பகுதி மூன்று : கலைதிகழ் காஞ்சி
[ 5 ]
காலகம் என்னும் அடர்வனத்தின் நடுவே இருந்த ஸ்தூனகர்ணனின் பதிட்டையின் மேல் இளமழையும் அருவிச்சிதர்களும் சேர்ந்து பெய்துகொண்டிருந்தன. அங்கே செறிந்திருந்த காட்டுமரங்களெல்லாம் பசுந்தழைசெறிந்து காலடியில் இருளைத்தேக்கிவைத்திருந்தன. மழைக்காலத்தில் ஓங்கியெழுந்த புதர்ச்செடிகள் இளவேனிற்காற்றில் தங்கள் எடையாலேயே சாய்ந்து நீர்பரவிச்சென்ற பின் எஞ்சியவை போல கிடந்தன. மூன்று பக்கமும் கரியபாறைகள் சூழ்ந்த அந்த அடர்வனப்பசுமைக்குள் எப்போதும் மழைத்தூறலிருந்தமையால் இலைகள் சொட்டிச் சேர்ந்த மண்ணில் ஊறி தெளிந்த சிற்றோடைகளாக மாறி சரிந்து இறங்கிச்சென்றுகொண்டிருந்தது.
அங்கே வந்துசேர ஓடைகள் வழியாக மட்டுமே வழியிருந்தது. கிளைவிரிந்த மரம்போல கிடந்த சதவாஹி என்ற ஓடை வழியாக வந்த துரியோதனன் அடிமரம் தொற்றி ஏறுபவன் போல அவ்வப்போது தோன்றிய கிளை ஓடைகள் வழியாகத் திரும்பி செம்படலமாகப் பாசி படிந்த வழுக்கும் பாறைகளில் கால்வைத்து ஏறிக்கொண்டிருந்தான். சற்று கால்வழுக்கினாலும் நுரைத்துக்கொட்டும் சிற்றருவிகளின் பாறைகளில் விழநேருமென்பதை உணர்ந்த அவனுடைய கெண்டைக்கால்தசையும் முதுகெலும்பும் கொண்ட எச்சரிக்கை உணர்வுதான் அவனை எண்ணங்களிலிருந்து மீட்டு புறவுலகில் ஒன்றச்செய்துகொண்டிருந்தது. எனவே ஒவ்வொருமுறையும் ஏறுவதற்குக் கடினமான பாறைகளையே அவன் தேர்வுசெய்தான். ஒவ்வொருமுறை கால்வழுக்கும்போதும் அவனுடைய உடலைத் தாங்கியிருந்த தன்னுணர்வு உலுக்கப்படுவதை அவன் விரும்பினான்.
ஸ்தூனகர்ணனின் ஆலயத்துக்கு முன்னாலிருந்த மலைச்சுனையை அடைந்ததும் அவன் நின்றான். தன்னுள் விடாயை அப்போதுதான் உணர்ந்தவனாக நடந்து வந்து சுனையை அடைந்தான். மலைப்பாறையில் விழுந்த அருவியால் சீரான நீள்வட்டமாக வெட்டப்பட்டிருந்த சுனையின் விளிம்பில் நின்றபோதுதான் அது எத்தனை ஆழமானதென்று உணர்ந்தான். அடித்தட்டில் பிளந்து மேலும் ஆழத்துக்குச் சென்ற பாறையை மிக அருகே எனக் காணமுடியுமளவுக்கு நீர் தெளிந்திருந்தது. அவன் அதில் நீராலானவை போன்ற இறகுகளுடன் நீண்ட மீசைகளுடன் எட்டு பொய்விழிகளுடன் நீந்தும் தீட்டப்பட்ட இரும்பு நிறமுள்ள மீன்களைப் பார்த்து அது குடிநீர் என்பதை உறுதிசெய்தபின் குந்தி அமர்ந்து அள்ளிக்குடித்தான். நீர் சற்று கனமாகவும் குளிராகவும் இருந்தது. இரும்பை நக்கிப்பார்த்ததுபோல நாவில் அதன் சுவை தெரிந்தது.
