பகுதி ஐந்து : நெற்குவைநகர்
[ 3 ]
ஹேகயர்குலத்து கார்த்தவீரியன் தன் சிம்மங்களுடன் தேரிலேறி மாகிஷ்மதிக்கு வந்தான். அவனுடைய தேர் கோட்டையைக் கடந்து நகர்புகுந்தபோது யாதவர்கள் தங்கள் இல்லங்களில் இருந்து மழைக்கால ஈசல்கள் போல கிளம்பி தெருக்களில் கூடி ஆரவாரமிட்டனர். ‘எழுந்தது ஹேகய குலம்’ என்று குலமூதாதையர் கண்ணீருடன் சொன்னார்கள். அவனுடைய வரவைக் கொண்டாட அன்று வானம் வெயிலுடன் மென்மழை பொழிந்து நகரம் நனைந்து ஒளிவிட்டது. கார்த்தவீரியனை அரண்மனைக்குள் அழைத்துச்செல்லவந்த அமைச்சர்கள் அக்கணம் வீசிய காற்றில் ஹேகயர்களின் கருடக்கொடி படபடத்து ஒலியெழுப்புவதைக் கண்டு தலைதூக்கி கைகூப்பினர்.
கார்த்தவீரியன் பன்னிரு மனைவிகளை மணந்து அவர்களில் நூறு மைந்தர்களைப்பெற்றான். நிர்மதன், ரோசனன், சங்கு, உக்ரதன், துந்துபி, துருவன், சுபார்சி, சத்ருஜித், கிரௌஞ்சன், சாந்தன், நிர்த்தயன், அந்தகன், ஆகிருதி, விமலன், தீரன், நீரோகன், பாகுதி, தமன், அதரி, விடூரன், சௌம்யன், மனஸ்வி, புஷ்கலன், புசன், தருணன், ரிஷபன், ரூக்ஷன், சத்யகன், சுபலன், பலி, உக்ரேஷ்டன், உக்ரகர்மன், சத்யசேனன், துராசதன், வீரதன்வா, தீர்க்கபாகு, அகம்பனன், சுபாகு, தீர்க்காக்ஷன், வர்த்துளாக்ஷன், சாருதம்ஷ்டிரன், கோத்ரவான், மகோஜவன், ஊர்த்துவபாகு, குரோதன், சத்யகீர்த்தி, துஷ்பிரதர்ஷணன், சத்யசந்தன், மகாசேனன், சுலோசனன் என்னும் முதல் கணத்தவர் வாமஹேகயர்கள் எனப்பட்டனர்.
ரக்தநேத்ரன், வக்ர தம்ஷ்டிரன், சுதம்ஷ்டிரன், க்ஷத்ரவர்மன், மனோனுகன், தூம்ரகேசன், பிங்கலோசனன், அவியங்கன், ஜடிலன், வேணுமான், சானு, பாசபாணி, அனுத்ததன், துரந்தன், கபிலன், சம்பு, அனந்தன், விஸ்வகன், உதாரன், கிருதி, ஷத்ரஜித், தர்மி, வியாஹ்ரன், ஹோஷன், அத்புதன், புரஞ்சயன், சாரணன், வாக்மி, வீரன், ரதி, கோவிஹ்வலன், சங்கிராமஜித், சுபர்வா, நாரதன், சத்யகேது, சதானீகன், திருதாயுதன், சித்ரதன்வா, ஜயத்சேனன், விரூபாக்ஷன், பீமகர்மன், சத்ருதாபனன், சித்ரசேனன், துராதர்ஷன், விடூரதன், சூரன், சூரசேனன், தீஷணன், மது, ஜயதுவஜன் என்னும் இரண்டாம் கணத்தவர் தட்சிணஹேகயர் எனப்பட்டனர்.
உத்தரர்களும் தட்சிணர்களும் இருபக்கமும் அணிவகுக்க ஹேகயர்களின் சிம்மாசனத்தில் அமர்ந்த கார்த்தவீரியன் யாதவர்களின் பன்னிரண்டு குலங்களையும் தன் தலைமையில் ஒருங்கிணைத்தான். ஒவ்வொரு நாளும் தன் படைகளுக்கு தானே பயிற்சி அளித்தான். வளைதடி ஏந்திய யாதவர்கள் அனைவரையும் வாளேந்தச்செய்தான். கன்று ஓட்டியவர்களை புரவியோட்டப் பயிற்றுவித்தான். அவன் தலைமையில் ஹேகயகுலத்து யாதவர்கள் நர்மதையில் செல்லும் பத்தாயிரம் படகுகளை கட்டிக்கொண்டார்கள். அறுவடைக்காலத்தில் மலையிலிருந்து இறங்கிவரும் கிளிக்கூட்டங்கள்போல அவர்கள் அருகில் இருந்த நாடுகள் மேல் படையெடுத்துச் சென்றார்கள். நர்மதையின் இரு கரைகளும் ஹேகயநாட்டுக்குரியவை ஆயின.
