அசைவம் – இரு கடிதங்கள்

ராஜ் ஜெயராமனின் பார்வை மிகச் சரியானது.

அசைவ உணவை ஒழிக்க, அதை ”உற்பத்தி” செய்ய ஆகும் தானியம், நீர் மற்றும் சக்தியை அவர் சுட்டிக் காட்டியிருக்கும் வாதமே (உயிர்க் கொலை என்பதை விட) வலுவானதாக எனக்குத் தோன்றுகிறது.

அதே தரவை பால் உற்பத்திக்கும், நுகர்வுக்கும் சொல்லலாம். இதை அவர் கடிதம் சரியாகச் சொல்கிறதா என எனக்கு விளங்கவில்லை, எனவே எழுதுகிறேன்.

பாலும் பால் பொருட்களுமே இல்லாமல் வாழ்வதும் ஒரு கருணைதான். பாலில் கொலஸ்ட்ரால் உள்ளது – அது விலங்குப் புரதம் -தாவர எண்ணெய்களில் இல்லை – அளவுக்கு அதிகமான அளவு பால் மற்றும் பால் பொருட்கள் உட்கொள்வதும் கேடு.

எனவே மனித நுகர்வின் அதீதத்தை, மாமிசம் என்று மட்டும் வகுத்துக் கொள்ளாமல், “சக்தி” என்னும் அலகில் கணக்கிடும்போது, மிகச் சரியான பார்வை கிடைக்கும் எனக் கருதுகிறேன்.

எளிமையாகச் சொல்ல வேண்டுமெனில், ஐ.பி.எல் மேட்ச்கள் விளையாடப் படும் மாநகரங்களில் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கிறது. அதே போல், வேளாண்மைக்குக் கிடைத்தால், என்ன? உணவு உற்பத்தி முக்கியமான சதவீதம் அதிகரிக்கும். மொத்தம் 12000 மெகாவாட் தமிழகத்தின் மின்சாரத் தேவை – அதில் 3000 மெகாவாட் சென்னையின் தேவை என்கிறார்கள் – இதில் எவ்வளவு உற்பத்திக்கு எவ்வளவு நுகர்வுக்கு என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. வேளாண்மைக்கு இல்லாமல், வெறும் நுகர்வுக்காக மின்சாரம் கடத்திச் செல்லப் படுவதும் ஒருவிதமான அசைவ நாகரீகம் தான்.

இதை “அவன நிறுத்தச் சொல்; நான் நிறுத்தறேன்” ந்னு வேலு நாயக்கர் பாணி சப்பைக் கட்டாக எழுதவில்லை. இந்த நிலைக்கு நானும் ஒரு காரணம் என்றே நினைக்கிறேன். எனது 13 வயதில் தான் மின்சாரம் வந்தது – மின்விசிறி என்னும் “சக்தி” இயந்திரம் என் வாழ்க்கையில் துவங்கியது. இன்று என் குழந்தைகள் குளிர்சாதனக் கருவியின்றித் தூங்குவதில்லை. பல மடங்கு அதிக சக்தி நுகர்வு.

ஐரோப்பாவில் வந்த தொழிற் புரட்சியும், அதனால் கண்டுபிடிக்கப் பட்ட பல நுகர்வுக் கருவிகள் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியதையும் விதந்தோதும் போது, “இந்த அதிகச் “சக்தி” உபயோகிக்கும் வாழ்க்கை முறை நிலையானது (not sustainable) ” என்று அவர் (வேற யார், நம்ம குஜராத்திக் கிழம் தான்) சொன்னதாகப் படித்திருக்கிறேன்.

ஃபூகோக்காவும், இந்தத் தொழிற்சாலை போல் மனித உணவுக்காக விலங்குகள் வளர்க்கப் படுவதை மறுத்து எழுதியிருக்கிறார். பண்ணையில், கழிவை உண்டு வாழும் கோழிகள் பறவைகளே போதும் என்பது அவர் கட்சி. உண்மைதான், எங்கள் வீட்டிலும் கோழிகள் இருந்தன. இன்று நாங்கள் வேளாண்மையை நிறுத்தி விட்டு, ப்ராய்லர் கோழி வாங்குகிறோம்.

நிச்சயமாக அசைவ உணவை நிறுத்தலாம். நுகர்வையும் குறைக்கலாம்.

பாலா


அன்புள்ள ஜெ,

வணக்கம்.

நான் முப்பதுகளின் தொடக்கத்தில் உள்ள ஒரு தகவல் தொழில்நுட்பப் பொறியாளன். வம்சாவழி முறையில் ஊன் உண்ணுதலையும் தனிப்பட்ட முறையில் இறை மறுப்பாளனாகவும் வாழ்ந்து வருகிறேன். என் தனிப்பட்ட கருத்துக்களை பிறர்பால் தினிப்பதுமில்லை எனக்கு ஒவ்வாத கருத்துக்களை என் அகத்திற்குள் அனுப்பவதுமில்லை. நான் நன்கறியாத எண்ணற்ற பொதுநல விஷயங்களைப் பற்றி விவாதிப்பதுமில்லை (அரசியல் உட்பட). இருபதுகளில் இருந்த இறுமாப்பும் அவசரமும் அனுபவம் காரணமாக மெல்ல மெல்ல முதிர்ச்சி அடைந்திருக்கிறது. (இப்போதுள்ள) ஐரோப்பியர்களைப் போன்ற ஒரு மனநிலை வாய்த்திருப்பதாக நினைக்கிறேன்.

