«

»


Print this Post

கிராமக்கழிப்பறைகள்


சென்ற சிலநாட்களாக இணையத்தில் கழிப்பறைகள் முதன்மையான விவாதமாக பேசப்பட்டன. உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்கள் கழிப்பிடவசதி இல்லாமையால்தான் அந்நிலையை எதிர்கொண்டார்கள் என்னும் செய்தியே ஆதாரம். ஓர் அமைப்பு அவர்களுக்கு கழிப்பறைகள் கட்டிக்கொடுப்பதாக அறிவித்தது. மனிதாபிமானிகள் இந்தியாவில் இன்னும் கழிப்பறை இல்லாதவர்கள் இத்தனைபேர் என்று கட்டுரைகள் எழுதினார்கள். எனக்கே நாலைந்து ஆக்ரோஷக் கடிதங்கள் வந்தன.

பொதுவாக இவ்வாறு பொதுவிஷயங்களில் கருத்து சொல்பவர்கள் இரண்டுவகை. வெறுமனே எழுத்திலும் பேச்சிலும் [இணையம் வந்தபின் பேச்சே எழுத்தாகிவிட்டிருக்கிறது] சமூகக்கவலைகளைப் பட்டு நிறுத்திக்கொள்பவர்கள் முதல்வகை. இவர்கள் எப்போதும் மிதமிஞ்சிக் கொந்தளிப்பார்கள். கண்ணீர் சொட்டுவார்கள். பற்றி எரிவார்கள். அடுத்த செய்திக்கு இயல்பாகச் சென்றுவிடுவார்கள்.

இவர்களுக்கு எல்லாமே ஒற்றைப்படையானவை. எளிய தீர்வுகள் இவர்களிடமே உண்டு. அதை நடைமுறைப்படுத்த ஆளில்லாத கொடுமையைத்தான் கொட்டிக்கொண்டிருக்கிறார்கள். மிகமிக எளிய அரசியல்சரிகளை ஒட்டியே இவர்களின் நிலைபாடுகள் இருக்கும். ஏழைஎளியவர்களுக்கு நன்மைசெய்யவேண்டும், மானுடசமத்துவம் வேண்டும், சமூகநீதி உடனடித்தேவை, பெண்ணுரிமை வேண்டும், ஒட்டுமொத்த மனிதநேயம் தேவை… யாராவது மறுக்கமுடியுமா என்ன?

இன்னொருசாரார் களத்தில் இறங்கி எதையாவது செய்யக்கூடியவர்கள். குறைந்தபட்சம் தாங்கள் நினைப்பதெல்லாம் உண்மைதானா என்று கொஞ்சம் பயணம்செய்தும் மக்களைச் சந்தித்தும் சரிபார்க்கக்கூடியவர்கள். செய்தித்தாள்களை விட சொந்த அனுபவத்தை நம்பக்கூடியவர்கள். இவர்கள் மிகமிகக்குறைவு என்பதை சொல்லித்தெரியவேண்டியதில்லை. பல்லாயிரத்தில் ஒருவர். இவர்கள் அதிகம் பேசுவதுமில்லை. பேசினால் பலர் பொருட்படுத்துவதுமில்லை, ஏனென்றால் அவர்கள் பேசவிரும்புவதை இவர்கள் பேசுவதில்லை.

இவர்கள் எப்போதும் பிரச்சினையின் எல்லா பக்கங்களையும் கணக்கில்கொண்டு பேசுவார்கள். மனிதாபிமானமோ புரட்சியோ பொங்கிப்பீரிடாது ஒரு சமநிலைக்குள் இருக்கும். ஒற்றைப்படைத் தீர்வு அவர்களிடமிருக்காது, உடனடியாக செய்யத்தக்க சிறிய திட்டங்களே இருக்கும். கடைசிவெற்றியைப்பற்றி பேசமாட்டார்கள், உடனடிநாளையைப்பற்றியே பேசுவார்கள். உதாரணம் ஒத்திசைவு ராமசாமி எழுதிய இக்கட்டுரை. இதில் நம் கிராமமக்களின் கல்விபற்றிய மனநிலையை நடைமுறைக்கோணத்தில் சொந்த அனுபவம்சார்ந்து எழுதியிருக்கிறார். கசப்பானது, ஆனால் உண்மை உண்மை என நம் அகம் சொல்கிறது.

