூவியதும் ஊரே விழித்துக் கொண்டு தோட்டங்களுக்கோ அல்லது வயல்களுக்கோ செல்லும் ஆயத்தத்தில் இருக்கும். நான் விழிக்கும் முன்னரே பாட்டையா தோளில் கலப்பையத் தூக்கிப் போட்டுக் கொண்டு, மாடுகளை விரட்டிக் கொண்டு தோட்டத்திற்குப் போயிருப்பார். அவரது இரண்டு மகன்களும் (எனது மாமனார்கள்) தோட்டத்திற்குத் தண்ணீர் கட்டப் போயிருப்பார்கள். பாட்டி மட்டும் வீட்டில் இருப்பாள். எங்களுக்கு பழைய சோற்றிலோ அல்லது நேற்றைக்கு மிஞ்சிய கேப்பைக் களியிலோ தயிரை ஊற்றி பிசைந்து கொடுத்துவிட்டுத் தோட்டத்திற்கு ஓடுவாள். வீட்டுச் சிறுவர்கள் பள்ளிக்கூடம் போவார்கள்.

மதியம் அந்த ஊரே ஆளரவமற்றிருக்கும். எல்லோரும் தோட்டத்திலோ அல்லது வயலிலோ வேலை செய்து கொண்டிருப்பார்கள். சூரியன் மறையும் நேரத்தில்தான் ஊரின் டீக்கடைகளில் கொஞ்சம் கூட்டத்தைப் பார்க்க முடியும். நான் சொல்வது அறுபதுகளின் இறுதியிலும், எழுபதுகளின் முற்பகுதிகளிலும் இருந்த நிலைமை. கிராமவாசிகள் எவருக்கும் அனேகமாக நகரத்திற்குப் போகவேண்டிய அவசியமேயில்லை. சுத்தமான குடிதண்ணீரும், காற்றும் இருந்த நிலையில் நோய்களும் அதிகமில்லை. உயர்நிலைப்பள்ளிக்குப் போன மாணவர்கள் அருகிலிருக்கும் சின்னமனூருக்கோ, போடிநாயக்கனூருக்கோ அல்லது கம்பத்திற்கோ போய்ப் படிப்பார்கள். அவ்வளவுதான். மற்றபடி அந்தக் கிராமம் எல்லாவற்றிலும் ஓரளவிற்குத் தன்னிறைவு உடையதாக இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சாதி மோதல்களைத் தவிர்த்து பெருமளவு குற்றங்களுமில்லை. அரசியல் கட்சிகளுக்கு கிராமத்தில் செல்வாக்கு எதுவும் இல்லை. எனவே அடிதடிகளும் இல்லை. குறிப்பாக சாரயக்கடைகள் இல்லவே இல்லை. குடித்துவிட்டு வருவதனை கிராமவாசிகள் கேவலமான செயலாகக் கருதினார்கள். கம்பத்திலிருந்து எனது பெரியப்பா வாங்கி வரும் பிராந்தியை பாட்டையா ஒளித்து, மறைத்துக் குடிப்பார். குடிப்பது பிள்ளைகளுக்குத் தெரிவதை விடக் கேவலம் வேறெதுவுமில்லை.

எழுபதுகளின் பிற்பகுதிகளில் எம்.ஜி.ஆர் தேர்தலில் ஜெயித்து முதலமைச்சரான பின் கிராம நிலைமை தலைகீழாக மாறியது. நேற்றுவரை கிழிந்த வேட்டியுடன் திரிந்தவர்கள் திடீரென அ.தி.மு.கட்சியின் பிரமுகர்களானார்கள். காரும், பணமும், வீடுகளும் வாங்க ஆரம்பித்தார்கள். அதனைத் தொடர்ந்து குடும்பத்துடன் சென்னைக்குக் குடிபுக ஆரம்பித்தார்கள். எதிர் மற்றும் எதிரிக் கட்சிகளும் இன்ன பிற அரசியல் கட்சிகளும் கிராமத்தில் வேரூன்ற ஆரம்பித்தன. கிராமம் பிளவுபட ஆரம்பித்தது. சாதிக் கட்சிகள் தலையெடுக்க ஆரம்பித்தன. சாதி மோதல்கள் முன்னெப்போதும் இல்லாத உக்கிரத்துடன் முன்னெடுக்கப்பட்டது. கிராமத்தின் நலனுக்காக பொது நலத்துடன் ஒன்றிணைந்து பொதுக் கிணறுகளில் தூர்வாருவதில் ஆரம்பித்து, கோவில் திருவிழாக்கள் வரை அத்தனை செயல்களும் ஸ்தம்பித்தன. கிராமம் குப்பைக்காடானது. பொதுக் குளம் தூர்ந்து போய் மழை நீர் தங்காமல் போனதில் குண்டி கழுவக் கூட நீர் கிடைக்காமல் போனது உண்மை.

