ஒரு விழா

குமரிமாவட்டத்தின் மலையோரப்பகுதிகளான விளவங்கோடு, கல்குளம் வட்டங்களுக்கும் தமிழகத்தை ஒட்டிய பகுதிகளான அகஸ்தீஸ்வரம், தோவாளை வட்டங்களுக்கும் பண்பாட்டு ரீதியாக நிறைய வேறுபாடுகள் உண்டு. அகஸ்தீஸ்வரம் தோவாளைப்பகுதிகளில் தமிழகப்பெருநிலத்தின் பண்பாட்டுத்தாக்கம் அதிகம். ஆகவே திராவிட இயக்கத்தின் பாதிப்பும் அதிகம். இங்குள்ள கிராமிய அறிவியக்கம் என்பது பெரும்பாலும் திராவிட இயக்கச் சார்பு உடையதாகவே இருக்கும். அதற்கே உரிய ஆர்ப்பாட்டமான போலிமொழி, மேடைப்பேச்சையும் திரைப்படத்தையும் மட்டுமே கொண்ட கலாச்சாரச் செயல்பாடுகள். நடிகர்களுக்கான ரசிகர்மன்றங்கள் இப்பகுதியின் முக்கியமான பொதுச்செயல்பாடுகளாக அரைநூற்றாண்டாகவே இருந்துவந்திருக்கின்றன. எண்பதுகளில் திராவிட அரசியல் கவற்சியை இழந்தபோது ரசிகர் மன்றச்செயல்பாடுகள் உச்சத்தை அடைந்தன.  இப்போது இப்பகுதி ஒட்டுமொத்தமாகவே சாதிய அரசியலுக்குள் கவிழ்ந்துவிட்டது.

நேர்மாறாக கல்குளம் விளவங்கோடு பகுதிக்கே உரிய தனிப்பண்பாட்டுக் கூறுகள் சில உண்டு. ஒன்று திராவிட இயக்கம் கிட்டத்தட்ட பெயரளவுக்கே உள்ளது என்பது. இங்குள்ள முதன்மையான அரசியலியக்கங்கள் காங்கிரஸ¤ம் கம்யூனிஸ்டுக்கட்சியும்தான். இப்பகுதியின் பண்பாட்டுக்கூறுகளை பெரும்பாலும் கம்யூனிஸ்டுக் கட்சியும் கிறித்தவ சபைகளும்தான் தீர்மானித்திருக்கின்றன. இந்தப் பண்பாட்டு அம்சங்களை புறவயமாக விளக்குவது கஷ்டம், இருந்தாலும் சில அடையாளங்களைச் சுட்டிக் காட்டலாம்.

1. இந்தப்பகுதியில் அனேகமாக எல்லா ஊர்களிலும் நல்ல நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் நூலகங்கள் உள்ளன. அவற்றின் செயல்பாடுகளில் ஊராரின் பங்களிப்பு மிக அதிகம். நூலகத்துக்கென பணமும் நிலமும் கேட்டால் எப்படியும் கிடைத்துவிடும் என்றார் ஒரு நண்பர்.

2 அதேசமயம் திரையரங்குகள் மிகமிகக் குறைவு. மொத்தமே நான்கைந்து அரங்குகள். அவற்றில் பாதியில் மலையாளப்படம்தான் ஓடும். ரசிகர்மன்றச் செயல்பாடுகள் அனேகமாக கிடையாது. எம்ஜிஆர்,ரஜனிகாந்துக்குக் கூட ரசிகர்த்திரள் கிடையாது.

3 எல்லா தொழிலுக்கும் ஏதாவது தொழிற்சங்க அமைப்பு உண்டு. ஆகவே கூலி விஷயங்களில் கறாரான பேச்சுதான். ஏமாற்றுவது நடக்காது. வேலைநிறுத்தங்கள் கூலித்தகராறுகள் எப்போதும் உண்டு.veelaiwi

4. சென்ற அரை நூற்றாண்டில் இப்பகுதியிலிருந்துவந்த அரசியல்வாதிகளில் பெரும்பாலானவர்கள் மிக நேர்மையாவர்கள். டி.மணி, கொச்சுமணி, ஜெ.ஹேமச்சந்திரன், இஸ்மாயீல், முகமது அலி முதல் இன்றைய லீமா ரோஸ் முதலிய கம்யூனிஸ்டுகள் மட்டுமல்ல ஜேம்ஸ், டென்னிஸ் போன்ற காங்கிரஸ்காரர்கள் கூட மிக நேர்மையானவர்கள் என்று புகழ்பெற்றவர்கள்

