«

»


Print this Post

கல்விச்சாலையில் இந்திய மரபிலக்கியங்கள்


அன்புள்ள ஜெ,

நலமாக இருக்கிறீர்களா ?

நேற்று ஸ்ம்ரித்தி இரானியின் அறிக்கையில் இந்திய அரசு கல்விமுறையில் புராதன இந்திய நூல்களான வேதங்களையும் புராணங்களையும் கற்பிக்கவிருப்பதைப் பற்றி நானும் என் நண்பரும் விவாதித்தோம்.

என் நண்பரின் தரப்பு இது தான்.

1) இந்து கொள்கைகளை (values) எல்லோரிடம் (மற்ற மதத்தினரிடம் தினிப்பது தவறு தானே)

2) இது கிறுத்துவ மிஷ்னரிகள் செய்வது போலத்தானே உள்ளது

3) இது அரசாங்கத்தின் வேலையா ?

4) அரசாங்கம் எல்லா மதத்தினருக்கும் நடுநிலையாக(neutral) இருக்க வேண்டாமா ?

5) இதனை படிக்க நேரிடும் கிறுத்துவ முஸ்லிம் குழந்தகளுக்கு தேவையில்லாத குழப்பம் வராதா (எதை பின்பற்றுவது என்று) ?

6) அரசாங்கம் தன்னை (சிறுப்பான்மையர்) கைவிட்டதாக என்னக் கூடாது அல்லவா ?

7) எல்லோரும் நடுநிலையாக இருப்பது அரசின் கடமை 8) நாத்திகர்கள் கூட படிக்க நேரிடுமே.

எனது பதில், உபநிஷதிதிலும், வேதத்திலும் கடவுள் எங்கே இருக்கிறார். மனுஷன் தானே இருக்கிறார் என்றேன். அதில் நல்லவைத் தானே இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் அறிக்கையில் சொன்னதுப் போல் ‘ relevant material for teaching’ என்பதனால் க்ருஷ்ணர், சிவன் எல்லாம் வராமல் பாத்துப்பாங்கனு சொன்னேன்.

இன்றைய காலகட்டத்தில் பக்தி வழிபாடு முறைகளைத்தானே சொல்லிதருகிறார்கள் பெற்றோர்கள். கீதையும், ராமாயணமும் 60 வயசு பாட்டித் தாத்தா படிக்கும் நூலாக எண்ணவைத்துவிட்டார்களே. ஏன், திருக்குறள் படித்தாலும் பார்வை வேறு மாதிரி (அதெல்லாம் இந்த காலத்துக்கு உதவாது,அதுல சொல்ற மாதிரி நடப்பது மிக கடினம் என்கிறார்கள். இவுரு பெரிய “வாழும் வள்ளுவர்” என்று ஏளனம் வேறு).

அது மட்டுமின்றி ஒரு (பெரும்பாண்மையான) கிறுத்துவ நண்பரிடம் பைபில் பற்றி பேசினால் அவரால் அதில் இருந்து சில வற்றை குறியிட்டு சொல்ல முடியும். ஆனால் பெரும்பாண்மையான் இந்துக்களால் ஒரு நூலை குறியிட்டு சொல்ல முடியாது.

எனக்கு தெரிந்த ஒரு சிறந்த உதாரணம்: சபரிமலையில் 18 படிகள் ஏறியவுடன் கோயிலின் கோபுர மேட்டின் மேல் தத்வமஸி என்று எழுதி இருக்கும். சில ஆண்டுகளுக்கு முன் 30-38 ஆண்டுகாலம் சபரிமலைக்கு சென்ற குருசாமிகளிடம், அப்படி என்றால் என்ன என்று கேட்டேன், தெரியாது என்றனர், சில 15+ ஆண்டு சென்றவர்களிடம் கேட்டேன், அப்படி ஏதாச்சும் எழுதி இருக்குமா’னு தான் கேட்டார்கள்.

இன்னும் சொல்லப்போனால் (தமிழ் எழுத்துக்களில்) தத்வமஸி என்று பல கேசட்டுகளின் போஸ்டர்கள் சபரிமலை தோறும் உள்ள பல கேசட்/CD கடைகளில் வெளியே தோறனமாக இருக்கும். 20-30 ஆண்டுகாலம் ஆண்டுதோறும் சென்று வரும் கோயிலில் மைய கருத்தாக (ஒரு வார்த்தை தான்) என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றே பலருக்கு தெரியவில்லை. அது தான் இன்றைய நிலைமை.

