‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 10

பகுதி இரண்டு : பெருந்துறைப் புகார்

[ 7 ]

பட்டினப்பாக்கத்தின் அனைத்து மாளிகைகளின் பின்முற்றங்களையும் இணைத்தபடி காவேரியின் நீர் ஒழுகும் கால்வாய்கள் வளைந்தோடின. அவை நீர்பெருகிச்சென்று மருவூர்ப்பாக்கத்தை பட்டினப்பாக்கத்திலிருந்து பிரித்த காயலில் சென்றிணைந்தன. அந்தியில் மாளிகைகளின் பின்பக்கத்து சிறுதுறைகளில் இருந்து உரிமைமகளிர் சூழ அரசகுலப்பெண்டிரும் பெருவணிகர் மகளிரும் சிற்றோடங்களில் ஏறி கடல்காற்றில் கூந்தலும் உடைகளும் பறக்க கால்வாய்கள் வழியாகச் சென்று காயலை அடைந்தனர்.

ஆழமில்லாத காயலின் அலையற்ற உப்புநீர் வெளியெங்கும் இளவெயிலை மறைக்க எழுப்பப்பட்ட துணித்திரைகள் படபடக்கும் நூற்றுக்கணக்கான அணிவள்ளங்கள் மிதந்தசைந்தன. அப்பால் அலையாத்திக்காடுகள் செறிந்த மருவூர்ப்பாக்கத்தின் குருதிக்குழாய்களென நூற்றுக்கணக்கான சிற்றோடைகள் பிரிந்து ஒன்றுடனொன்று பின்னி சதுப்புகளையும் மணல்மேடுகளையும் இணைத்துக்கொண்டு சென்றன. நீருக்குள் வேர்ப்புதர்கள் சரிந்திறங்கிச் செறிந்த சுரபுன்னைகளின் கிளைகளெங்கும் வெண்சங்கு போன்ற கழுத்துடைய கடற்காக்கைகளும் விரிசிறகும் பேரலகும் கொண்ட கூழைக்கடாக்களும் அமர்ந்தும் எழுந்து சிறகடித்துச் சுழன்றும் பூசலிட்டன.

சுரபுன்னைக் கிளைகளை வெட்டியமைத்த இடத்தில் எருமைத்தோலால் கூரையிட்ட சிறிய கடைகளில் உலர்மீனும், வாட்டிய ஊனும், புளித்த மதுவும், யவனத்தேறலும் விற்கும் வணிகர் பறவைகளைப்போல கூவி கையசைத்து படகுகளில் செல்பவர்களை அழைத்துக் கொண்டிருந்தனர். கள்ளப்பங்களும் தெங்குப்பாலப்பங்களும் இலையப்பங்களும் சுட்டமீனும் அவித்த கடலாமையிறைச்சியும் விற்பவர்கள் கைவள்ளங்களில் அவற்றைப் பரப்பி வைத்து சிறுதுடுப்பால் உந்தி கால்வழிகளில் சுற்றியலைந்தனர். விரிந்த கண்களுக்கு அடர்மையெழுதி நீள்கூந்தலில் தாழைமடல்சூடிய பட்டினப்பரத்தையர் வணிகர்கள் தோள்களில் சாய்ந்து சிரித்துக் குலவியபடி படகுகளில் சென்றனர்.

கடலில் இருந்து எழுந்து வந்த உப்புத்துமிக் காற்று தோற்குடில்களை துருத்திகள் போல உப்பி அமையச்செய்தது. மாலையிளவெயில் பொன்னிறம் கொள்ளுந்தோறும் எங்கும் வணிகக்கூச்சலும் களிவெறிக்குரல்களும் கலந்தெழுந்தன. இரு சிறு தோணிகளிலேறி சூதர்கள் கால்வழிகளினூடாக விழிவிரித்துச் சென்றுகொண்டிருந்தனர். “பாரதவர்ஷத்தில் இதற்கிணையென ஒரு துறைநகரில்லை” என்றார் சைலஜ மித்ரர். “மானுடத்தின் பசி ஒருபோதும் அகலக்கூடாதென்று எண்ணச்செய்கிறது இது. பசியகன்றால் நுகர்வை நோக்கியே மனிதமனம் செல்கிறது. இங்கே ஒவ்வொரு அகமும் இன்பம் இன்பமென்றே கூவிக்கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு முகமும் தணியா விடாயில் சிவந்திருக்கிறது.”