கார்த்தவீரியன் மகாத்துவஜம் என்னும் பேருள்ள செந்நிறமான குதிரையை நர்மதைக்கரையில் ஓடச்செய்து அதன் காலடிபட்ட மண்ணை முழுக்க தன் வசப்படுத்திக்கொண்டான். அஸ்வமேதவேள்வியால் அடைந்த பெருஞ்செல்வத்தைக்கொண்டு ஏழு மாகேந்திர பெருவேள்விகளைச் செய்தான். ஏழுவேள்விகளையும் முழுமைசெய்பவன் இந்திரனின் சிம்மாசனத்தில் இந்திராணியுடன் அமரவேண்டும் என்றும் அதை தெய்வங்கள் விரும்புவதில்லை என்றும் வேள்விசெய்த வைதிகர் சொன்னபோது தன் சிம்மாசனத்தில் அறைந்து நகைத்து “இக்கணமே அவ்வேள்விகளை முழுமைசெய்யுங்கள். இந்திராணியை என் மடியில் அமரச்செய்கிறேன்” என்றான். வேள்விகளால் ஆற்றல்பெற்ற கார்த்தவீரியன் விண்ணிலேறி மேகங்களில் ஊர்ந்துசென்று தேவருலகை அடைந்து அங்கே தேஜஸ்வினி என்னும் பொன்னிற நதியில் நீராடிக்கொண்டிருந்த இந்திரனுடன் நீர்விளையாடிக்கொண்டிருந்த இந்திராணியை ஆடையின்றி தூக்கி தன் செம்பொன் தேரில் ஏற்றிக்கொண்டுசென்று இந்திரனின் சிம்மாசனத்தில் அமர்ந்தான்.
ஹேகயகுலத்து கார்த்தவீரியன் இந்திரனை வென்றகதையை பாடிப்பரப்பினர் சூதர். தன் பல்லாயிரம் படகுகளுடன் நர்மதை வழியாக கடலுக்குச் சென்ற அவனைக்கண்டு கடலரசன் அஞ்சி சுருண்டுகொண்டான். நீலநிறப்பட்டை சுருட்டி கையிலெடுப்பதுபோல கடலை அள்ளி தன் இடைக்கச்சையாக ஆக்குவேன் என்று அவன் அறைகூவினான். கடலரசனின் தந்தை வருணன் முதியவனாக வந்து அவனைப் பணிந்து கடல் கார்த்தவீரியனுக்கு அடிமைசெய்யும் என்று வாக்களித்தான்.
மண்ணையும் விண்ணையும் கடலையும் வென்ற கார்த்தவீரியன் காற்றையும் நெருப்பையும் வெல்ல எண்ணினான். அவனுடைய வேள்விச்சாலையில் வீசிய காற்று மாகிஷ்மதிக்கு சாமரம் வீசுவதாக ஒப்புக்கொண்டது. வேள்விக்குளத்தில் எழுந்த அனல் அவனுக்கு என்றும் பணிசெய்வதாக சொன்னது. தன் பசிக்கு உணவிடும்படி கோரிய அனலோனிடம் தன் நாட்டிலுள்ள எந்தக் காட்டைவேண்டுமென்றாலும் உண்டு பசியாறுக என கார்த்தவீரியன் ஆணையிட்டான். எழுந்துபரந்த எரி ஏழுமலைகளையும் ஏழு காடுகளையும் உண்டது. நெருப்பெழுந்து பரக்கையில் ஆபவனம் என்னும் காட்டிலிருந்த ஆபவர் என்னும் முனிவரின் குருகுலத்தை அது நாநீட்டி உண்டது. குருகுலத்துப் பசுக்களையும் குருபத்னியையும் மாணவர்களையும் அது உண்டழித்தது.