ஆதலால் நமது ஆக்கங்களை மீட்டு எடுக்க இது ஒரு நல்ல துவக்கம். இளமையில் கற்க நல்ல நூல்கள் தான் என்பதற்கு இது நல்துவக்கமாகும்.

எல்லாம் கேட்டு விட்டு நண்பர் சொன்னார் – அதெல்லாம் கண் துடைப்பு. இவையாவும் மறைமுகமாக ஹிந்துத்துவா (BJP-RSS) தானே தினிக்கிறது என்றார். அரசாங்கம் மதத்திற்கு அப்பால் இருக்க வேண்டும். வளர்ச்சிக்கும் அமைதிக்கும் மட்டுமே பாடுப்பட வேண்டும்

அவர், அப்படி சொன்னப் பிறகு பேச்சை தொடர் விருப்பம் இல்லை. ஆதலால் நிறுத்திவிட்டேன். உண்மையில் பல சிறுபான்மையில் சேர்ந்து ஒரு 15%-20% இருக்கும் நாட்டில் பெரும்பாண்மையர் அவர்களின் நூல்களைக் கூட படிக்க முடியாதா ? எனக்கு தோன்றிய வழி : பள்ளிகளில் அவரவருக்கு விருப்பமான மொழியை பயிற்றுவிப்பதுப்போல் மத ரீதியான நூல்களை கற்று கொடுக்கலாம் (’திராவிட’ தமிழ்நாட்டில் ஒரு வேளை நாம் இதை அடைந்தாலே அது ஒரு பெரிய மையில் கல்). அதற்கு மேல் ஏதாவது வழி உண்டா ?

​அன்புடன்,
​ராஜேஷ்​

http://rajeshbalaa.blogspot.in/

அன்புள்ள ராஜேஷ்,

உங்கள் கிறித்தவ நண்பரின் கூற்றை அப்படியே எடுத்துக்கொண்டால் நம் கல்விக்கூடங்களில் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் திருக்குறளையும் நாலடியாரையும் கற்றுக்கொடுக்கக் கூடாது. அவையும் மத இலக்கியங்களே. கம்பராமாயணமும் பெரியபுராணமும் ஒதுக்கப்படவேண்டும். அவை இந்து புராணங்கள். காளிதாசனின் சாகுந்தலமும் பாரதியின் பாஞ்சாலி சபதமும் கூடாது. அவையெல்லாம் இதிகாசத்தை அடியொற்றியவை.

சரி, அதையே இந்துக்களும் சொல்லலாமே. சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாடில் இங்கே பாடமாக அமையக்கூடாது. அவை கிரேக்க மதம் சார்ந்தவை. தாந்தேயை கற்பிக்கக் கூடாது அவர் கிறித்தவ இலக்கியவாதி. ஆக கடைசியில் என்னதான் எஞ்சும்? வெறும் தொழில்நுட்பப் பயிற்சி. தகவல் மனப்பாடம். சிந்தனைக்கான மரபார்ந்த அடிப்படைகள் அனைத்தையும் நிராகரித்துவிடவேண்டும். அரிஸ்டாட்டில் முதல் தன் மரபின் அனைத்துச் சிந்தனைகளையும் கற்றுக்கொண்டிருக்கும் வெள்ளைக்காரனிடம் சிந்திக்கும் பொறுப்பை விட்டுவிடலாம். நாம் அவனுக்கு குமாஸ்தா வேலை செய்தால்போதும்.

மதச்சார்பின்மை என்ற பேரில் சென்ற ஐம்பதாண்டுகாலமாக ஒரு போலி அறிவுஜீவிக் கும்பல் இந்த தேசத்தை பணயக் கைதியாக வைத்திருந்தது என்பதற்கு இதைவிடச் சிறந்த ஆதாரம் வேறில்லை. நமது கல்வியமைப்பில், நமது கலாச்சார அமைப்புகளில் சென்றகாலத்தின் வண்டலாகப் படிந்திருக்கும் தேங்கிப்போன இடதுசாரிகள் உடனடியாகக் களையப்பட்டாகவேண்டும்.