காலையெழுந்ததும் அரண்மனைக்குச் சென்றனர் சூதர். சோழன் இளவேனில் உலாவுக்கென வடபுலக் காடுகளுக்குச் சென்றிருப்பதாகவும் ஏழுநாட்கள் பொறுக்குமாறும் சொன்னார் அரண்மனை அவையாளர். அவர்களுக்குப் புத்தாடையும், பொன்நாணயங்களும் பரிசிலாகக் கொடுத்து சோலையில் தங்கியிருக்கும்படி கோரினார். பொன் நாணயத்துடன் நகரிலிறங்கிய சூதர்குழு நாளங்காடியின் வடமேற்கு மூலையில் நறுந்தேறல் விற்கும் செங்குழல் யவனரின் நாகச்சின்னம் பொறிக்கப்பட்ட கொடி பறக்கும் கடையைத்தான் நாடினர்.

“மொட்டு மலராகிறது. மலர் காயாகிறது. காய் கனியாகி கனி சாறாகி சாறு நறுந்தேறலாகிறது. தேறல் கனிந்து கவிதையாகிறது” என்றார் சைலஜ மித்ரர் நீலக்குடுவையில் யவனமதுவை உறிஞ்சியபடி. “‘நமது மது ஆன்மாவில் குடியிருக்கும் விடநாகங்களை துயிலெழுப்புகிறது. யவனமதுவோ கந்தர்வர்களை விழிப்புறச் செய்கிறது. இளவெயிலில் மின்னும் சிறகுகளுடன் அதோ செல்கிறார்கள் அவர்கள். அவர்களின் ஆயிரம்நரம்புள்ள பேரியாழ்கள் விம்முகின்றன. அவர்களின் பாதம்பட்டு மேகங்கள் பொன்னாகின்றன” களிவெறியில் பாடியபடி நடமிட்டார். “எழுக! மூதாதையரே என்னுள் எழுக! கவிதையாகுக! காமமாகுக!”

மதியம் அங்கேயே அப்பமும் ஊன்கறியும் உண்டு மீண்டும் மது அருந்தினர். இம்முறை பொன்நாணயம் இல்லாமையால் தெங்குக்கள். மூக்கில் வழிந்த கள்ளுடன் விழிநீர் சோர விம்மியழுதபடி முதுசூதர் “அமராது பறக்கும் பறவைகளுக்கு கூட்டின் இன்பம் இல்லை! இளம்பாணா, போ. மேழியேந்து. வளைதடியேந்து. வாளேந்து. வண்டிக்கோலேந்து. ஒருபோதும் யாழேந்தாதே. இசையென்னும் சேர்ந்தாரைக்கொல்லி உன்னை அமரவிடாது. எங்கும் எதிலும் நிறைவடையச் செய்யாது. இன்னும் இன்னும் என்று திசைநோக்கிச் செலுத்தும். வரவிருக்கும் இன்பத்தைப்பற்றிய கற்பனையால் வந்த இன்பத்தை இழக்கும். இறையமைத்த உலகை விட்டு உன் சொல்லமைத்த உலகில் வாழச்செய்யும்” என்றார்.

நெஞ்சிலறைந்துகொண்டு சைலஜ மித்ரர் கூவினார் “இந்த முதுநெஞ்சு கடந்து வந்த நிலங்களில் எல்லாம் அகத்தின் ஒரு துளியை விட்டுவிட்டு வந்தது. இது இழந்தகாதல்களின் புதைவெளி. இந்த உடல் ஊனுருகி வழிய, தசைவெந்து பிளக்க, எலும்புகள் உடைந்து வெடிக்க நினைவுகளெரியும் சிதை.” இளநாகன் நோக்கியபோது அத்தனை சூதர்களும் கண்ணீர் வழிய அழுதுகொண்டிருந்தனர்.