கழிப்பறைபற்றிய விவாதத்துடன் நான் ராமசாமியின் கட்டுரையை இணைத்துக்கொண்டேன். சென்ற மாதத்தில் நெல்லையின் பல சிற்றூர்களுக்கு செல்ல நேர்ந்தது. இப்பகுதிகளை நான் இருபதாண்டுகளுக்கு முன்பு விரிவாகவே சுற்றிப்பார்த்திருக்கிறேன். இப்போதைய அனுபவம் மிகவும் சோர்வளிக்கச் செய்தது. கிராமங்கள் முழுமையாகவே கைவிடப்பட்டிருக்கின்றன. தென்காசிப்பகுதியில் கிராமங்களின் அழகே சூழநிறைந்துள்ள நீர்நிலைகள்தான். இப்போது பெரும்பாலான நீர்நிலைகள் நான்குபக்கமும் உடைக்கப்பட்டு ஆக்ரமிக்கப்பட்டு உடைமுள் வளர்க்கப்பட்டு குப்பைமலைகள் குவிக்கப்பட்டு சீரழிக்கப்பட்டுள்ளன. நீர் நிறைந்த நீர்நிலைகள் மிகமிகச்சிலவே.

கிராமத்தின் அழகை எடுத்துக்காட்டுவதாக எப்போதுமிருப்பது கிராமக்கோயிலும் அதையொட்டிய ஊர்ச்சாவடிகளும். அவையெல்லாமே இப்போது கைவிடப்பட்டு பிளாஸ்டிக் குப்பைமலைகள்சூழ்ந்து கிடக்கின்றன. பெரும்பாலான ஆலயக்குளங்களும் ஆலயமுற்றங்களும் கிணறுகளும் குப்பைமேடுகளே. ஊரில் அரசு நிறுவனங்களாக இருப்பவை அரசுத் தொடக்கப் பள்ளிகள், ஆரம்பசுகாதார நிலையங்கள், ஊராட்சி அலுவலகங்கள். மிகச்சில ஊர்களில் ஆரம்பப்பள்ளிகள் நல்லகட்டிடங்களுடன் இருக்கின்றன. பிற அரசுக்கட்டிடங்களெல்லாமே இடிந்து வெடிப்புகள் விழுந்து முட்செடி மண்டி உலர்ந்த மலமும் பன்றிகளும் குப்பைகளும் சூழ காணக்கிடைக்கின்றன. கேட்டால் அவை எல்லாமே ‘செயல்படும்’ அமைப்புக்கள் என்றார்கள்.

தமிழக அரசின் உயர் அதிகாரி ஒருவரிடம் அதைப்பற்றி கேட்டேன். உண்மையான சேவைமனமுள்ள அதிகாரி அவர். அவர் சொன்ன உண்மையை ஏற்கனவே நானே அவதானித்திருந்தேன் என உணர்ந்தேன். இன்று குமரிமாவட்டத்துக்கு வெளியே பெரும்பாலான சிற்றூர்களில் ஓரளவு வசதியானவர்கள் வாழ்வதில்லை. அனைவரும் நகரங்களை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். கேட்டால் சொல்லப்படும் இரு காரணங்கள், ஒன்று பிள்ளைகளின் கல்வி. நல்ல டியூஷன் உள்ள ஊர்கள் என்றால் குறைந்தபட்சம் அது ஒரு தாலுகா தலைநகரமாகவாவது இருக்கவேண்டும். இன்னொன்று மருத்துவம். மகனோ மகளோ வேலைக்குச் சென்றுவிட்டால் பெற்றோர் நகரத்துக்கு இடம்பெயர்கிறார்கள்.

விளைவாக கிராமங்களில் அரசின் பிரதிநிதிகளாக எவருமே இல்லை. ஆசிரியர்கள் ஆரம்பசுகாதார அலுவலர்கள் கிராமநிர்வாக அதிகாரிகள் எவருமே கிராமங்களில் தங்குவதில்லை. ‘பிள்ளைங்களை படிக்க வைக்கணும் சார்’ என்ற காரணம் பெருவாரியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. அவர்கள் ஒவ்வொருநாளும் பேருந்துகளில் நகரங்கள், சிறுநகரங்களில் இருந்து கிராமங்களுக்கு வந்துசெல்கிறார்கள். ஆசிரியர்கள் வாரநாட்களில் பதினொருமணிக்கு வந்து மதியம் தாண்டியதுமே கிளம்பிவிடுகிறார்கள்.பிற அதிகாரிகள் வாரமொருமுறை வந்தாலே அதிகம். இது நடைமுறை யதார்த்தம்.

இன்னொன்று உள்ளது. அது காகித யதார்த்தம். தேர்தலின்போது தமிழகத்தின் ‘வளர்ச்சிக்குறியீட்டெண்கள்’பற்றி விரிவான விவாதங்கள் ஊடகங்களில் நிகழந்தன. சென்னையை விட்டு நீங்காத செய்திநிபுணர்கள் ஜிப்பாவும் கண்ணாடியுமாக அமர்ந்து அலசினார்கள். அவர்கள் சொல்லும் அத்தனை குறியீட்டெண்களும் அரசு செலவிட்ட தொகையை அடிப்படையாகக் கொண்டவை. இங்கே உள்ள உண்மையான நிலைமையை அடிப்படையாகக் கொண்டவை அல்ல.