நீரை அள்ளிவீசி தன் உடலில் படிந்திருந்த மகரந்தங்களையும் தேன்துளிகளையும் புல்விதைகளையும் களைந்தபின் கச்சைத்துணியைக் கழற்றி துடைத்துக்கொண்டு அவன் எழுந்தபோது நீருக்கு அப்பால் ஒருவன் நின்றிருப்பதைக் கண்டான். அவன் எப்போது அங்கே வந்தான் என்று அவன் அகம் வியந்த கணமே அவன் நீருக்குள் இருந்து எழுந்தான் என்றும் தோன்றியது. ஆனால் அவன் உடைகள் சொட்டவில்லை. “அஸ்தினபுரியின் இளவரசனை வணங்குகிறேன்” என்று அவன் சொன்னான். தோளில் விழுந்த நீண்ட சுரிகுழலும் காதுகளில் ஒளிவிடும் குண்டலங்களும் இடையின் பட்டுக்கச்சையுமாக அழகிய அரசகுமாரனைப்போலத் தோன்றினான்.
“நீ யார்?” என்றான் துரியோதனன். அவன் சிரித்து “இச்சுனையருகே வாழ்பவன்” என்றான். ஒருகணம் அவன் விழிகள் திரும்பியதைத் தொடர்ந்த துரியோதனனின் விழிகள் நீருக்குள் தெரிந்த அவனுடைய தோற்றத்தைப் பார்த்தன. அங்கே அவனுடைய படிமம் ஆரம்படிந்த முலைக்கச்சையும் மேகலை மூடிய அந்தரீயமும் குழைகளும் புரிவளைகளும் அணிந்த பெண்ணாகத் தெரிந்தது. அவன் விழிகள் ஒளிவிட்டன “என் பெயர் ஸ்தூனகர்ணன்” என்று அவன் சொன்னான். “ஸ்தூனகர்ணை என்றும் என்னைச் சொல்வார்கள். மண்ணில்வாழும் கந்தர்வன் நான்” என்றான்.
துரியோதனன் அப்பால் நீர்க்களிம்பும் பாசியும் படிந்து நின்றிருந்த ஸ்தூனகர்ணனின் சிலையை பார்த்த்தான். அதன் ஒருபக்கம் பெண்ணாகவும் மறுபக்கம் ஆணாகவும் இருந்ததைக் கண்டு கண்ணைத்திருப்பியபோது கரையில் நின்றிருந்தது பெண்ணாகவும் நீருள் தெரிந்த படிமம் ஆணாகவும் தெரிந்தது. “தேவ, உங்களை வணங்குகிறேன். இத்தருணத்தில் உங்களைக் காணும் நல்லூழ் எனக்கு அமைந்தது இறைநெறி என்றே எண்ணுகிறேன். உங்கள் கனிவையும் வாழ்த்துக்களையும் நாடுகிறேன்” என்று தலைவணங்கி கைகூப்பினான். “நலம் திகழ்க” என்று வாழ்த்திய ஆண்குரலைக் கேட்டு அவன் நிமிர்ந்தபோது அங்கே ஆண்வடிவம் நின்றுகொண்டிருந்தது.
“நீ துயருற்றிருக்கிறாய் மைந்தா” என்றான் ஸ்தூனகர்ணன். “ஆம், தேவா. நான் எரிந்துகொண்டிருக்கிறேன்” என்றான் துரியோதனன், “ஏன்?” என்று ஸ்தூனகர்ணன் கேட்டான். “எனக்கு சொல்லத்தெரியவில்லை. எங்கும் என்னால் காலூன்றி நிற்க முடியவில்லை. உணவும் நீரும் வெறுத்து இந்தக்காட்டில் மூன்றுநாட்களாக அலைந்துகொண்டிருக்கிறேன். இனி உயிர்வாழலாகாது என்று என் அகம் மீளமீளக் கூவிக்கொண்டிருக்கிறது. நான் வாழ விரும்பவில்லை. இனி நான் வாழ்வதில் பொருளும் இல்லை” என்றான் துரியோதனன். “ஆனால் இறப்பால் இவ்வழல் அணையாதென்ற உணர்வாலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.”
“உன் உள்ளம் அமைதிகொள்ள என்னவேண்டுமென்று சொல்!” துரியோதனன் நிமிர்ந்து அவனை நோக்கி “நான் விழைவது ஒன்றே, நிறைவான இறப்பு. அதைத்தான் உங்களிடம் நான் கோரமுடியும்” என்றான். “நில், நீ இன்னும் இளைஞன். உன் ஊழ்வினையோ மூதாதையர் தேடிவைத்த பெருங்கடன் போல திரண்டிருக்கிறது. நீ இறக்கமுடியாது.” “நான் வாழவும் முடியாது” என்று துரியோதனன் உரக்கக் கூவினான். “என் வாழ்க்கை முடிந்துவிட்டது. மூன்றுநாட்களுக்கு முன் என் ஆன்மா இறந்துவிட்டது.”
