‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 11

பகுதி மூன்று : கலைதிகழ் காஞ்சி

[ 1 ]

புகாரிலிருந்து கிளம்பிய உமணர்களின் அம்பியிலேறி திருவரங்கம் வந்து அங்கே விண்ணளந்தோன் புகழ்பாடி ஊர்கள் தோறும் அலையும் வரிப்பாணருடன் இணைந்து முந்நீர் காவிரி நெடுநிலம் கடந்தான் இளநாகன். எரியாடிய முக்கண்ணன் ஆலயம் தொழச்சென்றவர்களுடன் இணைந்து சிற்றம்பலநகரி சென்று அங்கே கூத்துக்குழுவினருடன் இணைந்துகொண்டான். பிண்டியும், பிணையலும், எழிற்கையும், தொழிற்கையும், குடையும், விடையும் காட்டி பாண்டரங்கமும் கொடுகொட்டியும் ஆடும் கூத்தருக்கு பண்ணோடியைந்த பாவமைத்துக்கொடுத்தான். எரிக்கூத்தாடிச் சுழலும் கலைக்கூத்தனின் உடலில் ஊழியில் எஞ்சும் நிலைக்கூத்தன் தோன்றுவதைக் கண்டு இறைநூல்கள் சொல்லா மெய்யறிவையெல்லாம் அறிந்தான்.

சிற்றம்பலம் வந்து தொழுது மீண்ட விரிசடைப் படிவருடன் இணைந்து எரிதழல் இலங்கிய செம்மலைச் சிகரம் சென்றான். அண்ணாமலையடியில் வாளிலை செறிந்த தாழம்பூக்காட்டில் சிறுபீடத்திலமர்ந்திருந்த குளிர்ந்த கரிய சிவக்குறியைக் கண்டு வணங்கி அங்கே சிலகாலம் இருந்தான். பட்டுத்துணி விற்று கூலமும் பொன்னும் கொண்டு திரும்பும் கலிங்க வணிகருடன் இணைந்துகொண்டு அவர்களின் ஒழிந்த சுமைவண்டியிலேறி மாநகர் காஞ்சிக்குச் சென்றான்.

கோட்டையில்லாத நகரம் காஞ்சி. திருவிட நாட்டின் தென்திசை எல்லையான காஞ்சி வாளென வளைந்தோடிய வேகவதியின் கரையில் அதே வளைவை தான்கொண்டு பிறைநிலவு வடிவில் அமைந்திருந்தது. வட எல்லையாக நீர் சுழித்து விரையும் வேகவதி அமைய பிற எல்லைகளாக வேகவதியின் நீர் பெருகி நிறைந்த இரு பெருங்கால்வாய்கள் அகழிகளைப் போலச் சூழ்ந்திருந்தன. அவற்றின் கரைகளில் கனத்த வெண்ணிற அடிமரம் கொண்ட நீர்மருதுகளும் வேர்கள் புடைத்தெழுந்த கருவேங்கைகளும் செறிந்த அடர்காடே கோட்டையாகியிருந்தது. மரங்களுக்கு நடுவே முள்மூங்கிலை வளர்த்து பிணைத்துக்கட்டி ஊடுபுக முடியாத வேலியாக்கியிருந்தனர். நகரைச்சூழ்ந்து பச்சைக்கடலென வயல்விரிவு அலையடிக்க நடுவே செம்மண் துலங்கிய வண்டிப்பாதை நீண்டு சென்றடைந்தது.

பசுங்கோட்டையின் நுழைவாயில் மரத்தாலானது. வண்ணத்தூண்களுக்கு மேலே அமைந்த காவல்மாடங்களில் இரு படைவீரர்கள் வேலை மடிமேல் வைத்து தாயமாடிக்கொண்டிருக்கும் அந்நகர் போல பாதுகாப்பற்ற பிறிதொன்றை இளநாகன் கண்டதில்லை. “இந்நகர் மதயானையின் காலருகே கிடக்கும் பொன்நாணயம் போன்றது. வடக்கே கோதைவரை விரிந்திருக்கும் திருவிடப் பெருநாட்டின் படைவல்லமையை இங்குள்ளோர் அனைவரும் அறிவர்” என்றார் பட்டுவணிகரான பொன்னர். “தமிழ்நிலத்திலிருந்து திருவிடத்துக்குள் நுழையும் வாயில் இந்நகர். ஒவ்வொருநாளும் செல்வம் உள்ளே சென்றுகொண்டிருக்கிறது. கலையும் கல்வியும் வெளியே வந்துகொண்டிருக்கின்றன.”

காஞ்சிக்குள் நுழைந்த இளநாகன் அந்நகரின் சிறிய தெருக்களினூடாக வணிகர் வண்டியில் அமர்ந்தபடி சென்றான். புகாரையும் மதுரையையும் போலன்றி காஞ்சி அகலமற்று ஒடுங்கிய சிறிய இடம் கொண்டிருந்தது. எனவே மரத்தாலான மாளிகைகள் செங்குத்தாக மேலெழுந்து ஒன்றின்நிழல் இன்னொன்றின்மேல் விழ தோள்தொட்டு நின்றிருந்தன. கற்தளமிட்ட இடுங்கிய சாலைகளில் அவ்வப்போது வந்த படிகள் ஏறியும் இறங்கியும் சென்று அப்படியே பெரிய கட்டிடங்களுக்குள் புகுந்து அப்பால் சென்றன. நகரெங்கும் வேகவதியின் நீர் கல்லால் ஆன ஓடைகள் வழியாக ஒலித்துச் சுழித்தோடியது.