எந்த ஒரு பண்பாட்டுக்கும் அதற்கான சிந்தனை மரபென்று ஒன்று உண்டு. பல்லாயிரம்கால பரிணாம வரலாறுள்ளது அது. சிந்தனைக்கு அடிப்படையான மூலக்கருத்துக்கள், ஆழ்படிமங்கள் [archetypes,] உருவகங்கள் [metaphors] அந்த சிந்தனைமரபால்தான் உருவாக்கி அளிக்கப்படுகின்றன. அந்தப் பரிணாமத்தின் நுனியில் வந்து நின்று அதை தொடர்ந்து மேலே சிந்திப்பவனே சிந்தனைகளை உருவாக்குகிறான். அனைத்துத் தளத்திலும். ஏதேனும் காரணத்தால் அந்த மரபு அறுந்துபோகும்போது அப்பண்பாடு சிந்தனையில் பெருந்தேக்கத்தை அடைகிறது.

ஒரு பண்பாட்டில் பிறந்து அந்த மொழிப்பரப்பில், குறியீட்டுவெளியில், வாழ்க்கைச்சூழலில் வளர்ந்த ஒருவர் அந்த மரபில் இருந்து சிந்தனைக்குரிய கருவிகளைப் பெறுவதே இயல்பானதும் எளியதுமாகும். ஆனால் இந்தியாவில் நமக்கு ஆங்கில ஆட்சி காரணமாக அந்தத் தொடர்பு முற்றிலும் அறுந்து போயிற்று. நமது மரபான சிந்தனையின் தொடர்ச்சியை நாம் இழந்தோம். நமக்கு அன்னியமான சிந்தனைக்கருவிகளைக் கையாண்டு சிந்திக்க கட்டாயப்படுத்தப்பட்டோம். அனைத்துத் தளங்களிலும் நாம் இரண்டாமிடத்தையே இலக்காக்க முடிவதற்கு இதுவே காரணம்.

இந்தியமறுமலர்ச்சிக் காலகட்டத்தில் இந்தியாவின் மாபெரும் சிந்தனைமரபை மீட்டெடுக்கும் பெருமுயற்சிகள் தொடங்கின. அதைத் தொடங்கியவர்கள் ஐரோப்பியப் பேரறிஞர்கள். அவர்கள் தங்கள் சிந்தனைமரபை வளர்த்து முழுமையாக்கிக் கொள்ளும் நோக்குடனேயே இந்தியச் சிந்தனை மரபை மீட்டனர். மோனியர் வில்லியம்ஸ், ரிச்சர்ட் கர்பே, ஷெர்பாட்ஸ்கி, மக்ஸ்முல்லர் போன்ற அறிஞர்களால் இந்திய ஞானமரபு ஐரோப்பிய மொழிகளை அடைந்தது.

அந்த ஐரோப்பிய மொழிகள் வழியாக நாம் அவற்றை கற்றுக்கொள்ளத் தொடங்கினோம். தயானந்த சரஸ்வதி, ராஜா ராம் மோகன் ராய், விவேகானந்தர், அரவிந்தர், தாஸ்குப்தா போன்ற அறிஞர்கள் உருவானார்கள். அதன் விளைவே காந்தி அம்பேத்கர், எம்.என்.ராய், ராம் மனோகர் லோகியா போன்றவர்களெல்லாம்.

ஆனால் சுதந்திரத்துக்குப்பின் நமக்கு ஒரு மாபெரும் பின்னடைவு ஏற்பட்டது. அதற்குக் காரணம் நேருவின் பண்பாட்டுக்கொள்கைகள்தான். முதிர்ச்சியற்ற ஓர் இடதுசாரிக்கும்பலால் நேரு சூழப்பட்டார். பி.என்.ஹக்ஸர் போன்றவர்களின் தலைமையில் நமது கல்விக்கொள்கை வகுக்கப்பட்டது. அதில் இந்தியஞானமரபை முழுமையாகவே கல்வியில் இருந்து அகற்றும் முடிவு எடுக்கப்பட்டது. இந்தியப் பண்பாட்டின் எந்த அம்சமும் கல்விக்குள் வரவேண்டியதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது. அதுவே மதச்சார்பின்மையாகும் என்று பிரச்சாரம் செய்தனர். ஐரோப்பியவரலாறுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம்கூட இந்திய வரலாறுக்கு அளிக்கப்படவில்லை.

இந்தியப்பண்பாட்டுக் கூறுகள் முஸ்லீம்களை அன்னியப்படுத்தும் என்றும் ஒட்டுமொத்தமாக பண்பாட்டுக்கல்வியே பயனற்றது, பயன்தரு கல்வியே உகந்தது என்றும் இரு அடிப்படை நம்பிக்கைகளின் அடிப்படையில் அந்தப் பாடத்திட்டம் அமைக்கப்பட்டது. அதன் விளைவாகவே நாம் இன்று கற்கும் மொண்ணையான கல்விமுறை உருவாகியது. ஐம்பதாண்டுகாலம் அசலாகச் சிந்திக்கும் எவரும் இக்கல்விமுறையை மீறிச்சென்றே எதையும் அடையமுடியுமென்ற நிலை வந்தது.

