அன்பிற்கினிய ஆசிரியருக்கு,
கல்வி குறித்த என் கட்டுரையை உங்கள் வலைப்பதிவில் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. சமுதாயத்தில் நாம் எதிர்நோக்கும் நல்ல விஷயங்கள், கெட்ட நிகழ்வுகள் ஆகியவற்றின் விதையாகவே நான் கல்விக்கூடங்களை பார்க்கின்றேன், பல நேரங்களில் ஒரு தவறான முன்னுதாரனமாக.
பெருமுதலாளிகள், பினாமியின் வாயிலாக கல்வியில் முதலீடு செய்யும் அரசியல்வாதிகள் ஆகியோரது அடிப்படை நோக்கம் என்பது எல்லா தரப்பு மாணவர்களையும் தங்களின் கல்விக்கூடங்களுக்கு கொண்டுவந்து சேர்ப்பதே ஆகும்
இவர்கள் மாணவ நுகர்வோர்களை இவ்வாறாக தர ஆய்வு செய்து வைத்திருக்கின்றனர்
1) பொறியியலுக்கான மூளை அமைப்பு கொண்ட மாணவர்கள், இயல்பிலேயே இவர்களுக்கு கணிதமும், பிரச்சனையை தீர்க்கும் திறனும் இருக்கும்.
2) பொறியியல் படித்தே ஆக வேண்டும் என்று ஆர்வம் மட்டுமே கொண்டிருக்கும் மாணவர்கள் , வேலை வாய்ப்பு ஒன்று தான் இவர்களை பொறுத்த மட்டில் பொறியியல்
3) தரகர்களின் உதவியோடு கேரளா, மணிப்பூர், சூடான் ஆகிய பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட மாணவர்கள், பெற்றோர்களின் வற்புறுத்தலுக்காக ஏதோ ஒரு படிப்பை படிக்கும் மாணவர்கள், நோக்கம் எதுவும் இல்லாமல் படித்தாக வேண்டுமே என்று படிக்கும் மாணவர்கள்
என ஒவ்வொரு மாணவ தரப்பிற்கும் தலா ஒரு கல்லூரி வீதம் தொடங்கப்பட்டு அது பிற்பாடு ஒரு கல்வி நிறுவனமாக மாற்றப்படும். நாமக்கல் மற்றும் கோவை மாவட்டங்களில் இது போன்ற கல்வி நிறுவனங்கள் மிகவும் அதிகம்.
முதல் தரப்பு மாணவர்கள் பயில்வதற்காக கட்டப்பட்ட கல்லூரியில் பெரும்பாலும் மாணவர் சேர்க்கைக்கு பஞ்சமிருக்காது, பிரச்சனை இரண்டு மற்றும் மூன்றாவது வகை கல்லூரிகள் தான். இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்காக இரண்டு உத்திகள் பின்பற்றப்படுகின்றது
ஒன்று தரகர்களை நம்புவது, வெளி மாநிலங்களில் இடம் கிடைக்காத மாணவர்களே இவர்களது இலக்கு. இரண்டாவது உத்தி பணிபுரியும் ஆசிரியர்கள், ஒரு ஆசிரியர் தலா ஐந்து மாணவர்களை சேர்த்து விட வேண்டும், இல்லையேல் சம்பளம் இல்லை, வேலை இல்லை என்று எல்லா வகையிலும் மிரட்டப்படுவர். மென்பொருள் நிறுவனங்களில் நடக்கும் அடாவடிகளுக்கு சற்றும் குறைவில்லாமல் இன்றைய பொறியியல் கல்லூரிகளில் அடாவடிகள் நடக்கின்றது, நான் வசிக்கும் பகுதியை ஒட்டியுள்ள ஒரு கல்லூரி நிறுவனம் மாணவர் சேர்க்கையை காரணம் காட்டி, அனுபவம் மற்றும் தகுதியுடைய 150 ஆசிரியர்களை வெளியேற்றியுள்ளது. “உங்க ஒருத்தருக்கு தர 25000 சம்பளத்த மூணா பிரிச்சி புதுசா முடிச்சிட்டு வர மூணு பசங்களுக்கு தருவோம்!” என்று பொறுமையாக பதில் தந்துள்ளது கல்லூரி நிர்வாகம், கல்வி நிறுவனங்களுக்கு தேவை நல்ல ஆசிரியர்கள் அல்ல, 60 மாணவர்களுக்கு முன்னால் நின்று பேச மட்டுமே தெரிந்த ஒரு உருவம் இருந்தால் போதுமானது. நாமக்கல் மாவட்டத்து கல்வி நிறுவனங்கள் பலவற்றில் “வரும் ஆனா வராது” என்ற நிலையில் தான் ஆசிரியர்கள் சம்பளம் பெறுகின்றனர்,