“இதை சகஸ்ரபீட நிலையம் என்கின்றனர் வைதிகர். ஆயிரம் ஆலயங்கள் இங்குள்ளன” என்றார் பொன்னர். “பாரதவர்ஷத்தின் அத்தனை தெய்வங்களும் இங்கே கோயில் கொண்டுள்ளன. தென்னிலத்துடன் வணிகமாட வரும் வடபுலத்தார் தங்கும் நிலை இது என்பதனால் தங்கள் தெய்வங்களையெல்லாம் அவர்கள் இங்கே அமைத்தனர். மாநாகர்கள், முண்டர்கள், சந்தாலர்கள், கானிகர்கள் என அத்தனைத் தொல்குடியினரும் இங்கே தெய்வங்களை நிறுவியிருக்கின்றனர். கடல்மல்லையில் கலமிறக்கி இங்குவரும் பீதர்களும் யவனர்களும் காப்பிரிகளும் சோனகர்களும்கூட தங்கள் தேவர்களை நிலைநாட்டியிருக்கின்றனர்.”

செங்கற்றளி மீது குடமுகட்டுக் கோபுரமெழுந்த திருவிடபாணி கோயில்களில் கொற்றவையும் திருமகளும் கலைமகளும் கரிய சுவரோவியங்களாக விழிதுலங்க விளக்கொளியில் அமர்ந்திருந்தார்கள். விண்ணவர்கோன் கோட்டம் ஏழடுக்கு முகடுடன் எட்டுதிசைக்காவலரின் சிற்றாலயங்கள் சூழ்ந்த மையக்கட்டடத்துடன் அமைந்திருந்தது. அதனுள் வெண்சுண்ணத்தில் செய்து பொன்னிறம்பூசப்பட்ட இந்திரன் நெருப்பொளிவிடும் வஜ்ராயுதத்துடன் அமர்ந்திருந்தான்.

மணிவண்ணனுக்கும் அனல்வண்ணனுக்கும் கந்தனுக்கும் சூரியனுக்கும் உயரமற்ற மண்கோட்டை சூழ்ந்த கோட்டங்கள் இருந்தன. செங்கல் சுவரும் சிற்பங்கள் செறிந்த சுதைவிமானமும் கொண்ட மையக்கோயிலைச் சுற்றி உபதேவர்களின் சிற்றாலயங்கள் தீபச்சுடர் அசையும் சிறுகருவறைகளுடன் இருந்தன. ஏழடுக்கு விளக்கில் கொன்றைப்பூங்கொத்தென மஞ்சள்சுடர்கள் அசைய அமர்ந்திருந்த மணிவண்ணனின் விழிகளுக்கு நீலவைரங்கள் பதிக்கப்பட்டிருந்தன. அவனுக்கு காலைப்பூசனையில் சூட்டப்பட்ட வெண்தாமரையும் நீலத்தாமரையும் செந்தாமரையும் இடையிட்ட தாரை முழவும் குழலும் முழங்க பல்லக்கிலேற்றி அரண்மனைக்குக் கொண்டுசென்றுகொண்டிருந்தனர் வைதிகர்.

ஆலயவடிவங்களை ஒவ்வொரு முறையும் வியந்து அடுத்ததைக் கண்டதும் மறந்து சென்றுகொண்டிருக்கும் அப்பயணம் கனவில் நிகழ்வதென எண்ணிக்கொண்டான் இளநாகன். வண்டிக்கூரைவடிவில், கவிழ்ந்த கலத்தின் வடிவில், விளிம்புகள் எழுந்த கூடைவடிவில், இருபக்கமும் வளைந்த காவடிவடிவில், காவடிகள் மேல் காவடி அமைந்தவடிவில், சதுரப்பட்டைக் கூம்பு வடிவில், அறுபட்டைக் கூம்புவடிவில், எண்பட்டைக் கூம்பு வடிவில், தாமரை மொட்டுவடிவில். மூன்றுகலசம் கொண்டவை. ஏழு கலசம் கொண்டவை. ஒற்றைக்கலசம் சுடர்விடுபவை. விமானக்கோட்டங்களில் நடனமிட்டு நின்ற தெய்வத்திருமேனிகள் காலையொளியில் மின்னத்தொடங்கியிருந்தன.

