நான் சிறுவதிலேயே கேள்விபட்டிருக்கிறேன். தாய் குட்டிகளில் ஒன்றை தின்றுவிடும். அதே சமயம் மற்ற குட்டிகளை தன் ஆற்றல் முழுதும் செலவிட்டு தன் உயிருக்கு நிகராக காக்கும். மனிதர்கள் தங்களை ஞானத்தால் நிறைத்துக்கொள்ளலாம். ஆனால் அவரகளின் சொற்களாலும் பாவனகளினாலும் கொண்ட கனத்த ஆடையை விலக்கி பார்த்தால் அவர்களுக்குள் குடிகொண்டிருக்கும் ஆதி மிருகத்தை அறியக்கூடும்.
குந்திக்குள் இருந்த அன்னை மிருகம் கொன்று உண்ட குட்டியே கர்ணன் என இப்பகுதி உணர்த்தி செல்கிறது. அது மற்ற ஆதரவற்றிருக்கும் ஐந்து குட்டிகளை காப்பதற்கு ஒரு குட்டியை பலி கொள்கிறது, அதாவது கைவிடுகிறது. குந்தியின் ஆழ்மனம் செல்லும் வழியினை இந்த ஒரு கனவுக்காட்சி விளக்கி செல்கிறது. அற்புதம்.
வெண்முரசு ஓவியங்கள் அருமையாக இருக்கின்றன என்பது தேய்வழக்காகிவிட்டது எனலாம். ஆனால் ஒரு கனவுக்காட்சியை ஓவியத்தில் கொண்டுவருவது ஒருவகையில் எளிது. ஏனென்றால் கனவில் ஒரு கணம் மட்டுமே ஓவியத்தில் வடிக்கப்படுகிறது. ஆனால் முழுக்கனவையும் எழுத்தில் கொணர்வது மற்றும் அக்கனவைஒரு முப்பரிமான திரைக்காட்சியாக வாசகனை காணவைப்பது உங்கள் எழுத்தின் வல்லமையாகும்.
அன்புடன்
த.துரைவேல்
அன்புள்ள ஜெ,
நலமா? வண்ணக்கடல் மிகவேகமாகவே எழுந்துவிட்டது. மழைப்பாடலில் வாழ்க்கைத்தருணங்களின் நுட்பங்கள் ஏராளமாக இருந்தன. ஒவ்வொரு அத்தியாயத்திலும் மனித மனங்கள் ஒன்றுக்கொன்று உரசிக்கொள்ளக்கூடிய நுட்பமான சந்தர்ப்பங்கள் இருந்தன. குந்தி காந்தார சகோதரிகளுடன் பேசும்போது அவர்களின் வளையல்கள் ஓசையிடும் பாஷையைப்பற்றிய இடத்தை நினைத்துக்கொண்டே இருக்கிறேன். அப்படி ஆயிரக்கணக்கில். ஒவ்வொன்றும் ஒரு பெரிய சிறுகதை மாதிரி.
ஆனால் இந்த நாவலில் பெரும்பாலும் metaphors வழியாகவே கதையைச் சொல்கிறீர்கள். வாழ்க்கையின்நேரடி நுட்பங்களைவிட metaphors இன்னும் வலிமையாக இருப்பதுபோல தோன்றுகிறது. அதனால்தான் புராணக்கதை என்ற வடிவத்தை எடுத்துக்கொண்டார்கள் என்று நினைக்கிறேன். உதாரணமாக மிகச்சின்னவனாகிய சகாதேவன் பறக்கும் பூச்சிகளை பார்க்கிறான். நகுலன் மென்மையான மலர்களைப்பார்க்கிறான். அப்படியே மேலே வந்தால் துரியோதனன் பார்ப்பது அசைவில்லாத கடுமையான பாறைகளை மட்டும்தான். இந்த விஷயம் அளிக்கக்கூடிய கோடி அர்த்தங்களை நேரடியாகச் சொல்லமுடியாது
துரியோதனைன் character அந்த வர்ணனையிலேயே வந்து விடுகிறது. அவனைச்சுற்றி எல்லாமே உறைந்து இறுகி இருக்கிறது. உடைக்க முயன்றபடியே நிலையில்லாமல் இருக்கிறான். ஆடிக்கொண்டே இருக்கும் யானை மாதிரி என்று சொல்கிறீர்கள். ஆனால் பீமனைச்சுற்றி இருப்பவை அசையக்கூடிய மிருகங்கள். அவன் நிலையானவனாக இருக்கிறான்
ஒரு அத்தியாயத்தை வாசித்துவிட்டு அன்றுமுழுக்க யோசித்துக்கொண்டே இருப்பது பெரிய ஒரு விடுதலையை அளிக்கிறது
ஜெயராமன்