அவன் தானும் அழுதுகொண்டிருப்பதை உணர்ந்து தன் கச்சைக்குள் துழாவி எஞ்சிய வெறுமையைக் கண்டடைந்தான். தலையை அசைத்தபோது குண்டலங்கள் கன்னத்தில் தொட்டன. அவற்றைக் கழற்றியபடி “இக்குண்டலங்களுக்கு கள் கொடுப்பீரா கழைநாட்டாரே?” என்றான். கடைக்காரன் சிரித்து “இங்கே என் காசுப்பையில் பாதி பாணரின் குண்டலங்கள்தான். எடும்” என்றான். “அனைவருக்கும்” என்றான் இளநாகன். அழுதுகொண்டிருந்தவர்கள் அனைவரும் எழுந்து வந்து கண்ணீருடன் விசும்பியபடி கையில் இருந்த சுரைக்கோப்பைகளை நீட்டினர்.

அக்குடுவை மதுவை அருந்தியதும் பிறர் திகைத்துத் திரும்பி நோக்க இளநாகன் கழுதையென வீரிட்டு கதறியழுது மார்பில் அறைந்துகொண்டான். “பாணனின் மைந்தன் பூனையின் குட்டி. எந்தை என்னை நெல்வேலியில் விட்டார். குருதிமணம் தேரும் மூக்கால் நான் செலுத்தப்படுகிறேன்” என்றான். “எந்தையரே, மூதாதையரே, சொல்தேரும் பாணனுக்கு அளித்தீர்கள் பிறிதொன்றிலாத பெருந்தனிமையை! கழைநுனியில் நின்றாடும் நெற்றின் நிலையின்மையை! அலைகடலின் அடிவாங்கும் கடல்பாறையின் பெருந்தவத்தை!”

ஆனால் பின்மதியம் அவன் சோலைக்குடிலில் விழித்தெழுந்தபோது வடபுலச் சூதர்கள் குளித்து நல்லுடையும் தலைப்பாகையும் அணிந்து கல்மாலையும் கங்கணமுமாக கைகளில் யாழும் முழவும் ஏந்தி நிற்பதைக் கண்டான். அவன் எழுந்தமர்ந்து வாயைத் துடைத்துக்கொண்டான். “நீராடி வரும் பாணரே. தென்தமிழ்ப்பாணரின் விழிநீர்த்திறத்தை இன்று கண்டேன். சொல்தேர் திறத்தை இனிக் காண்போம்” என்றார் சைலஜ உத்தகர். இளநாகன் எழுந்து “இன்னும் சிலகணங்களில்!” என்றான். “விரைக. நாம் அந்திக்கள்ளுக்கு நெஞ்சிலூறும் கவிதையையே சார்ந்திருக்கிறோம்” என்றார் கனிக மைத்ரேயர்.

சிறுபடகுகளில் ஏறிக்கொண்டதும் காற்றிலெழுந்த மேலாடையை இளநாகன் பற்றி தன் உடலில் சுற்றிக்கொண்டான். “அதை அவிழ்த்துவிடுக பாணரே” என்றார் சைலஜ மித்ரர். “இருவகை மானுடவாழ்க்கை அளிக்கப்பட்டுள்ளது அனைவருக்கும். சுற்றியிறுக்கிக் கட்டப்பட்ட கச்சையும் தலைப்பாகையும்போன்றது வணிகரும் உழவரும் வீரரும் வாழும் வாழ்க்கை. அவர்கள் காற்றையும் ஒளியையும் வெளியையும் விரைவையும் அறிவதேயில்லை. அமைதலென்பதே இருத்தலாகும் அவலம் அது. அவிழும் கணத்தில் முடியும் சிறுவாழ்க்கை.”

தன் மேலாடையைக் காற்றில் எழவிட்டு கைகளை விரித்து சைலஜ மித்ரர் கூவினார் “இது பாணனின் வாழ்க்கை. துறந்து காடேகும் முனிவனின் வாழ்க்கை. அவனைக் கட்டுவதொன்றும் இல்லை. அவன் மண்ணிலிருந்தாலும் வானில் வாழ்பவன். வானம் அவனை அள்ளிக்கொண்டு செல்லலாம். முள்ளில் வீசி நகைக்கலாம். ஆயினும் அவன் வாழ்க்கை முழுமைகொண்டது.” அவனை நோக்கி பற்களைக் காட்டி சிரித்து அவர் சொன்னார் “தரைவிலங்குகளின் கால்களுடனும் கொம்புகளுடனும் பாணன் சொல்வதேதுமில்லை. அவன் உள்ளத்தை சிறகுகள் மட்டுமே அறியும்.”

