தஸ்தயேவ்ஸ்கி:கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்,

குற்றமும் தண்டனையும் படித்தேன். இரு சிறு திருத்தங்கள்

1. மகாத்மா காந்தி தேசத்துரோக  (Treason) குற்றத்துக்காக விசாரிக்கப்படவில்லை ராஜதுரோகக் (Sedition) குற்றத்துக்காகவே விசாரிக்கப்பட்டார். ராஜதுரோகம் என்பது அரசை நிந்தனைசெய்வது, அதன் அடிப்படைகளை எதிர்ப்பது. தேசத்துரோகம் என்பது தேசத்துக்கு எதிராக போர் செய்வது. தேசத்துரோகம் சிலநாடுகளில் குற்றமாகக் கருதப்படுகிறது. உதாரணமாக மாதாஹாரி ·ப்ரான்ஸில் முதல் உலகப்போர் நாட்களில் ராஜத்துரோக வழக்குக்காக மரணதண்டனைக்கு ஆளானார். ஆனால் அது பிரிட்டிஷ் சட்டப்படி பெரும்குற்றம் அல்ல. அரசுக்கு எதிராக போர் செய்தல் என்னும் தேசத்துரோகம் என்பது பெரும்குற்றம். அது மரணதண்டனை அல்லது நாடுகடத்தல் தண்டனைக்கு உரியது. வ.உ.சிதம்பரம்பிள்ளை, வீர் சவார்க்கர் போன்றவர்கள் அக்குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்
 
2. இரண்டாம் உலகப்போரில்  வெற்றிபெற்றவர்களால் அமைக்கப்பட்ட போர்க்குற்றநீதிமன்றம் ஜெர்மனியில் நியூரம்பர்க் நகரில் நடைபெற்றது, ஆஸ்டர்விட்ஸில் நடந்தது என்று சொல்லியிருக்கிறீர்கள். போலந்து நாட்டில் உள்ள ஆஸ்விட்ஸ் நகரில் யூதர்கள் படுகொலை செய்யப்பட்ட படுகொலை முகாம்கள் இருந்தன. ஆஸ்விட்ஸ் என்பதே உச்சரிப்பு. ஆஸ்டர்லிட்ஸ் என்று இன்னொரு நகரம் உள்ளது. 1805ல் நெப்போலியன் அங்கே ஒரு பெரும் வெற்றியை அடைந்தார். மற்றபடி அதுஅ ழகிய நல்ல ஊர். 

மேலதிகாரிகளின் ஆணையின்படி நடந்தோம் என்ற குற்றவாளிகளின் விளக்கம் விசாரணை மன்றத்தால் ஏற்கப்படவில்லை. அத்துடன் போரின்போது மேலதிகாரிகளை மீறி ஜெர்மனிய படைவீரர்கள் நடந்துகொண்டார்கள் என்றும் ஏராளமான குற்றச்சாட்டுகள் அப்போது இருந்தன. அந்த ஜெர்மானிய வீரர்கள் கோர்ட் மார்ஷியல் செய்யபப்ட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்கள். [ நேசநாடுகளிலும் சட்டம் வேறாக இருக்கவில்லை, ராணுவத்தைப்பொறுத்தவரை]
 
பின்னர் இரண்டாம் உலகப்போர் குற்றநீதிமன்றம் ஜப்பானிய வீரர்களையும் டோஜோவையும் விசாரிக்கக் கூடியபோது அதில் ஒரு இந்திய நீதிபதியும் இருந்தார். ராதா பெனோட் பால் [Radha Benode Pal] வெற்றிபெற்றவர்கள் தோற்றவர்களை விசாரித்து தண்டிப்பதில் உள்ள அறப்பிரச்சினையை பற்றி அவர் ஒரு மாறுபாடுக் குறிப்பை எழுதினார்.வென்றவர்கள் அணுகுண்டை பயன்படுத்தி மானுடக்குலம் கண்டிராத அழிவை உருவாக்கினார்கள்.[ போர் குற்ற விசாரணை மன்றத்தில் அதேயளவுக்கு கொடும்போர்க்குற்றங்களைச் செய்த ஸ்டாலினின் ரஷ்யா நீதிபதியின் பீடத்தில் வீற்றிருந்தது] ஜஸ்டிஸ் பாலின் தீர்ப்பு பெரிதும் மதிக்கபப்ட்ட ஒரு  செவ்வியல் தீர்ப்பு. ஆனால் அவரது குரல் தனித்து ஒலித்தது, டோஜோ விசாரணைக்குப்பின் தூக்குத்தண்டனைக்கு ஆளானார்
 
