இன்று தினமலரில் இச்செய்தி வெளிவந்துள்ளது. பலரும் இதைப்பற்றி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த குறிப்பிட்ட விஷயத்தை வாசகர்கள் கவனிக்கவேண்டுமென நினைக்கிறேன்.
ஓர் எழுத்தாளனாக பொதுவெளியில் பெண்கள் மதிப்புக்குறைவாக நடத்தப்படுவதற்கு எதிராக மிகக்கடுமையாக எதிர்வினை ஆற்றிவருபவன் நான். அது அவர்களின் குரல் எழாமலாக்கிவிடும் என பல முறை வலுவாக எழுதியிருக்கிறேன். பல ஆண்டுகளுக்கு முன்னர் சு.சமுத்திரம் இன்னொரு பெண் எழுத்தாளரைப்பற்றிய விமர்சனத்தில் ‘இன்றைய பெண் எழுத்தாளர்கள் தலைப்பிலேயே முந்தானை விரிப்பவர்கள்’ என எழுதியபோது இண்டியா டுடே இதழில் மிகக்கடுமையான கண்டனக்கட்டுரையை நான் எழுதியிருந்தேன்.
அது முதல் சமீபத்தில் டிவிட்டர் தளத்தில் பாடகி சின்மயி தாக்கப்பட்ட நிகழ்ச்சி வரை என்னுடைய நிலைப்பாடு ஒன்றே. ஒரு தருணத்திலும் பெண்களுடைய கௌரவம், தன்னை பொதுவெளியில் முன்வைக்கும் ஆர்வம் ஆகியவற்றுக்கு எதிராக ஒரு செயலையும் அனுமதிக்கக்கூடாது என்பதுதான் அது. இலக்கியநிகழ்வுகளில் குடி எக்காரணம்கொண்டும் அனுமதிக்கப்படலாகாது என்னும் என்னுடைய நிலைப்பாடு அது பெண்களை அன்னியப்படுத்திவிடும் என்பதனாலேயே.
பெண்கள் பாலியல் விஷயங்களை எழுதுவது குறித்த விவாதங்கள் எழுந்தபோதும் மிகத்தெளிவாகவே என் தரப்பை எழுதியிருதேன், ஒழுக்கநெறிகள் எழுத்துக்களை கட்டுப்படுத்தலாகாது என. அதைவைத்து பெண்களை மதிப்பிடுவது கீழ்த்தரமானது என.
ஆனால் இலக்கிய விமர்சனம் என்பது வேறு. அது எப்போதும் கறாரான மதிப்பீடுகளின் அடிப்படையில் பாரபட்சமில்லாததாகவே இருக்கவேண்டும். அதுவே இலக்கியத்திற்கு நலம் பயப்பது. அதில் நட்பு, இரக்கம், ஜனநாயகம் போன்றவற்றுக்கு இடமில்லை. ஒருவர் தான் கொண்டிருக்கும் இலக்கியமதிப்பீடுகளுக்கே விசுவாசமாக இருக்கவேண்டும். அவ்வடிப்படையிலேயே என் இலக்கியமதிப்பீடுகளை முன்வைத்து வருகிறேன்.
இருவகையில் என் இலக்கியக்கருத்துக்கள் அமைந்துள்ளன. ஒன்று, கருத்துக்களை முன்வைத்து எழுப்பப்படும் விவாதத்துக்கான அழைப்புகள். ‘இவ்வாறு சிந்தித்துப்பாருங்கள்’ என்ற கோணத்தில் முன்வைக்கப்படுபவை. அவற்றுக்கு எதிராக எத்தனை கடுமையான மறுப்புகளும் மாற்றுக்கருத்துக்களும் ஏன் வசைகளும் வந்தாலும்கூட பேசப்படுவது இலக்கியமும் இலக்கியவாதிகளும்தான். ஆகவே அவை எவ்வகை விவாதத்தை உருவாக்கினாலும் இலக்கியத்துக்கு நன்மை பயப்பவையே.