“செண்டுவடிவிலான அந்த விமானத்தை வேசரபாணி கோபுரம் என்கிறார்கள்” என்றார் பொன்னர். இடைவெளியின்றி சிற்பங்கள் செதுக்கப்பட்ட மரத்தாலான அந்த ஆலயம் ஒரு பெரிய பொன்னகை போலிருந்தது. அடியொடுங்கி மேலெழுந்து சரிந்து குவிந்து மேலே சென்று ஒற்றைக்குடத்தில் முடிந்த அதன் உடலில் அரக்குபூசப்பட்டு மெருகேற்றப்பட்டிருந்த சிற்பங்களனைத்தும் நடனநிலையில் அசைவின் அக்கணத்தில் தெரிந்தன. அடித்தளத்தில் நாகங்களும் ஆமைகளும் அரக்கர்களும் உடலோடு உடல்பின்னி சிற்பவெளியை நிரப்பியிருந்தனர்.

மேலே மதனிகைகள் சுமந்து பறந்த விமானத்தை தூண்கள் சந்தித்த இடங்களில் இளித்த வாயில் சங்குபோன்ற பற்களும் விழித்த உருளைவிழிகளும் சுருண்ட பிடரிமயிர்கற்றைகளுமாக பீதர்களின் ஆளிகள் இடை வளைத்து எழுந்து கூருகிர் கைகளை காட்டி நின்றன. விமானத்தின் அடுக்குகளில் யாழேந்திய கின்னரர்களும் மலர்க்கிளை பற்றிய யட்சர்களும் படைக்கலங்களுடன் தேவர்களும் செறிந்திருந்தனர். “இலையிலாது பூத்த மலர்மல்லிக் கிளைபோலிருக்கிறது” என்றான் இளநாகன் பேருவகையுடன்.

தாமரைமொட்டுக்களை அடுக்கிக்குவித்தது போன்ற நாகர விமானங்களில் சிற்பங்கள் இல்லை. நுண்ணிய பூச்செதுக்குகள் அடிமுதல் உச்சிக்கலம் வரை நிறைந்திருந்தன. சந்தாலர்களின் சிற்றாலயங்களுக்கு கூரையற்ற வெறும் பீடங்களே இருந்தன. அவற்றில் விசிறிவடிவக் கூந்தல்கொண்ட பொய்முகங்களை தெய்வங்களாக அமரச்செய்திருந்தனர். முண்டர்களின் தெய்வங்கள் கோழிமுட்டை போன்ற பெரிய உருளைக்கற்களின் வடிவில் வரையப்பட்ட விழிகளுடன் கோயில்கொண்டிருந்தன. குருதிச்செந்நிறம் பூசப்பட்ட அனுமன் ஆலயங்களும் கருநிற பண்டிமீது துதிக்கை மடித்த கணபதியின் ஆலயங்களும் ஒவ்வொரு தெருச்சந்திப்பிலும் இருந்தன.

குருதிச் செந்நிறம் பூசப்பட்ட மரச்சுவர்களும் உத்தர வளைவுகளும் பொன்மூங்கிலடுக்கி வேய்ந்த வளைகூரையும் கொண்ட ஐந்தடுக்கு ஏழடுக்கு விமானங்கள் எழுந்த பீதர்களின் ஆலயங்கள். அவற்றில் விழித்த துறுகண்களும், பிளந்த வாய்க்குள் அனலாகப் பறந்த செந்நாக்கும், சுருண்டுச் சுருண்டு மடிந்து சென்ற அரவுடலும், உகிர் துறித்த சிம்மக்கால்களும் கொண்ட நாகயாளிகள் ஒளிரும் வண்ணங்களால் செதுக்கப்பட்டிருந்தன. அங்கே எரிந்த குங்கிலியத்தின் புகை திறந்த வாயிலினூடாக நீலப்பட்டுத்திரை போல மெல்ல எழுந்து பறந்தது.

அரக்கனின் பல்வரிசையென தரைமுதல் கூரை வரை எழுந்த பெரிய வெண்ணிறச் சுதைத்தூண்கள் நிரைவகுத்த யவனர்களின் கோபுரமில்லாத ஆலயங்கள் அரைநிலவு வடிவில் வளைந்திருந்தன. அவற்றின் உயர்ந்த விதானம் கொண்ட தாழ்வாரங்களில் நறுமணப்பொருட்களையும் சிறுநகைகளையும் விற்கும் முதிய யவனர்கள் அமர்ந்திருந்தனர். கவிழ்த்த வெண்மொட்டுகளைப்போன்ற குவைமுகடுகள் கொண்ட சோனகர்களின் ஆலய முற்றத்தில் மலர்ப்பாதையென மணிக்கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. விழித்த கரிய கண்களும் தொங்கும் குருதிநாக்கும் கொண்ட முகங்களாக மட்டும் நிறுவப்பட்டிருந்த காப்பிரிகளின் தெய்வங்கள் திறந்த பெரிய வாயில்களுக்கு அப்பால் சாலையை நோக்கி அமர்ந்திருந்தன. அங்கே குறுமுழவுகள் ஒலித்தன.