எரிந்த சடைமுடியும் கருகிய உடலுமாக மாகிஷ்மதிக்கு வந்து அரண்மனை வாயிலில் நின்று நீதிகோரினார் ஆபவர். “ஆநிரையும் அறிவர்களும் கலைஞர்களும் கவிஞர்களும் அரசனின் காவலுக்குரியவர்கள். எப்படி அக்கடனை நீ மறக்கலாகும்?” என்றார். “முனிவரே, அறத்தை முடிவுசெய்வது வெற்றியே. இதுவரை தோற்றுக்கிடந்த யாதவர்களுக்கு எந்த அறமும் துணைவரவில்லை. இனி அறத்தைக் கடந்து சென்று வெற்றியை அடைவோம். அறம் எங்கள் துணையாக வரும்” என்றான் கார்த்தவீரியன். ஆபவர் நகைத்து “வெற்றியும் தோல்வியும் அறத்தால் நிகழ்வன அல்ல. அவை விதியால் நிகழ்பவை. ஆனால் நீதியற்றவன் வாழமாட்டான் என்பதும் விதியே. அறம் உன் வாயிலை வந்து முட்டும். அப்போது இச்சொற்களை நினைவுகூர்வாய்” என்றார். அத்தீச்சொல் அரண்மனை முற்றத்தில் விழுந்த அன்று யாதவர்களின் ஆநிரைகள் உரக்கக் கூவியழுதன.
தன் வெற்றியை உறுதிசெய்வதற்காக கார்த்தவீரியன் மகாருத்ர வேள்வி ஒன்றை நர்மதையின் கரையில் நிகழ்த்தினான். விண்ணாளும் தேவர்கள் அனைவரும் மண்ணாளும் தேவதைகளும் பாதாளத்தை ஆளும் நாகங்களும் வந்து அந்த யாகத்தை முழுமைசெய்யவேண்டுமென ஆணையிட்டான். நூற்றெட்டுநாள் நிகழ்ந்தது அந்த மாபெரும் வேள்வி. அவ்வேள்வி முழுமைபெற்றால் மண்ணை ஆண்ட மன்னர்களிலேயே கார்த்தவீரியனே முதன்மையானவன் என தெய்வங்கள் ஏற்றாகவேண்டும். ஆனால் வேள்வியில் அவியாக்கிய இறுதிக்கவளத்தை தென்னெரி ஏற்றுக்கொள்ளவில்லை. நெருப்பில் விழுந்த அன்னம் வேகாமல் கருகாமல் அப்படியே கிடந்தது.
எரிதேவனை சிற்றகலில் வரவழைத்து ஏன் என்று கேட்டான் கார்த்தவீரியன். “நிகரற்ற வீரன் என உன்னை ஏற்றுக்கொள்ள தெய்வங்கள் ஒருப்படவில்லை. அவர்கள் அதற்கு இன்னமும் காலமிருக்கிறது என்றனர்” என்றான். “எனக்கு நிகரான வீரனா? யாரவன்?” என்றான் கார்த்தவீரியன். “உன் குலத்தின் முதல் எதிரிகளான பிருகுலத்தில் பிறந்திருக்கிறான் அவன். அவன் பெயர் பார்கவ ராமன். உன்னைக் கொல்லும் ஆற்றல் அவன் மழுவுக்கு உண்டு” என்றான் எரிதேவன். திகைத்த கார்த்தவீரியன் யாகத்தை கைவிட்டான்.
பெருஞ்சினத்துடன் தன் அரண்மனையில் அனைத்து வைதிகரையும் கூட்டினான். “மண்ணில் எவரும் வெல்லமுடியாத வல்லமையைப் பெறுவது எப்படி?” என்றான். “விண்ணுலாவியான நாரதரே அதற்கு பதிலுரைக்கமுடியும்” என்றனர் வைதிகர். வேள்விசெய்து நாரதரை வரச்செய்தான். அவன் அரண்மனையின் வீணை தானாகவே இசைத்து நாரதரின் குரலை எழுப்பியது. “நாதப்பிரதிஷ்டை செய்து வேதங்களை வழிபடு. பத்ரதீபப் பிரதிஷ்டை செய்து மும்மூர்த்திகளையும் வழிபடு” என்றார் நாரதர். “மூவரும் வேதங்களுடன் ஒரே கணத்தில் தோன்றி அருளினால் நீ வெல்லமுடியாதவனாக ஆவாய்” என்றார்.
நர்மதைநதிக்கரையில் தவக்குடில் அமைத்து தங்கிய கார்த்தவீரியன் மும்மூர்த்திகளையும் வேதங்களுடன் வரவழைப்பதெப்படி என்று தன் மனைவியிடம் கேட்டான். அவள் “மும்மூர்த்திகளுமானவர் தத்தாத்ரேயர். நான்குவேதங்களும் நாய்களாக அவரைத் தொடர்கின்றன. அவரை வழிபடுவோம்” என்றாள். அவனும் அவளும் பன்னிருவருடம் தத்தாத்ரேயரை வழிபட்டார்கள். மூன்றுதெய்வங்களும் மூன்று முகமாக, நான்குநாய்கள் சூழ, ஓங்காரம் வெண்பசுவாக பின்னிற்க தத்தாத்ரேயர் தோன்றி அவன் தவத்துக்கு அருளி என்ன வரம் தேவை என்று கேட்டார்.