5. ஊழலுக்கு எதிரான ஒரு மக்கள் மனநிலை இங்கு உண்டு. சின்னச் சின்ன ஊழல்கள் கூட உடனடியாக சுவர்களில் போஸ்டர்களாக அடித்து ஒட்டபப்டும். இப்போது தக்கலை, மார்த்தாண்டம், குலசேகரத்தில் காணப்படும் சுவரொட்டிகளில் 90 விழுக்காடு ஊழலை அம்பலப்படுத்தும் போஸ்டர்களே. ஒருவெளியாள் ஊருக்கு வந்தால் இந்தச்சுவரொட்டிகளைப் பார்த்து மலைத்துவிடுவார். இந்த அம்சத்தை தமிழகத்தில் எங்கும் காணமுடியாது.  குமரிமாவட்டத்தில் அதிகாரிகள் மேல் வரும் புகார்களில் எண்பது சதவீதம் இந்தபகுதியில் இருந்து வருவதே. சென்ற 5 வருடத்தில் லஞ்சம் வாங்குபோது பிடிபட்ட எல்லா நிகழ்ச்சிகளும்  இப்பகுதி மக்களால் பிடித்துக் கொடுக்கப்பட்டவையே.அதிகாரிகளுக்கு இது தண்டனைப்பகுதி என்பார்கள்

6. பொதுவான வாழ்க்கைத்தரம் அதிகம். கல்வி சேமிப்பு ஆகியவற்றின் மீது ஒருவகையான வெறியே உண்டு. சுகாதாரத்துக்கான தேசியவிருது பெற்ற ஐந்து தமிழக ஊர்களும் இப்பகுதியில்தான் உள்ளன. 

7 கிரிக்கெட் ஆர்வமே இப்பகுதியில் கிடையாது. ஊடகத்தாக்கத்தால் இருபது வயதுக்கு குறைவானவர்களிடம் ஓரளவுக்கு இப்போது உருவாகி வருகிறது என்று சொல்லலாம்.

8.இளைஞர் அமைப்புகள் ஏதேனும் வகையில் செயல்படாத ஊரே கிடையாது.

*

மார்த்தாண்டத்தில் இருந்து திருவட்டார் செல்லும் வழியில் உள்ளது பயணம் என்ற சிற்றூர். இங்கே பயணம் இளைஞர் மன்றம் என்ற அமைப்பு இருபத்தைந்து வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

இருபத்தைந்து வருடங்கள் தொடர்ச்சியாக நூலகம், வாசிப்புக்கூட்டங்கள் ஆகியவற்றுடன் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான ஓவிய ,இலக்கியப்போட்டிகளையும் நடத்தி வருகிறார்கள். மார்த்தாண்டம் கிறிஸ்தவக் கல்லூரியில் பேராசிரியராக இருந்தவரும் புகழ்பெற்ற நாளிதழ் சேகரிப்பாளரும் ஆய்வாளருமான முனைவர் தியாகசாமி அவர்கள் இதன் நிறுவனர், கௌரவ தலைவர். இருபத்தைந்தாவது ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி இவ்வருடம் நடந்த போட்டிகளில் பரிசுகள் வழங்குவதற்காக 19-7-08 அன்று சிறப்பு விருந்தினராக நான் சென்றிருந்தேன்.

இளைஞர் அமைப்புக்கென்று பயணத்தில் சொந்தக் கட்டிடம் இருக்கிறது, சத்தியநேசன் நினைவுக் கட்டிடம். ஆனால் மார்த்தாண்டம் சாலையில் இரு கல்யாணமண்டபங்களை வாடகைக்கு எடுத்து போட்டிகளை நடத்தினார்கள். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொள்ளும் ஒரு திருவிழா. காலைமுதலே போட்டிகள் பல இடங்களில் பல நடுவர்களின் முன்னிலையில் நடந்து கொண்டிருந்தன. நான் நான்குமணிக்குச் செல்லும்போது சாலையெங்கும் மாணவர்கள் வந்த வாகனங்கள். பலவகை சீருடைகள் அணிந்த மாணவர்களும் மாணவிகளும். சிரிப்புகள் கூக்குரல்கள். ஐஸ் நக்கும் முகங்கள், தெத்துப்பற்கள், முகப்பருக்கள், வெட்கங்கள், இலக்கில்லாத உற்சாகங்கள், கூக்குரல்கள். காரிலிருந்து நான் இறங்கியதும் ஐம்பது குரல்கள் ”ஓ!” என்று சேர்ந்து கத்தின.