ஒவ்வொரு ஆலயத்தை ஒட்டியும் வணிகர்கள் தங்கும் சத்திரங்கள் அமைந்திருந்தன. கலிங்கவணிகர்கள் நுதல்விழியன்னை ஆலயத்தின் அருகே இருந்த பெரிய மரக்கட்டடத்தில் தங்கினர். அங்கே பகலில் ஓய்வெடுத்த இளநாகன் மாலையில் கிளம்பி நகரைக்காணச் சென்றான். திருவிடத்து மக்களின் மூவகை மொழிகள் கலந்து ஒலித்துக்கொண்டிருந்த கடைவீதிகளையும் பீதர்நாட்டு கழைக்கூத்தாடிகளும் யவனநாட்டு வாள்தேர்ச்சியாளரும் வேசரத்து மாயக்காரர்களும் தங்கள் கலைகளைக் காட்டிக்கொண்டிருந்த முற்றங்களையும் நீலநீர் நிறைந்து அலையடித்த சிறுதடாகங்களையும் நகர் நடுவே எட்டுமாடங்களுடன் எழுந்த மன்னனின் அரண்மனை வளாகத்தையும் கண்டான்.

ஒளிவிடும் பல்லாயிரம் விளக்குகளை அணிந்த அடுக்கு மாடங்கள் விண்மீன்களுடன் கலந்ததுபோல் நின்ற நகரில் காட்சிகளாலேயே களிவெறியூட்டப்பட்டு இடமும் காலமும் கரைந்தழிந்து அவன் சென்றுகொண்டிருந்தான். ஒரு சிற்றாலயத்தில் ஊன்சோறுப் படையலிட்டு வழிபடப்பட்ட நகர்ப்பூதத்தின் முன் கூடிநின்ற கூட்டத்துடன் கலந்து சோறுபெற்று உண்டான். அதற்கருகே இருந்த சதுக்கத்தில் சிரிப்பொலி கேட்டு செவிகூர்ந்தபோது அஸ்தினபுரம் என்ற சொல்லைக் கேட்டான். அனைத்து புலன்களும் தூண்டப்பட்டவனாக அங்கே சென்றான்.

சதுக்கத்தில் வணிகர்களும் நகர்க்குடிகளும் சிறுவர்களும் கூடி நின்றிருக்க, நடுவே வடபுலத்து ஆரியக் கூத்தர் ஒருவர் பாட்டிடையிட்ட கதை சொல்லி ஆடிக்கொண்டிருந்தார். இளநாகன் சிறுவர்களுக்குப்பின்னால் சத்திரத்திண்ணையின் தூண்பற்றி அரையிருளில் நின்று அதைக் கண்டான். எண்ணைவிளக்கின் ஒளியில் மின்னும் குண்டலங்களும் ஆரமும் அணிந்து பெரிய செந்நிறத் தலைப்பாகை சுற்றியிருந்த கூத்தர் இளநாகன் அதற்குள் அறிந்துகொண்டிருந்த திருவிடத்துத் தொல்மொழியில் பேசி முகக்குறி காட்டி கைநடம் செய்துகொண்டிருந்தார். அருகே அவரது தோழர் நீலத்தலைப்பாகையுடன் நின்றிருந்தார்.

“தலைகள் ஒன்றாகலாம், ஆனால் உடன்பிறந்தாரின் வால்கள் ஒருபோதும் ஒன்றுபடுவதில்லை.” சிறுவர்கள் உரக்கச் சிரித்தனர். “இந்திரன் மைந்தன் வாலி. தம்பியோ சூரியனின் மைந்தன். மேகங்களைத் திரட்டுபவன் விண்ணவர்கோன். மேகங்களை எரிப்பவன் அவன் தோழன் வெங்கதிரோன். அவர்களின் மைந்தர்களோ கிட்கிந்தை அடர்காட்டில் தமையனும் தம்பியுமானார்கள். ஞானம் பொலிந்த இரு தலைகள். அன்பில் கனிந்த இரு விழியிணைகள். வீரமெழுந்த இரு தோளிணைகள். அந்தோ, தெய்வங்களுக்கும் அடங்காத இரு நீள்வால்கள்!” என்றார் கூத்தர்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

இருவரும் இரு கயிறுகளை வால்களாகக் கட்டியிருந்தனர். வாலி தன் வாலை தானே பார்த்து திடுக்கிட்டு அதை யாராவது பார்த்துவிட்டார்களா என்று சுற்றுமுற்றும் கவனித்தபின் பிடித்து இழுத்தான். இழுக்க இழுக்க வந்துகொண்டே இருக்க எரிச்சலடைந்து வேகமாகப்பிடித்திழுக்க தெறித்து கையில் வந்த வாலின் சுருளில் மரங்களும் மலைகளும் இருந்தன. ஒவ்வொன்றாக எடுத்துப்போட்டுப்பார்க்கையில் அதன் நுனியில் திருட்டுவிழியுடன் சுக்ரீவன் அமர்ந்திருந்தான். திகைத்து பின் நகைத்து “நீ என் தம்பி, என் வால் உனக்குரியது” என்று சொல்லி “செல்க!” என்றான் வாலி. “ஆணை!” என்று தமையனை வணங்கி சுக்ரீவன் செல்ல அவன் வால்நுனி வாலியின் காலை வளைத்திருந்தமையால் அவன் நிலையழிந்து மண்ணில் சரிந்தான்.