அவரது மேலாடை எழுந்து சுழன்று சிறகடித்தது. “பறக்கும் கந்தர்வன் நான். ஒருபோதும் மடிந்து உடல்சேராச் சிறகுடன் சிதையேறப்போகும் பெரும்பாணன். சைலஜ குலத்து ஏகவக்ரன் மைந்தன் மித்ரன் இதோ இருக்கிறேன். அறிக தெய்வங்களே! உங்கள் ஆடலில் நானில்லை. எனது நாவில் நீங்கள்தான் ஆடுகிறீர்கள்!” தன் முழவில் விரைந்து விரலோட்டி முழக்கி அவ்வொலியுடன் இணைந்து நகைத்தார்.

ஓவியம்: ஷண்முகவேல்
ஓவியம்: ஷண்முகவேல்

வெயிலின் வெம்மை அகன்றது. காற்றில் கடல்நண்டுகளின் வாசமிருந்தது. கரையோரத்து மரங்களை இணைத்து மூங்கிலாலும் கயிற்றாலும் போடப்பட்டிருந்த சிறுபாலங்கள் ஓடைகள் மேல் வளைந்துசென்று கடைகளை இணைத்தன. அவற்றில் வண்ண ஆடைகள் பறக்கும் பெண்கள் வனமயில்கள் என நடந்துசென்றனர். “விண்ணிலூரும் அரம்பையர்” என்றார் சைலஜ உத்தகர். கொடிகள் படபடத்த கடைகளில் மூங்கில்குழாய்களில் மெழுகிட்டு மூடப்பட்ட தேனும், காய்ச்சி மூடிய உலோகச்சிமிழ்களுக்குள் புனுகும் கஸ்தூரியும், வாட்டிய இளங்கமுகுப்பாளையால் பொதியப்பட்ட இலவங்கமும் விற்கும் நறுமணக்கடைகளில் பெண்கள் நின்று விலைபேசினர்.

ஊண்கடை பகுதியில் தேனுடன் சேர்த்துப் பிசைந்த தினைமாவை குருத்தோலையில் சுருட்டி ஆவியில் வேகவைத்த தினையப்பங்கள் வெம்மை வீச அள்ளி வாழையிலைபரப்பிய மூங்கில் கூடையில் கொட்டப்பட்டன. நீரூற்றி அடுப்பிலேற்றிய கலயத்தின் மேல் கட்டிய துணியில் இளந்தெங்கின் துருவலுடன் பிசைந்த பச்சரிசி மாவை வைத்து ஆவியெழுப்பி வேகவைத்த புட்டு எடுத்து கவிழ்க்கப்பட்டது. முதுகிழங்கை வெடிக்கச் சுட்டு அக்காரப்பிசின் தடவி வாழையிலையில் ஆவியெழப் பரப்பினர். பச்சைப்பயறை ஆவியில் வேகவைத்து பிசைந்து உதிர்த்து இன்வெல்லம் சேர்த்து உருட்டி மீண்டும் ஆவியேற்றிய உருளப்பங்கள் கூடைகளில் அடுக்கப்பட்டன.

வெந்தும் பொரிந்தும் சிவந்தும் கருகியும் உணவாகிக்கொண்டிருந்தது கடலூன். வெள்ளைக்கல்லடுக்குகள் என திரச்சிமீனின் ஊன். செம்மலர் இதழ்கள் எனப் போழ்ந்த சூரை. வெண்பளிங்குக் குழாய்கள் என கணவாய். தீட்டிய குறுவாள்கள் என முரல். நடுவிலெழுதிய வெள்ளி ஏட்டுப்பரப்பென அயிலை. ஆலந்தளிர் என நவரை. உருவிய உடைவாளென வாளை. துருவிக் குவிக்கப்பட்ட சுறா. “சுவை சுவை சுவை!” என்றார் சைலஜ உத்தகர். “சொல்லில் சுவையறியாதோருக்கும் நாவில் சுவை வைத்தவனை வாழ்த்துவோம்!”