ஸ்தூனகர்ணன் புன்னகைத்து “இறக்கவில்லை, புண்பட்டது. உன் ஆன்மா அல்ல, உன் ஆணவம்” என்றான். “ஆம், என் ஆணவம்தான் நான். அதுவே என் ஆன்மா. நான் பிறந்த கணம் முதல் அப்படித்தான் இருக்கிறேன். சிறுமைகொண்டவனாக நான் இனி வாழமுடியாது” என்று துரியோதனன் கண்ணீருடன் சொன்னான். “வணங்கும் கண்களை மட்டுமே கண்டு வளர்ந்தவன் நான். அப்படித்தான் என்னால் வாழமுடியும்… வேறெப்படியும் வாழமுடியாது. அது எனக்கு என்னைப்படைத்த விண்ணகத் தெய்வங்களிட்ட ஆணை.”
“நீ வாழவேண்டுமென்றால் நான் என்ன செய்யவேண்டும்?” என்று ஸ்தூனகர்ணன் கண்கள் ஒளிரக் கேட்டபடி அருகே வந்தான். அவ்வாறு ஒருவன் மிக அருகே நிற்கும்போது தன் அகவுணர்வு அங்கே ஓர் இருப்பை உணராமலிருப்பதன் விந்தையை அறிந்தபடி துரியோதனன் “நீங்கள் விண்ணவர். நீங்களறியாததேதும் இல்லை” என்றான். ஸ்தூனகர்ணன் “நீ அவனைக் கொல்லவேண்டும். உன் தம்பியர் கண்முன், உன் தந்தையின் சொல்முன். இல்லையா?” என்றான்.
அச்சொற்களைக் கேட்டு துரியோதனன் உடல் சிலிர்த்தான். தன்னுள் இருந்து வாய்வழியாக ஒரு நாகம் இறங்கி வெளியே வந்து படமெடுத்து சீறி நிற்பதுபோல் தோன்றியது. அவன் அசையாத விழிகளுடன் ஸ்தூனகர்ணனை நோக்கி நின்றான். ஸ்தூனகர்ணன் மிகமெல்ல உதடுகள் வளைய புன்னகைசெய்து “அச்செய்தியை பீஷ்மர் அறியவும் வேண்டும். அவரது விழியிலிருந்து கண்ணீர் சொட்ட வேண்டும் இல்லையா?” என்றான். “அவர் எனக்கொரு பொட்ருட்டே அல்ல” என்று துரியோதனன் உரக்கச் சொன்னான். “இளவரசே, பாரதவர்ஷத்தின் அத்தனை இளவரசர்களும் உண்மையில் அவர் ஒருவரை மட்டுமே பொருட்படுத்துகிறார்கள்” என்றான் ஸ்தூனகர்ணன்.
“ஏன்?” என்றான் துரியோதனன். அவனுக்கு மூச்சிரைக்கத் தொடங்கியது. “அவரை நான் அறிந்ததேயில்லை.” ஸ்தூனகர்ணன் சிரித்து “நீ அறியவில்லை, உன் தோள்கள் அறியும்.” என்றான். மீண்டும் உரக்கச் சிரித்து “அவரைக் கண்டதுமே நீ அறிந்தது ஒன்றுதான் உன் பெரும்தோளாற்றல் நாளை எத்தனை வளர்ந்தாலும்சரி, உன் வாழ்நாளெல்லாம் நீ படைக்கலம் பயின்றாலும் சரி, விண்ணாளும் மும்மூர்த்திகளையே ஆசிரியர்களாகப் பெற்றாலும் சரி, நீ பிதாமகரை போரில் வெல்லமுடியாது. மண்ணில் நீ வெல்லமுடியாதவர் அவர் ஒருவர் மட்டுமே.”
