ஷோலே

திரைப்படம்

நாகர்கோயில் பயோனியர் முத்து திரையரங்கம் இப்போது ஒரு சாக்கடை ஏரி அருகே பலான படங்கள் போடப்படும் அரங்கமாக உள்ளது. அந்தச்சாலையே இப்போது முக்கியத்துவம் இழந்துவிட்டது. காரணம் அந்த ஏரிதான். அது சோழர் காலகட்டத்தில் வெட்டப்பட்டது. பலநூறு ஏக்கர்களுக்கு பாசனம் அளிப்பது. நகரத்தின் நடுவில் இருப்பதனால் அதன் மீது அரசியல்வாதிகளின் கண்விழுந்தது. பத்துவருடங்களாக நகரத்தின் மொத்தச் சாக்கடையும் அதற்குள் விடப்படுகிறது. இப்போது அது நாறி அப்பகுதியையே அழுகவைத்துவிட்டிருக்கிறது. அதை மூடும்படி பொதுமக்களே கோர, அதை வணிக வளாகமாக ஆக்குவதற்கான முயற்சிகள் நடக்கின்றன.

எண்பதுகளில் அழகிய நீலநீர்வெளியை நோக்கி நிமிர்ந்து நிற்கும் கம்பீரமான திரையரங்கமாக இருந்தது பயோனியர் முத்து. நாகர்கோயிலில் முதல்முறையாக தூண்களே இல்லாமல் அகலத்திரையுடன் கட்டப்பட்ட அரங்கு அது. இருபடங்கள் அந்த அரங்கின் கம்பீரத்தை எடுத்துக்காட்டுவனவாக இருந்தன அன்று.  அவை மீண்டும் மீண்டும் திரையிடப்படும். ஒவ்வொரு முறையும் பெரும் வெற்றியும் பெறும். அவற்றை  அகலத்திரையில் பார்ப்பது ஒரு பெரிய அனுபவமாக அமைந்திருந்தது. ஒன்று ‘மெக்கன்னாஸ் கோல்ட்’. இன்னொன்று ‘ஷோலே’.

ஷோலே எழுபத்தெட்டில்தான் தமிழகமெங்கும் திரையிடப்பட்டது என்று நினைக்கிறேன்.  அப்போது நான் பதினொன்றாம்வகுப்பு மாணவன்.ஒரு பேச்சுப்போட்டிக்காக நாகர்கோயிலுக்கு வந்தபோது ஷோலேயின் சுவரொட்டிகளைப் பார்த்தேன். பயோனியர் முத்து அரங்கின் முன் அமிதாப் பச்சன் நிற்கும் பெரிய சுவரொட்டியை. அப்போது அப்படம் நாற்பத்தைந்து நாள் ஓடியது- அது நாகர்கோயிலில் ஒரு அசாதாரணமான சாதனை. நான் புகுமுகக் கல்லூரி வகுப்பை மார்த்தாண்டம் கிறித்தவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது மீண்டும் ஒரு கட்டுரைப்போட்டிக்காக நாகர்கோயில் வந்தேன், அப்போதும் ஷோலெ ஓடிக்கொண்டிருந்தது. இரண்டாவது முறையாக. 1979ல் நாகர்கோயில் பயோனியர் குமார்சாமிக் கல்லூரியில் வணிகவியல் வகுப்புக்குச் சேர்ந்த போதும் மூன்றாம் முறையாக ஷோலே ஓடிக் கொண்டிருந்தது.  இம்முறை நூறுநாள் ஓடியது.

நானும் ஏழு நண்பர்களும் சுருக்க வழியாக நடந்து மதியக்காட்சிக்கு வந்தோம். அப்போது எழுபதுநாள் தாண்டியிருந்தபோதும் நீண்ட வரிசை.கையில் புத்தகங்களுடன் வெயிலில் வியர்த்து காத்து நின்றோம். நான் அப்போதெல்லாம் வேட்டிதான் கட்டியிருப்பேன். அதை தூக்கி முகத்தை துடைத்துக் கொண்டு எம்பி எம்பி சீட்டுத்துளை திறப்பதை பார்த்தேன். ‘கணபதியே வருவாய் அருள்வாய் ‘ என பயோனியர் முத்து இன்றளவும் விடாத சீர்காழியின் பாடல். அதைக் கேட்டதுமே வரிசை கலைந்து அடிதடி, நெரிசல், பிதுங்கல். பிரக்ஞை மீண்டபோது நானும் நண்பர்களும் உள்ளே சென்று விட்டிருந்தோம். டிக்கெட் உள்ளங்கையில் கசங்க இறும்பூது எய்தி ஓஒ என்று ஊளையிட்டபடி நேராக அரங்கை நோக்கி ஓடினோம்.