உடல்தேர்ச்சிகொண்டிருந்த இரு ஆரியக் கூத்தர்களும் ஒருவர் வாலில் ஒருவர் சிக்கியிருந்ததை எம்பியும் மறிந்தும் காற்றில் துள்ளியும் புரண்டும் நடிக்க சிறுவர்கள் கூவிச்சிரித்தனர். வால்கள் தன்னிச்சையாகச் சுழல ஒருகட்டத்தில் அவர்கள் இருவரையுமே வால்களே ஆட்டிவைத்தன. வால்களை அவர்கள் அஞ்சி அவற்றிலிருந்து தப்ப முயல வால்கள் சுழன்று வந்து வழிமறித்தன. வால்களை தாவித்தாவிக் கடந்து மூச்சிரைக்க அமர்ந்து தப்பிவிட்டோமென எண்ணி மூச்செறிந்து வாலைத்தூக்கி நெற்றி வியர்வையை வழித்தனர்.

திகைத்தெழுந்து வால்களைத் தூக்கி வீசமுயல அவை அவர்களை சுழற்றி கட்டிப்போட்டன. ஒரு வாலின் நுனி இன்னொருவரின் மூக்கைச் சீண்டி தும்மச்செய்தது. தும்மிய அதிர்வில் திகைத்து அவை அவர்களின் ஆடைக்குள் புகுந்துகொள்ள கூச்சம் தாளாமல் அவர்கள் துள்ளிக்குதித்தனர். வால்நுனி காதுக்குள் நுழைய முயன்றது. வாலியின் வால் சுக்ரீவனின் வாய்க்குள் செல்ல அவன் திரும்பி தன் வாலைத் தொட்டு அதன் மறுமுனைதான் பின்பக்கம் வந்துவிட்டதோ என்றெண்ணி அலறி அழுதான்.

சிரித்து உலைந்து கண்ணீர் மல்கினர் சிறுவர். வாலியும் சுக்ரீவனும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டனர். “தம்பி, உடன்பிறந்தோர் பூசலிடுவதை மூதாதையர் விழைவதில்லை. ஏனென்றால் தெய்வங்கள் அதையே விதியாக்கியுள்ளன” என்றான் வாலி. “ஆம் அண்ணா. பூசலிடுவதற்கான காரணங்களில்லாத அயலாரை அறைகூவுவதையே மூதாதையர் வகுத்த நெறிநூல்கள் முறை என்று வகுக்கின்றன” என்றான் சுக்ரீவன். “ஆகவே நாம் ஒன்றுபடுவோம். நமது தோள்கள் தழுவிக்கொள்வதாகுக. நமது நெஞ்சம் இணைவதாகுக” என்றான் வாலி.

“அவ்வண்ணமே ஆகுக அண்ணா. அவ்வாறென்றால் தங்கள் நாடு என்னுடையதாகும். தங்கள் துணைவியும் என்னவளாவாள் அல்லவா?” என்றான் சுக்ரீவன். வாலியின் வால் எழுந்து வந்து அவனை அறைந்து தள்ள சுக்ரீவனின் வால் தலைமேல் எழுந்து ஆட இருவரும் வால்களினால் சண்டையிட்டார்கள். இருவர் வால்களும் பின்னிப்பிணைந்து சிடுக்காகி ஒருவரோடொருவர் சிக்கிக்கொண்டு திகைத்து நிற்கையில் இடியோசை போன்ற குரல் ஒன்று எழுந்தது. “பூசலை நிறுத்துங்கள். விதியின் குரலைக் கேளுங்கள்!”

“அதை எப்படி நாங்கள் கேட்க முடியும்?” என்றான் வாலி. “மூடா, நீ இப்போது கேட்டுக்கொண்டிருப்பது அதைத்தான்” என்றது குரல். “ஆமாம். ஆமாம்” என்று இன்னொரு குரல் கேட்டது. “அது யார்?” என்றான் சுக்ரீவன் ஐயத்துடன். “நான் சூதன்… விதியை ஆமோதிப்பது என் தொழில்” என்று அருகிருந்த ஒருவன் கிணைப்பறையுடன் எழுந்து சொன்னான். “விதியை நீ முன்னாலறிவாயோ?” என்றான் வாலி குழப்பமாக. “காரணங்களுடன் தீர்வுகளுடன் தெள்ளிதின் அறிவேன் ஐயா” என்றான் சூதன். சற்றுத்தயங்கி “ஆனால் நிகழ்ந்தபின்னர்தான்” என்றான். வாலி அவனை உதைக்க அவன் தலைகீழாக கரணமடித்து ஓரம்சென்று விழுந்தான்.

“விதியின் வழியென்ன?” என்றான் வாலி. “இந்திரன் மைந்தனே, நீ உன் தம்பியால் தோற்கடிக்கப்படுவாய். உன் நாட்டையும் துணைவியையும் இழப்பாய்” என்றது குரல். “வேறு வழியே இல்லையா?” என்று வாலி பரிதாபமாகக் கேட்டான். “இல்லை. விதி அனைவருக்கும் உரியது.” வாலி “நான்குகடலையும் தொட்டுத் தாவும் மாவீரன் நான். இந்திர மைந்தன். எனக்குமா விதியின் வழி?” என்றான். “ஆம், அவ்விந்திரனே அதற்குரியவன்தான்.”

