«

»


Print this Post

அவி


மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு

தங்களுடைய வெண்முரசு தொடர்ந்து வாசித்து வருகிறேன். வெண்முரசு எப்பொழுதோ விமர்சனங்களுக்கு அப்பாற்பட்ட நிலையை அடைந்துவிட்டதாக தோன்றுகிறது. இனி அதன் மீதான விவாதம் எல்லாமே அதனை எவ்வாறு தற்கால, எதிர்கால வாசகர்கள் உள்வாங்கிக்கொள்ளப்போகிறோம் என்பதாகவே இருக்கும் என நினைக்கிறேன். ஒருமுறை நீங்கள் திருக்குறளைப்பற்றிக் கூறும் பொழுது அதிலுள்ள வார்த்தைகளும் சொற்றொடர் அமைப்பும் பாலிலிருந்து நெய்போல துல்லியமான வெளிப்பாடு, ஆயிரம் பக்க விளக்கங்கள் சுருங்கி சூத்திரமானது திருக்குறள் என்றீர்கள். வெண்முரசும் அப்படித்தான் இருக்கிறது. ஒவ்வொரு வார்த்தையும் ஒரு ரகசியத்திறப்பைக் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு வார்த்தையையும் உள்வாங்கிக்கொள்ளும் பொழுது அது மிகப்பெரும் மகிழ்வைத் தருகிறது. அதைவிட வினோதம், மீண்டும் வாசிக்கும் பொழுது அது வேறோர் கோணத்தில் மகிழ்வைத்தருகிறது. நீங்கள் கூறிய ஒர் வாசகம்தான் நினைவுக்கு வருகிறது. இலக்கியம் என்பது பெரிய ஏரி. ஒவ்வொரு கலைஞனும் அதன் மதகுகள் மட்டுமே. எனக்கென்னவோ மகாபாரத ஏரி மொத்தமும் உடைந்து தங்கள் வழியாக வெளியேறுகிறதோ என்ற எண்ணம்.

இறுதியாக‌ ஒரு ஐயம். சமூகத்தேவை இல்லாத எந்த ஒரு பழக்க வழக்கங்களும் நிலைத்திடாது, அதற்கான தேவை முடிந்த பின்னரும் தொடரும் பழக்க வழக்கங்களே விமர்சனத்துக்கு ஆளாகின்றன என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இன்றைய காலத்தினை விட அந்தக் காலகட்டங்களில் போக்குவரத்து வசதிகளும் தொடர்புகளும் குறைவு. அக்காலகட்டங்களில் உணவு என்பது மிகப்பெரும் பிரச்சினை. அந்நிலையில் எவ்வாறு அவியளித்தல் என்பது சடங்காக நிலைபெற்றது? அதற்கான சமூகத்தேவைகள் என்ன? அதன் தொடர்ச்சியாகவே இன்றும் நாம் நெருப்பில் உணவுப்பொருட்களை இடுகிறோமா?

ராஜேஷ்

https://www.youtube.com/watch?v=KKlZogXErWE

அன்புள்ள ராஜேஷ்,

இருபதாண்டுகளுக்குமுன் இ.எம்.எஸ் ஒரு கட்டுரையில் இதைச் சொல்லியிருந்தார், வேதகாலத்தில் வேள்விகளில் உணவு வீணாக்கப்பட்டது என்று. அதை நான் நித்ய சைதன்ய யதியிடம் கேட்டேன். ‘இ.எம்.எஸ்ஸால் குறியீட்டுச்சடங்குகளைப் புரிந்துகொள்ளமுடியாது. அதற்கு கிராம்ஷி படித்த அடுத்த தலைமுறை மார்க்ஸியர்கள் வரவேண்டும்’ என்றார்.

அவர் சொன்ன விளக்கம் இது. வேதவேள்விகள் மிகமிக அபூர்வமாக நிகழக்கூடியவை. பல்லாயிரம் மக்களில் மிகச்சிலரே அதைச் செய்கிறார்கள். அதுவும் எப்போதாவது. அங்கே நேரடியாக வீணாகும் உணவு மிகக்குறைவு. ஆனால் அதன் மூலம் கட்டமைக்கப்படும் ‘உணவு நேரடியாகவே இறைவனுக்குச் செல்லக்கூடியது, மிகமிகப் புனிதமானது’ என்னும் உணர்வு உணவு வீணடிக்கப்படுவதைத் தடுக்கிறது. அதன்மூலம் சேமிக்கப்படும் உணவு பலநூறு மடங்கு அதிகம்.

உங்கள் வினாவுக்கான பதில் இதுதான். அன்று உணவு குறைவானதாக இருந்தமையால்தான் அதை மிகப்புனிதமானதாக ஆக்கி வீணாகாமல் காக்கவேண்டியிருந்தது. வேதவேள்விகள் அதற்காகவே. இன்று ஆலயங்களில் உணவு அபிஷேகம் பண்ணப்படுவதையும் அப்படி புரிந்துகொள்ளலாம். உணவாகவே இறைவனைப் பார்க்கும் மனநிலையின் வெளிப்பாடு அது.உணவை மிதிக்கக்கூடாது, உணவுப்பாத்திரத்தை உடைக்கக்கூடாது போன்ற ‘மூட’நம்பிக்கைகளும் அவ்வாறு உருவானவையே.

ஆனால் உணவின் மீதான அப்புனிதஉணர்வை இழந்துவிட்ட நாம் இன்று உண்ணும் அளவுக்கே உணவை மேஜையிலும் களஞ்சியங்களிலும் வீணடிக்கிறோம் என்கிறார்கள் சமூகவியலாளர்கள். இன்று உணவை வீணடிப்பவர்களிடம் கேட்டுப்பார்த்தால் அதற்கான காரணம் தெரியும். உணவு அவர்களுக்கு வெறும் நுகர்பொருள்தான். அதற்குரிய விலைதான் அதன் மதிப்பு. இத்தனை உணவை வீணடிக்கிறீர்களே என நான் கேட்ட ஒவ்வொரு முறையும் ‘என்னசார் ஒரு பத்து ரூபா வெலையிருக்குமா?’ என்ற பதில்தான் வந்திருக்கிறது.

ஜெ

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/56367