பொதுக் குளத்தில் நீர் தங்கிய காலங்களில் விவசாயக் கிணறுகளில் தண்ணீர் நிறைந்து நின்றது. என்னுடைய பாட்டையா இரண்டு மாடுகளை வைத்துக் கொண்டு கிணற்றிலிருந்து விவசாயத்திற்கு நீரிறைப்பதைப் பார்த்திருக்கிறேன். இன்றைக்கோ நிலைமை தலைகீழாக இருக்கிறது. பாட்டையாவைத் தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட்ட எனது பெரிய மாமா நூற்றுக் கணக்கான அடிகள் தோண்டிய பின்னும் கிணற்றில் ஒரு சொட்டு நீரில்லை என்று விவசாயத்தைக் கைவிட்டு விட்டார். அதற்கும் மேலாக பம்ப் செட்டுகளில் திருடும் கூட்டம், பம்ப் செட்டுக் கதவை உடைத்து அங்கிருக்கும் உபகரணங்களையும், வயர்களையும் திருடிக் கொண்டு போய்விடுகிறார்கள். ஆயிரக்கணக்கில் செலவு செய்து போட்ட பம்ப் செட்டின் வயர்களில் இருக்கும் உலோகத்திற்காக மட்டுமே இந்தத் திருட்டு நடக்கிறது. வயர்களில் இருக்கும் உலோகத்தை விற்றால் நூறு ரூபாயது கிடைக்குமோ என்னவோ? போலிஸ்டேசனில் சொன்னாலும் ப்ரயோசனமில்லை. அதற்கோ ஆயிரக்கணக்கில் செலவு செய்ய வேண்டியதிருக்கும். பெரும்பாலான தமிழ்நாட்டுப் போலிஸ்காரர்கள் கிரிமினல்கள். திருடனிடமே திருடனைப் பிடிக்கச் சொல்வது வாழ்க்கையின் விசித்திரங்களில் ஒன்று.

வெறுத்துப்போன பெரிய மாமா விவசாயத்தை விட்டுவிட்டார். காலம் காலமாக காய்கறிகளும், பருத்தியும் விளைந்த வளமான தோட்டம் இன்றைக்குத் தரிசாகக் கிடக்கிறது. ஒரு மகன் அமெரிக்காவிலிருக்கிறான். விவசாயாவான் என்ற நம்பிக்கையில் வளர்க்கப்பட்ட இன்னொரு மகனோ வேறு வழியில்லாமல் மினி லாரி ஓட்டிக் கொண்டிருக்கிறான். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பேணி வளர்த்த விவசாய உத்திகள், அறிவு இந்தத் தலைமுறையுடன் காணாமல் போய்விட்டது. ஊர் முழுவதும் விவசாயம் இன்றைக்கு ஏறக்குறைய கைவிடப்பட்டுவிட்டது.

இதற்கிடையே, அரசியல்வாதிகளைத் தொடர்ந்து சென்னைக்குச் சென்றவர்கள் பொருளாதார ரீதியில் முன்னேறினார்கள். அதனைப் பார்த்த பிற கிராமத்தவர்களும் தங்களின் பிள்ளைகளை சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள். பின்னர் தாங்களும் சென்னைக்குப் போனார்கள். கூலி வேலை செய்வதற்காக. கிராமம் சிறிது சிறிதாகக் காலியானது. நீங்கள் சொல்வது போல வேறு வழியில்லாதவர்கள் மட்டுமே தமிழ் நாட்டுக் கிராமங்களில் குடியிருக்கிறார்கள்.