தோணியிறங்கி மணல்வெளியில் ஏறி கால் புதைய நடந்தனர். மருவூர்ப்பாக்கத்துக்கு அப்பாலிருந்தது யவனர்சேரி. மணலில் கால்நாட்டி எழுப்பப்பட்ட மரவீடுகளுக்குள் பளிங்குக் குடுவைகளுக்குள் மீன்நெய் எரியும் தழல் திகழ்ந்த விளக்குகளின் ஒளி நிறைந்திருந்தது. அலுவல் முடித்துவந்த செங்குழல் யவனர் அமர்ந்து கழற்சியும் சதுரங்கமும் ஆடிக்கொண்டிருந்தனர். கையில் மதுக்குடுவையுடன் நீண்ட மஞ்சங்களில் முற்றத்துக் கடல்காற்றில் படுத்திருந்தனர். வலத்தோளில் முடிச்சிட்ட வெள்ளுடையுடன் தழலென பறக்கும் குழல்கற்றைகளுடன் யவனப்பெண்கள் தங்கள் கொழுநரின் செம்புநிறக் கைகளைப் பற்றிச் சிரித்தபடி சென்றனர்.

அப்பால் கீழைக் கடலின் அலைகளின் மேல் அசையும் நகரமென யவனப் பெருநாவாய்கள் ஆயிரம் செவ்விழிகளென சாளரங்களில் விளக்கொளிகள் மின்ன நிரைவகுத்திருந்தன. அம்பிகள் கொண்டுவந்த பொதிகளை ஏற்றிய திமில்கள் பெரும்பாய்களை விரித்து அலைகளில் ஏறி இறங்கி அவற்றை அணுகி யானையை மொய்க்கும் காகங்களெனச் சூழ்ந்து சுமை நிரப்பின. வலப்பக்கத்தில் கடலுக்குள் காலூன்றி நீண்டிருந்த புகார்ப்பெருந்துறையில் புலிக்கொடிகளுக்கு நடுவே அங்கே கரைதொட்ட நாவாய்களின் கொடிகளும் கடற்காற்றில் பறந்தன.

கடற்கரை மணல்மேட்டில் வண்ணத்துணிகளால் கூடாரமிட்டு வணிகர்கள் பரத்தையருடன் இரவாட வந்திருந்தனர். மணல் வெளியில் யாழுடனும் மதுக்கிண்ணங்களுடனும் அமர்ந்திருந்த வணிகர் மடியில் மேலாடை நெகிழ்ந்து தாழைமடல் உடல்கள் அந்தி வெளிச்சத்தில் மின்ன பரத்தையர் கிடந்தனர். அவர்கள் அருகே யாழுடனும் முழவுடனும் அமர்ந்த பாணர்கள் இசைமீட்டினர். பாங்கர்கள் வாங்கக் கலம் நிறைத்தும் நறுஞ்சுண்ணமிட்டு வாய்மணம் எடுத்தளித்தும் ஏவல் செய்தனர்.

காவிரி கடல்புகும் அழிமுகத்தில் தங்கள் துணைவியருடன் இளையவணிகர் பாய்ந்து அலையாடினர். கடல்நீர் அவர்களை உட்செலுத்த காவிரி அவர்களை கடல்செலுத்தியது. ஒட்டிய ஈரப் பட்டுடையுடன் கடலரம்பையர் என எழுந்த பரத்தையர் உப்புப்பற்கள் காட்டிச் சிரித்து இளங்கொங்கைகள் குதிக்க ஓடிச் சென்று கைவீசி நீரில் பாய்ந்து மூழ்கி எழுந்து கூந்தல் அலையடிக்க மேலெழுந்து நீரை உமிழ்ந்தனர்.

இளையபாங்கன் ஒருவன் அவர்களை நோக்கி வந்து பணிந்து “வடபுலத்து சூதர்களைப் பணிகிறேன். எங்கள் இறைவர் வடபுலத்துத் துறைகளுக்கெல்லாம் கலம் கொண்டுசென்று மீண்டவர். வடமொழியும் வேசரமொழியும் நன்கறிந்தவர். தங்கள் சொல்லறிந்து இன்புற விழைகிறார். தக்க பரிசில் தந்து நிறைவிக்கும் பண்புடையவர்” என்றான். “ஆம், அத்தகையவரையே நாங்களும் தேடி வந்தோம்” என்றார் சைலஜ மித்ரர்.