உண்மையில் உலகமெங்கும் இலக்கியம் விவாதங்கள் மூலமே பரவலாக மக்களுக்கு அறிமுகமாகிறது. உங்களுக்கு இலக்கியம் எப்படி அறிமுகமாயிற்று என சிந்தித்துப்பாருங்கள். இலக்கியம் ஒன்றும் ‘அவசியப்பொருள்’ அல்ல. அதை எந்த ஊடகமும் வாசலைத்தட்டி விற்பதில்லை. அது எப்போதோ நிகழும் ஒரு விவாதம் மூலம் மட்டுமே உங்களிடம் வந்து சேர்ந்திருக்கும். உங்களை வாசிக்கச்செய்திருக்கும்.
ஒரு சமூகத்தில் அரசியல், பொருளியல், கேளிக்கைகள் சார்ந்த விவாதங்களே இயல்பாக எப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கும். இலக்கியம், தத்துவம் சார்ந்த விவாதங்கள் மிகமிக அபூர்வமானவை. எந்நிலையில் நடந்தாலும் அவை சார்ந்த விவாதங்கள் நிகழ்வதே ஒரு சமூகத்தின் சிந்தனைக்கு நலம் பயப்பது என்பதே என் எண்ணம். இது உலகளாவிய ஒரு உண்மையும்கூட. எஸ்ரா பவுண்ட் ஒருமுறை சொன்னார் இலக்கியப்பூசல்கள் [polemics] இல்லாமல் இலக்கியம் ஒரு சமூக இயக்கமாக நீடிக்கமுடியாது என. இலக்கியவிவாதங்கள் பாரதி, புதுமைப்பித்தன் காலம் முதல் எப்போதும் இருப்பவை. தனிமனிதத் தாக்குதல்கள்கூட அதற்கு உதவியானவையே என்று சொல்லக்கூடிய விமர்சகர்கள் இருக்கிறார்கள்.
நான் எந்நிலையிலும் இலக்கியப் படைப்பாளிகளை தனிமனிதநோக்கில் அணுகுவதில்லை. ஆனால் இலக்கியத்தின் அடிப்படைகள் தொடர்ந்து பேச்சில் இருக்கவேண்டும் என நினைப்பவன். அன்றாட அரட்டையாக, விவாதமாக, உயர்தளத்தில் கருத்துப்பரிமாற்றமாக அது ஒரேசமயம் நிகழலாம். சரிதான், கொஞ்சம் வசையும் கொந்தளிப்பும் இருந்தாலும் பரவாயில்லை. சினிமாவையும் கட்சிஅரசியலையும் சாப்பாட்டையும் பற்றிப்பேசி ‘கலாய்த்து’க் கொண்டிருப்பதற்கு அது பலமடங்குமேல். எந்த ஒரு இலக்கிய-கருத்தியல் விவாதமும், அது எந்த கீழ்த்தளத்தில் நடத்தாலும்கூட, உங்களுக்கு சில தகவல்களையோ கருத்துக்களையோ அறிமுகம் செய்யாமல் வீணாக ஆவதில்லை.
நான் இன்னொரு தளத்தில் இவ்விலக்கியக் கருத்துக்களை மிகமிக விரிவான கட்டுரைகளாகவும் எழுதுகிறேன். சில ஆயிரம் பக்கங்களாக அவை வாசகனுக்குக் கிடைக்கின்றன. தொடர்ந்து வாசிக்கவும் விவாதிக்கவும் விரும்பும் வாசகனுக்கு அவை விரிவானதோர் உலகை அறிமுகம் செய்யும். தமிழில் ஒருவேளை அனைத்து முதன்மையான எழுத்தாளர்களைப்பற்றியும் எழுதப்பட்டிருக்கும் விரிவான கட்டுரைகளை என் எழுத்துலகுக்குள்தான் வாசகன் காணமுடியும். அவற்றுடன் அவன் முரண்படமுடியும், ஆனால் அவை அவனுக்குக் கற்பிக்கும், கண்டிப்பாக மேலெடுத்துச்செல்லவும் செய்யும்.