“நிகரற்ற வல்லமை. எவராலும் வெல்லப்படாத முழுமை” என்றான் கார்த்தவீரியன். “முதல் அருட்கொடையை கோரும் உரிமை மானுடர்க்குண்டு. இரண்டாவது கொடையை மும்மூர்த்திகளோ மூவர்க்கும் முதலான பிரம்மமோ கூட அருள முடியாது” என்றார் தத்தாத்ரேயர். “நீ நிகரற்றவனாவாய். உன் மைந்தரின் கரங்களும் அவர்கள் மைந்தரின் கரங்களுமாக ஆயிரம் கரங்கள் உன்னில் எழும். அவை உன்னை மண்ணில் நிகரே இல்லா வீரனாக ஆக்கும். ஆனால் வெல்வதும் வீழ்வதும் உன் கையிலேயே” என்றார்.
கார்த்தவீரியன் எழுந்து நர்மதையின் நீரலைகளில் தன் உருவை நோக்கினான். “சஹஸ்ரபாகு” என்று சொல்லிக்கொண்டான். அலைகள் நெளிந்து நெளிந்து எழுந்த படிமத்தில் தன் தோளிலிருந்து எழுந்த ஆயிரம் கைகளைக் கண்டான். வில்லும் வேலும் கதையும் கோலும் பாசமும் மழுவுமென படைக்கலங்களை ஏந்தியவை. ஏடும் எழுத்தாணியும் ஏந்தியவை. யாழும் முழவும் துடியும் பறையுமென இசைக்கருவிகள் சூடியவை. மலைகளைப் பெயர்ப்பவை. மேகங்களை அளாவுபவை. மரங்களைப் பிடுங்குபவை. மென்மலர் கொய்பவை. பெருங்களிற்றின் துதிக்கைகள், வண்ணத்துப்பூச்சியின் உறிஞ்சுகொம்புகள். சினம்கொண்டு எழுந்தவை, அருள்கொண்டு குவிந்தவை…
திகைத்தவிழிகளுடன் அவன் நோக்கி நின்றான். “அரசே, நீ செய்ய முடியாதது என இனி இவ்வுலகில் ஏதுமில்லை. எனவே செய்யக்கூடாதவையும் பலவே. வல்லமை என்பது பொறுப்பே என்றறிக. எந்த உயிரும் தன் எல்லைகளை மீறுவதில்லை. மானுடன் மீறமுடியாத எல்லைகளும் சில உண்டு. அவற்றை மீறாதிருப்பது வரை உன்னை வெல்ல எவராலுமியலாது” என்று சொல்லி தத்தாத்ரேயர் மறைந்தார்.
ஆயிரம் கைகளுடன் விண்ணிலெழுந்த கார்த்தவீரியன் ஒற்றைமரமே காடானதுபோலத் தோன்றினான். அவன் கைகள் திசைகளை எல்லாம் நிறைத்து அலையடித்தன. அவனுடைய பெருவல்லமையைக் காண விண்ணவர் வானிலெழுந்தனர். பேருருவம் கொண்டெழுந்த பெருமாள் அவன் என்றனர் முனிவர்கள். சீறும் பாதாள நாகங்களை உடலெங்கும் சுற்றி படமெடுத்த வாசுகி என்றனர் அசுரர்.
பார்கவ குலத்தவர் எங்கிருந்தாலும் தேடி அழிப்பேன் என வஞ்சினம் உரைத்து கார்த்தவீரியன் கிளம்பினான். ஆயிரம் கரங்களால் அவன் திசைகளின் மூலைகளெங்கும் தேடினான். மலைக்குகைகளிலும் காட்டூர்களிலும் பதுங்கியிருந்த பிருகுக்களை தேடித்தேடி கொன்றான். அந்நாளில் ஒருமுறை அவன் நர்மதை நதிக்கரைவழியாகச் செல்லும்போது அழகிய தவக்குடில் ஒன்றைக் கண்டான். தன் வீரர்களுடன் அங்கே நுழைந்து அங்கு தவம் செய்துகொண்டிருந்த ஜமதக்னியைக் கண்டான். முனிவர் அவனை அடையாளம் காணவில்லை. அவனும் அவரை அறியவில்லை.