துரியோதனன் திகைத்து நின்று கையை மட்டும் ஏதோ சொல்லவிருப்பவனைப்போல அசைத்தான். ஸ்தூனகர்ணன் “இளவரசே, இம்மண்ணில் உயிருடனிருப்பவர்களில் எவரும் அவரை வெல்லமுடியாது. பீமனும் நீயும் உங்களை இருகைகளால் குழந்தைபோல தூக்கிவீசும் உன் தந்தையும் எல்லாம் அவருக்கு மழலைகள் போலத்தான். ஒருவராலும் வெல்லப்படாதவராக வாழ்ந்து முதிர்ந்து மறையும் பேறுபெற்றுவந்த மானுடர் சிலரே. அவர் அவர்களில் தலையானவர். அதை அறிந்த கணம் உன் தந்தையின் ஆணவம் அழிந்து அவர் விடுதலைபெற்றார். உன் ஆணவம் பலநூறு கொடிவிட்டு வளர்ந்து உன்னைச் சுற்றிக்கட்டி வரிந்துவிட்டது” என்றான்.
“நான் அவரைப்பற்றி பேசவரவில்லை” என்றான் துரியோதனன். “சரி, நீ விழைவது எதுவோ அதை உனக்களிக்கிறேன். நீ அவனைக் கொல்லவேண்டும் அல்லவா?” துரியோதனன் இமைக்காமல் நோக்கி நின்றான். “அச்சுனைநீருக்குள் நோக்கு. அங்கே ஒரு கதாயுதம் கிடக்கிறது. அதை எடுத்துக்கொள்.” துரியோதனன் தன் உடலின் தசைகள் அனைத்தும் செயலிழந்துபோனதுபோல உணர்ந்தவனாக அசையாமல் நின்றான். “அதுதான் அவனைக்கொல்லும் படைக்கலன். அதை எடுத்துக்கொள்” என்றான் ஸ்தூனகர்ணன். “அது சொல்லற்ற துணை போல உன்னுடன் எப்போதும் இருக்கும். நீ வளரும்போது அதுவும் வளரும். உன் வஞ்சம் பெருகும்போது அதுவும் வீங்கும்.”
துரியோதனன் அவன் விழிகளை நோக்கினான். மெல்லக் காலெடுத்துவைத்து நீருக்குள் பார்த்தபோது நீரின் ஒளிரும் அலைநிழல்கள் அடிப்பாறையில் அலைபாய்வதைத்தான் கண்டான். சற்று பார்வை துலங்கிய பின்னரே அவ்வலைகளுடன் கலந்ததுபோல தன் உடலின் சித்திரச்செதுக்குகள் ஒளிவிட வெள்ளியென மின்னும் பெரிய கதாயுதத்தைப் பார்த்தான். “இளவரசே அந்தக் கதாயுதம் இமயமலையடிவாரத்தில் ஓடும் ஒரு நதி. அதன்பெயர் ரௌப்யை” என்றான் ஸ்தூனகர்ணன்.
ஸ்தூனகர்ணன் சொன்னான் “ரௌப்யையின் கரையில் இருக்கும் பிரசர்ப்பணம் என்னும் சோலையில் முன்பு அனலின் அதிபரான ஜமதக்னி முனிவர் வந்து தவம்செய்தார். அவர் தவம்செய்த பன்னீராண்டுகாலமும் ரௌப்யை ஒரு சிற்றோடையாக அவருக்கு சேவை செய்தாள். காலையில் அவர் நீராடுவதற்கு குளிர்நீரளித்தாள். அவர் குடிக்கும் நன்னீரானாள். மதியம் இளந்தென்றலாக அவரைச் சூழ்ந்தாள். இரவில் குளிரோசையாக அவரை தாலாட்டினாள். அவர் தவம் முடிந்து கிளம்பும்போது ரௌப்யை தன் அலைவிரல்களால் அவர் பாதங்களை வணங்கியபோது அவர் உனக்கு என்ன வரம் தேவை சொல் என்றார்.”
“ரௌப்யை என் விழைவுக்கேற்ப அக்கணமே நான் விரிந்து பெரிதாகவேண்டும் என்று கோரினாள். அவ்வண்ணமே ஆகுக என்று வரமளித்தார் முனிவர். வெள்ளிவடிவானவளை இதோ உனக்காக ஒரு படைக்கலமாக்கியிருக்கிறேன். உன் அகந்தைக்கு நிகராக வளரும் வல்லமைகொண்டது இது” என்றான் ஸ்தூனகர்ணன். குனிந்து நீருக்குள் கையை விட்டு அந்த கதாயுதத்தைத் தொட்டான் துரியோதனன். அதைத் தொடும் வரை அது ஒரு வெளிச்சம் மட்டுமே என்ற எண்ணம் அவனுக்கிருந்தது. அதன் குளிர்ந்த உலோகப்பரப்பைத் தொட்டபோது அதன் எடையையும் உணரமுடிந்தது.