பெருவணிகன் சாத்தன் இளங்கண்ணன் தன் கூடாரத்து முகப்பில் மென்மணலில் வண்ணப்பாய் விரித்து மூன்று இளம்பரத்தையர் அருகிருக்க ஏவல்பெண்டிரும் காவல்வீரரும் தொலைவில் சூழ்ந்திருக்க அமர்ந்திருந்தான். அவர்களைக் கண்டதும் எழுந்து கைவணங்கி “வருக சூதர்களே. தங்கள் சொல்லறிய விழைவுடன் இருக்கும் என்பெயர் சாத்தன் இளங்கண்ணன். வலச்சிலம்பு குலத்தின் ஏழாயிரம் கூட்டத்தைச் சேர்ந்தவன்” என்றான். சைலஜ மித்ரர் “செல்வமும் இன்பமும் மைந்தரும் செழிக்கட்டும்” என வாழ்த்தி அமர்ந்துகொண்டார்.

“பெருவணிகரே, சைலஜ குலத்தில் ஏகவக்ரனின் மைந்தனாகப் பிறந்த என் பெயர் மித்ரன். இங்கே சைலஜ குலத்தில் உதித்த கேலரும் கலரும் உத்தகரும் கனிக குலத்தில் உதித்த மைத்ரேயரும் பிரபாகரரும் இருக்கிறார்கள். அவர் தென்னிலத்துப் பாணர் இளநாகன்” என்று மித்ரர் அறிமுகம் செய்து கொண்டார். “நான் வடக்கே உத்கலத்தில் பிறந்தவன். பாரதவர்ஷமெங்கும் அலைபவன்.”

“முதுசூதரே, நான் அறியவிரும்புவது ஆரியவர்த்ததின் செய்திகளை” என்றான் பெருவணிகன் சாத்தன் இளங்கண்ணன். “அஸ்தினபுரிக்கெதிராக ஐம்பத்தைந்து ஷத்ரிய மன்னர்களும் அணிவகுக்கிறார்கள் என்றும் எக்கணமும் பெரும்போரொன்று எழவிருக்கிறதென்றும் நான் சிறுவனாக இருக்கையில் வந்த வடபுலத்துச் சூதர்கள் சொன்னார்கள். நாற்பதாண்டுகாலமாக அச்செய்தி ஒவ்வொருநாளும் பாரதவர்ஷமெங்கும் சொல்லப்படுகிறது. இன்னும் அந்தப்போர்ச்சூழல் இருக்கிறதா என்ன?”

“பெருவணிகரே, இடியும் மின்னலுமாக வானைப்பிளக்கும் கோடைமழை பெய்யும் கணம் கனத்துக்கனத்து நாட்கணக்காக நீடிக்கும். போர் நிகழுமா என்பது நிமித்திகர் சொல்லவேண்டியது. போரின்றி அமையாதென்பதே நாங்களறிந்தது” சைலஜ மித்ரர் சொன்னார். “வானுடைந்து கொட்டி வெளுக்கும் கோடை மழை என ஒரு போர். சூத்திரர்கள் ஷத்ரியர்களை வெல்லாமல் இனி பாரதவர்ஷம் மலர முடியாதென்பதே எங்கள் தெய்வங்கள் சொல்லும் உண்மை.”

கண்கள் மின்ன பெருவணிகன் “அது எப்படி நிகழ முடியும்? ஷத்ரியப் பேரரசுகள் பேராற்றல் மிக்கவை அல்லவா?” என்றான் “ஆம், ஊன்கிழித்து உண்டு குருதி வழியும் வாயுடன் நிற்கும் சிம்மங்கள் போன்றவர்கள் ஐம்பத்தாறு முடியுடை மன்னர்கள். கருவறை வாசம் நீங்கா மெல்லுடலுடன் கண்திறக்காது திசையறியாது தளர்நடைக் காலெடுத்து வைப்பவர்கள் சூத்திரச்சிற்றரசர்கள். ஆயினும் அவர்கள் எண்ணிக்கையில் ஏராளமானவர்கள். வளம் மிக்க புதுநிலத்த்தில் அறுவடை செய்பவர்கள். கடல்துறைகளை அமைத்து பொன்னீட்டுபவர்கள்.” பெருவணிகன் நகைத்து “ஆம், இனி போரே முடிவுசெய்யும் விதியை” என்றான்.