ஆயிரம் கைகள் கொண்டவனுக்கு ஜமதக்னி விருந்தளித்தார். ஒருநாளில் அத்தனை பாலை அவர் எங்கிருந்து கறந்தார் என்று கார்த்தவீரியன் வியந்தான். தன் தவவல்லமையால் காமதேனுவின் தங்கையான சுசீலையை தன் தொழுவில் வளர்ப்பதாக ஜமதக்னி சொன்னார். அருங்கொலைசெய்த பாவங்களைப்போக்க பசுவுக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தார் அவர். உடனே அப்பசுவை கவர்ந்து வரும்படி கார்த்தவீரியன் தன் சேவகனாகிய சந்திரகுப்தனுக்கு ஆணையிட்டான். அவனை ஜமதக்னி கைநீட்டி தடுத்தபடி “உண்டவீட்டில் பொருள்கொள்வது பெரும் பிழை… நில்” என்று கூவினார். “நான் பிருகுகுலத்து ருசீகரின் மைந்தனாகிய ஜமதக்னி. ஆற்றல்களை எல்லாம் தவத்தில் ஒடுக்கி அமர்ந்திருப்பவன்…” என்றார்.
பெருநகைப்புடன் திரும்பிய கார்த்தவீரியன் “நான் தேடிய இறுதித்துளி நஞ்சு நீரே. உம்மைக் கொன்று என் பகையை மீதமின்றி அழிப்பேன்” என்று அவரது சடைமுடிக்கொண்டையைப் பிடித்து கழுத்தைவெட்ட தன் வாளை எடுத்தான். “அரசே, இது போரல்ல. நான் போரை நிறுத்தி தவம்புரிய வந்திருக்கிறேன். நெருப்பை ஆளும் என் வல்லமையையும் போருக்கு எழும் என் களமறத்தையும் எல்லாம் தவத்தின் பொருட்டு மறந்திருக்கிறேன். முதுமையை தவத்தால் நிறைத்து என் மூதாதையர் அடிசேர விழைகிறேன். நாம் நம் குலப்பகையை இங்கேயே களைவோம்…” என்று கூவினார்.
“நான்கு தலைமுறைகளாக யாதவர்கள் சிந்திய விழிநீர் இன்றோடு நிலைக்கட்டும். பகையை எஞ்சவிடும் மூடனல்ல நான்” என்று சொல்லி வாளை ஓங்கிய கார்த்தவீரியன் வானில் அதைப் பற்றும் ஒரு கையைக் கண்டான். அது அவன் குலதெய்வமான தத்தாத்ரேயரின் கை. விடுக என அவன் மீண்டும் ஓங்க அந்த வாளை அவன் குலச்சின்னமாகிய கருடன் தன் உகிர்களால் பற்றியிருப்பதைக் கண்டான். மூன்றாம் முறை ஓங்கியபோது அவனுடைய தந்தையான கிருதவீரியனின் கைகள் அதைப்பற்றித் தடுப்பதைக் கண்டான். “நான் மீளா இருளுலகுக்குச் சென்றாலும் சரி, இந்தப் பெரும்பகை இனி எஞ்சக்கூடாது” என்று கூவியபடி அவன் ஜமதக்னியின் தலையை வெட்டினான்.
வெற்றிச்சின்னமாக சுசீலையை இழுத்தபடி அவன் மாகிஷ்மதிக்கு வந்தான். அந்தப்பசுவை தன் கொடிமரத்தில் கட்டிவைத்தான். ஹேகயகுலத்தவரை எல்லாம் வரவழைத்து அந்தப்பசுவை பார்க்கும்படி செய்தான். சுசீலை அதற்கு அளிக்கப்பட்ட எவ்வுணவையும் உண்ண மறுத்துவிட்டது. ஏழுநாட்கள் மாகிஷ்மதியில் வெற்றிக்களியாட்டம் நிகழ்ந்தது. பகையின் வேரறுத்து வந்த அரசனை வாழ்த்தி சூதர்கள் பாடினர். யாதவமூத்தோர் அவனை வாழ்த்தினர். படைகள் மதுவருந்தி களியாட்டமிட்டனர். பெண்கள் புதுமலர் சூடி காதலர்களுடன் இரவாடினர்.
ஏழாம்நாள் கொடிக்கம்பத்தில் சுசீலை இறந்துகிடந்தது. அதன் சடலத்தைப் புதைத்த அன்று மாகிஷ்மதியில் செங்குருதித் துளிகளாலான மழை பெய்தது. மக்கள் அஞ்சி தங்கள் இல்லங்களுக்குள் ஒடுங்கிக்கொண்டார்கள். நடுப்பகலிலும் இருள் வந்ததைக் கண்டு அஞ்சி ஒடுங்கி அமர்ந்திருந்த கோட்டைக்காவலர் பற்றி எரியும் பசுமரம்போல ஒரு தனி பிராமணன் கையில் மழுவுடன் வந்து தங்கள் கோட்டைவாயிலில் நிற்பதைக் கண்டனர். கோட்டையின் கதவில் தன் மழுவால் ஓங்கி வெட்டிய மழுவேந்தி “மாகிஷ்மதியின் மன்னன் என் தந்தையைக் கொன்றான். அவன் இதயம்பிளந்து குருதியை அள்ளிக் குளிக்க வந்திருக்கும் பார்கவ ராமன் நான். அவனை வெளியே வரச்சொல்” என அறைகூவினான்.