பயோனியர் முத்து அரங்கில் மட்டும்தான் அன்று திரைக்கு முன் இன்னொரு திரை உண்டு. அதன் சிவந்த அலைகளைப் பார்த்தாலே இன்பக்கிளர்ச்சி. உற்சாகம் தாளமுடியாமல் ஊ…என்று உளை. சட்டையை கழற்றி இடுப்பில் கட்டிவிட்டோம். மின்விசிறிகாற்றில் வியர்வை உலர்ந்துகொண்டிருக்க அரங்கு நீர் பெருகும் குளம் போல சரசரவென நிறைந்து ததும்பியது. மேலே தகரக்கூரைக்குவட்டில் விம்ம்ம் என்ற ரீங்காரம். சற்று நேரத்தில் சட்டைகளை மீண்டும் போட்டுக் கொண்டு ஒரு சுக்குப்பால் ஐஸ் வாங்கி சூப்பினோம்.

செந்திரைமேலேயே பிள்ளையார் படம் போட்டு சீர்காழி மீண்டும் கணபதியே வருவாய் என்று பாடியபோது திரை மேலே எழுந்து வெள்ளித்திரைமேல் பிள்ளையார் தெரிந்தார். ஊளைகள், நடனங்கள், சட்டையை சுழற்றியபடி ஆனந்த எக்களிப்புகள். தயவுசெய்து புகைபிடிக்காதீர். அதன் பின் கிட்டத்தட்ட பத்துவருடம் தொடர்ந்து ஓடிய பார்லே குளூகோ பிஸ்கெட்டின் டிங் டிடிங் விளம்பரத்தின் கடைசி காட்சியில் குழந்தை உதட்டை சூப்பிக்காட்டி உறைந்தது. எம்ஜிஆர் சிவாஜி படம்போட்ட சைக்கிள் கடை , மிட்டாய்கடை விளம்பரங்களுக்கு ரசிகர்களின் போட்டி ஊளை. அதன் பின் நடுங்கும் சென்ஸார் சர்டி·பிகேட். ”மக்கா லே பதினெட்டு ரீலுலே” என்ற கூக்குரல் முன்வரிசையில்.

படம் போட்டார்கள். அகன்ற திரையில் நான் பார்த்த முதல் படம் அது. உண்மையிலேயே அந்த ரயிலை அரங்குக்குள் பார்ப்பதுபோலிருந்தது. இரும்புச் சக்கரங்களின் உக்கிரமான தட் தடக் ஓசை. பின்னர் நான் இந்த உலகிலேயே இல்லை. அந்த ரயில் சண்டைக்காட்சி முடிந்தபோது விசித்திரமான கனவு ஒன்று முடிந்தது போல உணர்ந்தேன். ‘ஏ தோஸ்தி ‘ பாடலில் மொத்த பாட்டு முழுக்க அவர்கள் இருவரும் சாலையிலேயே விரைவதும், அந்த மொட்டைப்பாறைகளும் வெயிலும் காய்ந்த நிலமும் எல்லாமே கனவுகள்.. மீண்டும் மீண்டும் மூன்றுவருடங்கள் அந்தக்கனவில் இருந்திருக்கிறேன். பயோனியர் முத்துவை ஷோலேயை பற்றி நினைக்காமல் தாண்டிச்செல்ல்ல முடியாது.