இந்த விவாதங்களை விளம்பரம் என சிலர் சொல்வதை நான் அறிவேன். தயவுசெய்து இத்தகைய விளமபரங்களை நீங்களும் செய்துகொள்ளுங்கள், தமிழிலக்கியம் வளரட்டும் என்பதுதான் என் பதில். இத்தனை ஆயிரம் பக்கங்களில் பிற எழுத்தாளர்களைப்பற்றி சலிக்காமல் பல்லாண்டுகளாக எழுதிக் கொண்டிருப்பதில் இலக்கியம் என்னும் அமைப்பு மீதான பெரும் ஈடுபாடும் அர்ப்பணமும் உள்ளது என்பதை பத்துவரி தொடர்ந்து எழுதமுடியாதவர்களால் புரிந்துகொள்ளமுடியாது. நல்ல வாசகர்கள் அந்தரங்கமாக உணர்வார்கள். மற்றபடி அதை காலம் மதிப்பிடட்டும்.
பெண்எழுத்தாளர்களைப்பற்றிய என் கருத்தும் இத்தகையதே. அது புதியதும் அல்ல. அவர்கள் அடைந்துள்ள ஊடக முக்கியத்துவம் மிகச்செயற்கையானது. வெறும் ஊடக உத்திகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இன்று ஊடகங்கள் அதிகமாக பெண்களை முன்னிறுத்த விழைகிறார்கள். காரணம் ஊடகங்களை அதிகம் பார்க்கும் பெண்கள் அவர்களை காணவிழைகிறார்கள். ஆகவே பெண்கள் அதிக விளம்பரத்தை அடைகிறார்கள்.
அதை அறிந்த பெண்களில் சிலர் மிதமிஞ்சிய கூச்சல்கள், அரசியல் கோஷங்கள் போன்றவற்றின் மூலம் ஊடகங்களில் தங்களை பெண்களாக முன்வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்கள் எழுத்தாளர்கள் கவிஞர்கள் என புகழப்படுகிறார்கள், அனைத்துவகையான நிறுவன அங்கீகாரங்களையும் பெறுகிறார்கள். ஆனால் எதுவுமே எழுதுவதில்லை. இவர்கள் எழுதவந்தபோது ‘எழுதட்டும் பார்ப்போம்’ என்ற எண்ணம் இருந்தது சூழலில். நானும் அதைத்தான் சொன்னேன். இன்று இவர்களெல்லாம் சமூக ஆளுமைகளாக ஆகி சிம்மாசனங்களை அடைந்துவிட்டார்கள். ‘சரிம்மா என்னதான் எழுதினே?’ என்று கேட்கும் காலம் வந்துவிட்டது.
பொதுவாக எழுதச்சோம்பல்படுபவர்களின் ஊடகமாக உள்ளது இன்றைய புதுக்கவிதை. இந்தப் பெண்கள் கவிதை என்றபேரில் பத்துப்பதினைந்து வரிகளை மேலோட்டமாக எழுதி மடித்து மடித்து பிரசுரிக்கிறார்கள். அவை வெறும் சக்கையாக உள்ளன. வெற்றுப்புலம்பல்கள், அதிர்ச்சிமதிப்புக்கான தடாலடி வரிகள், சில்லறைப் பெண்ணியகோஷங்கள் . ஓர் அந்தரங்க உலகை உருவாக்க, ஒரு புறவுலகச் சித்தரிப்பையாவது அளிக்க அவற்றால் முடிவதில்லை. நான் சுட்டிக்காட்டிய யதார்த்தம் இதுவே.
இது எந்த வாசகனும் அறிந்த உண்மை. இத்தனை பெண்கள் எழுதுகிறீர்களே தமிழில் உங்களால் ஏன் ஒரு நல்ல படைப்பை உருவாக்க முடியவில்லை என்ற வினாவை ஓரு விமர்சகனாக நான் எழுப்புகிறேன். சென்ற பத்தாண்டுகளில் பெண்படைப்பாளிகள் மீளமீளப் பேசப்படுகிறார்கள், ஒரு பெண்படைப்புகூட பேசப்படவில்லையே என்கிறேன். மற்றமொழிகளில் அப்படி இல்லையே என்கிறேன். சென்றதலைமுறைப் பெண்படைப்பாளிகள் எழுதிய முக்கியமான படைப்புகளைக்கூட நீங்கள் எழுதவில்லையே என்கிறேன்.