கல்வி வணிகத்தில் பெரும் பணம் ஈட்டித்தரும் இரண்டு துறைகள் பொறியியல் மற்றும் மருத்துவம், கோவையில் இது போன்றதொரு கல்வி நிறுவனத்தில் நான் பணியாற்ற தொடங்கிய போதுதான் அவர்கள் மருத்துவத்திற்கான ஒரு கல்லூரி தொடங்கவிருந்தனர். “நாளைக்கி எல்லா ஆசிரியர்களும் நம்ம சேர்மன் புதுசா கட்டிருக்க மெடிக்கல் காலேஜ்க்கு வந்திருங்க, எல்லாரும் இலவசமா செக் அப் பண்ணிக்கலாம்” என்று அன்பாக அழைப்பதாய் எண்ணி (புதுசில்லே) நானும் சென்று இருந்தேன்..எங்கள் கல்லூரியின் உயர்மட்ட பொறுப்பில் இருப்பவரிலிருந்து, நாட்கூலி பெற்று வேலை செய்பவர் வரையில் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். ஒருவரை ஒருவர் முன்பின் அறிமுகம் இல்லாதவரை போன்றே தங்களை காட்டிகொண்டனர், சற்று குழப்பத்துடன் நின்றிருந்த பொழுது என் முறை வந்தது, “உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்று கம்பிக்கு அந்தப்பக்கம் நின்றிருந்த பெண் கேட்டார் , ஒண்ணுமில்லை மேடம், செக் அபக்கு வந்தேன் என்றேன். “சும்மாலாம் செக் அப் பண்ண மாட்டாங்க! ஏதாவது வியாதி சொல்லுங்க” என்று சற்று எரிச்சலுடன் கேட்டார் அந்தப்பெண், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் காய்ச்சல் மேடம் என்றேன். எல்லாரும் காய்ச்சல் !காய்ச்சல்னு ! போயிட்டீங்கன்ன அப்புறம் மத்ததுக்கு எப்படிங்க கூட்டம் சேரும் ? என்று சமுதாய அக்கறையுடன் கேட்ட அந்தப்பெண் என்னிடம் ஒரு அட்டையை தந்தார், அதில் “Neck Pain” என்றும், “orthopedics section” என்றும் எழுதப்பட்டிருந்தது. இல்லாத கழுத்து வலிக்கு அன்று கைநிறைய மாத்திரைகள் வாங்கி வந்தேன். வாத்தியார் ஆன பிறகு நான் பெற்ற முதல் சன்மானம்.
அன்று Medical Council of Indiaவிலிருந்து அதிகாரிகள் வந்திருந்தனர், ஆகையால் மருத்துவக்கல்லூரி முழுவதும் நோயாளிகள் நிரம்பி இருந்தனர் என்பதைப்போல ஒரு பிரமையை உண்டாக்கவே ஆசிரியர்களாகிய நாங்கள் நோயாளி வேடம் தரித்தோம் என்று புரிய எனக்கு இரண்டு நாட்கள் ஆகியது. இந்தக்காட்சிகள் யாவும் மிக வெளிப்படையாகவே அரங்கேற்றம் செய்யப்பட்டன, இந்த அமைப்பிற்கு துளியும் சம்பந்தம் இல்லாத எந்த ஒரு மனிதனும் இங்கே நடப்பது நாடகம் என்பதை மிக எளிதில் உணர முடியும், ஆனால் மெத்தப்படித்த, MCI போன்றதொரு அமைப்பில் அங்கம் வகிக்கும் அதிகாரிகள், வெளிப்படையாக அரங்கேற்றம் செய்யப்படும் இது போன்றதொரு நாடகத்தினை நம்பி மருத்துவக்கல்லூரி தொடங்க அனுமதி அளிக்கும் அளவிற்கு வெள்ளந்தியாகவே வாழ்ந்து வருகின்றனர் என்று நினைக்கும் பொழுது சிரிக்கத்தான் தோன்றுகிறது.