பின்பு 1986 ல் காஸர்கோட்டில் ஷோலேயை மீண்டும் பார்த்தேன். முதல்தர மலையாளப்படங்களைப் பார்த்து முதிர்ந்துவிட்டிருந்தேன். உலகத்தின் சிறந்த படங்கள் என்று சொல்லப்பட்டவற்றில் கணிசமானவற்றை பார்த்திருந்தேன். வாசிப்பு முற்றி எழுதவும் ஆரம்பித்துவிட்டிருந்தேன். அனைத்தையும் விட முக்கியமாக மங்களூருக்குச் சென்று ஷோலேக்கு முன்னோடியாக அமைந்த  கௌபாய் படங்களை நிறைய பார்த்துத் தள்ளியிருந்தேன். செர்ஜியோ லியோனீன் Once Upon a Time in the West கூட பார்த்துவிட்டிருந்தேன்.எனக்கு நல்ல படங்களை அறிமுகம்செய்த பிரதீப் ”வாடே …சும்மா கொஞ்சநேரம் மூளையில்லாமல் ஜாலியாக இருந்து வரலாம்” என்று கூட்டிச்சென்றான்.

ஆச்சரியமாக அந்தக் கனவு சில நிமிடங்களுக்குள் மீண்டும்  என்னுள் நிறைந்தது. இப்போது அந்த ரயில் சண்டையில் சண்டையை விட நிலப்பகுதியே மனதைக் கவர்ந்தது. தண்ணீர்தொட்டி மேல் ஏறி நின்று தர்மேந்திரா செய்யும் காதல்போராட்டம். அந்தப்படம் மீது எனக்கு விமரிசனமே எழவில்லை. திரும்பிவரும்போது பிரதீப் என்னிடம் ”படம் உனக்கு பிடித்திருந்ததா?” என்றான். ”ஆமாம்” என்றேன். ”அமிதாப் இறந்தபோது நீ கண்கலங்கியதைப் பார்த்தேன்” என்றான். ”உன்னிடம் ஒரு சின்னப்பையன் இருக்கிறான். அவன் இருக்கும்வரை நீ வரட்டு அறிவுஜீவி ஆகமாட்டாய். நல்ல கலைஞனாக இருப்பாய்…வைல்ட் வெஸ்ட் படங்கள் நம்முள் இருக்கும் பத்துவயசுப்பையன் பார்க்க வேண்டியவை…”என்றான். நான் அந்தவாரமே கிளம்பி சம்பல்நிலத்தை நேரில்பார்க்கச் சென்று நாற்பது நாள் கழித்துத்தான் மீண்டேன்.

நேற்று டிவிடி கடையில் ஷோலேயைப் பார்த்ததும் வாங்கிவிட்டேன். அதைப்பற்றி ஒன்றுமே சொல்லாமல் பிள்ளைகளுடன் அமர்ந்து பார்த்தேன். சின்னத்திரைக்குள் அதே ரயில். அதே வரண்ட நிலம். அதே லொடலொட ஹேமமாலினி, துருதுருவென்று தர்மேந்திரா,படுத்தே இருக்கும் அம்பிதாப் பச்சன்….படம் முடிந்தபின் படத்தைப்பற்றி பிள்ளைகளிடம் பேச வேண்டுமென எண்ணினேன். அவர்கள் இன்றைய மிகப்பிரம்மாண்டமான படங்களுக்கும் உலகத்தரமான கலைப்படங்களுக்கும் மிகவும் பழகிவிட்டிருந்தவர்கள். அவர்களை ஷோலே கவர்கிறதா என்று பார்க்க விரும்பினேன்.

சைதன்யாதான் எப்போதுமே கறாரான விமர்சகர். ”எப்டி பாப்பா, படம்?” ”நல்ல படம்பா…வெஸ்டர்ன் படங்களைப் பாத்து எடுத்திருக்காங்க…ஆனா என்னமோ நல்லா இருக்கு..” அஜிதன் ”பழைய படம்னாலும் சூப்பரா இருக்கு அப்பா”என்றான். அவர்களுக்கு பிடித்த காட்சிகள் என்னென்ன என்று விரிவாக விசாரித்தேன். முதல் விஷயம் அந்த நிலக்காட்சிகள் அவர்களுக்கு ஒரு உண்மைவாழ்க்கைக்குள் சென்ற உணர்வை அளித்திருந்தன. ரயில்தாக்குதல் காட்சி பரபரப்பானதாக இருந்தது. யே தோஸ்தி பாடலில் உள்ள உற்சாகம் பிடித்திருந்தது. கப்பர் சிங்கின் நக்கலான வசன உச்சரிப்பும் சட் சட்டென்று மாறும் முகபாவனைகளும் கவர்ந்திருக்கின்றன. தாக்கூர் தன் இல்லாத கையை காடும் காட்சியும் தர்மேந்திரா தண்ணீர்தொட்டிமேல் ஏறி நின்று சலம்பும் காட்சியும் பிடித்திருந்தன.