வாலி “எளிய குரங்கல்லவா நான்? என்னை விடலாகாதா?” என்றான். “பார்த்தாயா அதற்குள் கிளைதாவி விட்டாய். விதி ஒருமுறை எழுதப்பட்டுவிட்டால் மும்மூர்த்திகளையும் ஆள்வது” என்றது குரல். “தேவ, அப்படியென்றால் எனக்கு ஒரு வரம் வேண்டும்” என்றான் வாலி. “சொல்” என்றது விதி. “மண்ணுளோர் கண்ட மாபெரும் அறத்தோனால் நான் அறம் மீறிக் கொல்லப்படவேண்டும்.” விதி குழம்பிப்போய் “புரியவில்லை. அதாவது பேரறச்செல்வனால் நீ கொல்லப்படவேண்டும் இல்லையா?” என்றது. “ஆம், ஆனால் அவன் என்னை அறம் மீறி வஞ்சக்கொலை செய்யவேண்டும்.”

திகைப்புடன் தன் இயல்பை மீறி விதி அரங்குக்கே வந்தது. அதற்கும் வால் இருந்தது. அந்த வாலால் காதைக்குடைந்தபடி “இன்னொரு முறை சொல். இதுபோல எவரும் கேட்டதில்லை” என்றது. “பேரறத்தானால் நான் கீழறத்தால் கொல்லப்படவேண்டும்” என்றான் வாலி. “நன்று. அச்செயலால் அவன் அறமிழக்கவேண்டும் இல்லையா?” வாலி “இல்லை, அவன் அதற்குமேல் மேலும் பேரறத்தான் ஆகவேண்டும்.”

“அய்யோ” என்று விதி வாலைச்சுழற்றி தத்தளித்தது. தலையையும் வயிற்றையும் சொறிந்துகொண்டு நாலைந்து முறை தாவியபின் “ஏன்?” என்றது. “பேரறத்தானையல்லவா அனைவரும் வெறுப்பார்கள்? அவனை வெறுப்பவர்களெல்லாம் என்னை விரும்புவார்கள்தானே?” என்றான் வாலி. “அளித்தேன்” என்றது விதி. “அப்பேரறத்தானின் பெயர் ராமன். அயோத்திமன்னன் தசரதனின் முதல் மைந்தன். தன் துணைவியும் தம்பியும் தொடர இப்போதுதான் அவன் கங்கையைக் கடந்து வந்துகொண்டிருக்கிறான்.”

“நீலமேக வண்ணா! மானுடர்க்கிறங்கி வந்த பரம்பொருளே. எவ்வண்ணமென்றாலும் எதிரியைக் கொல்லலாமென்று அறம் காட்டி நின்றருளும் அண்ணலே!” என்று வாலி கைகூப்பி கண்ணீர் மல்கி பாட சுக்ரீவன் அவன் கைகளைத் தொட்டு “அண்ணா சற்றுப்பொறுங்கள், இன்னும் வாலிவதம் நிகழவில்லை” என்றான். “விதியின் நெறிகண்டதும் வாழ்வின் முடிச்சுகள் அவிழவேண்டுமல்லவா?” என்றான் வாலி. “ஆம். அவ்வாறே ஆகுக!” என்றதும் இருவர் வால்களும் அவிழ்ந்தன. இருகுரங்குகளும் அரங்கில் தலைகீழாக குதித்து கரணமிட்டு விலகிச் சென்றன. சிறுவர்கள் துள்ளிக்குதித்து கைகொட்டிச் சிரித்தனர்.

விதி கைதூக்கி “அவ்வாறே இங்கு கண்டீர், கிட்கிந்தையில் நிகழ்ந்த விதியின் ஆடலொன்றை. இதைக் கண்டவர் கேட்டவர் பிறருக்குச் சொன்னவர் சொன்னதைக் கேட்டவர் மனம்போனபடி மாற்றியவர் மாற்றியதை விளக்கியவர் விளக்கியதைச் சுருக்கியவர் அனைவருக்கும் மேலாக இந்தக் களத்தில் செம்பு வெள்ளி பொன் நாணயங்களை வீசியவர் அனைவருக்கும் வெண்கலை அன்னை அருள் புரிவாளாக!” என்று கைகாட்டியது. திரும்பிச்செல்லமுயன்றபோதுதான் அதன் வால் அதன் காலை முடிச்சிட்டிருப்பதை உணர்ந்து குப்புற விழுந்தது.