ஏறக்குறைய இருபது அல்லது இருபத்தைந்து வருடங்களுக்குப் பிறகு, ஒரு இரண்டாண்டுகளுக்கு முன்னால் அந்தக் கிராமத்திற்குப் போயிருந்தேன். அங்கிருப்பதைக் கண்டு ‘அதிர்ச்சியடைந்தேன்’ என்று சொல்வதெல்லாம் சாதாரண வார்த்தை. அதற்கும் மேலாக ஏதாவது வார்த்தியிருந்தால் நினைத்துக் கொள்ளுங்கள். அப்படி இருந்தது நிலைமை! எந்த கிராமத்தில் சாராயம் குடிப்பது கேவலமானதாக நினைக்கப்பட்டதோ அந்தக் கிராமத்தின் நுழை வாயிலிலேயே சாராயக்கடை அமைத்திருக்கிருக்கிறார்கள். மண்டை பிளக்கும் உச்சி வெயிலில் கிராமவாசிகள் குடித்துக் கொண்டிருந்தார்கள். ஊர் முழுக்க முற்றிலும் அறிமுகமேயில்லாத ஆட்களின் நடமாட்டம். குடிக்கத் தண்ணீரில்லை. ஆரோக்கியமிழந்த குழந்தைகளும், பெரியவர்களும் என் கண்ணில் நீர்வர வைத்தார்கள். இனியெப்போதும் மீட்டெடுக்க இயலாத வகையில் கிராமத்தின் ஆன்மாவே அழிந்து போயிருந்தது. அந்தப் பகுதியிலிருக்கும் பிற கிராமங்களிலும் அதுவே நிலைமை. கட்சிக் கொடிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது; மத மாற்ற வியாபாரிகளின் படையெடுப்பும் அதிகமாயிருக்கிறது என்பதனைத் தவிர வேறெதுவும் அங்கு இல்லை. அரசாங்கம் என்ற ஒன்றோ அல்லது நிர்வாகம் என்பதோ அறவே இல்லை.

மனமொடிந்த நிலையில் அங்கிருக்கப் பிடிக்காமக் இரண்டொரு மணி நேரத்திலேயே கிளம்பிவிட்டேன்.

*

தமிழ் நாட்டின் பிற பகுதிகளிலும் இதுவே நிலைமை எனத் தெரிகிறது. எங்கும் குடிகாரர்களின் கூட்டம். குறிப்பாக இளைஞர்கள். அரசாங்கமே அதன் குடிமக்களைக் குடிகாரர்களாக்க ஊக்குவிக்கும் விசித்திரம் தமிழ்நாட்டிற்கு மட்டுமே உரியது.

விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலை நோக்கி வாடகைக் காரில் வந்து கொண்டிருந்தேன். காலை எட்டரை மணியிருக்கும். ஏதோ ஒரு சிறிய நகரத்தின் குறுகலான சாலையில் கார் ஊர்ந்து கொண்டிருந்தது. சாலையின் நட்ட நடுவில் முழுப் போதையில் தள்ளாடிக் கொண்டிருந்த இருபத்தைந்து வயது மதிக்கத் தக்க ஒரு இளைஞன் காரின் முன்பக்கத்தில், கொடிகள் பறப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சிறு கம்பத்தைப் பிடித்துக் கொண்டு நகர விடாமல் நின்று கொண்டான். இது காலை எட்டு அல்லது எட்டரை மணி என்பது நினைவிருக்கட்டும். எவ்வளவு கெஞ்சியும் அந்தக் கம்பத்தை விட மறுத்து ‘தூய’தமிழில் வசைபாடிக் கொண்டிருந்தவனை ஊர்க்காரர்கள் நான்கைந்து பேர் வலுக்கட்டாயமாகத் தூக்கிப் போனார்கள். எவ்வளவு அவலம் இது? வாழ்வின் துவக்கத்தில் இருக்கும் அந்த இளைஞனின் கதி இனி என்னவாகும்? அவனைப் பெற்றவர்கள் மனம் என்ன பாடுபடும்? துரதிருஷ்டவசமாக அவன் திருமணமானவனாக இருந்தால் அவனின் மனைவி, மக்களின் நிலை என்ன? மிக வருத்தமான விஷயம் இது.

