சாளரத்தருகே அமர்ந்திருப்பவன்
இளமையில் ஒருமுறை நான் லிட்டன் பிரபு எழுதிய ‘பாம்பியின் கடைசிநாட்கள்’ என்ற நாவலை நானே திருப்பி எழுதினேன். கிட்டத்தட்ட எண்பது பக்கங்கள். அந்நாவலை வாசித்ததைவிட அபாரமான அனுபவமாக இருந்தது அது. அந்நாவலின் சுருக்கமான மறுவடிவம் ஒன்றை எனக்காக நான் உருவாக்கிக் கொண்டிருந்தேன் என உணர்ந்தபோது மனம் உற்சாகத்தில் மிதந்தது. இந்த நாவல் லிட்டன் பிரபுவுடையதல்ல, நானே உருவாக்கிக்கொண்ட என்னுடைய நாவல்.
அந்நாவலின் கதையை நான் கல்லூரியில் என்னருகே அமர்ந்திருந்த நண்பன் ஜெயக்குமாருக்குச் சொன்னேன். அவன் பிரமித்த கண்களுடன் கனவின் காய்ச்சலுடன் அமர்ந்திருந்ததைப் பார்த்தபோது என் நாவலின் வாசகனை கண்டேன். அன்றைய நாள் ஒரு மாபெரும் எழுத்தாளனாக நான் நாகர்கோயிலில் அலைந்தேன்.
பெரும்நாவல்களை உள்வாங்கிக்கொள்ள அவற்றை நம்முள் மறுபுனைவு செய்துகொள்வது ஒரு சிறந்த வழி. நான் எழுத்தாளன் ஆகையால் அவற்றை மீண்டும் எழுதிப்பார்க்கிறேன். பின்னர் ஒன்று தெரிந்தது. இந்த மறுஆக்கத்தில் என்னுடைய விமரிசனமும் அடங்கியுள்ளது. அந்நாவல்களை நான் சுருக்கிக்கொள்ளும் விதத்தில், அழுத்தம் அளிக்கும் விதத்தில் உள்ளது அந்த விமரிசனம். அந்த விமரிசனத்தை விரிவாக தனியாக எழுத ஆரம்பித்தேன். அவ்வாறுதான் நான் விமரிசகனும் ஆனேன்
எல்லா இலக்கியப் படைப்புகளையும் நான் இப்படித்தான் வாசிக்கிறேன். அவற்றை மீட்டு அமைக்கிறேன், அகத்தில். அந்த அகச்சித்திரத்தை ஒட்டியே என் விமரிசனங்கள் அமைகின்றன. இது ஓர் அந்தரங்கச் சமையலறை. நான் எழுதிய நூல்குறிப்புகளை நண்பர்கள் வாசித்திருக்கிறார்கள். அவை மிகச்சிறப்பாக இருப்பதாகப் பலர் சொன்னார்கள். ஆகவே சிவலவற்றை அச்சுக்குக் கொண்டுவரலாமென்ற எண்ணம் ஏற்பட்டது.
அவ்வாறுதான் இந்திய நாவல்களைப் பற்றி நான் எழுதிய ‘கண்ணீரைப் பின்தொடர்தல்’ என்ற நூல் உருவாகியது. அது வாசகர்களை பெரிதும் கவர்ந்ததை கடிதங்கள் வழியாக கண்டுகொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட மூலநாவல்களைப் படிக்கும் பரவசத்தை அவை அளிக்கின்றன என்கிறார்கள். அதுவே என் இலக்கு. பனையை பனித்துளி காட்டுவது போல என்று சம்பிரதாயமாகச் சொல்லலாம்
நான் அவ்வகையில் எழுதிய கிட்டத்தட்ட பன்னிரண்டு கட்டுரைகள் சென்றவருடம் என் கணிப்பொறியின் மென்தகடு செயலிழந்துவிட்டதனால் அழிய நேரிட்டது. எஞ்சியவை இப்போது நூலாகின்றன. சில உலகப்படைப்புகளைப்பற்றிய சுருக்கமான மறு ஆக்கங்கள் இவை. விமர்சனமும் உள்ளோடுவதை வாசகர் காணலாம். மூலநூல்களை வாசிக்கும் உத்வேகத்தை பெரும்பாலும் இவை அளிக்கும் என நம்புகிறேன். ஓர் இலக்கியவாதி வழியாக அவனைக் கவர்ந்த பெரிய இலக்கியவாதிகள் சிலரை நீங்கள் இங்கே காண்கிறீர்கள்.
இந்நூல்களில் பலவற்றை நான் காசர்கோட்டில் இடதுசாரி தொழிற்சங்கங்களின் கம்யூனில் தங்கியிருந்தபோது வாசித்தேன். அசாதாரணமான உள எழுச்சியுடன் இவற்றைப்பற்றி விவாதித்தேன். அன்று உற்சாகமான இலக்கிய நண்பர்களாக இருந்த பலரை இப்போது நினைவுகூர்கிறேன். அவர்களில் முதன்மையானவரான ரஸாக் குற்றிக்ககம் அவர்களுக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்கிறேன்
‘சிலுவையின் பெயரால்’ கிறித்தவம் குறித்து..
‘புதியகாலம்’ சில சமகால எழுத்தாளர்கள்
‘பண்படுதல்’ பண்பாட்டு விவாதங்கள்