துள்ளித்திமிறி எழுந்தும் விழுந்தும் காலை விடுவித்து வாலைத்தூக்கி அதன் முடிச்சுகளை நோக்கி “அய்யோ என்னசெய்வேன்? இம்முடிச்சுகளை எவ்வண்ணம் அவிழ்ப்பேன்?” என்று விதி ஓலமிட்டது. “இவற்றுடன் நான் சென்றால் என்னை என் தந்தை காலதேவன் முட்டாளே என்று வசைபாடி மண்டையிலேயே குட்டுவாரே” என அழுதது. அதைக்கேட்டு ஒருவன் பையுடன் அரங்குக்கு வந்து “இதை நாங்கள் வரலாறென்கிறோம். இதன் முடிச்சுகளை அவிழ்க்கும் என்னை முதுசூதன் முடிநாகன் என்பார்கள்” என்றான். “அவிழ்த்தருள்க சூதரே. பதிலுக்கு நீர் பாடிவைத்த பாட்டுக்கள் சிலவற்றை உண்மையாக்கி மக்களை அதிர்ச்சியுறச்செய்கிறேன்” என்றது விதி.

சூதன் தன் தோள்பையிலிருந்து ஒரு மகுடியை எடுத்து வாசிக்கத் தொடங்கினான். அவனுடைய மகுடிகேட்டு விதியின் வால்நுனி நெளிந்தாடியது. அதை பீதியுடன் பார்த்தபடி விதி சுருண்டுகொண்டது. வால் பத்தி தூக்கி எழுந்தாடியது. எழுந்து எழுந்து மேலே சென்று தலைக்குமேல் நின்றது. “இவ்வளவு நீளமா?” என்றது விதி. “சூதர் நினைத்தால் அதை நீட்டவும் குறுக்கவும் வளைக்கவும் ஒடிக்கவும் முடியும்” என்றான் சூதன். “கடிக்குமா?” என்று விதி உடல்நடுங்கியது. “பத்திவிரிக்கும், சீறும். பல்லுமில்லை விஷமும் இல்லை” என்றான் சூதன்.

அப்பாலிருந்து வாலி குட்டிக்கரணமடித்து வந்து வாலைப்பற்றி மேலேறிச்சென்றான். “எங்கே செல்கிறான்?” என்றது விதி. “வாலிவதை முடிந்துவிட்டது. மேலுலகு செல்கிறான்” என்றான் சூதன். “அதற்கு என் வால்தான் கிடைத்ததா?” “நீ என்ன மூடனா? வரலாற்றின் வழியாக அல்லவா வீரசொர்க்கம்?” என்றான் மேலே சென்றுகொண்டிருந்த வாலி.

மறுபக்கமிருந்து துள்ளி குட்டிக்கரணமடித்து வந்த சுக்ரீவனும் அதைப்பற்றி மேலேறத் தொடங்கினான். “நீ எங்கே செல்கிறாய்?” என்றான் சூதன். “தமையனின் வாலுடன் என் வால் முடிச்சிட்டிருக்கிறதே” என்றபடி சுக்ரீவன் மேலே சென்றான். இருவரும் மேலே கழிநாட்டி இழுத்துக்கட்டப்பட்டிருந்த கயிற்றில் அமர்ந்து சொறிந்து பேனெடுத்து பல்லில் வைத்து கடித்துக்கொண்டும் இளித்துக்கொண்டும் கண்களைச் சிமிட்டிக்கொண்டும் கீழே நோக்கினர்.

“முடிச்சுகள் அவிழ்ந்தாயிற்றே? சற்று வாலை இறக்கமுடியுமா?” என்றது விதி. “வீரசொர்க்கத்துக்கான வழியை மூடுகிறாயா? பாவி!” என ஒரு குரல் கேட்டது. விதி திகைத்து சுற்றுமுற்றும் நோக்கி “யார்?” என்றது. “நாங்கள் வாலிவதை நடந்த இடத்தில் உலவி மிதிபட்டு மடிந்த எறும்புகள். வரிசையாக மேலே சென்றுகொண்டிருக்கிறோம்” என்றது இன்னொரு குரல். “எங்கே? எனக்குத் தெரியவில்லையே” என்றது விதி. “நீ எப்போது எங்களை அறிந்தாய்? உன் வாலில் மெல்லிய அரிப்புமட்டும்தானே நாங்கள்?” என்றது குரல்.

சூதன் மகுடியை திரும்ப தன் பைக்குள் வைத்தான். “அடப்பாவி, அப்படியே விட்டுவிட்டா போகிறாய்? நான் என்ன செய்வேன்?” என விதி கூவியது. “வரலாறு சுருண்டிருக்கிறது என்றுதான் எங்கள் நூல்கள் சொல்கின்றன” என்றான் சூதன். “இதோ நீண்டு செங்குத்தாக இருப்பதை நீயே பார்க்கிறாயே” என்றது விதி. “அப்படியென்றால் அது வரலாறே அல்ல. காவியம்” என்று சூதன் சொன்னான். விதி “அய்யகோ! சுருட்டினால் ஒன்று நீட்டினால் ஒன்று என்றால் நான் என்ன செய்வேன்” என விம்மியழுதது.

அப்போது அதன்மேலிருந்து வாலியாக நடித்த கூத்தன் வாலில்லாமல் தலைகீழாக இறங்கி வந்தான். “யார் நீ? எங்கிருந்து வருகிறாய்?” என்று சூதன் கூவினான். “கலியின் மைந்தனாகிய என்பெயர் துரியோதனன். அஸ்தினபுரிக்கு அரசன். நிகரற்ற வல்லமையுடன் என்னை மண்ணுக்குக்கனுப்பியிருக்கிறான் எந்தை!” என்றான் அவன்.