அரசின் கணக்குப்படி ஒவ்வொரு கிராமத்திற்கும் பள்ளி, மேல்நிலைக் குடிநீர்த்தொட்டி, ஆரம்பசுகாதாரநிலையம், கிராமநிர்வாக அலுவலகம், கிராமசாவடி, வேளாண்மைக்கூட்டுறவு அமைப்புகள், சாலைவசதிகள் ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழக கிராமச்சாலைகள் போடுவதில் நூறுசத ஊழல் நிகழ்கிறது என்கிறார்கள். அதாவது, ஒரு டீஸ்பூன் தார்கூட போடாமல் பலசாலைகள் பலமுறை திரும்பத்திரும்ப போடப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டுள்ளன. பெரும்பாலான கிராமச்சாலைகள் உடைந்து சாக்கடைகள் ஓடும் கால்வாய்களாக நடக்கக்கூட லாயக்கற்றவையாக உள்ளன என்பதை கவனித்தேன்.

அந்த அதிகாரி சிரித்தபடி சொன்னார். ‘டிவி கணக்குகளை ஆளுக்குத் தகுந்ததுமாதிரி சொல்லலாம். அந்தக் கணக்குப்படி பார்த்தால் தமிழகத்தில் பிறக்கும் குழந்தைகளில் முக்கால்வாசி ஆரம்பசுகாதாரநிலையங்களிலும் அரசுமருத்துவமனைகளிலும் தான் பிறக்கின்றன. எத்தனைகுழந்தைகள் அப்படிப்பிறக்கின்றன என நமக்கே தெரியும்’ என்ன நிகழ்கிறது? தனியார் மருத்துவமனையில் குழந்தைபிறந்தால்கூட ஆரம்பசுகாதார நிலையத்தில் பிறந்ததாக எழுதிக்கொள்வார்கள். அப்போதுதான் அரசு அளிக்கும் சத்துமாவு தடுப்பூசி போன்ற சில உதவிகள் கிடைக்குமென்பதனால் பெற்றோர்களும் ஒத்துக்கொள்கிறார்கள்.

எந்த உரிமையையும் கேட்டுப்பெறும் நிலையில் இன்று கிராமத்தினர் இல்லை. அங்கிருப்பவர்கள் பெரும்பாலும் நிலத்தை நம்பிவாழும் கூலிகள். நான் தமிழகத்தில் கிராமப்புற வறுமை ஓரளவு நீங்கியிருக்கிறது என்னும் பிரமையில் இருந்தேன். உண்மையில் பசி இல்லாமலாகியிருக்கிறது. உணவு இன்று ஒரு செலவேறிய விஷயம் அல்ல. பொதுவினியோகத்தில் தானியங்கள் கிடைத்துவிடுகின்றன. ஆனால் ஆரம்பசுகாதாரம், மருத்துவம், இருப்பிடவசதி ஆகியவற்றில் தமிழகம் தொண்ணூறுகளை விட பலமடங்கு பின்னுக்குச் சென்றுள்ளது என்பதே உண்மை.

அதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று குடி. தமிழக கிராமங்களில் எல்லாம் ஆண்கள் எந்த வேலையும் செய்யாமல் கூட்டம்கூட்டமாக சும்மா இருப்பதைக் காணலாம். அதைப்பற்றி பத்துப்பதினைந்துபேரிடம் கேட்டேன். என்னுடன் வந்திருந்தவர் சிவப்பாக இருப்பார். அவரை மத்திய அரசு அதிகாரி என நினைத்துக்கொண்டார்கள். பெண்கள் எப்படியாவது சாராயக்கடைகளை மூடும்படி கண்ணீருடன் கோரினார்கள். தமிழக டாஸ்மாக்கில் விற்கப்படும் தரமற்ற அல்கஹாலைக் குடிப்பவர்கள் நாற்பதுவயதுக்குள் தளர்ந்துவிடுகிறார்கள். வெயிலில் நிற்கமுடியாது. சாரங்களில் ஏறமுடியாது. உச்சிவெயிலில் கண்கள் தெரியாது. உடலுழைப்புவேலைக்கான ஆற்றலே இல்லை.