“ஒற்றைப் பிருகுவா என்னை எதிர்க்கவந்திருக்கிறான்?” என்று நகைத்தபடி எழுந்த கார்த்தவீரியன் தன் அரண்மனையின் பேராடியில் தன்னைப்பார்த்தான். அதிலெழுந்தன அவன் ஆயிரம் கரங்கள். ஆயிரம் படைக்கலங்களை வீசி ஆர்ப்பரித்து நகைத்தபடி கார்த்தவீரியன் மாகிஷ்மதியின் கோட்டையைத் திறந்து வெளிவந்தான். தன்னெதிரே ஒற்றைச்சிறு மழுவேந்தி நின்ற வெண்ணிறமான சிறுவனை நோக்கி “வெற்றியின் களிப்பைக்கூட எனக்களிக்க முடியாத சிறுவன் நீ. உயிர்வேண்டுமென்றால் தப்பி ஓடு” என்று எச்சரித்தான். “படைக்கலங்களுக்கு வல்லமையை அளிப்பது அறம். என் தந்தையை அரசஅறமும் போரறமும் விலங்கறமும் மீறி நீ கொன்றாய். உன் நெஞ்சைப்பிளக்காமல் என் மழு திரும்பாது” என்றான் பார்கவ ராமன்.
காட்டில் புயல் நுழைந்ததுபோல ஆயிரம் கைகளைச் சுழற்றியபடி கார்த்தவீரியன் பரசுராமன் மீது பாய்ந்து ஆயிரம் படைக்கலங்களை அவனை நோக்கி வீசினான். ஆனால் அவனுடைய ஆயிரம் கைகளும் ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு போரிட்டன. ஒருபடைக்கலத்தை இன்னொரு படைக்கலம் தடுப்பதை அவன் அறிந்தான். வில்லை கதை தடுத்தது. வேலை வாள் தடுத்தது. தங்களுக்குள் போரிடும் படை போல அவன் அங்கே திகைத்து நின்றான். பரசுராமனின் மழுவை அவனால் எதிர்கொள்ள முடியவில்லை. விண்ணெழுந்து சுழன்ற அவன் கைகளை ஒற்றைக்கோடரியால் பரசுராமன் வெட்டிக் குவித்தான்.
வெட்டுண்டு குவிந்து துடித்துக்கொண்டிருந்த தன் கைகளை திகைப்புடன் கார்த்தவீரியன் பார்த்தான். இறைஞ்சும் கைகள், விரித்த கைகள், தொழுத கைகள், இழந்து வெறுமையை காட்டிய கைகள், ஒன்றெனச் சுட்டிய கைகள், ஏன் என்று திகைத்த கைகள். மேலும் மேலும் குருதிகொட்டும் கைகள் வந்து குவிந்தன. இறுதியில் கைகளை இழந்து மண்ணில் சரிந்த கார்த்தவீரியன் தன்தலையை மண்ணை நோக்கிச் சரித்து குப்புற விழுந்தான். அவன் மார்பில் காலால் உதைத்து சரித்து அவன் தலையை வெட்டி வீசினான் பார்கவராமன். அவன் பாறைநெஞ்சைப் பிளந்து அங்கே துடித்த இதயத்தைப் பறித்தெடுத்து அதை தன் தலையில் செந்தாமரை மொட்டு எனச் சூடிக்கொண்டான். அக்குருதியில் தன் உடல்நனைந்து குளித்தான்.
கங்கையின் துணைநதியான ரௌப்யையின் கரையில் பிரசர்ப்பணம் என்னும் ஆற்றிடைக்குறைச் சோலையில் முன்பு அனலின் அதிபரான ஜமதக்னி தவம்செய்த இடத்தில் ஈச்சைஓலைகளைப்பின்னி கட்டப்பட்ட வேள்விப்பந்தலின் அருகே போடப்பட்டிருந்த மரபீடத்தில் அமர்ந்து தன் யாழைமீட்டியபடி சூதரான ஜாங்கலர் கார்த்தவீரியனின் கதையை சொல்லி முடித்தார். “மாவீரனாகிய கார்த்தவீரியன் கொல்லப்பட்டதைக் கண்டு விண்ணிலெழுந்த தேவர்கள் அழுதனர். அது அக்குருதிநிலத்தின்மேல் இள மழையாகப் பொழிந்தது. நாகங்கள் துயர்கொண்டு சீறின. அக்காற்று அங்கே மரங்களை உலைத்தபடி கடந்துசென்றது. சூரியனின் துயரம் செந்நிறமாக வானில் விரிய அதன் மேல் இந்திரவில் எழுந்தது.”