அவன் அதைப்பற்றி மேலெடுக்க முயன்றபோதுதான் அது பாறையுடன் இணைந்ததுபோல முற்றிலும் அசைவற்றிருப்பதை உணர்ந்தான். இரு கைகளாலும் அதைத்தூக்கி இழுத்தபோது அவனுடைய கழுத்துத் தசைகள் இறுகித் தெறிக்க, நரம்புகள் புடைத்துத் துடித்தன. தோளிலும் புயங்களிலும் குருதிக்குழாய்கள் வேர்முண்டுகள் போல எழுந்தன. பின்பு மூச்சை விட்டு அவன் தளர்ந்தான். ஒருகையை மண்ணில் ஊன்றி மறுகையை கொண்டு அதைத் தூக்க முயன்றான். அவன் கண்களுக்குள் குருதி தேங்கி அனல்வெம்மை பரவியது. அதை அசைக்கக்கூட அவனால் முடியவில்லை.
அவனுக்கு மிக அருகே ஸ்தூனகர்ணனின் காலடிகள் வந்து நின்றன. நிமிர்ந்தபோது இடைக்குமேல் ஸ்தூனகர்ணன் பெண்ணுருவில் இருப்பதைக் கண்டான். “நீ இன்னும் உன் முழுஆற்றலை அடையவில்லை இளவரசே” என்றாள் ஸ்தூனகர்ணை. “உன் தசைகளும் எலும்புகளும் மட்டுமே ஆண்மை கொண்டுள்ளன. உன் நெஞ்சில் ஆண்மை முழுமையாக நிறையவில்லை.” துரியோதனன் சினத்துடன் நிமிர்ந்து நோக்கி ஏதோ சொல்ல வாயெடுப்பதற்குள் “அந்நீர்ப்படிமத்தில் உன் உடற்தசைகளைப்பார்” என்றாள்.
அவன் குனிந்து நோக்கியபோது அவளுடைய குரலை மிக அண்மையில் காதில் கேட்டான். “அத்தசைகளை உன்னுள் இருந்து விரும்புவது யார்?” துரியோதனன் அப்பிம்பத்தை நோக்கி விழிகள் விரிந்து அமர்ந்திருக்க அவனுடைய பிடரியில் புல்லரிப்பெழுந்தது. “அவள் பெயர் சுயோதனை. அல்லது துரியோதனை. மண்ணுக்குக் குழந்தைகளை அனுப்புகையில் படைப்புத்தெய்வம் இருகைகளாலும் மண்ணெடுத்து வனைகிறது. வலக்கையால் பெண்ணை, இடக்கையால் ஆணை. கருவறைக்குள் அதைச்சேர்க்கும் அக்கணத்தில் அதிலொன்றை தேர்வுசெய்கிறது. அதன் விதிகளென்ன என்று பிரம்மம் மட்டுமே அறியும்” என்றாள் ஸ்தூனகர்ணை.
“பிறக்காத அந்தப் பெண்வடிவம் உடல் அளிக்கப்படாத ஆன்மாவாக பிறந்தவனுக்குள் என்றும் வாழ்கிறது. அவன் பெயரின், அனுபவங்களின், எண்ணங்களின், உணர்வுகளின், ஞானத்தின் பாதியை அதுவும் பெற்றுக்கொள்கிறது.”‘ துரியோதனன் நீருக்குள் தெரிந்த தன் படிமம் ஒரு சிறு பெண்ணாக இருப்பதைப்பார்த்தான். காமம் நிறைந்த விழிகளால் அவள் அவனை நோக்கிக்கொண்டிருந்தாள். “நீ எப்போதும் அவளை அறிந்துகொண்டுதான் இருந்தாய். இவ்வடிவில் இப்போது பார்க்கிறாய்” என்றாள் ஸ்தூனகர்ணை.