தொடர்ந்து சுக்ரீவனாக நடித்த கூத்தனும் இறங்கி வந்தான். “யார்? யார் நீ?” என அஞ்சி விதி கூவியது. “நிகரற்றவனுக்கு நிகரானவன். வாயுவின் மைந்தனாகிய என்பெயர் பீமன்” என்றான் அவன். “அவ்வகையில் நானே நிகரற்றவன்” என்று அவன் தோள்தட்ட துரியோதனன் தொடைதட்ட இருவரும் கைநீட்டி மற்போரிடுவதுபோல சுற்றிவந்தனர்.

“வீரசொர்க்கத்தின் கோட்டைவாசலில்தான் காவலே இல்லை” என்றான் சூதன். விதி தன் வாலைச்சுருட்டி எடுத்துக்கொண்டு அவர்களை அச்சத்துடன் நோக்கியது. அவர்களிருவரும் அரங்கை நிறைத்து மற்போரிட அவர்களின் கைகால்களின் இடைவெளிகள் வழியாக பாய்ந்தும் கரந்தும் விதியும் சூதனும் தப்பி அரங்கில் குட்டிக்கரணமடித்தனர்.

மூச்சுவாங்க அமர்ந்தபின் “அடாடா! இன்னொரு இணைபிரியா உடன்பிறந்தவர்கள். ஒருவருடன் ஒருவர் பின்னியவர்கள்!” என்றான் சூதன். விதி விம்மியழுதபடி “அப்படியென்றால் இன்னுமொரு தர்மயுத்தம் நிகழ்ந்தாகவேண்டுமே” என்றது. அவர்களை அறியாமல் தம்பியும் தமையனும் கட்டிப்பிடித்து குலவிக்கொண்டிருந்தனர்.

சூதன் “ஆம்! தர்மயுத்தம்” என்றான். விதி “அதை நிகழ்த்தவிருக்கும் அறச்செல்வன் யார்? யார்?” என்றது. பின்னணியில் கேட்ட முழவோசையில் அஞ்சி நடுங்கி ஒடுங்கி “யார்?” என முனகியது. “அறம்பிழைத்து மறம் தழைக்கும்நேரம் மானுடனாக நான் பிறப்பெடுப்பேன்!” என பேரொலி எழுந்தது.

விதியும் சூதனும் நடுங்கி அத்திசையைப் பார்க்க “ஓம், அவ்வாறே ஆகுக! ஓம் அவ்வாறே ஆகுக! ஓம் அவ்வாறே ஆகுக!” என்று சொன்னபடி மூவர் கையில் நிறைகுடத்து நீரும் மாவிலையுமாக அரங்குக்கு வந்தனர். “நீங்களெல்லாம் யார்?” என்றான் சூதன். “நாங்கள் வைதிகர்கள். புதிய அவதாரத்துக்காக வேள்விசெய்யவிருக்கிறோம். தட்டில் காணிக்கை வையடா மானுடப்பதரே” என்றார்கள் அவர்கள்.

கூட்டம் சிரித்து கூச்சலிட்டது. சூதனும் விதியும் அவர்களைப் பணிய அவர்கள் ஆசியளித்தனர். சூதன் திரும்பி “ஆகவே அவையினரே, மகதநாட்டு கௌசிக குலத்து கூத்தன் காரகனும் குழுவினரும் நிகழ்த்திய “புச்ச கலகம்” என்னும் பிரஹசன நாடகம் இங்கு முடிவுற்றது. அரிய காணிக்கைகளை கூத்தரைத் தேடிவந்து அளிக்கும்படி கோருகிறேன். காணிக்கையளிப்பவர்களுக்கு ஆசிகளும் அளிக்காதவர்களுக்கு இனிய சொற்களும் வழங்கப்படும்.” கூட்டத்தில் பலர் கைதூக்கி கூச்சலிட்டனர். “கலைதிகழ் காஞ்சி வாழ்க. திருவாழும் திருவிடம் வாழ்க! மன்னன் கோல் வாழ்க! வீரர் வாள் வாழ்க! அவற்றை ஆளும் வேளிர் மேழி வாழ்க!”

அவர்களனைவரும் கூடி நின்று வாழ்த்திப்பாடி தலைவணங்கி பின்னால் சென்றனர். அப்போதும் அரங்கில் துரியோதனனும் பீமனும் போரிட்டுக்கொண்டிருந்தனர். ஒரு குரல் “கூத்தர்களே, வாருங்கள். ஆட்டம் முடிந்துவிட்டது!” என்றது. “யார் சொன்னது? இப்போதுதான் தொடங்கியிருக்கிறது!” என்றான் துரியோதனன். கூட்டம் கூவிச்சிரித்தது. பெருவணிகர்கள் கைகளில் நாணயங்களுடன் முதுகூத்தனை அணுகி அவனை வணங்கி அவற்றை அளிக்கத்தொடங்கினர்.

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 10
அடுத்த கட்டுரைபெண்களின் எழுத்து…