கிட்டத்தட்ட போட்டிகள் முடிவடைந்து கொண்டிருந்தன. கீழே பேச்சுப்போட்டிக்கு யாரோ உரக்க கீச்சுக்குரலெழுப்பிக் கொண்டிருந்தார்கள். ‘இந்திய அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் சரியா?’ என்பதே போட்டித்தலைப்பு. தலைப்பை அங்குவந்தபிறகுதான் கொடுப்போம் என்றார் அமைப்பாளர் ராபர்ட். அவர்தான் என்னை தேடிவந்து அழைத்தவர்.

அங்கே குமரிமாவட்டத்தின் புகழ்பெற்ற பேச்சாளரும் கவிஞருமான  குமரி அமுதன் வந்திருந்தார். ஏற்கனவே எனக்கு அறிமுகமான நண்பர். தக்கலை அருகே  குமாரபுரத்தில் ஒரு கிறித்தவப்பள்ளியில் வேலைபார்க்கிறார். அவர் சிறுவனாக இருந்தபோது பெற்றோரை இழந்து முற்றிலும் கைவிடப்பட்டு திருச்சபையின் பாலர் விடுதியில் நின்று படித்திருக்கிறார். பட்டமும் ஆசிரியர் பயிற்சி இளநிலை பட்டமும் பெற்று அதே பள்ளியில் ஆசிரியராக இருக்கிறார். சமீபத்தில் குமரிமாவட்ட குழந்தைவிளையாட்டுப்பாடல்களை ‘குலை குலையா முந்திரிக்கா’ என்றபேரில் தொகுத்திருக்கிறார்.

இன்னொருவர் பிருந்தா சுரேஷ் என்ற பேரில் கவிதைகள் எழுதும் சுரேஷ். மேடைப்பேச்சாளர். அங்கிருந்த அனைவருமே ஏதோ ஒரு வகையில் கலை இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள். இலக்கிய வாசகர்கள். குமரிமாவட்டத்தில் இளைஞர்கள் படிப்பு முடிந்ததுமே வேற்றூர் சென்றுவிடுவதனால் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய தலைமுறை வந்து பொறுப்பேற்றால் மட்டுமே அமைப்புகள் முன்னகரும். பயணம் இளைஞர் மன்றத்தின் ஐந்தாவது தலைமுறை இது. ஆறாம் தலைமுறை பையன்கள் ஒரே கும்பலாக வந்து என்னுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

ஒவ்வொரு போட்டியிலும் பத்து ஆறுதல் பரிசுகள் உண்டு. ஆகவே கிட்டத்தட்ட 500 பரிசுகள். சான்றிதழ்களை கட்டாகக் கொண்டு வந்து என்னிடம் கையெழுத்திடச் சொல்லிவிட்டார்கள். முந்நூறு கையெழுத்து வரை போட்டேன். குமரி மாவட்டம் களியிக்காவிளையைச் சேர்ந்த ஓவியரான ராஜசேகரன் சமீபத்தில் தன் பிரம்மாண்டமான ஈஸல் ஓவியம் மூலம் புகழ்பெற்றவர். அடூர் கோபாலகிருஷ்ணனின் மூன்று படங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். இவ்வருடம் கேரள அரசு விருதும் பெற்றிருக்கிறார். அவரை கௌரவிப்பதும் விழாவின் முக்கியமான நிகழ்ச்சி. ஆறடி உயரத்தில் ஜிப்பா தாடி மென்மையான பேச்சு என மலையாள கலைப்படத்துறையினரின் இலக்கணத்துடன் இருந்தார் ராஜசேகரன். அவரைப்பற்றி சுகுமாரன் சமீபத்தில் காலச்சுவடு இதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

விழாவில் என்னை குமரி அமுதன் அறிமுகம் செய்து பேசினார். ராஜசேகரனை மார்த்தாண்டம் பேச்சாளர் பேரவை செயலாளர் விஜயகுமார் அறிமுகம் செய்து வைத்து பேசினார். இந்த அமைப்பின் முக்கியமான புரவலரான மார்த்தாண்டம் தொழிலதிபர் பி.கெ.சிந்துகுமார், பேராசிரியர் தியாகசாமி ஆகியோர் கலந்துகொண்டார்கள். நான் ராஜசேகரனுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசு வழங்கினேன்.