ஆனால் அமிதாப் பச்சன் வரும் எல்லா காட்சியும் மனதைக் கவர்ந்தன. அவர் மௌத் ஆர்கன் வாசிக்கும் காட்சிகள் எல்லாமே பிடித்திருந்தன. அமிதாப் இறக்கும் காட்சியில் மிக இயல்பாக நம்பகமாக அவர் நடித்திருந்தார் என்றார் அஜிதன். படத்தின் உச்சகட்ட காட்சியை அந்த அளவுக்கு ஆவேசமாக ஆக்கியதே அவரது இறப்பில் உள்ள நம்பகத்தன்மைதான் என்றான். ஆம், முப்பது வருடம் முன்பு நான் அடைந்த அதே உணர்வுகளும் அதே எண்ணங்களும்தான். நான் டீ போட்டுக் கொண்டிருந்தபோது அஜிதன் ”அரே ஓ சம்பா!” என்று கூவி ஏதோ சொல்வதைக் கேட்டேன். அந்த வசனம் அப்படியே இப்போதும் தொற்றிக்கொள்கிறது.

ஷோலே வெளிவந்தபோது கடுமையான விமரிசனங்கள் வந்தன என்பதை சுந்தர ராமசாமி வீட்டு மாடியில் கட்டுகட்டாக கிடந்த இலஸ்டிரேடட் வீக்கிலி இதழ்களை படித்த நாட்களில் உணர்ந்தேன். இப்போது அது எப்படியோ ஒருவகை கிளாஸிக் ஆக மாறிவிட்டிருக்கிறது. அந்த பிரமிப்பூட்டும் வெற்றியின் காரணம் என்ன? அதை அவ்வளவு எளிதாக நம்மால் ஊகிக்க முடியாது. அது நம்முள் உறையும் சிறுவர்களுக்கான படம் என்பதே முதல் காரணம். அதை நிகழ்த்தும் பல கூறுகள் தற்செயலாக அதில் முயங்கின. ஒன்று அமிதாப் பச்சன் தர்மேந்திரா ஜோடியின் வேறுபட்ட குணச்சித்திரங்கள். அது அவர்களின் இயல்பேகூட. அது படம் முழுக்க வெளிப்பட்டபடியே இருந்தது. அது திரைக்கதை, இயக்கம் ஆகியவற்றை மீறி திரைப்படத்தில் நிகழும் ஒரு விஷயம்.

இன்னொன்று, அமிதாப்-ஜெயபாதுரி, தர்மேந்திரா-ஹேமமாலினி ஜோடிகளின் உண்மையான காதல் அவர்களின் முகங்களில் உடல்மொழியில் தெரிந்தது. சினிமாவில் இதை குறிப்பாகச் சொல்வார்கள். திரைஜோடிகள் உண்மையான காதலில் இருந்தால் அது எப்படியோ திரையில் தெரிந்து ரசிகர்களை கவர்கின்றது. காரணம் சினிமா என்பது குளோஸ் அப் காட்சிகளின் கலை. இல்லாத காதலை செய்திகளில் கிளப்பிவிடுவதன் நோக்கமும் இதுவே. அமிதாப் ஜெயபாதுரி காதல் வெறும் பார்வைகளாகவே நிகழ தர்மேந்திராவும் ஹேமமாலினியும் வளவளவென பேசியே காதலிக்கும் முரண்பாடும் சரியாகப் பொருந்தி வந்திருந்தது.

எனக்கென்னவோ சினிமாவில் முக்கியமான ஒரு அம்சம் பற்றி விமரிசகர்கள் அதிகம் பேசியதில்லையோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. அறிவுஜீவி விமரிசகர்கள் அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதுமில்லை. சினிமா மனிதர்களை மிக அணுக்கமாகக் காட்டுகிறது. சினிமாவில் தெரியும் மனிதர்களை நாம் கூர்ந்து கவனிக்குமளவுக்கு பிற எவரையுமே கவனித்திருப்பதில்லை. ஆகவே நடிகர்களின் உடல்மொழி சினிமாவின் முக்கியமான அம்சம். கரு, கதை, திரைக்கதை, இயக்கம், காமிரா நுட்பங்கள் அனைத்தையும் விட முக்கியமான அம்சம் இதுவே. நேரடியாக ரசிகனின் ஆழ்மனதுக்குள் செல்கிறது இது. ஒரு நடிகை அல்லது நடிகனின் உடல்மொழி ரசிகர்களை அபப்டியே கட்டிப்போட்டுவிடுகிறது. அவனை அடிமையாக்குகிறது. மாபெரும் வெற்றிப்படங்களுக்குப் பின்னால் உள்ள முக்கியமான அம்சம் இதுவே.