நாளை MCIயிலிருந்து commission வருகின்றது என்று தெரிந்த மாத்திரத்தில், ஆந்திராவிலிருக்கும் ஒரு தரகரை தொடர்பு கொண்டால் போதுமானது, எத்தனை மருத்துவரை வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் அவரால் இறக்குமதி செய்ய இயலும், வருடத்திற்கு ஒருமுறை வரும் MCI Commissionகாக மட்டுமே இவ்வாறாக இறக்குமதி ஆகும் மருத்துவர்கள் பயன்படுகின்றனர், இதை அவர்கள் முழுநேர சேவையாகவே செய்து வருகின்றனர் , கோவையில் 3 மருத்துவக்கல்லூரியில் MCI Commission என்று வைத்துகொள்வோம், 2 அல்லது 3 நாட்களில் இந்த தணிக்கை முடிந்துவிடும். இதற்காக அந்தந்த மருத்துவக்கல்லூரிகளில் வேலை செய்வதாக காட்டிக்கொள்ள நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தரகர்களின் மூலம் மருத்துவர்கள் இறக்குமதி செய்யப்படுகின்றனர். இதற்காக அந்த மருத்துவர்களுக்கு வந்து போக விமான டிக்கெட், ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறைகளில் தங்கும் வசதி என்று சகலமும் கல்லூரி நிர்வாகமே செய்து கொடுக்கும். தணிக்கை முடிந்த உடனேயே இவர்கள் கிளம்பவும் மாட்டார்கள். 5,6 நாட்கள் கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலா தலங்களுக்கு சென்று விழாவை சிறப்பித்து விட்டுத்தான் செல்வார்கள். விமானத்தில் அவர்கள் வந்திறங்கியது முதல் திரும்பவும் அவர்களை வழியனுப்பி டாட்டா காட்டும் வரையில் அவர்களோடு சேர்ந்து பயணிப்பவர்கள் ஆசிரியர்களாகிய நாங்கள், ஆசிரியர்கள் இதற்கு வந்துவிட்டால் பின்பு மாணவர்கள் ? மூச்.
மாணவர்களை அழைத்துக்கொண்டு நேர்முக தேர்வுக்காக இன்னொரு கல்லூரிக்கு சென்றிருந்தேன், அங்கே சாப்பிடும் இடத்தில் bar போன்றதொரு அமைப்பை ஏற்படுத்தி , அதில் பல வகையான மது பாட்டில்களை அடுக்கி வைத்திருந்தனர் எதற்காக இது? என்று கேட்டப்பொழுது, மாணவர்களை வேலைக்கு எடுக்க வரும் மனிதவள அதிகாரிகளை குஷிப்படுத்த என்றார் ஒரு ஆசிரியர்.
தொலைகாட்சியில் சுற்றி அமர்ந்து கொண்டு “ஆசிரியர்கள் நெனச்சா மாற்றங்களை கொண்டுவரலாங்க ” என்று பேசுபவர்களை பார்த்து என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
ஏனென்றால் இன்றைக்கு நல்ல ஆசிரியருக்கான இலக்கணம் என்பது, ” ஒரு ஆசிரியர், ஆசிரியர் அல்லாத அனைத்து வேலைகளை செய்ய தெரிந்திருக்க வேண்டுமென்பதே”.
நன்றி
இப்படிக்கு,
த.நி.ரிஷிகேஷ் ராகவேந்திரன்
ராசிபுரம்