திருவண்ணாமலைக்கருகில் ஏதோ ஒரு ஏரியின் கரை மீது சாலை செல்கிறது என்று நினைக்கிறேன். அங்கே ஏதோ விபத்து என்று சொன்னதால் காரை கிராமங்களின் வழியாக ஓட்டிச் செல்ல வேண்டியதாயிற்று. இருபதாண்டுகளுக்கு முந்தைய தமிழ் நாட்டுக் கிராமங்கள் மிகவும் துடிப்பானவை. ஊர் வருவதற்கு முன்பே லவுட் ஸ்பீக்கரில் ஒலிக்கும் சினிமாப்பாடல்களும், கிராமத் திருவிழாக்களும், திருமணங்களும் நம்மை மிகவும் உவகை கொள்ளச் செய்பவை. ஆனால் அந்தக் கிராமங்களில் மனிதர்கள் வாழும் எந்தத் தடையமும் அற்றவையாக இருந்தன. கிராமம் இறந்து போயிருந்தது. நடந்து போகக்கூட லாயக்கில்லாத சாலையில் குதித்துக் கொண்டு சென்ற காரில் அமர்ந்து வருத்தத்துடன் பார்த்துக் கொண்டு வந்தேன். எந்தவிதமான முன்னேற்றப் பணிகள் எதுவும் செய்யப்படாத அந்தக் கிராமத்தில் விவசாயம் முற்றிலுமாக கைவிடப்பட்டிருந்தது.

ஆனால், கர்நாடக மாநிலத்தில் இதற்கு நேரெதிரான நிலைமையைக் கண்டேன். சுத்தமாகப் பராமரிக்கப்படும் நீர் நிலைகளும், துடிப்பான கிராமங்களும் ஒருபுறம் என்னை மகிழ வைத்தாலும், தமிழ் நாட்டின் நிலையுடன் ஒப்பிடுகையில் மிகவும் வருத்தப்படவே வைத்தது. தமிழக கிராமங்களெங்கும் காணப்படும் சீமைக்கருவேல மரங்கள் எதுவும் அங்கு கண்ணில் தட்டுப்படவில்லை.

இப்படியே இதனைக் குறித்து எழுதிக்கொண்டே போகலாம். எழுதி என்ன பிரயோஜனம்?

திராவிடக் கட்சிகள் தமிழ்நாட்டை ஏறக்குறைய அழித்தே விட்டன. கோவில்களைச் சுரண்டி ஒட்டாண்டியாக்கினார்கள். பின்னர் குளங்கள், ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. எஞ்சியிருப்பவையும் சாராய வியாபாரிகளால் ஒட்டச் சுரண்டப்படும். அதற்குப் பிறகு எதனைச் சுரண்டுவார்கள் என்று தெரியவில்லை.

இன்றைய ஜெயலலிதாவின் ஆட்சி தமிழ்நாட்டின் மாபெரும் சாபக்கேடுகளில் ஒன்று என்பதில் சந்தேகமேயில்லை. தன்னை ஒரு மகாராணியாக நினைக்கும், நடந்து கொள்ளும் இந்த அரைவேக்காட்டுப் பெண்மணியால் தமிழர்கள் இன்னும் என்னென்ன துயரங்களையும், அவமானங்களையும் அடையப்போகிறார்களோ என்று நினைத்தாலேயே அச்சமாக இருக்கிறது. ஜெயலலிதாவைச் சொன்னால் கருணாநிதி உத்தமர் என்று அர்த்தமில்லை. தீமையில் நல்ல தீமை, கெட்ட தீமை என்று எதுவும் உண்டா என்ன?

அன்புடன்,
நரேந்திரன்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 24
அடுத்த கட்டுரைபெண்வெறுப்பும் அம்பையும்- ஹிந்துவுக்கு எழுதப்பட்ட கடிதம்