“அஸ்தினபுரியில் நிகழ்வதென்ன?” என்றான் பெருவணிகன். “குருகுல மன்னர்கள் இருவரின் வழித்தோன்றல்களும் அரண்மனையை நிறைத்தனர். அம்பாலிகை அரசியின் அரண்மனையைச் சீர்செய்து அங்கே குந்தி குடியேறினாள். நெடுநாள் குஞ்சுகள் விட்டுச்சென்ற கூடெனக் கிடந்த சித்திரகோஷ்டத்தில் மைந்தர்களின் குரல்களும் சிரிப்பொலிகளும் நிறைந்தன. நிமித்திகரும் சூதரும் அங்கே வந்து அரசியையும் மைந்தரையும் பாடிப்பரிசில் பெற்றுச் சென்றனர். அஸ்தினபுரியை வாழ்த்த எழுந்த திருமாலின் கரத்தின் ஐந்து விரல்கள் அம்மைந்தர் என்றனர் கவிஞர்கள்” என்றார் சைலஜ மித்ரர்.

“புஷ்பகோஷ்டத்தில் காந்தார அரசிகள் எப்போதும் கருச்சுமந்துகொண்டிருந்தனர். சைத்ரமாதத்து மாங்கிளைபோல மைந்தரால் கனத்துத் தாழ்ந்தது கௌரவரின் அரண்மனை என்றனர் சூதர். புற்றிலிருந்து ஒன்று பிறிதென எழும் எறும்புகளென வந்துகொண்டிருந்தனர் கௌரவ மைந்தர். அவர்கள் நூற்றுவர் என்று பாரதமெங்கும் இன்று அறியப்படுகின்றனர்” என்றார் சைலஜ கேலர்.

சைலஜ கலர் சொன்னார் “துரியோதனன், துச்சாதனன், துச்சகன், துச்சலன், ஜலகந்தன், சமன், சகன், விந்தன், அனுவிந்தன், துர்தர்ஷன், சுபாகு, துர்பிரதர்ஷணன், துர்மர்ஷணன், துர்முகன், துர்கர்ணன், கர்ணன், விகர்ணன், சலன், சத்வன், சுலோசனன், சித்ரன், உபசித்ரன், சித்ராக்ஷன், சாருசித்ரன், சராசனன், துர்மதன், துர்விகாகன், விவித்சு, விகடானனன், ஊர்ணநாபன், சுநாபன், நந்தன், உபநந்தன், சித்ரபாணன், சித்ரவர்மன், சுவர்மன், துர்விமோசன், அயோபாகு, மகாபாகு, சித்ராங்கன், சித்ரகுண்டலன், பீமவேகன், பீமபலன், வாலகி, பலவர்தனன், உக்ராயுதன், சுஷேணன், குந்ததாரன், மகாதரன், சித்ராயுதன் என்னும் ஐம்பது மைந்தர்களும் மூத்தகணத்தவர் எனப்பட்டனர்.”

“நிஷங்கி, பாசி, விருந்தாரகன், திருடவர்மா, திருதக்ஷத்ரன், சோமகீர்த்தி, அனூதரன், திருதசந்தன், ஜராசந்தன், சத்யசந்தன், சதாசுவாக், உக்ரசிரவஸ், உக்ரசேனன், சேனானி, துஷ்பராஜயன், அபராஜிதன், குண்டசாயி, விசாலாக்ஷன், துராதாரன், திருதஹஸ்தன், சுஹஸ்தன், வாதவேகன், சுவர்ச்சஸ், ஆதித்யகேது, பகுயாசி, நாகதத்தன், உக்ரசாயி, கவசீ, கிருதனன், கண்டி, பீமவிக்ரமன், தனுர்த்தரன், வீரபாகு, அலோலுபன், அபயன், திருதகர்மன், திருதரதாசிரயன், அனாதிருஷ்யன், குண்டபேதி, விராவீ, சித்ரகுண்டலன், பிரமதன், அப்ரமாதி, தீர்க்கரோமன், சுவீரியவான், தீர்க்கபாகு, சுவர்மா, காஞ்சனதுவஜன், குண்டாசி, விரஜஸ் என்னும் ஐம்பதுபேரும் இளைய கணத்தவர் எனப்பட்டனர்” என்றார் சைலஜ கலர்.

“பெருவணிகரே, நூறுமைந்தரைப் பெற்ற காந்தாரி தன் கனவிலெழுந்த கொற்றவையிடம் தன் தொல்குலத்து மூதன்னையர் தன் கருவில் தோன்ற வேண்டுமென வேண்டினாள். மரு, இருணை, ஃபூர்ணி, காமலை, கிலை, ஆரண்யை என்னும் ஆறன்னையரின் கனலையும் தன்னுள் கொண்ட பெண்ணெனப் பிறந்தாள் துச்சளை. இருநூறு உடன்பிறந்த கரங்களால் பேணப்பட்டவள் அவள். காந்தாரத்து ஏழு பெரும்பாலை நிலங்களின் வெம்மையையும் அவற்றிலாடும் புயல்களின் ஆற்றலையும் அவளில் கண்டனர் சூதர்.”