துரியோதனன் ஊன்றிய கைகள் தளர்ந்து நீருக்குள் முகம் தாழப்போய், பின்பு திடம்கொண்டு விழாமல் மீண்டான். நீள்மூச்சுடன் அங்கே நின்றிருந்த ஸ்தூனகர்ணனைப்பார்த்தான். “அவளிருக்கும் வரை நீ அவனைக் கொல்லமுடியாது” என்று சொன்னபோது ஸ்தூனகர்ணன் கண்கள் மின்னி அணைந்தன. அதிர்ந்த நெஞ்சுடன் கைவிரல்கள் நடுங்க துரியோதனன் அந்தப்படிமத்தை மீண்டும் பார்த்தபின் எழுந்து திரும்பாமல் ஓடி வழுக்குப்பாறைகளில் குதித்துக் குதித்து கீழிறங்கி மூச்சிரைக்க ஓடைநீரில் நின்றான். அவனைச்சூழ்ந்திருந்த அகன்ற இலைகொண்ட காட்டுசேம்புகள் அருவித்துமி பனித்து ஒளிகொண்ட முத்துக்களாக நிற்க காற்றிலாடின. அவற்றிலமர்ந்திருந்த சிறிய பச்சைத்தவளைகள் சொற்களை விழித்தபடி எழுந்தமர்ந்தன.
மூச்சு அடங்கியதும் அவன் மீண்டும் இறங்குவதற்காக பாறைகளைப் பற்றியபடி காலெடுத்துவைத்தான். காலை வைக்காமல் சிலகணங்கள் அசைவிழந்து நின்றுவிட்டு மேலே பார்த்தான். எட்டு படிகளாக வெண்ணிற ஓடையின் அருவிகள் எழுந்துசெல்ல மேலே இலைத்தழைக்கு அப்பால் ஒளியாக வானம் தெரிந்தது. அவன் மீண்டும் மீண்டும் பெருமூச்சு விட்டான். பின்னர் பாறைகளில் கைவைத்து தொற்றி மேலேறினான். மேலேறும்தோறும் அவன் விரைவு கூடிக்கூடி வந்தது.
மீண்டும் சுனைக்கரைக்கு வந்தபோது அங்கே எவரும் இருக்கவில்லை. மறுபக்கம் மேலிருந்து வழிந்த நீரின் துமிமூடிய ஸ்தூனகர்ணன் சிலை தெரிந்தது. சற்றுநேரம் வெளிவிட்டிருந்த வானம் மீண்டும் மூடி சிதர்களாக தூறல் விழத்தொடங்கியது. அவன் குனிந்து சுனைக்குள் அந்தக் கதை கிடக்கிறதா என்று பார்த்தான். அது அங்கிருக்காதென்றும் நிகழ்ந்தவையெல்லாம் வெறும் கனவே என்றும் அவன் அகம் எண்ணியது. ஆனால் உள்ளே வெள்ளிநீரலைகள் சூழ அது அப்படியே கிடந்தது.
துரியோதனன் ஸ்தூனகர்ணன் சிலையையே நோக்கிக் கொண்டிருந்தான். பின்னர் சுனைக் கரையில் பத்மாசனமிட்டு அமர்ந்து நீர்ப்பரப்பைப் பார்த்தான். அவன்மேல் விழுந்த துமிகள் முடிகளில் பளிங்குத்துருவல்களாக ஒளிவிட்டு நின்றன. பின்னர் அவனுடலில் நீர் வழியத்தொடங்கியது. அவன் தன் படிமத்தின் முகத்தை நீராடியில் பார்த்துக்கொண்டிருந்தான். அலைகளில் கலைந்து கலைந்து வண்ணங்களாக மாறி அழிந்து மீண்டுகொண்டிருந்தது அது. சற்றுநேரத்திலேயே அவன் அகம் சலித்து சினம் கொண்டது. அச்சினத்தின் மேல் தன் சித்தத்தைவைத்து அழுத்தி தன்னை மீட்டுக்கொண்டான். மீண்டும் அதையே நோக்கிக்கொண்டிருந்தான்.
மூன்றாவது நாள் அவன் தன் படிமம் அசையும் அலைநீரில் அசைவில்லாது நிற்பதைக் கண்டான். அவன் விழிகளை அதன் விழிகள் சந்தித்தன. அவன் அசைந்தபோதும் அது அசையவில்லை. அவன் விழிகள் இமைத்து உதடுகள் பிரிந்தபோது அவ்வசைவுகள் அதில் கூடவில்லை. மெல்ல அந்தப் படிமம் அவனைப்பார்க்கத் தொடங்கியது. மேலும் மூன்று நாட்களுக்குப்பின் அவன் அப்படிமத்தின் விழிகள் உருமாறியிருப்பதைக் கண்டான். அவை பெண்விழிகள்.