இந்தப்பெண் படைப்பாளிகள் எதையாவது வாசிக்கிறார்களா? எதையாவது தெரிந்துகொள்கிறார்களா? எந்த இலக்கியப்படைப்பைப் பற்றியாவது எழுதியிருக்கிறார்களா? அதைத்தான் கேட்கிறேன். ஒரு விமர்சகனாக. மிகமரியாதையான சொற்களில், எந்தத் தனிப்பட்ட எழுத்தாளர் பெயரையும் சுட்டாமல் அதை முன்வைக்கிறேன். அப்படி கறாரான பார்வையை முன்வைக்கும்போதே குறிப்பிடும்படி எழுதியிருக்கும் அத்தனை படைப்பாளிகளையும் சுட்டிக்காட்டி அக்கட்டுரையிலேயே எழுதியிருக்கிறேன். சென்ற இருபதாண்டுகாலத்தில் குறிப்பிடத்தக்க படைப்புகளை எழுதிய அத்தனை பெண்களையும் சுட்டிக்காட்டியிருக்கிறேன். பாராட்டியிருக்கிறேன்.
அதற்கான எதிர்வினைகளைப் பாருங்கள். கூட்டம்சேர்ந்து மிரட்டுவது. பொதுவெளியில் ஆணாதிக்கவாதி என்றெல்லாம் சொல்லி அவமதிப்பது. மனைவி குழந்தைகளை சந்திக்கு இழுக்க முனைவது. பெண்கள் முக்கியமான படைப்புக்களை எழுதவில்லை என்று சொன்னால் அது பெண்களின் ஒழுக்கத்தை குறைகூறுவதாம். எங்கே பெண்களின் ஒழுக்கத்தைக் குறைகூறியிருக்கிறேன்? நான் ‘பெண்களை அவமதித்துக் கொண்டே இருக்கிறேன்’ என்கிறார் ஓர் அம்மையார். எப்போது? எத்தகைய அவதூறு இது. சுயகௌரவம் என்பது பெண்களுக்கு மட்டும் உரியதா என்ன?
ஒரு தருணத்திலும் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சுட்டி ஒருபோதும் எழுதியதில்லை. படைப்பாளிகள் பலருடைய தனிப்பட்ட வாழ்க்கை ஊடகச்செய்தியாக ஆனபோதுகூட நான் எதிர்வினை ஆற்றியதில்லை. இந்த அவதூறு, வசை, திரிபுகள் எதைக்காட்டுகின்றன? ஏன் எழுதாமலேயே எழுத்தாளர் என்று சொல்லிக்கொள்கிறீர்கள் என்ற எளிய கேள்விக்கான விடை இல்லை என்பதை மட்டும்தான். அந்த வினாவை இனி எவருமே பொதுவெளியில் கேட்காமல் மிரட்டி வாயை அடக்கிவிடவேண்டும் என்ற பதற்றத்தைத்தான். அந்த மிரட்டலைத்தான் நான் சுட்டிக்காட்டியிருந்தேன்.
இதைச்செய்பவர்கள் எல்லா ஊடகங்களையும் மறைமுகமாகக் கைப்பற்றி வைத்திருக்கும் உள்ளீடற்ற ஊடகபிம்பங்கள். இவர்கள்தான் பெண்களின் உண்மையான எழுத்துக்களை மறைக்கும் திரைகள். இவர்களைக் கிழித்து விலக்காமல் பெண்களின் எழுத்துக்கள் வாசகர்களை சென்றடையவும் முடியாது. எழுதும் துடிப்புள்ள பெண்கள் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒருவேண்டுகோள், இந்த கூச்சலெழுத்தாளர்களை முன்னுதாரணமாகக் கொள்ளாதீர். முச்சந்திக்கூச்சல் வழியாக எவரும் எழுத்தாளர்கள் ஆகிவிடமுடியாது. எழுத்து அதற்கான அர்ப்பணிப்பைக் கோருகிறது. எழுதுங்கள். தயவுசெய்து எழுதுங்கள்.