ஓவியப்போட்டியில் பரிசு பெற்றவர்களுக்கு ராஜசேகரன் பரிசு வழங்கினார். பிறருக்கு நான். பலநூறு பரிசுகள். வழங்கிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். ஆறுதல் பரிசுகள் அதிகமும் பெரும்பாலும் கிழக்கு பதிப்பகத்தின் அறிமுக நூல்வரிசையைச் சேந்தவை. Prodigy என்ற குழந்தைகளுக்கான பதிப்பகத்தை அவர்கள் நடத்துக்கிறார்கள்.மருதன்,புதுவை ரா ரஜினி ,சொக்கன் போன்றவர்கள் எழுதிய அப்துல் கலாம், பில் கேட்ஸ்,பெரியார்,பாரதி போன்றவர்களின் வாழ்க்கை வரலாறுகள். பத்ரி சேஷாத்ரி எழுதிய உலகம் என்ற சிறு நூலைத்தான் கைசலிக்க கொடுத்துக் கொண்டே இருந்தேன். நான் சின்னப்பையனாக இருக்கும்போது பிரேமா பிரசுரம் வெளியிட்ட அழுக்குத்தாள் நூல்களை தருவார்கள். இப்போது நூல்களின் அச்சுத்தரம் மேம்பட்டிருப்பது மகிழ்ச்சியை அளித்தது. பாதி குழந்தைகள் அங்கேயே படிக்க ஆரம்பித்துவிட்டன

மேடையில் இருந்து குழந்தைகளைப் பார்ப்பது அலாதியான உவகையை அளிப்பதாக இருந்தது. பிறந்தது முதல் தணியா மோகத்துடன் நான் பார்த்துவரும் எனது மண்ணின் முகங்கள். முகம்பார்த்தே சாதியையும் பிராந்தியத்தையும் என்னால் சொல்லிவிடமுடியும். ஆர்வமே உருவான முகங்கள். கிண்டல் ஒளிந்திருக்கும் முகங்கள். ‘சமர்த்து’ குழந்தைகள்….எத்தனையோ விஷயங்கள் என் கண்ணில் பட்டன. மேலும் எத்தனையோ அகத்தில் பதிவாகியிருக்கக் கூடும்.

புறக்கணிக்கப்பட்டு தானாக வளரும் குழந்தைகளை முன்பெல்லாம் நிறையக் காணலாம். இப்போதுகூட தமிழ்நாட்டில் அதிகம் கண்ணுக்குப்படுபவை அவையே. இங்கே அப்படிபப்ட்ட ஒரு குழந்தை கூட இல்லை. கான்வெண்ட் பள்ளிகளுக்கு இணையாகவே அரசுப்பள்ளிகளிலும் சூட்டிகையான குழந்தைகள் நிறைய இருந்தன. வழக்கம்போல எல்லா தளத்திலும் பரிசுபெறும் அதி சூட்டிகையான ஓரிரு குழந்தைகள். தங்கள் பள்ளியோ குழுவோ பரிசுபெறும்போது சம்பந்தப்பட்டவர்கள் குதியாட்டம் போடுகிறார்கள். இநத நட்சத்திரங்கள் மேடையேறும்போது அரங்கமே அதிர்கிறது! தூய்மையான அந்த உற்சாகம் நம்மையும் தொற்றக்கூடியது.

பெயர்கள்தான் எப்படியெப்படி மாறிவிட்டிருக்கின்றன! கிறிஸ்தவபெயர்களில் மேரியையே காணவில்லை. அந்தோணி, ஸ்டீபன் என யாருமே இல்லை. ஏகப்பட்ட ஸ்டெ·பிகள். ஜெ·பி, பிளெஸி என விசித்திரமான பெயர்கள். நிதீன், ஜதீன் என பையன்களின் பெயர்கள். கூட கிறிஸ்தவ அடைமொழிகள் சிலபோது. முற்றிலும் புதிய முளைகள். மழைக்குப்பின் காட்டைப்பார்க்கபோகும்போது எல்லாமே புதிதாக இருப்பதைப்போல. ஒரு புதிய தலைமுறை உருவாகிறது குமரி மண்ணில். அவர்கள் வாசித்தும் எழுதியும்தான் வளர்கிறார்கள்.

நூலகம் எனும் அன்னை

செட் போடுவதல்ல ஆர்ட் டைரக்ஷன்-
சுகுமாரன்   http://www.kalachuvadu.com/issue-103/page57.asp
முந்தைய கட்டுரைராஜ மார்த்தாண்டனுக்கு அறுபது
அடுத்த கட்டுரைகீதை, கடிதங்கள்