கன்னிநிலம் முடிவு – கடிதம்

திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

உங்கள் கதைகள் என்னை தம்மோடு ஒன்றச் செய்துவிடுகின்றன. நீங்கள் சிங்கப்பூர் வந்த போது தனியாய் உங்களை வந்து சந்திக்கவில்லை என்றாலும் இரண்டு கூட்டங்களில் கலந்துக் கொண்டு உங்கள் உரையைக் கேட்டேன்.

பொதுவாய் எழுத்தாளர்களோடு பேச வேண்டும் என்ற விருப்பம் எனக்கிருந்தாலும் என்ன பேசுவது என்ற தயக்கம் எப்போதும் இருந்து வருகிறது. என் மனம் ரசிப்பவற்றைத் தவிர வேறு எதையும் வாசிப்பதில்லையாதலால் அவர்களோடு பேசும் அளவிற்கு வாசிப்பு அனுபவம் இருக்கிறதா என்ற சந்தேகம் எனக்கு எப்போதும் உண்டு. (அதனாலேயே வலைத்தளத்தில் நடக்கும் விவாதங்களில் நான் கலந்துக் கொள்வதில்லை.)

மற்றொரு காரணம்

ஒரு எழுத்தாளரிடம், ‘உங்கள் கதை நன்றாக இருக்கிறது’ என்று பேசத் தொடங்கலாம் அல்லது “உங்கள் கதைகளைப் படித்திருக்கிறேன். அவற்றை எனக்கு மிகவும் பிடிக்க வேண்டும்.” என்று சொல்லலாம். ஆனால் அவை அந்த எழுத்தாளருக்கு மிகவும் பழக்கப்பட்டிருக்கக்கூடிய வாக்கியமாகவே இருக்கும். அடுத்த முறை பார்க்கும் போது அவருக்கு என் பெயர் கூட நினைவில் இருக்காது என்பது நிச்சயம். அப்படி பத்தோடு பதினொன்றாகிப் போவதில் எனக்கு விருப்பமில்லை.

அதனால் என் கதைகளின் மூலம் மட்டுமே அவர்களோடு பேச வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். என் எழுத்தை மேம்படுத்திக் கொள்ள முயற்சித்து வருகிறேன்.

உங்கள் கன்னி நிலம் படித்தேன். எனக்கு சம்மந்தமில்லாத ஒரு கதைக் களம். என்னால் பொருந்திப் போக முடியுமா என்ற எண்ணத்தோடு இரண்டு அத்தியாயங்களைக் கடந்தேன். கொஞ்சம் கொஞ்சமாய் கதை என்னை உள்ளிழுக்கத் துவங்கியது. நானும் நெல்லையப்பனோடு காடுகளினூடாக பயனிக்கத் துவங்கினேன். என்னாலும் கூட மதூக மலர்களைத் தொட முடிந்தது. அதன் வாசத்தை நுகர முடிந்தது. நெல்லையப்பனுக்கு செய்யப்பட்ட சித்திரவதைகளினூடே அதிசயமாய் என்னாலும் அவனது ஊரை, திருநெல்வேலியில் பள்ளிச் சீருடையில் ஜ்வாலாவைப் பார்க்க முடிந்தது. ‘நோ மேன்ஸ் லேண்டை’ பார்க்க வேண்டும் என்ற தவிப்பு எனக்குள்ளும் எழுந்தது.

எனக்கு என்னவோ பதினாலாம் அத்தியாயத்துடன் கதை முடிந்துவிட்டதாய் தோன்றுகிறது. அதன் பிறகு இருப்பவையெல்லாம் ‘Crisis time apparition’ அல்லது பதினோறாம் அத்தியாயத்தில் சொன்னது போல உடைந்து போகாமலிருக்க மனம் செய்யும் முயற்சியாகவே பட்டது. அப்படியே எடுத்துக் கொண்டேன். இன்னும் என்னால் மதூக மலர்களிடையே இருந்து திரும்ப முடியவில்லை.

இதை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. மிக்க நன்றி,

-ஹேமா

அன்புள்ள ஹேமா,

கன்னிநிலம் ஒரு ‘திரில்லர்’ நாவலாகவே எழுதப்பட்டது. எழுதிப்பார்க்கலாமே என்ற எண்ணம்தான். எனக்கே ஒரு உற்சாகத்துக்காக. அது கதையின் போக்கில் ஒரு வகை ‘ரொமாண்டிக்’ அம்சத்தையும் சேர்த்துக்கொண்டது. நீங்கள் சொல்வது உண்மை. அங்கே நாவல் முடிந்துவிட்டது. ஆனால் திரில்லர் வகை நாவல்களுக்கு எல்லா அம்சங்களும் முடியும் ஒரு தொகுப்பு முடிவு எப்போதும் தேவையாகிறது

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 26
அடுத்த கட்டுரைகாந்தியும் ‘கற்பழிப்பும்’