சுமார் இரண்டு மாதத்திற்கு முன்பு தற்செயலாய் தேனீக்களைப் பற்றி ஆனந்த விகடனில் படித்தேன். மகரந்தச்சேர்க்கையின் அறிவியலும் தேனீக்களின் வாழ்க்கை முறையும் என்னை வெகுவாகக் கவர்ந்து அதுசார்ந்த ஊடகங்களை தேடிச்சென்றேன். அது இன்னும் இன்னும் என்று பலவகைகளில் பரிமாணித்தது. முதல் இரு வாரங்கள் Pescatarian-ஆக இருந்தேன். என் தேடல் என்னை Vegan-இல் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது. கடந்த ஒரு மாதமாக Veganism கடைபிடித்து வருகிறேன். முயன்று வருகிறேன் என்பதே உண்மை. பயணம் காரணமாக பால் சார்ந்த உணவுகளையும் பெல்ட், சோப்பு என்று சில விலங்குகளின் செயற்கைப் பங்களிப்புகள் இப்போதும் உள்ளன. மெல்ல மெல்ல அவைகளிலிருந்தும் விடைபெற்று வருகிறேன்.

இந்தியாவில் வசிக்கும் எந்தவொரு சராசரி குடிமகனுக்கும் Veganism என்பது ஒரு மிகப்பெரிய சவால். அதுவும் வாரம் ஐந்து நாட்கள் கடையில் உணவருந்தும் என்னைப் போல. நான் மிகுந்த மனநிறைவோடிருப்பதால் இனியும் இது சாத்தியமே என்று உணர்கிறேன் (குறைந்தபட்சம் சைவ உணவு மட்டும் உண்பவனாக). என் மனைவி மற்றும் குடும்பம் இதை ஏற்றுக்கொண்டு விட்டனர். என் வழியைப் பின்பற்றுமாறு எவரிடமும் சொன்னதுமில்லை எதிர்பார்ப்பதுமில்லை. பலமுறை கேலிக்கு உள்ளான போதும் கூட. இருபதுகளில் நானே பலமுறை சைவ உணவு உண்பவர்களை கிண்டலடித்துப் பேசியிருக்கிறேன். இப்போதெல்லாம் மாற்று வாழ்வுமுறையை மதித்து எவரிடமும் வாதம் வளர்க்க முற்பட்டதில்லை (எதேச்சையாக நன்மை தீமைகளைப் பற்றி பேசியதைத் தவிர).

ஆனால் யோசித்துப் பார்க்கும் போது என் சித்தாந்தம் மிகச்சரியானது என்றும் எல்லா மனிதர்களும் இதைப் பற்றிய குறைந்தபட்ச அறிவையாவது பெற்றிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். என் கேள்விகள் நியாயமானவை. விவாதத்திற்குரியவை. Veganism பற்றி எங்கு எதைப் படித்தாலும் அது ஒரு வழிப்பாதையாக மட்டுமே இருக்கிறது. பிறர் சீண்டாத அல்லது சீண்ட விருப்பப்படாத ஒரு மார்க்கமாக தனித்தே நிற்கிறது.

ஒரு முதிர்ச்சியற்ற விவாதமாக – கொசுக்களை கொல்ல மாட்டீர்களா, உங்களை தாக்க வரும் மிருகத்தை என்ன செய்வீர்கள், மது புகையிலை பழக்கத்தைப் பற்றி என்ன நினக்கிறீர்கள் என்றே விவாதங்கள் உள்ளன. என்னையோ என் குடும்பத்தையோ காயப்படுத்த வரும் எந்தவொரு உயிரினத்தையும் நான் ஜீவகாருண்யம் கொண்டு பார்ப்பதில்லை. அது தற்காப்பு. எந்தவொரு உயிரினத்திற்கும் பொதுவானது.

இறைவனோ இயற்கையோ – எல்லா படைப்பிலும் மகத்துவம் இருக்கிறது. அறிவியல் இருக்கிறது. ஆச்சர்யம் இருக்கிறது. மனிதனின் ஆறாம் அறிவென்பது அடக்கி ஆளவே முற்படுகிறதா? மனிதன் மாமிசத்தை சமைத்து சாப்பிடுவதிலிருந்தே அது ருசிக்காக மட்டுமேயன்றி உயிர்வாழ அல்ல என்று புலப்படவில்லையா? இந்து மதத்தில் சைவத்தின் மகத்துவம் பற்றிய உண்மைகளை நாம் உணரவில்லையா? உணர முற்படவில்லையா? வாரம் இரு நாட்கள் அசைவம் சாப்பிடாமல் பகவானை திருப்திப்படுத்த நினைப்பவர்கள் முழுமையாக அசைவம் விடுத்து குற்ற உணர்ச்சி அற்றிருக்கலாமே? மனிதநேயம் ஒன்றே போற்றப்படுவது முறையா? மனிதனை விட அறிவில் உயர்ந்ததொரு ஜீவராசி உலகில் தோன்றினால் அவை மனிதனை உணவாக உடையாக கேளிக்கையாக விளையாட்டாக ஆராய்ச்சியாக பயன்படுத்தினால் அது அறமா?

Veganism அல்லாதவர்கள் எல்லாம் குற்றவாளிகள் என்று சொல்லவில்லை. மாபெரும் தலைவர்கள் தலைசிறந்த மனிதர்கள் என போற்றத்தக்க பலரும் (கிட்டத்தட்ட 95%+) non-vegans ஆகத்தான் இருக்க முடியும். ஆக, இது வெறும் மனம் சார்ந்த தேடல் மட்டும்தானா?

நேரமிருக்கும்போது தங்கள் கருத்துக்களைப் பகிரவும். முடிந்தால் More than honey ஆவணப்படத்தைக் காணவும்.

நன்றி.

– ஜெகதீசன்

முந்தைய கட்டுரைபெண் ,ஒழுக்கம், பண்பாடு:இரு கேள்விகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 24