“இறைவிளையாட்டின் களங்களிலெல்லாம் காய்கள் பரப்பப்பட்டுவிட்டன பெருவணிகரே” என்றார் சைலஜ மித்ரர். “அக்காய்கள் எதையும் அறியவில்லை. அவர்கள் தான் என உணர்ந்து எழுந்தமர்ந்தனர். தன் பசி தன் வாய் தன் அன்னை என்றறிந்தனர். தன் கை தன் கால் எனக் கண்டுகொண்டனர். தன் தமையர்களை நோக்கித் தவழ்ந்துசென்றனர். வாய்சொட்டச் சிரித்து குறுமொழி மழலைபேசினர். இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் அமுதுண்டனர். முலைப்பால் மணத்துடன் அன்னையர் மடிநீங்கி உடன்பிறந்தாரோடு சென்று சேர்ந்துகொண்டனர்.”

“எழுந்தனர். சிறுகால் வைத்து நடந்தனர். துள்ளி விழுந்தனர். கைவிரித்தாடினர். அரண்மனை முற்றத்தில் ஓடியும், சோலைமரங்களில் ஏறியும் விளையாடினர்.யானை வழியாக மண்ணையும் காகங்கள் வழியாக விண்ணையும் கண்டனர். கலுழ்ந்து கண்ணீரையும் புண்பட்டு குருதியையும் அறிந்தனர். இருநூறுவிழிகளுக்கு முன் தன்னை மீண்டும் மீண்டும் புதிதெனப் பிறப்பித்துக்கொண்டது புடவி” என்று சைலஜ மித்ரர் தொடர்ந்தார்.

“அவர்களனைவருக்கும் முதலன்னையின் ஆணை ஒன்றேயாக இருந்தது. அவர்கள் தங்கள் முதல்தமையனின் நிழலன்றி பிறிதிலாதவர்களாக இருந்தனர். அவன் தன்னையே ஆடிப்பெருக்கி கண்டதுபோலிருந்தனர். ஆனால் அவனோ தன் ஆடிப்பாவையென அறிந்தது இளையபாண்டவனை மட்டுமே. வெண்ணிற துரியோதனன் என்றனர் பீமனை. கரிய பீமன் என்றனர் துரியோதனனை. சொல்லிச் சொல்லி அவர்கள் அகம்பரிமாறிக்கொண்டனர். பின் சொல்லின்மையில் அகமறிந்தனர். பின் அவர்கள் ஒற்றை அகம் கொண்ட ஈருடலாக ஆயினர்.”

“நிலைகொள்ளாத யானை துரியோதனன். நிலைபெற்ற பாறை பீமன். அலையடிக்கும் கடலே துரியோதனன். அசைவற்ற வானமே பீமன். ஒருவரை ஒருவர் வியக்கும்பொருட்டே அவர்களை பிரம்மன் படைத்தான் என்றனர் சூதர். ஒற்றையுடலில் இரு கைகளென ஆகும் உடன்பிறந்தாருண்டு, ஒற்றை மனதில் இருவிழிகளென்றாகும் மைந்தர் இவரே என்றனர் கவிஞர்” என்றார் கனிக மைத்ரேயர்.

“இளநகை பொலிந்த முகமெனத் துலங்குகிறது அஸ்தினபுரி. கதிர்பொலிந்த வயலென, கிளிக்குலம் பூத்த கிளையென, அணிதுலங்கும் மார்பென, சுடர் மின்னும் மணியெனப் பொலிகிறது பாரதவர்ஷத்தின் மாநகர். அது வாழ்க!” என்று வாழ்த்தி பாடிமுடித்தார் சைலஜ மித்ரர். சூழ்ந்த கடலை ஒளிசுடர்ந்த நகரை விண்மீனெழுந்த வானை மறந்து அஸ்தினபுரியில் இருந்தான் இளநாகன்.

முந்தைய கட்டுரைநாஞ்சில்நாடன் பட்டியல்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 11