அன்புடன்

எஸ்.வி.ராமகிருஷ்ணன்
ஹைதராபாத்

அன்புள்ள எஸ்.வி. ராமகிருஷ்ணன் அவர்களுக்கு,

தங்கள் கடிதத்துக்கு நன்றி. நியூரம்பர்க் பற்றிய தகவல் ஒரு நினைவுப்பிசகு . திருத்தியிருக்கிறேன்.தேசத்துரோக- ராஜதுரோக குற்றச்சாட்டுகள் நடுவே உள்ள வேறுபட்டும், நீதிபதி பால் பற்றிய தகவலும் எனக்குப் புதியவை. நன்றி

*

அன்புள்ள ஜெயமோகன்,

நீதியின் மறுபக்கம் பற்றி மிருணாள் சென் இயக்கிய முக்கியமான திரைப்படம் ஒன்று உள்ளது. மிருகயா. Mrigaya (The Royal Hunt) (1976) மிதுன் சக்ரவர்த்தி நடித்தது. அதில்  வெள்ளையன் ஒருவன் சந்தால் பழங்குடி இளைஞனுக்கு வேட்டையாடிக் கொண்டுவந்த மிருகங்களுக்குப் பணம் கொடுபபர். ஒருநாள் அவன் தன் எதிரியின் தலையுடன் வருகிறான். பெரும் பணம் கிடைக்கும்  என்ற எதிர்பார்ர்புடன். கிடைத்தது சிறை. சந்தால் இளைஞனுக்கு என்ன தவறு செய்தோம் என்றே புரியவில்லை. அவனது குல நீதியின்படி அவன் செய்தது ஒரு பெரும் வீரச்செயல். மகாஸ்வேதா தேவி எழுதிய சிறுகதையை ஒட்டி எடுக்கபப்ட்ட படம் அது. அதேபோல சினுவா ஆச்சிபேயின் திங்ஸ் ·பால் அபார்ட் [தமிழில் சிதைவுகள், மொழியாக்கம் என்.கெ.மகாலிங்கம், காலச்சுவடு பதிப்பகம்] குலநீதிக்கும் மனிதநீதிக்கும் இடையே உள்ள வேறுபாட்டை பல இடங்களில் நெஞ்சிலறையும்படிச் சொல்கிறது. இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய சாதனை என்பது நாம் குலநீதி இனநீதி தேசநீதி போன்றவற்றில் இருந்து இந்த அளவுக்கு வெளியே வந்ததே என்று சொல்லலாம். ஆனால் இன்றும் இனவாதம், தேசியம், மதவாதம் பேசுகிறவர்கள் பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் நின்றுகொண்டு நீதியை பின்னால் இழுக்க முயற்சி செய்கிறார்கள்.

சரவணகுமார்
சென்னை

*

அன்புள்ள ஜெயமோகன்,

தஸ்தயேவ்ஸ்கியின் பிற நூல்கள் ஏதாவது தமிழில் வெளிவந்திருக்கின்றனவா?

ஜீவ்ஸ்

*

அன்புள்ள ஜீவ்ஸ்

தஸ்தயேவ்ஸ்கியின் பெருநாவலாக குற்றமும் தண்டனையும் மட்டுமே வெளிவந்துள்ளது. நெய்வேலியில் உள்ள வேர்கள் என்ற அமைப்பைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் கரமஸோவ் சகோதரர்களை வெளியிடுவதாகச் சொல்லி இரண்டுமுறை முன்பணம் வசூலித்தார். நூல் வெளிவரவில்லை

தஸ்தயேவ்ஸ்கியின் சிறுகதைகள் ‘வெண்ணிற இரவுகள்’ என்ற பேரில் ராதுகா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கின்றன. மறுபதிப்பு வந்திருப்பதாக தெரிகிறது. அதில் ‘வெண்ணிற இரவுகள்’ ‘அப்பாவியின் கனவு’ இரு கதைகளும் மிக முக்கியமானவை. ‘மரண வீட்டின் குறிப்புகள்’ என்ற சிறிய நாவலை சா.தேவதாஸ் மொழியாக்கம் செய்திருக்கிறார். அது என் நோக்கில் முக்கியமான படைப்பு அல்ல. ‘ தி இன்சல்ட்டட் ஆன் ஹ்யூமிலியேடட் ‘ தான் தஸ்தயேவ்ஸ்கியின் எளிய , உணர்ச்சிகரமான பெரிய நாவல். தஸ்தயேவ்ஸ்கியை வாசிக்க ஆரம்பிப்பதற்கு சிறந்த தொடக்கமும் அதுவெ. அது தமிழில் வரவில்லை.

முந்தைய கட்டுரைசிலகேள்விகள்
அடுத்த கட்டுரைரசனை இதழ்