தமிழகத்து கிராமங்களில் ஒருபக்கம் வேலைக்கு ஆள் இல்லை. மறுபக்கம் வேலைசெய்ய திராணியற்ற ஆண்கள். மொத்தக்குடும்பச்செலவும், அந்த ஆணின் குடிச்செலவும் பெண்களின் உழைப்பை நம்பியே இருக்கும் நிலை. அதன்விளைவான கொதிப்படையச்செய்யும் வறுமை. என்னுடைய எண்ணங்களனைத்துமே சென்ற மூன்றுமாதங்களில் மாறிவிட்டன. தமிழகம் மிகவேகமாக பின்னோக்கிச் செல்கிறது என்ற மனப்பதிவுக்கு வந்துவிட்டேன்.

ஆனால் அதற்கான காரணம் என புறக்காரணிகளைச் சொல்லும்போதே அம்மக்களையும்தான் சொல்வேன். பெரும்பாலானவர்கள் உச்சகட்ட சினிமாஅடிமைகள். தொலைக்காட்சிமுன்னால் அமர்வதே வாழ்க்கையின் உச்சகட்ட இன்பம். வேறெதிலும் ஆர்வமில்லை. மிகமிக எளிய அரசியல் புரிதல்கூட இல்லை. அரசியல் என்றாலே இலவசங்களைப் பெற்றுக்கொண்டு பணம்வாங்கிக்கொண்டு வாக்களிப்பது மட்டும்தான். நாங்கள் சென்றது தேர்தல்நேரம் . எங்களை பணம்கொடுக்க வந்தவர்கள் என எண்ணி கிராமமே திரண்டு ஓடிவந்தது. எங்கள் ஓட்டுநர் திமுக காரர். அவர் சொன்னார். அந்தக்காலத்திலே மைக் வச்சு தேர்தல் வாக்கு கேட்டு ஊருக்குள்ள வருவோம் சார். ஊரே ஓஞ்சு கெடக்கும். கெழடுகட்டைகதான் இருக்கும். எல்லாரும் வேலைக்குப்போயிருப்பாங்க. இப்ப ஓட்டுக்குப் பணம்குடுப்பாங்கன்னு ஒக்காந்திருக்காங்க’

உண்மையாகவே மக்களுடன் இறங்கி பணியாற்றக்கூடியவர்கள் இந்த மக்களுக்கு கொடுக்கவேண்டியது பணமோ பொருளோ அல்ல என்பதை அறிவார்கள். பிரக்ஞைதான். அது எளியவிஷயமும் அல்ல. அதைத்தான் ராமசாமி எழுதுகிறார். இந்த அத்தனை கிராமங்களிலும் சுலப் அமைப்பு கட்டிக்கொடுத்த நவீனக் கழிப்பறைகள் இருந்தன. எந்தக்கழிபப்றையையும் நெருங்கமுடியாது. அப்பகுதி முழுக்க மலக்குவியல் கழிப்பறையை சுத்தப்படுத்தாமல் அப்படியே விட்டு அதைச்சுற்றியே கழித்து வைத்திருந்தனர்.

‘இதைச் சுத்தமாக வைத்திருக்கக்கூடாதா?’ என பலரிடம் கேட்டோம். ‘ஆமா அதுதான் சோலி…’ என்றார்கள். கட்டப்பட்ட ஒருமாதம்கூட அவை பயன்பாட்டில் இல்லை. அங்கே நீர்வசதிக்குக் குறைவில்லை. தரமான கழிப்பறைகள் அவை. எளியமுறையில் முறைவைத்துப் பராமரித்தால் கூட போதும். ஆனால் செய்வதில்லை. பொதுவெளியில் காலையில் அமர்ந்திருக்கிறாகள். பெண்கள் ஏரிக்கரை திறந்தவெளிகளில் உடகார்ந்திருக்கிறார்கள்.ஒரு ஊரில் கூட விதிவிலக்கில்லை. இவர்களுக்கு கழிப்பறை கட்டிக்கொடுப்பதனால் என்ன பயன்? யாரோ அதனால் பணம் பார்க்கிறார்கள் அவ்வளவுதான். கழிப்பறை அல்ல அவர்களுக்குக் கொடுக்கப்படவேண்டியது, அது தேவை என்ற உணர்வுதான். சாலைகள் அல்ல, சாலைகள் தேவை என்ற எண்ணத்தைத்தான். ஜனநாயகத்தை அல்ல, அதன் ஆற்றலைத்தான் கற்பிக்கவேண்டியிருக்கிறது.

‘நல்ல கழிப்பறைகள் கூட இல்லாத எளிய மக்களுக்காக’ சிந்தப்படும் ஊடகக் கண்ணீரை அப்போதுதான் கவனித்தேன். எதற்காக இந்த மாய்மாலத்தை விடாப்பிடியாகச் செய்கிறார்கள் நம் ஊடக அறிவுஜீவிகள் . உண்மைகளில் இருந்து வசதியாக ஒளிந்துகொள்வதற்காக மட்டும்தானா?

.

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/56535