அதன் ஒவ்வொரு உறுப்பும் மெதுவாக பெண்ணாயின. மூக்கும் உதடுகளும் காதுகளும் எல்லாம் அவனுடையதுபோலவே இருக்கையில் பெண்மையை மட்டும் சேர்த்துக்கொண்டன. பின் அவன் தன்னைப்போலவே இருக்கும் தன் வயதுள்ள பெரிய சிறுமியைக் கண்டான். அவளுடைய காமம் கனிந்த பார்வையை அவன் விழிநட்டு நோக்கினான். அவளுடைய மெல்லிய உதடுகள் ஓசையில்லாமல் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தன. அவன் அச்சொற்களைக் கேட்கச் செவிகூர்ந்தான். உடலே செவியானபோதிலும் கூட அது அழிந்து அழிந்து சென்றதல்லாமல் ஒலியாகவில்லை.
பின் அவன் அச்சொல்லைப் பார்த்தான். அக்கணமே ஓசையுடன் சீறியபடி தன் கையை விரித்து அந்நீர்ப்படிமத்தை அறைந்தான். அது கிழிபடும் ஓவியத்திரைச்சீலைபோல கிழிந்தது. கிழிசல்களிலிருந்து எழுந்த குருதி நீரில் கரைந்து வண்ணம்பிரிந்து நெளிந்தது. அங்கே அவன் இன்னும் இளமையான தோற்றத்தில் அச்சிறுமியைக் கண்டான். மீண்டும் தன் கையைத்தூக்கி அதை அறைந்து அதைக் கலைத்தான். மீண்டும் தெளிந்த நீர்ப்படிமம் திகைப்புடன் விழியில் துளித்த நீருடன் அவனை நோக்கி ஓசையின்றி இறைஞ்சியது. அவன் அதன் முகத்தை தன் கையால் ஓங்கி அறைந்தான். குருதிகலைந்து கொப்பளித்து அது மறைந்தது.
மீண்டும் அப்படிமம் தெளிவடைந்தபோது அவன் கருவறைவிட்டிறங்கியது போன்ற குழந்தையைக் கண்டான். குருதியில் தன் தொப்புள்கொடியை ஒருகையால் பற்றியபடி அது நீந்திக்கொண்டிருந்தது. அதன் செங்குருத்துகால்களின் விரல்கள் வயிற்றுடன் ஒட்டியிருந்தன. அவன் கையைத் தூக்கி அதை அடித்தபோது நீருக்குப்பதில் வெம்மையான மென்சதையில் அந்த அறைவிழுவதைக் கண்டான். ஒரே அறையில் புழுவைப்போலச் சிதைந்து குருதியுடன் நிணமாகக் கலந்து மறைந்தது அது. வெம்மையின் வீச்சத்துடன் குருதிச்சுனை நெடுநேரம் கொப்பளித்துக்கொண்டிருந்தது.
அவன் விழிப்புற்று தன்னை அறிந்தபோது உடல் களைப்பில் நடுங்கிக்கொண்டிருந்தது. கைகளை ஊன்றி எழுந்து நின்றான். அவன் முன் அந்தச் சுனை தெள்ளிய நீருடன் அலையடித்திருக்க அதன் வடக்குமூலையில் இலைத்தழைப்பை மீறிவந்த ஒளிச்சட்டகம் ஒன்று விழுந்து அடித்தட்டை ஒளிபெறச்செய்திருந்தது. வலக்கையை மண்ணில் ஊன்றி அவன் எழுந்தான். கால்கள் உயிரற்றவை போல அவனை ஏந்த வலுவிழந்து அசைந்தன. கண்களை மூடி உள்ளே சுழன்ற ஒளியை சிலகணங்கள் பார்த்தபோது சமநிலை மீண்டது.
அவன் திரும்பியபோது பின்னால் ஸ்தூனகர்ணன் அழைத்தகுரலைக் கேட்டான். “நீ வென்றுவிட்டாய். ரௌப்யையை எடுத்துக்கொள்” என்றான் ஸ்தூனகர்ணன். துரியோதனன் தளர்ந்த மெல்லிய குரலில் உறுதியுடன் “தேவையில்லை. இனி எனக்கு தெய்வங்கள் இல்லை” என்றபின் நடந்து புதர்களுக்குள் சென்றான்.