சியாமப்பிரசாத் முக்கர்ஜியின் காலம் முதல் பாரதிய ஜனசங்கமும் பாரதிய ஜனதாவும் இந்த அடிப்படையற்ற கல்வி முறைக்கு எதிராகப் போராடி வந்துள்ளன. அவர்களின் அரசியல் செயல்பாட்டின் இறுதிவெற்றியாக இந்திய மக்களால் வாக்களிக்கப்பட்டு அவர்கள் அதிகாரம் அடைந்திருக்கின்றனர். ஆகவே அவர்கள் எதை முன்வைத்து போராடினார்களோ அதை அவர்கள் நடைமுறைப்படுத்துவதே முறையானது. அதற்கான உரிமை மட்டுமல்ல கடமையும் அவர்களுக்குள்ளது. எப்படி நேரு தான் விரும்பிய ‘மதச்சார்பற்ற’ கல்வியை அமலாக்கும் உரிமையை ஜனநாயகபூர்வமாக பெற்றாரோ அதே ஜனநாயக உரிமையை இப்போது இவர்களும் பெற்றிருக்கிறார்கள்.

உங்கள் நண்பரின் புரிதலில் உள்ள குறைகள் என்னென்ன? ஒன்று, அவர் இந்து மரபு சார்ந்த சிந்தனைகள் என்பதை இந்துமதம் சார்ந்த நம்பிக்கை என்று புரிந்துகொண்டிருக்கிறார். இந்து மரபின் தத்துவக்கருவிகளை, சிந்தனைகளை பயிற்றுவிப்பதை இந்து மதப்பிரச்சாரம் என்று எடுத்துக்கொள்கிறார். ஆகவேதான் பின்பற்றுவது பற்றி பேசுகிறார். இது தெரிந்துகொள்வது, கற்றறிவது என்ற அடிபப்டையிலேயே செயல்படுவதென புரிந்துகொள்வதில்லை.

இந்துமத நம்பிக்கைகள் வேறு, இந்துமதத்தின் பொதுக்கட்டமைப்புக்குள் வரலாற்றுக்காலம் முதல் திரட்டப்பட்டுள்ள சிந்தனைகள் வேறு. ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலத்துக்கு முன்பு இருந்த பெரும்பாலான உலக சிந்தனையாளர்கள் ஏதேனும் மதத்தைச் சார்ந்தவர்களே. அவர்களின் சிந்தனைகளை அந்த மதத்தைச் சார்ந்தவை என்று பார்ப்பதில்லை. சிந்தனைகளாகவே அணுகுகிறார்கள்.

இரண்டு, மதச்சார்பின்மை என்பதை மதம் சார்ந்த அனைத்தையும் முற்றாகத் தவிர்த்துவிடுதல் என்ற பொருளிலேயே இன்று போலி அறிவுஜீவிகள் பயன்படுத்துகின்றனர். அரசு எந்த மதத்தையும் சாராதிருத்தல் என்றே அதன் பொருளாக இருக்கமுடியும். மதம் சார்ந்த அனைத்தையும் தவிர்த்துவிடுவதென்பது நேற்றைய சிந்தனைகளை முழுக்க நிராகரிக்கும் மொண்ணைத்தனத்துக்கே இட்டுச்செல்லும். நல்லவேளையாக நம் போலி இடதுசாரிகள் இந்துமதம் சார்ந்த அனைத்தையும் நிராகரிப்பதைப்பற்றி மட்டுமே பேசுகிறார்கள். மற்றமதங்கள், குறிப்பாக கிறித்தவமும் இஸ்லாமும் ‘மதச்சார்பற்ற மதங்கள்’ என்று நினைக்கிறார்கள்.

கண்டிப்பாக பாடத்திட்டத்தில் இந்து சிந்தனை மரபின் வரலாறும், அதன் முதன்மையான சிந்தனைக்கூறுகளும் கலைக்கூறுகளும் இடம்பெற்றாகவேண்டும். அவை உருவாகி வந்த விதமும் செயல்படும் தர்க்கமும் பயிற்றுவிக்கப்படவேண்டும். அதன் மூலம் சிந்தனையின் அடிப்படைகளை நம் மாணவர்கள் கற்றுக்கொள்ள முடியும். சிந்திக்கும் பயிற்சியைப் பெற முடியும். கருதுகோள்களையே புரிந்துகொள்ளாமல் மொண்ணையாக படிப்பை முடிக்கும் நிலையை மாற்ற சில ஆண்டுகளில் முடியலாம்.

