அனல் காற்று எழும் காமம்

அன்புள்ள ஜெ,
அனல்காற்றை வாசித்து முடித்து, அது என்னுள் நிகழ்த்திய ஊசலாட்டங்கள் நிதானத்திற்கு வருமுன்னரே இதோ இந்தக் கடிதத்தைத் தட்டச்சுகிறேன். நுட்பம்என்கிற சொல்லுக்கானப் பொருளை முழுதாய் உணர்ந்ததைப் போலுள்ளது. கதையில் வரும் இரு மையப் பாத்திரங்களின் மனதி ஆழத்தில் சென்று சிந்தித்ததையொத்த நுட்பத்தைப் பல இடங்களின் விவரிப்பில் காணமுடிந்து. ஏற்கனவே வந்த ஒரு கடிதத்தில் சொன்னது போல கூடுவிட்டுக் கூடுபாய்ந்து எழுதினீரோ என்று வியக்காமல் இருக்கமுடியவில்லை.

இந்தக் கதையில் வருவன போன்ற நிகழ்வுகள், அதிதீவிர உணர்ச்சி பொங்கும் தருணங்கள் எனக்கு நடந்ததில்லை என்ற போதிலும், என்னுடைய இருபதாண்டு வாழ்க்கையில் எப்படியும் கடந்த ஏழு ஆண்டுகளா இதைப் போன்ற ஒரு மூத்தப் பெண்ணுடனான உறவை என் மனம் ஆசையாக எதிர்நோக்கியிருந்தது உண்மை. கல்லூரிக்காலத்திலிருந்துதான் என் வயதையொத்த அல்லது இளைய பெண்கள் மீதும் நாட்டம் அதிகரித்தது. பெண்ணின் மனவோட்டத்தைப் பிரதிபலிப்பதை விடுங்கள். ஆண் மனதின் உட்கிடக்கையையே இதுவரை இவ்வாறு யாரும் பதிவு செய்து நான்கண்டதில்லை.
ஒவ்வொரு ஆணுக்கும் இரண்டு பெண்கள் தேவை. தன்னைக் குழந்தையாக உணரவைக்கும் ஒருத்தி, ஆண்மகனாக உணரவைக்கும் இன்னொருத்தி. அபாரமாகக் கூறியிருந்தீர்கள். முற்றிலும் உண்மை.

//மத்தவங்களோட ஒழுக்கத்துக்கு மார்க் போடுறதுக்கு யாருக்குமே ரைட் இல்லை. சும்மா ஒழுக்கம் ஒழுக்கம்னு சொல்றவங்க அவங்களை மறைச்சுக்கிடறதுக்காகத்தான் அப்டி சொல்றாங்க… எல்லாருக்கும் மனசு ஒன்னுதான்…/// இதைப் படிக்கும்போது மனதுக்குள் கைத்தட்டி, விசிலடித்தேன். எனக்குப் பிடித்த வரிகளையெல்லாம் இக்கடிதத்தில் மேற்கோள் காட்டி எழுதினால், அதுவே பல பக்கங்களைப் பிடித்துக்கொண்டு, படிக்கும் உங்களைச் சோர்வடையச் செய்யுமென்பதால் தவிர்க்கிறேன். இரண்டு பக்கங்களுக்கொருமுறை சடாரென்று தாக்குவதைப்போன்ற சில வரிகளைக் கண்டு, அதில் லயிக்க, என்னை நானே கண்டடைய, ஆசுவாசப்படுத்திக்கொள்ள, introspect செய்துகொள்ள என்று சில நிமிட இடைவெளிகள் பலமுறை எனக்குத் தேவைப்பட்டது.

சந்திரா ஏனோ அம்மா வந்தாளில் வரும் ‘இந்து’வை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தாள். படித்து முடிக்கையில், நான் விரும்பியதைப் போன்ற ஒரு உறவு எனக்குக் கிடைத்து, அதன் இன்பங்களை எல்லாம் அடைந்து, கடைசியில் அருண் அதிலிருந்து ஒதுங்குவது போலவே நானும் வந்துவிட்டேன். இதுதான் இந்நாவலின் மிகப்பெரிய வெற்றியாக நான் கருதுவது. இதைக் குறுநாவல் என்று குறிப்பிட்டாலும், கண்டிப்பாக இதுவும் உங்களுடைய மாஸ்ட்டர்பீஸ்களுள் ஒன்றுதான். நன்றி.

அருண்குமார்

அன்புள்ள அருண்குமார்,

எழுத்தாளர்கள் இளமையில் காமத்தை அதிகம் கூர்ந்து கவனிப்பவர்களாக இருக்கிறார்கள். நாற்பது வயதை ஒட்டி அவர்களின் கவனம் மானுட அகங்காரத்தை கவனிப்பதாக ஆகிறது. ஆகவேதான் வைக்கம் முகமது பஷீர் தன்னிடம் தான் ஒரு காதல்கதை எழுதவிருப்பதாகச் சொன்ன தகழி சிவசங்கரப்பிள்ளையிடம் ‘நாற்பது வயதானபின் எழுது. அதுவே அதற்கான வயது’ என்றார். அனல்காற்றில் காமத்தைப் பேச ஆரம்பித்து அகங்காரத்தை நோக்கிச் சென்றிருக்கிறேன் என நினைக்கிறேன். இயல்பான ஒரு பரிணாமமாக.

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 18
அடுத்த கட்டுரைகல்வியும் பதவியும்