மாகிஷ்மதியின் மக்கள் கண்ணீருடன் வந்து தங்கள் அரசனின் உடல்தொகையை சூழ்ந்துகொண்டனர். பெரும்படையொன்று சிதறியதுபோல ஊன்வெளியாகக் கிடந்த அவன் உடலை அள்ளி சந்தனச்சிதையில் ஏற்றி எரியூட்டினர். அவ்வெரியில் தோன்றி மறைந்த பல்லாயிரம் முகங்களில் நான்கு தலைமுறைக்காலமாக எரியில் வெந்தழிந்த தங்கள் முன்னோர்கள் அனைவரும் தெரிவதைக் கண்டு அவர்கள் நெஞ்சில் அறைந்துகொண்டு கதறி அழுதனர். வெண்புகையாக அவன் விண்ணேறிச்சென்றதைக்கண்டு அவர்கள் ஓலமிட்டனர்.
“மாகிஷ்மதியை அன்றே ஹேகயகுலம் கைவிட்டது” என்றார் ஜாங்கலர். “கூட்டம்கூட்டமாக யாதவர்கள் அங்கிருந்து கிளம்பி வடதிசைக்கும் தென்திசைக்கும் செல்லத்தொடங்கினர். சிலர் தண்டகாரண்யம் கடந்து வேசரநாட்டுக்குச் சென்றனர். அங்கே வறண்டநிலத்தில் கன்றுகளைமேய்த்து வாழ்ந்தனர். சிலர் யமுனைக்கரையின் மழைக்காடுகளுக்குள் தங்கள் பசுக்களுடன் ஒளிந்து வாழத்தொடங்கினர். அவ்வாறாக யாதவகுலத்தவர் தங்கள் அரசையும் நகர்களையும் இழந்து மீண்டும் வெறும் ஆயர்களாக மாறினர்” என்றார் ஜாங்கலர்.
ஆனால் அவர்கள் ஒவ்வொருவரின் நினைவிலும் கார்த்தவீரியன் வாழ்ந்தான். அவனைப்பற்றிய கதைகளை அவர்கள் தங்கள் மைந்தர்களுக்குச் சொன்னார்கள். ஒருநாள் யாதவர்கள் தங்கள் இழந்த அரசை மீட்டெடுப்பார்கள் என்றும் மறைந்த பெருமைகளெல்லாம் மீண்டுவருமென்றும் சொன்னார்கள். யாதவகுலத்தை மீட்க மீண்டும் ஆயிரம் பெருங்கரங்களுடன் கார்த்தவீரியன் பிறந்துவருவான் என்று மூதாதையர் மைந்தர்களுக்கு சொல்லிச்சென்றனர். எங்கோ மலைக்குகை ஒன்றில் சிறுமைந்தனாக அவன் சிம்மங்களுடன் விளையாடிக்கொண்டிருக்கிறான் என அன்னையர் குழந்தைகளுக்கு கதைசொன்னார்கள்.
ஜாங்கலர் தொடர்ந்தார் “பார்கவராமன் நடந்துசென்ற ஒவ்வொரு பாதச்சுவடிலும் கார்த்தவீரியனின் குருதியும் நிணமும் சொட்டிவிழுந்தது. அவை விதைகளாகி செடியாகி எழுந்து மரமாயின. செந்நிறமான மலர்கள் பூக்கும் அசோகமரமாக ஆயின. அசோகமரத்தடியில் அவர்கள் ஆயிரம்கரங்கள் கொண்டவனை நெடுங்கல்லாக நிறுவி செந்நிறக் குங்குமமும் செந்தூரமும் பூசி வழிபட்டனர். அவன் கொல்லப்பட்ட ஃபால்குனமாத பஞ்சமிநாளில் அவனுக்கு வெண்கன்றை பலிகொடுத்து ஊன்சமைத்துப் படையலிட்டு வணங்கினர். யாதவகுலத்து மைந்தருக்கு ஒரு வயதாகும்போது அசோகமரத்தடியில் அமர்ந்த ஆயிரம்கரத்தோன் முன் அமர்த்தி வேலால் தோளில் குலச்சின்னம் எழுதி முடிகளைந்து பூசையிட்டு அவனை போர்வீரனாக்கினர்.”