என் நோக்கில், இஸ்லாமியச் சிந்தனை மரபும் கிறித்தவச் சிந்தனை மரபும் கூட இன்னும் தெளிவாகவும் விரிவாகவும் நம் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டாகவேண்டும். கடல் படம் வெளிவந்தபோது நான் அறிந்த உண்மை ஒன்றுண்டு. கிறித்தவ இறையியலின் ஆரம்ப அடிப்படைகள் கூட இங்குள்ள படித்தவர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் தெரியவில்லை. அவற்றை அறியாமல் ஃபிராய்டையோ யுங்கையோ ஏன் மார்க்ஸையோ கூட சரிவர அறிந்துகொள்ள முடியாதென்பதே உண்மை. நவீன தர்க்கவியலில் கிறித்தவ இறையியல் அடைந்த வெற்றிகள் ஐரோப்பிய நவீன சிந்தனைக்கு அடித்தளமிட்டன. அவற்றை நம் பாடத்திட்டத்தில் இன்னும் விரிவாகவே சேர்க்கலாம் .

கல்வியை காவிமயமாக்குதல் என்றெல்லாம் கூச்சலிட்டு இதை எதிர்ப்பவர்கள் செய்வது உண்மையில் என்ன? எத்தனை உயர்ந்தவை என்றாலும் எத்தனை மகத்தானவை என்றாலும் தன்னுடைய மதம் சாராத எதையும் எக்காரணம் கொண்டும் கற்றுக்கொள்ளமாட்டோம் என்று பிடிவாதம் பிடிக்கும் இஸ்லாமிய, கிறித்தவ மதவெறியை ஆதரித்து வளர்ப்பதை மட்டுமே. அதற்கான கூலியைப்பெற்றுச் செயல்படும் ஐந்தாம்படையினர் இவர்கள்.

உண்மையான கிறித்தவர்கள் ஒருபோதும் இந்த மூளைச்சலவைக்கு ஆளாகமாட்டார்கள். இந்திய மெய்ஞான மரபின் பேரறிஞர்கள் பலர் கிறித்தவர்களே. வெட்டம் மாணி, ராவ் பகதூர் செறியான் முதல் பேராசிரியர் ஜேசுதாசன் வரை. இங்குள்ள மாபெரும் கிறித்தவ அறிஞர்களான வீரமாமுனிவர் முதல் மாயூரம் வேதநாயகம் பிள்ளை வரை இந்து ஞானமரபை கற்றறிந்தவர்களே. மதத்தையும் சிந்தனையையும் பிரித்தறிய அவர்களால் முடிந்தது.

ஆனால் இந்தச் சிந்தனைத்தெளிவு பாரதிய ஜனதாவிடமும் இருக்கவேண்டும். இந்திய சிந்தனை மரபைக் கற்றுக்கொடுப்பதென்பது இந்து மதநம்பிக்கைகளை கற்பிப்பதல்ல என்று அவர்கள் அறிந்திருக்கவேண்டும். இந்து ஆசாரங்களையும் சிந்தனைகளையும் வேறுவேறென பிரித்தறியும் விவேகம் அவர்களுக்கிருக்கவேண்டும். கடந்தகாலச் சிந்தனைகளைக் கற்பிக்கும்போது அவற்றை சமகால அறவுணர்வு சார்ந்த கூரிய விமர்சனத்துடன் கற்பிக்கும் நிலைப்பாடு அவர்களிடமிருக்கவேண்டும்.

அத்துடன் இந்து சிந்தனை மரபு என்பது வெறும் ஆன்மீக, வைதிக, வேதாந்த மரபு மட்டும் அல்ல என்றும் சார்வாகர்கள் போன்ற நாத்திகர்களையும் சாங்கியர் வைசேடிகர் போன்ற உலகியலாளர்களையும் உள்ள்டக்கிய மாபெரும் விவாதக்களமாகவே அது இருந்தது என்றும் அவர்கள் அறிந்திருக்கவேண்டும். இந்து சிந்தனையின் மறுபக்கமாக திகழ்ந்த சமண, பௌத்த சிந்தனைகளையும் கற்காமல் அக்கல்வி முழுமையடையாதென்றும் அவர்கள் உணர்ந்திருக்கவேண்டும்.அப்படி இல்லை என்றால் அதைச் சுட்டிக்காட்டும்பொறுப்பு சிந்தனையாளர்களுக்கு உள்ளது.