அது ஏன் என்று யோசித்து பல வகையான கலாச்சார விவாதங்களுக்குள் சென்று விடமுடியும். ரசிகர்களின் கண்களுக்குப் பழகிய ஒரு உடல்மொழியாக அது  அமைவதனால் இருக்கலாம். புதிய உடல்மொழியாக அமைவதனாலும் இருக்கலாம். அவனை அது பிரதிநிதித்துவம் செய்வதனாலாக இருக்கலாம். அவனது விருப்பக் கற்பனையை பிரதிநிதித்துவம் செய்வதனாலாகவும் இருக்கலாம். அதை நடிகன் உருவாக்க முடியாது. அவன் வழியாக அது எப்படியோ வெளிப்படுகிறது அவ்வளவுதான். ஒருகாலகட்டத்தின் உணர்ச்சி. கோபம், சுதந்திரம், தனிமை, உற்சாகத்துடிப்பு– ஏதோ சில அவனை ஊடகமாக்குகின்றன..

அதை திட்டமிட்டு உருவாக்க முடியாது. இயக்குநரும் கதாசிரியரும் நடிகரும் எல்லாம் இணையும் ஒரு மர்மப்புள்ளியில் நிகழ்ந்து விடுகிறது.  பின்பு திறன்வாய்ந்த கலைஞர்களால் அது கண்டடையப்படுகிறது — பெரும்பாலும் அவர்களும் தங்கள் தர்க்க மனம் அறியாமல் ஆழ்மனத்தின் இயக்குதலின்படி அனிச்சையாக அதில் சென்று சேர்கிறார்கள். அந்தப்புள்ளி கண்டடையப்படுவதென்பது ஒரு தங்கச்சுரங்கம் கண்டடையப்படுவதுபோல.

அமிதாப் பச்சன் அப்படிப்பட்ட ஒரு தங்கச்சுரங்கம். ஷோலெயின் பெருவெற்றிக்கு அமிதாப்பின் உடல்மொழி முக்கியமான காரணம் என்று படுகிறது. அவரை எழுபதுகளின் ‘கோபம் கொண்ட இளைஞனின்’ குறியீடு என்றெல்லாம் சொல்லி வகுத்துவிட்டவர்கள் உண்டு. ஆனால் தொண்ணூறுகளில் பிறந்த என் குழந்தைகள் இன்றுவரை அமிதாப் பச்சனின் எந்தப்படத்தையும் கண்டதில்லை. ஷோலேதான் அவர்கள் பார்த்த முதல்படம். பச்சன் அவர்களை மிகவும் கவர்ந்து விட்டார். ”பெரிய நடிகர்னு சொல்லமுடியாதுப்பா…ஆனா அவரை ரொம்ப பிடிச்சிருக்கு” என்றாள் சைதன்யா. ”அவரு புலி மாதிரி இருக்காருப்பா…அப்டியே சும்மா இருக்கார். அப்றம் சட்டுன்னு பாயறார்…புலி மாதிரி ” என்றான் அஜிதன். அவரது மற்ற நல்ல படங்களையும் பார்க்க வேண்டும் என்றான். இதை விளக்கவே முடியவில்லை. ஏனென்றால் இதே ஈர்ப்பை கிரிகரி பெக் உருவாக்குவதையும் நான் கண்டிருக்கிறேன்.

ஷோலேயின் தீப்பொறி அமிதாப் பச்சன்தான்.

மலையாள சினிமா ஒரு பட்டியல்

சுவரில் முட்டி நிற்கும் மலையாள சினிமா.

தசாவதாரம்

கனவுகள் சிதையும் காலம் – பாலாஜி சக்திவேலின் ‘கல்லூரி’

முந்தைய கட்டுரைகீதை வழிகள்
அடுத்த கட்டுரைராஜ மார்த்தாண்டனுக்கு அறுபது