“அழியாத புகழ்கொண்ட கார்த்தவீரியனை வணங்குக. அவன் ஆயிரம் தடக்கைகளை வணங்குக. அவனுடைய ஒளிமிக்க விழிகளை வணங்குக. அவன் சொற்கள் நம் நெஞ்சில் அச்சமின்மையை அளிப்பதாக. ஓம் அவ்வாறே ஆகுக” என்று ஜாங்கலர் வணங்கி யாழை விலக்கினார். அவர் எதிரே அமர்ந்திருந்த துரியோதனன் பெருமூச்சுடன் சற்று அசைந்து அமர்ந்தான். துச்சாதனன் தமையனையே நோக்கி அமர்ந்திருந்தான்.
“அரசே, இந்த பத்ரதீப பிரதிஷ்டை அன்று மாமன்னனாகிய கார்த்தவீரியன் செய்தது. அவனை ஆயிரம் கைகள் கொண்டவனாக ஆக்கியது இதுவே. உங்களையும் இது நிகரற்ற ஆற்றல்கொண்டவனாக ஆக்கும்” என்றார் வைதிகரான திரிகங்கர். “இவ்வேள்வியை முழுமைசெய்யும்போது நீங்கள் ஒன்றை மட்டும் நெஞ்சில்கொள்ளுங்கள். எது கார்த்தவீரியனை வீழ்த்தியதோ அப்பெரும்பிழையை நீங்கள் செய்யலாகாது. போரறமும் குலஅறமும் விலங்கறமும் மாறக்கூடியவை. மாறாதது மானுட அறம். அதன் எல்லைக்கோட்டை ஒருபோதும் மீறாதிருங்கள்” என்றார்.
துரியோதனன் தலையசைத்தான். “மூன்று நெருப்புகளும் முழுமையடைந்துவிட்டன இளவரசே. வந்து அவியளியுங்கள்” என வைதிகரான நந்தகர் அழைத்தார். துரியோதனன் எழுந்து கங்கையில் மூழ்கி எழுந்து ஈரம் சொட்டும் உடைகளும் குழலுமாக சென்று தர்ப்பைப்பீடத்தில் அமர்ந்துகொண்டான். திரிகங்கர் அவனுக்கு வலப்பக்கம் அமர இடப்பக்கம் நந்தகர் அமர்ந்தார். “எரியை மட்டும் நோக்குங்கள் இளவரசே. இது பூதயாகம். இங்கே உங்கள் நெறி சற்று வழுவினாலும் சொல் சற்று பிழைத்தாலும் அகம் சற்று விலகினாலும் எரி எழுந்து உங்களையே சுட்டுவிடும் என உணருங்கள்” என்றார் திரிகங்கர்.
அதர்வவேதத்தின் நாதம் காளையின் குரல்போலவும் கழுகின் குரல்போலவும் குகையின் எதிரொலிகள் போலவும் எழுந்து சூழ்ந்துகொண்டிருக்க அழல்நடனத்திலிருந்து விழிகளை எடுக்காமல் துரியோதனன் அவியை அளித்தான். சுவையை அறிந்த நெருப்பின் நாக்கு மேலும்மேலும் என எழுந்தது. அவன் தலைக்குமேல் அதன் நாளங்கள் நெளிந்து படபடத்தன. நெய்யும் அன்னமும் ஊனும் கலந்து எரிந்த வாசனையை அள்ளிச்சுழற்றிய கங்கையின் காற்று நெடுந்தொலைவில் இருந்த மிருகங்களைக்கூட வெருண்டு ஓசையிடச்செய்தது.
அவியூட்டல் முடிந்ததும் “எழுந்து மூதாதையரை மும்முறை வணங்கி நீர்கொண்டு கங்கையை அடைந்து நீரோட்டத்தில் விடுங்கள்” என்றார் திரிகங்கர். துரியோதனன் வணங்கி செம்புக்குடுவையில் இருந்த நீரை எடுத்துக்கொண்டு சென்று கங்கையில் விட்டு மூன்றுமுறை தொட்டு கும்பிட்டான். புகை நுழைந்த நெஞ்சு கனத்து கண்கள் சிவந்து வழிந்தன. தலை கழுத்தை ஒடிப்பதுபோல கனத்தது. கங்கையை மும்முறை வணங்கி எழுந்தபோது ஒருகணம் அவன் கால்கள் தடுமாறி கண்கள் இருட்டின. சித்தத்தை நிலைபெறச்செய்து கால்களை அழுந்த ஊன்றி நீரை நோக்கியபோது அதில் நூறு இணைப்பெருங்கரங்களுடன் தன்னுருவைக் கண்டு திகைத்து நின்றான்.