உண்மையில் ஸ்மிரிதி இரானியின் அறிவிப்பு அதை உணர்ந்ததாகவே தோன்றுகிறது. [The ministry is planning to set up a committee to study the ancient Hindu texts, Vedas, Upanishads and other epics to select relevant material for teaching.] கல்வித்துறை சார்ந்த அறிஞர்களினாலான குழு தேவையான பகுதிகளை பாடமாக ஆக்குவதைப்பற்றி சிந்திக்குமென்றே அவர் சொல்லியிருக்கிறார்.

நம் கல்விமுறையில் உள்ள இந்தப் போதாமையையும், இந்திய ஞானமரபை உள்ளிட்டு அதை நீக்கும் வழிகளையும் பற்றி தொடர்ந்து நடராஜகுருவும் நித்ய சைதன்ய யதியும் பேசிவந்திருக்கிறார்கள். நடராஜகுரு அதற்கென்றே ஈஸ்ட்வெஸ்ட் யூனிவர்சிட்டி என்னும் அமைப்பையும் உருவாக்கினார். ஆனால் தனியார் எவரும் செய்துவிடமுடியாத பெரும்பணி அது. அதுசார்ந்த விழிப்புணர்வு கல்விச்சூழலில் உருவாகுமெனில் நன்று.

ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு பெரிய நம்பிக்கைகள் ஏதுமில்லை. இந்திய அறிவுச்சூழல் ஒருபக்கம் வறட்டு மார்க்ஸியம் மறுபக்கம் மூடத்தனமான மரபுவழிபாடு என்று பிளவுண்டுள்ளது. நடுவே இருக்கும் அறிவார்ந்த நடுநிலைத்தளம் மிகமிக வலுவற்றிருக்கிறது. அதற்கு கல்வித்துறையில் இடம் கிடைப்பதற்கான வாய்ப்பே இன்றில்லை. இன்றைய அரசியல் சூழலில் வெறும் சம்பிரதாய மதநூல்களை அப்படியே பாடத்தில் புகுத்தி சில பழம்பஞ்சாங்கங்களை அதற்கு காவலாக நியமிப்பது மட்டுமே நிகழுமென நான் எதிர்பார்க்கிறேன். என் எதிர்பார்ப்புகள் பொய்க்குமெனில் அதைவிட மகிழ்ச்சிக்குரியது ஏதுமில்லை.

ஜெ

பழைய கட்டுரைகள்

ஜோ சிலவினாக்கள்

இந்திய அறிவியல் எங்கே?

தொடர்புடைய பதிவுகள்


Permanent link to this article: https://www.jeyamohan.in/56214

1 ping

  1. கல்வியில் இந்திய மெய்யியல்-கடிதம்

    […] அழுத்தமான, தர்க்கபூர்வமான கட்டுரை. நரேந்திர மோதி தலைமையிலான புதிய மத்திய அரசின் கல்விக் கொள்கைகள் குறித்து, “அவர்கள் எதை முன்வைத்து போராடினார்களோ அதை அவர்கள் நடைமுறைப்படுத்துவதே முறையானது. அதற்கான உரிமை மட்டுமல்ல கடமையும் அவர்களுக்குள்ளது” என்று நீங்கள் கூறியிருப்பது மிகவும் சரியான, ஜனநாயக பூர்வமான கருத்து. // இன்றைய அரசியல் சூழலில் வெறும் சம்பிரதாய மதநூல்களை அப்படியே பாடத்தில் புகுத்தி சில பழம்பஞ்சாங்கங்களை அதற்கு காவலாக நியமிப்பது மட்டுமே நிகழுமென நான் எதிர்பார்க்கிறேன் // என்கிறீர்கள். அவ்வளவு தீவிர அவநம்பிக்கைக்கான முகாந்திரம் தேவையில்லை. கடந்த சில ஆண்டுகளில் மோதியின் குஜராத் அரசு உட்பட மற்ற பாஜக மாநில அரசுகள் கல்வி, பண்பாடு, கலாசாரத் துறைகளில் தங்கள் மாநிலங்களில் செய்துவரும் சீரிய நடவடிக்கைகளைப் பரிசீலித்துப் பார்த்தாலே இது புரியும். […]

Comments have been disabled.